எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

லெவெலின் எச் ராக்வெல் ஜூனியர்


ஈராக் போரை விரும்ப வில்லை என்பது தெளிவு. புஷ் போரை விரும்புகிறார் என்பதும் தெளிவே. ஈராக்கின் ஆதிக்கப் போக்கைத் தடுத்து நிறுத்தத்தான் போர் என்று அமெரிக்க நிர்வாகம் கூறினாலும் , எல்லா பத்திரிகையாளர்களும் , இது எண்ணெய்க்கான யுத்தமே என்று தெளிவாகவே சொல்கிறார்கள். நியூ யார்க் டைம்ஸில் தாமஸ் ஃப்ரீட்மன் சொல்வது : ‘நாம் தொடுக்கப் போகும் போர் எண்ணெய் பற்றியது தான் என்பதை மறுப்பவர்களைப் பார்த்து சிரிக்கத் தான் வேண்டும். ‘ இடது சாரி-லிபரல் தொனியில் இன்னமும் அவர் சொல்கிறார் : ‘ எண்ணெய்ப் போரில் எமக்குப் பிரசினை இல்லை. கூடவே எரிசக்தி விரயத்தைத் தடுக்கவும், பாதுகாக்கவும் ஒரு திட்டம் இருக்க வேண்டும். ‘

நியூ யார்க் டைம்ஸ்-ல் தான் ஈராக் எண்ணெய் வளம் பற்றிய வரைபடம் மிக முக்கியப் பகுதியில் வெளியாயிற்று. இந்தக் குறிப்பு மேலும் கூறியது : ‘ கிட்டத்தட்ட 112 பில்லியன் பாரல்கள் கையிருப்பு இங்கு உள்ளன. இது பற்றி வெளிப்படையாய்ச் சொல்லாவிட்டாலும் இது நம் மனதில் இருக்கிறது. ‘

எம் எஸ் என் பி சி என்ற தொலைக் காட்சி நிலையத்திலிருந்து வெளியான ஒரு குறிப்பின் தலைப்பே இது தான்: ‘ ஈராக் எண்ணெய் – அமெரிக்காவிற்கு போனஸ் ‘ . குறிப்புகள் மேலும் : ‘ ஈராக்கின் பெரும் எண்ணெய் வளம் உலக எண்ணெய்க் கம்பெனிகளுக்கு பெரும் வாய்ப்பு. அமெரிக்கா போரிட்டால், எண்ணெயைப் பங்கீடு செய்ய அமெரிக்கக் கம்பெனிகள் முன்னணியில் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அமெரிக்கக் கம்பெனிகள், யுத்தம் முடிந்தவுடன் வெறும் கையுடன் திரும்ப நேரிடாது. ‘

புஷ் நிர்வாக்த்திற்கும் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் ? எம் எஸ் என் பி சி நிருபர் அந்த விவரத்தையும் தருகிறார். ‘ அமெரிக்க என்ணெய்க் கம்பெனிகள் வெள்ளை மாளிகையுடன் கொண்டுள்ள வலுவான நட்புறவினால் லாபம் பெறுவார்கள். ஜனதிபதி புஷ் முன்னாள் எண்ணெய்க் கம்பெனி தலைவர். எண்ணெய் வளத்தை பெருக்கும் கொள்கையைத் தீவிரமாய்ப் பின்பற்றி வருபவர். துணை ஜனாதிபதி செய்னி ஹாலிபர்ட்டன் என்ற எண்ணெய்க் கம்பெனியில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ் செவரான் என்ற எண்ணெய்க் கம்பெனியில் முன்னால் டைரக்டராய்ப் பணி புரிந்தவர்.

யுத்தமும் பொருளாதாரமும்

ஈராக் யுத்தமும் எண்ணெய்க்கான தாகமும் கொண்டுள்ள இந்த உறவு ஒரு சித்தாந்த விளக்கத்தைக் கோரி நிற்கிறது. லெனினிஸ்ட் கருத்து : முதலாளித்துவ பொருளாதாரம், இயல்பாகவே ஏகாதிபத்தியம் (Imperialism) நோக்கி நகர்கிறது. இன்றைய அமெரிக்க வரலாற்றில் , இன்று வரை யுத்தம் மூள்வதும், பொருளாதாரச் சீரழிவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஜேம்ஸ் பேகர் என்ற அன்றைய உள்நாட்டு அமைச்சர் ஈராக் யுத்தம் எது பற்றி என்ற கேள்விக்கு, 91-ல் சொன்னது : ‘ வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு , வேலை வாய்ப்பு ‘ . அமெரிக்க வரலாற்றில் மூலதனத்தின் உரிமையாளர்களுக்கும், அரசிற்கும் இடையிலான வேறுபாடு மிக மெலிதாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று மிகத் தெளிவாகவே ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கல்ந்து விட்டது.

மூலதனவாதம் யுத்தத்தினால் தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று லெனின் சொன்னதாய் சொல்வார்கள். மூலதனவாதம் 19ம் நூற்றாண்டில் அழிந்து போகாததால், மார்க்ஸியத்திற்கு ஏற்பட்ட பெரும் பிரசினையிலிருந்து மார்க்ஸியத்தை மீட்க இதைச் சொன்னார் அவர். மூலதனவாதம் மிக வலுவாக வளர்ந்திருந்தது. தொழிலாளிகள் பணக்காரர்களாகிக் கொண்டிருந்தார்கள்- இது மார்க்ஸ் சொன்ன வரலாற்றுச் சிந்தனையிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது. லெனின் இது பற்றிச் சொன்ன போது- மூலதனவாதம் யுத்தத்தினால் தான் பிழைத்து வருகிரது என்றார். மேநாடுகளின் செல்வமே ரத்தத்தைப் பெருக்கித் தான் ஏற்பட்டது.

ஆனல், இதை முதலில் சொன்னவர் லெனின் அல்ல. மூலதனவாதிகளே அவருக்கு முன்னால் இதைச் சொல்லிவிட்டார்கள். மரே என் ராத்பார்ட் என்பவர் எழுதிய புத்தகம் ‘ அமெரிக்காவில் பணம் , வங்கிகளின் வரலாறு ‘ . இதில் எப்படி அன்றைய மூலதனவாதிகள் லாபம் குறைந்து வருவதைக் காட்டி வெளிநாடுகளுக்கு வர்த்தகத்தை விரிவு செய்யக் கோரினார்கள். இந்த விரிவாக்கம் வன்முறை கொண்டேனும் நிகழ்ந்தாக வேண்டும் என்றார்கள். ரூஸ்வெல்டின் அருகிருந்த இந்தச் சிந்தனையாளர்கள் தான் 1898-ல் ஸ்பெயின் போருக்குக் காரணமானார்கள்.

அதே வருடம் ‘ ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படைகள்: என்ற கட்டுரை ‘நார்த் அமெரிக்கன் ரிவ்யூ ‘ என்ற இதழில் வெளியாயிற்று. வளர்ந்த நாடுகளில் மிகுந்த சேமிப்பும், பெரும் உற்பத்தியும் நடக்கிறது ஆனால் வாங்குவோர் இல்லை என்று குறிப்பிட்டார். வெளிநாட்டுச் சந்தைகளை , வன்முறை கொண்டேனும், கைப்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டார். இப்படி யுத்தம் நடத்துவதற்கு அமெரிக்கத் தொழில் நுட்பம் கை கொடுக்கும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க தொழில்கள் ஒன்று படவும், லாபம் பெருக்கவும் இது பயன்படும் என்று கூறினார். ‘உலக சாம்ராஜ்யத்தை நிறுவ, அதிகாரக் குவிப்பும், அதனால் உடனடியாக முடிவுகள் எடுப்பதும் அவசியம் ‘ என்றார்.

லெனின் ஏகாதிபத்தியத்தின் லாப நோக்கு , ஒழுக்க ரீதியாய்த் தவறு என்று சொன்னார். ஆனால் கோனண்ட் இது மெச்சத்தக்கதாய், செயலுக்குத் தூண்டுவதாய்க் கண்டார். அவர் காலத்திய அறிஞர்கள் பலரும் இது ஒத்த கருத்தே கொண்டிருந்தனர். பாஸ்டனிலிருந்து வெளியான ‘யு எஸ் இன்வெஸ்டர் ‘ என்ற ஏடு, யுத்தம் மிகவும் தேவை என்றும், மூலதனம் முடங்கிவிடாமல் இருக்க உதவும் என்று குறிப்பிட்டது. ‘உற்பத்திக்கு மிகப் பரவலான சந்தைகள் கிடைக்கும் ‘என்றும், இதற்கு சரியான இடம் ‘ நாகரிகமற்றவர்களிடையேயும், காட்டுமிராண்டி இனத்தவரிடமும் ‘ தான் என்று குறிப்பிட்டது.

20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பொருளாதார நிபுணர்களிடையே இந்தக் கருத்து பெரிதும் பரவலாய் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. ஜான் பேட்ஸ் கிளார்க் என்ற கொலம்பியா பல்கலை அறிஞர் ‘ஏகாதிபத்தியம் அமெரிக்க வியாபாரத்திற்கு மேலும் மேலும் லாபம் ஈட்டித் தருவதையும், நிரந்தர லாபம் ஈட்டித் தருவதையும் ‘ புகழ்ந்து எழுதினார். ஃப்ரீட்மன் இன்று அச்சம் தரும் வகையில் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார்: ‘ சந்தையின் மறைவான கரம் , மறைவாகச் செயல் படும் முஷ்டியின் வன்முறை இல்லாமல் செயல்படாது. ‘ லெனின் கூட இவ்வளவு சரியாகச் சொல்லியிருக்க முடியாது. ஹார்வர்ட் பல்கலையின் ஜோசப் நை இன்னமும் குறிப்பாகவே சொல்கிறார்: ‘இந்த பொருளாதார , மற்றும் செய்தித் துறை வளர்ச்சிக் காலத்தில், ராணுவப் பாதுகாப்பை மறந்து விடுவது, பிராணவாயு மூச்சிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மறப்பதற்கு ஒப்பானது. ‘

வரலாற்றாசிரியர் ராபர்ட் காகன் இன்னமும் குரூரமான உண்மையைச் சொல்கிறார்: ‘ சிறந்த கருத்துகளும், தொழில் நுட்பங்களும் யுத்தகளத்தில் தம்மை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற உதவ வேண்டும். ‘

இது தான் விஷயம் : உங்களுக்கு செல் ஃபோன் தேவை என்றால் உங்கள் மகனை அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுக்கும் ஈராக் போருக்கு அனுப்ப வேண்டும். உங்கள் மகன் இறந்து பட்டால் : நினைவில் கொள்ளுங்கள், அமெரிக்க பொருளாதார மேலாண்மைக்கு இது மிக அவசியம். ராணுவமும், பொருளாதாரமும் உலகமயமாதலை ஆதரிக்கும் சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையும் இது தான்.

கம்யூனிஸ்டுகள், மூலதனவாதிகள் இரு தரப்பினருமே போரும், செல்வமும் ஒன்றையொன்று சார்ந்தவை என்று ஒப்புக் கொள்ளும்போது, அமைதியிலும் விடுதலையிலும் நம்பிக்கை கொண்ட ஒருவர் எப்படி எதிர்வினையாற்ற முடியும் ? யுத்தத்தினால் ஒரு சிலருக்கும் லாபம் விளையலாம், ஆனால் சுதந்திரப் பொருளாதாரம் முழுதுமே இப்படிப்பட்ட யுத்தகால லாப நோக்கில் பலனடையும் என்று கூற முடியாது. யுத்தம் பல அடிப்படை வசதிகளையும் கபளீகரம் செய்துகொண்டுதான் வருகிரது. மக்களின் வரிப்பணம் யுத்த தளவாடங்களுக்கும் பிறவற்றிற்கும்,செலவு செய்யப் படுவதால், பயனுள்ள செலவுகள் குறுக்கப் பட்டு அழிவுக்குதான் இது பயன் படுகிறது.

வியாபாரம் சமாதானமானது

உண்மையிலேயே, ‘ வியாபாரமும் போரும் தோழர்கள் ‘ என்று சொல்வது பழைய தாராளவாத பாரம்பரியம் சொல்வதின் வக்கிரப்படுத்துவது. 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுவரை வியாபாரம் பற்றி எழுதியவர்கள் எல்லோருமே, சுதந்திரத்துக்கும் சமாதானத்துக்கும் தோழமையானது வியாபாரம் என்றே பார்த்தார்கள். வியாபாரம் என்பது மக்களை ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கவே வைத்தது என்றும், போரிட வைக்கவில்லை என்றும் சொன்னார்கள். தளவாடங்களையும் போரையும் குறைவான தேவையாகத்தான் செய்தது, அதன் தேவைகளை அதிகப்படுத்தவில்லை.

வெளிநாட்டு சந்தைகளை திறப்பதன் தேவையைப் பற்றி என்ன சொல்லலாம் ? சந்தைகளை விரிவு படுத்துவதும், இன்னும் உழைப்பை பகிர்ந்துகொள்வதும் சிறப்பானவைதான். பொருளாதார வாழ்க்கையின் தினசரி வேலையில் நிறைய மக்கள் சேர சேர, வளமை உருவாக்கத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ஒத்துழைப்பையும், சமாதானமான வியாபார வேலைகளையும் முன்னெடுக்க வன்முறை என்பது மிக மிகச் சிறப்பான வழி அல்ல. பக்கத்து வீட்டுக்காரனின் புல் அறுக்கும் கருவியைக்கொண்டு உங்கள் வீட்டு புல்லை வெட்டிக்கொள்வது போன்றதுதான் இது. கசப்புணர்வும், சண்டையும் வியாபாரத்துக்கு நல்லதல்ல. இறப்பையும் பேரழிவையும் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

எப்படி இருப்பினும், ஈராக் பிரச்னை ஈராக் தன்னுடைய எண்ணெயை வெளியே விடாமல் தடுத்து நிறுத்திக்கொண்டிருப்பதால் அல்ல. கடந்த பத்து வருடங்களாக, முதல் ஈராக் போருக்கு முன்னரே, அதன் எண்ணெய் உற்பத்தி உலகத்துக்குக் கிடைத்துத்தான் வந்தது. நவீன போர் வரலாற்றின் மாபெரும் முரண்தொடையாக, முதல் புஷ் அரசாங்கம், ஈராக் தன்னுடைய எண்ணெயை உலகத்துக்கு அளிக்காமல் தடுத்து வைத்துக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியது. அப்புறம், அமெரிக்கா அந்த ஈராக் எண்ணெயை வெளியே விடாமல் சேன்க்ஸன் செய்துவிட்டது.

தீர்வு

நமக்கு இதைச் சொல்ல அனுமதி இல்லை : ஆனால் ஈராக் பிரசினைக்கு தீர்வு மிகச் சுலபமானது தான். ஈராக் மீதான் பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொண்டு ஈராக்குடன் வர்த்தகத்தைத் தொடங்க வேண்டும். என்ணெய் விலை பெரிதும் குறையும். அமெரிக்கா மீதுள்ள வெறுப்பும் குறையும். ஈராக் கொண்டுள்ள துயரங்களை முன்னிறுத்தி பயங்கரவாதிகளைச் சேர்ப்பதும் குறையும். ஒரே பிரசினை என்னவென்றால் புஷ்ஷின் நட்புக் கொண்ட அமெரிக்க கம்பெனிகள், மற்ற கம்பெனிகளுடன் போட்டி போட்டு ஈராக் எண்ணெயைப் பெற வேண்டும். இது தானே சுதந்திர வர்த்தகத்தின் வழி. யாருக்கும் சிறப்புச் சலுகைகள் கிடைக்காமலிருப்பது தானே சுதந்திர வர்த்தகம். போட்டியும், ஒத்துழைப்பும் கொண்டு தானே எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் உயர்த்த முடியும். நிச்சயமாய் வன்முறையால் இது ஆகாது. இது மிக எளிதாய்ப் புரியக் கூடிய ஒன்றுதான், ஆனால் புஷ் நிர்வாகத்தில் உள்ளவர்கள் லெனினை நிரூபிக்கத் துடிக்கிறார்கள்.

***

http://www.mises.org

Series Navigation

லெவெலின் எச் ராக்வெல் ஜூனியர்

லெவெலின் எச் ராக்வெல் ஜூனியர்