மஞ்சுளா நவநீதன்
இந்தக்கட்டுரை அம்பலம் இதழில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதிய கேலிக்கு எதிரான நிலைப்பாடு குறித்தது. ‘சிரிப்பிற்குப் பின்னால்.. ‘ என்ற இந்தக்கட்டுரை பம்மல் கே சம்பந்தம் என்ற கமலஹாசனின் பட விமர்சனமாக ஆரம்பித்து லாசரா இளைஞர்களின் கன்னத்தில் பளீரென்று அறைய விரும்பிய வாசகத்தை தன்னுடைய உணர்வாகவும் முடித்துக்கொண்டு, கேலி செய்பவர்கள், கேலி செய்யப்படும் விஷயங்களின் தார்மீக ரீதியிலான நியாயத்தை அங்கீகரித்துக்கொண்டே அதன் அபத்தங்களை வெளிப்படுத்த வேண்டும் எனக்கோருகிறது.
அப்படி எல்லாம் சட்டம் போட முடியுமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு விஷயத்தின் தீவிரம் புரிந்தவர்களுக்கு, அந்தத் தீவிரம் புரியாமல், கேலி பேசும் இளைஞர்களைக் கண்டால், கன்னத்தில் அறையலாம் என்றுதான் தோன்றும். ஆனால் அந்த இளைஞர்கள் தீவிரம் புரியாமலும் சிரிக்கலாம். தீவிரம் புரிந்தும் , இதையெல்லாம் இந்த ஆள் தீவிரமாய் எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்றும் சிரிக்கலாம்.
அப்படி அறையலாம் என்று தோன்றும்போது, நமக்கு வயசாகி விட்டது என்பதையும் பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொள்வார்களோ என்னவோ.
பிரச்னை என்னவென்றால், வெறும் பொழுது போக்கு சாதனங்கள் மட்டும் கிண்டலும் கேலியும் செய்வதில்லை. சினிமாக்களும் நாடகங்களும் மட்டும் சமூக இயக்கங்களை பொறுப்பின்றி கேலி செய்வதில்லை. சமூக இயக்கங்களும் மற்ற சமூக இயக்கங்களை இது போல கிண்டலும் கேலியும் செய்கின்றன.
திராவிடர் கழகத்தின் போஸ்டர்களில் ‘பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா ? ‘ என்று கிண்டல் இருந்ததை நான் சுவர்களில் பார்த்தேன். Holy ghost என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ப்படுத்தி, இரு பொருள் தரும் ஒரு சொல்லான ‘ஆவி ‘ என்ற பதத்தை கிரிஸ்தவ மொழிபெயர்ப்பாளர்கள் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். சரியான பதமாக ‘பேய் ‘ என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருந்தால், திகவுக்கு கிண்டல் செய்ய வேறெதாவது கிடைத்திருக்கலாம். பேய் என்ற பதத்துக்கு இருக்கும் எதிர்மறை பொருள், இந்த வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஆவிக்குப் போகச்செய்திருக்கலாம். ஆனால், இதிலிருக்கும் நகைச்சுவையை பார்த்து சிரிக்காமல் போக முடியுமா ?
பழைய என் எஸ் கே படத்தில் , ‘சரஸ்வதி நாக்கில் வசிக்கிறாள் என்றால் மலஜலம் கழிப்பது எங்கே ‘ என்று கேலி பேசப்படும். ஒரு குறியீட்டை literal ஆக உண்மையான அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட கேலி இது. சாதிகளை வைத்து வாய்மொழியாய் பலவிதக் கிண்டல்கள் உண்டு. அவை எழுத்தில் வருகிற சாத்தியமே இப்போது இல்லை – துரதிர்ஷ்டவசமாக. குண்டாக இருப்பவர்கள் கேலி செய்யப் படுகிறார்கள் . ஒல்லியாக இருப்பவர்களும் கேலி செய்யப் படுகிறார்கள். யூதர்கள் கேலி செய்யப் படுகிறார்கள். கறுப்பர்கள் கேலி செய்யப் படுகிறார்கள். வெள்ளையர்கள் கேலி செய்யப் படுகிறார்கள். சர்தார்ஜிக்கள் கேலி செய்யப் படுகிறார்கள். சென்னை மொழியும், கோவை மொழியும் கேலிக்கு ஆள்கிறது.
சாதிக் கட்சிகளை கிண்டல் செய்தால், சாதிக்கட்சிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும். பெண்ணுரிமை இயக்கத்தை கிண்டல் செய்தால், பெண்ணுரிமை பேசும் பெண்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும் ? திராவிடர் கழகத்தை கேலி செய்தால், அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இன்ன இன்னாருக்கு கோபம் வரும் என்று பார்த்தால் மனுஷன் பேசவே முடியாதே ?
சரி கேட்கிறேன், ஏன் தார்மீக ரீதியிலான நியாயத்தை அங்கீகரிக்க வேண்டும் ? இதனை (politically correct) என்பதன் தமிழ் வார்த்தையாகப் பார்த்தாலும், இப்படி தார்மீக ரீதியிலான நியாயத்தை எல்லாம் அங்கீகரித்துக்கொண்டிருந்தால், நகைச்சுவையே இருக்காது.
சில மாதங்களுக்கு முன்னர், கமலஹாசனின் ‘இஞ்சிருங்கோ ‘வை, கோபால் ராஜாராமும், யமுனா ராஜேந்திரனும் திட்டித் தீர்த்தார்கள். ஈழ பிரச்னையை மலினப்படுத்துகிறார் என்று யமுனா திட்ட, மனநிலை பிறழ்ந்தவர்களை அவமதிக்கிறது என்று கோபால் ராஜாராம் திட்ட, ரசிகர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சந்தோஷமாக பார்த்து ரசித்தார்கள். ஈழப்பிரச்னையை மலினப்படுத்துகிறார் கமலஹாசன் என்று யமுனா தூண்டி விட்டும், ராமதாஸோ வைகோவோ கண்டுகொள்ளாமல், அவர்களும் குடும்பத்தோடுதான் பார்த்து ரசித்திருப்பார்கள். மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு தங்கைளைத்தான் கமலஹாசன் கிண்டல் செய்கிறார் என்று படம் பார்த்தும் புரிந்திருக்காது. ஆகவே, அவர்களும் போராடவில்லை என நினைக்கிறேன்.
இப்படி அவரவர் தார்மீக நியாயத்தை அங்கீகரித்துக்கொண்டே இருந்தால், யாரும் எதுவும் எழுத முடியாது. அதுவும் ஒவ்வொருவரின் தார்மீக நியாயமும், ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்துக்களின் தார்மீக நியாயத்தை அங்கீகரித்திருந்தால், பெரியார் தோன்றியிருக்கவே முடியாது. அவர் தமிழர்களின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்யவில்லை என்றால், சீர்திருத்தமே நடந்திருக்காது. (நம் ஊரில் எல்லாமே பொழுது போக்குதான். சினிமாவிலிருந்து அரசியல் கூட்டம் வரை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்). மைக்கல் மதன காமராஜன் படத்தில், குஷ்பு ஒரு அரிசியில் கஷ்டப்பட்டு படம் வரைந்திருப்பார். அதனை சமையற்கார கமலஹாசன் சாப்பிட்டுப்பார்த்து பழைய அரிசி என்று தூக்கி எறிந்து விடுவார். அரிசியில் படம் வரையும் கலையை இப்படிக் கொச்சைப்படுத்தியிருக்கிறாரே கமலஹாசன் என்று வேண்டுமானால் ஜாம்பவான்கள் புலம்பலாம். ஆனால், இதை விடத் தெளிவாக, ஒருவருக்கு கலை இன்னொருவருக்கு கேலி ,ஒருவருக்கு உன்னதம் இன்னொருவருக்கு புரியவேண்டிய அவசியமில்லை என்பதை எப்படிச் சொல்ல முடியும் ?
பெண்ணுரிமை போராட்டத்தை தமிழ் சினிமாவில் கிண்டல் செய்கிறார்கள் என்று மனுஷ்யபுத்திரன் வருத்தப்பட்டால், அடுத்த வேளைக்கு உருளைக்கிழங்கு கறியா, வெண்டைக்காய் கறியா என்று தீவிரமாக சிந்திக்கின்ற, என்ஜினியர் படித்துவிட்டு வீட்டில் இருக்கின்ற பெண்களைக் கிண்டல் செய்து படம் எடுக்கட்டுமே ? சாதிக் கட்சிகளை கிண்டல் செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டால், ராமதாசும், கிருஷ்ணசாமியும் மனுஷ்யபுத்திரனும் இணைந்து சாதி மதம் எல்லாம் எனக்கு இல்லை என்று சுயம்பு போல அலையும் பித்தர்களைக் கிண்டல் செய்து படம் எடுக்கட்டுமே, யார் தடுக்கப்போகிறார்கள் ?
இஸ்லாமுக்கு தார்மீக நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக, ஸல்மான் ருஷ்டியை என்ன செய்யலாம் ? இந்து மதத்துக்கு தார்மீக நியாயம் இருக்கத்தான் செய்யும் (குறைந்த பட்சம் இந்துக்களின் பார்வையில்). அதற்காக, யாரும் இந்து மதத்தைக் கிண்டல் செய்யக்கூடாது என்று சட்டமா போட முடியும் ? போட்டால்தான் இந்துக்களே கூடச் சம்மதிப்பார்களா ? திருமாலைக் கிண்டல்செய்தும், சிவனைக் கிண்டல் செய்தும் ஒரு ஆயிரம் சிலேடைப்பாட்டுக்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம் ? புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதையைத் தடை செய்து விடலாமா ?
ஒரு வேளை மனுஷ்யபுத்திரனின் பார்வையில் ‘இதை இதை எல்லாம் கிண்டல் செய்யலாம், இதை இதை கிண்டல் செய்யக்கூடாது ‘ என்று இருக்கலாம். அது அவரது பார்வையை மட்டுமே பொறுத்தது அல்லவா ? அதே போலப் பார்வைதான் எல்லோரிடமும் இருக்க வேண்டுமா ? அப்படி எல்லோரும் மனுஷ்ய புத்திரன் போலவே சிந்தித்தால் ரொம்ப போரடிக்காதா ?
‘என்னுடைய மனம் புண்படுகின்றது ‘ என்று சமீப காலத்தில் ஒரு கோஷ்டி கானம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இன்னார் மனம் புண்படும் என்று ஆரம்பித்தால், எல்லோரும் வாயைத் தைத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்.
கேலியும் கிண்டலும் தமிழர்களின் உரிமை. அதுவும் எந்த தார்மீக ரீதியிலான நியாயத்தையும் அங்கீகரிக்காமல், கிண்டல் செய்வது இந்தியர்களின் உரிமை. கிண்டலே அப்படிப்பட்ட தார்மீக நியாயத்தைக் கோருகிற கம்பீரத்தைப் பார்த்து ‘ சரிதான் போய்யா, நீயும் உன் தார்மீக நியாயமும் ‘ என்று தூக்கியெறிவது தான். அதனைக் கண்டு வேண்டுமானால் மனுஷ்ய புத்திரன் போன்றோர் புலம்பலாம். அதைக்கண்டும் நாங்கள் கிண்டல்தான் செய்வோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பி எச் பாண்டியன் இப்படித்தான் ‘ஆனந்த விகடன் ‘ ஆசிரியர் மந்திரிகளையும், எம் எல் ஏக்களையும் ஜேப்படித் திருடர்களுடன் ஒப்பிட்டு , அவர்களுடைய ‘தார்மீக நியாயத்தை ‘ அங்கீகரிக்காமல் விட்டு விட்டார் என்பதற்காகக் கைது செய்து சிறையில் அடைத்தார். நல்லவேளை இப்போது , மனுஷ்ய புத்திரனிடம் வானளவு அதிகாரம் இல்லை. அப்படிக் கைது செய்யப்பட்ட போது விகடன் ஆசிரியர் சொன்னது என் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தத் துணுக்கு ஒரு ‘அரசியல்வாதி ‘ துணுக்கு. சிரிப்புத் துணுக்குகளே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு வரையறையைக் கொண்டு தான் செயல்படுகிறது. நடிகைத் துணுக்குகள் ( ‘என்ன கைக்குட்டையை உடையாய்ப் போட்டிருக்கிறீர்கள் ? ‘)டாக்டர் துணுக்குகள் ( ‘சர்ஜரிக்குப் பின்னால் இரண்டு கத்தி குறைகிறதே ‘) , ஆண் துணுக்குகள் (ஆண்களெல்லாம் ஜொள்ளு பார்ட்டிகள் , சோம்பேறிகள்), என்று வழக்கமான பாணியைப் போல் அரசியல்வாதியின் முட்டாள்தனமும் , கொள்ளைக்காரத் தனமும் கிண்டல் செய்யப் படுகிறது. அரசியல்வாதிகளுடன் திருடர்களை ஒப்பிட்டதற்கு நியாயமாய்ப் பார்த்தால் திருடர்கள் தான் கோபப்படவேண்டும். திருடர்களைக் கேலி செய்தால் , தமிழ்த் தேசியத்தையே அவமதித்து விட்டாய் என்று, இப்போது சந்தனக் கடத்தல் வீரப்பன் பின்னால் போகும் அரசியல் கட்சிகள் நம் மீது கோபப்படும். என்னதான் செய்யலாம் ?
கவுண்டமணி செந்தில் நகைச்சுவை வசனங்கள் கிராமத்தவர்களை கேலி செய்கிறது. விவேக்கின் கிண்டல் மூடப் பழக்க வழக்கத்தைக் கிண்டல் செய்கிறது. கிரேசி மோகன் எல்லோரையும் கிண்டல் செய்கிறார். சிரிப்பு என்பது ஒரு விதத்தில் இந்தத் தீவிரம் பாவிக்கும் போலிகளுக்கு எதிரான செயல்பாடும் தான்.
இப்படிப்பட்ட கிண்டல்களிலும், கேலிகளிலும், மரியாதையற்ற போக்குகளிலும்( irreverence) தான் இந்திய ஜனநாயகம் வாழ்கிறது. அப்படி கிண்டல் கேலி செய்வதன் மூலமாகவும், வெளிப்படையாக விமர்சிப்பதன் மூலமும் தான் மாற்றம் வரும். இரண்டும் வெவ்வேறல்ல. ஒன்றுதான். மதனும், விவேக்கும், மஹமூத்தும், நாகேஷ்-ம், கவுண்டமணியும் , செந்திலும் , என் எஸ் கேயும், நடனமும் (கேலிச் சித்திரக்காரர்), செல்லமும், மாலியும், ஸ்ரீதரும், சோவும், அபுவும், மரியோ வும் தான் நம் ஜனநாயகத்தை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏன், அந்த ஜனநாயகத்தையே கிண்டல் செய்யக்கூட ஒரு சுதந்திர சூழ்நிலை வேண்டுமே.
அதனால் சினேகிதிகளே, கேலி பேசுங்கள்; வாய்விட்டுச் சிரியுங்கள் – பெண்ணியவாதிகள் சிரித்தால் கூட நல்லதுதான். யார் கண்டார்கள் சிரித்தால் கொஞ்சம் அழகாய்க் கூட அவர்கள் தோன்றலாம். அந்த அழகில் மயங்கி யாராவது ஏமாளிக் கணவன் கிடைத்து, பெண்ணுரிமை பேசுவதை விட்டுவிட்டு, கணவனுக்கு அடங்கின மனைவியாய்க் குடும்பம் நடத்திக் கொண்டு , அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வெண்டைக்காய் கறியா, உருளைக்கிழங்கு வறுவலா என்று தீவிரமாய் விவாதித்து, மெகா சீரியல்களை வாய் பிளந்து பார்த்தபடி, அன்றாட மளிகைச் செலவில் ஆழ்ந்து போகவும் கூடும்.
- செடிகள்
- அபார்ஷன்
- எங்களின் தேசம்
- சிறை
- தவம் கிடக்கட்டும் ஆண்மை
- அம்மா
- காதல் வீடு
- காமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…
- எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)
- பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )
- கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …
- மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.
- கீரை பருப்புக் கூட்டு
- பல பருப்பு கார கூட்டு
- கணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்
- துகள்களின் மாயா பஜார் ( Quarks )
- சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை
- அம்மாவின் கணவர்
- தாயே தமிழே வணக்கம்!
- சாட்சி பூதம்
- கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…
- தோழிமார் கதை
- காதல் கடிவாளம்
- ஜனநாயக திருவிழா
- நேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்
- சிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை
- சங்கம் எனது ஆன்மா
- தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை
- அப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா
- “வந்திட்டியா ராசு!”
- கிளிப் பேச்சு கேட்க வா