முள்பாதை 50

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். ராஜியின் பாட்டை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார்கள். சாரதியும், ராஜியும் உள்ளே இருந்தார்கள். நான் வெளியே வெயிட்டிங் ரூம் சோபாவில் சரிந்தபடி உட்கார்ந்து கொண்டேன். என் இதயம் இப்பொழுதும் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மிஸெஸ் ராமன் என்னைப் பார்த்துவிட்டாள். சம்பந்தமே இல்லாத இடத்தில், முன்பின் தெரியாத இளைஞனுடன் நெருக்கமாக நின்றுகொண்டு நான் பேசிக் கொண்டு இருந்தது அந்த அம்மாளின் கண்ணோட்டத்தில் சாதாரண விஷயம் இல்லை. அம்மாவிடம் கட்டாயம் சொல்லுவாள். அந்த இளைஞன் யார் என்ற கேள்வி எழும்பும். என்னால் என்ன பதில் சொல்லமுடியும்?
நான் போய் சேர்ந்த ஐந்தாவது நிமிடமே சாரதியும், ராஜியும் வெளியே வந்தார்கள்.
“இதென்? இங்கே தனியாக உட்கார்ந்து இருந்தாயா?” ராஜி பதற்றத்துடன் என் அருகில் வந்து கொண்டே கேட்டாள்.
“வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?” சாரதி கேட்டான்.
“ரொம்ப நேரமாகிவிட்டது. நீங்க அப்படி உள்ளே போயிருப்பீங்க. நான் வந்து விட்டேன்” என்றேன்.
மூன்று பேரும் வெளியே வந்தோம். நான் கேட்டுக்கொண்டதன் பெயரில் சாரதி எங்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
சாரதியின் கைங்கரியத்தினால் ராஜிக்கு ரேடியோவில் பாடும் அதிர்ஷ்டம் கிடைத்ததாகச் சொன்னேன். ராஜியும் ஆமாம் என்றாள். “நன்றாக இருக்கு. நடுவில் நான் என்ன செய்து விட்டேன்?” சாரதி சொன்னான். விருப்பம் இல்லாதது போல் வெளியில் காட்டிக்கொண்டாலும் நாங்கள் பாராட்டியது அவனுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதை அவன் கண்களைப் பார்த்ததும் புரிந்துகொண்டு விட்டேன்.
ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு பார்க்கிற்கு போகலாமா என்று கேட்டேன். எனக்கு ஏனோ உடனே வீட்டுக்குப் போகணும் என்று தோன்றவில்லை.
ராஜேஸ்வரி தலையைக் குறுக்காக அசைத்தாள். “ஊஹ¤ம். நான் வரமாட்டேன். மாமிக்கு உடல்நலம் சரியில்லை. என்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு நீங்கள் இருவரும் போங்கள்” என்றாள்.
“எனக்கும் வேலை இருக்கு” என்றான் சாரதி, கைகடியாரத்தை பார்த்துக் கொண்டே. எனக்கு ஆத்திரமாக இருந்தது. இதுவே ராஜி வருவதாக சொல்லியிருந்தால் அந்த வேலை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் நினைவுக்கு வந்திருக்காதோ என்னவோ.
மூவரும் வீட்டுக்கு வந்தோம். வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும்போதே என் தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. மி¦ஸ்ஸ ராமன் அம்மாவின் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“அதோ வந்து விட்டார்கள்” என்றாள் அம்மா எங்களைப் பார்த்ததும். “எப்படி பாடினாய்?” ராஜியிடம் கேட்டாள்.
நன்றாகப் பாடினேன் என்பது போல் ராஜி தலையை அசைத்துவிட்டு “நீங்க மாத்திரையை சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள். இல்லை என்று சொன்னதும் ராஜி உள்ளே போய்விட்டாள்.
சாரதி அம்மாவின் அறைக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான். நான் அங்கேயே இருப்பதா இல்லை அறைக்குப் போய் விடுவதா என்று தயங்கிக்கொண்டிருந்தேன். அம்மா என்னிடம் கேட்டாள். “மீனா! நீ இவர்களுடன் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போகவில்லையா?”
“போனேனே” என்றேன்.
“மிஸெஸ் ராமன் உன்னை அசோக்நகரில் பார்த்ததாக சொல்கிறாள்.”
“என்னையா?” வியப்புடன் பார்த்தேன். எந்த நிமிடமும் நின்றுவிடக் கூடும் என்பது போல் என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
சாரதி நிமிர்ந்து என் பக்கம் பார்த்தான். அம்மா சாரதியிடம் சொன்னாள். “நான் என்னவோ மீணா உங்களுடன் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறாள் என்று சொன்னேன். உங்க அத்தையானால் ‘இல்லை. சற்றுமுன் மீனாவை அசோக் நகரில் பார்த்தேன்’ என்று சொல்கிறாள். ஒன்றுமே புரியவில்லை.”
சாரதியின் பார்வை ஒருநிமிடம் என்மீது ஸ்திரமாக நின்று விட்டது. பிறகு என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் மறுக்கவில்லை. மௌனமாக இருந்துவிட்டான்.
சாரதியின் மௌனம் அம்மாவுக்கு தெம்பைக் கொடுத்தது போலும். “பார்த்தீங்களா. இன்று மீனா உங்களுடன் வந்ததால் சரியாகிவிட்டது. இல்லாவிட்டால் இந்தச் சின்ன குழப்பம் எவ்வளவு பெரிய பிரச்னைக்கு வழி வகுத்திருக்குமோ!” நிஷ்டூரமாக சொன்னாள் அம்மா.
மிஸெஸ் ராமன் இடையில் புகுந்தாள். “பிரச்னை கிடக்கட்டும் விடுங்கள். புடவை கூட இதுதான்.” அந்தம்மாளின் பார்வை குழப்பத்துடன் என்மீது படிந்தது.
சாரதி இந்த விதமாக என்னைக் காப்பாற்றுவான் என்றோ, எனக்கு பக்கபலமாக இருப்பான் என்றோ கனவிலும் நான் நினைக்கவில்லை. முதல் தடவையாக சாரதிக்கு மனதிலேயே நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைக்கவில்லை. சாரதி கிளம்பும் முன் என் அறைக்கு வந்தான். எத்தனையோ முக்கியமான விஷயம் இருந்தால் தவிர அப்படி சொல்லாமல் கொள்ளாமல் நேராக என் அறைக்குள் வந்து விடமாட்டான். உடைகளை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில் அலமாரியிலிருந்து புடவையை எடுத்துக் கொள்ளப் போனவள் அப்படியே நின்றுவிட்டேன்.
ஆவேசத்தினால் கன்றி, சிவந்து விட்டிருந்த அவன் முகத்தைப் பார்த்ததுமே எனக்கு அவன் எதைப் பற்றி கேட்கப் போகிறான் என்று புரிந்து விட்டது. இருந்தாலும் ஒன்றும் தெரியாதவள் போல் நின்று கொண்டிருந்தேன்.
“மீனா! உண்மையைச் சொல். நடுவழியில் நீ இறங்கிப் போனது யாரைச் சந்திப்பதற்காக?”
பதில் சொல்ல முடியாதவள் போல் பார்த்தேன்.
“நாம் கிளம்பும் முன் உனக்கு வந்த போன் டாடீயிடமிருந்து இல்லை. அப்படித்தானே?”
நான் பார்வையைத் தரையில் பதித்தேன். அந்த நிமிடம் ஆயிரம் சாரதிகள் ஒன்றாக சேர்ந்தாலும் என் வாயிலிருந்து உண்மையை வரவழைத்திருக்க முடியாது.
நான் பதில் சொல்வேன் என்பது போல் சாரதி ஒரு நிமிடம் காத்திருந்தான். “பதில் சொல்ல மாட்டாயா?” அழுத்தமாக கேட்டான்.
நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டுவிட்டது போல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.
சாரதி ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டான். “மீனா! இதற்கு முன்னால் உன்னிடம் சொல்லியிருக்கிறேனோ இல்லையோ. இப்போ சொல்கிறேன். நன்றாக நினைவில் வைத்துக்கொள். என்னால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியுமே ஒழிய பொய் சொல்லி ஏமாற்ற நினைப்பவர்களைக் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாது. ஒரு தடவை என் மனம் முறிந்து விட்டால் அதற்குக் காரணமாக இருப்பவர்களிடமிருந்து விலகியே இருப்பேன். நீ எதுவும் பேசவில்லை என்றால் உன்னையும் அந்த நபரையும் ஒன்றாகப் பார்த்தேன் என்று அத்தை சொன்னது உண்மை என்று நம்ப வேண்டியிருக்கும்.”
அதற்கும் நான் பதில் சொல்லவில்லை. என்னை இல்லை என்பது போல் பேசாமல் இருந்தேன்.
“சரி. நடுவில் என்னுடைய அத்தையை எதற்காக முட்டாள் ஆக்க பார்க்கிறாய்? அந்த மர்ம நபர் யாரோ ரொம்ப நாளைக்கு உன்னால் மறைத்து வைக்க முடியாது. நீ சொல்லவில்லை என்றால் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் கையாலாகாதவன் இல்லை நான்.” கோபமாக மொழிந்துவிட்டு சாரதி விருட்டென்று திரும்பிப் போய்விட்டான்.
நான் சற்று நேரம் சலனமற்று அதே இடத்தில் நின்று விட்டேன். புடவையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பை கைவிட்டவளாக மாற்றுப் புடவையைக் கட்டில் மீது வீசிவிட்டு ஜன்னல் அருகில் நின்று கொண்டேன்.
‘என்னால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும். ஏமாற்றுபவர்களை சகித்துக் கொள்ள முடியாது.’ சாரதியின் குரல் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருந்தது. சாரதியிடம் உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன என்று தோன்றியது. அவன் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்வானா? எனக்குப் பக்கபலமாக இருப்பானா?

***********
அன்று இரவு முழுவதும் யோசித்தேன். மறுநாள் மாமியின் வீட்டுக்கு ராஜேஸ்வரியை அழைத்துப் போகாமல் நான் மட்டும் போவதாக முடிவு செய்தேன். அவளால் அண்ணனை எதிர்த்துப் பேச முடியாது. ராஜியை அழைத்துப் போகவில்லை என்றால் கிருஷ்ணனுக்குக் கோபம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வதற்குத் தயாராகிவிட்டேன். என் உயிர் சிநேகிதியான ராஜிக்காக யார் எது சொன்னாலும் பட்டுக்கொள்ள முடிவு செய்தேன். அவளை சந்தித்த முகூர்த்தம் எப்படிப் பட்டதோ தெரியாது. நாளுக்கு நாள் எங்களுடைய நட்பு வலுப்பட்டு வந்தது. அவளும் என்னைப் போல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், வசதிகள் நிறைந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற விருப்பம் என்னுள் வேரூன்றிவிட்டது.
மறுநாள் மதிய நேரம். அம்மாவுக்கு ஜலதோஷம், ஜுரம் குறைந்திருந்தாலும் ஓய்வு எடுத்துக்கொள்ளணும் என்று டாக்டர் ஊசி போட்டுவிட்டு போனார். அம்மா ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தாள். அம்மாவின் அறைக்கதவு லேசாக சாத்தியிருந்தது. ராஜி டைனிங் ரூமில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருந்தாள். வேலைகள் முடிந்துவிட்டதால் திருநாகம் மாமி சமையலறை வாசற்படியில் தலையை வைத்துக் கொண்டு குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தாள். அப்பா வெளியே போயிருந்தார். நான் மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறியதை யாருமே கவனிக்கவில்லை.
நான் மாமியின் வீட்டுக்குப் போகும் போது கிருஷ்ணன் ஏற்கனவே வந்திருந்தான். வராண்டா நாற்காலியில் அமர்ந்து பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தான்.
கேட்டைத் திறந்ததுமே அவனைப் பார்த்துவிட்டேன். ஓட்டமும் நடையுமாக படிகளில் ஏறிக்கொண்டே “தாமதமாகிவிட்டதா? நீ வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?” என்றேன்.
“இப்பொழுதுதான் வந்தேன். ராஜி எங்கே?” என்றான்.
“வரவில்லை.”
“வரவில்லையா? ஏன்?” அவன் குரலில் கோபம் தலைதூக்கியதை கவனித்தேன்.
“அவளுக்கு ரேடியோ ஸ்டேஷனில் ரிகார்டிங் இருக்கு. அங்கே போயிருக்கிறாள்” என்றேன். புதுவிஷயம் கேட்பது போல் பார்த்தான்.
அதற்குள் என் குரலைக் கேட்டு மாமி உள்ளேயிருந்து வேகமாக வந்தாள். ரொம்ப நாள் கழித்து வந்தேன் என்பதால் “மாமியை மறந்துவிட்டாயா?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டாள்.
வாசலில் காத்திருந்தவனை உள்ளே வந்து உட்காரச் சொன்னதாக தெரிவித்தாள். என்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மாமியின் பார்வை கிருஷ்ணன் மீது அடிக்கடி படிந்தது. பிறகு என்னை உள்ளே அழைத்துப் போனாள். ஸ்டவ் மீது டிகாஷனுக்காக தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் தோசை மாவு இருந்தது.
மாமி என் கையைப் பற்றிக் கொண்டு குரலை தாழ்த்தி “யார் நீங்க? மீனாவுக்கு என்ன உறவு ஆகணும்? என்று அவனிடம் கேட்டபோது பிரண்ட் என்று பதில் சொன்னான். எந்த மாதிரி பிரண்ட் அவன்?” என்று கேட்டாள்.
மாமியின் ஆர்வத்தைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது. “முன்பு உங்க வீட்டு முகவரியைக் கொடுத்து கடிதங்கள் எழுதினேன இல்லையா? அந்த பிரண்ட்” என்றேன்.
புரிந்து விட்டது என்பது போல் மாமி தலையை அசைத்தாள். நான் வெளியே வந்தேன். ஏதோ யோசித்தபடி வெளியில் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான்.
“ஊரிலிருந்து அண்ணன் வந்தால் சந்தித்து பேசுவதற்கு ஒரு நிமிஷம் கூட நேரம் இல்லாதபடி ஆகிவிட்டதா ராஜிக்கு” என்றான். அவன் குரலில் லேசான கோபமும், ஆற்றாமையும் கலந்திருந்தன.
“ப்ளீஸ்! அவளை ஒன்றும் சொல்லாதே. அவளுக்கு நீ வந்ததே தெரியாது. நான் சொல்லவில்லை” என்றேன்.
அதுதானா விஷயம் என்பது போல் பார்த்தான்.
“இன்று இரவு ஊருக்குப் போகிறாயா?” என்று கேட்டேன். மறுபடியும் நாளைக்கு ராஜியை இங்கே அழைத்து வா என்று சொல்லப் போகிறானே என்று பயந்தேன்.
“போய்த்தான் ஆகணும். பயணத்தைத் தள்ளிப்போட முடியாது. நாளைக்கோ அதற்கு அடுத்த நாளோ அவளை ரயிலில் ஏற்றிவிட்டு எனக்குத் தந்தியைக் கொடு. தஞ்சாவூருக்கு வந்து அழைத்துப் போகிறேன்.”
“அவளை அனுப்ப மாட்டேன் என்று நேற்றே சொல்லிவிட்டேன். அதனால் மறுபடியும் அந்தப் பேச்சு வேண்டாம்” என்றேன். என் பிடிவாதம் முழுவதும் குரலில் வெளிப்பட்டது.
கிருஷ்ணனின் முகம் ஜிவுஜிவு என்று மாறியது. வலுக்கட்டாயமாக ஆவேசத்தை அடக்கிக் கொண்டதுபோல் தென்பட்டான்.
“நான் உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன் என்றுதானே இந்த தைரியம்?” என்றான்.
“நானே இந்தக் கேள்வியைக் கேட்கணும்னு நினைத்தேன். ஆமாம். அதுதான் என் தைரியம். நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வர மாட்டேங்கிறாய்?”
“நான் இப்போ பழங்கதையைப் பேசுவதற்காக இங்கே வரவில்லை.” கடினமாக ஒலித்தது அவன் குரல்.
“தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது. விஷயம் என்னவென்று தெரிந்தால் என்னுடைய எண்ணங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்வேனோ என்னவோ.”
“உங்க அம்மாவுக்கும், எனக்கும் நடுவில் இந்தப் பகைமை ஏன் வந்ததோ மாமா ஒரு நாளும் உன்னிடம் சொன்னதே இல்லையா?”
“அம்மாவுக்கும் உனக்கும் நடுவில் பகைமையா?” வியப்புடன் பார்த்தேன்.”ஆமாம். சில பேரிடம் உயிருக்கும் மிஞ்சிய நட்பு ஏற்படுவதுபோல் சிலரிடம் பரம விரோதம் ஏற்படும். உண்மையைச் சொல்லணும் என்றால் உங்க அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் பசும்புல்லை போட்டாலும் பற்றிக் கொண்டு எரியும். இந்த விஷயத்தை நீ எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.”
என் மனதில் கசப்பான உணர்வு பரவியது. கிருஷ்ணனின் போக்கைப் பார்த்தால் என் பிரமைகளை விலக்கி உண்மையைப் புரிய வைக்க முயலுவது போல் இருந்தது. உன் அம்மாவும் நானும் எதிரிகள் என்பதுபோல் அவன் பேசியது என் மனதை முள்ளாகத் தைத்தது.
கிருஷ்ணன் சீரியஸாக சொன்னான். “மீனா! நீ மெலட்டூருக்கு வந்ததால் நம் குடும்பங்களுக்கு நடுவில் அறுந்துவிட்டது என்று நினைத்திருந்த பிணைப்பு மறுபடியும் முடிச்சு போடப்பட்டது. உன் வருகையினால் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷம், திருப்தி ஏற்பட்டதோ வார்த்தைகளில் சொல்ல முடியாது. அந்த நன்றி இருப்பதால்தான் உன் பிடிவாதத்தை சகித்தக் கொண்டு இருக்கிறேன். நீ எங்கள் வீட்டுக்கு வந்தாய். அதனால் ராஜியை உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் வைத்துக் கொள்ளணும் என்ற உன் தவிப்பு எனக்குப் புரிகிறது. அதுதான் அழைத்துப் போய் தங்க வைத்துக் கொண்டாய். பதிலுக்கு பதில் சரியாகி விட்டது. ராஜி விஷயத்தில் உன்னுடன் சண்டை போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீ அனுப்ப மாட்டேன்னு சொன்னால் நேராக உங்கள் வீட்டுக்கு வந்து அவளை அழைத்துப் போக என்னால் முடியும். உன்னையோ, மாமாவையோ வேதனைக்கு ஆளாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. இதை என்னுடைய பலவீனமாக எடுத்துக் கொண்டு விடாதே. இதுதான் என்னுடைய வேண்டுகோள்.”
அவனுடைய முகத்தில் தென்பட்ட தீவிரத்தை, அவன் பேச்சில் மறைமுகமாக ஒலித்த எச்சரிக்கையை உணர்ந்த போது உண்மையிலேயே குழம்பிவிட்டேன்.
கிருஷணன் வலியவழைத்துக் கொண்ட முறுவலுடன் சொன்னாள். “தயவு செய்து ராஜியைக் கூடிய சீக்கிரத்தில் அனுப்பி வைத்தால் நன்றி உடையவனாக இருப்பேன். உன் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.”
அதற்குப் பிறகு நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. கிருஷ்ணன் போய்விட்டான். கிளம்பும் முன் ராஜியை உடனே அனுப்பி வைக்கச் சொல்லி மற்றொரு முறை எச்சரித்தான்.
மாமி டிபன் தயாரித்துவிட்டு என்னை உள்ளே அழைத்தாள். கிருஷ்ணன் ஏற்கனவே போய் விட்டான் என்று நான் சொன்ன போது திகைத்துப்போனாள். சாப்பிடாமல் அவனைப் போகவிட்டதற்கு என்னைக் கடிந்துகொண்டாள். டிபன் தயாரிப்பதில் தாமதமாகிவிட்டது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். மாமி வற்புறுத்தியதால் வேறுவழியில்லாமல் டிபன் காபி சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
வீட்டுக்குத் திரும்பும்போது பலவிதமான எண்ணங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. நான் செய்யும் இந்தக் காரியம் கிருஷ்ணனுக்கும் சரி, அப்பாவுக்கும் சரி கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று புரிந்துவிட்டது. என்றுமே இல்லாத விதமாக கிருஷ்ணனின் பேச்சில் நிரம்பியிருந்த ஒரு விதமான திரஸ்காரம் என் இதயத்தை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது.
ராஜியின் நலனை முழுவதும் விரும்பும் என் மனம் இவர்களுடைய கருத்து வேற்றுமைகளை லட்சியப்படுத்த வேண்டியதில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. ஆற்றில் இறங்கும் முன் ஆழத்தைப் பற்றி யோசித்திருக்கணும். இறங்கிய பிறகு பயப்படுவதில் அர்த்தம் இல்லை.
நான் வீட்டில் அடியெடுத்து வைக்கும் போது முன் அறையில் சாரதி காட்சியளித்தான். இதற்கு முன் அவன் எங்கள் வீட்டுக்கு வருவதற்கு சமயம் சந்தர்ப்பம் என்று ஒன்று இருந்து வந்தது. எவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் தான் வரப் போவதை முன் கூட்டி போனில் தெரிவித்த பிறகுதான் வருவான். சமீப காலத்தில் அந்தப் பண்பை காசியில் விட்டு விட்டான் போலும். எப்பொழுது தோன்றினாலும், வரணும் என்று தோன்றிய அடுத்த நிமிடமே எங்கள் வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்தான்.
அம்மா, அப்பாவுக்கு இது சகஜமாக தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு மட்டும் சாரதியின் வருகைக்கு வேறு காரணம் இருப்பதாகத் தோன்றியது.
சாரதி வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது போல் எதிரே டீபாய் மீது இருந்த ஆஷ்ட்ரேயில் சிரெட் துண்டுகள் தென்பட்டன. அவனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். சாரதி என்னை தலை முதல் கால் வரை ஏறஇறங்க பார்த்தான். அந்தப் பார்வை என்னுள் அறுவெறுப்பை ஏற்படுத்தியது. முள்ளாகக் குத்தியது. நான் அவனிடம் எதுவும் பேசவில்லை. அசல் அவனைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே போய்விட்டேன்.
அறைக்குள் போனதும் ராஜி என் அருகில் பதற்றத்துடன் வந்தாள். “அண்ணி! எங்கே போயிருந்தாய்? அவர் வந்து ரொம்ப நேரமாகிவிட்டது” என்றாள்.
சள்ளென்று எரிந்து விழுந்தேன். “நான் எங்கே போனால் உனக்கு என்ன? எல்லாம் உன்னிடத்தில் சொல்லிக் கொண்டு இருக்கணுமோ? ராஜி! உன் எல்லைக்குள் இருப்பது உனக்கு நல்லது. ச்சீ… ச்சீ… கேட்க வேண்டிய அம்மா அப்பா ஒன்றும் சொல்லாவிட்டாலும் நடுவில் உங்கள் எல்லோருக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் கிடந்து சாகிறேன். என்ன பிழைப்பு இது?” வேண்டுமென்றே குரலை உயர்த்தினேன்.
நான் யாரை உத்தேசித்து இந்த வார்த்தைகளை சொன்னேனோ அந்த நபரின் காதுகளில் நிச்சயமாக விழுந்திருக்கும்.
ராஜி திகைத்துப் போனவளாக, வாயில் பேச்சு வராதவள் போல் நின்றுவிட்டாள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் நீர் நிரம்பி விட்டது. வாடிப்போன அவள் முகத்தைப் பார்த்ததுமே என் மனம் தவித்தது. உடனே ஜாடை காட்டி அவளிடம் ரகசியமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் சாரதி பாய்ந்து வருவது போல் வேகமாக அறைக்குள் நுழைந்தான்.
“அனாவசியமாக அந்தப் பெண்ணின் மீது எரிந்து விழுவானேன்? எங்கே போயிருந்தாய் என்று அவள் கேட்டதில் தவறு என்ன இருக்கு? நான் கேட்கிறேன். வேளையற்ற வேளையில் நீ எங்கே போய் விட்டு வருகிறாய்? இதைக் கேட்கும் உரிமை அந்தப் பெண்ணுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு இருக்கு இல்லையா?”
எனக்கு உடனே வாயிலிருந்து வாரத்தை வெளிவரவில்லை. சாரதி இப்படி களத்தில் இறங்கி என்னை கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
எங்களுடைய பேச்சுக்குரல் சற்று தொலைவில் இருந்த அம்மாவின் அறைக்கு கேட்டுவிட்டது போலும். “என்ன மீனா? யார் பேசுவது?” பலவீனமான குரலில் அழைத்தாள்.
நான் கண்கள் சிவக்க சாரதியின் பக்கம் பார்த்துவிட்டு, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி அவசியம் இல்லாதவள் போல் அங்கிருந்து வெளியேறினேன். அம்மாவின் அறைக்குள் நுழையும்போதே புகார் செய்வது போல் சொன்னேன். “பார் மம்மீ! ராஜி பின்னிக் கொண்டிருந்த ஸ்வெட்டரில் பிங்க கலர் உல்லன் கண்டு முடியப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சும்மாதான் இருக்கிறோமே, அந்தக் கலர் கிடைத்தால் வாங்கி வருவோம் என்று கடைத் தெருவுக்குப் போனேன். இதற்குள் சாரதி வந்து விட்டானாம். நான் வந்ததும் வாசலிலேயே நிற்க வைத்து ‘எங்கே போயிருந்தாய்’ என்று கேட்கிறான். கேட்டது கூட தவறு இல்லை மம்மீ! ஆனால் கேள்வி கேட்ட முறை? நான் ஏதோ தவறு செய்துவிட்டது போலவும், கையும் களவுமாகப் பிடித்துவிட்டது போலவும் கேட்டான். அந்தத் தோரணையைப் பார்த்தால் எனக்கு ஆத்திரமாக இருந்தது. ‘நான் எங்கே போயிருந்தேனோ உனக்கு அனாவசியம்’ என்று சொன்னேன்.”
அம்மா என்னை கோபமாக பார்த்தாள். பிறகு லேசாக கடிந்து கொள்வதுபோல் “உனக்குக் கொஞ்சம் கூட புத்தியில்லை. அவனிடம் பேசும் முறை இதுதானா? நீ எங்கேயும் தனியாகப் போகும் வழக்கம் இல்லை என்பதால் கேட்டானோ என்னவோ. அதில் தவறு என்ன இருக்கு? நிதானமாக பதில் சொல்லியிருக்க வேண்டாமா? எப்பொழுதுதான் உனக்கு புத்தி வருமோ தெரியவில்லை. இலையில் எல்லாம் ஏற்பாடாக பரிமாறி வைப்பதுதான் கஷ்டம். ஆனால் உதைத்துத் தள்ள ஒரு நிமிஷம் ஆகாது. எங்கே சாரதி? கூப்பிடு அவனை” என்றாள்.
நான் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன்.
“கூப்பிட மாட்டாயா? உன் பிடிவாதத்தினால் என்னிக்காவது என் உயிருக்கே உலை வைக்கப் போகிறாய். ராஜி! ராஜி!” உரத்த குரலில் அழைத்தாள்.
ராஜேஸ்வரி மௌனமாக அறைக்குள் வந்தாள். “சாரதியை இங்கே வரச்சொல்லு. நான் கூப்பிட்டேன்னு சொல்லு” என்றள் அம்மா.
“அவர் இல்லை. போய்விட்டார்.” தாழ்ந்த குரலில் சொன்னாள் ராஜி.
“போய்விட்டானா!” அம்மாவின் முகத்தில் சொல்ல முடியாத வேதனை பிரதிபலித்தது. சோர்வுடன் தலையணையில் சரிந்தாள். “எல்லாம் என் தலையெழுத்து. ஒருநாள் உடம்பு சரியில்லை என்றால் ஏடாகூடமாக ஏதாவது நடக்காமல் இருக்காது. கூடிய சீக்கிரம் உன் கழுத்தில் தாலி ஏறினால் தவிர எனக்கு நிம்மதி இருக்காது” என்று சொல்லிக் கொண்டே பெருமூச்சு விட்டாள்.
இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவள் போல் கத்தினாள். “வெட்கமில்லாமல் திருஷ்டிப்பொம்மையாக என் முன்னால் நிற்கிறாயே? போ அந்தப் பக்கம். நீ செய்த காரியத்திற்கு உன்னை என்ன செய்தால் தேவலை? நான் செத்தால் தவிர என்னுடைய தவிப்பு உனக்குப் புரியாது. உனக்கு புத்தி வருவதை இந்த ஜென்மத்தில் பார்க்கப் போகிறேனோ இல்லையோ?”
நான் மெதுவாக அறையை விட்டு வெளியேறி§ன். சற்று நேரம் கழித்து என்னைடைய அறைக்கு வந்தேன். ராஜேஸ்வரி மேஜைமீது இருந்த பொருட்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தாள். நடுநடுவில் புடவைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டிருந்தாள்.
அருகில் சென்று அவள் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டேன். கையை உதறிவிட்டு தொலைவாக சென்றாள். சற்றுமுன் நான் கட்டிலின் மீது வீசி போட்ட புடவையை மடித்து வைக்கத் தொடங்கினாள். அருகில் சென்று புடவையைப் பிடுங்கிக் கொண்டேன். “என்மீது கோபமா?” என்று கேட்டேன்.
ராஜி என் பக்கம் திரும்பவில்லை. “அண்ணி! ஊருக்குப் போகிறேன். வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது” என்றாள்.
ராஜேஸ்வரியின் கையைப் பிடித்து பலவந்தமாகக் கட்டில் மீது உட்காரவைத்தேன். நடந்ததையெல்லாம் சொன்னேன். ராஜி பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். “அண்ணண் வந்தானா? என்னிடம் சொல்லவே இல்லையே?” என்றாள்.
“சொன்னால் என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியாதா?”
“நேற்றும் இன்றும் நீ ரகசியமாக வெளியில் போனது அண்ணனை சந்திப்பதற்காகவா?”
ஆமாம் என்பது போல் தலை அசைத்தேன்.
கவலையிலிருந்து விடுப்பட்டவள் போல் ராஜேஸ்வரி என்னைப் பார்த்து சிரித்தாள். “நன்றாக இருக்கு. நீ வேறு யாரையோ சந்திப்பதற்காக போகிறாய் என்று சாரதி எண்ணெயில் விழுந்த அப்பம்போல் குதித்துக் கொண்டிருக்கிறான்” என்றாள்.
திடீரென்று ராஜி என் கையை பற்றிக் கொண்டாள். “அண்ணி! சற்று முன் நீ வீட்டில் இல்லாத போது என்ன நடந்தது தெரியுமா? சாரதி வந்ததும் உனக்காக வீடு முழுவதம் தேடினான். நீ தென்படவில்லை. நீ வீட்டில் இல்லை என்று சொன்ன பிறகும் போகாமல் உட்கார்ந்து கொண்டான். என்னை அழைத்து குடிக்க தண்ணீர் வேண்டுமென்று கேட்டான். கொண்டு போய் கொடுத்தேன். மீனா எங்கே போனாள் என்று உண்மையிலேயே தெரியாதா என்று திரும்பத் திரும்ப கேட்டான். சத்தியமாக தெரியாது என்றேன். முக்கியமாக ஒரு விஷயம் பேசணும் என்று சொல்லி என்னை உட்காரச் சொன்னான். உட்கார்ந்து கொண்டேன்.
“உங்களிடம் ஒரு உதவி கேட்கப் போகிறேன். செய்வீங்களா?” என்று கேட்டான்.
என்னால் செய்யக்கூடிய காரியம் என்றால் கட்டாயம் செய்கிறேன் என்றேன்.
“சமீபகாலமாக மீனாவின் போக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அவள் மனதில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது என் சந்தேகம். இது உண்மையா இல்¨யா என்று நீங்கள்தான் கண்டுபிடித்துச் சொல்லணும் ” என்றான். எனக்கு பயமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“இந்த உதவியை மட்டும் நீங்க எனக்குக் கட்டாயமாகச் செய்து தீரணும். உங்களுடைய உபகாரத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நான் செல்லாத காசு ஒன்றுமில்¨. பிடிக்காவிட்டாலும் மீனாவை வலுக்கட்டாயமாக என் தலையில் கட்டுவதற்கு” என்றான்.
நான் சரி என்று சொல்லும் வரையில் விடவே இல்லை. மேலும் “இந்த விஷயம் மீனாவுக்கோ, அவளுடைய அம்மாவுக்கோ தெரிய வேண்டாம். இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும். சத்தியம் செய்து கொடுங்கள்” என்று கையை நீட்டினான். நான் சத்தியம் செய்யவில்லையே தவிர வாக்குக் கொடுத்தேன்.” வேகவேகமாக ஒரே மூச்சில் ராஜேஸ்வரி சொல்லி முடித்தாள்.
நான் புதிய விஷயம் கேட்பதுபோல் திகைப்புடன் பார்த்தேன். ராஜி இப்படி நிஷ்கல்மிஷமாக சொன்னதற்கு சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சாரதி ராஜியிடம் இப்படி கேட்டதற்கு ஆத்திரம் ஏற்பட்டது. பெரிய மனிதன் என்ற போர்வையில் இருப்பவர்கள் இப்படித்தான். முகத்திற்கு நேராக எதையும் கேட்டுவிட மாட்டார்கள்.
வலிந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னேன். “பின்னே என்ன கவலை? என்னுடைய பாய்பிரண்ட் உங்க அண்ணன்தான் என்று சொல்லிவிடு” என்றேன்.
“என்ன பேச்சு இது அண்ணி? அண்ணன் உனக்கு வேற்று மனிதனா என்ன? இருவரும் சந்தித்து பேசிக்கொண்டால் அதில் தவறு என்ன இருக்கிறது?” ராஜியின் முகம் வாடிவிட்டது. “நம் இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் என்ன பிச்னை என்று எனக்குத் தெரியாது. அண்ணனும் நீயும் அத்தைபிள்ளை மாமன்மகள்தானே. அத்தானும், அம்மாங்காவும் உரிமையுடன் பழகுவது இந்த உலகத்தில் நடக்காத விஷயமா? அண்ணன் இந்த ஊருக்கும் வந்தும் என்னைப் பார்க்காமல் போய்விட்டானே? என்மீது கோபம் வந்துவிட்டதோ என்னவோ?” என்றாள் ராஜி.
“ச்ச.. ச்ச.. அப்படி எதுவும் இல்லை. உன்னை கடிதம் எழுதச் சொன்னான். மாதக் கடைசியில் மறுபடியும் வரப் போகிறானாம்” என்றேன். கிருஷ்ணன் அவளை அனுப்பி வைக்கச் சொல்லி வற்புறுத்தி சொன்ன விஷயத்தை நான் ராஜியிடம் சொல்லவே இல்லை.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்