பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

ஞாநி


மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பல முக்கியமான கேள்விகளை தீவிரமாக எழுப்பும் அதே சமயத்தில் ஆங்காங்கே மேம்போக்கான, அரை வேக்காட்டுத் தனமான குறிப்புகளையும் சொல்லிச் செல்கிரது. இதுவரை இணையத்தில் ( திண்ணையில் மட்டும் அல்ல) நான் வாசிக்கக்கிடைத்த பலவற்றில் இந்தப் போக்கு தென்படுகிறது. அதாவது ஒரு புறம் சீரியசானவற்றைப் பேசிக் கொண்டே, அதற்கு முரணானflippant உதிர்ப்புகளும் கலந்து வருகின்றன.

நந்தன்வழிக்கு நான் எழுதிய கடிதத்தை முதல் முறை வாசிக்கிறபோதே மஞ்சுளா சொல்லும் பலவற்றுக்கு என் கடிதத்தில் இடமே இல்லை என்பது தெரிந்துவிடும். அருணாசலம் தமிழ், சாதிய ஒழிப்பு, ஈழத்தமிழர், பெரியார், பற்றியெல்லாம் பேசத்தொடங்குவதற்கு முன்பிலிருந்தே அவற்றில் நான் அக்கறை காட்டி வந்திருக்கிரேன் என்பதை என் கடிதம் குறித்தது. அதற்கு மஞ்சுளா விசித்திரமாக ஒரு விமர்சனம் வைக்கிறார். அருணாசலத்துக்கு என் போல வெகுஜன சாதனப் பயிற்சி கிடைக்காதிருந்திருக்கலாம்; அவர் பெரியாரைப் பயில நேரம் எடுத்திருக்கலாம் என்பதாக. அருணாசலம் வயதில் என்னை விட மூத்தவர். தமிழக அரசில் வருவாய்த் துறையில் பணியாற்றி, தாசில்தார் பதவி வரை வகித்தவர். விருப்ப ஓய்வு பெற்று நகலகத்தொழிலில் ஈடுபட்டவர். என்னை விட எல்லா வசதிகளும் அதிகம் வாய்க்கப் பெற்றவர்.இதெல்லாம் தமிழகச் சூழலில் என்னையோ, நந்தன் இதழையோ தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரிந்த பின்னணிகள். மஞ்சுளா எங்கு வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ( இணைய உலகில் ஒருவரின் வாழ்விடம் கூடத்தெரிய முடியாதிருப்பது சில தருணங்களில் வசதியாகவும் பல தருணங்களில் சிக்கலாகவும் உள்ளது.)

நான் என்னை பெரியார் சீடன் என்று சொல்லிக் கொள்ளவே இல்லை; காட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் மஞ்சுளா அதை என் மீது ஏற்றி வைத்துவிட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகிறார். நான் யாருக்கும் சீடனாக இருப்பதை எப்போதும் ஏற்றுக் கொண்டது இல்லை. காந்தி, பெரியார், பாரதி, கார்ல் மார்க்ஸ், திரு.வி.க, வள்ளலார், ஜோதிபாய் பூலே, ரஸ்ஸல், என்று நான் பல அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறையாளர்களிடமிருந்து பல கருத்துக்களை கற்றுக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் முரண்படும் சமயங்களும் உண்டு. எனினும் மேற் குறிப்பிட்ட வர்களிடமிருந்து என்னை வளப்படுத்தக் கிடைத்த விஷயங்களே அதிகம்.குரு சீடன் மனோபாவத்தை நான் எப்போதும் நிராகரிக்கிறேன். உலகறிந்தவர்கள் முதல், உலகறியாத சாதாரண மனிதர்கள் வரை பலரிடமிருந்தும் நாம் எப்போதும் அறியவும், கற்கவும், நம் கருத்துக்களை உறுதிப் படுத்திக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன என்பதே என் அனுபவம்; அதுவே என் பார்வை. பெரியார் பற்றுப் பேச எனக்கு உரிமை கிடையாது என்று அருணாசலம் எழுதியபோது, எனக்கு நிச்சயம் உரிமை உண்டு, அவரை விடவும் உரிமை உண்டு என்று வலியுறுத்தியதே என் கடித வாசகம். அது சிஷ்ய மனோபாவம் அல்ல.

பிராமணப் பெண்ணை மனைவியாகக் கொண்ட சூத்திரரைப் பாராட்டுவது சரி யா தவறா, கண்டிப்பது சரியா தவறா என்று என் கடிதத்தில் இல்லவே இல்லாத ஒரு விஷயத்தை முன்வைத்துக் குழப்புகிறார் மஞ்சுளா. ‘பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது தாரமாக்கிக் கொண்டு,சங்கர மடத்தலைவரை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜை செய்த ஓட்டல் அதிபரின் பல-தார, பலகாரச் சுவையைப் போற்றியது உங்கள் இதழ். ‘ என்று நான் நந்தன் வழியைக் கண்டித்திருக்கிறேன். சரவண பவன் ஓட்டல் அதிபரின் பெண்ணாசை அராஜகங்களைக் கண்டுகொள்லாமல் அவர் சூத்திரர் என்ற ஒரே காரணத்துக்காக்க நந்தன் ஆதரித்து எழுதியது. அந்த சூத்திரனோ, நந்தன் வழி எதிர்க்கிற சங்கராச்சாரியை வீட்டுக்கு வரவழைத்து தன் இரண்டாவது ‘மனைவி ‘யான பார்ப்பனப் பெண் சகிதம் பூஜை செய்தவன் என்பதை நான் சுட்டிக் காட்டுகிறேன். அவ்வளவுதான். பார்ப்பனப் பெண்னை சூத்திர ஆணோ, பறைப் பெண்ணை பார்ப்பனனோ திரும்ணம் செய்வதை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். கலப்பு மணம் ஒன்றுதான் இறுதியில் சாதியை ஒழிக்கும் வல்லமை உடையது. அதற்காக, பல தார அராஜகங்களை ஆதரிக்க முடியாது.

பெரியாரை ஏற்பது பிராமணர்களுக்குத் தற்கொலையாகும் என்று சொல்லி, எனவே பிராமணனாக என்னைக் கருதும் மஞ்சுளா நான் எப்படி அப்படிச் செய்யலாம் என்றும் கேட்கிறார். தினசரி கண்ணாடியில் பிராமணனான என்னை நானே பெரியார் சொன்னபடி செருப்பலாடித்துக் கொள்கிறேனா என்று அசட்டுத்தனமாகக் கேட்கிறார். அந்தக் கேள்வியெல்லாம் தன்னை பிராமணனாகக் கருதுகிறவருக்குத்தானே. நான் என்னை அப்படிக் கருதாதபோது எதற்காக இந்த அசட்டுக் கேள்வி ? அருணாசலம் போலவே மஞ்சுளாவும் நான் என்னை பிராமணனாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும் என்கிறார் போலும். நான் நந்தன்வழிக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘நாங்கள் பிறந்த சாதியின் கோளாறுகளையும், மொத்தமான சாதி அமைப்பின் கொடூரத்தையும் உணர்ந்து அதற்குக் காரணமான மதத்தையும் சேர்த்து நிராகரித்தவர்கள் ‘. பிராமணனாகப் பிறந்ததற்காக எனக்கு எந்தக் குற்ற மனப்பான்மையும் இல்லை. நான் பொறுப்பாக்காத, நான் தீர்மானித்துச் செய்யாத எந்த செயலுக்காகவும் நான் குற்ற மனப்பான்மை ஏன் கொள்ள வேண்டும் ? மாறாக, என் மீது சுமத்தப்படும், சாதி, மத அடையாளங்களை நான் அறிவுப்பூர்வமாக தூக்கி எறிந்துவிட்டது பற்றி எனக்குப் பெருமிதமும் மகிழ்ச்சியும் மட்டுமே உண்டு.

அதெப்படி நீ மதத்தையும் சாதியையும் நிராகரிக்கலாம் ? நாங்கள் மறுபடியும் மறுபடியும் உன்னை அதற்குள் வைத்துத்தான் அடைப்போம் என்று மஞ்சுளாக்களும் அருணாசலங்களும் முயற்சித்தால், அது நடக்காது. நாங்கள் மனிதன் என்ற ஒற்றைப் பெரும் அடையாளத்தையும், தமிழன் என்ற மொழிசார்ந்த சிறு அடையாளத்தையும் தவிர வேறு எதற்குள்ளும் அடைபடமாட்டோம் என்ற உறுதி பெற்றுப் பல காலம் ஆயிற்று.

பரமசிவன், அருணாசலம், ஞாநி என்ற பெயர்கள் இந்துப் பெயர்கள் என்று வேறு ஒரு உளறல். ஞாநி எப்படி இந்துப் பெயராகும் ? ஞாநியின் இன்னொருபெயரான சங்கரன் வேண்டுமானால் சைவப் பெயரென்று சொல்லலாம்.( இந்து என்று வரலாற்றில் யாரும் கிடையாது; அது அண்மைக்கால உருவாக்கம் மட்டுமே). நாத்திகரான, இங்கர்சாலும், ரஸ்ஸலும், ஏன் கிறித்துவப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பது போன்ற அபத்தம் இது. எப்படியானாலும், என் அதிகாரப்பூர்வமான சட்டப்படியான பெயரான ஞாநி எந்த மதப் பெயரும் அல்ல.

எந்தப் பெரியார் நமக்கு இன்று தேவை என்று கேட்கிறார் மஞ்சுளா.நான் பார்க்கிற பெரியார் சாதி ஒழிப்புக்காக, மூட நம்பிக்கைகளை பரப்பும் மத ஒழிப்புக்காக, பெண் விடுதலை சமத்துவத்துக்காகப் பாடுபட்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பார்வையில் இதற்குதேவைப்பட்ட பல வகை ஆயுதங்களைப் பயன்படுத்திப் போராடியவர். காலத்துக்கேற்ப ஆயுதங்கள் மாறலாம். அவர் இன்றைக்கும், இந்த லட்சியங்கள் நிறைவேறும் காலம் வரைக்கும் நிச்சயம் நமக்குத் தேவையானவர். அவரால், தலித், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஒற்றுமையை அவர் காலத்தில் செய்ய முடியவில்லை என்பதற்காக அவர் செய்தவையெல்லாம் அர்த்தமற்றவை ஆகிவிடாது. தான் தீவிரமாக சாதி ஆதிக்க எதிர்ப்புப் பணியாற்றிய சுமார் 50 வருடங்களுக்குள்ளேயே, மேல் சாதியினரின் ஆதிக்கத்தை அரசுத்துறையில், கல்வித்துறையில் அவரால் தகர்க்க முடிந்தது என்ற ஒற்றை சாதனையே பெரியதுதான்.சாதி, மத, வர்க்க, பாலின வேறு பாடற்ற சமூகம் அமைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று இன்று நாம் யோசித்தாக வேண்டும் என்ர நிலை இருக்கிறதென்றால், அந்த நிலை வருவதற்கு உழைத்த முன்னோடிகளில் அவர் முக்கியமானவர். என் பார்வையில், பெரியார் ஏதாவது ஒரு பெரிய அரசியல் தவறு செய்தார் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் பங்கேற்று அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்று அண்ணா தலைமையினாவர்கள் விரும்பியபோது அதை ஏற்று பெரியாரே நேரடியாக அரசு அதிகாரத்துக்கு வந்திருக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதி அவருக்கு இருந்தது. சுமார் பத்து ஆண்டுகள் வணிக நிர்வாகியாகவும், இன்னொரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் நகராட்சி, பொது அமைப்புகளில் நிர்வாகியாகவும் இருந்த அனுபவம் அவருக்கு இருந்தது. அண்ணாவுக்கோ, கலைஞர் வகையறாக்களுக்கோ அன்று இதெல்லாம் துளியும் கிடையாது. ஆட்சி, அதிகார அனுபவம் மட்டுமன்றி அவற்றில் நேர்மையாகவும் ஒழுக்கத்தோடும், ஒவ்வொரு காசுக்கும் முறையான கணக்கு வைத்தும் பழகியவர் பெரியார். அவரே அரசுப் பொறுப்புக்கு வந்திருந்தால், திராவிடக் கட்சிகளில் இந்த அளவுக்கு ஊழலும் லஞ்சமும் வந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது.

பெரியாரை வெறுமே பிராமண துவேஷியாக சித்திரித்துக் கொண்டிருப்பது, அவருடைய உண்மையான நோக்கங்களை மறைக்கவும் திரிக்கவும் , அவற்றின் பக்கம் கவனம் செல்லாமல் தடுக்கவும் நடக்கும் சதியே ஆகும். அந்த சதியின் இன்னொரு வெளிப்பாடுதான் ஹிட்லர் – யூதர் போல பெரியார்- பிராமணர் என்று போகிற போக்கில் எழுதிவிட்டுப் போகிற விஷமமுமாகும்.

பாம்பு-பார்ப்பான் பேச்சு பெரியாருடையதே அல்ல. அவர் பெயரில் இது நீண்ட காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.பல பெரியார் இயக்கத்தினர், பெரியாரியல் ஆய்வாளர்கள், பெரியார் அப்படி எந்த சந்தர்ப்பத்திலும் சொன்னதாகத் தெரியவில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிரார்கள். ஆனால் அது வேண்டுமென்றே தொடர்ந்து பெரியாரை, ஒரு சிந்தனையாளராகக் காணவிடாமல் வெற்று முரடனாகக் காட்டுவத்ற்காக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. பெரியார் அத்தகைய கருத்து உடையவராக இருந்திருந்தால், அவர் காலத்தில் அரசியலில் பிராமணப் பாம்பு என்று கருதக்கூடிய ராஜாஜியை ஒண்டிக்கு ஒண்டி கொல்லலவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. பெரியார் அற நெறிகளில் மனித ஒழுக்கத்தில் சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர். அவற்றை கடவுள்,மதம், சாதியிலிருந்து பிரித்தவர். ஒருவன் அற நெறியாளன் என்பதற்காக தன் கருத்தை உரத்து ஓங்கிச் சொல்லாத சாதுவாக இருக்க வேண்டியதில்லை. உரத்துச் சொல்பவன் என்பதற்காக ஒருவனை அற நெறியற்ற முரடன் என்று தவறுதலாகப்புரிந்துகொள்ளவும் தேவையில்லை.

மஞ்சுளா நவநீதன் ஆணோ, பெண்ணோ எனக்குத் தெரியவில்லை. பெண்ணாக இருந்தால், பெயருடன் ஆணைச் சேர்த்துக் கொள்ளும் அடிமைப் பார்வையை விட்டு விடட்டும். ஆணாக இருந்தால் பெண் பெயரில் இருக்கத் தேவையில்லை. எதுவாயிருந்தாலும், தான் எழுதும் விஷயங்களைப் பற்றிய மிக மிக அடிப்படையானவற்றையேனும் கற்றுத் தெளிந்தபின் எழுதத்தொடங்குவது நல்லது. பெரியார் பிறப்பால் கன்னடர் என்பது கூட தெரியாமல், அவரை தெலுங்கர் என்று ஒரு பத்தி முழுவதும் எழுதும் நபர் பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, எதைப் பற்றி எழுதினாலும் எப்படி அது சரிதான் என்று இனி நம்ப முடியும் ? குறைந்தபட்சம் இப்படி ஒவ்வொரு முறை தவறு செய்தாலும், அது தவறு என்று ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு, சுய விமர்சனம் செய்துகொண்டு, தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்தால், மகிழ்ச்சியடையலாம்.

ஞாநி

Series Navigation

ஞாநி

ஞாநி