இந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001

This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue

மஞ்சுளா நவநீதன்


***

ஜெயலலிதா மீது வழக்குகள்

ஜெயலலிதா மீது உள்ள வழக்குகளுக்கு, ஜெயலலிதாவே குற்றம் சாட்டப்பட்டவர், ஜெயலலிதாவே வழக்கறிஞர், ஜெயலலிதாவே எதிர்த்தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவே நீதிபதி..

பலே பலே.. மிக நன்றாக இருக்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம்.

இப்போது திமுக அமைச்சர் இந்த வழக்குகளை சிபிஐ எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவர்கள் ஆட்சியிலிருந்த போது ஏன் இந்த வேலையைச் செய்திருக்கக்கூடாது ? இது சரியான போலித்தனம். லோக்பால், லோக் ஆயுக்த போன்ற அமைப்புக்களை ஏற்படுத்தி பொது வாழ்வில் உள்ளவர்கள் மீதான வழக்குகளை கட்சி சார்பற்று அரசியல் சார்பற்று நடத்த வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது. அது என்னாயிற்று என்று தெரியவில்லை.

அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும் வரையில் இது மாதிரி கேலிக்கூத்துகள் தொடரத்தான் செய்யும்.

***

கடலைப் புண்ணாக்கு வழக்கு

திமுக ஆட்சியின் போது சத்துணவு என்ற பெயரில் கடலைப்புண்ணாக்கு போட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியவுடன், முன்னாள் உணவு அமைச்சர், அதிமுக ஆட்சியின் போது கடலைப்புண்ணாக்கு போடுவதை ஆரம்பித்து வெகு விமரிசையாக நடத்தியதை சாட்சியத்துடன் காண்பித்து இருக்கிறார்.

குறைந்தது இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சரியான புண்ணாக்குகள் தான். நடத்தப்படும் சத்துணவுத்திட்டம் ஒரு அரசியல் பிரச்சார திட்டமே தவிர மக்களுக்கான திட்டம் அல்ல என்பதும்.

பலர் அடிக்கடிச் சொன்னது. ஒருவனுக்கு தின்பதற்கு மீன் களைக் கொடுக்காதே, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்பது. இந்திய ஜனநாயகத்தில் அரசாங்கம் கொடுக்கும் மீன்களுக்கு பழக்கப்பட்டுப் போன மக்கள் மீன் பிடிப்பது என்பதையே மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. இதில் யார் கொடுத்த மீன் ரொம்ப நாறியது என்பது பற்றி இப்போது அடிதடி அவ்வளவுதான்.

***

முஷாரஃப் ஜனாதிபதி ஆகி இருக்கிறார்.

தன் தலையில் தானே முடிசூட்டிக்கொண்ட பாகிஸ்தானின் மூன்றாவது ராணுவத்தளபதி முஷாரஃப். ஆனால் இந்த முடிசூடல்கள் இது வரையில் முடிந்ததென்னவோ ரத்தக்களரியில்தான்.

தேர்தல்கள் வெகு விரைவில் நடக்கும் என்று சொல்லிவிட்டு தனக்கு முடிசூடிக்கொள்வதும் பாகிஸ்தானில் புதிய விஷயம் அல்ல. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதைக் கண்டனம் செய்துள்ளன. இதுவரை இருந்த எல்லா ராணுவத்தளபதிகளுக்கும் இது போன்ற விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததே இந்த ஐரோப்பிய அமெரிக்க அரசாங்கங்கள்தாம் என்பது எல்லோருக்கும் செளகரியமாக மறந்து போய் விடுகிறது. இந்தியா இது பற்றி எந்தக்கருத்தும் சொல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது.

பேச்சு வார்த்தைக்கு அழைத்த பின்பு இது நடந்ததால் இப்போது இந்தியா எதிர்ப்பு தெரிவித்தால், அது ‘பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்குவது போலாகி விடும் என்பது இந்திய அரசின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், பேச்சு வார்த்தை என்பது வெறும் பேச்சு வார்த்தைதான் என்பது பழைய அனுபவம். பாகிஸ்தானின் நோக்கமும் பேச்சு வார்த்தை தானே தவிர, பேச்சு வார்த்தைகள் தீர்வு நோக்கிய பிரயாணத்தின் வழி அல்ல. பாகிஸ்தானின் அரசு உலகில் சட்டப்பூர்வமான நிலையைப் பெறுவதற்கு ஒரு வழிதான் இந்தியாவுடனான பேச்சு வார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

***

உலக வங்கி நடத்தும் மாநாடு (இணையத்தில்)

பார்சிலோனாவில் நடக்க இருந்த உலக வங்கி மாநாடு எதிர்ப்பாளர்கள் அதற்கு அதிகமாவதால், அதற்குப் பதிலாக இணையத்தில் நடக்க முடிவு செய்துள்ளது.

எதிர்ப்பாளர்களின் எந்த விதமான எதிர்ப்புக்குரலையும் உதாசீனம் செய்துவிட்டு, அவர்களது அக்கறைகளைப் பற்றிப் பேசாமல், இணையத்துக்கு தப்பி ஓடுவது என்பது சுத்தக் கோழைத்தனம் மட்டுமல்ல, அடாவடித்தனமும் கூட.

உலக வங்கி தலைவர், வளர்ந்த நாடுகள் தங்களது மக்களையும் அவர்களது வியாபாரங்களையும் பாதுகாக்க வியாபாரத் தடைகளை வைத்துக் கொண்டு, வளர்ந்து வரும் நாடுகளின் இருக்கும் வியாபாரத்தடைகளை நீக்க முயற்சிப்பது எந்த அளவு வளர்ந்த நாடுகளின் அடாவடித்தனம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்த வளர்ந்து வரும் நாடும் கஷ்ட காலத்தில் நுழைந்தால் அதைக் காரணமாக வைத்துக்கொண்டு அடாவடித்தனமாக அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லுவதும், அவர்களுக்கு கொடுக்கும் குறைந்த வட்டி பணத்துக்கு ஆயிரம் சமூக நிபந்தனைகள் விதிப்பதும், உலக வங்கியை நவீன காலனியாதிக்க கருவியாக மாற்றி இருக்கிறது என்பது நமது நாட்டு மக்களுக்கும் தெரிவதில்லை, நமது பத்திரிக்கைகளும் தெரிந்தாலும் பேசுவதில்லை.

***

இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி

ஒரு வழியாக வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் குழு வெற்றி பெற்றிருக்கிறது

ஜிம்பாப்வே குழுவை வெற்றி கொண்ட இந்திய கிரிக்கெட் குழுவுக்கு வாழ்த்துக்கள்

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்