கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

சி குமாரபாரதி


ஊர்வலப் பண்பாடு

‘கூரையில் இரு நுாற்றுச் சொச்ச குரங்கள் தீ வெட்டிகளுடன் ஏறி தா திமி திமித்தி என ஆட, தீ அணைக்கிறேன் பேர்வழி என வேறொரு மந்திக் கூட்டம் கீழே தண்ணீர் வாளிகளுடன் குதி குதியெனக் கும்மாளமிட இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மந்திகள் குழுமிய ஒரு கதை இங்கு ஞாபகம் வருகிறது. ‘ சி.கு

கட்சிகளின் உள் அமைப்பு முழுக்க முழுக்க நிலபிரபுதத்வ சமுதாயம் (archaically feudal) சார்ந்தது. ஆண்டான்- அடிமை தலைவன் – தொண்டன் முறை உறவுகள். கட்சிகளின் உட் பூசல்களும், கட்சிகளிடையே போட்டிகளும் ஏற்படுகிறது. இவற்றை பிரதிபலித்து இவற்றிற்கு உருவம் கொடுத்து, தீர்வுகள் காணும் விளையாட்டு மைதானமாக தமிழ் நாடு முழுவதும் மாற்றப் படுகிறது. இந்தப் போர் நடனங்களின் உன்மத்த வெளிப்பாடாக ஊர்வலங்கள், பேரணிகள், மகா நாடுகள், சிலை திறப்பு விழாக்கள் (சிலைகளின் நேர்த்தி ஆயனச் சிற்பி தலைமறைவாகும் படி..) கட்டவுட்கள். ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களே நாட்டாண்மைகளை நிலை நிறுத்தும் சமூகச் சடங்கு. ஊர்வலம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் தொழில் நுட்பம் (Rent a crowd, Rent a lorry சமாச்சாரம்) தெரிந்தவர்கள்தான் குட்டித் தலைவர்களாக பரிணமிக்கிறார்கள். ‘மாவட்டச் செயலாளர் அண்ணனே வருக வருக இவண்… ‘ போன்ற சுவரொட்டிகளில் பெரும் தலைவர்களுடன் கூழைக் கும்பிடு போடும் குட்டித்தலைவர்களின் தந்திரத் திரு மூஞ்சிகள். மதில்கள், கழிப்பறைச் சுவர்கள், விளக்குக் கம்பங்கள் என பொதுப் பார்வையில் படும் ஒவ்வொரு சதுர அங்குல றியல் எஸ்டேட்டிலும் இவர்கள் படங்கள் எம்மை முறைத்துப் பார்க்கின்றன. இந்தக் கூத்துக்களால் பொது மக்களுக்கு ஏற்படும் நாளாந்த இன்னல்கள். சாலைகள் மூடப் படுதல். கிராமங்களைக் காலியாக்கி நகரத்தை பல்லாயிரம் கால்கள் மிதித்து துவம்சம் செய்யும் அத்து மீறல்களுக்கு- ரெளடித்தனங்களுக்கு அன்று சுதந்திரம் வழங்கப் படுகிறது.

ஊர்வலக் கலாச்சாரம் பல வருடங்களாக நடை பெற்று மகாமக உற்சவமாக நிலைத்துவிட்டது. இந்த கலாச்சாரத்தின் விகாரமான வெளிப்பாடுதான் சென்ற ஆண்டு நடைபெற்ற வேளாண்மை பல்கலைக் கழக பெண்கள் மூவர் ( ஹேமலதா, காயத்திரி, கோகிலவாணி) பஸ்சில் உயிருடன் எரிப்பு. ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு ஊழலுக்காக நீதி மன்றம் தண்டனை கொடுத்ததை எதிர்த்து நடந்த ஆர்பாட்டத்தில் ஏற்பட்ட கொலைகள் இவை.

ஆனால் சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த மக்கள் கோபம் இந்த மாதிரியான கட்சி நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. இந்த கொலைச் சம்பவம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அதுவும் ஒரு குறிப்பிட்ட வகைத் தொண்டர்களின் செயலாகக் காண்பிக்கப் பட்டு வியாக்கியானம் செய்யப் பட்டது. இது எல்லாக் கட்சிகளினதும் அடிப்படை செயல் முறைகளிலிருந்து விளையக் கூடிய பல விபரீதங்களில் ஒன்றுதான் என்பது தெளிவாகப் பலருக்கு புலப்படவில்லை. தொடர்ந்து வந்த ஊடக செய்திகள் முரண்படும் அறிக்கைகளையும் தியரிகளையும் முக்கியமாக்கி சம்பவத்தை சிறுமைப் படுத்தின. இந்த குழப்பமான பின்புலத்தில் ஒரு சில கட்டுப்பாடுகளைக் கூட நிலைநாட்டும் முன்பே மக்களின் ஆவேசம் இறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

வாடகைக் கூட்டங்கள் (Rent a Crowd)

ஆயிரக் கணக்கில் மக்களை அங்குமிங்கும் நகர்த்தும் பொதுக் கூட்டங்கள் நிச்சயமாக நடக்க கூடாது என்ற உணர்வு பரவலாக ஏற்படும் பட்சத்தில் அரசியல் கட்சிகள் கொஞ்சம் அடக்கத்துடன் சிறு கூட்டங்களில் ‘ கொள்ளை விளக்கம் ‘ அளிக்க நிர்பந்திக்கப் படுவார்கள் – அது அவர்கள் பிரச்சனை.(மெகா கூட்டங்களில் அப்படியென்ன செயல் திட்டங்களை பரிசீலிக்கிறார்கள் என்பதை விடுவோம்). அலை மோதும் கூட்டம் மைக் பந்தல் இத்தியாதி எந்தக் தலைவர்களுக்கும் சரி பெரும் லாகிரி. இந்தப் போதைக்கு இவர்கள் அடிமை. இதை விட அடக்கமாக பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு வராது. இப்படியான கட்டுப்பாடுகள் அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடமிருந்து நிச்சயம் வராது. நன்றாகப் பரிசோதிக்கப் பட்ட பிரசார முறையை அரசியல் வாதிகள் நிர்ப்பந்தத்தினால் அன்றிக் கைவிடப் போவதில்லை. அரசியலில் செம்மை ஏற்பட வேண்டும் என்றால் முதலில் இங்குதான் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் பிடி இங்கு தான் இருக்கிறது. படித்த மக்களுக்கும் இந்த திருவிழாப் பின்புலம் தேவைப் படுகிறது என்றே தோன்றுகிறது. இவற்றால் நாளாந்த வாழ்வில் ஏற்படும் தடங்கல்களைக் கூட, இயந்திரத்தன்மையான வாழ்விலிருந்து தற்காலிக விடுதலையாகவே நினைக்கிறோமா ?. சுதந்திரத்திற்கு முன்னர் தொடக்கம் இப்படியான மெகா நிகழ்வுகளுக்கு பழக்கப் பட்டு விட்டோம் என எண்ணுகிறேன். இறந்த பொற்காலத்துடனான ஒரு குறியீட்டுத் தொடர்பு ? ஆனால் அன்று இவற்றிற்கு ஒரு நடைமுறைப் பயன்பாடு இருந்தது எனலாம். சிறு பான்மை பிரிட்டிஷ் நிர்வாகிகளுக்கு தொடை நடுங்கும் நிகழ்வாக இவை அமைந்தன. இப்பொழுது யாரைப் வெருட்ட இந்த எடுபிடிகள் ? நாங்கள் இவற்றைப் பற்றி யெல்லாம் முணுமுணுத்தாலும் இன்றியமையாத பகைப்புலமாக இந் நிகழ்வுகள் தொடரவே விரும்புகின்றோம். அதிருப்திகளைக் கொட்டிக் கொண்டே சினிமா பார்ப்பது போலவாயிருக்கலாம்.

ஒப்புக் கொள்ளப்பட்ட சமூக நடத்தைகள் (Norms)

இந்த ஒரு நிகழ்வில் என்று மட்டுமல்ல இங்கு கூறப்பட்ட எல்லா விஷயங்களிலுமே ஒப்புக் கொள்ளப்பட்ட சமூக நடத்தைகள் (Norms) இப்படித்தான் நிறுவப் படுகின்றன. கட்டுரையில் இந்த விஷயம் திருத்தமாக விழுந்திருக்கிறதோ தெரியவில்லை. ‘எதிர் ‘ பக்கத்திற்கும் ‘எங்கள் ‘ பக்கத்திற்கும்கூட இவையெல்லாமே தெரிந்திருக்கிறது. இந்தச் சமநிலைகள் எல்லோருக்கும் ஒத்துவரும் புள்ளிகளுக்கு மெதுவாக நகர்த்தப் படுகின்றன – எது செய்யலாம், எது செய்து தப்பிக்கலாம் எவை செய்யத் தகாதன என்ற வரையறைகள் இப்படித்தான் நிறுவப் படுகின்றன. அரசியல் வாதிகளில்மட்டும் பழியைப் போடுவதில் பிரயோசனம் இல்லை. நான் சொல்வது எங்களையும் மாற்றிக் கொண்டு நிர்வாக யந்திரமும் மாறவேண்டும் எனக் கோருவதைப் பற்றியதே.

மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கத்தினது வெற்றிக்கு அடிப்படைக் காரணம் ஏற்கனவே பரவலாக, முக்கியமாகப் படித்த மக்களில், ஊடுருவியிருந்த சுதந்திர அடிநாதத்தை மீட்க முடிந்ததேயாகும். ஆக குறிப்பிட்ட விகிதத்தினரின் அடிப்படை உள்ளக்கிடக்கை என்பது முக்கியமான விஷயமாகிறது. இது நிற்க.

தலைவர்களின் ஊடகப் பிம்பங்கள்

வரலாறு எங்களுக்குப் பல பாடங்களை முன்வைத்தாலும் வரலாற்றிலிருந்து நாம் நிகழ்காலத்திற்குரிய பாடங்களைப் படிக்க முடிவதில்லை என்பதும் ஒரு ஆச்சர்யம்தான். இப்படியொரு குணம் நமக்கு வாய்த்திருக்கிறது. காலனிச ஆதிக்கத்தின் நாயகனாக விளங்கிய சர்ச்சில் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அரசியலிலிருந்து மக்களால் விலக்கப் பட்டார். உலகப் போரில் பிரிட்டினை மாபெரும் வெற்றிக்கு ஊக்குவித்தவரை மாறிவரும் புதிய சகாப்த்தத்திற்கு தோதுப் படமாட்டார் என்று தள்ளி வைக்க முடிந்தது பிரித்தானியா மக்களால். அதுவும் போரின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த தேர்த்தலிலேயே இது சாத்தியமாயிற்று. ஆட்சி நடத்துவதற்குரிய தகமை என்பது கதாநாயக அந்தஸ்துக்கு சில ஊடகங்களால் உயர்த்தப் பட்டவர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்புத் தகுதி என்பதை மேற்கத்திய சாமானிய மக்கள் நம்புவதில்லை.

ஆனால் காந்தி-நேரு பிம்பத்தையும் அது தொடர்பான சுதந்திரப் போராட்டத்தையும் வைத்த்தே 50 வருடங்களை ஓட்ட முடிந்தது இந்திய ஊடகங்களினதும் அதை கேள்வி கேட்காமல் நம்பும் மக்கள் கூட்டத்தினதும் சாதனை. பழைய பத்திரிகைகபை¢ பார்க்கும் பொழுது சுதந்திரம் அடைந்து 10 வருடங்கள் கழிந்தும் போராட்ட கால புராணங்கள் ஜதீகங்கள் பின்னப் பட்டு ஊடகங்களுக்கே உரிய அரை குறைத் தேசீய முலாமுடன் துணுக்குச் செய்திகளாக கட்டுரைகளாக வந்து கொண்டிருந்து ஆச்சர்யம் அளித்தது. இந்த புதிய ஜதீகங்களின் இடை நிலைத் தேக்கிகளாக (buffer zone) நடுத்தர மக்கள் இலக்காகி பின்னர் மெதுவாக மக்கள் மட்டத்திற்கு சுவறியது எனலாம்.

கடவுளுக்காகக் காத்திருக்கிறோம் ?

இந்த தமாஷா நடந்து கொண்டிருக்கும் பொழுதே புதிய தொழில் நிறுவனங்களும் பழைய வியாபார நிறுவனங்களும் சந்தடியின்றி பின் கதவு வழியாக நிர்வாக யந்திரங்களுடன் நீண்ட கால உடன் படிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டன என ஊகிக்க முடிகிறது. சிலர் விழித்துக் கொண்டு கேள்வி கேட்டார்கள்தான். ஊடகங்கள் இதையிட்டு வருடா வருடம் வரும் காந்தி ஜெயந்திக்கு ‘மகாத்மாவே எங்கு போனாய், மீண்டும் பிறந்து உய்விக் வா ‘ என்னும் கருத்தில் கவிதைகளைத் தவறாமல் வெளியிட்டு தமது ஆதங்கத்தையும் பதிவு செய்து கொண்டன. நான் கூறி வருவது காந்தி-நேரு பற்றிய விமர்சனம் அல்ல என்பது தெளிவு. கஷ்டமான வேலைகளைச் செய்வதற்கு ஹீரோவுக்காக காத்திருப்பது அவதாரத்துக்காக காத்திருப்பது என்பன எங்கள் ஆழ் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடக் கூடவிருக்கலாம். கீதாசாரியன் உறுதிமொழியாகச் சொன்னது போல் ‘தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் பொழுது நான் மனிதர்கள் ஊடே மனிதனாக மீண்டும் இறங்கி தர்மத்தை தாபிப்பேன் ‘. உண்மை கடவுளால் இதுவுமன்றி இன்னமும் முடிப்பது சாத்தியம் ஆனால் கொஞ்சம் எங்களின் ஒத்தாசையையும் நிச்சயம் வரவேற்பார். தவிரவும் தெயவத்தின் இடையீட்டுக்காவேனும் சமூகக் குழப்பங்களை உச்ச நிலையை அடைய விடுவதும் விவேகமல்ல.

மக்களுக்கு உரிய சமூகக் பொறுப்புகள் அவர்கள் உரிமைகள் ஆகியவை ஆழமாக வலியுறுத்தப் படவில்லை. ஊடகங்கள் இதற்கு முயற்ச்சி செய்ததாகத் தெரியவில்லை. அன்றி சில குறைந்த பட்ச பொது நடத்தைகளை வரையறுக்க அரச நிர்வாகங்களை கரிசனத்துடன் வற்புறுத்தியதாகவோ தெரியவில்லை. வாசகர்களை இலட்சிய நுகர்வோர்களாகவும், தங்கள் தங்கள் பத்திரிகைகளின் நட்சத்திர எழுத்தாளர்களுடைய பணம் செலுத்தும் விசிறியாகவும் பதனிடுவதே ஊடகங்களின் முக்கிய குறியாயிருந்து வருகிறது. போதாக் குறைக்கு கொஞ்சம் அரைவிழிப்புடன் இருக்கும் மக்களையும் தாலாட்டுப் பாடி துாங்க வைக்க தமிழ் படங்கள். தமிழ் சினிமா போலவே உள்ளடக்கம் எதுவும் இன்றியே வெறும் தொழில் நுட்ப பகட்டுடன் தமிழ் பத்திரிகையுலகமும். வியாபாரம் என்றால்கூடப் பரவாயில்லை ஆனால் உருப்படியாக ஒன்றும் செய்யாமலே பங்குதாரர்களின் மனக் கோணல்களை சமூகத்தின் தலையில் கட்டும் யந்திரங்களாகவே மாறிவிட்டன. இவற்றை நம்பினால் ஒரு சமுதாயம் மேலும் கீழ்நிலைக்கத்தான் தள்ளப்படும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. நாம் நடைமுறைப்படுத்தும் ஒருவகை ‘நுகர்வோர் ‘ கலாச்சாரத்தினால் ஏற்படும் சுயநலன்களின் சங்கிலித் தொடர் விளைவுகளையே இன்று அனுபவிக்கிறோம் என்பதாவும் ஒரு வகையில் சொல்லலாம். மற்றைய நாடுகளிலும் இதுதான் நடை முறை என்பது ஒரு வாதம். உண்மை ஆனால் பொது நடத்தைகளில் வரையறைக் கோடுகள் உயர் மட்டத்தில் தெளிவாக செதுக்கப் பட்டு தொடர்ந்தும் பராமரிக்கப் படுகின்றன.

சீரழிவுகளுக்கு படித்வர்களே பொறுப்பு

இன்றைய பொருளாதார சமூக சீர்குலைவுகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்பதாக ஒரு வசதியான ஏற்பாட்டை செய்து கொண்டுவிடுகிறோம். பின்னர் அந்நிலையில் நின்று நாம் விரும்பாத அரசியல் வாதிகளை சாட ஆரம்பிக்கிறோம். அரசியல்வாதிகள் நல்லவர்களல்ல என்பதும் அவர்களின் தில்லுமுல்லுகளும் எனக்குத் தெரியாததல்ல. ஆனால் இந்த ரீதியில் போனால் முடிவில்லாத சுழல் வட்டத்திரற்குள் சிக்க வேண்டியிருக்கும். எங்களின் பங்கு இந்தச் சீரழிவில் எவ்வளவு ? என்பதே முதல் கேள்வி. அரசியல்வாதிகள் எங்கிருந்து வந்தார்கள் ? சீரழிவிற்கு முக்கய காரணம் – Primary Cause – சமுதாய நோக்கம்ற்ற படித்தவர்கள்தான். இவர்கள்தான் இன்றைய நிலைக்கு படிப்படியாக காரணமாயிருந்திருக்கிறார்கள். அதாவது நாங்கள். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் இது தெரியும். அரசியல்வாதிகள் இரண்டாம் சுற்றுக் காரணம்.

விழிப்பான மனப்போக்கு ஒரு 5% விழுக்கடு இருந்தாலே பத்திரிகை-சினிமாத்தரங்கள் இயல்பாகவே உயரும். விழிப்புள்ள சிறு பான்மையினர் சமூக மாற்றங்களில் ஒரு பெரிய ஊக்கியாக செயல் பட்டிருக்கிறார்கள் எனபது வரலாறு. ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கு கூடிய எண்ணிக்கை மக்கள் சமுதாய பிரச்சனைகளில் தெளிவு கொண்டிருந்தால், இந்த விழிப்பு எங்கும் சுவறி பல திசைகளிலும் செயல்ப் படும். இதனால் பொது நடத்தைகளில் சில வரையறைகளை நிறுவ முடியும். சமூக இயக்கங்கள் இயற்கை இயக்கங்கள் போலவே (அணுக்கரு விளைவு, படிகமாதல் இத்தியாதி) இயக்கங்களின் பெருக்கத்தை சுண்டிவிட ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கை (critical mass) தேவைப்படுகிறது. இந்த எல்லையை எண்ணிக்கை தொட்டவுடன் அதன் பின் மிகத் துரிதமாக கேத்திர கணித பெருக்கை நிகழ்கிறது.

படித்தவர்கள் செய்யக் கூடியது என்ன ?

இந்த அறைகூவலுக்கு எப்படி முகம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வது கடினம். எனக்குத் தெரியாது என்பதுதான் நியாயமான பதில். இவை கட்டுரைகள் எழுத்துக்களை மீறிய விஷயம் என்பதையும் சொல்லவேண்டும். ஆனால் எங்கள் பார்வை முறைகளில் முதலில் மாற்றம் ஏற்படுதல் வேண்டும். இந்தப் பார்வை மாற்றங்கள்கூட இப்படியான கட்டுரைகளால் மட்டும் ஏற்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. இவற்றை சமூக மட்டத்தில் தயங்காமல் விவாதிப்பது முக்கியம். நகர நடுத்தர வர்க்கத்தினரிடையே பொருள் பொதிந்த கருத்துப் பரிமாற்றம் குறைவு. இப்படியான தொடர்புகள் ஏற்படுவது பல நன்மைகளை ஏற்படுத்தும் என்பதுடன் பொது விஷயங்களில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. ‘எல்லா அரசியல் வாதிகளும் ஊழல் பேர் வழிகள் ‘ என்பவை போன்ற சூடான விவாதங்கள் பாதி உண்மையைத்தான் சொல்கிறது. மறு பாதி ‘நாங்களும் அவர்களை போன்றவர்களே ‘ என்பதாகும். இம்மாதிரியான உரையாடல்களில் ஏற்படும் தடங்கல்களை அவதானிக்கும் பொழுது தடங்கல்களுக்குக் காரணமான சில உளப்பாங்குகளைச் mindsets சொல்ல வேண்டும்.

எளிமையான சிந்தனை

வில்லுக்கு விஜயன் வேலுக்கு முருகன்

கல்லுக்குக் கவண் பல்லுக்குப் பற்பசை

மெய்ச்சொல்லுக்கு என் பாட்டனாரின் பழம்(ரண்)பொத்தகம்

– ரமணீதரன் ‘உவமை ‘

நாங்கள் எங்கள் நாட்டுப் பாரம்பரியங்களைப் பற்றி சில அபிமான உளப்பாங்குகள் கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றை நாம் எந்த பொருளுடன் பிரயோகிக்கிறோம் என்பதும் எந்தச் சந்தரப்பங்களில் இவை அவசியமற்ற உறுத்தல்களாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். அல்லாவிடின் திரும்பத் திரும் அலம்பிக் கொண்டிருப்தாகி விடும், இதனால் சிந்தனைகள் தடித்து விடுகின்றன. இவ்வகையில் இந்தியத் தேசீயம் பற்றிய நமது உளப்பாங்குகள் முக்கியமானவை. வேறு சில உளப்பாங்குகளும் திரும்பத் திரும்ப சுழல்கின்றன.

இந்தியக் கலாச்சாரம் தொன்மையானது என்ற கருத்து கடந்த நுாற்றாண்டில் மிகவும் வலியுறுத்தப் பட்டு வந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் (காலனிச) இதன் நடை முறை பயன் கருதியும் எங்களுக்கு கொஞ்சம் தன்நம்பிக்கை ஏற்படவும் இந்தக் கருத்தை அறிஞர்கள் கைக் கொண்டிருக்கலாம். எங்கள் தொன்மையில் சிறிதும் சந்தேகம் இல்லாவிட்டாலும் ஒரு விஷயம் உதைக்கிறது. எல்லா இனங்களுகளும் இந்த கிரகத்தில் கிட்டத்தட்ட இதேயளவு நீண்ட காலம் குப்பை கொட்டியிருப்பதாக பாத்தியதை கொண்டாட முடியும். மற்ற விஷயம், ஒரளவாவது நீதி நியாயமுள்ள சமூகத்தை உருவாக்க நாங்கள் உரிமை கொண்டாடும் பத்தாயிரமாண்டுக் கணக்கான ஆன்மீகப் பாரம்பரியம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஒரு பைம்பலுக்காக வேண்டுமென்றால் இதைச் சொல்வதில் தப்பில்லை. இந்திய ஞானிகள் உட்பட உலகம் எல்லா மகான்களையும் போற்றி மதிக்கிறது ஆனால் இந்த மதிப்பு ஒரு முழு நாட்டுக்கும் அங்கு நடக்கும் அபத்தங்களுக்கும் விரிவாக்கம் பெற வேண்டும் என இன்றைய திகதியில் எதிர் பார்க்க முடியாது. இன்னொரு உளப்பாங்கு இந்தியா அஹிம்சை அறநெறியில் நின்று போராட்டாம் நடத்தி சுதந்திரம் பெற்றது என்பதில் உள்ள பெருமை. இது உண்மை ஆனால் இதற்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதுடன், இந்தியச் சமூகம் மற்றைய சமூகங்கள் போலவே – பாகிஸ்தான் சீனா உட்பட, வன்முறை நிறைந்தது, என்பதுதான் நிகழ்கால உண்மை. இந்தியக் கடவுள்கள் ஆயுதபாணிகளாக, அதுவும் அவர்கள் உபரிக் கைகளில் மேலதிக ஆயுதங்கள் தரித்தவர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள்.

இவற்றை எதிர் மறையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மாற்று முனைக் கருத்து (Counter point) நீங்கள் சிந்தித்துச் சொல்லக் கூடிய பலவிதமான தத்துவ விளக்கங்கள் எனக்கும் தெரிந்திருக்கிறது என்றாலும் இக்கட்டுரையைப் பொறுத்த மட்டில், இந்நிலைப் பாடு தேவையின் நிமித்தம் இங்கு முன்வைக்கப் படுகிறது. படித்த தமிழர்களின் சிந்தனைகள் எமது கலாச்சார விழுமங்களைப் பற்றியோ அன்றி விழுமங்கள் என றொமான்ரிக்காக அறிமுகப் படுத்தப் படுவன பற்றியோ சில தெளிவுகள் கொண்டிருத்தல் காலத்தின் தேவை. பல நல்ல மெறுமானங்கள் பாரம்பரியத்தில் உண்டு என்றால் இப்போ இவை எங்கே போயின ? இருப்தாகச் சொல்லப் படும் பாரம்பரியங்கள் எமது கலாச்சாரச் சூழலால் எங்களில் ஏற்றப்பட்ட வெறும் சுமையா ? இந்த விஷயத்தைக் கேள்வி நிலையிலேயே விடுவோம்.

பாரம்பரிய விழுமங்கள் எங்களுக்கு மட்டுமே சம்பவித்த வரப்பிரசாதமோ அன்றி சாபங்களோ அல்ல. பாரம்பரியங்களே எங்களுக்குச் சுமையாகி பல மூட நம்பிக்கைகளை வளர்த்து பின்னோக்கி தள்ளுகின்றன என்பது ஒரு சாராரின் வாதம். பிறிதொரு சாரார் இந்த பாரம்பரியங்கள் மானிடர்களின் அரிய அறிவுப் பொட்டகம், அதன் முழுப் பொருள்களையும் நாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்று வாதிடுகிறார்கள். எது எப்படியோ மற்றைய கலாச்சாரங்கள் இந்த சுமைகளை கெட்டித்தனமாக ஒதுக்குவதிலோ அன்றி அவற்றிலிருந்து தேவையான அறிவுகளை (முட்டையில் மயிர் புடுங்காமல்) சுலபமாகவே பெற்று விடுகிறதிலோ வல்லவர்களாயிருக்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது. உதாரணமாக கிரேக்க காவியங்கள் கூறும் பல ஒவ்வும் மற்றும் ஒவ்வா நிகழ்வுகளை அறிவியல், உளவியல் சிக்கல்களை சுட்ட பயன்படுத்திக் கொண்டு போய்கொண்டேயி ருக்கிறார்கள். நாம் இன்றும் ராமாயண சம்பவங்களை அவரவர் முறைப்படி மறு ஆக்கம் செய்வதில் மிகுந்த சக்தியை செலவிடுகிறோம்.

இந்தியத் தேசீயத்தின் பல முகங்கள்

‘நீங்கள் அந்த மரத்துடன் ஒரு உறவை உண்டாக்க முடியுமாயின், மானிடத்துடன் செம்மையான உறவை ஏற்படுத்தியதாகிறது. அந்த மரத்திற்கும் உலகிலுள்ள எல்லா மரங்களுக்கும் நீங்களே பொறுப்பாகிறீர்கள். ஆனால் இந்தப் பூமியிலுள்ள உயிரினங்களுடன் உங்களால் தெடர்பு கொள்ளவது சாத்தியமில்லை என்றால், மனிதர்கள், மற்றும் மானிடத்தினுடன் உள்ள ஓரளவு உறவையும் நீங்கள் இழந்து விடுகிறீர்கள். நாங்கள் மரத்தின் தன்மைகளை ஆழமாகப் உன்னிப் பார்ப்பதில்லை, நாங்கள் மரத்தை உணர்வுடன் தொடுவதில்லை, அதன் திண்மையை – அதன் சொர சொரப்பான பட்டையை ஸ்பரிசித்து, மரத்தின் ஓரங்கமான ஒலியை கேட்பதில்லை. இலைகளினுடே காற்றுச் செல்லும் ஓசையல்ல இது, இலைகளைச் சலசலக்கும் காலைத் தென்றலின் ஓசையயுமல்ல, ஆனால் அதன் உள்ளார்ந்த ஒலியை, மரத்தண்டின் ஓசையை, மெளனமான வேர்களின் ஓசையை கேட்பதில்லை, இந்த ஓசையைக் கேட்பதற்கு நீங்கள் மிகுந்த அதி நுண்உணர்வடைதல் வேண்டும். இந்த ஓசை உலகத்தின் சத்தங்களோ, அன்றி மனத்தின் அலமலக்கும் இரைச்சலோ ஆகாது, மானுடச் சச்சரவுகளினதுமோ, அன்றி போர்க்கள ஆபாச இரைச்சலோ அல்ல, ஆனால் இதுதான் பிரபஞ்சத்தின் பகுதியாகி நிற்கும் ஓங்கார ஒலியாகும். ‘ – தனக்குத்தானே கிருஷ்ணமூர்த்தி

( Krishnamurti to Himself; Victor Gollancz 1987)

இந்தியத் தேசீயம் பற்றிய ஒரு சிறு குறிப்பு. தாகூர் பாரதி ஆகியோர் இந்தியத் தேசீயத்திற்கு ஆதி உருவங்கள் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தீட்டிய தேசீயம் என்ற ஓவியம் மனிதர்களை மட்டும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. மண் மலைகள் ஆறுகள் நீர் நிலைகள் மரங்கள் உயிரினங்கள் என சகலதையும் உள்ளடக்கிய முழுமையான தேசீயம். மக்களிலும் மண்ணிலும் கொண்ட அன்பு இவர்கள் பாடல்களில் அழகான விழுமங்களாக மலைகளிலும் நதிகளிலும் பட்டுத் தெறித்து எதிரொலிக்கின்றன. இவை அழகான உருவகங்கள் மட்டுமே என்று நாங்கள் கருதலாம். ஆனால் இதில் நுட்பமான பெரும் வித்தியாசம் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. வாழ்வுடன் அவர்கள் கொண்டிருந்த ஒருமைப்பாடு வெறும் கவித்துவ விழுமங்களல்ல. அதைவிட அவர்களின் ஆன்மீக ஒருமைப்பாட்டு (அனுபூதி) நிலையையே இவை சுட்டுகின்றன. கிருஷ்ணமூர்தியின் மேற்கோள் இதைச் சுட்டுகிறது. இந்த விஷயம் நாங்கள் நினைப்பதை விட அடிப்படையில் வித்தியாசமானது. (இந்தக் கருத்து எனது அனுமானம். இதை ஒத்துக் கொள்ளாவிடினும் கட்டுரையின் பொதுவான போக்கில் பாதிப்பு இராது என்றுதான் நினைக்கிறேன்) இந்த மாதிரியான தேசீயத்தை இந்தியர்கள் மட்டுமல்ல பலரும் தடையின்றி ஏற்றுக் கொள்ளக் கூடும். நீண்ட இந்தியக் கவிதை மரபில் இந்தியக் கவிகள் பலரும் எல்லா உயிரினங்களின் எதிரொலியாகவே குரல் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் உயிரினங்களின் மனச்சாட்சியாகவே செயல் பட்டிருக்கிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கூறும் பொழுது உண்மையின் வெண்கல நாதம் ஒலிக்கிறது. ஆனால் இவற்றிற்கு வாழ்வில் ஒரு அர்த்த்தை ஏற்றாமல் நாம் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டும் பொழுது இவை உடைந்த குரலாக பிசிறு தட்டுகின்றன. உண்மையில் நடைமுறை வாழ்வில் இவற்றிற்கு நாம் ஏற்படுத்திவரும் அர்த்தம்தான் என்ன என்று பார்ப்போம். பொது இடங்களில் குவியும் குப்பைகள், ஆறுகள் நீர் நிலைகளில் சேரும் மாசு, காடுகளை அழித்தல், வதிவிடங்களுக்கூடாக தொழிற்சாலைக் கழிவுகள் பெருகுதல், உச்சமாக போபால் விஷ வாயு மரணங்கள், என நீளும் பட்டியலில் நாம் கொடுக்கும் அர்த்தங்கள் தாராளமாகவே வெளிப் படுகின்றன.

மக்கள் ஒரு வகையான அரசியல் தேசீயத்தில் முக்கி யெடுக்கப் படுகிறார்கள். இந்தத் தேசீயம் அரசியல் தேவைகள் அவசரங்களாலும், சினிமாப் பிரதிபலிப்புக்களாலும், ராணுவ முன்னெடுப்புக்களாலும் உருவம் பெறும் மலினமான உணர்வை எழுப்பக் கூடிய தேசீயம். நரம்புகளில் புத்துணர்வு ஏற்ற மாதமொரு பொக்றான் வெடிப்பு நடாத்துவது சாத்தியமல்ல. இத்தகைய அட்ரெலீன் பாய்ச்சல் மிகவிரைவில் இறங்கி பழையபடி உணர்வுகள் கடினமாகி விடுகின்றன.

தேசீயத்தின் மென் முகம்

இந்தியத் தேசீயத்தின் மென்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தேசீய முகம் மகாத்தமாவுடையது. இந்த பிரதிபலிப்பு ஏற்படுத்தும் நம்பகத்தன்மையை உணர்ந்த அரசாங்கம் இவரது படத்தை கலக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் தோறும் முன்னிடத்தில் மாட்டியிருக்கிறது. இந்த புன்னகை பூத்த தேசீய முகத்தின் கீழ் பொது மக்கள் என்ன முறையில் இங்கெல்லாம் நடாத்தப் படுகிறார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. மக்கள் இந்த முகத்திற்கும் அது குறிப்படும் தேசீயத்திற்கும் காலப் போக்கில் என்ன பெறுமானம் கொடுக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு இங்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்தே அமையும். ஒரு அறிவுகூர் முகத்துடனும் அரிவாள் சம்மட்டியுடனும் எல்லா முரண்பாடுகளையும் போர்த்து, மிக ஆணித்தரமான அறிவியல் அத்திவாரத்தில் எழுப்பப்பட்டதாக உலகம் நம்பிய சோவியத் ஒன்றியம் திடாரெனச் சட்னியானதை மனதில் கொள்ள வேண்டும்.

தேசீயத்தின் மற்ற முகம்

‘இந்த நாடும் அதன் நிறுவனங்களும் இங்கு உறையும் மக்களுக்கே சொந்தம். அவர்களுக்கு ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்துடன் அதிருப்தி ஏற்பட்டால், தங்கள் குடியுரிமையை பிரயோகித்து அதை மாற்றவோ, அன்றி தங்கள் புரட்சி செய்யும் உரிமையைப் பிரயோகித்து அதை கண்ட துண்டமாகச் சிதைக்கவோ அல்லது துாக்கி வீசவோ உரிமை உண்டு ‘ ஏபிரகாம் லிங்கன்

காவல் துறை ராணுவம் ஆகியவை தேசீயத்தின் மற்ற முகம். பொருளாதார வசதி குறைந்த மக்களால் நாளாந்த வாழ்கையில் மாமூலாக அவர்கள் எதிர் கொள்ளும் மறு முகம். 98 மார்கழியில் தமிழ் நாட்டிலிருந்த சமயம், தடுப்புக் காவலில் இருக்கையில் சித்திரவதைகள், மரணங்கள் ஏற்பட்டதாக தொடர்ந்து ஒன்று மாறி ஒன்றாகக் குற்றச்சாட்டுக்கள் பல பத்திரிகைகளில் வந்து வண்ணமிருந்தன. இதில் மோசமானது சென்னை வாசியான அண்மையில் மணமாகிய ஒரு இளம் பெண்ணின் (சித்திரா) தற்கொலை பற்றியது. இது சென்னை சிந்தாரிப்பேட்டையில் நடந்ததாயிருக்கலாம். இவர் நடுநிசியில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப் பட்டு அதிகைலையில் விடுவிக்கப் பட்டார். நிலையத்தில் விசாரிக்கப் படும் பொழுது தான் மான பங்கப் படுத்தப் பட்டதாக குறிப்பை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். எளிய தமிழில் எழுதப்பட்ட குறிப்பு (எழுதியதைவிட எழுதாமல் விட்டது உரத்துப் பேசியது) அவரின் சோகத்தைப் பிரதிபலித்தது. கணவன் ஏற்கனவே தடுப்புக்காவலில் அதே நிலையத்தில். விஷயம் வேலையிடத்தில் கணவன் சில ஆயிரம் ரூபாய்கள் திருடிவிட்டார் என்னும் புகார். இந்த விஷயம் ஒரேயடியாக மறக்கப் பட்டிருக்கும் ஆனால் உடன் வதியும் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலையத்தை தரைமட்டமாக்கும் அளவுக்கு கொதிப்படைந்த பின்னர் உயர் மட்டம் விழித் தெழுந்தது. தொடராக வந்து கொண்டிருக்கும் காவல்நிலைய சம்பவங்களை யடுத்து ஏற்கனவே காவல்த் துறையின் பிம்பம் சிதைவுற்றிருந்ததால் பெரும் எடுப்பில் மக்கள் தெடர்பு நிகழ்ச்சி தடல்புடலாகப் பாய் விரிக்கப் பட்டது. இந்த விஷயத்தில் முதன் மந்திரிகூட அமைதியேற்படுத்த தலையிட நேர்ந்தது என நினைக்கிறேன். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வைத்தியசாலைக் கட்டிலுடன் பிணைக்கப் பட்ட கணவனின் படம் பிரசுரமாயிற்று என்றால் குரூரமான முட்டாள்தனத்தின் எல்லை இதுதான் என்று பட்டது. NGO களின் வற்புறுத்தலும் மக்கள் அழுத்தமும் சேர்ந்தபின் விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியாது ஆனால் ஒரு ஊகத்தில் கமிஷன், காவல் துறையின் விளக்கத்துடன் ஓத்துப் போகக்கூடிய பரிந்துரை வழங்கியிருக்கும் என நம்பலாம். எது எப்படியாயினும் இதில் நாற்றமடிக்கும் விஷயம் தலைநகரில் ஒரு பெண், அற்ப குற்றச்சாட்டின் பேரில் அதுவும் நேரடியாக ஈடுபடாத ஒரு விஷயத்திற்காக, நள்ளிரவு காவல் நிலையத்துக்கு இழுத்து வரப்பட்டதுதான். இது விதிவிலக்கான சம்பவமாகத் தெரியவில்லை.

புனிதமானது எனக் கூச்சலிடுவதால் மட்டும் ஒரு விஷயம் புனிதமாகிவிடாது. தேசீயமும் இதற்கு விலக்கல்ல. இவற்றிற்கு நடை முறைகளினால் அர்த்தம் தீட்டப் பட வேண்டும்.

முகமற்றவர்களின் அடையாளத் தேவை

நிர்வாக யந்திரங்களுடனான இவ்வகையான சந்திப்புக்களின் பொழுது, பாதிக்கப் பட்டவர்களின் அபயக் குரலுக்கு முதலில் பதிலளிப்பது சம்பந்தப் பட்டவர்களின் சாதி அமைப்புக்கள், நகரத்திலாயின் குடியிருப்பிலுள்ள ஏதாவது ரசிகர் மன்றங்களாயிருக்கும். சாதியின் சமுதாய முக்கியத்துவங்கள் கடமைகள் எனபன, தேர்த்தல் முறைகளால் மட்டுமின்றி இப்படியான சம்பவங்களாலும் மறுசெய்கைக்கு (re defined) ஆளாகின்றன. தங்கள் பிரச்சனைகளுக்கு எவ் வகையான பரிவான (responsive) முடிவுகளையும் அரச யந்திரங்களிடம் எளிமையான முறைகளால் பெற முடியாமை கவனிக்கப் பட வேண்டிய விஷயம். இந்த விஷயமே அடிமட்ட குழுக்களை உருவாக்கி பராமரித்து வருவதற்கு ஊட்டமளிக்கும் உந்து சக்தியாகும். சுலபமாக நேருக்கு நேர் அணுகக்கூடிய குழுக்கள், – இவை சாதி அமைப்பாகவோ அன்றி ரசிகர் மன்றங்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் – தேவைப் படுகின்றன. இவை எங்கள் பார்வையில் எப்படி அபபத்தமாகப் படுகின்றன என்பது முக்கியமல்ல. இந்த குழு அடையாளம் ஒரு அந்நியமான, நட்ப்பற்ற உலகை சந்திப்பதற்கும் அதனுடன் காரியங்கள் ஆற்றுவதற்கும் தேவையான அசட்டுத் தைரியத்தையாவது அளிப்பதாக அவர்கள் நினைக்கலாம். முகமற்ற மனிதர்களுக்கு இது தேவைப் படுகிறது. கவனித்துப் பார்த்தால் எங்கள் ஒவ்வொருவருக்கும்கூட இப்படியான ஏதோ முகமூடிகள் தேவைப் பட்டுக் கொண்டு தானிருக்கிறது. எங்கள் முகமூடிகள் மிகவும் ஒயிலேற்றம் பெற்று சமூக ஒப்புதல், மற்றும் (திரைப்) பாடல் பெற்றவை அவ்வளவுதான்.

தங்கள் அபிமானத்துக்குரிய தலைவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்காக தீக்குளித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளை அவதானித்தால் இந்த பிம்பங்களில் இவர்கள் ஏற்றி வைத்திருக்கும் ஏராளமான முதலீடுகள் நம்பிக்கைகள் புலப்படுகின்றன.

முடிவுரை

நாம் உருப்படமாட்டோம் என நிறுவ நீண்ட கட்டுரை தேவையில்லை.

புதிய சைபர் ஊடகங்கள் – கொஞ்சம் சமூக உணர்வு கொண்ட பலரின் கைகளுக்கு எட்டும் துாரத்தில்தான். எங்களுடைய அழுத்தங்களுக்கு தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மை இவற்றிற்கு உண்டு. இக் கட்டுரை இதற்கு ஒரு சிறிய உதாரணம். சைபர் ஊடகங்கள் இல்லாத காலத்தில் இப்படியான கட்டுரையை நானோ என்னைப் போன்றவர்களோ எழுதியிருக்க வாய்ப்புக் குறைவு. எழுதியபின் இவற்றை வெளியிட காவித்திரிதல் வேண்டும். மேலும் உண்மை, IndiaMediareview போன்ற குழுக்கள் ஊடகங்களின் திரித்துக்கூறும் போக்குகளை எடுத்துக் காட்ட ஏற்பட்டிருக்கின்றன. இது போன்று தன்னார்வக் குழுக்கள் பல நிலை பெற்று இயங்குகின்றன.

இந்தச் சாதனங்களை எப்படிப் பயன் படுத்தப் போகின்றோம் என்பதே கேள்வி. ஒரு இசைவான இணக்கமான ஆனால் ஆணித்தரமான விவாதம் எப்படி அமையவேண்டும் ? ஏனெனில் இப்படியான அமைப்பு ஒன்றே உருப்படியாக எதையும் வெளியேற்ற முடியும்.

இங்கு குறிப்பிடப் பட்ட சமுதாய உளப்பாங்குகள் மற்றும் உதாரணங்கள் புற நடையானவைகள் (Exceptions) என்று நான் கருதவில்லை. சமூகவியலைப் பற்றிக் கூறும் பொழுது சராசரி நிலையைப் பிரதிபலிப்பதாக கருதப் படுபவையே கூறுதல் வேண்டும் என்பது வரையறை. ஆனால் எல்லாவற்றிற்குமே புறநடைகள் உண்டு. இந்த வரையறைகளை மீறி கட்டுரையில் தவறான புரிதல்கள் எளிமைப் படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் இவற்றை அடையாளங் காண்பதற்கு ஒரு கட்டுரை போதாது என்பதுடன் அத் தகைய முயற்ச்சி பலரின் கருத்துக்கள் பெற வேண்டிய ஒரு ஆராய்ச்சியாகிவிடுகிறது. இந்த வகையில் கட்டுரைக்கு ஒரு பயன்பாடு இருக்கலாம்.

‘உங்கள் கருத்துப் ‘ பகுதியில் கட்டுரை பற்றி அதிகம் உடன்பாடோ அன்றி எதிர் வினைகளோ இல்லை. ஒரு நாவல் விமர்சனம் ஏற்படுத்தும் பரபரப்பு மற்றைய விஷயங்களுக்கு பொதுவாகவே இல்லை என்ற யாரையும் (என்னையும்தான்) பாதிக்காத விளக்கத்தை நம்பிக்கொண்டு, இந்த இடத்தில் ஓங்கி ஆணியடித்துக் கட்டுரையை நிற்பாட்டுகிறேன்.

நன்றிக் கடன்

1. முதற்கண் இந்த கட்டுரையை விவாதித்து கட்டாயம் எழுத வேண்டும் என அருட்டியவர்கள் இருவர் கு.ஞானபாரதி அவரின் நண்பர் India Together (NGO) http://www.indiatogether.org/ அமைப்பாளர் (சுப்பு) வின்சென்ட் சுப்பரமணியம் ஆகியேருக்கு.

2. கருத்துப் பரிமாறல்களுக்கு வலை வசதி ஏற்படுத்திய http://www.tamil.net/ பாலாப்பிள்ளைக்கும், கானல் ஆசிரியர் சாத்தான் குளம் ஆசிப் மீரானுக்கும் (அமீரகம்).

(முற்றும்)

Series Navigation

சி குமாரபாரதி

சி குமாரபாரதி

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை 2

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

சி குமாரபாரதி


சென்ற இதழ் தொடர்ச்சி..

நம்பகமற்ற தன்மை (Credibility Gap)

சான்றோர்கள் தலைவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் அவர்கள் யல்பாக வாழ்க்கையில் இயங்கும் முறைக்கும் உள்ள இடைவெளிகள் பெரிதாகி இறுதியில் யார் சொல்வதையும் எழுதுவதையும் நம்பிக்கையின்றிச் ‘சும்மா ஒரு பேச்சுக்கு ‘ என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அரசியலில் மட்டுமென்பதில்லை சமயம் கலை போன்ற எல்லாப் பொதுத் துறைகளுக்கும் இது பொருந்தும். எவருடைய ‘உயர் ‘ சிந்தனைகளையும் ஒரு சிறங்கை உப்புடனே பார்க்க வேண்டியுள்ளது. எதிலும் நம்பகமற்ற தன்மையை உற்சாகமற்ற நிலையை இது ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு மொழி பற்றியகூற்று மட்டுமல்ல. பொதுச் சமூகச் சிந்தனையோட்டத்தில் வாழ்வியலில் ஏற்பட்டு வரும் தேக்கம் எனலாம்.

இன்று அரச நிர்வாகத்தில் பாவனையிலுள்ள சொற்பிரயோகங்கள் காலனிச காலத்தையதும் அதற்கு முந்திய காலத்தையதுமாகும். ஆட்சிப் பாங்குகளாலும் (Style of governance), திரும்பத் திரும்ப நடைபெறும் பேரணி மகாநாடு போன்ற கட்சி சடங்குகளாலும், அத்துடன் தலைவர்கள் தொண்டர்களுடைய பொது நடத்தைகளாலும், ஒட்டு மொத்தமாக, இச் சொற்களுக்கு ஒரு நிலையான அர்த்தம் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த பொருள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு கெட்டி பட்ட நில பிரபுத்வ சமுதாய முறைகளையே (feudal) உறுதிப் படுத்து கின்றன. மக்களும் நிர்வாக யந்திரமும் நாளாந்த வாழ்கையில் ஏற்படும் அறைகூவல்களை ஓரளவாவது சரிவரச் சந்தித்திருந்தால் பொது நிர்வாகம், முகாமைகளுக்கு தேவையான மொழிப் பிரயோகம் இதுவரை ஏற்பாடாகியிருக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கும் சில நிர்வாக வழி முறைகள் பரவலாகத் தெரிந்திருக்கும். தெய்வீகத் தன்மையற்ற வேறு பல மொழிகள், பொது நிர்வாக முறைகளை சிக்கலில்லாமல் கூறுவதில் இன்று திறன் பெற்று விட்டன.

சிலகாலத்திற்கு முன் பழைய பத்திரிகைகள் (1950) பார்த்தேன் அவற்றிலிருந்து ஊகித்தவைதான் நான் கூறிவரும் மதிப்பீடுகளின் பிறழ்ச்சி.

ஒரு காலத்தில் சமூக உற்சாகம் இருந்தது

சமூக உற்சாகம் என்பது பரவலாக எல்லோருடைய வாழ்விலும் சுபீட்சம் ஏற்படும் என்ற பொது நம்பிக்கையில் எழுவது. இத்தகைய ஒரு தார்மீக உற்சாகம் சுதந்திரம் அடைந்த அண்மைக்காலங்களில் ஒரு புதிய வாழ்வு நாட்டுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையாக பரவியிருந்தது. பிரத்தியேகமாக அன்றி பொதுவாக எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழியுண்டு என்பதில் ஏற்பட்ட குதுாகலம். தெருவில் சந்திப்பவர்கள்கூட கூச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய பொதுக் குதுாகலம் து. இந்த மாதிரியான உற்சாகம்தான் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலுள்ள சக்தியாக – synergy மிளிர முடியும். பலர் மனமொத்துக் கூடும் பொழுது ஏற்படும் மிகுதியான ஆற்றலைத்தான் synergy – ஒருங்கிணையும் சக்தி என்று வைத்துக் கொள்வோம்.

வெளிப்படையான நிர்வாகம் என்ற நம்பிக்கை

அக்கால தலைவர்களின் பேச்சுகளுக்கும் அவர்களின் வெளிப் படையாகத் தெரிந்த நடத்தைகள் செயல்களுக்கிடையில் ஒரு இசைவு இருந்ததாக மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை மக்கள் சக்திகளை ஒருங்கிணைக்கும் ஆற்றலாக தோன்றியது. உலகப் பெரும் போருக்குப் பின்னர் தத்தமது பெரும் இழப்புகளை கணிக்கிலெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் உலகம்கூட, விடுதலையடைந்த இந்தியாவிடமிருந்து ஒரு புதுமையான வழிகாட்டலை எதிர்பார்த்தது போலிருக்கிறது. இது வரை உலகம் கண்டிராத வகையில், ஆன்மீக பெறுமானங்களை முன்னிலை படுத்தும் ஒரு அரசு ஏற்படுவதாகவே பல மேன்னாட்டு அறிஞர்கள் நம்பினார்கள்.

இந்நிலை ஒரு கனவுபோல் சில ஆண்டுகளிலேயே கலைந்துவிட்டது மட்டுமல்ல இந்தியா என்பது எல்லா மட்டங்களிலும் ஊழல் வேரோடிய நாடு சாதி சமயச் சளக்குகளுடன் திணறும் நாடு என்ற பிம்பத்தையும் இன்று பெற்றுவிட்டது . உள் நாட்டு மட்டத்திலோ சரி உலக மட்டத்திலோ சரி இந்தியாவிடமிருந்து புதிய திசைகள் வரும் என்ற எதிர்பார்ப்புக்கள் மங்கத்தெடங்கி பல காலம் ஆகிவிட்டது.

நம்பிக்கை வரட்சி

ஒரு காலத்தில் பாரத அரசு அமைத்துக் கொண்டிருந்த உருக்காலைகள்,மின்திட்டங்கள், கால்வாய்கள் ஆகிய பாரிய திட்டங்கள் மக்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தின. தாகூர் பாரதி ஆகியோரின் இந்தியக் கனவுகளுக்கும் அவர்களின் எழுச்சிப் பாடல்களுக்கும், ஒரு நடைமுறை விளக்கமாகவே இப் பெரும் திட்டங்கள் விரிந்தன என்பதில் பலருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை அன்று ருந்தது. இன்று பாரதி பாடல்களை பொது மேடைகளில் பாடுவது ஒரு வெற்றுச் சம்பிரதாயமாகவே ‘ஒரு பேச்சுக்காக ‘ எடுத்தாள்வதாக ஏற்பட்டு விட்டது. அக்காலத்தைய பொருள் பொதிந்த எதிரோலிகளை இப்பாடல்கள் மக்களிடமிருந்து மீட்கமுடியாமல் போய்விட்டது என்பதுடன் எந்த எழுச்சிப் பாடல்களும் ‘சும்மா ஒரு இதுக்காக ‘ என எடுத்துக் கொள்ளப் படுகின்றன. மலினப் படுத்தலால் இந்த ஒரு உற்சாக ஊற்றும் வற்றி விட்டது. ஓருங்கிணையும் மக்கள் சக்தி synergy இன்று துணுக்குதனமாகத் துண்டாடப் பட்டுவிட்டது என்பது எனது எண்ணம். இந்த ஒருங்கிணையும் சக்தி இன்றி எந்தச் சமுதாயமாவது முன்னேறுவது வில்லங்கமான காரியம்.

மதிப்பீட்டு மாற்றங்களின் களம்

இன்று நாம் முகம் கொடுக்கும் சமுதாய அரசியல் அறைகூவல்கள் பொது வாழ்வில் ஊழல்கள் போன்றவை மலைக்க வைக்கும் தன்மையுடையவை. இவற்றைப்பற்றி கொஞ்சம் ஊன்றி சிந்தித்தவுடனேயே ‘எங்களால் எதுவுமே செய்ய முடியாது ‘ என்ற மாலய மனச்சுவரே சாதாரண மனிதர்களாகிய எங்களை எதிர் கொள்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வைபற்றிச் சிந்திப்பதே வேதனைக்குரியதாகி ‘எப்படியாவது போகட்டும் எங்கள் அலுவலைப் பார்ப்போம் ‘ என்றாகிவிடுகிறது. உச்சமான போட்டி மனப்பான்மையும் புரையோடிய ஊழல்களும் நிறைந்த உலகில் பிள்ளைகள் எப்படித்தான் தலையெடுக்கப் போகிறார்கள் என்ற ஆற்றாமையே வேதனையாகிறது. பிரமாண்டமான நிர்வாக யந்திரத்தின் கீழ் உருட்டப் படுவது தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்ய இயலாது என்ற விஷயம் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது. தன் பக்க விளைவுகள் உடனடியாகப் புலனாவது இல்லை. என்றாலும் மக்கள் பல விகாரங்களுக்கு ஆட்படுகிறார்கள் என ஊகிக்கலாம். மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என முன்னர் குறிப்பிட்டது இவற்றை எண்ணித்தான். உக்கிரமமான முறையில் தனிப்பட்ட பாதுகாப்பு தேடுதல், பிள்ளைகளுக்காக வெளி நாடு செல்லுதல், நுகர்வோர் கலாச்சாரத்தில் தன்னை மறத்தல், சாதிக் குழுக்களில் ஈடுபட்டு அரச யந்திரத்திடம் சலுகைகள் கறக்க முடியுமா என முயற்சித்தல் போன்ற நடவடிக்கைகளால் தமது நியாயமான வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். இந்த மனப்போக்கு சிறிய விஷயமாகத் தோற்றமளித்தாலும் இது ஒரு ஆழமாக ஊன்றப்பட்ட மனத்தடை அல்லது நம்பிக்கை முறிவு என்றே கருத வேண்டியுள்ளது. பல காலமாக நடைபெற்று வரும் அக/புற முரண்பாடுகளின் விளைவாக சமுதாய நோக்கு பரவலாகக் குறைந்து விடுகிறது.

எதுவுமே செய்வதற்கில்லை

‘ நாங்கள் கொல்கிறோம் எப்பொழுதெனில் வறுமை, சீரழிவுகள், மானபங்கங்கள் ஆகியவற்றைப் பார்த்துக் கண்ணை மூடும் பொழுது. நாங்கள் கொல்கிறோம் எப்பொழுதெனில், சங்கற்பத்துடன் துணிந்து எதிர்க்துப் போராட வேண்டியதை விடுத்து, சுலபமான வழி என்பதற்காக உழுத்துப்போன சமூக, அரசியல், கல்வி, சமய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அல்லது துாண்டுதல் அளிக்கும் பொழுது. ‘ ஹேர்மன் ஹெஸ்

படித்த மக்கள் வேண்டுமென்றே இப்படி சமுதாய நோக்கம் அற்றவர்களாக மாறுவதோ அன்றி சாதி அமைப்புகளில் சேர்வதோ இல்லை – அதாவது தலைவர்களைத் தவிர. பிரச்சனைகள் மிகப் பெரிதாகத் தெரியும் பொழுது வாழ்வில் பல விஷயங்களுக்கு உள்ளார்ந்த அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. இப்படி எங்களைப் போலவே பலரும் உணருகிறார்கள் என்பது மனத்தடை ஏற்படும் அக் கணங்களில் எமது சிந்தனைக்கு புலனாவவதில்லை. இப்படியான பலரிடம் தொடர்பு ஏற்படுத்தி மேற் கொண்டு ஏதாவது செய்ய முடியுமா எனப் பார்ப்பது ஒரு மாற்று வழியாகத் தோன்றுவதில்லை. உண்மையிலேயே பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையாகக் கூட இருக்கலாம்தான் ஆனால் இது பற்றி திட்ட வட்டமாக கூற முடியாத பொழுது உத்தேசமான நம்பிக்கையைவிட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. இப்படியான ஒரு நிலையில் இது பற்றிய சமூக கருத்துப் பரிமாறல்களாவன ஏதோ சதித்திட்டம் போல் என்றில்லாமல் பகிரங்க உரையாடல்களாக வெளிப் பட வேண்டும்.

படித்தவர்களின் கையறு நிலை

இந்த கையறு நிலைக்கு படித்தவர்கள் அங்குலம் அங்குலமாக நகர்த்தப்பட்டார்கள். அரச அமைப்புகளில் ‘நாமும் பங்குதாரார் ‘ என்ற பழைய சுதந்திர கால உணர்வு காலம் செல்லச் செல்ல அரசியல் ஆட்சிபாங்கினால் மாற்றப்பட்டு ‘நாம் வெறும் சாட்சிதான் ‘ என்றாகியது. ஒரு காலத்தில் மேல் படிப்புக்கு வெளிநாடு சென்று மீண்ட இளைஞர்கள் ‘நவீன இந்தியா சமைப்போம் ‘ என்ற லட்சியங்களுடன் இங்கு வேலை செய்ய முனைந்தார்கள். இது அக்காலத்தில் இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்ற லட்சியச் சுலோகம். ஆனால், நிர்வாக யந்திரத்தின் மேம் போக்கு அரசியல் குறிக்கீடுகள் தாளாமல் பலரும் விரைவில் விரக்தியடைந்து திரும்பவும் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். இந்த லட்சிய கனவுகள் பல காலம் நீடிக்கவில்லை. இறுதியில் படித்தவர்கள் சொல்வதை செய்பவர்களாகவும் வெறும் பார்வையாளர்களாகவும் தங்களுக்கு இதில் தலையிட உரிமையில்லை என்பதாக நம்பும்படி பதனிடப் பட்டார்கள். இப்படியாக படிப்படியாக சமுதாய வாழ்விலிருந்து அந்நியப் படுத்தப் பட்டார்கள். ஆனால் இதுவெல்லாம் படித்தவர்களின் அனுசரணையுடனோ அல்லது குறைந்தபட்சம் அவர்கள் மெளன ஆமோதித்தல் இன்றியோ நடைபெற்றிருக்க முடியாது என்பது ஒரு நியாயமான கருத்து என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு அசுரத்தனமான நிர்வாக யந்திரம் சுழலும் பொழுது தன் சடத்துவத்தால் (Intertia) எல்லோரையும் தன் வழியில் இழுத்துச் செல்வதன் தவிர்க்க முடியாமையை விளங்கிக் கொள்ளவே வேண்டும்.

மூடிமறைக்கும் நிர்வாகம் என்ற எண்ணம்

ஆட்சிப் பாங்குகள் வெளியரங்கிலிருந்து படிப்படியாக திரைமறைவுக்கு நகர்ந்தன. பல புதிய ‘தேசீயப் பத்திரிகைகள் ‘ தோன்றிய பின்னர்தான் இது நடந்திருக்கிறது என்பது நகைப்புக் குரியது. மக்களோ ‘முந்தைய ஊழல்கள் இப்பொழுதுதான் வெளி வருகிறது. இப்போ நடக்கும் ஊழல்கள் இனிமேல்தான் அம்பலமாகும் ‘ என நினைக்கும் நம்பிக்கையற்ற மெளன பார்வையாளர்கள். ஊழலில் சம்பந்தப் பட்டதாக உறுதிப் படுத்தப் பட்டவர்கள், எவ்வித வருத்தம் கூட தெரிவிக்காமல், ஊடகங்களின் வெளிப் படையான பக்க பலத்துடன், வெற்றிகரமாக மீண்டும் அரசியலில் பவனி வருவகிறார்கள். இதைப் பார்த்த பின்னரும், ஊழல் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து கெட்டித்தனமான கதை கட்டுரைகளால் இந்த ஆழமான பொது நம்பிக்கை முறிவை மாற்றுவது சாத்தியமல்ல.

பாசறைகளின் (The Nexus) பெரு வேட்கைகளுக்கு அவிர்

‘இந்த நாடும் அதன் நிறுவனங்களும் இங்கு உறையும் மக்களுக்கே சொந்தம். அவர்களுக்கு ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்துடன் அதிருப்தி ஏற்பட்டால், தங்கள் குடியுரிமையை பிரயோகித்து அதை மாற்றவோ, அன்றி தங்கள் புரட்சி செய்யும் உரிமையை பிரயோகித்து அதை கண்டதுண்டமாக்கவோ அல்லது முற்றாகத் துாக்கி வீசவோ உரிமையுண்டு ‘ ஏபிரகாம் லிங்கன்

50 வருடங்களாக ஊடகங்கள் – அரசியல் முகாமை – உயர் நிலை நிர்வாக யந்திரம் ஆகியவை ஒருவர் நலனை மற்றவர் பார்த்துக்கொள்ளும் நிறுவனங்களாக ஒருங்கிணைந்துவிட்டன (Nexus). ஒரு நல்ல நிர்வாகத்தை கொண்டு செல்லத் தேவையான நியாயமான ஒத்துழைப்பு என்ற கோட்பாட்டை கடந்த இறுக்கமான உறவு இது. இத்துடன் பெரிய வியாபார நிறுவனங்களும் சினிமாவும் கறுப்புச் சந்தைகளும் இவற்றுடன் நிறுவனரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட நேச உறவுகளை கமுக்கமாக ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இப்படியான தக்க மற்றும் தகாத உறவுகள் மூலம் பெரும் ஆளணிகள் பணபலங்கள் அவரவர் பாசறைகளுக்கு வந்து சேரும் பொழுது, அங்கு எழும் வேட்கைகளை தணிக்க, பெரும் உந்து விசைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த வேட்கைத் தணிப்பை முன்னின்று நடத்தவே உயர் நிர்வாகத்திற்கு நேரம் சரியாகி விடுகிறது. மாறும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப, தங்கள் விசுவாசங்களை மாற்றும் இந்தப் பாசறைகளுக்கிடையே பலத்த இழுவைகளும் தள்ளல்களும். பாசறைகளுக்கு வெளியேயுள்ள மக்களை அலட்சியப் படுத்தும் போக்குகள் நிர்வாகத்தில் இன்று ஒரு கலாச்சாரமாகவே உருவாகியது தற்செயல் நிகழ்வல்ல. இவர்களுக்கு அவர்கள் சலுகை அவர்களுக்கு இவர்கள் சலுகை என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இறுக்கமான உறவு.

கலாச்சாரம் என்பது..

‘கலாச்சாரம் ‘ என்று ஊடகங்கள் குறிப்பிடும் பொழுது பரதம், சங்கீதம், நாவல் சினிமா போன்றவற்றையே எப்பொழுதுமே சுட்டுவதனால் மக்கள் மனதிலும் அப்படியான எண்ணம் ஊன்றப் பட்டுவிட்டது. நுண்கலைகளைப் பற்றியே ஊடக உரையாடல்கள் அழுத்தம் கொடுக்கின்றன. கல்கி தொடக்கம் இன்று வரை ‘மேலான லக்கியச் சங்கீத ‘ விஷயங்களுக்கு மிக உயர்ந்த நிலை அளித்து ஒரு வகை எதிர்பார்ப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தியாயிற்று. சாதாரண நாளாந்த வாழ்க்கை என்பது நிதானித்துப் பார்க்கத் தேவையற்ற போர் அடிக்கும் விஷயம் என்பது இந்த தொனியில் உள்ள மறை பொருள். இதை நாங்களும் நம்புகிறோம்.(மிகவும் உறுதியான வாசக உறவுகளை ஏற்படுத்திய ‘ஜாம்பவான்கள் ‘ பின் விளைவுகளை பற்றிச் சிந்தித்தார்களா தெரியவில்லை. இடிச்ச புளிகளை உருவாக்கும் யந்திரத்திற்கு வித்திட்ட பெருமை இவர்களையே சாரும். முடிந்தவரை இவர்கள் நல்ல மேய்பான்களாகவே இருந்திருக்கிறார்கள்.ஆமென்) பாருங்கள், எங்கள் பிரச்சனைகளை ஆராயும் ஆற்றல்கூட இந்த மொழி பிரயோகத்தின் விளைவாக எங்களிடமிருந்து எடுக்கப் பட்டுவிட்டது. உண்மையில் மனித உறவுகள், மனிதனுக்கும் அரச நிறுவனங்களுக்கும், மனிதனுக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவுகள் ஆகியவையே உயர்ந்த நிலையிலுள்ள கலாச்சாரம். ஏனெனில் நாளாந்த வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் விஷயம் இது. உண்மையில் இந்த உறவுகள் என்பனவே எங்கள் வாழ்க்கையாகிறது. நுண்கலைகளைப் பற்றிய சர்ச்சைகள் வெறும் நிழல்கள், திசை திருப்பல்கள். இந்த முக்கியத்துவங்களை மறு ஒழுங்கு செய்யாமல் ஏதாவது மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. கவனக் குவிதல் (Focus of attention) இன்றி எந்தப் பிரச்சனைகளும் தீர்வாகா.

அரச நிறுவனங்களுக்கும் மக்களுக்குமிடையில் நடைபெறும் கொடுக்கல் வாங்கல் அது தொடர்பாக இரு பகுதியினரின் அணுகு முறைகள், இச் சந்தர்ப்பத்தில் இரு சாராரின் நடத்தைகள் ஆகியவைதான் இன்றைய நிலையில் தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறாகிறது. இக்கலாச்சாரத்தின் அர்த்தம் பரவலான மக்களால் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. Shared meaning. இது வாழ்வின் முக்கிய பகுதியில் அரங்கேறி, அடையாளம் காணக்கூடிய, நடத்தைக் கோலங்கள். Behaviour pattern.(வெள்ளைக் காரின் உச்சியில் சிவப்பு விளக்குடன் ஜனவாச ஊர்வலம், நீளும் Q வரிசைகள் இத்தியாதி). மேலும் உத்தேசமாகக் கூறப் போனால். ஒரு முக்கிய அரச நிறுனத்திற்கு ஒருவர் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். முதல் நாளே இது பற்றி மனம் அலம்பத் தொடங்குகிறது. விதி குறித்த நாளில் மனத்தில் இருள் கவிய, விக்கினங்களை விலக்குபவரை வாலாயம் பண்ணி, இவ் விஷயங்களில் கை தேர்ந்தவராக நம்பப்படும் ஒரு – நண்பரின் நண்பரைச் சாய்த்து ஓட்டிக் கொண்டு கொண்டு ஆபீஸ் நோக்கி நடையைக் கட்டுகிறார். இதே சடங்கை இன்னும் பல முறை செய்ய வேண்டியேற்படும் என்றும் அவர் அறிவதுதான் மேலும் உபாதைதரும் சங்கதி.

படித்த நடுத்தர வர்க்கம் ஆளுபவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் மக்களைகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு இடைத்தர படை- Intermediate Layer. மக்களை அலட்சியப்படுத்தும் நிர்வாகக் கலாச்சாரம் படித்த மக்களின் ஒருவித அங்கீகாரம் அல்லது அலட்சியம் இன்றி லகுவில் நிலைத்து நிற்கவே முடியாது. அதாவது படித்தவர்களின் மனப்போக்கு இந்த ஏற்பாட்டிற்கு உறுதுணை. இது எப்படி நடை பெறுகிறது என்பதை கொஞ்சம் நோக்க வேண்டும்.

ஒரு மாதிரியான மந்த குணம்

படித்த வகுப்பினரின் சடத்துவம் அசண்டை போக்குகள் கொஞ்சம் வெளியில் வந்து பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது ஆனால் வழமை போல ப்படியான விஷயங்களில் இப் போக்குகள் வர்களுக்குத் தெரிவதில்லை. எங்கள் சொந்த வாழ்க்கையைக் கொண்டிழுப்பதைத் தவிர, சமூகம் பற்றிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுப் போயிற்று என்று சொல்லலாம். இதுதான் உண்மை நிலையும் கூட. 50 வருடங்களாக அரக்கப் பரக்க வேலை பார்த்ததில் ந்த நிலை ன்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. பல வருடங்களாக எதிர்ப்பில்லாமல் அசுர யந்திரத்துடன் செய்து வரப் பட்ட சமரசம் வற்றை மறுமொழிகளற்ற கேள்விகளாக்கி விட்டது. நாளாந்த வாழ்கை பிரச்சகைள் அப்படி. பிள்ளைகளின் படிப்பு வேலைகள் இத்தியாதி. ஒரு கடவுச் சீட்டுப் பெறுவது பிறப்புச் சான்றிதழ் பெறுவது போன்ற மாமூல் வேலைகளே சலுகைகளாக உயர்ந்துவிட்ட பொழுது, பள்ளி உயர் கல்விச் சீட்டு, பிள்ளைகளுக்கு தொழில் போன்ற பாரிய பிரச்சனைகள் பிரமாண்டமான தடைச் சுவர்களாகத் தெரிவது யல்பு. இதற்கு மேல் சமூப் பிரச்சனைகளை உள்வாங்கச் சக்தி எங்கிருந்து வரமுடியும்.

நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய நாம் ஒருவருக் கொருவரே தொல்லைகளை அதிகரிக்கிறோம் என்பது கவனிக்கக் கூடிய ஒன்று. மற்றது நாங்கள் எங்கள் கனவுகளில் லயித்த படி நல்லீஸ் தங்க மாளிகைப் படிகள் தடையின்றி ஏறியிறங்கிக் கொண்டிருக்க அரசியல் வாதிகள் நம் உரிமைகளைக் காக்கும் மனு நீதிச் சோழர்களாக ருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நியாயமாகாது. ‘ஏன் இப்படியான படங்கள் எங்கள் மேல் திணிக்கப் பட வேண்டும் ‘ ‘ ஏன் மந்திரி விஜயத்திற்கு இத்தனை தடல் புடல் ‘ ‘ ஏன் சஞ்சிகைகள் இவ்வளவு மட்டமாயிருக்கின்றன ‘ போன்ற கேள்விகளை சமூக அமைப்புக்கள் பொது அரங்கில் உலவ விடவேண்டும், இவற்றிற்கு பலன் இருக்கிறதோ இல்லையோ வேறு விஷயம்.

ஆட்சிப் பாங்குகள்

இந்த இடத்தில் கோடிட்டு சொல்ல வேண்டியது ஒன்றுள்ளது. ஊடகங்களும் அவற்றை நம்பும் படித்தவர்களும் எப்படி நாட்டின் ஆட்சிப் போக்கை நிர்ணயிக்க நுணுக்கமாகத் துணைபோகிறார்கள் என்பதுதான். இந்த விஷயத்தைக்கூட அதன் முழுப்பரிமாணத்தில் நாங்கள் உணர்வதில்லை. படிக்காதவர்களின் வாக்கு வங்கி அரசியல் தலைமையை மட்டுமே தீர்மானிக்கலாம் ஆனால் அதன் பின்பு நடைபெறும் அரசியல் பாங்கு (style of governance) நிர்வாக முறைமை (Norms) ஆகியவற்றை நடுத்தர மக்களின் மனப்போக்கு சகிப்புத்தன்மை ஊடகங்களினது போக்கு ஆகியவையே பெரும்பாலும் தீர்மானிக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சில குறைந்த பட்ச முறைமைகள் அரசியல் பாங்குகள் பொது நடத்தைகளில் சில வரம்புகள் என வகுத்து இவற்றை மீறுவது தடைசெய்யப்பட்ட செயல் (Taboo) என்ற நடத்தைக் கோட்பாடு (செய்யா மரபு – தொல்) ஆழமாக நிறுவப்படவில்லை. இதை சந்தர்ப்பத்துடன் பொருத்தி விளக்க ஒரு உதாரணம் கூறுகிறேன். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுவது எனது நோக்கம் அல்ல.

பொது நடத்தைகளுக்கு செய்யா மரபுகள் Taboo

ஒரு உதாரணத்திற்கு கூறுவதாயின் அண்மையில் நியூசீலாந்து நாட்டு அமைச்சர் ஒருவர் மது போதையில் காரோடும் பொழுது எதேச்சையாக சாதாரண பொலிசரால் நிறுத்தப் பட்டார். அடுத்த நாள் அமைச்சர் பதவி விலக வேண்டியேற்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னால் அசைக்க முடியாத நடத்தைக் கோட்பாடு இயங்கியது. இன்னொரு உதாரணம். மூன்றாண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் ஒரு பாடசாலை விழாவில் பள்ளிகளில் ‘கிருஸ்தவ தார்மீக மதிப்பீடுகளை உள்ளடக்கிய கல்வியை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் ‘ என்று குறிப்பிட்டதற்கு சமயத்தையும் கல்வியையும் கலந்து குழறுபடி செய்கிறார் என்ற கடுமையான கட்சி சார்பற்ற விமர்சனம் எழுந்தது. அவரும் பின் வாங்க நேர்ந்தது. ‘அரசும் சர்ச்சும் சமூகத்தின் வெவ்வேறு அங்கங்கள். அவை ஒன்றையொன்று கட்டுப்படுத்தலாகாது ‘ என்ற கோட்பாடு மிகுந்த பிரயாசத்துடன் உறுதிப்படுத்தப் பட்ட சங்கதி. எந்த நிலையிலும் இந்த அடிப்படை மாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை. இந்த அளவுக்கு வேண்டாம். சில குறைந்த பட்ச நடத்தை கோட்பாடுகளை நிலைநிறுத்தவே படித்தவர்கள் தவறி விட்டார்கள். செய்யா மரபு என்பது விலக்கப்பட்ட விஷயம் (Taboo). ப்படியாயின் இவை பாரபட்சம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அமுலாக்கும் பொழுது யாருக்கும் விதி விலக்கு அளிக்க முடியாது என்ற ஒரு கோட்பாட்டை எல்லோருமே பின்பற்றும் தன்மைக்கு உதராரணம் கூறினேன். வளர்ந்த நாடுகள் நீண்ட போராட்டங்களுக்குப் பின் அரசியல் பாரம்பரியத்தில் சில செய்யா மரபுகள் (taboos) சொல்லா மரபுகளை (political correctness) ஆழமாக நிலை நாட்டியுள்ளன. உதாரணமாக, குறிக்கப் பட்ட திட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீட்டில் சுமாராக 90% இலக்கைப் போய்ச் சேர முடிவது (மிகுதி 10% மட்டுமே லஞ்சம்) முக்கியமான ஒன்று. மற்றது முடிவுறாப் பாலங்கள்; இடிந்து விழும் பாடசாலைக் கட்டிடங்கள் ; அடிகல் நாட்டு விழாக்களில் விமரிசையாக நாட்டப் பட்டு பின் மறக்கப் பட்ட பாசி படர்ந்த கற்கள் ஆகியவை நாடு முழுவதும் இடிபாடுகளாக பரவியிருக்கும் நிலையை தவிர்க்க முடிவது இன்னொன்று. இப்படியான வரை முறைகளை நிறுவிய சமூகங்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவதை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. மறைந்து நிற்கும் பங்களிப்பை மறந்து விடுகிறோம். இப்படியான கோட்பாடுகள் இங்கு நிறுவ ஊடகங்களோ நாங்களோ முயற்சிக்கவில்லை.

(அடுத்த இதழில் முடியும்)

Series Navigation

சி குமாரபாரதி

சி குமாரபாரதி

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை -1

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue

சி குமாரபாரதி


‘எது நன்றாகப் பாடும் முறை ? என

குயில் அணியும் தவளை அணியினரும்

இன்னமும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன ‘

மின் அஞ்சல் வலைப் பக்கங்கள் ஆகியனவற்றின் மூலமாக சைபர் வெளிக் கலாச்சாரமானது சமூக ஊடாடலின் வீச்சை மிகவும் விரிவாக்கியிருக்கிறது. சைபர் ஊடகம், சமூக சீர்திருத்தங்களில் கரிசனமுடையவர்களுக்கு ஒரு இன்றியமையாத கருவியாகிறது. அரசு சாரா தன்னார்வ குழுக்களுக்கும் (NGO) தனிப்பட்டவர்களுக்கும் சைபர் ஊடகமானது அரச நிர்வாக யந்திரங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு நெம்புகோலாக அமையலாம். இதுகாறும் இவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத தொடர்பு சாதனமாக ‘காட்டு தந்தி ‘ முறைகளே வாய்த்திருந்தன. சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் பலவும், வளர்ச்சி பெற்ற கட்டத்தில், அரசியல், நிர்வாகம் மற்றும் பெரும் முதலாளிகளின் நலன்களுடன் நேரடியாக முரண்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தக் காரணங்களால் இக் குரல்கள் வெகுஜன ஊடகங்களால் மெதுவாக ஓரம் கட்டப் படுகின்றன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (IT) அளிக்கும் வசதிகளை சுலபமாகப் பயன்படுத்தும் இளையவர்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த விஷயம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுக்கள், தன்னார்வ சமூக குழுக்களுக்கு முன் அறியா அளவில் சக்தியைக் கையளித்திருக்கிறது. ஆனால் இந்நிலை இன்று ஒரு சாத்தியம் மட்டுமே. பொது நன்மைக்கு பயன் படுமாறு சைபர் ஊடகம் பரிணாமம் பெறுவது சாத்தியமா ? என்ற கேள்வி இந்த இடத்தில் இயல்பாகவே எழுகிறது. இது மெய்ப்பட முடியுமா என்பதை ஒரு கேள்வி நிலையில்தான் வைத்துக் கொள்ளவேண்டும். இது நடை பெறுவதற்கு முன்பாக பொதுவான மட்டத்தில் தமிழ் குழுமங்களில் இதற்கு இசைவாக சமூக நோக்கம் கொண்ட ஒரு சைபர்வெளி பாரம்பரியம் நடைமுறையில் ஏற்பட வேண்டும்.ஆனால் சைபர் முயற்சிகள் பெரும்பாலும் தமிழ் பத்திரிகை சினிமா ஊடகங்களின் விரிவாக்கமாகவே பரிணாமம் பெற்று வருகின்றன. இவற்றில் சில உறுதியான சமூக குறிக்கோள்களுடன் செயல் படுகின்றன். குறிப்பாக இத்தகைய முயற்ச்களை உன்னியே இக் கட்டுரை.

படித்தவர்கள் – புலம் பெயர்ந்தவர்களாயினும் சரி, தாய் நாட்டில் வாழ்பவர்களானாலும் சரி, ஓரளவு ‘தெளிவுடன் ‘ சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளில் நாட்டம் கொண்டிருக்க வேண்டுமா ? இல்லையா ? இவற்றைப் பற்றி ஒரு தெளிவுடன் சிந்திக்க வேண்டுமா ? மக்கள் பிரச்சனைகளின் அழுத்தங்களை ஓரளவேனும் எங்களால் உண்மையில் உணரக்கூடியதாக இருக்கிறதா ? இக் கேள்விகளுக்கு அனிச்சையான எழும் ‘ஆம் ‘ ‘இல்லை ‘ போன்ற பதில்களைத் தற்காலிகமாக ஒத்திப் போடுவோம். ‘சிந்தனைத் தெளிவு ‘ என்பதன் பொருள் கட்டுரை செல்லும் தன் போக்கில் விரியட்டும். ‘ தெளிவு ‘ இல்லாவிடின் இம்மாதியான உரையாடல்கள் ஒரு முடிவில்லா வட்டத்திற்குள் சுழன்று மடிகின்றன. பயனுள்ள உரையாடலுக்கு ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதுதான் இந்தத் ‘தெளிவு ‘.

சைபர் ஊடகங்களில் பல் வேறு சமூகப் பிரச்சனைகள் சூடாகவே அலசப் படுகின்றன. இதில் சாதி, சமயம், கார்கில், பொக்ரான் ஆகிய தலைப்புக்கள் குறிப்படத் தக்கவை. உரையாடல்கள் ஆழமாக நிலை கொள்ளும் முன்னரே உரக்கச் சத்தம் போடக் கூடியவர்களால் ஒவ்வொரு கூடாரங்களுக்கு இவை கடத்தப் படுகின்றன. பின்னர் இந்த இழை திசைமாறி எதையும் தெளிவு படுத்தாமல் அறுந்து விடுகிறது. படித்தவர்கள் மத்தியில் எந்தச் சமூகப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டாலும் மிகுந்த குழப்பமே தெரிகிறது. உண்மையில் எங்களில் பலருக்கும் உறைக்கும் மாதிரியான கூர்மையான சமூக உணர்வு கிடையாது. கட்டுரைகள் உரையாடல்களை தங்கள் மனப்பிடிப்புகளை வெளிப் படுத்தவும் கண்டது கேட்டதை சொந்தக் கருத்துப் போல் கூறுவதற்குமே பயன் படுத்துகிறார்கள். இப்படியான சந்தை இரைச்சல்கள் கரிசனமிக்க பல குழுக்களின் நம்பகத் தன்மையையே பாதிக்கிறது.

நான் சமூக அரசியல் அறிஞன் அல்ல. சமூகவியல் கட்டுமானங்களைப் – Sociological and Political disciplines – பாவித்து விமர்சித்தால் ஒரு வேளை இக்கட்டுரை மிகவும் எளிமையாக்கூடத் தெரியலாம். இந்த விஷங்களை செaல்லவேண்டிய முறையில் சொல்கிறேனோ என்றுகூடத் தெரியவில்லை ஆனால் அக்கறையுடன் கூறுகிறேன் என்ற நம்பிக்கையுண்டு. என்னுடைய புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதல்லாமல் இது ஆய்ந்து முடிந்த தகவல்களோ அன்றி உபதேசமோ அல்ல. இது அதிகப் பிரசங்கித்தனமாக்கூடத் தோன்றலாம் ஆனால் அவசியமான ஒரு எதிர் முனை (Counter point) என்று வைத்துக் கொண்டு தற்போதைக்கு கட்டுரையை முன்னெடுத்துச் செல்வோமா ? நான் சராசரி மனப்போக்கு கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் வெறும் பார்வையாளனாக இருப்பதுகூட மன அழுத்தங்களை ஏற்படுத்தித் திசை மாறவே செய்கிறது. மண்ணாங்கட்டியோ மலர்ச் செண்டோ வீசுவதற்கு முன் ஒரு வேண்டுகோள். இந்த நாணயத்திற்கு இரு பக்கங்களுண்டு. நான் இங்கு கூறுபவை ஒரு பக்கம், அத்துடன் என் இடத்தில் நீங்களிருந்து இந்த ஜன்னல் ஊடாக நோக்கினால் மாற்றாக வேறு என்ன சொல்வீர்கள் என்பது மற்றது.

உளப்பாங்குகளும் (அதனால்) உரையாடல் தடங்கல்களும்

தீபத்தின் கீழ்த்தான் இருள் கவிகிறது – பழமொழி

அரசியல் பொருளாதாரம் போன்ற சமுதாயப்பிரச்சனைகள் பற்றி கூறும் பொழுது இவற்றைக் வெளிக் கொண்டுவருவதிலுள்ள பின்னணிச் சிக்கல்களை எளிமையாக கூறவிரும்புகிறேன். சமுதாயப் பிரச்சனை என்பது வெறும் ‘சொற்களோ ‘, ‘சேவையோ ‘ அன்றிக் ‘கொள்கைகளோ ‘ மாத்திரம் அல்ல. இவை உயிர்ப்புள்ள காயங்கள். எனவே, இவற்றைப் பற்றி வாதிடும் பொழுதே, பல உளப்பாங்குக் கூறுகள் – mindsets – சொல்லி வைத்தாற்போல் சூல் கொண்டு எழ மனக் குகையில் காத்திருக்கின்றன. எங்களை யறியாமலே உன்னும் இவற்றை மேவி பிரச்சனைகளை பொதுத் தளத்திற்கு கொண்டு கொண்டு வருவது வில்லங்கமான காரியமாகிறது. முன் கூறியது போல் பிரச்சனைகளின் வலுவான பகுதிகள் -குறிப்பாக மனக்கோணல்கள் prejudices மறைந்தே யிருக்கின்றன. ஒருவரின் அல்லது ஒரு குழு நோக்கில் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுதல் முதற்படி, பின் இந்த உள்வாங்கலை அவர்கள் வெளிக் கொண்டு வருவது இன்னொரு படி, இவர்கள் கூறுவதை மற்றவர்கள் எதிர் கொள்ளும் முறையோ வேறொரு படியாக அமைகிறது. இப்படியாக ஒவ்வொரு படியிலும் பல விஷயங்கள் ஒழுகிவிடுகின்றன. ஆக, இந்த தொடர்புச் சங்கிலியில் உள்ள சிக்கல்கள்தான் பிரச்சனைகள் மேலும் முடிச்சேறுவதற்கும் வீணான விவாதங்களுக்கும் காரணமாகின்றன.நேரம் வீணாவதைத் தவிர நன்மை ஏற்படுவதும் குறைவு.

மக்கள் கலாச்சாரத்தில் இடிச்ச புளிகள் (Lumpen)

‘உம்முடைய அபிப்பிராயம் எங்களுக்கு வேண்டப்பட்டால், நான் உமக்கு அதைச் சொல்லித் தருகிறேன் ‘

எடுத்த பொருளிலிருந்து கொஞ்சம் விலகி சில பொதுக் கருத்துக்களை இங்கு கூறவேண்டியுள்ளது. நவீன சமுதாய வளர்ச்சிப் போக்கில் ஒரு காலகட்டத்தில் மக்கள் கலாச்சாரம் என்று குறிப்பிடப் படும் mass culture அடையாளங் காணப்பட்டிருக்க வேண்டும். ஊடகங்கள் முதலில் இதை இளக்காரமாகவும் பின்னர் அதுவே கொண்டாடப் படவேண்டியதொன்று எனவும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். எல்லாம் வியாபார நோக்கம் தான், இவற்றில் ஆனால் கொஞ்சம் காரணமும் இருக்கிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் அவரவர்கள் தங்கள் திறமைகளாால் மக்களை பச்சை மண்ணாகப் பிசைந்து கொண்டிருந்தார்கள். இப்படியாகப் ஒரு அமைந்த பெயரை (catchy name) குறிப்பிட்டவுடன் அத்துடன் சேர்ந்து அவர்கள் விரும்பத்தக்க பல சக்திகள் பத்திரிகைகளுக்கு வந்து குவிந்தன. பெயரைச் சூட்டுவதனால் அதற்கும் பொதுமனத்தளத்தில் ஒரு ஒவ்வும் தன்மையும் நம்பகரமான முத்திரையும் ஏற்பட்டு விடுகிறது.பல விஷயங்களுக்கு இது ஒரு குறுக்கு வழி.இடிச்ச புளி என்பதை ஆங்கிலத்தில் Lumpen எனலாமா ?

மக்களின் பெயரால் அவர்களின் பிரதிநிதிகளாக தலைவர்கள். தலைவர்களின் ஆட்சி பாங்கை (Style of governance) அனுசரித்தோ அன்றி எதிர்த்தோ இந்த நிலைப்பாடுகள் மூலம் சக்தி பெறும் வலிமையான பத்திரிகை நிறுவனங்கள் ஏற்பட்டன. இவை மக்கள் மத்தியில் அபிப்பிராயம் உருவாக்கும் களங்களாக விளங்கிவரும் போக்கு நன்றாக நிலை பெற்றுவிட்டது. தொழில் நுட்ப மாற்றங்களை இவர்கள் உடனுக்குடன் தமதாக்கிக் கொள்ளவதில் பணப்பிரச்சனை இருக்கவில்லை என்பதுடன் இதற்காக முற்போக்கு சின்னமும் இலகுவாகக் கிடைத்தது. மக்களுக்கு கருத்துகளை மட்டுமன்றி பல விஷயங்களில் அபிப்பிராயங்களையும் சிபாரிசுகளையும் பரிந்துரைக்கும் சக்தி (இதற்கு அவர்களுக்கு உள்ள தகுதியோ அன்றித் தகுதியீனமோ முக்கியமல்ல) ஏற்பட்டவுடன் கலை பொருளாதாரம் நுகர் பொருட்கள் உற்பத்தி என எல்லாவற்றிற்குமே நஷ்டத்தை மேற் கொள்ளாத பங்குதாரர் களானார்கள். படிப்படியாக இந்த வீச்சு விரிந்து கொண்டே போய் கொண்டிருக்கிறது. இந்த புதிய ஏற்பாடுகளில் மக்கள் ‘இப்படி நாங்கள் நினைக்கவில்லை ‘ என்ற மாதிரி ஏடாகூடமாக சொல்வதற்கு மாற்று வழிகள் மிகச் சிலவே இருந்தன. மக்கள் எதிரொலிகளை பதிவு செய்யும் ‘ஆசிரியருக்குக் கடிதம் ‘ பகுதியில் வேண்டுமானால் போட்டு விடுவார்கள். அதுவும் அதற்குரிய சூழலில் அசட்டுத்தனமாகப் படும்படி. இதனால் எதிர் கருத்துகளுக்கும் இடமளிக்கும் பெருந்தன்மை கூட போற்றத்தக்கதாகி விடுகிறது.

சைபரின் ஊடாடும் (Interactive) தன்மை

இந்த நிலையில்தான் இடிச்ச புளியாகாமல், நாங்கள் திரும்ப பதிலளிக்கக் கூடிய, வடிகட்டாமல் வெளியிடக் கூடிய ஊடகம் உலக வலை. இது ஒரு ஊடாடும் ஊடகம். Interactive medium. இந்த தொழில் நுட்பம் மக்களின் கைகளில் சக்தியை அளிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறது. இதன் வீச்சு (range) எங்கள் பாவனை முறையில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் பத்திரிகைகள் இதை அறியாமல் இல்லை. அவர்களும் வலை விரித்திருக்கிறார்கள். அத்துடன் என்ன நடக்கிறது இங்கெல்லாம் என்றும் நோட்டம் விடாமல் இருக்க மாட்டார்கள். இதை ஒரு குறைபாடாகச் சொல்லவில்லை. இப்படியான ஊடாடட்டங் களினால் ஓரளவு நன்மையே ஏற்படும். அபிப்பராயங்கள் மறு ஊட்டம் (Feed back) பெறுவது சமநிலைகளை நிறுவ உதவும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி. ஒரு முக்கிய கட்டத்தில் அரிய சந்தர்ப்பத்தை இழந்து வருகிறோமா ? சைபர் உலகம் வளர்சியின் ஆரம்ப கட்டத்தில் இருப்து ஒரு அரிய சந்தர்ப்பம். உயர் தொழில் நுட்பங்களுடன் ஆரம்ப காலங்களிலிருந்தே தம்மை இணைத்துக் கொண்ட சமுதாயங்கள் பின் எப்பொழுதுமே அந்த முன்னணி நுனியை தக்க வைத்திருக்கின்றன என்பது வரலாறு. விழிப்புடன் இயங்கும் சைபர் குழுமங்களுக்கு சமூகத்தில் சாதிப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். இவற்றை மனத்திற் கொண்டு பின்னணிகளை தொடர்புபடுத்த முயற்சிக்கிறது கட்டுரை.

தமிழ் ஊடகங்களின் நிலைப்பாடு

‘தமிழ் ஊடகங்கள் 50 வருடங்களுக்கு மேலாகவே வரலாறு கலை கவிதை என எல்லாவற்றிற்குமே எது மிகை எது ‘நல்ல விஷயம் ‘ எது பிழை, யார் யார் குதிரை மேல் சிந்து வெளிக்கு வந்து சேர்ந்தார்கள் என்பன போன்றவற்றை எழுதாச் சட்டங்களாக (implicitly) நடைமுறைப் படுத்தி வருகின்றன. இவை மறை பொருளாக முடிந்த முடிவாக எங்கும் ஊடுருவியிருப்பதால் வாசகர்கள் இத்துடன் கூட்டுப் போக வேண்டியதுதான். கேள்விகளுக்கே இடமில்லை ஏனெனில் கேள்வி கேட்க எங்கு கொக்கி போடுவதென்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். இதற்குள் அடுத்த வாரச் சஞ்சிகை புதுப் பொலிவுடன் வந்து விடும். வரையறைகளின் ஒரு பகுதியில் ‘நல்ல சென்டிமென்ட் ‘ என்னும் வகையில் பொதும்பலாக வலுவேதுமின்றி வற்புறுத்தப் படுவதும் மிகுதிப் பகுதியில் சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக சினிமாவுக்கும் நுகர் பொருட்களுக்கும் சந்தை ஏற்படுத்துவதாகும். இவற்றால் முன்செலுத்தப் படும் பெறுமானங்கள் நாளாந்த வாழ்க்கையுடன் பாலம் போட முடியாத நீண்ட விரிசல்களை வாசகர்களில் ஏற்படுத்துகின்றன. மார்புக் கச்சை விளம்பரத்துக்கும் தங்க ஆபரண விளம்பரத்துக்கும் இடைப்பட்ட இடத்தில், மறுதிசையில் பருவம் பூத்து திமிறும் சினிமா நடிகையின் பொக்கிளுக்கு இரு விரல் கீழேயும் ஒரு கட்டம் போட்டு, மகாத்மா காந்தி கஸ்துாரி பாய்க்கு சொன்னது துணுக்காகியிருக்கும்.இப்படியான துணுக்குத்தனம் ஒரு ஒயிலேறிய (sophistication) நிலைக்கு உயர்தப்பட்டு விட்டது. பத்திரிகை ஊடகம் தமிழ்ச் சினிமாவின் கண்ணாடிப் பிம்பமாகி, அதாவது மென் காம Soft Porno சுருள்களை ஒட்டுப் போட்டுக் காட்டி மக்களை மெல்லிய லாகிரியில் தொடர்ந்து வைத்திருக்க பழக்கி விட்டன. நான் குதுாகலக் கொல்லியல்ல – kill joy. இப்படியான வியாபாரத்தில் இவை மென்காம பொதிகள் என்பதை அறிவித்து அதை மக்கள் தெரிந்து ஏற்றுக் கொண்டால் கொண்டால் இதில் நான் சொல்ல எதுவும் இருக்காது. ஆனால் ஆன்மீகம், இந்தியத் தேசீயம், குடும்ப மதிப்பீடுகளை (நுகர் பொருட்கள் குடும்பங்களுக்குத்தானே விற்பனை செய்யலாம்) உள்ளடக்கிய நல்ல மதிப்பீடுகளின் பாதுகாவலர்களான பிம்பங்களுடன் இவை சுற்றுலாச் செய்கின்றன. இந்த மாதிரியான முத்திரையிட்ட பொதிதல் (packaging) தமிழ் சினிமா மற்றும் பத்திரிகை ஊடகங்களின் தனிப் பெரும் தன்மையாகி விட்டது. மெகா இயக்குனர்கள் நம்ப முடியாத உச்சிக்கு இதை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். கலையென்பது சில நல்ல சென்டிமென்ட் களை துாவிய அதிக முலாம் பூசப்பட்ட ஜிகினா என்றாகிவிட்டது. எங்கள் காதல் காட்சிகள் துரதிஷ்டவசமாக சிம்லாவில் நடை பெறுவதில்லை. எங்களில் துாசு வியர்வை படிகிறது (மேக்கப்மன் நாம் விரல் சொடுக்க வருவதில்லை). நாங்களும் சண்டை பிடிக்கிறோம் ஆனால் சினிமா கதையில் வருவது போன்று அவ்வளவு கலைத் தன்மையுடன் அல்ல. ஆனால் இதுதான் எங்கள் வாழ்க்கை. தமிழ்ச் சினிமா என்பது, ஏப்பத்தை தாளத்துடன் விடுவது, சங்கீதத்திற்கு ஏற்ப குசு விடுவது போன்ற செயற்கையான put up கலை. கொஞ்சம் முயன்றால் கைவரலாம். இது தான் தமிழ்கலாச்சாரம் என நம்பவைத்து (தாங்களும் நம்பி) தங்களுக்குத் தோதான சில படிமானங்கள் கொண்டு தமிழ் பொது மனத்தை உருவாக்கி பின் அதன் நம்பகத் தன்மை சிதையாமல் பவ்வியமாக தொடர்ந்தும் ஊட்டம் கொடுப்பதுதான் தமிழ் ஊடகங்களின் போக்கு ‘ Author in Tamil.net

கிளிப் பேச்சுக்கள் (Cliche)

மேடைப் பேச்சு, சினிமா,பத்திரிகைகள் ஆகியவை தம் வழமையான சமூக அக்கறையற்ற போக்குகளுக்கேற்ப தமிழை பொருளற்ற வெற்றுக் கிளிப் பேச்சுக்கு – Cliche – பழக்கபடுத்தி விட்டன. துணுக்குத்தனமான தகவல்கள், தொடர்பில்லாத சிந்தனைக் கோலங்கள், நிகழ்வுகளையும் தலைவர்களையும் மிகைப்படுத்தும் அல்லது மறு துருவத்தில் இழிவு படுத்தும் போக்குகள் செல்வாக்குப் பெற்று விட்டன. சுருங்கக் கூறின் திருத்தமில்லாத விஷயங்களே பளபளப்பாக அச்சாகின்றன. நாளாந்த வாழ்கையில் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை உள் நோக்கும் தன்மைகள் இங்கு அடங்குவதில்லை. கேட்டால் ‘ மக்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகள். அதை மறக்கவே சினிமாவுக்கு வருகிறார்கள் ‘ என்ற கிளிப்பிள்ளை மறுமொழி எல்லா வேறு பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சனையை மறக்கடித்தால் அவை பற்றி பொதுத் தளத்தில் எப்படிச் சிந்திக்க முடியும். பொழுது போக்கிற்கு நான் எதிரியல்ல ஆனால் ஏதாவது ஒரு சமநிலை வேண்டும்.

இப்படியான போக்குகளை உள்ளடக்கிய ஊடகங்களையே உயர் கலையாகவும் பெரும் சிந்தனைகளாகவும் ஒத்துக் கொண்டுவிட்டோம்.இவற்றால் ஏற்படும் விளைவுகளையோ அன்றி இவை இப்படி மக்களுக்குப் பாதகமாகச் செயல்படுகின்றன என்ற ஒரு அதிருப்தி உறைப்புக்கூட தேன்றாதபடி இவற்றை உள்வாங்குகிறோம். இவற்றிற்குப் பழக்கப்பட்டு இவை ஏற்படுத்தும் பெறுமானங்களை கருத்துக்களை இயந்திரரீதியாக செரித்துக் கொள்வதும் எமது இயல்பாகிவிட்டது. இதுகூடப் பரவாயில்லை. இப்படி முக்கிய விஷயங்களில் எங்களை அறியாமலே எாங்கள் மூளை சலவை செய்யப்படுகிறது என்பதையே மறந்துவிடுகிறோம். இப்படியே படித்த தமிழர்களின் மனவெளிகள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. எங்கள் மானசீக உலகங்களை பொது ஊடகங்களே வகுக்கின்றன. வல்லான் வகுத்த வழி.

வாய்ப்பந்தல்

தமிழைப் பற்றியே தமிழ் அலாதியாகக் கூறும் திறனுக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.இன் தமிழ்,தேன் தமிழ் இனனோரின்ன தமிழ் போன்ற அடை மொழிகள் வேறு ஒரு மொழிக்கு இவ்வளவு தாராளமாக வழங்கப் பட்டிருக்கிறதா தெரியவில்லை. சொல்லப் போனால் இதனால் எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் கிடையாது, ஆனால் இந்த ஒன்றையே 50 வருடங்களாக தமிழ் செய்து வருகிறது என்றால் கொஞ்சம் கவலை ஏற்படத்தான் செய்யும். சமுதாயம் பற்றியோ, உறவுகள் பற்றியோ அன்றி அறிவியல் பற்றியோ அக்கறையுடன் கூறப் புகும் பொழுதுதான், மொழியின் பிரயோகத்தில் ஒரு நேர்மையான நேரிய – straight கூரிய – focussed தன்மைகள் மிகவும் வேண்டப் படுவது புலனாகிறது. இந்தக் கூர்மையும் நேர்மையும் மனத்திற்கே தேவைப்படுகிறது- மொழிக்கல்ல.என்றாலும் இப்படியான மொழி வழக்குகள் பரவலாக பாவனையில் இல்லாவிடின் பொது மனத்தில் இந்த விஷயங்கள் அரங்கேறாது. சில துறைகளில் சில அறிஞர்கள் செய்யும் சாதனை பற்றி இங்கு நான் குறிப்பிட வில்லை. பொது மனத்தளம் என்னும் பொழுது பலரும் பங்கு பற்றும் ஒரு கூட்டான சமூகச் சிந்தனை முயற்ச்சி. சில மதிப்பீடுகள், நடத்தைகள் ஆகியவற்றிற்கு பொதுவான மன அரங்கில் பலரும் பகிர்ந்து கொள்ளும் படியாக நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அர்த்தம். எல்லோருமே இந்த மதிப்பபீடுகள் நடத்தைகள் ஆகியவற்றின் மறுசெய்கையில் (reworking) அறிந்தோ அறியாமலோ ஈடுபடுகிறோம். இந்த வகையில் தமிழ் மொழியின் தற்போதைய பாவனை பொது அரங்கத்தில் இன்று அறிவு சாராத மலினமான உணர்வுகளை வெளிப்படுத்தவே சிறப்பாகப் பயிற்றுவிக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுரை எழுதும் பொழுது சொற் பிரயோகத்திற்காக பட்ட பாடு இதையே உறுதிப் படுத்துகிறது.

கடந்த 50 ஆண்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கலாச்சாரம், கலைகளின் இயல்புகள் வாழ்க்கை முறைகளின் மாற்றங்கள் ஆகியவற்றை நோக்கினால் தெரிவது என்ன ? தமிழரின் பொதுமனத் தளத்தில் பாரிய மாற்றங்கள் – பெறுமானங்கள், மனக்கோணல்கள் ஆகிய அடித்தளங்களில் ஏற்பட்டு வருவது தெரிகிறது. இம் மாற்றங்களுக்கும் இன்றைய தமிழ்ச் சமுதாய நிலைமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இம்மாற்றங்கள் எல்லாவற்றிற்குமே ஏதோ ஒரு வகையில் தமிழ் ஒரு முக்கிய கருவியாகி நின்று இயங்கியது ஆனால் இன்று நிறையவே தேய்மானமடைந்து களைத்து விட்டது.

Series Navigation

சி குமாரபாரதி

சி குமாரபாரதி