அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

ஞாநி


அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்.

எத்தனையோ பட்டங்கள் வந்து போனாலும், மறந்து போனாலும், உங்கள் பெயராகவே நிலைத்து விட்ட பட்டத்தால் அழைத்தால் போதுமானது என்று கருதியே இதர அடைமொழிகளை தவிர்த்துவிட்டேன். மரியாதைக் குறைவாகக் கருதற்க.

உங்களோடு உடன்பட்டாலும் முரண்பட்டாலும், உங்களிடம் வியக்கத்தக்க பண்பு, நீங்கள் தொடர்ந்து எப்போதும் ஆச்சரியங்களை அள்ளித் தருவதுதான்.காவலர் கைது செய்ய வந்ததும், ‘அய்யோ கொல்றாங்க ‘ என்ற ஒரு வரி வசனம் பக்கம் பக்கமாக நீங்கள் எழுதிய பராசக்தி வசனம் அளவுக்கு வரலாற்றில் நீங்கா இடம் பெற்றதே. வார்த்தை விளையாட்டு மட்டுமன்று. கருத்து விளையாட்டுகளும் ஆச்சரியம் தருவன. குஜராத்தில் பி.ஜே.பி வெற்றி பெற்றதும், அது இந்துத்துவாவின் வெற்றி அல்ல என்று அறிக்கை விட்டு ஆச்சரியப்படுத்தினீர்கள். பி.ஜே.பி தேர்தலில் இந்துத்துவாவை முன்னிறுத்தவில்லை என்று விளக்கமும் அளித்தீர்கள். இவையெல்லாம் பி.ஜே.பிக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திியிருக்கும் என்பதில் அய்யமில்லை.

அதை விட ஆச்சரியம் ‘பாளையங்கோட்டையில் ஒரு பகுத்தறிவு முழக்கம் பாரீர் ‘ என்று உடன்பிறப்புக்கு நீங்கள் எழுதிய முரசொலிக் கடித்தத்தில் ‘யாதுமாகி ‘அமைப்பு வெளியிட்ட ‘ நான் இந்துவல்ல, நீங்கள் ? ‘ என்ற சிறு வெளியீட்டைக் கண்டு ‘வியப்புற்றதாக ‘ச் சொல்லி இன்னொரு ஆச்சரியத்தை எங்களுக்கேல்லாம் அளித்திருக்கிறீர்கள். அந்த நூலில் உள்ள இந்துத்துவாவுக்கு எதிரான , இந்து மதம் X கிராமிய வழிபாட்டு முறைகள் பற்றிய எந்தத் தகவலும் நேற்று புதிதாகப் பிறந்தது அல்ல. ஐம்பது ஆண்டு பொது வாழ்க்கை கண்ட நீங்கள் இவற்றையெல்லாம் ஈரோட்டுப் பாசறையில் என்றோ பயின்றிருப்பீர்கள் என்றல்லவா நாங்கள் நம்பி வந்தோம் ?

அதை விட பெரிய ஆச்சரியம், கிராமிய வழி பாட்டு முறைகள் பற்றி நீங்கள் ஓராண்டு முன்பு முதல்வராக இருந்த கடைசி மாதங்களில் கிராமப் பூசாரிகள் மாநாட்டில் சென்று உரையாற்றினீர்களே, அப்போது அங்கே ஆர். எஸ்.எஸ் சித்தாந்திகள் உங்களிடம் சொன்னதற்கும், இன்று ‘யாதுமாகி ‘ வெளியீடு சொல்வதற்கும் வேறு பாடுகள் உள்லதை நீங்கள் கண்டு கொள்ளாததுதான். கிராம வழிபாட்டு முறையை எல்லாம் சமஸ்கிருத , பார்ப்பனீய வழிமுறைகளாக மாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ். நோக்கம்; அதற்காகவே அவர்கள் அந்த பூசாரிகள் சங்கம் அமைத்தனர். கிராம வழிபாட்டை ஆரிய வழிபாடாக மாற்ருவது பாற்றி அப்போது நீங்கள் ஒன்றும் முழங்கியதாகத்தெரிய வில்லையே. ஆர்.எஸ்.எஸ். முயற்சிகளுக்கு உறுதுணையாக அரசு சார்பில் வாரியம் அமைத்து அதில் அரசு நியமனிகளாக ஆர்.எஸ்.எஸ்சினரையே அல்லவோ நியமித்தீர்கள் ? அது நாள்வரை ‘யாதுமாகி ‘ வெளியீட்டில் கண்ட செய்திகளையெல்லாம் தங்களுக்குச் சொல்லித்தர பெரியாரும் அறிவில் சிறந்த அண்ணனும் தவறிவிட்டார்களோ என்று கலக்கமாக இருக்கிறதே.

பெண்ணுரிமைக்காக தனி மாநாடு திடாரென நடத்தி எங்களை மேலும் ஆச்சரியப்படுத்தி விட்டார்கள். அந்த மாநாட்டில் பல தார மணத்துக்கு கண்டனம், வீட்டில் உள்ள பெண்கள் கடவுள் நம்பிக்கையால் வீன் மூடப் பழக்க வழக்கங்கலைப் பின்பற்றி இந்துத்துவா சதிக்கு பலியாவது பற்றியெல்லாம் பேசி புரட்சிகரப் பெண்கள் அணியை ( ஜெயலலிதாவுக்கு எதிராக ) உருவாக்குவீர்கள் என்று எதிர்பார்த்த எங்களை அப்படி எதுவும் செய்யாமல் மறுபடியும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினீர்கள். எதிர்பாராத விதமாக கண்ணகி சிலைக்கு தீர்மானம் நிறைவேற்றி , கழகம் காணும் கற்(பு)ச் சிலையை இளைஞர் அணி அலுவலகத்தில் வைத்து இளைய தலைமுறைக்கே கண்ணகிதான் முன் மாதிரி என்று நிறுவி, லட்சோபலட்சம் கோவலன்கள் மனதில் பால் வார்த்தீர்கள்.

இப்போதோ ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் ‘ தி.மு.க ஏற்காது என்று அறிக்கை வெளியிட்டு மேலும் மேலும் ஆச்சரியக் கடலில் எங்களை மூழ்கடிக்கிறீர்கள். திருநீறு அணிவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பது உண்மையே. அதை துணிவுடன் சொல்லி பணிவுடன் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.ரம்சான் இஃப்தார் விருந்தில் தொப்பி அணிந்து கொள்வது பகுத்தறிவுக்கு உடன்பாடான செயல் என்று செயலில் காட்டி எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறீர்கள். பகுத்தறிவிலும் . இந்துத்துவா வகை, இஸ்லாமிய வகை, கிறித்துவ வகை என்று புதுமை படைக்கும் ஆற்றல் உங்கள் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

கடந்த சில மாதங்களாகவே நீங்கள் மறுபடியும் இந்துத்துவா எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு வளர்ப்பு என்றெல்லாம் பேசுவதன் காரணம் மெல்ல பி.ஜே.பியுடன் ஜெயலலிதா நெருக்கமாவதும், நீங்கள் தள்லிவைக்கப்படுவதும்தான் என்று அரசியல் நோக்கர்கள் காழ்ப்புணர்ச்சியோடு கதைக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல என்று எனக்குப் புரிகிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு திருச்சியில் முழங்கினீர்களே, அரசியலைத் துறந்து பெரியார் வழியில் சமூக சீர்திருத்தத் தொண்டில் ஈடுபடுவதை நோக்கி என் மனம் அவாவுகிறது என்று. அந்த அவா நெஞ்சில் முள்ளாய் உறுத்தி, இறுதியில் இன்று நெஞ்சுக்கு நீதி காணும் முகமாக இனி பெரியாராக மாறுவது என்று முடிவு செய்துவிட்டார்களோ என்று நான் அய்யுறுகிறேன்.

காலம் கடந்த முடிவானாலும், காலம் தங்களை எம்மிடமிருந்து பிரிக்கும் முன்பாக இத்தகைய முடிவை எய்தினீர்களே என்று களிப்புறுகிறேன்.

பெரியார் ராஜாஜியாக மாறியதாக விஷம வாலிகள் தம் உள்லக் கிடக்கையை வெளிஅப்படுத்திக் கொண்டாலும் அது ஒரு போதும் நிகழாதது என நாங்களறிவோம். ஆனால் கலைஞர் பெரியாராக மாறும் வாய்ப்பு னெருங்கி வருகிரது என்ற அடையாளங்களைக் காணக் காண நெஞ்சம் நெகிழ்கிறது.

ஈந்த மாற்றம், மாற்றமல்ல பரிணாம வளர்ச்சி, விரைவு பட எளியேனின் ஆலோசனைகள் இரண்டு உண்டு.

பகுத்தறிவுக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டுமென நீங்கள் மெய்யாகவே விரும்புவீர்களாயின், எளிது எளிது. அது செய்தல் எளிது.

உங்கள் தோளில், கழுத்தில் நிறம் மாறிய நாகமெனச் சுருண்டு கிடக்கும் மஞ்சள் சால்வையை தூக்கி எறிவது முதல் யோசனை. காவியின் சகோதரன் மஞ்சளுடன் இனியென்ன உறவு. மறுபடியும் கறுப்புத்துண்டை கழுத்தில் கொள்மின்.

மூட நம்பிக்கையினால் இது காறும் மஞ்ளை அணிந்தீர்கள் என்ற வசைச் சொல் இன்றோடு அழியட்டும்.

அடுத்த யோசனை இதை விட எளிது.

பெரியார் வழியில் தேர்தல் அரசியலை விட்டு கழகம் நீங்கட்டும். இனி தேர்தலில் பங்கேற்க மாட்டோம் , சமூக மாற்றம் சடுதியில் நடைபெற சூளுரைப்போம் என்று முழங்குங்கள். இந்தப் புத்தாண்டில் கலைஞர் பெரியாராக மாற நான் தரும் இந்த யோசனைகளை ஏற்பீர்களென நம்புகிறேன்.

இரண்டில் ஒன்றைத்தான் உடனடியாக செய்ய இயலும் எனக் கருதினீர்களாயின், இரண்டில் எளியதான இரண்டாவது யோசனையை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

கண்ணகி நாமம் வாழ்க.

அன்புடன்

ஞாநி

.***

தீம்தரிகிட ஜனவரி 2003 இதழிலிருந்து

***

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி