தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

மாலன்

அன்புள்ள ஜெயமோகன்,

உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால் அது ஏதோ இசையோடு, இலக்கியத்தோடு, ஓவியத்தோடு, நுண்கலைகளோடு தொடர்புடையது என்று பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ( ‘ மேலான சுவையும், திருந்திய பழக்க வழக்கங்களும் ‘ என்ற பொருளில் மக்கள் பயன்படுத்துவதாக அபிட் ஹுசேன் எழுதியிருக்கிறார்) இன்னும் சிலர், குறிப்பாக மானிடவியல் அறிஞர்கள், நம்முடைய எல்லா செயல்களிலும் கலாசாரம் வேர் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.நாம் காலையில் பல் துலக்குவதிலிருந்து நாம் கட்டும் கட்டிடங்கள் வரை, தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பதிலிருந்து திருமணம் செய்து கொள்வதுவரை எல்லாச் செயல்களிலும் கலாசாரம் நிழலிட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலர் அதை தேச எல்லைகளைக் கொண்டு, அல்லது தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் அடிப்படையில் – இந்தியக் கலாசாரம், ஜப்பானிய கலாசாரம் என்று- நிறுவுகிறார்கள். இன்னும் சிலர் அவற்றை இனக்குழுக்களின் அடிப்படையில்- தமிழ்க் கலாசாரம், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் கலாசாரம் என்பன போன்று – வரையறுக்கிறார்கள். சிலர் கலாசாரத்தை மதங்களோடும் திசைகளோடும் தொடர்பு படுத்துகிறார்கள். அண்மையில் ஆஃப்கான் யுத்தத்தை ‘ கலாசாரங்களின் மோதல் ‘ என்று வர்ணித்து ஹிந்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.

கலாசாரம் குறித்துப் பொது வழக்கில் உள்ள விளக்கங்களை உங்களிடம் நான் எதிர் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கலாசாரம் என்பது குறித்து கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாகரட்டாசிலிருந்து, நம் சமகால அறிவு ஜிவீ நாகார்ஜுனன் வரை ஏராளமான விளக்கங்கள் குவிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் விளக்கங்களையோ சுருக்கங்களையோ நான் உங்களிடம் வேண்டவில்லை. என்னுடைய கேள்வி மிக எளிமையானது: கலாசாரம் மீது உங்கள் பார்வை என்ன ?

கலாசாரம் என்பது சாதாரணமாக வழங்கப்படும் சொல்லாக இருந்தாலும் கூட, ‘ தமிழ்க் கலாசாரத்திற்கு ‘ சிறு பத்திரிகை போன்ற ஒரு ஊடகத்தின் மூலம் ‘கடமையாற்ற ‘ விரும்பும் ஒருவர், அதிலும் பின் நவீனத்துவம் அறிந்தவர், அதைக் கட்டுடைத்துப் பார்த்திருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.

நீங்களும் சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.அவை எனக்கு நிறைவு தரவில்லை. ஆனால் அவற்றிலிருந்து உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும், நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும் உதவ முடியும் என்று தோன்றுகிறது. அந்த முயற்சியே இந்தக் கடிதம்.

மரியாதை நிமித்தம் பெரியவர்கள் முன்னால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நல்ல பண்புதான். ஆனால் ‘தமிழ்க் கலாசாரம் ‘ என்பது காலில் விழுவது. இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு கால எந்திரத்தில் ஒரு தமிழன் பயணம் செய்தால் திருக்குறளில் துவங்கி, ( ‘கோளில் பொறியில் குணமிலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை) அண்ணா திமுக சுவரொட்டி வரை, காலில் விழுந்து கிடக்கும் நிறையத் தலைகளில் இடறிக் கொள்ள வேண்டியிருக்கும். தமிழ்க் கலாசாரத்திற்குக் கடமை ஆற்ற விரும்பும் நீங்கள் காலில் விழுவீர்களோ ? தயங்குவீர்கள் என்றுதான் ஊகிக்கக் தோன்றுகிறது. காரணம், இன்று காலில் விழுவதற்கான கலாசார அர்த்தங்கள் மாறிவிட்டன.

காலில் விழுகிற கலாசாரத்தில் வணங்குபவரும் வணங்கப்படுபவரும் ஒரு தளத்தில் இல்லை.ஆனால் கை குலுக்குகிற ‘மேலைக் ‘ கலாசாரத்தில் இருவரும் ஒரு தளத்தில் இருக்கிறார்கள்.கை குலுக்குவது அதிகார வரிசையைத் தகர்ப்பது(hierarchy) ஆனாலும் என் அம்மா ஆண்களோடு கை குலுக்க மாட்டார். ஆனால் என் மகன் வயதுடைய பெண்கள் அதை மிக இயல்பாக செய்கிறார்கள். இதனால் அவர்கள் கலாசாரம் கெட்டவர்கள் ஆகிவிட மாட்டார்கள்

இதனால் அறியப்படும் சேதி என்னவென்ற ‘ல், கலாசாரம் என்பதைப் பாரம்பரியம் ‘ மாத்திரம் தீர்மானிப்பதில்லை. காலமும் சூழலும் செயல்களின் அர்த்தங்களைத் தீர்மானிக்கின்றன.

எந்த நிலையிலும் எந்தக் குழந்தையிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற உங்கள் அன்னையின் சீலம் பார ‘ட்டிற்குரியது. குழந்தைகள் பலவீனர்கள் அல்லது வளர்ந்தவர்கள் அளவிற்கு முதிர்சியற்றவர்கள் என்பதால் வெகுளிகள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அது பிறந்திருக்கலாம்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்தால் நம்மை விட பலவீனமான, முதிர்சியற்ற மனித உயிர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுமே அன்பிற்குரியவர்கள் என்ற தளத்தை அடையமுடியும்.அமெரிக்காவில் என் வகுப்புத் தோழி ஒருத்தி மலைப்பாம்பை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தாள். என் விடுதியில் இருந்த ஒருவர் ‘ ஷெல்லி ‘ என்று பெயரிட்டு ஒரு ஓணானை வளர்த்து வந்தார். ஷெல்லி மீது உங்களுக்கு என்ன கோபம் என்று கேட்டேன். கோபம் ஒன்றும் இல்லை; மரியாதை என்றார். அந்த பதிலைப் புரிந்து கொள்ள எனக்கு சில நிமிடங்கள் பிடித்தன. நாம் அன்பு செலுத்தும் குழந்தைகளுக்கு, நமக்குப் பிடித்த தெய்வங்கள், தலைவர்கள், பாத்திரங்களின் பெயரைச் சூட்டி மகிழ்வது போல அது என்பதை விளங்கிக் கொள்ள சிறிது அவகாசம் வேண்டியிருந்தது.

இதற்கும் காரணமும் கலாசாரம்தான்.

குமரி மாவட்டக் கலாசாரம், தமிழ்க்கலாசாரம், இந்தியக் கலாசரம், மனிதக் கலாசாரம் இவற்றிற்குள் எந்த முரண்பாடும் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அண்மைக்காலம் வரை தாய்வழிச் சமூகம் என்கிற அமைப்பு கேரளக் கலாசாரத்தின் ஒரு பகுதியாத் திகழ்ந்தது. இந்தியாவின் எந்தப்பகுதியிலும் அத்தகைய கலாசரம் இருந்ததில்லை. கேரளத்திற்கு அண்மையில் உள்ள தமிழ்நாட்டில் 1989ற்குப் பிறகுதான் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

தமிழ்க் கலாசாரம் இந்தியக் கலாசாரத்திற்குள் அடக்கம் என்கிற உங்களுடைய கருத்தாக்கம் பற்றி இலங்கைத் தமிழ் நண்பர்களிடம் ‘ உசாவி ‘ப் பாருங்களேன்.

ஒரு சமூகத்தின் செயல்பாட்டை நெறிப்படுத்துவதை முன்னிட்டு சில விழுமியங்களை முன்நிறுத்தும் / வலியுறுத்தும் இயக்கம்தான் ( process) கலாசாரம். எந்த விழுமியங்கள் என்பது காலம், சூழல் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. கலாசாரம் என்பது இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் அகவயமான தகவல் பரிமாற்றம். இது செயல்களாக, பொருட்களாக புறத்தே வெளிப்படுத்தப்படுகிறது. அந்த செயல்கள், பொருட்கள்தான் இட, இன, தேசிய, மத அடைமொழிகளைப் பெறுகின்றன.மொகலாயர் ஓவியம், நாயக்கர் கட்டிடக் கலை, மேலைநாட்டு இசை என்பவை சில உதாரணங்கள். ‘தமிழ் ‘ கலாசாரம் என்ற சொல்லாடலும் அப்படிப்பட்டதுதான்.

எனவே எது முக்கியம் என்றால் அடை மொழிகள் அல்ல. சாராம்சமாக கலாசாரம் முன்நிறுத்தும் விழுமியங்கள் என்ன ? அவை எதன் பொருட்டு முன் நிறுத்த அல்லது வலியுறுத்தப் பெறுகின்றன ? அந்த நோக்கங்களை நாம் ஏற்கிறோமா, மறுதலிக்கிறோமா என்பதுதான்.

0-0-0-0-0-0-0-0

நான் எந்த மொழியைச் சேர்ந்தவன் என்பது ஒரு கலாசார சிக்கல் அல்ல.அது ஒர் அடையாளச் சிக்கல்.இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏற்பதோ, இரண்டையுமே ஏற்பதோ, இரண்டையுமே

நிராகரித்து வேறு ஒன்றை ஏற்பதோ, உங்கள் விருப்பத்தையும் மனச்சாய்வையும் பொறுத்தது. வீட்டில் ஒரு மொழியும் எழுத்திற்கு ஒரு மொழியும் கொண்ட பலர் தமிழிலக்கியத்தில் இயங்கியிருக்கிறார்கள். குபரா.,எம்.வி.வெங்கட்ராம், சிட்டி, கி.ராஜநாரயணன், திலீப் குமார் போன்ற என்ற அந்தப் பட்டியல் நெடியது. கன்னடத்தின் ஆதி எழுத்தாளர்களில் சிலர் ( உதாரணம் மாஸ்தி) தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கே.எஸ்.வேங்கடரமணி, எஸ்.வி.வி. லா.ச.ரா, போன்ற வேறு சிலர் முதலில் ஆங்கிலத்தில் எழுதத் துவங்கியவர்கள். ஏ.கே.ராமானுஜம், ஆர்.கே.நாராயணன், ஆர்.பார்த்தசாரதி, இந்திரன் அமிர்தநாயகம் போன்றவர்களுக்குத் தமிழ் தாய்மொழியாக இருந்த போதிலும் ஆங்கிலத்திலேயே எழுதி வருகிறார்கள். வீரமாமுனிவர். கால்டுவெல், செம்பியன், அலெக்சாண்டர் துபியான்ஷி, போன்ற சிலருக்குத் தாய் மொழி ஏதோ ஒரு ஐரோப்பிய மொழியாக இருந்தாலும் தமிழில் எழுதியிருக்கிறார்கள். க.நா.சு, வெங்கட் ஸ்வாமிநாதன், அசோகமித்ரன், அம்பை போன்றவர்கள் இரு மொழிகளிலும் எழுதுகிறார்கள்.

எனவே ஒரு படைப்பாளி தனது வீட்டு மொழியைத் தேர்ந்தெடுக்க இயலாதவனாக இருக்கலாம். ஆனால் தன் வெளியீட்டு மொழியைத் தன் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து கொள்ள முடியும்.

நாட்டார் மொழி, செவ்வியல் மொழி என்ற பிரிவுகளும் கூடத் தன்னை அடையாளம் கண்டு கொள்ளத் தடைகளாகாது. ஒரு படைப்பாளி இவ்விரண்டில் எதைத் தேர்ந்து கொள்வது என்பதற்கு பாரதியாரிடமிருந்து விடை கிடைக்கிறது.

தமிழின் முதல் சிறுகதையை- ஆறில் ஒரு பங்கு – எழுதியவர் பாரதியார். (1910ல் அதை அவரே ஒரு சிறு பிரசுரமாகக் கெ ‘ண்டு வந்தார்.அதன் ஒரு பிரதியை இப்போதும் புதுவையில் உள்ள பாரதியார் வீட்டில் பார்க்கலாம். அதை பின்னர் பரலி சு. நெல்லையப்பர் லோகோபகாரியில் வெளியிட்டார். பின் அவருக்கு நன்றி தெரிவித்து அதை மணிக்கொடி மறுபிரசுரம் செய்தது)

விருத்தங்களும், யமகங்களும், சீட்டுக் கவிகளும், துதிகளும் மண்டிக் கிடந்த காலத்தில் நவீன கவிதை மொழியை தன் கவிதைகளில் கையாண்ட பாரதி, இந்திய மொழிகளிலேயே கருத்துப்படங்கள் போன்ற புதுமைகளை இதழியலில் அறிமுகப்படுத்திய பாரதி, சில புதிய மொழி பெயர்ப்பு உபாயங்களைக் கையாண்ட பாரதி , சிறுகதைகளுக்கு மட்டும் ‘பழைய ‘ வாய் மொழிக் கதை மரபைக் கைக் கொண்டது ஏன் ?

இதற்கான விடையில் உங்கள் சிக்கலுக்கான பதில் இருக்கிறது.

இலக்கியத்திற்குப் பங்களிப்பவனின் அடையாளம் அவன் செவ்வியல் மொழியில் எழுதுகிறானா அல்லது நாட்டார் வழக்காற்றில் எழுதுகிறானா என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒருவன் எந்த மொழியில் எழுதுகிறான் என்பதைவிட என்ன எழுதுகிறான், யாருக்காக எழுதுகிறான் என்பதே முக்கியம்.

உங்களுக்கு classics எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அடிமனதில் இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. விஷ்ணுபுரம், சங்க சித்திரங்கள் போன்ற படைப்புக்களை நீங்கள் எழுதுவதன் பின் உள்ள மனநிலை அதுவாகக் கூட இருக்கலாம். பாரதியாரினால் உத்வேகம் பெற்று நீங்கள் எழுத வந்திருந்தீர்களானல் உங்கள் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.

பெரிய இதழ்களில்பணியின் போது செய்து கொள்ள நேரிடும் சமரசம் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்.எதில்தான் சமரசம் இல்லை ? சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, கடந்த 15 தினங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையில் ( எழுத்தை மட்டும் குறிப்பிடவில்லை; அலுவலகப் பணி, குடும்பம், சமுக வாழ்வு, நண்பர்கள் சூழல் இவற்றையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) சமரசங்கள் எதுவும் இன்றி செயல் பட்டிருக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையில் உங்கள் கல்வி, திருமணம், பணி, நண்பர்கள் தேர்வும் தொடர்பும் போன்ற பெரிய விஷயங்கள் சமரசமின்றி நடந்தேறினவா என்றும் யோசித்துப் பாருங்கள். இந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலோருக்கு இல்லை என்றுதான் பதில் கிடைக்கும். வாழ்வில் எல்லோரும் குழந்தைகளுக்காக, மனைவிக்காக, தந்தைக்காக, உடன் பிறந்தவர்களுக்காக, குடும்பப் பொது நலன்களுக்க ‘க, மேலதிகாரிகளுக்காக, சக ஊழியர்களுக்காக, தனக்காக, தான் சார்ந்த அமைப்புகளுக்காக/ நிறுவனங்களுக்காக/இயக்கங்களுக்காக, என்று ஏதோ ஒரு காரணத்திற்காக சமரசம் செய்து கொள்பவர்களாகத்தானிருக்கிறார்கள். தர்க்கபூர்வமாக இறை நம்பிக்கை இல்லாத நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொள்வதில்லையா ?

சமரசம் என்பது வாழ்வின் இயக்கங்களில் ஒன்று. (compromise is a part of the dynamics of life) எதையும் செய்யாது செத்துப்போன கட்டைகள் சமரசம் செய்து கொள்வதில்லை. இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இடைவிடாது சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெரும் சாதனைகள் நிகழ்த்தியவர்கள் சமரசம் செய்து கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமரசம் எதன் பொருட்டு என்பதுதான் கேள்வி.ஒரு பெரிய நன்மையைக் கருதி, அல்லது சமூகத்தின் மேம்பாடு அல்லது நன்மை கருதி ஒரு தனி மனிதன் செய்து கொள்ள நேர்கிற சமரசங்கள் குறித்து உறுத்தல் இருக்க வேண்டியதில்லை. சமூகத்தின் மீது அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அந்த உறுத்தல் இராது. அக்கறை கொண்டவர்களுக்கு அது அவமானமாக இராது. ஒரு தாய் குழந்தைக்குக் கால் கழுவி விடுவதில் அவமானம் அடைவதில்லை.

இலக்கிய சிற்றேடுகள் சமரசம் இன்றி உருவாக்கப்படுகின்றனவா ? வெகுஜன ஏடுகள் சந்தைக்காக செய்து கொள்ளும் அதே சமரசங்களை சிற்றேடுகள் சுயநலங்களுக்காக அல்லது குழு நலன்களுக்காக செய்து கொள்கின்றன.

எழுத்து துவங்கப்பட்ட காலத்தைப் போல, இன்று இலக்கிய சிற்றேடுகள் ஒரு இணை ஊடகமாக இல்லை. அவை அரசியல் கட்சிகள், மடங்கள் போல அதிகார அமைப்பின் (establishment) அடையாளங்களாக ஆகிவிட்டன. அந்த அமைப்புக்கள் என்னென்ன பலவீனங்களாலும், நிர்பந்தங்களாலும் சிதலமாகி வருகின்றனவோ அதே பலவீனங்களாலும், நிர்பந்தங்களாலும் இவையும் அரிக்கப்பட்டுவருகின்றன.இவற்றின் மூலம் நீங்கள் கலாசாரத்திற்குக் கடமை ஆற்றுவது என்பது நகைப்பிற்குரியது!

எந்த மொழியிலும் சிறுபத்திரிகை தேவைதான். பிரிட்டாஷ் மெடிகல் ஜர்னல் போல ஒரு குழு தங்கள் பணி/ தொழில் குறித்த கண்டுபிடிப்புக்களை, சிக்கல்களை, தீர்வுகளை தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள அவை தேவை.சுருக்கமாகச் சொன்னால், உங்களது பின் நவீனத்துவக் கட்டுரையை பிரசுரிக்க அவை தேவை. ஆனால் விஷ்ணுபுரத்திற்கு கவனிப்பும் அங்கீகாரமும் வேண்டுமென்றால் நீங்கள் வெகுஜன வட்டத்திற்கு வந்துதான் ஆக வேண்டும்.

சிறு பத்திரிகைகளை நடத்துவதற்கு, சி.சு. செல்லப்பாவிற்கு இருந்ததைப் போன்ற தன் நம்பிக்கைகளுக்காக தன்னை அழித்துக் கொள்ளும், உறுதிப்பாடும், பக்குவமும் தேவை.இன்று சிறுபத்திரிகை அதிபர்களில் எவருக்கும் அது இருப்பதாகத் தெரியவில்லை, சொல் புதிது குழுவினர் உட்பட.

வளர்த்துக் கொண்டே போகவில்லை. சாராம்சமாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்:

‘தமிழ் ‘ கலாசாரத்திற்கு என்று மாத்திரம் நீங்கள் கடமை ஆற்ற முடியாது. ஏனெனில் கலாசாரம் என்பது சில விழுமியங்களின் வெளிப்பாடு. அவற்றை ஒரு சமூகம் தன் நம்பிக்கைகள், அச்ச உணர்வு, அரசியல், பொருளியல் சார்ந்து தீர்மானித்துக் கொள்கிறது. எனவே நீங்கள் கலாசாரத்தை மாற்ற/ மேம்படுத்த விரும்பினால் இவற்றை மாற்ற/ மேம்படுத்தவேண்டும்.

அதற்கு நிறுவனமாகிவிட்ட சிறு பத்திரிகை அமைப்பு உதவாது. தொன்னையை வைத்துக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது.

வெகுஜனங்களை நெருங்க விரும்பினால் நீங்கள் அவர்கள் மொழியில் பேச எழுத வேண்டும். செவ்வியல் இலக்கியக் கனவு இருக்கிற உங்களுக்கு அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

திசை இதுதான். பயணம் செய்ய விருப்பம் இருந்தால், தெம்பிருந்தால் முதலடி எடுத்து வையுங்கள்.

நன்றி.

அன்புடன்

மாலன்.

Series Navigation