தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

சின்னக்கருப்பன்


என்னைத் திட்டி வந்த கடிதங்களின் காட்டத்தால் கொஞ்சகாலம் தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு பலருக்கு நிம்மதி தரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய அவசரச் சட்டம் என்னை மீண்டும் கணிப்பொறிக்கு இழுத்துவந்துவிட்டது. மனம் நோக விருப்பம் இல்லாதவர்கள் ஜோராக கைதட்டிவிட்டு அடுத்த கட்டுரைக்குச் செல்லுங்கள்.

முன்பே சொல்லிவிடுகிறேன். இந்தச் சட்டம் தவறானது. மனித உரிமை மறுப்பை அடிப்படையாகக் கொண்டது. ‘நான் எந்தக் கடவுளைக் கும்பிடுகிறேன், எந்தக் கடவுளைக் கும்பிடுவதாக இருக்கிறேன் ‘ என்று அரசாங்கத்துக்குச் சொல்லவேண்டும் என்ற சட்டம் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் குறுக்கிடும் சட்டம்.

ஆனால், இதுதான் சாக்கு என்று பலரும் இந்துமதத்தைப் பற்றிய தமது வழக்கமான உளறல்களை ஆரம்பித்துவிட்டார்கள். அத்தோடு, இந்த மதமாற்றப்பிரச்னை ஒரு தலித் பிரச்னையாக உருவாக்கி வருகிறார்கள். இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியுமே இந்தக் கட்டுரை.

ஒரு மனிதன், எனக்கு இதில்தான் ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்று ஒன்றை நம்பினால், அதனை யாரும் இன்றைய சூழ்நிலையில் தடுக்க முடியாது. என்னுடைய நண்பர், பிறப்பால் கிரிஸ்தவர், வாராவாரம் சனிக்கிழமை காலையில் சென்னையிலிருந்து திருப்பதி போகும் பஸ்ஸில் இருப்பார். அவரது மனைவியாருக்கும் இது தெரியும். அவர் தன் கணவனைப் பற்றி என்னிடம் அலுத்துக்கொள்வாரே தவிர, கணவனை அப்படிப் போகக்கூடாது என்று கட்டாயப்படுத்தியதில்லை. (ஒரு வேளை கட்டாயப்படுத்தி பிறகு பிரயோசனமில்லை என்று விட்டிருக்கலாம்) என் முஸ்லீம் நண்பர் சில வருடங்களுக்கு முன்னர், தன்னை இந்துவாக கெஸட்டில் பதிவு செய்துகொண்டார். யாரிடமும் சென்று தீட்சை வாங்கவும் இல்லை, அவர் கோவிலுக்கும் போவதில்லை. அப்புறம் ஏன் இந்துவாக உங்களைப் பதிவு செய்து கொண்டார்கள் என்று கேட்டேன். குழந்தைகளுக்காக என்று சொன்னார். கிராமத்தினர் முஸ்லீமாக கூட்டமாக மதம் மாறுவதும், கிரிஸ்தவ போதனைக் கூட்ட விழா நடப்பதும் பளிச்சென்று தெரிகிறதே தவிர, இதெல்லாம் தனிநபர் அளவில் அங்கங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போல எத்தனை எத்தனையோ மனிதர்கள் மதம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். எது எப்போது நல்லதென்று தோன்றுகிறதோ, அதன் பக்கம் பல பல காரணங்களுக்காகச் சென்று கொண்டே இருக்கிறார்கள். மதம் என்பது மனிதன் கண்டுபிடித்த சமாச்சாரம் என்றுதான் நான் கருதுகிறேன். அது தேவதூதர்கள் உருவாக்கியதாகவோ, தேவமைந்தர்கள் உருவாக்கியதாகவோ, தெய்வங்கள் உருவாக்கியதாகவோ நான் கருதவில்லை. மொழி போல, மதம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் இடையறாத தொடர்புகளால் உருவாகும் கருத்து தொகுப்புகள்தான் (மீம் வடிவங்கள்) என்று நான் கருதுகிறேன். மெமடிக்ஸ் என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆரம்பித்துவைத்த அறிவியல் இந்த மீம் வடிவங்களை ஆராய்கிறது. (இது அறிவியல்தானா என்பதை பலர் விவாதம் புரிகிறார்கள்)

இந்து மதம் என்பது வேறு, இந்தியாவின் சமூக அமைப்பு என்பது வேறு என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்துமத விரோதிகள் அதனைச் சொல்வதில்லை. உதாரணமாக, மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய சமூக அமைப்பின் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்மிருதியை தூக்கி எறிந்துவிட்டாலும் இந்து மதம் இருக்கும். உதாரணமாக அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தையும், பல அமெரிக்கர்களின் மதமான கிரிஸ்தவ மதத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்வது போன்றது இது.

ஸ்ருதி என்பது வேதம், உபநிடதம் இரண்டு மட்டுமே. (பகவத் கீதையை பலர் ஸ்ருதி என்று சேர்த்துக்கொள்கிறார்கள்). ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. இந்துமதம் வேதம் உபநிடதத்தில்தான் இருக்கிறது. ஸ்மிருதிகளில் இல்லை என்றுதான் படித்த இந்துக்கள் நம்புகிறார்கள். சாதாரண இந்துக்களோ, வேதம் உபநிடதங்களில் குறிக்கின்ற விஷயங்களை உள்ளார்ந்த நிலையில் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரே டூரிஸ்ட் பஸ்ஸில் திருச்சி மாரியம்மன், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோவில் போய் பார்த்துவிட்டு வந்துவிடும் ஒரு வேத மனப்பாங்கு கொண்டவர்கள். கடவுளின் பெயர் என்னவாக இருந்தாலும் ஒரே கடவுள்தான் என்பதை ஆழமாக உணர்ந்தவர்கள்.

வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் பிராம்மணர், சத்திரியர் வைசியர், சூத்திரர் என்று பேசுகிறது, ஒரு மனிதனின் உடலிலிருந்து பிராம்மணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் வருவதாக கூறும் இந்தப் பகுதியை பலர் பல விதமாக பொருள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் கல்வி, வீரம், பொருள், அவைகளுக்கான உழைப்பு என்பதாக பொருள் கூறுவதும் உண்டு. இன்னொரு பொருளாக, எப்படி பல்லாயிரம் செல்கள் இணைந்து இன்னொரு உயிர் உண்டாகிறதோ, அது போல பல்லாயிரம் மனிதர்கள் இணைந்து ஒரு சமூகம் உருவாகிறது என்றும், அந்த சமூகத்தில் இன்றியமையாதவையாக இந்த நான்கு அங்கங்களையும் அந்த மா-உயிர் கொள்கிறது என்றும் பொருள் கூறுவார்கள். இது மனுஸ்மிருதியில் அடிப்படையாக குறிப்பிடப்பட்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது. அது எப்படி அந்தக் காலத்துப் புரிந்து கொள்ளலோ அது போல, இன்றைய புரிந்து கொள்வதும் இன்றைய காலத்தின் படி. இந்தக் காலத்துக்குத் தகுந்தாற்போல வேதத்தைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கோருவதோ, அவ்வாறு படித்துப் புரிந்து கொள்வதோ தவறானதல்ல.

ஜாதிகளை பெரும் பிரிவுகளாகப் பிரிப்பது வர்ணம் எனவும், ஜாதிகளை உருவாக்கியது மனுஸ்மிருதி எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது இலக்கணத்துக்கு முந்தியது இலக்கியமா, இலக்கியத்துக்கு முந்தியது இலக்கணமா என்ற கேள்வியின் விடைதான் இதற்கும். இலக்கணம் எழுதிய பின்னர் தான் இலக்கியம் என்பது எந்தக் காலத்திலும் கிடையாது. ஜாதிகளுக்குப் பின்னர்தான் அவற்றை வரைமுறைப் படுத்திய மனுஸ்மிருதி வந்திருக்கமுடியுமே தவிர மனுஸ்மிருதி ஜாதிகளை உருவாக்கியது என்பது இருந்திருக்க முடியாது.

இன்னொன்று, மனுஸ்மிருதியை மீண்டும் கொண்டுவர பார்ப்பனர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றும் ஒரு வாதம் பேசப்பட்டு வருகிறது. மனுஸ்மிருதிக்கு இன்றைய காலத்தில் முதல் எதிரிகளாக பிராம்மணர்கள்தான் இருப்பார்கள். மற்ற எல்லா வர்ணத்துக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கும் சொத்துரிமை பிராம்மணர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது மனுஸ்மிருதியில். இன்று எந்தப் பிராம்மணர் தன் சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு ‘பவதி பிஷாந்தேகி ‘ என்று தினம் மற்றவர்கள் போடும் பிச்சையை உண்டு வாழ ஒப்புக்கொள்வார் ? (மனுஸ்மிருதி பிராம்மணர்கள் எழுதிய சட்டம் என்றும் ஒரு வாதம். அப்படி அவர்கள் எழுதியிருந்தால், தமக்கு சொத்துரிமையை விலக்கிக்கொண்டு எழுதியிருப்பார்களா ?)

***

இந்து மதத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகள் எல்லாமே மதம் என்பதற்கு உலகம் பூராவிற்குமான ஒரே விளக்கத்தை எதிர்பார்க்கிற மேற்கத்திய தத்துவவாதிகளின் மன நிலையிலிருந்து வெளிவருகிறது.

இவர்கள் கேட்கும் கேள்விகள் இவை: உன் கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா ? ( இந்து மதத்தின் பதில் நிர்க்குண பிரம்மம், சகுண பிரம்மம் இரண்டுமே இந்து மதத்தில் ஒரே கருத்தின் வேறு வேறு வடிவங்கள்.) உன் கடவுள் இறைத்தூதுவரை அனுப்பினாரா ? ( இல்லை, இறைவனின் அம்சம் ஜீவாத்மாவிடம் இருப்பதால் ஒரு அர்த்தத்தில் எல்லோருமே இறைவனின் தூதுவர்கள் தான். ) உன் கடவுள் தன் மகனை அனுப்பினாரா ? ( எல்லோருமே கடவுளின் குழந்தைகள் தான். தனியாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. ) குழப்பமாய் இருக்கிறதே. (குழப்பம் தான் தெளிவு. மரத்தை மறைத்தது மாமத யானை , மரத்தில் மறைந்தது மாமதயானை. Fuzzy Logic மாதிரி). இறந்த பிறகு நியாயத் தீர்ப்பு நாள் உண்டா ? ( இந்தப் பிறவியில் செய்ததற்கு அடுத்த பிறவியில் உங்களுக்கு இந்த மண்ணிலேயே தீர்ப்புகள் கிடைக்கும். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முயற்சி செய்யுங்கள்.) உன் கடவுள் எந்த புத்தகத்தையாவது எழுதி உனக்குக் கட்டளைகளை இட்டிருக்கிறாரா ? ( இறைவனின் கட்டளைகள் என்று தனியே இல்லை. அறம் என்பது ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகக்குழு செய்து கொள்ளும் ஏற்பாடு அவ்வளவு தான். ) கடவுள் யாரிடமும் பேசியிருக்கிறாரா ? ( எல்லோரிடமும் அவர் பேசக்கூடும். உங்களிடமும் அவர் பேசக்கூடும். உன்னையே நீ அறிவாய் என்பது அது தான்.) ராமர் கடவுள் தானே. ( ஆமாம், இல்லை. கடவுளின் அவதாரம் என்ற முறையில் அவர் கடவுளே. ஆனால் ‘மரியாதை புருஷோத்தமன் ‘ என்று அழைக்கப் படும் ராமர் ஒரு ஆதர்ச புருஷன்.) நீ குழப்புகிறாய் . உன் மதம் மதமேயில்லை. (என் மதம் நீங்கள் மதத்தை அளக்கக் கொண்டிருக்கும் அளவுகோல் படி மதம் இல்லையென்றால் வேறு ஏதாவது சொல்லி அழைத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.)

***

இந்துமதம்தான் சாதிகளை உருவாக்கியது என்று பேசுகிறார்கள். இது போல ஒரு முட்டாள்த்தனம் இருக்க முடியாது. நைஜீரியாவிலும், ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன. சினுவா அச்சபே எழுதிய Things fall apart படித்தவர்களுக்கு அவர் சொன்ன நைஜீரிய சாதி முறை தெரிந்திருக்கும். அது பழங்குடி சமூகத்திலிருந்து கிரிஸ்தவ சமூகம் ஆன நைஜீரியாவிலும் அந்த சாதிமுறை மாறவில்லை. வலுப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அங்கு முதலில் மதம் மாறியவர்கள் கீழ் சாதியினர்தான். அது மட்டுமல்ல, எல்லா விவசாயம் சார்ந்த சமூகங்களிலும் சாதி இருந்திருக்கின்றன. இவ்வளவு காலமாக முஸ்லீம்களாக இருக்கும் ஆஃப்கானிஸ்தானத்திலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் சாதி தீவிரமாக இருக்கிறது, வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்துவிட்டால் அந்தப் பெண் அந்தப் பெண்ணின் உறவினர்களாலேயே கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது, பல பெண்ணுரிமை போராளிகள் கேட்டுக்கொண்டும் இதுவரை அதனைத் தடுக்கும் சட்டம் ஒன்றை பாகிஸ்தானிய அரசால் இயற்றமுடியவில்லை. ஹானர் கில்லிங் என்று பெண்ணின் பெருமைக்காக செய்யப்படும் கொலையை சட்டத்தால் கூட தண்டிக்க முடியவில்லை என்றில்லை, அதனை தவறு என்று சட்டத்தைக்கூட உருவாக்க முடியவில்லை. இதனை இஸ்லாமுக்கு எதிரானது என்று ஆங்கில பத்திரிக்கைகளில் வாதிடுபவர்களைப் போலவே, இது இஸ்லாமில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இஸ்லாமியத் தீவிரவாதிகள் வாதிடுகிறார்கள்.

மதம் மாறுவதால் சாதி ஒழிந்துவிடுவதில்லை. இதுதான் நிதர்சன உண்மை. அதற்குக் காரணம் ஜாதி என்பது ஒரு இனத்தைப் போல தோல் நிறத்தில் இல்லை. ஜாதி என்பது உங்களுக்குள் இருக்கும் ஒரு விஷயம் அல்ல. உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் ஜாதி. மீண்டும் சொல்கிறேன். ஜாதி என்பது தோலின் நிறத்தில் இல்லை. மற்றவர்கள் மனதில் இருக்கிறது. நீங்கள் மதம் மாறினாலும் உங்களை மற்றவர்கள் உங்கள் சாதிக்காரராகவே நடத்தினால் நீங்கள் அந்த சாதிக்காரர்தான். அது மாறிவிடாது. நீங்கள் மதம் மாறியபின்னர் உங்களை மற்றவர்கள் மதித்தால் நீங்கள் மதம் மாறுவதில் அர்த்தம் இருக்கிறது. இருப்பினும், அது ‘மற்றவர்களான ‘ இந்துக்களைச் சார்ந்தே இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக, தலித் ஒருவர் டாக்கடை வைத்தால் யாரும் போகாமல் இருக்கலாம். அவர் முஸ்லீமான பின்னால் அதே கிராமத்தில் அவர் டாக்கடை வைத்தால், பாய்கடை என்று போனால் சரி. போகாமல் முஸ்லீமானாலும் தலித் தானே என்று பேசினால் என்ன பிரயோசனம் ? அந்த இந்துக்களும் கிரிஸ்தவ மதத்துக்குச் சென்றால், தலித் கிரிஸ்தவர்களுக்கு முந்தைய ‘மரியாதை ‘தான் தொடர்ந்து நடப்பதை கவனியுங்கள். சரி ஒரு வாதத்துக்கே வைத்துக்கொள்வோம். எல்லா தலித்துகளும் கிரிஸ்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் ? எல்லா கிரிஸ்தவர்களுமே தலித்துகள் போல நடத்தப்படுவார்கள். அவ்வளவுதான். கிராமம் அளவில் இருக்கும் ஜாதி, நகரத்துக்கும் எளிதில் அடையாளம் காணப்படும் கிரிஸ்தவ பெயர்களால் பரவும்.

இதனால்தான், இந்த மதமாற்ற விஷயத்தை தலித் விடுதலையாக சித்தரிப்பதை போலித்தனம் என நான் எதிர்க்கிறேன். எல்லோரும் முஸ்லீமாக மாறிவிட்ட பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஜாதி தீவிரமாக இருக்கிறது. இந்துமதத்துக்கு சம்பந்தமே இல்லாத நைஜீரியாவில் ஜாதி இருக்கிறது. அங்கு எல்லோரும் கிரிஸ்தவ மதத்துக்கும் இஸ்லாமுக்கும் சென்ற பின்னரும் ஜாதி இருக்கிறது. ஜப்பானில் தீண்டாமை இருக்கிறது. இது அனைத்தும் தெரிந்திருந்தும், இந்தியாவில் தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராக பேச, சாதி என்பது ஏன் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது ? இத்தனைக்கும் இந்து ஆன்மீகப் பெரியவர்கள், ஜாதி கடந்த ஒரு ஆன்மீகத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். நான் இங்கே சாதித்தலைமைகளை, அந்தத்தலைமைகள் தங்களை ஆன்மீகப்பெரியவர்கள் எனக் கூறிக்கொண்டாலும், ஆன்மீகப்பெரியவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே, இன்றைக்கு ஜாதிப்பிரச்னைக்கு தீர்வு, சமூகத் தீர்வாகத்தான் இருக்கமுடியும். மஞ்சுளா தலித்துகள் நகரத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று சொல்வது ஒரு நடக்கக்கூடிய தீர்வு. மற்ற மதத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்பது ஒரு சரியான தீர்வல்ல. மதமாற்றம் மனமாற்றத்தைத் தராது. மதம் மாறினால், சாதியின் தீவிரம் குறையவில்லை என்பதை கிரிஸ்தவ பாதிரிமார்களே ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், பிரச்னையை தவிர்க்க இன்னொரு இடத்துக்கு ஓடுவது என்பது எப்போதுமே தீர்வாக முடியாது. நின்று போராடுவதால்தான் நீதி கிடைக்கும். (ஆக, மார்க்ஸியர்களை பொறுத்த மட்டில், இனிமேல், தொழிலாளர்களுக்காகப் போராட தேவையில்லை. ஒரு கம்பெனியில் உங்களை சரியாக நடத்தவில்லையென்றால், இன்னொரு கம்பெனிக்குப் போகவேண்டும். அங்கும் கேவலமாக நடத்தினால் இன்னொரு கம்பெனிக்குப் போக வேண்டும். இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். அதுதானே இந்தப்பிரச்னையில் அவர்கள் சொல்வது ? இந்து மதத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் கிடைக்கும் வெற்றிதான் கிரிஸ்தவ சமூகத்தில் இருக்கும் ஜாதி வெறியை குறைக்கும். கிரிஸ்தவ சமூகத்துக்குப் போவதால் நீதி வராது. இந்த அநீதிதான் அங்கும் தொடரும். சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்பது மனச்சாய்விற்கும், சமூகப் பார்வையில் உரமேறிவிட்ட இழிவுப் பார்வைக்கும் எதிரான போராட்டம். )

இந்துமதம், ஒன்றோடு ஒன்று போரிட்டு வந்த பல சமூகங்களுக்கு பொதுவான அடித்தளத்தை, பொதுவான ஆன்மீகத்தை உருவாக்கிய மதம். இது பல பெரியோர்களாலும், சமூக நல விரும்பிகளின் முயற்சியிலும் தோன்றிய விஷயம். அந்த புரிதல் இருப்பதாலேயே, காந்திக்கும், ராமகிருஷ்ணருக்கும், சைதன்யருக்கும், ராமானுஜருக்கும், விவேகானந்தருக்கும் இந்து சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து நிறைகளை அதிகரிக்க காலம் காலமாக இந்த சமூகம் இடம் கொடுத்து வந்திருக்கிறது. அது புத்தகத்தை வைத்துக்கொண்டு எந்தக் காலமும் வாதிடவில்லை. வாதிட்டபோதும், இன்னும் படித்தறிந்த மாமனிதர்கள் அதே வேதப்புத்தகங்களின் மூலமாகவே சமூகக் குறைகளைக் களையவும் இது இடம் கொடுத்திருக்கிறது. அதே போல, அந்தந்த வேதப்புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு சமூகக்குறைகளைக் களைய முனைந்தவர்களுக்கும் அன்றைய சார்வாக ரிஷியிலிருந்து இன்றைய பெரியார் வரை இடம் கொடுத்திருக்கிறது. இடம் கொடுப்பதாலேயெ, அந்த சகிப்புத்தன்மையே இதன் பலவீனத்தை ஒப்புக்கொண்டதாகக் கொண்டு அதே இடத்தை தாக்குவதும் மற்றவர்களால் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

ஆனால், இந்து சமூகம் தொடர்ந்து பரிணமித்து வரும் ஒரு சமூகம். கடந்த காலத்தின் சிறந்த விஷயங்களை தக்க வைத்துக்கொண்டும், காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை எந்த விதமான மதச்சங்கிலியும் இன்றி உதறிக்கொண்டும் வரும் சமூகம். இந்து சமூகம் இன்று பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது. அது சம்பந்தமாக சட்டம் இயற்றப்பட்டால் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏற்றுக்கொள்கிறது. பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கியிருக்கிறது. பெண்களும் ஆண்களும் சாதி தாண்டி திருமணம் செய்து கொள்ள உரிமையை வழங்கியிருக்கிறது. பெண் சிசுக்கொலையை சட்டப்பூர்வமாகத் தண்டிக்கிறது. குழந்தைகள் திருமணத்தை சட்டப்பூர்வமாகத் தண்டிக்கிறது. கணவன் சிதையில் மனைவியைத் தள்ளும் கொடுமையை சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது. அவ்வாறு தள்ளியவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்தை ஏறத்தாழ ஒழிந்துவிட்டது. தீண்டாமைக் கொடுமையை சட்டப்பூர்வமாகத் தண்டிக்கிறது. தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவர்களுக்கு அரசாங்கத்தில் பங்கு தருகிறது. இவை அனைத்தும் அனைத்து இந்திய அளவில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. ராஜஸ்தானிலிருந்து பீகார் அஸ்ஸாம் வரைக்கும், காஷ்மீரிலிருந்து கேரளா வரைக்கும் இத்தனை விஷயங்களையும் இந்து சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வளவு பரந்த வேறுபட்ட சமூகம் சமூகக்கொடுமை என்பதையும் காலத்துக்கு ஒவ்வாது என்பதையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்கிறார்கள். அதன் காரணம் என்ன என்று சற்றே இந்த இந்து மத எதிர்ப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் அறிவுஜீவிகள் இதுவெல்லாம் பெரியாரின் போராட்டத்தால் வந்தது என்று பேசுகிறார்கள். ராஜஸ்தானிலும், பீகாரிலும், அஸ்ஸாமிலும் நடந்திருக்கும் இத்தனை விஷயங்களுக்கும் பெரியார் காரணமா ?

ஏன் இந்துமதத்தினர் தங்கள் சமூக பழக்கவழக்கங்களில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாத தவறுகளை ஏன் தைரியமாக முன்வந்து களைகிறார்கள் ? அது ஏன் இந்துமத ஆச்சார்யார்களும் அந்த தவறுகளை தவறுகள் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு சில ஆச்சார்யார்கள் கூறினாலும் ஏன் பரவலாக அது உதாசீனம் செய்யப்படுகிறது ? காரணம் மிக மிகத் தெளிவானது. ஆனால் அந்தக் காரணம் யாராலும் பேசப்படாமல், முக்கியமாக இத்தகைய அறிவுஜீவிகளால் உதாசீனம் செய்யப்படுகிறது.

இந்து பாரம்பரியத்தில் ஆன்மீக உபதேசமும், சமூக விதிகளும் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளன. பகவத் கீதையிலும் வேதத்திலும் உபநிடதத்திலும் எங்கேயும் ஒரு பெண் தலையில் முக்காடு போட வேண்டுமா என்பதையோ, திருமணம் செய்த பெண் விவாகரத்து செய்யும் உரிமை இருக்கிறதா என்பதையோ பேசுவதில்லை. ஒரு பெண்ணுக்கு எந்த வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதையோ, ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதையோ பேசுவதில்லை. எந்த இடத்திலும் கடவுளை நம்பாதவனை கொல்லவேண்டுமா வேண்டாமா என்பதையோ, எந்த குற்றத்துக்கு எந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதையோ பேசுவதில்லை. சொல்லப்போனால், எந்த சமூக விதியும் இந்த புத்தகங்களில் பேசப்படுவதில்லை. முழுக்க முழுக்க இவை பேசுவதெல்லாம், இறைவனைப்பற்றியும் இயற்கையைப் பற்றியும், இறைவனை அறியும் வழிகள் பற்றியும், இறைவனின் இயற்கை பற்றிய விசாரமும்தான். தேவை இருப்பவர்கள் படிக்கிறார்கள். தேவை இல்லாதவர்கள் தங்கள் லெளகீக வாழ்க்கையில் தொடர்ந்து செல்கிறார்கள்.

சமூக விதிகள் பற்றிப் பேசும், சுக்கிரநீதியும், மனுநீதியும், விதுரநீதியும், இன்னும் ஆயிரமாயிரம் நீதிப்புத்தகங்களும் சமூக விதிகள் பற்றிப் பேசுகின்றன. (அவை கூட எங்கும் இறைவனை நம்பாதவனைக் கொல்லச் சொல்வதில்லை.) அந்த சமூக விதிகள் ஒரு காலம் இருக்கலாம், இன்னொரு காலம் மறையலாம். ஒரு நீதி ஒரு அரசனால் பின்பற்றப்படலாம், அவை மற்றொரு அரசனால் உதறப்பட்டு இன்னொரு விதிமுறைகள் உருவாக்கப்படலாம். அவை அந்தந்தக் காலத்துக்கு உரியவை. அவை அனைத்தும் ஸ்மிருதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஸ்மிருதிகள் என்ற காரணத்தாலேயே அவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் உள்ளவையாக வரையறுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணர் கீதையில் சொல்வது போல், ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு மனு. இந்தக் கால மனு அம்பேத்கார் என்று இந்துக்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவே இந்துமதத்தின் பலம். இதுவே இந்து சமூகத்தின் பலம். இவர்கள் எந்த விதமான சமூக விதிகளாலும் கட்டுண்டு இல்லை. பாஞ்சாலி ஐந்து கணவன்மார்களை கொண்டிருந்ததோ, அல்லது தசரதன் அறுபதாயிரம் மனைவியரை கொண்டிருந்ததோ இந்து மதம் அல்ல. விவாகரத்து என்று எந்தவிதமான முன்னுதாரமும் இன்றி, இன்று இந்து சமூகம் விவாகரத்தை பெண்களுக்கு சம உரிமையோடு வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு வெகுகாலத்துக்குப் பின்னரே அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியில் ஒரு குழந்தை தந்தை பெயரோடுதான் பள்ளியில் சேரவேண்டும் என்று இருந்த கட்டாயம் கூட சமீபத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் எந்தவிதமான இந்துமத ‘அடிப்படைவாதிகள் ‘ எதிர்ப்புமின்றி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன என்பது நாம் பார்க்கவேண்டிய விஷயம். ஏனெனில் இந்துமத ‘அடிப்படைவாதம் ‘ என்று ஏதும் இல்லை என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். இன்றைய இந்து தீவிரவாதிகள் அனைவரும் இந்துக்களின் பாதுகாவலர்களே தவிர இந்து மத கோட்பாடுகளின் பாதுகாவலர்கள் அல்லர். இந்து மதம் கேவலமாகச் சித்தரிக்கப்படும்போது குரலெழுப்புபவர்கள். ஆனால் இந்து சமூகத்தின் உள்ளே நடைபெறும் மாற்றங்களுக்கு எதிரிகள் அல்லர். இந்து மதத்தில் இப்படித்தான் கூறியிருக்கிறது. ஆகவே இப்படிச் செய்வது தவறு என்று யாரும் பேசி நீங்கள் கேட்டிருக்க முடியாது. அப்படி பேசப்படும் ஒரே ஒரு விஷயம் பசுவதை தடுப்புச் சட்டம். பசுவதை தடுப்பு ஏன் மதத்தோடு இணைந்ததாக ஆனது என்பதை திண்ணையில் வந்த ஒரு கட்டுரை தெளிவாக்கும். ( ஒரு பஞ்சத்தின் போது, பசுக்களை விவசாயிகள் சாப்பிடுவதை பிரிட்டிஷ் அரசாங்கம் ராணுவம் கொண்டு துப்பாக்கி முனையில் தடுத்திருக்கிறது)

இருப்பினும் பசு மாமிசம் சாப்பிடுவது தவறு என்று எந்த வேதத்திலும், உபநிடதத்திலும் இல்லை என்பதையும் கவனியுங்கள். சொல்லப்போனால், வேதத்தில் மாட்டு மாமிசம் சாப்பிடுவது பற்றி ஆதரவாக எழுதிய வரிகள் இருக்கின்றன.

***

ஆனால் மற்ற மதங்களில் சமூக சட்டங்களும் கடவுளும் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். பெண்கள் பர்தா போடுவதும், எத்தனை பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், ஒருவர் இறந்ததும் எப்படி சொத்து பிரிக்கப்படவேண்டும் என்பதும் அடிப்படை மதப்புத்தகத்தில் இறுக்கமாகப் பிணைந்திருக்கிறது. பெண்களுக்கு பாதிரியார் பதவி மறுக்கப்படுவதும், விவாகரத்து உரிமை மனிதர்களுக்கு மறுக்கப்படுவதும், கருத்தடை உரிமை மறுக்கப்படுவதும், ஹோமோசெக்சுவல்களுக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் மதபுத்தகத்தைக் கொண்டுதான் நடக்கிறது. இன்குவிசிஷன் என்ற மத விசாரணை என்ற கட்டாய மதமாற்றம் அந்தப் புத்தகத்தைக்கொண்டுதான் நடந்தது. மனிதர்களை அடிமையாக வாங்குவதும் விற்பதும், காலனியாதிக்கமும் கூட அந்தப் புத்தகத்தின் விளக்கத்தோடுதான் நடந்தது என்பது இன்று செளகரியமாக மறுக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது. அப்படிப்பட்ட வியாபாரங்களிலும் காலனியாதிக்கத்தின் விளைவாலும் உருவான அறுவடையின் ஒருபகுதி நாடெங்கும் பரவலாக இருக்கும் கிரிஸ்தவ கல்வி நிலையங்களாகவும், மருத்துவமனைகளாகவும், மிஷனரிப் பணமாகவும் திரும்பி வருகிறதா ?

***

இந்தச் சட்டத்தை எதிருங்கள். ஆனால், அதுதான் சாக்கென்று இந்துமதம் கேவலமானது என்று உங்களது வழக்கமான பாட்டைப் பாடாதீர்கள்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்