உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

கோமதி நடராஜன்


அடுத்தவருக்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பலர் இருப்பர்.கேளாமலேயே கரம் நீட்டி உதவக் காத்திருப்பர் சிலர்.கேட்ட மாத்திரத்திலேயே அள்ளித்தரத் தயாராய் இருப்பர் இன்னும் சிலர்.அப்படிப் பட்டவர்களில் தங்கள் உதவிகளைத் தண்ணீாில் எழுதி,மனதில் தங்கவிடாமல் தள்ளி விடுபவரும் உண்டு,கல்லில் செதுக்கிக் காலமெல்லாம் கணக்குப் பார்ப்பவரும் உண்டு.உதவும் மனம் இருப்பதே ஒரு அழகு,அந்த அழகுக்கு அழகு சேர்க்கச் சில ‘அழகுக் குறிப்புகள் ‘.

1- அடுத்தவருக்கு உதவும் மனதை இறைவன் எல்லோருக்கும் தந்து விடுவதில்லை.உங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார் என்றால்,நீங்கள் பாக்கியவான்.செய்த உதவிகளை அக்கணத்திலேயே மறந்து விடுபவராக இருந்தால் நீங்கள் புண்ணியவான்.

2- அடுத்தவருக்கு உதவும் நல்ல மனதை உங்களுக்கு அருளியதற்கும் ,அதற்கானத் தகுதியையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியதற்கு முதலில்,இறைவனுக்கு உங்கள் மனம் நிறைந்த நன்றியைத் தொிவித்துக்கொள்ளுங்கள். ‘நான் உதவினேன் ‘ என்ற மமதையில் பெரும் பகுதி மறையும்.

3- மனம், தகுதி, சந்தர்ப்பம் இந்த மூன்றையும் எப்பொழுதும், இறைவன் ஒருவருக்கே, அளித்து விடுவதில்லை.ஒருவருக்கு மனம் இருந்தால் வாய்ப்பு வராது,வாய்ப்பு வந்தால் தகுதி இருக்காது,தகுதியும் வாய்ப்பும் இருந்தால் மனம் இருக்காது.

4- உதவி செய்த கையோடு,செய்த உதவியை மறந்து விடுங்கள்.நாம் நினைவு வைத்திருந்தால் இறைவன் மறந்து விடுவான் ,நாம் மறந்து விட்டால் இறைவன் குறித்துக் கொள்வான்.இரண்டில் எது சிறந்தது ?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

5- நான் அவனுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்,நன்றியே இல்லை என்று அங்கலாய்க்காதீர்கள்.இந்த மனக் கசப்பு,நீங்கள் செய்த நல்ல காாியத்துக்காக,உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கும் இறைவனது அருளு

ளை அடைய வரும் புண்ணியங்களுக்குத் தடுப்புச் சுவர்கள்.

6- ‘நான் செய்தேன்,நான் செய்தேன் ‘என்ற் தற்பெருமைக்கு இடம் தராமல், ‘என் மூலம் இறைவன் செய்து முடித்தான்,என் வழியாக் அவனைக் கரை சேர்த்தான் ‘என்று எண்ணப் பழகிக் கொண்டால்,மன இறுக்கம் குறையும்.அடுத்து உதவி கேட்டு வருபவர்களுக்காக வாசலில் காத்து நிற்பீர்கள்.

7- அடுத்தவருக்கு உதவியதைப் போன ஜென்மத்தில், ‘நாம் அவாிடம் பட்டக் கடனை இந்த ஜென்மத்தில் அடைத்து விட்டோம் ‘என்றே¢ கோணத்தில் கணிக்க ,மனதைப் பக்குவப் படுத்திக்கொள்ளுங்கள்.பதில் உதவிகளை எதிர்பார்த்து ப் பெற்று ,மீண்டும் மீண்டும் நன்றி கடனில் மூழ்காமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

8- பெற்றோருக்கு ,பிள்ளைகளுக்கு ,உடன் பிறந்தோருக்குச் செய்தவைகளையெல்லாம்,நாலு பேர் எள்ளி நகையாடும் வண்ணம்,சொல்லிச் சொல்லி மாய்ந்து போகாதீரகள்.கடமைக்கும் உதவிக்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.அவைகளைப் புாிந்து கொள்ளாமல் குழம்பாதீர்கள்.சீதையை மீட்க,லக்ஷ்மணன், ராமருக்குத் துணை போனது கடமை,சுக்ாீவன் அனுமன் விபீஷணன் மூவரும் தோள் கொடுத்தது உதவி.

9- யாாிடமிருந்து யாருக்கு ,எந்த சந்தர்ப்பத்தில் எந்த வகையில் , உதவிகளை அனுப்ப வேண்டும் என்ற கணக்கு ஏற்கனவே இறைவனால் போடப் பட்டுவிட்டது.அதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு அன்னியனை உங்களுக்கு ஆதரவு காட்ட அனுப்பி வைப்பார்.நீங்கள் ஆசையாய் வளர்த்த மகனை ‘இவனால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை ‘என்று ஊர் உறவுக்கெல்லாம் சொல்லி,வருந்தும் வகையில் ,அன்னியனாய் நிறுத்தி வைப்பார்.

10- தண்ணீர் விட்டு உரமிட்டு நாம் ஆசையாய் வளர்த்த மரம்,பலனை நமக்குத்தான் தரும் என்பதையே உறுதியாய் கூறமுடியாத போது,வினாடிக்கு வினாடி மனம் மாறும், குணம் படைத்த மனிதனிடம், எதிர்பார்க்க முடியுமா ?.இறைவனுக்கு அவன் படைத்த மரமும் ஒன்றுதான்,மனிதனும் ஒன்றுதான்.சமயத்தில் ,மரம் மனிதனாய் உதவக்கூடும்,மனிதன் மரமாய் நிற்கக் கூடும்.

11 -பெற்று வளர்த்து ஆளாக்கினோம் என்பதால் குழந்தைகளிடம் பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள்.எதிர்பார்த்தால் ,பெற்றோர் என்ற மாியாதைக்கு உாிய,பூஜிக்கத்தகுந்த, ஸ்தானத்திலிருந்து, உங்களை நீங்களே பல படிகள்,இறக்கிவைத்து விடுகிறீர்கள்.மாதா,பிதா குரு தெய்வம்,என்ற புனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வோமே.

12- யாாிடமிருந்தும் பதில் உதவிகளை எதிர்பார்க்காதீர்கள்.கிட்டாத பட்சத்தில் அவை நம்மை ஏமாற்றம்,வருத்தம்,கோபம் ,வெறுப்பு என்ற வழியில் நடத்திச் சென்று முடிவில் விரக்தி என்ற படுகுழியில் தள்ளி விடும்.உன்னதமான உறவு நட்பு என்ற இணைப்புகளே இல்லாமல் ஆக்கிவிடும்.

13- பல வருடங்களாக் நம்மை அணுகாதிருந்த உறவினரோ ந்ண்பரோ,ஒரு உதவி கேட்டு உங்களைத் தேடி வரும்போது, ‘காரணம் இல்லாமல் வரமாட்டார்களே ‘,என்று அவர்களை எள்ளாமல்,கஷ்டம் வரும் பொழுது அவர்களுக்கு நாம் இருக்கும் இடத்தைக் காட்டி அனுப்பி வைத்திருக்கிறார் இறைவன்,என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.இறைவன் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்காதீர்கள்.முடிந்தால் உதவுங்கள்,அல்லது இயலாமையை இதமாய் சொல்லுங்கள்.

14. உதவி பெற்றவரே உங்களுக்கு உதவ வேண்டும் என்று இறைவனும் நினைத்திருந்தால்,இந்தப் பரந்த உலகில்,உறவு வட்டம் மிகவும் சுருங்கியிருக்கும்.உலகைப் போல உறவும் நட்பும் பரந்து விாிந்திருக்க வேண்டும் என்ற உன்னத நோவிகளையும் பதில் உதவிகளையும் ஆங்காங்கே, பலவழிகளிலிருந்து வரும்படி அமைத்திருக்கிறார் என்று நம்புவோம்.

15- அன்றாடம் இறைவனை வழிபடும் பொழுது, அவனிடமிருந்து, எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செலுத்தவேண்டும் என்று ஆன்மீகப் பொியோர்கள் உபதேசிக்கிறார்கள்.நம்மைப் படைத்த இறைவனிடமே நாம் எதையும் எதிபார்க்கக் கூடாதென்றால்,கேவலம் மனிதர்களிடம் எதிர்பார்க்கலாமா ?

16- அடுத்தவருக்கு உதவுவதில் ,பலனை எதிர்பார்க்காமல் பாரபட்சமின்றி வீசும் குளிர் தென்றலாய் இருப்போம்,பிரதி உபகாரம் கேட்காத சுனை நீராய் தாகம் தீர்ப்போம்.

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்