ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சித்ரா சிவகுமார், ஹாங்காங்



சந்தா கரடுமுரடான பாதைகளைக் கடந்து ஒரு மலை முகட்டுக்கு வந்து சேர்ந்தான். தன்னுடைய காவி உடையால், வேர்த்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

முன் தினம்தான் அவனுடைய மூத்த திபெத்திய துறவிகள் அவனிடம், “உன்னுடைய அடுத்த ஞான பாடத்தைப் பெற இந்த வழியாக பேமா கோ நிலத்திற்குச் செல்” என்று கூறி அனுப்பியிருந்தார்கள்.

“அங்கு நான் போய் சேர்ந்ததை எப்படி அறிந்து கொள்வது?” என்று கேட்டான்.

“கவனமாக இரு. போதும்” என்றார் குரு.

வேகமாகச் சென்றால் சூரியன் மறையும் முன் பேமா கோவை அடைந்து விடலாம் என்று எண்ணி மலையிலிருந்து வேகமாக இறங்கத் தொடங்கினான்.

தலைக்குப்புற விழுந்தான்.

“ஐயோ கால்..” என்று அலறினான்.

உடைந்த கால்களைப் பற்றிக் கொண்டு நொண்டி நொண்டி புல் வெளியிலிருந்த பெரிய மரத்தை அடைந்தான். “நான் இனி பேமா கோவைக் காணப் போவதில்லை. ஞானம் கிடைப்பது பறி போனதே” என்று வருந்தினான்.

அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு, “நான் மதி கொண்ட துறவியாக ஆவேனா?” என்று கேட்டான். ஆடு ஒன்று அருகே வந்து அவனது கைகளை நக்கியது.

அப்போது புல்வெளியின் உச்சியில் ஒரு கரிய உருவம் நகர்ந்து சென்றது. “என்ன அது? அது மனிதனைப் போலிருக்கிறதே! ஆனால் பெரிதாக இருக்கிறது. கொரில்லாவோ? என் பக்கம் வராமல் இருந்தால் சரி!” என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

வெயில் தாள மாட்டாமல், தாகம் தீர்க்க, நொண்டிய வண்ணம் அருகே இருந்த ஓடைக்குச் சென்று, நீர் குடித்தான். பக்கத்திலிருந்த பழங்களை பறித்துக் கொண்டான். “பையிலிருக்கும் உணவும் இந்தப் பழங்களும் என் கால்கள் சரியாகும் வரை தாக்குப் பிடிக்க உதவும்” என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தான்.

“துறவிகளுடன் இருப்பது எவ்வளவு சுகமாக இருந்தது. அவர்கள் இல்லாமல் என்னவோ போல் இருக்கிறது. அவர்கள் எப்போதும் என்னை கவனித்துக் கொண்டிருப்பது மனத்தை இலேசாக வைக்க உதவியது. தனிமையில் இருக்கும் போதும் துன்பம் நேரும் போதும் நம் மூச்சினை கவனிப்பது மனத்தை இளக வைக்கும்;, பிறகு நாம் அமைதியாகவும் அன்பாகவும் நடக்கலாம் என்று அவர்கள் சொன்ன சொல் எவ்வளவு தூரம் நடக்கிறது என்று பார்ப்போம்” என்று எண்ணிக் கொண்டான்.

பிறகு சிறிது நேரம் மூச்சினை கவனிக்கலானான்.

உள்ளே.. வெளியே.. உள்ளே.. வெளியே..

அப்படியே உறங்கிப் போனான்.

அடுத்த நாளும் அந்த விலங்கினைக் கண்டான். அது எங்கே போகிறதோ? அது என்ன இங்கே வாழும் விலங்கோ? என்று பலவாறு நினைத்துக் கொண்டான்.

நாள் முழுவதும் ஆடுகளைப் பார்த்துக் கொண்டே நேரத்தைக் கழித்தான். ஒவ்வொரு நாளும் கால் மேலும் மேலும் வலித்தது. “நான் பேமா கோவைக் காணப்போவதுமில்லை. ஞானத்தைப் பெறப் போவதுமில்லை” என்று கவலை கொண்டான்.

ஒரு நாள் அந்த விலங்கினைக் காணவில்லை. அது தங்கியிருந்த குடிசை அருகே நோட்டம் விட்டான். அது வெளியே எங்கும் தென்படவில்லை.

ஒரு பெரிய கம்பைத் தேடிப்பிடித்து, தன் உடலுக்கு தாங்கலாக வைத்துக் கொண்டு, குடிசைக்கு அருகே செல்லத் துணிந்தான். “ஒரு புத்திசாலித் துறவி எப்போதும் எங்கேயும் ஏதாவது தவறாக நடக்கிறதென்றால் அதை என்னவென்று பார்க்க வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே அந்த விலங்கினைக் காணச் சென்றான்.

குடிசைக்குள்ளே பார்த்த போது, அந்த விலங்கு படுத்திருந்தது. “இது மனிதனா? விலங்கா? தெரியவில்லையே! இரண்டுமாகத் தெரிகிறதே! இது யேடியோ? முகத்தில் முடிகள் இல்லாததால் இது மனிதர்களை உண்ணக் கூடியதாக இருக்குமோ? இங்கிருந்து போய்விடுவது நல்லதோ?” என்று அவன் மனத்திற்குள் பேசிக் கொண்டான்.

யேடி சற்றே முணங்கியது.

அதன் கவலைக்கிடமான முணங்கலைக் கேட்டு, உற்று கவனித்தான். அதன் கால்களில் பெரிய மரம் குத்திட்டு இருந்தது. அதை எடுத்தால் யேடி குணமாகுமோ?

யேடி மறுபடியும் முணங்கியது.

“நான் உதவி செய்ய வேண்டும். ஆனால் அது பக்கத்தில் போனால் என்னை அடித்துச் சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது? துறவி என்ன செய்ய வேண்டும்? மூச்சினை கவனித்தால் மனம் இளகும். அமைதியாகவும் அன்பாகவும் இருக்கலாம் என்று துறவிகள் சொல்வார்களே.. அதைச் செய்யலாம்” என்று முடிவு செய்து கொண்டு, சந்தா மூச்சின் மீது கவனம் செலுத்தினான்.

உள்ளே.. வெளியே.. உள்ளே.. வெளியே..

பிறகு அவன் நொண்டிய வண்ணம் யேடியின் பக்கம் வந்தான். அதன் கால்களில் குத்தியிருந்த மரத்தை தன் இரு கைகளால் முழு பலம் கொண்டு இழுத்து அகற்றினான். யேடி பயங்கரமாகக் கத்தியது. பயந்து விட்டான் சந்தா. பிறகு தன் கைப்பகுதியிலிருந்து துணியைக் கிழித்து அதன் கால்களில் கட்டி விட்டான். இதை யேடி முழுவதுமாக கவனித்துக் கொண்டிருந்தது.

“உனக்கு உதவி செய்து விட்டேன் என்று நம்புகிறேன்” என்று கூறிவிட்டு சந்தா அங்கிருந்து அகன்றான்.

அடுத்த நாள் யேடி குடிசையிலிருந்து வெளியே வந்தது. அது நொண்டிய வண்ணம் புல்வெளியில் செல்வதைப் பார்த்து சந்தா முறுவலித்தான். இது நொண்டியது தான் நொண்டுவதைப் போலிருந்ததாக எண்ணினான்.

அடுத்த நாள் யேடி மேலும் வேகமாக நொண்டிச் சென்றது. அதைக் கண்டு சந்தாவும் வேகமாக நொண்டினான்.

விரைவில் யேடி எளிதாக நடக்க ஆரம்பித்தது.

“யேடியின் கால்கள் சரியாகிவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் கத்தினான். அவன் புல்வெளியில் நடந்த போது தானும் நன்றாக நடப்பதாக உணர்ந்தான்.

சந்தா நின்று தன் தாடையைத் தேய்த்துக் கொண்டான். “அடாடா.. நான் யேடிக்கு உதவியது எனக்கும் உதவியிருக்கிறது. இதுவே துறவிகள் கூறும் பாடம். ஆம்.. ஞானம்..” என்று எண்ணியவாறே, சுற்றிலும் பார்த்து விட்டுச் சிரித்தான். “நான் இது வரை பேமா கோவில்தான் இருந்திருக்கிறேன். நாளை நான் மடத்திற்குத் திரும்ப வேண்டியது தான். பனி விழும் போலிருக்கிறது” என்ற முடிவுடன் மடத்திற்கு திரும்ப முடிவு செய்தான்.

திடீரென்று விலங்குகள் இங்குமங்கும் தலைதெறிக்க ஓடின. சந்தா தன் பக்கம் யேடி வேகமாக வருவதைக் கண்டான்.

கீர்ர்ர்ர்…

சந்தாவின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

“யேடி என்னைச் சாப்பிட வருகிறதோ?”

அவன் தன் மூச்சின் மீது கவனம் செலுத்தினான்.

உள்ளே.. வெளியே.. உள்ளே.. வெளியே..

யேடி அவன் முன் வந்து, ஒரு பெரிய பொதியை வைத்தது.

சந்தா குனிந்து பார்த்தான். அது விலங்கின் தோல். அதைக் கண்டு முறுவலித்தான். “இது என் பயணத்திற்கு வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள உதவும்” என்று எண்ணினான்.

காலையில் சந்தா ஆடுகளுக்கு விடை கொடுத்து விட்டு, “யேடியைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

“நான் ஞானம் கொண்ட துறவியாக ஆவேனா என்பதை துறவிகள் சொல்லட்டும்” என்று எண்ணிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

Series Navigation

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்