மன்னியுங்கள், ஞாநி

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

மஞ்சுளா நவநீதன்


நான் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞாநி விரும்பினால், நிச்சயம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் எதற்காக ? ஞாநியை பிராமணன் என்று எழுதியதற்காக என்று ஞாநி சொல்கிறார். எனக்குத் தெரிந்த சொற்ப தமிழ் அறிவை வைத்து நான் எழுதிய கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தேன் . எங்கேயும் நான் ஞாநியை பிராமணர் என்று எழுதவில்லை. அது மட்டுமல்ல பிராமணர் என்பதை ஒரு வசைச் சொல் போல உபயோகிக்கும் போக்கு கண்டனத்திற்கு உரியது என்று பல இடங்களில் மிகத் தெளிவாகவே நான் எழுதியுள்ளேன். இருந்தும் என் கட்டுரையில் இப்படி ஒரு தொனி இருப்பதாக ஞாநி நம்பினால், நான் மனப் பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏனென்றால் நான் மிக மதிக்கும் பத்திரிகையாளர்களில் ஞாநி ஒருவர் அவர் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த நேரத்திலும் முரண்பாடு இருந்ததில்லை. அவர் அளவிற்கு, ஊடக சாம்ராஜ்யங்களிலும், அரசியல் ஆதரவு பெற்ற பத்திரிகை சாம்ராஜ்யத்திலும் பங்கு பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால் இந்தத் தொடர்புகளை , பத்திரிகை உலகின் அக்கறைகளை விரிவு படுத்துவதில் தான் அவர் செயல்படுத்தியிருக்கிறாரே தவிர தன்னுடைய சொந்த வளர்ச்சிக்கு அவர் பயன் படுத்திக் கொண்டதில்லை. தி மு க சார்ந்த ஊடகங்களில் அவர் கொண்டிருந்த பங்கு அப்போதே கூட அரசியல் கறை படியாத லட்சியப் போக்குடன் கூடியதாய்த் தான் இருந்தது. அவர் இடம் பெற்ற ஊடகங்களின் மையமான அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதை விட்டு நகர்ந்து கொண்டு விடுகிற மன பலம் , அந்த அரசியல் தொடர்புகளை தன் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தாத மேன்மை நம் தமிழ் நாட்டில் பார்க்கக் கிடைக்காத அபூர்வமான ஒன்று. அந்த லட்சிய உணர்வு தான் இன்று , பெரும் ஊடகங்களில் கிடைக்காத சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி , சிறிய அளவிலேனும் தன் செயல்பாடு இருந்தால் பரவாயில்லை என்று தீம்தரிகிட தொடங்க வைத்திருக்க வேண்டும். அதனால் ஞாநியின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை நான் வைத்திருக்கிறேன் என்று லேசான ஒரு தொனி என் கட்டுரையில் இருந்தாலும் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

என் கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு எனக்கு தொனியில் நம்பிக்கை இல்லை என்பது புரிந்திருக்கும். சொல்ல வருவதை , அது விமர்சனமானாலும், பாராட்டானாலும் வெளிப்படையாக, அவரவர் பெயரைச் சொல்லி அவர்கள் எழுத்தை முழுமையாக மேற்கோள் காட்டித் தான் நான் எழுதி வந்திருக்கிறேன். ஒரு இணைய ஏட்டில் எழுதிய பெண்மணி என்றோ, பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட தமிழ்ப் பேராசிரியர் என்றோ நான் எழுதியதில்லை. எழுதவும் மாட்டேன். எந்த விமர்சனமும் விமர்சனம் செய்யப் பட்டவர்களை நேர்மையான முறையில் சென்றடைய வேண்டும் , அந்த விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லும் வாய்ப்பு அளிக்கப் படவேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

கனல் மைந்தன் பேட்டியையும், என்னுடைய கட்டுரையையும் திறந்த மனத்துடன் மீண்டும் படித்துப் பார்க்கும்படி வாசகர்களையும், ஞாநியையும் கேட்டுக் கொள்கிறேன். கனல் மைந்தன் ‘காலச்சுவடு ‘ பற்றிய அபாண்டத்தை வைக்கும் முன்னால், சிறு பத்திரிகை இயக்கம் பற்றியோ, சிறு பத்திரிகைகளின் செயல்பாடு பற்றியோ, ஒரு வரி கூட கனல் மைந்தனோ, ஞாநியோ பேசவில்லை. ஞாநி கேட்ட கேள்வியும் சிறு பத்திரிகைகள் குறித்ததல்ல. ஞாநி கேட்ட கேள்வி ‘தமிழாசிரியர்கள் எப்படி தமிழை நுகர் பொருளாகக் காண்கிறார்கள் ‘ என்பது பற்றியது.

ஞாநியின் கேள்விக்கு முன்னால் கனல் மைந்தன் சொல்வது இது : ‘ இன்றைக்கு தமிழ்ச் சூழலில் நாம் சந்திக்க வேண்டிய சிக்கல்கள், சவால்கள் , கணிணி யுகத்தில் எதிர்கொள்ள வேண்டிய இடர்கள் எல்லாம் ஆராயப் படாமல் ஒதுக்கப் படுகின்றன. பெரும் பேராசிரியர்கள் இந்த அரங்கில் நடத்தும் தனிப் பேச்சுகளை கூர்ந்து கவனித்தால் , தமிழ் என்கிற நுகர் பொருளை , ஒரு புதிய வாணிகப் பண்டத்தை எப்படி காசாக்கிக் கொள்ளலாம் என்று முனைவது தான் தெரிகிறது. ‘

இதைத் தொடர்ந்து ஞாநியின் கேள்வியை முழுமையாகவே நான் தருகிறேன். ‘ இது வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் தமிழ் காசு சம்பாதிக்க உதவாது. அதற்குப் பதில் பிரெஞ்ச் படிக்கலாம், சமஸ்கிருதம் படிக்கலாம், ஆங்கிலவழிக் கல்விக்குப் போகலாம் என்ற சிந்தனை மேலோங்கியுள்ள சூழலில், எப்படி தமிழை நுகர் பொருளாக்குகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள் ? ‘

இந்த ஞாநியின் கேள்வியில் சிறுபத்திரிகை பற்றியோ காலச்சுவடு பற்றியோ எதுவும் இல்லை. இது தமிழாசிரியர்கள் மன நிலை பற்றியது. இதற்குப் பதிலாக தமிழாசிரியர்கள் சிங்கப்பூர், மலேசியா போய் பட்டி மன்றம் நடத்துகிறார்கள் என்றோ, தமிழை வேறு எப்படி தமிழாசிரியர்கள் நுகர் பொருளாக்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றியோ கனல் மைந்தன் சொல்வார் என்று எதிர்பார்ப்பது நியாயம். ஆனால் கனல் மைந்தன் யாரும் எதிர்பாராத திசையில் பாய்கிறார்.

கனல் மைந்தனின் பதில் இது : ‘ தமிழை தமிழ் நாட்டுச் சூழலில் மட்டுமாக நீங்கள் பொருத்திப் பார்க்கக் கூடாது. உலகளவில் 60,70 நாடுகளில் தமிழ் புழங்குகிறது. இங்கே புத்தகம் உற்பத்தி செய்யும் பதிப்பகங்களும், சிறு பத்திரிகைகளும் , காலச்சுவடு போன்ற பத்திரிகை நிறுவனங்களும் அந்த வெளிநாட்டுச் சந்தையை மனதில் வைத்தே செயல்படுகின்றன ‘ இந்தப் பதிலில் உள்ள விஷமத்தையும், பொருத்தமற்ற தன்மையை எடுத்துக் காட்டுவதில் நான் எங்கே தவறு செய்தேன் என்று சொல்லுங்கள். இந்தப் பதில் மறைமுகமாக தீம்தரிகிட-வையும் சுட்டுவதா இல்லையா ?

இந்தப் பதிலில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று சிறுபத்திரிகைகளை ஒட்டு மொத்தமாய்க் குற்றம் சாட்டுவது. இன்னொன்று குறிப்பாக காலச் சுவடைத் தாக்குவது. காலச் சுவடு சேரன், அ முத்துலிங்கத்தைப் பதிப்பித்தால் ‘வெளிநாட்டுச் சந்தையை மனதில் வைத்து ‘ செயல்படுவதாக அர்த்தமா என்று நான் கேட்கக் கூடாதா ? எல்லா நிறுவனங்களையும் விட்டுவிட்டு காலச்சுவடு என்று குறிப்பாக ஏன் சொல்ல வேண்டும் ? இது பற்றி ஞாநி விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா ?

ஞாநி ஏன் இந்த அவதூறுக்கு எதிர்வினை ஆற்றவில்லை ? கனல் மைந்தனின் இந்தக் குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொள்கிறாரா ? அவர் பதில் சொல்லியிருக்கலாம். கனல் மைந்தன் பிரத்தியேகமாக காலச்சுவடின் கணக்கு வழக்குகளைப் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் ‘தீம் தரிகிட ‘ வெளிநாட்டுச் சந்தையை மனதில் வைத்து செயல்படவில்லை என்று சொல்லியிருக்கலாமே ?

ஞாநியும் ஒரு சிறுபத்திரிகையாளர் என்ற முறையில் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பது தான் என் கேள்வி. ஞாநி ஒரு பிராமணர் என்ற தொனி சிறிதளவிலேனும் இதில் தெரிகிறது என்றால் என்னை மன்னியுங்கள். ஏனென்றால் மீண்டும் சொல்கிறேன்- பிராமணர் என்பதை ஒரு குழூவுக் குறியாக வசை மொழியாகப் பயன்படுத்துவது , விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் செய்யும் வேலை. இது எப்படி மோசமானது என்று அருணாசலம் ஞாநிக்கு எதிராக இந்தச் சொல்லைப் பயன்படுத்தியபோதும், அ மார்க்ஸ், பிரேம் போன்றவர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி சுந்தர ராமசாமிக்கு எதிராக ‘விமர்சனம் ‘ எழுதிய போதும் அதைக் கண்டித்து நான் திண்ணையில் எழுதியிருக்கிறேன்.

உங்களை பிராமணர் என்று நான் சொல்ல மாட்டேன். நேற்று அருணாசலம் சொன்னார். நாளை பிரேம், மார்க்ஸ் போன்றவர்கள் சொல்வார்கள். நீங்கள் சாதி கடந்தவர் என்று என்ன கத்தினாலும் இவர்கள் காதில் விழாது. இது தான் உண்மை. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் இந்த உண்மையைக் காண மறுக்கிறீர்கள். இந்தப் போக்கைக் கண்டிக்கும் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்கள். இது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்