இரணியன் – திரைப்பட விமர்சனம்

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

யமுனா ராஜேந்திரன்


இடதுசாரிகள்  மற்றும் கம்யூனிஸ இயக்கம் சார்ந்தவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் செய்ய முயன்று வந்திருக்கிறார்கள். பாதை தெரியுதுபார் படத்திலிருந்து இரணியன் படம் வரையிலும் இத்தகைய மரபொன்று இருந்து வந்திருக்கிறது. மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாளரான நாவலாசிரியர் டி.செல்வராஜின் தேநீர் நாவல் குடிசை படஇயக்குனர் ஜெயபாரதியின் இயக்கத்தில் பாக்கிராஜ் நடிக்க ஊமைஜனங்கள் எனும் பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கிடையிலான கம்யூனிய இயக்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் போராட்டவாழ்க்கையையும் காதலையும் அப்படம் சித்தரித்தது. ஊமைஜனங்கள் படத்தில் மிகமுக்கியமான இடதுசாரி சினிமா விமர்சகரும் நாவலாசிரியரும் ஆன காலஞ்சென்ற அமரர் அறந்தை நாராயணன் தொழிற்சங்கவாதியாக நடித்திருந்தார். சினிமா நடிகைகளின் வாழ்க்கை பற்றிய-நடிகையர்திலகம் சாவித்திரியின் துயரமயமான வாழ்க்கையைச்சுட்டிய அவருடைய ‘ வாரந்தோறும் வயசாகிறது நாவல் ‘ தமிழின் சினிமா உலகு பற்றிய மிக முக்கிமான நாவலாகும். நாவலுக்கான தலைப்பைச் சூட்டிய நாவலாசிரியர் ஜெயகாந்தன் தனது அறந்தை நாராயணண் பற்றிய குமுதம் அஞ்சலிக்கட்டுரையொன்றில் இந்நாவலின் முக்கியத்ததுவத்தைக் குறிப்பிடுகிறார்.

பாதை தெரியுது பார் படத்தின் பின்னணியில் கம்யூனிஸ இயக்கத்தின் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் போன்றவர்கள் இருந்தனர். கம்யூனிஸ இயக்கம் பற்றிய சிவப்பு மல்லி எனும் படம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவினால் தயாரிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதாலரங்காராவ் ஏற்ற வேடத்தைத் தமிழில் விஜயகாந்த் ஏற்றிருந்தார். வெகுஜன தளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படமாக அப்படம் அமைந்தது. அதைத் தொடர்ந்து மதாலரங்காராவின் பிறிதொருபடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவரும் தமிழ் மொழியில் ஆற்றல் வாய்ந்தவருமான தா.பாண்டியனின் முயற்சியில் ஜனசக்தி பிலிம்ஸ் எனும் கூட்டுறவு நிறுவனத்தின் சார்பாக ‘சங்கநாதம் ‘ எனும் படமாக வெளியானது. தமிழ் சினிமாவின் பண்பட்ட நடிகர்களின் ஒருவரும் அனல்காற்று தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் நடித்தவருமான ராஜேஷ் கதாநாயகனாக அப்படத்தில் நடித்திருந்தார். மறக்கமுடியாத அகண்ட விழிகள் கொண்ட ராஜலட்சுமி நாயகியாக நடித்திருந்தார். கம்யூனிஸ இயக்கத்திலிருந்து வந்தவரான ஜெயகாந்தனின் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திய படங்களாக இருந்தன.

சமகால தமிழ் சினிமாவில் தமது கம்யூனிஸ சார்புக் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் இருவர் இயக்குனர் மணிவண்ணனும் வின்சென்ட் செல்வாவும் ஆவர். தாம் உருவாக்கு நினைக்கிற படங்கள் வேறு வகையானவை என்பதை இவர்கள் பல்வேறு நேர்முகங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறார்கள். தெலிங்கானா ஆயதக்கிளர்ச்சி பற்றி ஒரு படம் உருவாக்குவது தனது கனவு என மணிவண்ணன் நேர்முகமொன்றில் தெரிவித்திருந்தார். வின்சென்ட் செல்வா தனது கனவின் ஒரு பகுதி நிறைவேற்றமாக இரணியன் படத்தைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் தமது முன்னோடிகளில் இருந்து ஒரு மிகமுக்கியமான வகையில் வித்தியாசப்படுகிறார்கள். இருவருமே வெகுஜன சினிமா இயக்குனர்கள். தமிழ் சினிமாவை வெகுமக்களின் நுகர்வுக்காகவே உருவாக்குகிறவர்கள். ஆகவே இவர்களைப் பற்றிய அணுகுமுறை என்பது வெகுஜன சினிமா இயக்குனர்கள் பற்றிய ஒப்பீட்டுத் தளத்திலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழில் அறியப்பட்ட அரசியல் சினிமாக்கள் என்பது திராவிட இயக்கச் சார்பாளர்களும் காங்கிரஸ் கூடச்சேர்ந்தவர்கள் உருவாக்கியதும் தான். சிவாஜி கணேசனின் காங்கிரஸ் சார்பு எம்.ஜி. ராமச்சந்திரனின் அரசியல் பிரவேசம் போன்றன சமீபத்திய வரலாறு. பராசக்தியிலிருந்து மீண்டும் பராசக்தி வரை கலைஞர் கருணாநிதி பாணி திரைப்படங்கள் இருக்கிறது. இந்த திராவிட மரபின் தொடர்ச்சியாக மிக வெளிப்படையான கடவுள் மறுப்பு பிரச்சாரப்பாணி திரைப்படங்களை இயக்கி வருபவர் வேலு பிரபாகரன். வேலு பிரபாகரனின் கடவுள் மற்றும் சத்தியராஜ் நடித்த புரட்சிக்காரன் போன்ற திரைப்படங்கள் உலகின் சகல தீமைகளுக்கும் காரணமாக கடவுளின் பாலான மூடநம்பிக்கையைக் குறிப்பிடுகிறது. அறிவித்துக் கொண்ட திராவிட இயக்கச் சார்பாளரான வேலு பிரபாகரனின் புரட்சிக்காரனின் தயாரிப்பிலும் திராவிட இயக்கத்தினர் நேரடியாகப் பங்கு பெற்றிருக்கிறார்கள். திராவிடக் கழகத்தின் ஊர்வலங்களும் முழக்கங்களும் படத்தில் இடம் பெறுகின்றன. திராவிட இயக்கத்தின் தோற்றத் தலைவரான பெரியார் சினிமா பற்றி மிக வெளிப்படையான கடுமையான எதிர் அபிப்பிராயம் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கருத்தியல் பங்களிப்புகளில் மிக முக்கியமானது அவரது பெண்கள் பற்றிய பார்வை. வேலுபிரபாகரனிடமும் சத்தியராஜ் எனும் நடிகரின் படங்களிலும் தவறுவதும் இப்பார்வைதான். இந்த வகையிலும்கூட புரட்சிக்காரன் படம் முக்கியமான படம். பெண்கள் பற்றிய சித்தரிப்பில் மிகுந்த முதிர்ச்சியைப்படம் காண்பித்திருக்கிறது. காரணமாக ஜெயதேவியின் கதை வசனத்தைக்குறிப்பிடலாம் .இதுவன்றி சகல மதம் சார்நதவர்களின் அடிப்படைவாதத்தைத் தோலுரித்திருக்கிறது எனும் அளவில் புரட்சிக்காரன் படம் வெகுஜன சினிமா தளத்தில் முக்கிமான படம் என்பதில் சந்தேகமில்லை. வுியாபார தமிழ்சினிமா நகைச்சுவை அம்சங்கள் பாடல்கள் சண்டைகள் நீண்ட வசனங்கள்- எம்ஜிஆரின் வசன உச்சரிப்புக்களும் அவரது குரலும் நாடோடி மன்னன் படமும் ஞாபகம் வருவது தவிர்க்கமுடியவில்லை-போன்ற அனைத்தும் கொண்ட படமாக புரட்சிக்காரன் இருந்தபோதிலும் இந்துமத அடிப்படைவாதம் பிரதான அரசியலாகயிருக்கிற இன்றைய சூழலில் முக்கியமான படம்தான்.

இதே வழித்தடத்தில் வெளியாகியிருக்கும் இன்னொருபடம்தான் வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் இரணியன் திரைப்படம். இரணியன் கம்யூனிஸ இயக்க நடவடிக்கையாளர்கள் பற்றிய மற்றொரு திரைப்படம். கம்யூனிஸ இயக்கம் உலக அளவில் பின்னடைவுக்கு உட்பட்டிருந்தாலும் கூட அவர்கள் இந்தியாவில் வெகு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கும் தொழிற்சங்க உரிமைகளும் நிலப்பிரபுத்தவ ஜாதிய ஆதிக்கத்தை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டங்களும் மறந்துவிடக்கூடியவை அல்ல. இத்தகைய போராட்டங்கள் பற்றிய படங்கள் கேரளத்திலும் வங்காளத்திலும் ஆந்திராவிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கேரளத்தில் புன்னப்புரவயலார் போராட்டங்கள் கையூர் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு போன்றவை திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. மீன மாசத்தில் ஒரு சூரியன், நீலக்கண்ணுகள், புன்னப்புரவயலார், அம்மாஅறியான், இன்குலாப் ஜிந்தாபாத் போன்றவை அப்படங்கள். ஆந்திரத்தில் தெலிங்கானா போராட்டம் பற்றிய நிகழ்வுகள் மாபூமி படமாக வந்திருக்கிறது. கோவிந்த் நிஹ்லானி வங்காள நக்ஸலைட் இளைஞர்களின் எழுச்சியைத் திரைப்படமாக்கியிருக்கிறார்.

தமிழகத்திலும் அத்தகைய வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனலின் ஆதர்ஷத்தில் வந்த திரைப்படம், சிறிதர் ராஜனின் கிழக்கு சிவந்தது படம், தஞ்சையில் நிலப்பிரபுத்துவததையும் ஜாதிய ஆதிக்கத்தையும் எதிர்த்து சீனிவாசராவ் களப்பால் குப்பு வாட்டாக்குடி இரணியன் போன்றவர்கள் போராடியிருக்கிறார்கள். கோயமுத்துார் மாவட்டம் சின்னியம்பாளையத்தில் தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நான்கு தோழர்களின் வாழ்வு இருக்கிறது. கம்யூனிஸ இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் அந்தத் தருணத்தில் பூத்து உதிர்ந்த காதலின் சோகம் சொல்லிமுடிவதல்ல. வளர்ந்த பெண்ணொன்று தான்தான் மகள் என்று தந்தைக்குத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் சோகமெல்லாம் கம்யூனிஸ இயக்கத் தலைவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள். பி.ராமமுர்த்தி, எல் அப்பு, பு.விருத்தகிரி, ஆர்கே.கண்ணண், பாலதண்டாயுதம், ஜீவானந்தம், முருகேசன், சுப்பிரமணியம், ஏ.எஸ்.கே போன்ற வரலாற்று மனிதர்கள் அந்த இயக்கத்துள் வாழ்ந்திருக்கிறார்கள். வீரமும் சோகமும் சாகசமும் நிறைந்தது அவர்கள் வாழ்வு. அத்தகையதொரு வாழ்வு வாழ்ந்து நிலப்பிரபுத்துவத்துக்குப் பலியாகிய தஞ்சையைச் சேர்ந்த மனிதன்தான் வாட்டாக்குடி இரணியன். அவனது வாழ்வும் மரணமும் குறித்த திரைப்படம்தான் வாட்டாக்குடியைத் தவிர்த்த இரணியன்.

வாட்டாக்குடி இரணியன் இரணியன் ஆனதற்கான காரணத்தை ஒருவர் சாதாரணமாகப் புரிந்து கொள்ளமுடியும். தமிழ் சினிமாவின் வியபார பார்முலா சட்டகத்தை ஒருவர் புரிந்து கொள்ளமுடியுமானால் இப்படத்திற்கு நேர்ந்திருக்கும் விபத்தை ஒருவர் புரிந்து கொள்ளமுடியும். நிலவும் தமிழ் சினிமா சட்டகம் என்பது வாழ்வு தவிர்ந்த கனவும் புனைவும் நிறைந்தது. இக்கனவையும் புனைவையும் சரியான விகிதத்தில் கொடுக்க ஏற்கனவே வடித்து வைத்திருக்கிற வடிவங்களுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் சண்டைகள் கனவுக் காட்சிகள் உடலசைவுகள் படத் தொகுப்பின் திடுக்கிடல்கள் வேண்டும். இம்மாதிரியில் நிஜமான வாழ்வும் நிஜமான வரலாறும் நிஜமான மனிதர்களின் இரத்தமும் சதையுமான உணர்ச்சிகளும் நிஜமான வரலாற்றுப் பிம்பங்களும்- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுத்தி அரிவாள் பொறித்த செங்கொடி எனும் சின்னம்-இல்லாததாக்கப்பட்டுவிடும் . தியாகிகளையும் வரலாற்று மனிதர்களையும் நேசிப்பவர்களுக்கு இது ஒப்ப முடியாதது. ஆனால் நிஜம் இருக்குமானால் சினிமா வியாபாரிக்கும் விநியோகஸ்தனுக்கும் கல்லா நிரம்பாது. அவனுக்கு காசுதான் குறியே ஒழிய வரலாறும் நிஜமும் இரண்டாம் பட்சம்தான். கமலஹாஸன் போன்று நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கூட தடுமாறுகிற உலகத்தில் வின்சென்ட் செல்வா போன்றவர்கள் தாம் நினைத்தபடி படம் செய்ய முடியாமலிருப்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை..

வரலாறு வாழ்வு கம்யூனிஸ இயக்கம் சார்ந்த சின்னங்கள் தவிர்த்து இரணியன் படம் வந்திருக்கிறது. மாறாக கதாநாயகன் முரளியும் மீனாவும் பங்கு பெறும் ஈரத்தில் நனைந்த உடல்களும் அழுத்தமான காமம் தருகிற சிவப்பு வண்ணமும் இணைந்தபடியிலான முனகல் பாடல் காட்சி படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே வந்துவிடுகிறது. காதல் பாடல்களை விலக்கிவிடுவோமானால் ஒரு நேர்த்தியான வெகுஜன இடதுசாரி சினிமாப்படத்தை நாம் இரணியனில் கண்டு கொள்ள முடியும். சிறையினின்று கிராமத்திற்கு வரும் இரணியன் அங்கு நிலப்பிரபுத்துவக் கொடுமையையும் தனது மாமன் மகளின் காதலையும் எதிர்கொள்கிறான். கொலைகளே நியாயமாகின்ற இடத்தில் நிலப்பிரபுவின் குடும்பம் சார்ந்தவர்களை பல்வேறு தருணங்களில் ஒவ்வொருவராகக் கொல்கிறான் இரணியன். தோளில் துண்டும் காலில் செறுப்பும் போடுகிற கூலிவிவசாயிகளுக்கு சாணிப்பால் புகட்டப்பட்டு சவுக்கடி தரப்பட்டு கொல்லப்படுகிறார்கள். முழுக்கிராம மக்களும் நிலப்பிரபுவால் விஷம் கலந்த கஞ்சி கொடுத்து கொல்லப்படுகிறார்கள். தலைமறைவு வாழ்க்கையிலேயே இரணியனுக்குக் கலவியும் நேர்கிறது. தலைமறைவு வாழ்ககையில் மாமன் மகளை மணந்து கொள்ளும் இரணியன் குழந்தைக்கும் தனப்பனாகிறான். தனது சக தோழர்களை ஒவ்வொருவராக நிலப்பிரபுவை எதிர்த்த போராட்டத்தில் இழக்கிறான் இரணியன். திரும்பத் திரும்ப பட்டினிக்கும் சாவுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் கூலித் தொழிலலாளர்கள் இரணியனின் போராட்ட உத்வேகத்திலிருந்து அன்னியமாகிறார்கள். தாம் புலம் பெயர்ந்து பஞ்சம் பிழைக்கப் போகும்போது தடுக்கும் இரணியனை கல்லால் அடிக்கிறார்கள். கலெக்டரிடம் கூலித்தொழிலாளரகளின் உரிமைகளை அங்கீகரித்துக் கையொப்பமிடும் ஆண்டை வஞ்சகமாக மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கவே இரணியனை சுட்டுக்  கொல்கிறான். கோபமுறும் கலெக்டர் இரணியனின் சாவுக்குக் காரணமான மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிகக் கோபமாக கூலி அடிமை ஒப்பந்த விடுதலைப் பத்திரத்தை விசிறியடிக்கிறார். மனைவியும் குழந்தையும் தாயும் சூழ்ந்து அரற்ற, இரணியனின் உயிர் பிரிகிறது. வெகு மக்களின் ஒற்றுமை தன்னைப் பரவசப்படுத்துவதாக இறுதியில் தெரிவிக்கிறான் இரணியன். இரணியனின் சாவு ஏற்படுத்திய கோபமும் வெஞ்சினமும் குற்றவுணர்வும் சேர கிராமத்து மக்கள ஆண்டையை துரத்திச் சென்று பல்வேறு கூலி அடிமைகள் தூக்கிலிடப்பட்ட அதே தூக்குமரத்தில் திறந்த வெளியில் தூக்கிலிப்படுகிறார். பதியப்படாத வரலாறு இது என திரையில் மேலெழும் இறுதி வரிகள் நமக்குச் சொல்கின்றன.

முரளி(இரணியன்) மீனா( இரணியனின் மாமன் மகள்) ரகுவரன் ( ஆண்டை) விஜயகுமாரி( இரணியனின் தாய்) டெல்லி கணேஷ்( இரணியனின் மாமா) ராஜசேகர் ( இரணியனின் தந்தை). அம்பிகா (ஆண்டையின் மனைவி) போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள். ஆண்டையாக வரும் ரகுவரனின் மனைவியான அம்பிகா அன்பே உருவான தமிழ் சினிமா அம்மாவாகப் படைக்கப்படடிருக்கிறார். முற்றிலும் யதார்த்தம்  தவிர்ந்த பாத்திரச்சித்தரிப்பு. பெண்கள் அப்படியொன்றும் இயல்பிலேயே கடவுள்களோ அதிமானுடப் பிறவிகளோ அல்ல. ஜாதியம் வர்க்கம் இனம் மொழி குறித்த விகாரங்களும் வக்கிரங்களும் வன்முறையுணர்வும் எல்லா மனிதர்களையும் போலவே அவர்களுக்கும் உண்டு. இரணியனின் தோழர்களின் புதைகுழிகளின் மேல் இருந்திருக்க வேண்டிய சுத்தி அரிவாள் கொடிகளுக்குப் பதிலாக தலை சாய்த்தபடி சிவப்புநிறத் துணி தொங்கிக் கொண்டிருக்கிறது. தோழர்களுக்கிடையிலான அன்பும் தியாக சிந்தையும் அழகாக உருவாகியிருக்கிறது. தோழர்களை போலீஸ் தேடும் காட்சியில் தீண்டவரும் பாம்பின் விஷத்துக்குத் தனனைப்பலியிட்டு தோழர்களைக் காக்கும் தோழனின் தியாகம் உதாரணமானது. சாணிப்பாலும் சவுக்கடியும் தந்து கூலித் தொழிலாளர்களைக் கொல்லும் வரலாற்றுக்குரூரம் நம்மைத் தாக்குகிறது. ஆரம்பத்தில் வரும் ஒரு டுயட் பாடலை மட்டும் தவிர்த்துவிட்டால் படம் அனர்த்தத்திலிருந்து நிச்சயமாகத் தப்பிவடும். ஆனாலும் கூட வரலாறும் நிஜமும் இல்லாமல் போய்விட்டிருக்கிறது என்பதை நிச்சயமாகவே ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது. படத்தின் ஆரம்பக்குறிப்பு இக்கதை எந்த வரலாற்று மனிதனையும் பற்றியதல்ல என்கிறது. படத்தின் இறுதிக்குறிப்பு புதியப்படாத வரலாறு என்கிறது. இந்த மயக்கம் தவிர்க்கவியலாத விபத்தின் சாட்சியமாக இருக்கிறது. படம் வாட்டாக்குடி இரணியன் என்கிற வரலாற்று நாயகனின் வாழ்வினாலும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த அவனது போராட்டத்தினாலும் அவனது சோகமான மரணத்தினாலும் உந்தப்பட்டதுதான். ஆனால் கனவும் புனைவும் சேர்ந்த நிலவும் சினிமாச்சட்டகம் அந்த வரலாற்று மனிதனைப் புரிந்து கொள்ள மேலும் தடையாகிவிடக்கூடாது எனும் தர்க்கமுரணாகவே இந்த மயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாத் திரைவெளியில் இதுவரை சொல்லப்படாத ஆனால் சொல்லப்படவேண்டிய வரலாற்று நாயகர்களில் ஒருவனின் வாழ்வை முதன்முதலில் சித்தரித்தது எனும் அளவில் இரணியன் படம் தமிழ் வெகுஜன சினிமாவின் வரலாற்றில்- திராவிடப் பரம்பரை இயக்கத்தவர்களும் இந்திய தேசபக்த காங்கிரஸ் இயக்கத்தவர்களும் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வெகுஜன சினிமா வரலாற்றில்- மிகமிக முக்கியமான படம் என்பதில் சந்தேகம் இல்லை; தலித் மக்களின் எழுச்சி இந்தியாவெங்கிலும் மாபெரும் அரசியல் சக்தியாகத் திரண்டிருக்கிற நமது காலத்தில் நிலப்பிரபுத்திவத்திற்கும் ஜாதிய ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடிய ஒரு கடந்த கால நிஜமனிதன் பற்றிய இப்படம் இன்னும் அதிகரித்தபடியிலான முக்கியத்துவமுள்ள படமாகிறது.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்