இந்தியாவின் இறந்த காலமே ஆயுதம் ஆகிறது

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

சசி தரூர்


ஒரு அமெரிக்க வியாபாரி சொன்னான். ‘இந்தியாவில் உன்னுடைய பிரச்னை என்னவென்று சொல்கிறேன்.. உன்னிடம் மிக நீளமான வரலாறு இருக்கிறது. உன்னால் அமைதியாக உபயோகப்படுத்தத் தேவையானதை விட அதிகமாகவே வரலாறு இருக்கிறது. ஆக, வரலாற்றை ஒரு கதாயுதத்தைத் போல ஒருவருக்கொருவருக்கு எதிராக உபயோகப்படுத்திக்கொள்வதில் முடிகிறது.. ‘

அந்த வியாபாரி எவரும் உண்மையில் இல்லை. நான் என்னுடைய ‘கலவரம் ‘ என்ற நாவலுக்காகக் இவனை உருவாக்கினேன். இது சென்றவருடம் வெளிவந்தது. இந்தப் புத்தகத்தில் 450 வருடங்கள் மசூதியாக இருந்த இடத்தில் இந்துக் கோவிலைக் கட்ட போராட்டம் நடப்பதால் வரும் இந்து முஸ்லீம் கலவரம் பற்றி எழுதுகிறேன். இருப்பினும், இந்தக் கற்பனைப் பாத்திரம் சொல்லும் விஷயம், சுழலும் மாயச்சுழலாக தினந்தோறும் அறிக்கைகளில், வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியில் ஒரு மசூதி இருந்த இடத்தில் கோவிலைக்கட்ட திட்டமிடுவதால் நடக்கும் கும்பல் வன்முறையும், பழிக்குப்பழி கொலைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ‘கலவரம் ‘ என்ற என் புத்தகத்தில், இந்த வருடம் மார்ச் மாதத்தில் இந்து தீவிரவாதிகள் கோவில் கட்டப்போவதாக பயமுறுத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். முன் கூட்டியே சொன்னதில் எனக்கு ஒன்றும் ஆறுதல் கிடையாது. வரலாற்றை அறிந்தவர்களும் மீண்டும் வரலாற்றை திருப்பித் திருப்பி நிகழ்த்த வேண்டிய சாபம் இந்தியாவின் சோகம்.

21ஆம் நூற்றாண்டில் இந்தியா தொழில்நுட்ப ரீதியில் முன்னேற வேண்டும் என்ற உணர்ச்சிப்பூர்வமான எதிர்காலம் நோக்கிய ஆர்வம், இறந்தகாலத்தின் கருத்துருவங்களில் கட்டுண்டு கிடப்பது இந்தியாவின் முரண்களில் ஒன்று. அயோத்தியா என்ற கோவில் நகரத்தில் எந்த விதமான மென்பொருள் நிறுவனங்களும் இல்லை. அது சமயத்துக்கும், வம்சாவளியாய்த் தொடரும் சிறு தொழில்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நகரம். 1992இல் இந்து தீவிரவாதிகள், ஏற்கெனவே கோவில்களால் நிரம்பிவழியும் இந்த அயோத்தியின் மத்தியில் முக்கிய இடத்தில் இருந்த பாபர் மசூதியை உடைத்தெறிந்தார்கள். இந்த மசூதி 1520இல் இந்தியாவின் முதல் மொகலாய பேரரசரான பாபரால் கட்டுவிக்கப்பட்டது. இந்து தீவிரவாதிகள் இந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்றூ சூளுரைத்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவமானத்தைக் கலைத்து, வரலாற்றைப் பழிவாங்க விரும்பினார்கள்.

வரலாறும், புராணமும், கதைகளும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்த நாடு இந்தியா. சில வேளைகளில் எது வரலாறு எது புராணம் என்று இவர்களால் வேறுபடுத்திப் பார்க்கவும் இயலாது. ராமர் பிறந்த அந்த குறிப்பிட்ட நிலத்தில் பாபர் தன் மசூதியைக் கட்டினார் என்றும், அது தோல்வியடைந்த மக்களிடம் அவர்களது தோல்வியை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும் வண்ணம், அதே பிறந்த இடத்தில் அவர் தன் மசூதியைக்கட்டினார் என்றும் சில இந்துக்கள் நம்புகிறார்கள். பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் (பெரும்பாலும் இந்துக்கள்), ராமர் மனித உருவில் இருந்தார் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும், ராமபக்தர்கள் நம்புவதுபோல, அந்த இடத்தில் தான் அவர் பிறந்தார் என்பதற்கும் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறார்கள். இன்னும் கூட சொன்னால், பாபர் ஒரு ராமர் கோவிலை இடித்துத்தான் அவர் மசூதி கட்டினார் என்பதற்கும் எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஒரு மசூதியை இடித்து அங்கு ஒரு கோவிலைக் கட்டுவது, பழைய தவறை சரிப்படுத்துவது ஆகாது, ஆனால் இன்னொரு புதிய தவறை உருவாக்குவது என்றும் கூறுகிறார்கள்.

பெரும்பாலான இந்திய முஸ்லீம்களுக்கு, அந்த சண்டை அந்த குறிப்பிட்ட மசூதியைப் பொறுத்ததல்ல. அந்த மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பூட்டித்தான் கிடந்தது. அயோத்தியாவில் இருந்த பெரும்பாலான முஸ்லீம்கள் 1947இல் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்கள். இது இந்திய சமூகத்தில் முஸ்லிம்களின் இடத்தைப் பற்றியது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்திய அரசாங்கங்கள் அவர்களது உரிமைகளை மதசார்பற்ற அரசியலமைப்புச்சட்டம் மூலம் காப்பாற்றியும், பொது சிவில் சட்டத்திலிருந்து பிரித்து, அவர்கள் தங்களுக்கென்று தனியாக முஸ்லீம் சிவில் சட்டம் வைத்துக்கொள்ளவும், அவர்கள் மெக்காவுக்கு ஹஜ் பிரயாணம் செய்ய நிதி உதவி செய்தும் வந்திருக்கிறது. முதல் ஐந்து ஜனாதிபதிகளில் இருவர் முஸ்லீம்கள். இன்னும் ஏராளமான கேபினட் மந்திரிகளும், நாட்டுத்தூதுவர்களும், ராணுவ ஜெனரல்களும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் முஸ்லீம்களாக இருந்திருக்கிறார்கள். 1990களில், இந்தியாவின் முஸ்லீம் மக்கள் தொகை, பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். மசூதியின் உடைப்பு, முஸ்லீம் சமுதாயத்தின் பாதுகாவலாக இருந்த இந்தியாவின் பலகலாச்சார ஜனநாயகத்துக்கு செய்த துரோகமாக உணரப்பட்டது.

மசூதியை தாக்கிய இந்துக்களுக்கு, இந்திய ஜனநாயகத்தின் நிறுவனங்களின் மேல் எந்த வித நம்பிக்கையும் கிடையாது. அவர்கள் தங்கள் நாட்டை, தவறான மேற்கத்திய மதச்சார்பின்மைக் கொள்கையால், சிறுபான்மையினருக்கு தேவைக்கு மேல் சலுகைகள் வழங்கும் , பலவீனமான நாடாகப்பார்த்தார்கள். இவர்களைப் பொறுத்தவரை , சுமார் 1000 வருட அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்டு (முதலில் முஸ்லீம், பிறகு பிரிட்டிஷ்), பிரிவினையால் ஏராளமான முஸ்லிம் மக்களை பாகிஸ்தானிடம் உதறிவிட்டு, சுதந்திர இந்தியாவை வெற்றிகரமாகவும், மண்ணின் மைந்தர்களான இந்துக்களின் தேசமாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களை அடிப்படைவாதிகள் என்று எந்த வித அர்த்தத்திலும் குறிப்பிட முடியாது. ஏனெனில் இந்து மதத்துக்கு அடிப்படைக் கொள்கைகள் கிடையாது. இந்து போப்பாண்டவரோ, இந்துக்களுக்கென்று பூசைநாளோ, ஒரே ஒரு இந்து புனிதப்புத்தகமோ கிடையாது. அதே போல, இந்துமதக்கொள்கை மறுப்பு (Hindu heresy) என்று கூட ஒன்று கிடையாது. இந்து ‘அடிப்படைவாதிகள் ‘ உண்மையில் இந்து வெறியர்கள். (சாவினிஸ்ட்கள்). இவர்கள் (முஸ்லீம் அடிப்படைவாதிகள் போராடுவதைப் போலன்றி) இந்து மதத்தின் தத்துவத்துக்காகவோ, அதன் ஆன்மீகத்துக்காகவோ போராடவில்லை. இவர்கள் இந்து என்ற அடையாளத்துக்காகப் போராடுகிறார்கள். இவர்கள் இந்துமதம் என்ற அடையாளத்தின் பெயரில் பழிவாங்க முனைகிறார்கள். இந்து மதத்தின் கொள்கையின் பேரிலல்ல.

இவ்வாறு செய்வதன் மூலம், தாங்கள் எந்த சமயத்துக்காகப் போராடுகிறார்களோ அதற்கே தீங்கிழைக்கிறார்கள். இந்து மதம் மட்டுமே, சகிப்புத்தன்மையை தன்னுள்ளே கொண்டு, தன்னை மட்டுமே உண்மையான மதம் என்று கோராத ஒரு பெரும் மதம். எந்த வழியில் வணங்கினாலும் அவை சரியானவையே என்று இந்துமதம் உரைக்கிறது. சமயம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான சொந்த விஷயம் என்றும் இந்து மதம் கூறுகிறது. இப்படிப்பட்ட மதம், நம்பிக்கை என்பது இதயத்துக்கும் மனத்துக்குமான விஷயம் என்பதையும், கல்லாலும் செங்கல்லாலுமான விஷயம் அல்ல என்பதையும் புரிந்து கொள்கிறது. உண்மையான இந்துவானவன் , வரலாற்றைப் பழிவாங்க முற்படுவதில்லை. வரலாறு அதன் போக்கிலேயே பழிவாங்கலை உள்ளடக்கியிருக்கிறது என்பது அவனுக்குப் புரியும். (The history is its own revenge)

அவமானப்படுத்தும் கோஷங்களை எழுப்பிய இந்து தீவிரவாதிகள், முஸ்லீம் மக்களிடமிருந்து மோசமான எதிர்விளைவை உருவாக்க உதவி புரிந்தார்கள். அதனால், கோவில் கட்டக்கோரும் ஆதரவாளர்கள் ரயில் வண்டியில் எரிக்கப்பட்டார்கள். பதிலாக, இந்து கும்பல்கள் முஸ்லீம் வீடுகளைக் கொளுத்தி அப்பாவிகளை கொன்றிருக்கின்றன. நீதி மன்றம் இந்த கோவிலைப்பற்றிய வழக்குக்கு தீர்ப்பை யோசித்துக்கொண்டிருக்கிறது. (தீர்ப்பு வெளிவந்துவிட்டது – மொ பெ). இந்தப் போக்கு, வரலாற்றின் கைதிகளாக இன்னும் பலரை உருவாக்கியவண்ணம், எதிர்காலத் தலைமுறைகளுக்கு , பழசைச் சரிபண்ணுவதற்காக, புதிய தவறுகளை வன்முறையுடன் சேர்த்துக் கற்பிக்கிறது. ஆக்டேவியா பாஸ் ஒருமுறை எழுதினார், ‘ஞாபகத்துக்கும், மறதிக்கும் இடையேயும், மறதிக்கும் ஞாபகத்துக்கும் இடையேயும் நாம் வாழ்கிறோம் ‘. சிலசமயம் மறதியை ஞாபகங்களும் , ஞாபகங்களை மறதியும் உருவாக்குகிறது. அப்பாவியான கரங்களால் உருவாக்கப்படும் வலையல்ல வரலாறு என்பது.

***

சஷி தரூர் எழுத்தாளர். India: From Midnight to the Millennium ‘ மற்றும் சமீபத்தில் ‘Riot. ‘ ஆகிய புத்தகங்களை எழுதியவர். இது நியூயார்க் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை.

Series Navigation

சசி தரூர்

சசி தரூர்