ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

ஜீவா


சுந்தர ராமசாமி அவர்களின் பேட்டியைப்ப்ற்றி நீலகண்டன் அரவிந்தன் எழுதிய எதிர்வினை தேவைக்குமேல் கடுமையைக் கொண்டிருந்தது என்று எனக்குப் படுகிறது. மூத்த சாதனையாளரான படைப்பாளியை பற்றி எழுதும்போது அதற்குரிய சமநிலையுடனும் அவரது சாதனைகளை முன்னால்வைத்தபடியும்தான் பேசவேண்டும்.அதுவே முறை.

சுந்தர ராமசாமி உட்பட பெரும்பாலான இலக்கியவாதிகள் நம் சூழலில் நிலவக்கூடிய கருத்தியல்சார்ந்த மிரட்டல்களுக்கு அடிபணியக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள்.அதுவும் பிராமணர்கள் குறிப்பாக மிக பலவீனமானநிலையில் இருக்கிறார்கள் . சுந்தர ராமசாமியையே எடுத்துக் கொள்வோம் . கடந்த 25 வருடங்களாக அவர் எழுத்தில் முன்வைத்த கருத்துக்களெல்லாமே இந்து மதம், இந்திய மரபு , பிராமண சாதி ஆகியவற்றுக்கு நேர் எதிரானவையே .ஆனாலும் இன்றும் அவரைவைந்து வகுப்புவாதி என்றும், சாதியவாதி என்றும், சனாதனப் பார்வை கொண்டவர் என்றும் குற்றம் சாட்டி எழுதி வருகிறார்கள். பேசி வருகிறார்கள். வீ அரசு என்பவர் இப்படிப்பட்ட கட்டுரை ஒன்றை இருவருடம் முன்பு எழுதியபோது தமிழின் மிக முக்கியமானகைளம் எழுத்தாளார் ஒருவருடன் இது பற்றி மின்னஞ்சல் மூலம் விவாதித்தேன். இந்த திண்ணை இதழில் திரு ஞாநி ‘இலக்கியசங்கரமடம் ‘ என்று சொல்லியிருப்பதும் சுந்தர ராமசாமியைப்பற்றித்தான். [அப்பெயர் இங்கே மிக பழக்கமான ஒன்று] இந்நிலையில் சுந்தர ராமசாமி மிக மிக கவனமாக இருப்பதில் என்ன தவறு ?

அடிப்படையில் சுந்தர ராமசாமி ஓர் இடதுசாரி. அவர் மனம் வளர்ந்த காலகட்டம் அப்படிப்பட்டது . மரபு என்பதும் பழைமை என்பதும் பிற்போக்கு என்பதும் ஒன்றே என்ற நம்பிக்கை அன்று மிக மிக பரவலாக இருந்ததை நாம் அறிவோம்[ பழைமை பழைமை என்று பாவனை பேசலின்றி பழைமை இருந்த நிலை -கிளியே -பாமரர் ஏதறிவார் ?] ஜீவா முதலிய முற்போக்கினரும் ஈவேரா போன்ற இனவாதிகளும் ஒரே புள்ளியில் குவிந்த இடம் அது. சு.ராவின் மனம் இவர்களை மீறிச் சென்றதே இல்லை . ஜெ ஜெ சிலகுறிப்புகளில் அவர் மிக முக்கியப்படுத்தி வழிபடு பிம்பமாக முன்வைக்கும் எம் கெ அய்யப்பன் என்ற கதாபாத்திரத்தை மார்க்ஸியவாதி என்று மட்டுமல்லாமல் இந்து மத சிந்தனைகளுக்கு பரம எதிரி என்றும் அவர் அறிமுகம் செய்கிறார் . நான் கேள்விப்பட்டவரை அக்கதாபாத்திரம் எம் கோவிந்தன் [எம் கே] என்ற கேரா சிந்தனையாளரின் நகல் . திருவள்ளுவர் இன்று எழுதியிருந்தால் எம் கே போல எழுதியிருப்பார் என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். [பார்க்க சுந்தர ராமசாமி பேட்டிகள் ] எம் கே முதலில் கம்யூனிஸ்டாக இருந்தார் .பிறகு ராடிக்கல் ஹூமனிஸ்ட் கட்சியில் இருந்தார். வாழ்வின் இறுதியில் எம் கே நாராயணகுருவின் தரிசனங்களில் ஈடுபட்டு இந்திய மரபுச் சிந்தனைமீது ஆர்வம் கொண்டிருந்தார் . இந்த பிற்பகுதியை கத்தரித்துவிட்டு எம் கேயை எம் கே அய்யப்பனாக காட்டுவது சுந்தர ராமசாமியின் ஆசையையே காட்டுகிறது.

இந்திய மரபில் பொருட்படுத்தும்படி ஏதுமே இல்லை, இருக்க நியாயமில்லை என்ற எண்ணம் அக்கால சிந்தனையாளார்கள் பலருக்கும் இருந்ததுதான்.ஆகவே அவர்கள் எதையுமே படிக்க முற்பட்டது இல்லை .அவர்களுடைய ஆதர்ச பிம்பங்கள் முழுக்க ஐரோப்பாவில் அமெரிக்காவில் இருந்தன. அதைத்தான் சுந்தர ராமசாமி சொல்கிறார். அவர்கள் விவேகானந்தரிலிருந்து தன்னம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடாயாது ,அதற்கு எமர்சன்தான் தேவை. [எமர்சனைப்படித்தவர் எமர்சனை கவர்ந்த உபநிஷத்துக்களை எமர்சன் சொல்கிறார் என்பதற்காகவேனும் படித்திருக்கலாம் ]ஆனால் இப்படி யோசித்த பல முன்னோடி சிந்தனையாளர்கள் மெல்லமெல்ல இந்திய மரபின் சிந்தனையை கற்கவும் அதன் விரிவை அறியவும் தலைப்பட்டனர். இந்தியமரபிலேயே மேற்கைவிட மேலான நாத்திக தரிசனங்கள் உள்லன என்று எம் என் ராய் கண்டடைந்தார் . மத அமைப்பின் தரப்புகளை புறக்கணித்து இந்து அறிவுத்தொகையை நவீன காலகட்டத்தின் தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமென பல இடதுசாரிகள் கண்டு பிடித்தார்கள். இ எம் சங்கரன் நம்பூதிரிபாட் அப்படி கடைசிக்கட்டத்தில் சொன்னார் .சங்கரரின் அத்வைத மரபை தான் உட்பட பலர் புரிந்துகொள்ளவில்லை தவறாக மதிப்பிட்டுவிட்டோம் என்று சொல்லி அது தமிழிலும் பரவலாக விவாதத்தை கிளப்பியது. வீரமணி கடுமையாக வசைபாடியது நினைவுக்கு வருகிறது . அதேபோல தமிழில் அடுத்த கட்டத்தில் எந்தவந்த படைப்பாளிகள் ஜெயமோகன் , பிரேம் ,எஸ் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இந்திய மரபிலிருந்து தொடங்கவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களாக இருந்தார்கள். அதாவது திடாரென்று இந்திய மரபு முக்கியமானதாக மாறிவிட்டது.

சுந்தர ராமசாமி இந்த புதிய காலகட்ட மாறுதல்களை உள்வாங்க முடியாதவராக இருந்தார் . அவரது வாசிப்பு நின்றுவிட்டது. அவருக்கு நாட்டார் மரபிலும் வேர் இல்லை , செவ்வியல் மரபிலும் பழக்கம் இல்லை .அவர் அறிந்தது எல்லாம் எமர்சன் முதல் மார்க்ஸ் வரையிலான ஒருவித ஐரோப்பிய அறிவியக்கத்தின் மேலோட்டமான சித்திரமே இவர்கள் மனத்தில் உள்ளது.றாதன் பின்னணியை உள்வாங்கிக் கொள்ளுமளவுக்கு இவர்களுக்குஐரோப்பிய தத்துவமரபில் பயிற்ச்சி உண்டா என்பதும் ஐயத்துக்குரியதே. அங்கிருந்து ஒரே தாவலாக இருத்தலிய சிந்தனைத்துளிகள். சுந்தர ராமசாமி ஐரோப்பிய சிந்தனைகளை இறக்குமதிமட்டுமே செய்தார் என்று ஜெயமோகன் தன் பல கட்டுரைகளில் [குருபக்தித் தயக்கத்துடன்] சொல்லியிருக்கிறார். இந்தக் குற்றட்ட்ச்சாட்டை அவர்மீது அடுத்தகட்ட படைப்பாளிகள் அனைவருமே எங்காவது வைத்திருக்கிறார்கள். உதாரணமாக சுந்தர ராமசாமியுடையது தமிழக பண்பாட்டை கண்காணிக்கும் வேவுபார்க்கும் ஓர் அன்னியனின் பார்வையாகவே இருந்துள்ளது என்கிறார் பிரேம்.

ஆகவே சுந்தர ராமசாமி ஒரு இக்கட்டை அடைகிறார் . அவர் சமீப காலமாக ஐரோப்பாவை இறக்குமதி செய்யும் இளைஞர்களை கண்டிக்கிறார். சிந்தனைகளை சுயமாக ‘நம் மண்ணில் வேரூன்றி நின்று ‘ உருவாக்க வேண்டியதன் தேவையைப்பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் அப்படிச் சொல்லும் போது இளைஞர்கள் மனத்தில் கேள்விகள் எழுகின்றன. இதை ஏன் இவர் இதுவரை சொல்லவில்லை ? இந்தியமரபில் இவருக்கு ஆர்வம் உண்டு என்பதை இதுவரை ஏன் வெளிக்காட்டவில்லை ? இந்திய/ தமிழ் பாரம்பரியத்தில் இவருக்கு ஏதேனும் ஈடுபாடு இருந்தமைக்கான தடையம் ஏதும் இதுவரை இவரது படைப்புகளில் இல்லையே. நாட்டார் மரபில் சிறு அறிமுகமாவது இவருக்கு இருந்தமைக்கான ஆதாரமே இல்லையே [கட்டுரைகள் கைவசம் இருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம்] மாறாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘மரபின் பின்பாரம் ‘ ‘மரபின் சுமை ‘ போன்ற வரிகளை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார். மரபை விரிவாக கற்றறியாமல், விமரிசனங்களை உருவாக்காமல் எப்படி மரபிலிருந்தும் மண்ணிலிருந்தும் படைப்புகளை உருவாக்க முடியும் ? காலம் தன்னை தாண்டிச்செல்வதை சுந்தர ராமசாமி உணர்கிறார் . விஷ்ணுபுரம் என்ற ஒரே நூல் அவரை மிக மிக பழையவராக ஆக்கிவிட்டிருப்பதை அவரால் காணமுடிகிறது .ஆகவே அவர் மாற விரும்புகிறார்.

ஆனால் மறுபக்கம் இக்கட்டு ஏற்படுகிறது. அவரை சிறிதளவேனும் கவர்ந்த ஓர் இந்திய மரபின் ஆக்கத்தை அவர் குறிப்பிட்டால்கூட அவர் வேறு விதமான சிக்கல்களில் மாட்ட வேண்டியிருக்கும் . அவர் தமிழ் பேரிலக்கியங்கள் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை . ஓர் இடத்தில் கூட மேற்கோள்காட்டியதில்லை . பல தருணங்களில் மொத்தையான விமரிசனங்களையும் சொல்லியுள்ளார் . ஆனால் இப்போது தமிழ் இலக்கியங்களைப்பற்றி அவர் விமரிசிக்க முடியாது. இங்கே இன்றுள்ள தமிழியக்க அலைஆதற்கு எதிரானது. அதேபோல இந்து மதம் சார்ந்த நூல்களையும் ரசித்துக் சொல்லமுடியாது . இரண்டில் எதைச்சொன்னாலும் அவரை வகுப்புவாதி என்பார்கள் . ஆகவே தனக்கே உரிய இயல்பின்படி அவர் மழுப்பலான சொற்றொடர்களை வைக்கிறார் . தமிழ் பேரிலக்கியங்களைப்பற்றி அவருக்கு உயர்வான அபிப்பிராயம் இல்லை என்று அவரை நன்கறிந்தவர்கள் சொல்லும் போது அப்படி சொல்லவே இல்லை என்று மறுக்கிறார்.ஆனால் தமிழிலக்கிய மரபைப்பற்றி வாயே திறப்பதில்லை . இந்துமத இலக்கியம் பற்றி எதிர்மறை அர்த்தம் வரும் சில கருத்துக்களை சொல்கிறார் ஆனால் சுட்டிக் காட்டி சொல்வது இல்லை. எமர்சன் பைபிள் என பொதுவாக பெயர் சொல்கிறார். இதுதான் சுந்தர ராமசாமியின் பிரச்சினை.அவர் சமகால அலைகளுக்கு ஒத்துப்போக நினைக்கிறார். எதிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை[இந்திய இலக்கியம் பற்றி இதோ கட்டுரையில் சொல்கிறார். ஆர்கெ நாராயணன், ராஜாராவ் போன்றவர்களைப்பற்றி , நிசீம் இசக்கியேலைப்பற்றி இவர் ஏதேனும் சொல்ல ஏன் இத்தனை வருடம் பிடித்தது ? ஒரு கட்டுரையிலாவது ஒரு வரியாவது ஏன் குறிப்பிடப்பட்டதில்லை ? இது இன்றைய காற்று. ஆகவே இதில் பட்டுக்கொள்கிறார் சு ரா]

ஆகவே இப்படி எனக்கு படுகிறது. சுந்தர ராமசாமி முன் வைப்பது ஒரு தெளிவான கருத்துநிலை அல்ல. மிகக் கவனமாக உருவாக்கி முன்னிறுத்தப்படும் ராஜதந்திரம் .ராஜதந்திரத்துக்குரிய மழுப்பல் , எங்கும் படாத சொற்கள் . அவரது அச்சத்துக்கு அர்த்தம் உள்ளது .ஆனால் எழுத்தாளன் எல்லாவிதமான வசைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் தயாரகவே இருக்கவேண்டும்.அவரைப்போன்ற சாதனைப்படைப்பாளி இன்னும் திறந்தமனத்துடன் பேசியிருக்கலாம். அவரது அழகிய ஆரம்பகால சிறுகதைகளையும் புளியமரத்தின் கதைகளையும் படித்தபின் கட்டுரைகளை படிக்கும் போது ஒன்றும் சொல்லாமலே ஏதோ சொல்ல முயல்வதற்கே அவரது அபாரமான மொழிநடை பயன்பட்டிருக்கிறதென்று படுகிறது.

jeevaanandam@hotmail.com

Series Navigation

ஜீவா

ஜீவா