காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஓடிக்களைத்து பொழுது தளர்ந்து நடையிட்டது மூப்பெய்திய வண்டிமாடுகள் போல.

சூரியனை வெளியே அனுப்பிவிட்டு காலம் கதவைச் சாத்திக்கொண்டது. கதவு பின்புறம் ஒளிந்து மறைந்திருந்தது இருள். கதவைத் திறந்து பார்த்திருந்தால், அதைப் பிடித்திருக்க முடியாது. சட்டென்று அது மறைந்து கொள்கிற வேகம் வியப்பானது.

எங்கெங்கோ ஒளிந்துகொண்டு அது காலத்தின் தளர்ச்சிக்காகக் காத்திருந்தது. இருளின் கட்டுக்கள் இற்றுப் போயின. பூதத்தின் சீசா திறந்துகொண்டது. வெளிச்சத்துக்கு இருள் நேர்மாறானது. வேகமானது வெளிச்சம். இருளுக்குப் பணிவும் மென்மையான குழைவும் இருக்கிறது. அன்பும் சிறிது இரக்கமும் இருக்கிறது. வர்க்கப்பார்வை அற்றது இருள். கருமை அல்ல. வெண்மையே வர்க்க ஜாதி பேதங்களை ஊன்றி உலவவிட்டது உலகில். இருளில், எல்லைகள் கரைந்து சமத்துவபுரம் உருவாகிறது. இருள் மானுடத்தின் கருணை. உழைப்புக்கு ஓய்வு.

மெல்ல சுற்றிலும் நோட்டம் விட்டது இருள். வெளிச்சத்தின் பாத தூசி பட்ட இடங்களை முதலில் சுத்தம் செய்ய நினைத்து, கருப்புத்துகிலால் அது ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்த ஆரம்பித்தது. ஒவ்வொரு பொருளாய்க் கை நீட்டி அது தொட்டது. மிக நீண்ட கைகள் அதற்கு தவளையின் உள்மடிந்த நாக்கு போன்ற கைகள்.

முதலில் சற்றுத் தயங்கித் தயங்கி ஒவ்வொன்றாய்த் தொட்ட இருள், சகஜமாகி ஆசையாய், ஆர்வமாய், ஆவேசமாய், முற்றிலும் உலகைத் தழுவ முயன்றது. வெளிச்சத்தின் குளறுபடிகளை, தப்பிதங்களை அழிப்பேன். சிலுங்கென்று உடைத்துப் போட்ட கண்ணாடி சீசா போல வெளிச்சம் விட்டுப்போன சிதிலங்களை இருள் ஒற்றித் துடைத்தெடுத்தது.

பிரிதலின் துக்கம் இருளுக்கு. ஒவ்வொரு முறையும் இனி பிரியமாட்டோம் என்று ஏனோ நம்பி உலகை இறுக, உயிர் உருக அணைத்துக் கொள்கிறது. இனி நான் வேறு நீ வேறு அல்ல. தாய்க்கோழியாய், உலகே உன்னை வெளிச்ச அசுரர்களிடமிருந்து காப்பேன் என்று அணைத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு பொருளையும் அததற்கான அளவுக்குத் தைத்த துணியால் போர்த்தி மூடிவிட, மூடிக் காபந்து பண்ணிவிட அதற்கு ஆசை. எதையும் பிரிய அதற்கு மனம் இல்லை. காலத்தின் நெசவில் சல்லாத்துணி போல் கிடந்த இருள். சிலந்தி வலை போல காற்றில் உலர உலரக் கெட்டிப்படுகிறது.

இருளில் சப்தங்கள் உள்ளமுங்கிக் கொள்கின்றன. இருளுக்கு ஏனோ சப்தங்கள் பணிகின்றன. தண்ணீர்ப் பாம்புகள் போல சிலசமயம் தலையை மாத்திரம் மொட்டுப் போல வெளி நீட்டுகின்றன. ஜலதோஷம் பிடித்த குழாயின் சிறு சொட் மீண்டும் அமைதி. இருளின் மௌனப் பார்வையில் சப்தம் வாய்பொத்திக்கொண்டது.

மாட்டின் தோலில் போல சிறு சிலிர்ப்பு. சலனம்.

இருள் பரிமாணங்களை மயக்கி, கண் பார்த்துக் கொண்டிருக்கிற போதே, காட்சிகளை, கூரையைத் தட்டி தட்டியாய்ப் பிரிக்கிறார்போல, பிரித்து வீசிவிடுகிறது. கண்ணிலிருந்து உருவி, பிடுங்கி, பிரித்து, கலைத்துப் போட்டுவிடுகிறது. சற்றுமுன் அதோ நின்றிருந்த தூண் எங்கே? அந்தச் சுவர்? அந்த மரம்? எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது இருள். அல்லது வெளிச்சம் அவையனைத்தையும் இடம் பெயர்த்து எடுத்துகொண்டு ஓடிவிட்டதா?

மானுட அலகுகளை நிர்ணயங்களை பரிமாணங்களை, எல்லைகளை, மூளையின் புலன்களிலிருந்து இருள் அகற்றி விடுகிறது. திசைகளையே அதன்முன் பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. மூளை என்கிற புயல்காலக் குருவிக்கூடு. இருள் என்னும் மௌனப்புயல்.

இருளிடம் பிடிகொடுத்து மீண்டவர் யார்? ஆனைவாய்க் கரும்பு, கரிய பெரிய யானை இருள். கண்ணுக்கு மையழகு. இருளே மை தீட்டுவது போல் மயக்கத்தில் ஆழ்த்தி பார்வையையே அல்லவா பறித்துக்கொள்கிறது. கண்ணாமூச்சி ரே ரே. கண்ணைப் பொத்தி விளையாட்டு காட்டுகிறது இருள். கண் திறந்து பார்த்தால், நான் எங்கே இருக்கிறேன்?….

இருள் எங்கிலும் யாவிலும் நிறைந்து மறைந்து உறைந்து கிடப்பது சென்ற இடத்தில் எல்லாம் தன்னை நிறுவிக்கொள்வதும், நிறுவிக்கொண்டே பிடி உருவிக் கொள்வதும் அதற்கு முடிகிறது. அறுவடை முடிந்து வீடு திரும்பும் வண்டியின் தானியம் போல, இருள் வழியெங்கும் தன்னைச் சிதற விட்டுக்கொண்டே செல்கிறது.

ஃ ஃ ஃ
ஜன்னலில் அமர்ந்தபடி இருள் உள்ளே எட்டிப் பார்த்தது. சிறிய அறையில் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது. சிறு வெளிச்சம். விடிவிளக்கின் நீலம் பூசிய ஒளி அலல்து நீலம் பூசிய இருள். ஃபேன் ஓடும் சரசரப்பு தவிர வேறு சப்தமில்லை. தூளியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் குழந்தை இருக்க வேண்டும். தூளியின் அடிப்பகுதியில் பெரிய உருளைக்கிழங்கு மாதிரி கனம் திரண்டிருந்தது. இருளுக்குக் குழந்தையைப் பார்க்க ஆசை. ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்தது. முகம் தெளிவாய்த் தெரியவில்லை. அதற்கு ஏமாற்றமாய் இருந்தது.

லேசான கதகதப்பும் வழவழப்புமான குழந்தையின் ஸ்பரிசம்தான் எத்தனை இதமானது. பால் வாசம், ஜொள் ஒழுகும் வாசம். அதன் கண்ணும் வாயும், வயிறு உள்ளமுங்கலுமான சிரிப்பு. சிற்றசைவுகள். குழந்தையை அணைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள அதற்கு ஆசையாக இருந்தது.

பக்கத்தில் தரையில் அதன் தாய் படுத்துக்கொண்டிருந்தாள். நல்ல ஆழ்ந்த உறக்கம். பகலெல்லாம் குழந்தையோடு கொட்டமடித்த ஆயாசம். அயர்ச்சி. பசித்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்கப் பட்டினி கிடந்தவள். அவள் எழுந்துகொண்டால் குழந்தையை இருளிடம் விட மாட்டாள். எப்போதும் குழந்தையின் தலைக்கு மேலே நீல ஒளியை… இருக்கட்டும் என்று போட்டவள் அவள்தான். அவள் உறங்கட்டும் அது நல்லது.

குழந்தையை அணைத்துக்கொண்டு படுத்துக் கொள்ள வேண்டுமாய் இருந்தது இருளுக்கு.

ஒளி இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. எப்படி அதைத்தாண்டி இருளால் குழந்தையை எட்ட முடியும்? ஜன்னல் பக்கமாய் இருந்தபடி பார்த்துக் கொண்டு ஏக்கமாய் அது. வேளைக்குக் காத்திருந்தது. ஒரு சிறு குழந்தையின் வதனத்தைப் பார்க்க அது தவம் செய்து கொண்டிருந்தது. வெற்றிகளுக்குப் பொறுமையும் கவனமும் நிதானமும் அவசியம். பாடுபடாமல் வந்த வெற்றியில் மகிழ்ச்சி இராது. பரவாயில்லை. நான் காத்திருப்பேன். இருள் ஜன்னலுக்கு வெளியே காத்திருந்த்து.

அறையில் நீலம் பூத்திருந்தது. அறையெங்கும் மெலிதான நீல வாசனை. சிறு அசைவுமற்றுக் கிடந்தது நியதி. சலனமற்றுக் கிடந்தது. தூளி இப்போது லேசாய் அசைந்தது. காற்றின் சலனமா? தூளிக்குள் குழந்தையின் நெளிவு மடிப்புகள் அசைந்தன. தூக்கம் கலைய குழந்தை விழித்துக்கொண்டாற் போலிருந்தது. தூக்கத்தில் ஒண்ணுக்குப் போயிருந்தது குழந்தை. ஈரத்தின் இம்சையில் தானறியாமல் அதற்கு விழிப்பு கொடுத்திருந்தது.

தரையில் சிறுநீர்ச் சிற்றாறு. சப்பாணியாய் அது மெல்ல மெல்ல நகர்ந்து அம்மாவை எட்டித் தொட முயன்றது. அம்மா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஐயோ அவள் விழித்துக்கொள்வாளோ என்று கவலைப்பட்டது இருள். இந்த விசிறிக் காற்றில் சிற்றாறு காய்ந்து விடக்கூடாதா? விசிறியே உதவி செய். நான் இந்தக் குழந்தையைக் கட்டியணைத்துக் கொஞ்சக் காத்திருக்கிறேன்.

தூளியின் அசைவும் உட்சிணுக்கமும்… இருளுக்குக் குழந்தையின் முகத்தைப் பார்க்கிற ஆசை அதிகரித்திருந்தது. ஐயோ உன் கன்னத்தில் என் ஈர முத்தத்தைப் பதிக்கிறேன். உறக்கம் எப்படியோ கலைந்திருந்தது குழந்தைக்கு. கண்ணைத் துடைத்துக் கொண்டபடி அது உள்ளே ஓ…ஹ்… என்று சிற்றொலி எழுப்பிக் கொட்டாவி விடுகிறது கேட்கிறது.

தூக்கம் கலைந்து விட்டது. அந்தப் பேருலகில் மெத்தென்ற தண்ணொளியில் குழந்தை மாத்திரம் விழித்திருந்தது. அதன் அசைவுகளில் தூளியில் ரேகைகள் ஓடின. நெளிவுகள், குழைவுகள், தூளிக்கு மேலே, குழந்தைக்கு மூச்சு திணறாதிருக்க நீளக்கட்டை மேல்பக்கமாய்த் தூளியில் திறப்பு ஏற்படுத்தியிருந்தது. கட்டையில் காற்றாடி ஒன்றைக் கட்டி வைத்திருந்தாள் அம்மா. தூளி அசையுந்தோறும் காற்றாடி சுழன்றது. குழந்தை காற்றாடி சுழல்வதைப் பார்த்தது. அதன் அசைவு அடங்கியது. காற்றாடி மெல்ல சுழல்வதை நிறுத்தியது. திரும்பவும் சலனப்பட்டு குழந்தை அசைந்தது. காற்றாடி திரும்பச் சுழல ஆரம்பித்தது.

காற்றாடி சுழலும்போது அதன் இறக்கைகள் விர் விர்ரென்று கடப்பதை, அது வேறுமாதிரி கண்ணுக்குத் தெரிவதைக் குழந்தை பார்த்தது. அட! அதற்கு ஆச்சரியமாய் இருந்தது. சந்தோஷமாய் இருந்தது.விரலைப் போட்டுக் குதப்பியதில் வாயோரத்திலிருந்து எச்சில் வழிய ஆரம்பித்தது. ஜொள். அதனிடம் இப்போது புதிய மணம் ஒன்று எழுந்து பரவியது. கிர்ர்.

சிறிது நேரத்தில் இந்த விளையாட்டு அலுத்துப் போயிற்று. தன் வாயிலிருந்து வரும் ஒலியை அது சுவாரஸ்யமாய் ரசிக்க ஆரம்பித்தது. கிர்ர்… சிறிது விட்டு அது திரும்பவும் ஒலியெழுப்ப ஆரம்பித்தது. தன் ஒலியைத் தன் காதில் கேட்கிற ஆனந்தம் அதற்கு. கிர்ர்… அதே ஒலியை நீட்டி, சுருக்கி வெவ்வேறு விதமாய் அது எழுப்பிப் பார்த்தது. கிர்… ஒரு அலையைப் போல அது ஒலியை விரித்தது. பிறகு கிர்ர்ர் என்று அது சுருக்கிக் கொண்டது. ரொம்ப சுவாரஸ்யமாய் இருந்தது இந்த விளையாட்டு.

இந்த சப்தங்களையெல்லாம் வெளியேயிருந்து, ஜன்னலில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது இருள். குழந்தையை அப்படியே வாரியணைத்துத் தொப்பையில் மூக்கால் அழுத்தி வாசம் பிடிக்கவும்,முத்தமிடவும் உத்வேகம் பெற்றது. ஒளி கண்காணித்துக் கொண்டிருந்தது குழந்தையை. அதனால் ஆசைப்படவும் ஏங்கவுமே முடியும் இப்போதைக்கு.

இந்த விளையாட்டும் மாறிவிட்டது. குழந்தைக்கு இப்போது விரலைச் சப்புவதில் கவனம் திரும்பியது. கையெல்லாம் எச்சில். ஈரம், கன்னத்தில், மூக்கில், நாடியில் எங்கும் ஈர வழிசல். விரல்கள் நனைந்திருந்தன. ஏற்கனவே உள்துணி நனைந்த ஈரம் வேறு. முதுகுப்புறம் சில்லிட்டிருந்தது. முதலில் அது ரொம்ப சுகமாய் இருந்தது குழந்தைக்கு. இப்போது லேசாய்க் குளிர ஆரம்பித்தது. உடம்பில் இப்போது கதகதப்பு வேண்டியிருந்தது. அம்மாவின் உடல்சூடு அதற்கு வேண்டியிருந்தது.

விரல் சப்பியதில் ருசி எதுவும் தட்டவில்லை. விரல் சப்புகிற கவனம் வந்ததும் ருசி பற்றிய உணர்வு கிளர்ந்தது. பசி நினைவு தட்டியது. முன்னிலும் சிரத்தையாய் விரலைச் சப்பியது. ஊகூம் அது போதாது. பசி நினைப்பிலேயே உள்ளே பசி விழித்தது. குளிரும் தனிமையும் பசியும்.

ஜன்னல் பக்கமிருந்து இருள் பதறியது. குழந்தையின் தூளி அசைவுகள் பொறுமையற்று இருந்தன. இதோ அழப் போகிறது என இருள் யூகித்தது. மழை அறிகுறிகள் போல. ஐயோ அழுதால் அம்மா எழுந்து விடுவாளே என்றிருந்தது இருளுக்கு. கவலையாய் இருந்தது.

குழந்தை உடலை முறுக்கியபடி அழ ஆரம்பித்தது. முதலில் சிறு சிணுக்கம். பிறகு தூளி அசைவுகள் உலுக்கல்கள் அதிகரித்தன. லேசான அழுகை. மிதமான குரல். அம்மாவிடம் அசைவில்லை. அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இப்போது குழந்தை உலகத்தை மறந்தது. பசியொன்றே அதன் மனதில் இருந்தது. அது இப்போது பெரிதாய் அழ ஆரம்பித்தது.

அம்மாவின் உறக்கம் சிறிது கலைந்தது. ஓ…..ஓ…. என்கிற மாதிரியாய் அவள் தூக்கத்திலேயே விநோத ஒலிகளை எழுப்பினாள். கையால் தரையைத் துழாவி தூளியின் கயிறை எட்டிப் பிடித்தாள். தூளியை இழுத்து ஆட்டினாள்.

மேல் கொண்டியின் சிறு கிறீச். தூளி இங்குமங்குமாக ஊசலாட ஆரம்பித்தது. இந்த ஆட்டம் ரொம்ப சுகம். ஆட்ட சுகத்தில் குழந்தை கொஞ்சம் மயங்கியது. தூளி இங்கிருந்து அங்கே போக கிறீச். அங்கிருந்து வர ஒரு கிறீச். சீரான நிசப்த இடைவெளி. விட்டு விட்டு கிறீச் சத்தத்தில் குழந்தை லயித்தது. அப்படியே குழந்தை அடங்கிக் கிடந்தது.

சிறிது நேரத்தில் திரும்பவும் அழ ஆரம்பித்தது. பசியை இப்போது முன்னிலும் அதிகமாக அது உணர ஆரம்பித்தது. அழுகை. ஆருப்பா அடிச்சா கோந்தையை, என்கிற ரீதியில் அம்மா யாரிடமும் இல்லாமல் பேசியபடியே திரும்பவும் தூளிக் கயிறுக்குத் தேடினாள். தரை ஈரம் தெரிந்தது. ச். அவள் தூக்கம் கலைந்தது. இந்த ஈரத்தில் குழந்தை கிடந்தால் ஜலதோஷம் பிடிச்சிக்குமே, என்று சட்டென்று கவலையாய் இருந்தது அம்மாவுக்கு. கண்ணைத் திறந்து பார்த்தாள். பிறகு எழுந்து உட்கார்ந்து, கலைந்து கிடந்த தலைமுடிகளைத் தொகுத்துக் கட்டிக்கொண்டாள்.

குழந்தை இப்போது பெரிதாய் அழ ஆரம்பித்தது. என்னமும் கனவு கினவு கண்டிருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள். லூயி…. லூயி…..லூயி….. என்கிற மாதிரி வாய்க்கு வந்ததைச் சொல்லியபடியே அவள் தூளியை விரித்து உள்ளே எட்டிப் பார்த்தாள். குழந்தை தூங்காமல் அவளைப் பார்த்தது. எழுத இயலாத ஓர் ஒலிக் குறிப்பைச் சிந்தியபடி
வாயில் விரலுடன் குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது. என்ன ஆனந்தம் அதற்கு. ஏய். போக்கிரிக்குட்டி, சும்மாவாச்சும் அழறியா நீ? …டிஷ்யூம் என்று ஒரு குத்து விட்டாள். அக்ஹ் என்று சிரித்தது குழந்தை. கையைத் தூளிக்குள் கொடுத்து அதை அப்படியே அவள் தூக்கிய வேகத்தில் வயிற்றில் சிறு குளிர் கண்டது. அக்ஹ்ர்ர்.

மூக்கால் அதன் வயிற்றை முகர்ந்து பார்த்தாள் அம்மா. வயிறு குழைந்து கிடந்தது. அஹா, பசிக்கிறதா குட்டிக்கு. அதான் அம்மாவ எழுப்பித்தா… ச்மத்துக்குட்டிடி இது. படுக்கைக்குப் பக்கத்தில் குழந்தையைப் போட்டுக்கொண்டு ரவிக்கையைத் திறந்து மார்பைக் குழந்தைக்குக் கிட்டத்தில் கொண்டு போனாள். அதற்குள் பாய்ந்து வாயால் பற்றிக்கொண்டது குழந்தை. பசி.

தூளி காற்றுப்போன பலூனாய்ச் சுருங்கிக் கிடந்தது. ஜன்னல் வழியே இருள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. அம்மா குழந்தையை எடுக்கும்போதும், அணைத்துக் கொஞ்சும் போதும், பால் கொடுக்கும் போதும், எப்படியாவது குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட அது ஆவேசம் கொண்டது. தெரியவில்லை. இருளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

பால் குடித்தபடியே குழந்தை இடது கையை நீட்டி நீட்டி அம்மாவின் புடவையை இழுத்தது. மேலே தூக்கி அம்மாவின் முகத்தைத் தடவியது. அது வாய் கிட்டத்தில் வரும்போது அம்மா அந்தக் கைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். அந்தக் கையைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டாள். உடல் சூடு பட. குழந்தை முகத்தை வருடிக் கொடுத்தாள். சற்றே கண்ணைத் திறந்து பால் குடித்தபடியே குழந்தை அம்மாவைப் பார்த்துச் சிரித்தது. பசி கொஞ்சம் அடங்கியதில் விளையாட்டுக்கு ஈர்ப்பு வந்திருந்தது. அடி ராசாத்தி என்றாள் அம்மா. அவளுக்கும் சிரிப்பு.

இருள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது.

மெல்ல ஒலிகள் அடங்க ஆரம்பித்தன. ஓஹ். அம்மாவும் கொட்டாவி விட்டாள். தூக்கம் வந்தது அவளுக்கு. குழந்தைக்கும் கண் சொருக ஆரம்பித்தது. பசி இல்லை. வயிறு பொம்மென்று பூரித்திருந்தது. பசிக்காவிட்டாலும் அது மார்புக்காம்பை விடவில்லை. எதற்கும் வாயிலேயே இருக்கட்டும். அவ்வப்போது நினைத்துக்கொண்டு சிறு சப்பல். தூக்கம் அதை உள்ளிழுத்தது.

விசிறியோட்டத்தின் சிற்றொலி தவிர வேறு சப்தமில்லை. மௌனத்தின் ஒத்தடம். அம்மா தூங்க ஆரம்பித்தாள். குழந்தை தூங்கி விட்டது. ஜன்னல் வழியே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது இருள். தீபத்தின் சுடர் உதறினாற் போல விடிவிளக்கின் ஒளி சற்று உள் வாங்கியது. அட, என நிமிர்ந்து பார்த்தது இருள்.

திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெளிச்சம் விலகிக்கொண்டது. ஊஹூ, இதற்குத்தானே காத்திருந்தேன். இருள் ஜன்னலில் இருந்து ஒரே தாவலில் உள்ளே குதித்தது. எங்கே குழந்தை என்று பாய்ந்தோடித் தொட்டது. என்ன மொழு மொழு குட்டியடி இது. கதகதப்புடன் குழந்தையை அணைத்தபடி அருகில் படுத்துக்கொண்டது இருள்.

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்