பரிமளவல்லி 23. அகல்விளக்கு

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

அமர்நாத்


கஜமுகனின் கலகலப்பு எப்போது காணமால் போனது என்று சகாதேவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அவரின் நெற்றிச்சுருக்கமும், ஞாபகமறதியும் கில்மரின் வருகைக்குப் பிறகு ஆரம்பித்ததாகத் தோன்றியது. ‘குட்மார்னிங்’ சொன்னால் மறுவணக்கம் தெரிவிக்காமல் தலையைமட்டும் அசைத்துவிட்டுச் சென்றார். சகாதேவனிடம் அவன் குழந்தையைப் பற்றி சமீபத்தில் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மாற்றத்துக்கு வெளிநாட்டுக்காரன் வந்ததுதான் காரணம் என்றால், ஜேசனும் ஐரீனும் ஐந்துநாட்கள் தொழிற்சாலையெங்கும் திரிந்துவிட்டுச் சென்றதும் கஜமுகன் சிரித்தபடிதானே இருந்தார்? “கணவன்-மனைவி சண்டைபோடாம எப்படி ஒத்துமையா வேலை செய்யறாங்க, பாத்தீங்களா?” என்றுகூட பொறாமையாகச் சொன்னாரே.
இரண்டுவாரங்களாக, அவரை நெருங்கவே எல்லோரும் பயப்பட்டார்கள். சிடுசிடுக்கும் அரசாங்க அதிகாரிகளையும் சிரித்துப்பேசி சுமுகநிலைக்குக் கொண்டுவரும் உஷாகூட அவரை அணுகி, “என்ன சார்! ஒருமாதிரி இருக்கீங்க? வீட்டிலே யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று கேட்க அஞ்சினாள். அவருக்குக் கோபமென்று சொல்வதற்கில்லை. அவருக்குக் கோபம் வந்து எடுத்தெறிந்து பேசி பிறகு மன்னிப்பு கேட்டதுண்டு. ‘கறுப்பு, பச்சை, கருநீலம்னு மூணு கலர்லே சீட் போட்டா பாக்க நல்லா இருக்காது’ என்று தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்திய சகாதேவனிடம், ‘இங்கே மேனேஜர் நீங்களா, இல்லை நானா?’ என்று கேட்டுவிட்டு மறுநாளே, ‘சகாதேவன்! நான் அந்தமாதிரி பேசியிருக்கக் கூடாது’ என்று தழைந்துபோன மனிதர். இப்போது, காதலில் தோல்விகண்டாப் போல சோகமான முகம், தொய்ந்த உடல். ‘சென்செக்ஸ்’ பாதாளத்தில் இறங்கியதால் வந்திருக்குமென்று சிலர் பேசிக்கொண்டார்கள். சகாதேவனுக்கு அது சரியான காரணமாகத் தோன்றவில்லை.
கில்மர் தொழிலாளர்களை சோதித்தபோது, அவன் கேட்டதற்காக, ராஜாமணியும், தாமோதரனும் ஒருநாள் வீட்டிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் தாமோதரன் மட்டும் வேலைக்குத் திரும்பிவந்தான். ராஜாமணி கால்வீங்கி நிற்கக்கூட முடியாமல் படுத்துவிட்டான் என்று அவன் மனைவியிடமிருந்து தகவல் வந்தது. பிறகு ஒருவாரம் அவன் வேலைக்கு வரவில்லை. தனக்கும் அதுபோல் எதாவது ஆகுமோ என்ற கவலையில் தாமோதரனுக்கு வேலையில் கவனமில்லை. இருக்கைகளின் தயாரிப்பில் சுணக்கம்.
கஜமுகனோடு பல ஆண்டுகள் பணியாற்றியதால் அவர் தொழிலாளர்களின் நலனில் காட்டும் அக்கறையை சகாதேவன் நன்றாக அறிவான். ராஜாமணியை நினைத்து வருந்துகிறாரோ என்று தோன்றியது. ஆனாலும் அவரை நெருங்கி பிரச்சினைக்குத் தீர்வுகேட்க பயமாக இருந்தது. நிலமையை விளக்கி சரவணப்ரியாவுக்கு அவசரமாக ஒரு மின்-கடிதம் அனுப்பினான். மறுநாள் காலையில் அவன் வேலைக்கு வந்தபோது அவளுடைய பதில் காத்திருந்தது.
அன்புள்ள சகாதேவன்:
உங்கள் பிரச்சினையை எனக்குத் தெரிவித்தது நன்மைபயக்கும் என்று நம்புகிறேன். ஜேசனின் சோதனைகளின்படி அந்த இரண்டுபேருடைய நரம்புணர்ச்சியில் குறைபாடு தெரிந்தது. நான் அளவிட்டபோது அவர்களின் இரத்தத்தின் பாதிப்பும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். அவர்கள் மீளமுடியாத நோயின் எல்லையை இன்னும் அடையவில்லை என்பது எங்களுடைய மகிழ்ச்சிதரும் கணிப்பு. எலிகளின் ஆராய்ச்சியிலிருந்து
1-ப்ரோமோப்ரோபேன் சுவாசிப்பதை நிறுத்தினால், அல்லது குறைத்தால் உடல் முன்னேற்றம் காணலாமென்று தோன்றுகிறது. ‘ரீகல்-சால்வை’ நேரடியாகப் பயன்படுத்தும் இரண்டுபேரையும் ஆறுவாரங்களுக்குப் பிறகு வேறிடத்திற்கு மாற்றினால் நல்லது. அப்படிச் செய்யுமுன் அவர்கள் அடுத்த இருவருக்கு பசைபரப்பும் இயந்திரத்தை இயக்குவது எப்படி என்று காட்டட்டும். குட்லக்!
குழந்தை ஆதவியின் படத்தை ஏன் அனுப்பவில்லை?
சரவணப்ரியா.
அடுத்துவந்த திங்களிலிருந்து சகாதேவன் புதிய இருவரை பசைபரப்பும் இயந்திரத்தில் அமர்த்தினான். அவர்களைப் பழக்கியபிறகு தாமோதரனை ஸ்டோர் ரூமுக்கு மாற்றினான். ஒருவாரத்திற்குள் தயாரிப்பு பழையமட்டத்தை எட்டியது. அதை கஜமுகன் கவனித்திருக்க வேண்டும். வெள்ளிமாலை அவன் வீட்டிற்குச் செல்லுமுன் அவரே சாப்பிட அழைத்தார்.
அருகிலிருந்த உணவகத்துக்கு அவர் காரில் சென்றார்கள்.
“சகாதேவன்! எப்படி போகுது?”
“போனவாரம் ‘ஸ்லோ’வா இருந்திச்சு இப்போ ‘பிக்-அப்’ செஞ்சிட்டோம்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். “நீங்க தப்பா எடுத்துக்காட்டா நான் ஒண்ணு சொல்லணும்.”
“நீங்க ஒண்ணு சொல்றதக்கு முன்னாலே, உங்களை நான் ஒண்ணு கேக்கணும். நீங்க வெளிநாடு போயிருக்கீங்களா?”
“வேலைவிஷயமா ஒருதடவை பாங்காக் போயிருக்கேன். வேறே சான்ஸ் வந்ததிலை.”
“இப்போ வந்திருக்குது. குடும்பத்தோட ஒருவாரம் ஆர்லான்டோலே. டிஸ்னி வோர்ல்ட், யுனிவெர்சல் ஸ்டூடியோஸ் எல்லாம் சுத்திப்பாருங்க!” என்று தொலைக்காட்சி விளம்பரம் போலக் கூவினார்.
“ஏகப்பட்ட செலவாகுமே, சார்!”
“நான் ஏற்பாடு செய்யறேன். நானில்லை, நம்ம கம்பெனிமேலே அக்கறை கொண்டவங்க செய்யறாங்க. இந்த கம்பெனிக்கு நீங்க செஞ்ச சேவைக்கு பரிசா வச்சுக்குங்க” என்று அவன்பக்கம் திரும்பிச் சொன்னபோது தலையிலிருந்த சுமையை இறக்கிவைத்தது போன்ற நிம்மதி அவர் முகத்தில். அதைக் கவனித்தாலும் அதன் காரணத்தை சகாதேவனால் ஊகிக்க முடியில்லை.
“நீங்க சொன்னப்புறம் நான் மேலேசொல்ல என்ன இருக்கு?” என்றான் பணிவாக.
“அப்படியே சரவணப்ரியாவையும் பாத்துட்டு தாங்க் பண்ணிட்டு வாங்க!” என்றார் புன்னகையுடன். அவர் பழைய சுமுக நிலைக்குத் திரும்பியதில் சகாதேவனுக்கு திருப்தி. பார்வையை எங்கோவைத்து, “சரியா யோசிக்காம தப்பு செஞ்கிட்டேன். அதுக்காக அவங்ககிட்டே நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க, அவங்களுக்குப் புரியும்” என்று அவர் சேர்த்தபோது, வார்த்தைகள் உணர்ச்சியில் நனைந்திருந்ததை சகாதேவன் கவனிக்கத் தவறவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் ஆழ்ந்திருந்த துயரத்திலிருந்து பரிமளா மீண்டுவிட்டாள். உடலின் வெப்பநிலையில் அதிக மாறுதலில்லை. இருமலின் தொந்தரவு வெகுவாக குறைந்துவிட்டது. மருந்து குடிக்கவோ திரவ உணவை சாப்பிடவோ அவள் படுத்துவது இல்லை. இரண்டையுமே தொண்டையில் கஷ்டப்பட்டுத் தான் இறக்கவேண்டும். புதன் நடந்ததை நினைத்து எப்போதாவது வெட்கப்படுகிறாள். குழந்தைமாதிரி, ‘நான் நன்றாகச் செய்கிறேனா’ என்று சரவணப்ரியாவின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறாள். அவளும், ‘குட் ஜாப்’ என்று ஆசிரியைபோல அந்த ஆசிரியையைப் பாராட்டுகிறாள். பகலில் ஒருமணி இரண்டுமணி என்று பாதிநேரம் தூக்கம். மீதி நேரத்தில், அவளுக்குத் துணையாக சரவணப்ரியா பக்கத்தில் உட்கார்ந்து அவள் நோயைப்பற்றி கவலைப்படாமல் இருக்க எதாவது பேசுகிறாள்.
“நான் எதாவது படிக்கட்டுமா?”
“ம்ம்.”
“எங்க வீட்டிலே சமஸ்க்ருதப் புத்தகம் எதுவுமில்லை. இருந்தாலும் அதைப் படிக்க எனக்கு உச்சரிப்பு போதாது. பாசுரம் இருக்கு” என்று திவ்யப்பிரபந்தத் தொகுப்பை எடுத்துவந்தாள். “என்ன படிக்கட்டும்?”
“திருவாய்மொழி.”
“நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னையாள்வானை
செல்வம் மல்குகுடித் திருவிண்ணகர்க் கண்டேனே.”
அன்று காலைத்தூக்கத்திற்குப் பின், “சூரனைப்பத்தி எதாவது சொல்லேன்!” என்றாள் பரிமளா.
“அவன் பிறந்ததை சொல்லட்டுமா?”
“சொல்!”
“அவன் வயத்திலே இருந்தப்போ நாங்க ட்யுக் ஹாஸ்பிடல் பக்கத்திலே குடியிருந்தோம். பிரசவத்துக்கு ரெண்டுநாள் வரைக்கும் நான் வேலைசெய்தேன். ஒருதிங்கள் காலை ஐந்துமணிக்கே வலியெடுத்தது. உனக்குத்தான் சாமியைத் தெரியுமே. உடனே அடிச்சுக்கட்டிகிட்டு ஹாஸ்பிடலுக்குப் போனோம். அவங்க, ‘என்ன அவரசரம்? மூணு சென்டிமீட்டர்தானே பிரிஞ்சிருக்கு, நிதானமா வந்திருக்கலாமே’ன்னு சொன்னாங்க. லமாஸ் கேள்விப்பட்டிருக்கியோ?”
“தெரியாது.”
“சி-செக்ஷன், மருந்துகள் உதவி இல்லாம பழங்கால முறைலே வலியைக் கட்டுப்படுத்த லமாஸ்லே கத்துத்தருவாங்க. அதுக்கு சாமியும் நானும் ஆறுவாரம் போனதனாலே கொஞ்சம் தைரியம். பகல் ரெண்டுமணி வரைக்கும் குழந்தை வரலை. நர்ஸ்கள், ‘புஷ் புஷ்’னு போட்ட கூச்சல்லே ரெண்டே முக்காலுக்குத்தான் வெளியே வந்தான். ‘Nஃபார்செப்ஸ்’ போட்டு எடுத்தப்போ மண்டைலே ரெண்டுபக்கமும் நசுங்கல். டாக்டர், ‘கவலைப்பட வேண்டாம், வளர்ந்தா சரியாப் போயிடும்’னு சமாதானம் சொன்னார். என்னைவிட என் ‘லேபரை’ வேடிக்கைபாத்த சாமிக்குத்தான் களைப்பு அதிகம். வீட்டுக்குப்போய் படுத்ததும் பன்னண்டுமணி தூக்கம்” என்று சிரித்தாள் சரவணப்ரியா.
“நீ?”
“முப்பத்தேழு வயசிலே குழந்தை நல்லபடியாப் பொறந்ததிலே ரொம்ப நிம்மதி. பாப்பாவுக்கு நிறைய தலைமயிர். நர்ஸ{களுக்கு ஒரே ஆச்சரியம். கண்ணை விரிச்சு, ‘என்ன, எல்லாம் புதுசா இருக்கே’ன்னு தன்னைச்சுத்தி நடக்கறதை வேடிக்கை பாத்திண்டிருந்தான்.”

இப்படிப்பட்ட பணிவிடை செய்யும்போது முதலில் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது பொதுவாக வலியுறுத்தப்படும் அறிவுரை. அதைப் பின்பற்றி சரவணப்ரியா நேரத்திற்கு சாப்பிட்டாள். முடிந்தபோது ஓய்வெடுத்தாள்.
வேலையிழந்த மார்க்ஸ் தொழிலாளர்களையும் மற்றும் இரத்தமும் சிறுநீரும் தந்துதவிய அவர்கள் உறவினர்களையும் பரிசோதித்து முழு அறிக்கையை ஜேசன் அவளுக்கு அனுப்பியிருந்தான். மனதை பரிமளாவிடமிருந்து திருப்பவும் மூளைக்குப் பயிற்சிதரவும், ஏற்கனவே தயாரித்த 1-ப்ரோமோப்ரோபேன் கட்டுரையில் சென்னையில் சேகரித்த எண்களை எடுத்துவிட்டு புதிய விவரங்களை நுழைத்து அதை மாற்றினாள். எழுதியவர்கள் பெயர்களில் கஜமுகனின் பெயரை அகற்றிவிட்டு கட்டுரையின் இறுதியில் ஆராய்ச்சிக்கு உதவிய ஹிக்கரி க்ராஃப்ட்டுக்கும், ப்ரூவர் பாட்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தாள். அது முடிந்தபோது அவளுக்கே வியப்பாக இருந்தது. கஜமுகன் அனுமதியை மறுத்த இரண்டு வாரங்களுக்குள் இன்னொரு கட்டுரை உருவாகும் என துளிக்கூட எதிர்பார்க்கவில்லை. எழுத்துப்படியை மற்ற ஆசிரியர்களான சாமி, ஜேசன், ஐரீன் ஆகியோரின் பார்வைக்கு அனுப்பினாள். ஹிக்கரிக்கும் ஒருபிரதி சென்றது. வேலை முடிந்தது என நினைத்தபோது அலைபேசியில் அழைப்பு.
இல்லினாயிலிருந்து வந்தது, சோமசுந்தரம்.
“சரவணப்ரியா! எப்படி இருக்கீங்க?”
“ரொம்ப நல்லா. நீங்க?”
“பேசலாம்னு கூப்பிட்டேன். நேரமிருக்கா?” என்று பணிவாகக் கேட்டார்.
இப்போது அவர் தன் தந்தையைப்பற்றி புதிதாக என்ன சொல்லப்போகிறார் என்ற ஆவலில், “சொல்லுங்க!” என்றாள்.
“முதல்லே நீங்க என்னை மன்னிக்கணும். க்ரான்ட் பத்திய என்னோட நல்லவார்த்தை கமிட்டிலே எடுபடலை.”
“அதுபோகட்டும். வாழ்க்கைலே ஒருவழி இல்லாட்டா இன்னொரு வழி.”
“இப்படித்தான் உங்க அப்பாவும் சொல்வார். நான் பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது சராசரிக்கும் குறைச்சலான மாணவன். தமிழைத்தவிர மத்ததிலே ஐம்பது மார்க்குக்குமேலே போனதில்லை. அதுக்காக நான் ரொம்ப வருத்தமா இருந்தேன். கண்ணப்பனார் பாத்துட்டு என்ன விஷயம்னு கேட்டார். இந்தமாதிரி, எவ்வளவு படிச்சாலும் மூளைலே ஏறமாட்டேங்குது. புத்தி மட்டுதான்போல இருக்குன்னு சொன்னேன். அப்போ அவர், ‘மனசைத் தளரவிடாம உழைச்சா காலப்போக்கிலே உன்வாழ்க்கை வளமாகும்’னு அறிவுரை வழங்கிட்டு, ‘இந்தக் கதையைப் படிச்சுப்பார்! நான் சொல்றது உனக்குப் புரியும்’னு மு. வரதராசனார் எழுதிய ‘அகல்விளக்கு’ புத்தகத்தைக் கொடுத்தார். நீங்க அதை படிச்சிருக்கீங்களா? சரவணப்ரியா!”
“அப்பாசொல்லி மு.வ.வோட எல்லா கதைகளும் படிச்சதுண்டு.”
“அந்தக்கதைலே வர்ற வேலய்யன் வாழ்க்கையைப் பாடமா வச்சு உழைச்சேன். முன்னுக்கு வந்தேன். இப்போ எனக்கு நிறைய நேரமிருக்கு. அதனாலே அவரோட கதைகளை இங்க்லீஷ்லே எழுதிவெளியிட்டா அவருடைய கடினமான தமிழ்நடை புரியாத அடுத்த தலைமுறைக்குப் பயன்படும்னு நினைச்சேன்.”
“நல்ல யோசனைதான்.”
“அதுக்காக ‘அகல்விளக்கை’ ஆங்கிலத்திலே எழுதத் தொடங்கினேன். ஒருவாரத்திலே அறுபது பக்கம் முடிஞ்சிருக்கு. நீங்க படிச்சுப்பாத்து எப்படி இருக்குன்னு சொல்லணும். நீங்க நல்லா இருக்குன்னு சர்டிஃபிகேட் கொடுத்தாத்தான் மேலே தொடர்வேன்” என்று அவளை நீதிபதியின் பீடத்தில் வைத்தார்.
“நானா? நான் எப்படி? உங்க எழுத்துக்களை மதிப்பிடமுடியும்?” என்று தடுமாறினாள்.
“உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு, சரவணப்ரியா! ஒருகாலத்திலே அந்த நாவலைத் தமிழிலே ரசிச்சுப் படிச்சிருப்பீங்க. உங்களுக்கு ஆங்கில அறிவும் இருக்கு. நீங்க சங்க இலக்கியம் பற்றி ‘லாங்குவேஜ்’ என்கிற பத்திரிகைலே எழுதின ஒருகட்டுரையை இன்டர்நெட்லே பார்த்தேன். ரொம்பத் தெளிவா இருக்கு.”
“அதை எழுத எனக்கு எவ்வளவு நேரமெடுத்ததுன்னு உங்களுக்குத் தெரியாது” என்று சிரித்தாள். “இருந்தாலும் நீங்க கேக்கறதனாலே படிச்சுப் பாக்கறேன். இதுவரைக்கும் எழுதினதை ஈ-மெயில்லே அனுப்புங்க!”
“ரொம்ப தாங்க்ஸ். அடுத்த வெள்ளிக்கிழமை மறுபடி கூப்பிடலாமா? சரவணப்ரியா!”
“கூப்பிடலாம்! இப்போ எனக்கு நேரம் நிறைய இருக்கு.” காரணம் சொல்லவில்லை.

சென்ற வெள்ளிக்கிழமையைப் போல இன்றும் ஹிக்கரி ஆயிஷாவுக்காக பிற்பகலில் பலமாடிக் கட்டடத்தின் படிகளில் காத்திருந்தான். இப்போது அவன் நிற்கவில்லை, உட்கார்ந்திருந்தான். ஒருவாரம் மிக வேகமாகத்தான் சென்றுவிட்டது. விருப்பமான காரியங்கள் நடக்கும்போது காலம் ஓடத்தானே செய்யும்?
ஆயிஷா தன் பெற்றோர்களிடம் அறிமுகம் செய்ய அவனை அழைத்துச்செல்லப் போகிறாள். அவர்கள்வீட்டில் இரண்டுநாள் தங்குவதற்கு ஐந்துசெட் உடைகளை ஒருபையில் எடுத்திருந்தான். அவர்களின் மதிப்பை சம்பாதிக்க அவை தேவைப்படும். அதுமட்டும் போதாது, நடத்தையில் மரியாதை காட்டவேண்டும். கூடியமட்டிலும் கடவுள், மதம் என்ற பேச்சை எடுக்கக்கூடாது. சூரனுடன் பழகியதில் குறிப்பிட்ட கடவுள், புனிதமான வார்த்தை என்கிற எண்ணங்கள் அவனிடமிருந்து அகன்றுவிட்டன. மனிதநேயம் ஒன்றே அவனுடைய ஈடுபாடு. தன் தந்தைக்கு கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வம் என்று ஆயிஷா சொல்லியிருக்கிறாள். அன்றுகாலை ஈஎஸ்பிஎன் தளத்திற்குச் சென்று, ஹியுஸ்டன் ராக்கெட்ஸ் குழுவின் இப்போதைய நிலை, அதன் ஆட்டக்காரர்களின் பெயர்கள் எல்லாம் தெரிந்துவைத்தான். அன்றுமாலை நடக்கவிருக்கும் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் அவருடன் அமர்ந்து பார்க்கும்போது, “இதையும் ஜெயித்தால் ராக்கெட்ஸின் வெற்றித்தொடர் பதிநான்காகும்” என்று சொல்லி அவரை மயக்க திட்டமிட்டிருந்தான்.
இந்தமுறையும் பச்சை ப்ரியஸ் தெருவோரத்தில் வந்துநின்றதை அவன் கவனிக்கவில்லை. ஆயிஷா ஜன்னலைத் திறந்து, “ஹீஈக்!” என்று சத்தம்போட்டதும், வேகமாக எழுந்து பையைப் பின்-இருக்கையில் எறிந்துவிட்டு அமர்ந்தான்.
“மார்க்ஸ் வழக்குக்கான வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று சொன்னாயே. இன்னும் என்ன கவலை?” என்றாள் அக்கறையுடன்.
“உன் பெற்றோர்களை முதன்முதலாக சந்திக்கப் போகிறேனே. அவர்களுக்கு முன் எப்படி நடந்துகொள்வது என்ற கவலைதான்.”
காரை நகர்த்திய அவள், “அவர்கள் மட்டுமில்லை, என் இரண்டு அண்ணன்கள், அவர்களின் மனைவிகள், நான்கு குழந்தைகள், எல்லோரும் இப்போது என்வீட்டில்” என்றாள்.
திடுக்கிட்டான் ஹிக்கரி.
அவன் தோள்களில் கைவைத்து சமாதானப்படுத்தினாள். “கவலைப்படாதே, ஹிக்! குடும்பத்தில் புதிதாக சேரப்போகிற உன்னை அவர்களும் சந்திக்க வேண்டாமா?”
நெடுஞ்சாலை நாற்பத்தைந்தில் சிறிதுதூரம், பிறகு மேற்கே செல்லும் ஐ-பத்து. போக்குவரவு குறைந்ததும் ஆயிஷா, “நான் ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்தேன், ஹிக்!” என்றாள்.
“ஆயிஷா! நீ செய்வது எல்லாமே புத்திசாலித்தனமான காரியங்கள்தான். உதாரணமாக, தடியான கண்ணாடி அணிந்திருந்த என்னைக் காதலித்தது.”
அவனுடைய சாமர்த்தியமான பேச்சைப் புன்னகையுடன் ஏற்று, “நான் நேற்று மிசஸ் நாதனை அழைத்தேன். அவளும் சென்னையைச் சேர்ந்தவ் எளன்று நீ சொன்னதாக நினைவு” என்று ஆரம்பித்தாள்.
“அது சரிதான்.”
“என் அம்மாவிடம் உன்னைப்பற்றி பேசமுடியுமா என்று கேட்டதற்கு அவள் சம்மதித்ததால் என் வீட்டு எண்ணையும், என் அம்மாவின் பெயரையும் சொன்னேன். பைஜுன்னிசா கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்றாள்.”
“அதுதான் உன் அம்மாவின் முழுப்பெயரா? நான் ஞாபகம் வைக்கிறேன். பை-ஜுன்-னிசா.” ஜுன் என்றுதான் ஹிக்கரி அவளை அறிந்திருந்தான்.
“என் அம்மாவுடன் அரைமணி பேசியபிறகு மிசஸ் நாதன் என்னை அழைத்தாள். நீ நம்பமாட்டாய். அவர்கள் இருவரும் ஆரம்பப்பள்ளியில் ஒன்றாகப் படித்தார்களாம்.”
“இப்போது எல்லா அதிருஷ்ட நட்சத்திரங்களும் நம் பக்கம்.”
“என் அம்மாவிடம் உன்னைப் பத்துவயதிலிருந்தே தெரியும் என்று சொல்லி, உன் புத்திசாலித்தனம், நல்ல குணம் எல்லாம் புகழ்ந்திருக்கிறாள். நீ சொன்னதுபோல் மிசஸ் நாதன் உண்மையிலேயே மிகஉயர்ந்த பெண்.”
ஆயிஷா நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி குறுகுலான தெருக்கள் வழியே சென்றாள். ஹிக்கரி சிந்தனையில் ஆழ்ந்தான். பல விதங்களில் தனக்கு உதவிய மிசஸ் நாதனைத் தர்மசங்கடத்தில் வைத்தது வருத்தத்தைத் தந்தது. அவளுக்கு பணம் முக்கியமில்லை. ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மைகளை விஞ்ஞான உலகுக்குத் தெரிவிப்பதுதான் குறிக்கோள். அதனால், மார்க்ஸ் தொழிலாளிகளை சோதித்ததில் வந்த முடிவுகளின் அடிப்படையில் அவள் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதி வெளியிட அவன் தன்நிறுவனத்திலிருந்து அனுமதி வாங்கியிருந்தான். அந்தக் கட்டுரையின் முதல்வடிவம் அவளிடமிருந்து அவன் கிளம்புவதற்கு ஒருமணி முன்புதான் வந்தது. ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்தான். இரண்டாம்முறை ஆழ்ந்தகவனத்துடன் படித்தபோது நன்றாகவே புரிந்தது. ஒருமாத காலமாக 1-ப்ரோமோப்ரோபேன் பற்றிய விவரங்களைப் படித்துத் தெரிந்துகொண்டதன் பலன். குழப்பத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமின்றி அமைந்த அந்த கட்டுரையைப் படித்ததும் வழக்கில் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை வைத்தான். மிசஸ் நாதன் கோர்ட்டில் ஆஜராகாமலே வழக்கை முடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எதிர்தரப்பு வக்கீல்களுடன் தொடர்பு கொள்ளுதல் சரியில்லை. ஆராய்ச்சிக் கட்டுரையைக் காட்டி, ‘உங்களுக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லை’ என்று எதிராளிகளை மடக்க வேறுயார் இருக்கிறார்கள்? சிறிது நேரத்தில் பெயர் தெரியாவிட்டாலும் யாருக்கு அனுப்புவது என்று தீர்மானித்தான். ஆயிஷா வீட்டிலிருந்தே மின்-தபாலில் அவருக்கு அனுப்பிவிட வேண்டும்.
பரந்த புல்வெளிகளும், அகன்ற வீடுகளும் கண்ணில் பட்டபோது, “நாங்கள் கிட்டத்தட்ட வந்துவிட்டோம்” என்கிற செய்தியை ஆயிஷா அலைபேசியில் அனுப்பினாள்.
மரங்கள் அடர்ந்த வீட்டுப்பாதையில் ப்ரியஸ் நுழைந்தது. வீட்டின் வாசல் தெரிந்தபோது, அங்கே ஹிக்கரியை வரவேற்க, மேற்கத்திய சம்பிரதாய உடையில் எண்பதுவயதையும் தாண்டிய ஒருமுதியவர் முதல், வெற்றுடம்புடன் தோளில் தூங்கிய கைக்குழந்தை வரை ஒரு கும்பலே காத்திருந்தது. அவர்களைக் கண்டதும் அவனுக்கு நடுக்கம் இல்லை, கொஞ்சம் கூச்சம், அவ்வளவுதான்.

சனிக்கிழமை காலையில் சரவணப்ரியா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போவது வழக்கம். வெள்ளிக்கிழமை வீட்டில்தங்கி சோம்பலை அனுபவித்ததற்குப் பரிகாரம். சென்றவாரம் முடியவில்லை. இந்த சனிக்கிழமை சாமியே அவளைப் போகச்சொன்னான்.
“நான் பரிமளாவைப் பாத்துக்கறேன்.”
“நான் மதியம்தான் வருவேன். பரவாயில்லையா?”
“கவலையே படாதே! மூணுநாள் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கே. உனக்கொரு மாற்றம் வேணும்.”
“பரி ஏற்கனவே பல் தேச்சு முகத்தைக் களுவிக்கிட்டா. ஹ்யுமிடிiஃபயர்லே தண்ணியும் மாத்திட்டேன்.”
அவள் கிளம்பியபிறகு சாமி மாடிக்குச் சென்று பரிமளாவுக்கு மருந்தை அளந்து கொடுத்தான். “நீ சமத்தா இதைக் குடிச்சா இன்னிக்கி மத்தியானம் உனக்குத் தெளிவா சாத்தமுது சாதம் கிடைக்கும்.”
குலுங்கச்சிரித்தால் மார்பு வலிக்குமோ என்ற பயத்தில் பரிமளா புன்னகையோடு நிறுத்தினாள். சிரமமப்பட்டு அவள் சொட்டுசொட்டாக விழுங்குவதை எதிரில் அமர்ந்து பார்த்தான். பிறகு மருந்து சாப்பிட்ட வாய்க்கு ஒரு கோப்பை தண்ணீர்.
“தாம்பரத்திலே நாம இருந்தப்போ நடந்ததிலே இன்னும் எதாவது ஞாபகம் இருக்கா?”
இதுவரை சொல்லாதது எது என்று சாமி யோசித்தான். “சம்பத் தாம்பரம் லைப்ரரிக்குப் போய் கதைபுஸ்தகம் எடுத்துண்டுவந்து குடுப்பான். இஷ்டத்துக்கு எடுத்துண்டு வரமாட்டான். அதிலியும் ஒரு ‘பாட்டர்ன்’ வைச்சிருப்பான். சரித்திரக்கதைகளா ஒருமாசம். துமிலனுடைய ஹாஸ்யக்கதைகளின் வரிசை. தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள். சிறுகதைத் தொகுப்புகள். இப்படி கணக்குவழக்கு இல்லாம எவ்வளவு படிச்சோம்? சிலசமயம் கதையைவிட அதை நாம டிஸ்கஸ் பண்ணினது இன்னும் சுவாரசியம். நம்ம ரெண்டுபேருக்கும் ஒருகதை பிடிச்சிருந்தா அது ‘கான்ஸ்டப்ல் கந்தசாமி’ மாதிரி நிஜமாவே நல்லகதையா இருக்கும்.”
“நீ சொல்றதைக் கேட்டதும் இப்போ எனக்கு கதை படிக்கணும்போல இருக்கு. எதாவது கொண்டுவந்து தரியா?”
“எப்படி இருக்கணும்?”
“சமீபத்திலே வந்ததா இருக்கட்டும்.”
அவள் உட்கார்ந்து படிக்க முதுகுயர்ந்த பெரியநாற்காலியை வேறொரிடத்திலிருந்து கொண்டுவந்து போட்டான். பிறகு, ப்ரபஞ்சன், பாலகுமாரன் எழுதிய சில நாவல்களை நூலக அறையிலிருந்து எடுத்துவந்து நாற்காலியில் அமர்ந்திருந்த பரிமளாவிடம் ஒவ்வொன்றாகக் காட்டினான். ‘வானம் வசப்படும்’ எடுத்துக்கொண்டாள்.
“அது வந்து பத்துவருஷம் ஆறது. அதுக்கும் புதுசா இருக்கணும்னா நான் தமிழ்லே எழுதின கதையை உன்னுடைய லாப்டாப்லே போடறேன். நேரம் கிடைக்கறப்போ படிக்கலாம்.”
“பரவாயில்லையே.”
“இன்னும் சில வருஷத்திலே ஃப்ளாஸ்க்கைக் கையிலே பிடிக்கமுடியாம போனாலும் கீபோர்ட்லே விரல்களை ஓட்டமுடியும்னு எனக்கொரு நம்பிக்கை. அந்த சமயத்திலே நீ என்ன பண்ணறதா இருக்கே?”
“நீதான் எதாவது ஐடியா குடேன்!”

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்