நினைத்தேன். சொல்கிறேன்… விபச்சார கைதுகள் பற்றி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

PS நரேந்திரன்


கீழ் கண்ட செய்திகளை சமிபகாலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். படத்துடன்.

‘விபச்சாரம் செய்ததாக சினிமா நடிகை கைது! ‘..

‘ஆபாச படத்தில் நடித்தார். அழகி கைது! ‘…

நான்கு பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு வர, அருகில் ஒரு கடா மீசை போலிஸ்காரர் வீரப்புலி போல நடந்து வருவார். என்னவோ அந்த வீரப்பனையே பிடித்தது போல்.

இது போன்ற கைதுகளில் உள்ள அபத்தங்கள் பற்றி ஏற்கனவே பல நண்பர்கள் திண்ணையில் தாளித்துக் கொட்டி இருக்கிறார்கள். நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை. இருப்பினும், சில கருத்துக்களை மீண்டும் வலியுறுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

விபச்சாரம் செய்ததாக பெண்களை பிடிக்கிறார்கள். சரி. அந்த பெண்ணுடன், அந்த நேரத்தில் இருந்த ஆண்கள் என்னவானார்கள் ?. அவர்களைப் பற்றி செய்தியோ, புகைப்படமோ வருவதில்லையே ஏன் ? விபச்சாரம் செய்வது குற்றம் என்றால், அந்த செயலில் ஈடுபட்ட ஆண், பெண் இருவருமே குற்றவாளிகள்தானே ? இதில் ஏன் ஒரவஞ்சனை ?

ஒன்றை கவனித்துப் பாருங்கள். இந்த மாதிரி கைது, செய்தியெல்லாம் மேல் தட்டு விபசாரிகள் பற்றி மட்டுமே. அதாவது, சினிமா நடிகைகள், டி.வி. நடிகைகள் போன்றவர்கள். இவர்களிடம் எந்த மாதிரி ஆசாமிகள் போகிறார்கள் ? அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணக்காரர்கள் இன்ன பிற காசு கொழுத்தவர்கள் போன்றவர்களே. இவர்களெல்லாம் எந்த சட்டத்திற்கும் அப்பாற் பட்டவர்கள். பொறம்போக்குகள் என்று சொல்லலாம். இவர்களை கைது செய்ய முடியுமா ? பொறம்போக்குகளுக்கு ஏது சட்டம் ? அப்படியே மீறி கைது செய்யும் போலிஸ்காரர் கதி என்னாகும் ?

இந்திய ஜனநாயகத்தில் சட்டம், கட்டம் எல்லாம் காசு இல்லாதகவர்களுக்கு மட்டுமே என்பது எழுதப்படாத சட்டம். நமக்கெல்லாம் தெரியும். மேல்தட்டு விபச்சாரத்திற்கு கிடைக்கும் விளம்பரம், கீழ்தட்டு விபச்சாரத்திற்குக் கிடைப்பதில்லை. ஏழை விபச்சாரிகள் பற்றி எழுதி என்ன பயன் ? அதில் என்ன பரபரப்பு இருக்கிறது ? அப்படியே செய்தி வந்தாலும் நீங்களோ, நானோ படிப்போமா என்ன ?

அது கிடக்கட்டும். விஷயத்திற்கு வருவோம். மேல்தட்டு விபச்சாரம் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இது கோடம்பாக்கம் ‘கோண்டு ‘விலிருந்து, கீழ்பாக்கம் ‘வாண்டு ‘ வரை அனைவரும் அறிந்தது. புதிதாக ஒன்றுமில்லை. பின் எதற்கு இது போன்ற செய்திகள் திடார் திடார் என்று முளைக்கிறது ? தொழில் ( ?!) போட்டி அல்லது மாமூல் பிரச்சினை காரணமாக இருக்கலாம்.

இவள் அவளை காட்டிக் கொடுக்க…அவள் இவளை காட்டிக் கொடுக்க…போலிஸ்காரர்கள் காட்டுல மழை!. பணமழைதான்!. கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க, நாலு நாளில் எல்லாம் சரியாய்ப் போகும். சுபம்.

இந்த சினிமா, டி.வி. நடிகைகளிடம் என்னத்தைக் கண்டார்களோ ? காசை வாரி இறைக்க ஒரு கூட்டமே தயாராக இருப்பதாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று சொல்கிறது. இதை கேட்டவுடன், பேரறிஞர் ‘சென்னப்பட்டணம் முன்சாமி ‘ சொன்னது நினைவுக்கு வந்தது,

‘இட்லி, வடய எந்த கடயில துன்னா இன்னா ? அதே அர்சி மாவு, அதே பர்ப்புதான். இன்னா, பய்வ் இஸ்டார் ஓட்டல்ல டேபுளு சுத்தமா இர்க்கும். ரோட்டு கடயில அய்க்கா இர்க்கும். ரெண்டும் ருஜியும் ஒண்ணுதான் ‘.

ஒழுங்கான வழியில் வந்த பணமாக இருந்தால் ஒழுங்கான வழியில் செலவு செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இனி, அதிகம் வெளிவராத கீழ்தட்டு விபச்சாரம் பற்றி கொஞ்சம்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் கீழ்தட்டு விபச்சாரம் ஒரு பெரிய இண்டஸ்டரி, பிஸினஸ் போல நடக்கிறது. முக்கிய அரசியல் வாதிகள், பெரிய போலிஸ் அதிகாரிகள், லோக்கல் தாதாக்கள், ரெளடிகள் அனைவருக்கும் இதில் தொடர்பு அல்லது பங்கு இருப்பதாக சொல்கிறார்கள். சென்னை ரிப்பன் பில்டிங் அருகில், மான்ஷன் கட்டடங்களின் பக்கமிருந்து, வால்டாக்ஸ் ரோடு வரை இருக்கும் சந்து, பொந்து லாட்ஜ்களில் இது அமோகமாக நடக்கிறது. எல்லோருக்கும் தெரியும். யாரும் இவர்கள் மேல் கை வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்கள்.

நமது செய்தியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன ? நன்றாகவே தெரியும். ஆனால் அதை செய்தியாக்க மாட்டார்கள். வீட்டிற்கு ஆட்டோ வருமே!…அவர்கள் பயம் அவர்களுக்கு….வாழ்க ஜனநாயகம்.

இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ? நீ போயிருக்கிறாயா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம். நான் போயிருக்கிறேன். பார்வையாளனாக மட்டும். அதுபற்றி அப்புறம்.

கீழ் மட்ட அளவில், ஒரு பெண் தன் உடலை விற்க பல காரணங்கள் இருக்கலாம். வறுமை அல்லது சூழ்நிலை அல்லது பிறரின் வற்புறுத்தல்…இன்ன பிற. தன் குழந்தைகளைக் காப்பாற்றவோ அல்லது பசியாறவோ ஒரு பெண் விபசாரம் செய்யக்கூடும். அது குற்றமா ? எனக்கு தெரியவில்லை. அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்கிறதா ? தெரியாது. பாயில் படுத்து, நோயில் வீழ்ந்து, மண்ணோடு மண்ணாக மக்கி மடிந்து போகிறவர்களே அதிகம்.

அரசாங்கமும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. நியூஸ் மீடியாவும் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் பெரிய மீன்களே..

‘நடிகை சோ அண்ட் சோ கைது….விபச்சாரம் செய்தார்… ‘

என்று கொட்டை எழுத்தில் போட்டால் சர்குலேஷன் அதிகமாகுமே…அவ்வளவுதான். சமுதாய அக்கறையோ, உண்மையை வெளியிடும் துணிச்சலோ சுத்தமாக கிடையாது.

பொதுவாக தமிழ் சமுதாயத்தில் பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நினைக்கப்படுகிறார்கள். நடத்தப்படுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய பார்வைகள் மாறும் வரை இப்படிப் பட்ட discrimination இருந்து கொண்டுதா ன் இருக்கும் என நினைக்கிறேன். கனத்த மனதுடன்.

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்