டைரியின் கடைசிப்பக்கம்

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

ஷக்தி


—————-

எனக்கு வாழ்க்கை இன்னும் சில மணி நேரங்கள் மட்டும்தான் மிச்சமிருக்கு.

என்னோட வாழ்க்கைல இது மிகமுக்கியமான நாள். இதுவே கடைசி நாளும் கூட.

நான் இளங்கோப்பிரியன், டாக்டர் இளங்கோப்பிரியன் M.B.B.S. என்னோட ஹாஸ்பிடல் பேரு கமலா நர்சிங்ஹோம். இந்த ரேஸ்கோர்ஸ் ரோட்லதான் இருக்கு. வீடும் ரேஸ்கோர்ஸ்லதான்.

அப்பா நித்தியானந்தம், தமிழாசிரியர். அம்மா பேரு கமலா. சமயலறையும், கோயிலும்தான் இவங்க உலகம். எனக்கொரு அக்கா இருக்கா. அவ பேரு மலர்விழி. அஞ்சு வருஷ‌ம் முன்னாடி கல்யாணமாகி யூ.எஸ் ல செட்டிலாயிட்டா. எங்க அத்தான் பேரு விஸ்வநாத். சாப்ட்வேர் என்சினியர். இவங்களுக்கு ஒரு குட்டிப்பொண்ணு இருக்கா. அவபேரு தவரிதா. இந்தகுட்டிப்பொண்ணுதான் எங்க குடும்ப மொத்தத்துக்கும் செல்லம்.

எனக்கு போனமாசம்தான் மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. என்னோடது ல்வ் மேரேஜ். அவபேரு ருத்ரப்பிரதிக்க்ஷா. அவளும் ஒரு டாக்டர். படிக்கும் போது 5 வருஷ‌ம் பின்னாடியே சுத்தி, காதலிச்சு, காதலிக்க வச்சு, இப்போ எங்களுக்கு நெக்ஸ்ட் மன்த் மேரேஜ். ஆனா அது இப்போ சாத்தியமாக வாய்ப்பில்லை.

எல்லாமே கிடச்சு என்னோட வாழ்க்கை நேத்தைக்கு வரைக்கும் சந்தோஷமாதான் போய்கிட்டு இருந்துச்சு. நேத்தைக்கு நைட் 10 மணிக்கு திடீர்னு என்னோட காதுல இருந்து லேசா பிளட் வந்துச்சு. பயந்துபோய், என்னனு கண்டுபிடிக்க என்னோட ஸ்கல்ல ஸ்கேன் பண்ணிப்பாத்தேன். ஸ்கேனிங்ல, என்னோட மூளையை சுத்தி ஏதோ ஒயிட்டா லேயர் மாதிரி கட்டியிருந்துச்சு. ஒரு பயமும் சந்தேகமுமா என்னோட பிளட்ட டெஸ்ட் பண்ணிப்பாத்தேன். பிளட்ல இருக்கற திசுக்களும், ஹீமோகுளோபினும் 5 % க்கு மேல செத்துப்போயிருந்துச்சு.

நான் சந்தேகப்பட்டது சரிதான். இது.. இது..அதே நோய்தான். பிளட்டோஸ்டினோபியஸ் என்ற நோய். சில கோடியில் ஒருத்தருக்குத்தான் வரும். நோய் ஆரம்பித்த 1 மணி நேரத்துல பிளட்ல இருக்கற திசுக்களும், ஹீமோகுளோபினும் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போக ஆரம்பிக்கும். செத்த திசுக்கள், உடம்புல ஃபிரஷர் அதிகமா இருக்கற இதயம், மூளைக்கு பக்கத்துல ஒயிட் லேயர உருவாக்கும். இறந்த ஹீமோக்குளோபின்கள், உடம்பின் நீர் சுரப்பிகளான வியர்வை, கண்ணீர் மூலமாகவும் மற்றும் காது, மூக்கு வழியாகவும், வலியேதும் இல்லாமல் வெளியேரும்.

செத்துப்போன திசுக்கள் இதயத்துகுள்ள போய், மொதல்ல இதயத்தையும், அப்புறம் மூளையையும் கொஞ்சம்கொஞ்சமா செயலிழ‌க்க செய்து நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்துல உயிர் போய்டும். எனக்கு இதை ஆராய்ச்சி பண்ணிக்கண்டுபிடிக்கவே 11 மணி நேரம் போய்டுச்சு. இன்னும் 13
மணி நேரம்தான் இருக்கு.

எனவே எனக்கு வாழ்க்கை இன்னும் சில மணி நேரங்கள்தான் மிச்சமிருக்கு.

என்னோட ஹாஸ்பிடல்க்கு வர்ர பேஸன்ட் ஒரு சிலருக்கு நோய் அதிகமாகி குணப்படுத்த முடியாத நிலைமைல வருவாங்க. அப்போ இருக்கும் வரையாவது சந்தோசமா இருக்கட்டுமேனு, நோயோட வக்கரத்தையும், சாவோட தூரத்தையும் அவங்ககிட்ட சொல்லி துன்புறுத்தாமே, ஒரு சில வைட்டமின் மாத்திரைகளைக்கொடுத்து ” சரியாயிடும், தைரியமாப் போங்க” னு சொல்லுவேன்.

ஆனால் இப்போது மரணம் எனக்கானது. அதுவும் இன்னும் சில மணி நேரத்தில். யோசிக்க யோசிக்க பயம். மரணபயம். கை,கால்கள் வெடவெடத்தது. உடம்பு எனக்கே தெரியாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. மரணம் என்பது உச்சமான பயம். இறுதியான பயம். இதைவிட பெரிய பயம் வாழ்வில் எப்போதும் இருந்திருக்கமுடியாது. பயத்தில் உடல் முழுவதும் வியர்த்தது.வியர்வையில் இரத்தம் வெளியேறியது. என் உடல் முழுவதும் இப்போது இரத்தவாடையடித்து, எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.மயக்கமாய் வந்தது. உடனே சென்று குளித்தேன்.

இனி நான் பயப்படக்கூடாது. பயப்படுவதின் மூலம் எந்த முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை. இருக்கும் சில மணி நேரங்களை உபயோகமாக வாழ முடிவு செய்தேன். இதற்கு எந்த டிரீட்மென்ட்டும் இப்போ வரைக்கும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே ட்ரீட்மென்ட் என்ற பெயரில் நேரத்தை வீணாக்கத்தேவையில்லை.

யோசித்துக்கொண்டிருக்கும் போதே என்னுடைய பிளாக்பெரி, என்னுடைய ராட்சஸியை
தன்னுடைய ஸ்க்ரினில் காட்டிக்காட்டி சிணுங்கியது.

எடுத்து ” ஹலோ .. ருத்ரா” என்றேன்.

“ஏய் இளா.. எங்கே இருக்கே..? உன்னை எனக்கு உடனே பாக்கனும்” என்று அவளும்
சிணுங்கினாள். ஆனால் மரணத்தின் பிடியில் இருக்கும் நான், இதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

“நான் வீட்லதான் இருக்கேன் ருத்ரா” என்றேன்.

” ஏய்.. உன் காதலியோட லிப்ஸ் ட்ரையாயிட்டு இருக்கு, அதை ஈரப்படுத்தனும்னு ஒரு பொறுப்பு இருக்காடா உனக்கு..? ராட்சஸா.. நீ என்கிட்ட பேசி கரெக்டா 11 மணி நேரமாச்சு “என்றாள்.

“ருத்ரா.. நீ இப்போ வீட்டுக்கு வரமுடியுமா..? ” என்றேன், அவள் ரொமான்ஸ் என்னைக்கோபப்படுத்தியது.

“ரோஜாச்செடி வராது. தோட்டக்காரன்தான் வரணும், இதழுக்கு ஈரம் கொடுக்க, வேருக்கு நீருற்ற, களை கலைந்து பராமரிக்க” என்றாள் அவளுக்கு தெரிந்த தமிழில்.

உடனே புரிந்துகொள்வதில் மட்டுமல்ல இப்படி இடம், பொருள் இல்லாமல் இம்சிப்பது கூட பெண்ணுக்கு நிகர் பெண்ணே.

“ப்ளீஸ் ருத்ரா.. உடனே கிளம்பி வா” என்றேன், கொஞ்சம் கடுமையாய்.

“ஹேய் என்னாச்சு .. ஒடம்பு சரியில்லயா? .. இதோ கிளம்பிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருப்பேன்.. உனக்கு ஒரு சந்தோசமான அதிர்ச்சி நியூஸ் ஒன்னு காத்துக்கிட்டு இருக்கு” என்று சொல்லி என்னவென்று கேட்பதற்குள் போனை கட் பண்ணிவிட்டாள்.

காலை மணி 10

” டேய் இளங்கோ, இன்னிக்காச்சும் பக்கத்துல சாரதாம்பாள் கோயிலுக்கு வாயேன்டா.. இன்னிக்கு வீட்லதானே இருக்கே” என்றாள் அம்மா.

“சரி கெளம்புங்க போலாம்” என்றவுடன் அம்மாவின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.

அம்மாவின் பிடிவாதத்தால் கொஞ்சமாய் டிபன் முடித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன்.

பிரகாரத்திலுள்ள எல்லா சிலைகளிடமும் போய் ஏதோ முணுமுணுத்து வேண்டிக்கொண்டாள் அம்மா. விபூதியும், குங்குமமும் என் நெற்றியில் அணிந்து விட்டு ” சுகவாசியாய் நூறாண்டுகள் வாழனும் என் மகன்” என்றாள். என் கண்களில் கண்ணீர் முட்டியது. கஷ்டப்பட்டு நிறுத்தி, சிரித்தேன். பிரசாதமாக கற்கண்டு கொடுத்தார்கள். வாயில் போட்டேன் ஆனால் அது இனிக்கவில்லை. என் நாக்கில் ருசியறியும் பகுதி செயலிழந்துவிட்டிருந்தது.

கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்தபோது ருத்ரா வந்து காத்திருந்தாள்.

காலை மணி 11.

இன்னும் 11 மணி நேரமே இருக்கிறது.

“வாம்மா.. ருத்ரா.. ” என்று சொல்லி குங்குமம் வைத்து விட்டாள் என் அம்மா.

அம்மாவிடம் பேசிக்கொண்டே ” என்ன அவசரம் ..? ” என்றாள் கண்களிலேயே.

” மாடிக்கு வா” என்று சொல்லிவிட்டு நான் மாடியில் என் அறைக்கு வந்தேன்

10 நிமிடத்தில் அம்மா கொடுத்த காப்பிக்கோப்பை இரண்டை எனக்கும் சேர்த்து எடுத்துக்கொண்டு என் அறைக்கு வந்தாள்.

” என்ன சார்..? ஒரே கவலைல இருக்கீங்க..? சரி.. ஹாட் காப்பி வேணுமா? இல்ல கூல் காப்பியா? .. ஹாட் காப்பி கோப்பைல இருக்கு.. கூல்..” என்று சொல்லி நிறுத்தி தன் உதட்டை ஈரப்படுத்திக்காட்டினாள்.

நான் எதுவும் பேசாமல் இருந்ததால், ” கதவு சாத்திதான் இருக்கு மை டியர் மன்மதா” என்றாள்.

“ருத்ரா, நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லப்போறேன்” என்று சொல்லி, எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்தேன். அவளும் டாக்டர் என்பதால் நோய்யை பற்றி அதிகமாய் சொல்லத்தேவைப்படவில்லை.

“பொய் என்னை ஏமாத்துறே” என்றாள்,
பயந்தாள்,
அதிர்ந்தாள்,
கதறி அழுதாள்,
தேம்பினாள்,
திட்டினாள்,
அடித்தாள்,

அனைத்தும் செய்துவிட்டு, தன்னிலைக்கு வந்தவளாய், தன் விரல் கொண்டு, அழுதுகொண்டே என் கேசம் கோதினாள்.

என்னை அணைத்துக்கொண்டாள். மெதுவாக, இதமாக, நேசமாக முத்தமிட்டாள், முகத்தில் எல்லா இடத்திலும் ஈரப்படுத்திவிட்டு கேட்டாள் ” நான் எப்படி உன்னைக்காப்பாத்த..? என்ன பண்ணனும் சொல்லு..? என்னை மறுபடியும் ஒருமுறை எடுத்துக்கோ இளா.. என்னால வேற என்ன பண்ணமுடியும்னு தெரியல” என்றாள்.

“இல்ல ருத்ரா. என்னோட உணர்வு மண்டலம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா செத்துக்கிட்டேயிருக்கு. நீ முத்தமிட்டப்பக்கூட எனக்கு எந்த கிளர்ச்சியும் ஏற்படல. உன்னோட உடம்பு என்மேல பட்டத கூட சரியா என்னால உணர முடியல. இன்னும் ஓரிரு நிமிடங்கள்ல‌, நீ என்னைக் கத்தியெடுத்துக்குத்தினாலும் அந்த வலியை என்னால உணர முடியாது.மேலும் அதுக்கு நமக்கு இப்போ நேரமும் இல்ல. சில முக்கியமான வேலைகளுக்கு உன்னோட உதவிகள் தேவைப்படுது. என்னோட கெளம்பு” என்றேன்.

அரைமனதாய், நடைபிணமாய் என்னுடன் பாவமாய்க் கிளம்பினாள் ருத்ரா. அம்மாவிடம் வெளியே செல்வதாய் மட்டும் சொல்லி விட்டு கிளம்பினோம். ருத்ராதான் காரை ஓட்டினாள்.

“ருத்ரா.. என்னோட கடைசிவரை கூடவே இருந்து உடம்புல ஏற்படற மாற்றங்களையெல்லாம் நோட்ஸ் எடுத்துக்கோ. இது கண்டிப்பா இந்த நோய் பற்றி ஆராய்ச்சிக்குப்பயன்படும். இந்த நோயால போற‌ கடைசி உயிர் என்னோடதாத்தான் இருக்கனும். என்னை வெச்சு எடுக்கற ரிப்போட்ட மெடிக்கல் ஆசோசியேசன்ல அப்ரூவ் வாங்கிட்டு இதப்பத்தி ஆராய்ச்சி பண்றவங்களுக்கு குளோபல் ஷேர்ல போட்டுரு” என்றேன்.

“சரி” என்பது போல் தலையசைத்தாள்.

நாங்கள் இப்போது ஜீ.ஹெச்க்கு சென்றோம். என்னுடைய உடலை இறப்பிற்குப்பின், ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி, அங்கிருந்த அப்பிளிக்கேசன் மூலம் எழுதிக்கொடுத்தேன். மனைவி கையெலுத்திடவேண்டிய இடத்தில் ருத்ரா அழுதுகொண்டே கையெலுத்திட்டாள். அரசாங்க வேலையென்பதால், முடிய 4 மணி நேரம் எடுத்தது.

மதியம் மணி 3

பசிப்பதுபோல் காட்டிக்கொண்டேன் ருத்ராவை சாப்பிடவைக்கும் நோக்கில். அருகிலிருந்த ஜுஸ் லேண்ட் சென்றோம். நான் ஜுஸ் ஆர்டர் கொடுக்க, ருத்ரா டாய்லெட்டில் சென்று அழுதுவிட்டு வந்தாள். நான் வற்புருத்தவே ஜுஸை குடித்து முடித்தாள்

குடித்து முடிக்கவும், என்னுடைய பிளாக்பெரி அழைக்கவும் சரியாக இருந்தது. ஸ்கிரீனில் “தவரிதா” மின்னினாள். இது அவளுடைய நேரம்.

“மாமா என்ன பண்ற..? ” என்றாள்.

“நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்டா” என்றேன்.

“ஏன் மாமா பொய் சொல்ற? ஒரே நாய்சியா இருக்கு..வெளியதான இருக்க?” என்றாள்.

“ஆமாடா.. அப்புறம் பேசட்டுமா?” என்றேன்.

“மாமா உன்னை பாக்கனும் போல இருக்கு. இன்னிக்கு நைட் “வீசாட்”ல வர்ரியா..?” என்றாள் அந்த குட்டி தேவதை.

“கண்டிப்பாடா செல்லம்..” என்று சொல்லும் போது என் கண்களில் நீருடன் சேர்த்து இரத்தமும் வந்தது. துடைத்துக்கொண்டு, நைட் பேசுவதாக சொல்லி போனை கட் செய்தேன்.

ருத்ரா இப்பொழுது கொஞ்சம் தெளிவானவள் போல் தெரிந்தாள். எனது உடல் மாற்றங்களை அடிக்கடி குறிப்பெடுத்துக்கொண்டாள்.

இப்பொழுது நாங்கள் ”உதவும் உள்ளங்கள்” என்னும் ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்திற்கு சென்றோம், அதன் தலைவரை சந்தித்து ஒரு ஐந்து இலக்க எண் கொண்ட தொகையின் காசோலையை என் ஹாஸ்பிடலின் பெயரில் கொடுத்துவிட்டு, இந்த தொகை மாதம் ஒரு முறை இவர் மூலமாக உங்களுக்கு வருமென்று சொல்லி ருத்ராவை அறிமுகப்படுத்தினேன். அவர் கண்களிலேயே நன்றி நவிழ்ந்தார்.

அங்குள்ள குழந்தைகளோடு சிறிது நேரம் செலவிட்டோம். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இப்போது எனக்கு தூரத்தில் இருக்கும் எந்த பொருளையும் பார்க்க முடியவில்லை. என் பார்வை ஐம்பதடி தூரத்திற்கு மட்டுமே இருந்தது. ஐம்பதடிக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை.

மாலை மணி 6.

சுதாரித்துக் கொண்டு ”ருத்ரா நம்ம கிளம்பலாம், வீட்டுக்கு போகனும், எனக்கு பார்வை குறைஞ்சுகிட்டு இருக்கு, நோட் பண்ணிக்கோ, அம்பதடிக்கு மேல் எனக்கு எதையும் பார்க்க முடியலை” என்றேன்.

குறித்துக்கொண்ட ருத்ரா, காரை ஓட்டினாள்.அடிக்கடி கண்ணீரையும் துடைத்துக்கொண்டாள்.

இப்பொழுது நான் அப்பாவிடம் சென்று பேச வேண்டும். அவரிடம் வாழ்க்கையில் அதிகமாகப் பேசியதேக் கிடையாது. அவர் சின்ன வயதில், தமிழை என் மேல் திணித்ததாக எண்ணி கோபப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் அப்படியில்லை. எங்கள் போக்கில் தான் என்னையும் அக்காவையும் வளர்த்தார்.

“நீ எந்த மொழி வேண்டுமானாலும் படி, பண்டிதனாகு. அது உன் உரிமை, ஆனால் தமிழையும் அதே அளவிற்கு படி, உன் சந்ததியையும் படித்திடவை.அது உன் கடமை.”என்பார்

மணி மாலை 7

வீட்டிற்கு வந்தோம். அம்மா வழக்கம் போல் சமையலறையில் இருந்தாள். நானும் ருத்ராவும் நேராக அப்பாவின் அறைக்கு சென்றோம். சாய்வு நாற்காலியில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்த உடன் “வாம்மா ருத்ரா, நல்லா இருக்கியா?” என்றவர், “பல வருஷத்துக்கு அப்புறமா இப்பதான் இளங்கோ என்னோட ரூம்க்குள்ள வந்திருக்கான்.” என்றார்.

மேலும் “என்னப்பா டல்லா இருக்கே..? ருத்ரா நீயும் அழுதிருப்பே போல, உங்க ரெண்டு பேருக்குள்ளும் எதாவது பிரச்சனையா?” என்றார்.

”இல்லைப்பா, வெளியே சுத்திட்டு வந்ததுனால டயர்டா இருக்கு” என்றேன் நான் அவரசமாக, ருத்ராவை பேசவிடாமல்.

“உங்களுக்குள்ள ஏதோ குழப்பம் தெரியுது, போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. எல்லாம் காலைல சரியாயிடும். ருத்ராவைக் கொண்டுபோயி வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடுப்பா” என்றார்.

“இல்லை அங்கிள், அப்பா இந்த வழியாத்தான் போவாங்க, அவரோட போயிக்கறேன்” என்றாள் ருத்ரா.

நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அப்பாவிடம் சாப்பிடும் பொழுது அவருக்கு பிடித்த தமிழைப் பற்றி நிறைய விவாத்தேன். இப்பொழுது எனக்கு வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. இதனால் உணவை விழுங்க முடியவில்லை. சமாளித்து தண்ணீருடன் சேர்த்து விழுங்கினேன். மேலும் மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் வர ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். ருத்ராவிற்கு மட்டும் சொன்னேன்.

மணி இரவு 8.30.

இன்னும் ஒன்றரை மணி நேரமே மீதமிருக்கிறது. ருத்ராவை கிளம்பச்சொன்னேன். கிளம்பும் முன் என்னை ஆழமாகப் பார்த்தாள். டாய்லெட் சென்று தண்ணீர் திறந்துவிட்டு கதறி அழுதாள். பின்பு, கிளம்பிவிட்டாள்.

அவள் சென்ற பின்பு என்னுடையை நிலையை அடிக்கடி மெசெஜாக அனுப்பினேன்.

என்னுடைய ரூமிற்கு செல்லும் பொழுது அப்பா “ இளங்கோ, மனசுல ஏதாச்சும் பயமிருந்தா பாரதியோட ‘அச்சமில்லை அச்சமில்லை’ சொல்லு பயம் பறந்து போயிடுமென்றார்.”

“சரிப்பா” என்று சொல்லிச்சென்றேன்.

மணி இரவு 9.00

வீசாட் ஓபன் பண்ணி தவரிதா, அக்கா மற்றும் அத்தானிடம் பேச ஆரம்பித்தேன்.வழக்கம் போல் நிறைய பேசினாள் தவரிதா. நான் பேசும் போது வாய் குழற ஆரம்பித்தது. தலை சுயமிழ‌ந்து சாய ஆரம்பித்தது.

“என்னாச்சு இளங்கோ..? ” என்று பதறினாள் அக்கா.

” ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்குது” என்றேன்.

” நீ போய் மாத்திரை சாப்பிட்டுட்டு தூங்கு மாமா.. நாளைக்குப் பேசலாம்” என்றாள் தவரிதா.

சரியென்று சொல்லி எல்லோருக்கும் பை சொல்லிவிட்டு கட் செய்தேன்.

பெட்டில் படுத்து கண்களை மூடினேன்.

மணி இரவு 9.57.

கண்களை மூடிவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து வாட்ச்சைப் பார்க்க முயற்சித்தேன். கையை அசைக்க முடியவில்லை. கண் பார்வை சுத்தமாகப் போயிருந்தது.உடலைக் கூட அசைக்க முடியவில்லை. கண்களை மீண்டும் என்னால் மூடிக்கொள்ள முடியவில்லை. மொத்தமாய் செயலிழந்து விட்டேன். எனினும் என் மனது மட்டும் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே , உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் ’ என்று சொல்லிக் கொண்டிருந்தது.

மணி இப்போது சரியாக இரவு 10.10.

***************

சொல்லப்படாத உண்மைகள்:

1. இளங்கோவும், ருத்ராவும் ஒரு மாசம் முன்னாடி ட்ரெயினிங்கிற்கு பாரீஸ் போயிருந்தாங்க. பத்து நாள், ஒரே ரூம்லதான் இருந்தாங்க. அப்போ கல்யாணமாகப் போகுதுன்ற தைரியத்துலயும், காதல் கரைகடந்த நிலைல இருந்ததுனாலயும், டாக்டர்ஸா இருந்தும் கூட சேஃப்டி இல்லாம சேசிங் நடத்தி சிக்ஸர் அடிச்சதால, ருத்ராவுக்குள்ள ஒரு கரு உருவாகும் சாத்தியக்கூறுகள் நேத்தைக்கிருந்து தெரிய ஆரம்பிச்சுது. இதைத்தான் ருத்ரா இளங்கோவிடம் சொல்ல போன் பண்ணினாள். அப்புறம் இவனோட நிலைமையைப் பார்த்துட்டு கல்யாணமாகாட்டியும் பரவாயில்லை, இந்த கருவைச் சுமந்து இன்னொரு இளங்கோவை உருவாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா. ஆனால், இதை இளங்கோ கிட்ட கடைசிவரை சொல்லலை, சொன்னா, ஒத்துக்க மாட்டான் என்பதால்.

2. இளங்கோ வீட்டுல, ருத்ரா இளங்கோவை முத்தமிட அருகில் வந்த பொழுது கையில் இருக்குற நாடியை எதேச்சையாக பிடித்த இளங்கோ, அவள் சொல்லாமலேயே இவளுக்குள் இன்னொரு உயிர் இருப்பதையும் இதைத்தான் சொல்ல வந்தால் என்பதையும் கண்டு பிடித்து விட்டான். மேலும் தானில்லாததால், இந்தக் கரு ருத்ராவின் எதிர்காலத் திட்டங்களுக்கு கண்டிப்பாக சுமையாகத்தான் இருக்குமென்பதால் ஜூஸ் குடிக்கும் முன் டாய்லெட் சென்ற நேரத்தில் அவள் குடிக்கும் ஜூஸீல் கருவை கரைக்கும் மாத்திரையைக் கலந்து விட்டான்.

3. 9:57 க்கு பேசியது அவனல்ல, அவனின் ஆத்மா!

******முற்றும்*******

Series Navigation

ஷக்தி

ஷக்தி