பரிமளவல்லி

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

அமர்நாத்


2. ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’

ஜனவரியின் பின்பாதியில் ஒரு வியாழன். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். அந்த தினத்தில் பரிமளாவுக்கு ஒன்றல்ல, மூன்று நல்லசெய்திகள். திடீரென்று எங்கிருந்தோ குதித்த செய்திகளல்ல. எதிர்பார்த்தவைதான். எதேச்சையாக ஒரேநாளில் தெரியவந்ததும் அதிசயமென்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், அன்றைய தினம் அவள் வாழ்வில் நடக்கப்போகும் திருப்பங்களுக்கு முன்னுரையாக அமைந்தது.
‘ஸ்டாட் ஏபி (ளுவயவளைவiஉள-யுனஎயnஉநன Pடயஉநஅநவெ)’ வகுப்பு ஒன்பதுமணிக்கு என்பதால் எட்டுமணிக்கே பெண்கள் மருந்தகத்தில் ஒரு அபாய்ன்ட்மென்ட். ஒருபடுக்கைக்கும், இருநாற்காலிகளுக்கும், கால்நீட்டவும் மட்டுமே இடமளித்த ஒருகுட்டி அறைக்கு பரிமளாவை அழைத்துவந்த நர்ஸ் உடலின் பௌதிக குணங்களை அளந்து எழுதிக்கொண்டாள். டாக்டர் வருவாளென்று சொல்லிவிட்டு அகன்றாள். பரிமளா அதிகநேரம் காத்திருக்கவில்லை. காலையிலேயே டாக்டரைப் பார்க்கவருவதில் ஒருலாபம்.
பலஆண்டுகளாக பரிச்சயமான டாக்டர். பரிமளா பணியாற்றும் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி. மற்றவர்கள் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் முகம்.
“குட்மார்னிங், பரி!”
“குட்மார்னிங் டாக்!”
“இன்று எப்படி இருக்கிறாய்?”
“இதைவிட நன்றாக இருந்ததில்லை.”
வருஷாந்திர உடற்சோதனையை ஆரம்பிக்குமுன் எதிரில் அமர்ந்து, “சென்ற ஆண்டு எப்படி இருந்தது?” என்று விசாரித்தாள்.
“எப்போதும்போல் சுவாரசியமான ஆசிரியத்தொழில், அதைத்தவிர மற்றசில ஈடுபாடுகள். எதிர்பாராத நிகழ்வுகள் எதுவுமில்லை. திருப்தியாகப் போனதாகத்தான் சொல்ல வேண்டும். உனக்கு?”
“பெண் கின்டர்கார்ட்டன் போக ஆரம்பித்தபோது கொஞ்சம் தகராறு கொடுத்தாள். இப்போது அவளுக்குப் பிடித்துவிட்டது. ஜான் வேலையில் சந்தோஷமாக இருப்பதாகத் தெரிகிறது.”
டாக்டர் எழுந்ததும் பரிமளா படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள். தொட்டும், கேட்டும், உற்றுப்பார்த்தும் நடந்த மாமூல் சோதனைகள் முடிந்து, “நீ நல்ல ஆரோக்கியத்தில் இருக்கிறாய்” என்று சான்றிதழ் கொடுத்தாள்.
உடைகளை திரும்ப அணிந்த பரிமளா, “தாங்க்ஸ் டாக்!” என்றாள்.
பரிமளாவின் வாழ்க்கையை ஓரளவு அறிந்தவள் என்பதால், “கட்டுப்பாடாக கவலையற்று நீ வாழ்வதன் பலன்” என்று அவளே காரணம் சொன்னாள்.
கையில் எடுத்துவந்த மருத்துவ அறிக்கையைப் பார்த்து, “உயரத்துக்கேற்ற எடை. உடற்கொழுப்பின் விகிதம் இருபத்திமூன்று சதம்தான். ‘மாமோக்ராமி’ல் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை. இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் சாதாரணத்துக்கு அதிகமில்லை. முக்கியமாக, ‘எச்டிஎல்’ அறுபதுக்குமேல். நீ நிச்சயம் நூறுவயதுவரை வாழ்வாய்” என்றாள்.
அதைக்கேட்டு உள்ளுர சந்தோஷப்பட்டாலும், “மூளை மழுங்காமல் இருக்கும்வரை வாழ்ந்தால் போதும்” என்று பதிலளித்தாள் பரிமளா.
“அதற்கு எப்போதும் வேலைகொடுத்துக்கொண்டே இரு! அதுமட்டுமல்ல. நண்பர்களை இழந்துவிடாதே! அதிலும், சிறுவயது நட்பு ஒரு பொக்கிஷம். என்னுடன் பள்ளியில் படித்த இருபெண்கள் சான்ஹொசேயில் இருக்கிறார்கள். சமுதாயத்தின் கீழ்ப் படியில் வாழ்பவர்கள். என்னுடைய படிப்பையும் பதவியையும் கழற்றிவைத்துவிட்டு அவர்களை மாதமொருமுறை ‘போலிங்’கிற்கு அழைத்துப்போவேன். அப்போது எனக்கு இருபதாண்டுகளுக்குமுன் சென்றதுபோல் இருக்கும்.”
அறிக்கையில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதைக் கவனித்து, “நீ இன்னும் ‘ஃப்ளு ஷாட்’ போட்டுக்கொள்ளவில்லை போலிருக்கிறதே” என்றாள்.
“எப்படியோ மறந்துவிட்டது” என்றாள் பரிமளா தவறுசெய்த மாணவிபோல்.
“மருந்து தற்போது கைவசம் இல்லை. வந்ததும் உன்னைக் கூப்பிடுகிறோம். வந்து போட்டுக்கொள்! அப்புறம், உன்வயதில் பெருங்குடலை சோதிப்பது மிக அவசியம். அதற்கு ‘கோலனாஸ்கோபி’ செய்வது நல்லது. இரண்டுநாள் தேவை. உனக்கு எப்போது சௌகரியப்படும்?”

ஸ்டாடிஸ்டிக்ஸ் வகுப்பில் அன்றைய பாடம் ‘இரண்டு வேறுபாடுகளுக்கிடையே உள்ள உறவைக் கண்டறிதல்’. பரிமளாவின் விளக்கம் பாதியில் இருந்தபோது ஒலியியக்கத்தில் ப்ரின்சிபல். “மிகமிக மகிழ்ச்சியான, இதுவரை பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் நடந்திராத, எல்லோரும் பெருமைப்படக்கூடிய செய்தி” என்று ஆவலைத் தூண்டிவிட்டு, “பீடர் பெல்லானி இன்டெல் விஞ்ஞானசாதனைப் போட்டியின் இறுதிக்கட்டத்தில் பங்குபெறும் நாற்பது மாணவர்களில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கும், அவன் ஆராய்ச்சிக்கு வழிகாட்டிய டாக்டர் பரிமளா கோலப்பனுக்கும் பாராட்டுகள்” என்று சந்தோஷமிகுதியால் கரகரத்த குரலில் சொல்லிமுடித்தாள். வகுப்பில் எல்லோரும் கைதட்ட பீடர் வெட்கத்துடனும் பெருமிதத்துடனும் தலைகுனிந்தான். ஒருசிலர் அவனை மதிப்புடன் பார்த்தார்கள். மற்றவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத ‘நெர்ட்’ என்று நினைத்தார்கள்.

பெயரளவில் இரண்டரைமணிக்கே பள்ளிநேரம் முடிந்தாலும், மாணவர்களின் வாரப்பயிற்சிகளைத் திருத்தி, வகுப்பில் சொல்லிக்கொடுத்தது புரியாத ஒருசிலருக்கு பாடத்தை விளக்கிவிட்டு நாலரைக்கு மேல்தான் பரிமளா வீட்டிற்குக் கிளம்புவது வழக்கம். அன்று பீடர் பெல்லானி அவளைச் சந்திக்க வந்தான்.
சென்ற ஜனவரி கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தபோது பீடர், “மிஸ் கோலப்பன்! இதுவரை பல மாணவர்கள் உங்கள் மேற்பார்வையில் ஆராய்ச்சி செய்திருப்பதாக அறிகிறேன். எனக்கும் உதவிசெய்ய முடியுமா?” என்றான் பணிவாக.
ப்ரீ-கால்குலஸ் வகுப்பில் அவன் ஆர்வம் பாடத்தையும் தாண்டிச்சென்றதைப் பரிமளா கவனித்திருந்தாள். அதனால், “சந்தோஷமாக உனக்கு உதவுவேன். பள்ளிகளில் விற்கும் சர்க்கரை சோடாவின் விலை ஐம்பது சென்ட்தான். ஆனால் அதன்மூலம் மாணவ சமுதாயத்திற்கு விளையும் கேடுகளை டாலர் கணக்கில் மதிப்பிட ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்” என்றாள்
அவன் மௌனம் சம்மதமின்மைக்கு அடையாளமாகத் தோன்றியது.
“நீயே எதைப்பற்றியாவது யோசித்திருந்தால் சொல்!”
“போப் வார்த்தைகளை நான் நிரூபிக்க வேண்டும்” என்று உடனே சொன்னான். அவன் பெயரிலிருந்து அவன் கத்தோலிக்கன் என்று ஊகித்ததால், பரிமளாவுக்கு அது அதிர்ச்சி தரவில்லை.
“எந்த வார்த்தைகளை?”
“ஆஃப்ரிகாவில் எய்ட்ஸ் பரவுவதைத் தடுப்பதில் ஆணுறைகள் பயனில்லை என்று அவர் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லோரும் தலைக்குத்தலை அவரைப் பழிப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை.”
பரிமளாவும் அந்தச் செய்தியைப் படித்திருந்தாள். “நான் அவரை நிந்திப்பதாக நீ நினைக்கக்கூடாது. எனக்கும் அவர்மேல் மரியாதை உண்டு. அவர் கூற்று உண்மையாகவே இருக்கலாம். ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானிப்பது சரியில்லை. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால் நேரம்தான் வீண்.”
பீடர் விடவில்லை. “நான் நடுநிலையில் நின்று தரவுகளை ஒப்பிட்டுப்பார்த்து, இறுதியில் அதே முடிவுக்கு வந்தால்…”
“அப்போது உனக்கும் திருப்தி. அந்த முடிவிற்கும் அர்த்தமிருக்கும். நீ சொன்னதை யோசிக்க நேரம் கொடு!”
மறுநாள் பீடரை அழைத்து, “நீ செய்ய விரும்பும் ஆராய்ச்சியை விஞ்ஞானத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தேன். மற்ற நுண்கிருமிகள்போல் எய்ட்ஸ் வைரஸ் எதேச்சையாகத் தொற்றுவதில்லை. மனித உறவுகளையும், கான்டோம் கிருமிகளைத் தடுக்கும் திறனையும் கணித மாடல்களில் பரிட்சிப்பதன் மூலம் அந்த நோய் பரவுவதைக் கணிக்க முடியும். உலகளாவிய நோக்கில் சிலர் அதைச் செய்துவருகிறார்கள். உனக்கிருக்கும் காலவரம்பிற்குள் உடலுறவு மலிவுப்பொருளாகிவிட்ட ஆஃப்ரிக நாடு ஒன்றில்தான் கவனம்வைக்க முடியும்” என்றாள். “முதலில், ஆராய்ச்சியின் குறிக்கோள் என்ன என்பதை வரையறுப்பது மிகமுக்கியம். ‘கான்டோம் பயன்படுத்துவதும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் எய்ட்ஸ் பரவுவதை எப்படி பாதிக்கும்’ என்பது பொருத்தமான குறிக்கோள். ஆணுறை எப்படிப்பட்ட கருத்தடை சாதனம், அதுபற்றிய போப்பின் கருத்து சரியா என்பதெல்லாம் இந்தத் தேடலுக்கு அப்பாற்பட்டது. உனக்கு மறுப்பு இல்லையென்றால் நாம் வேலையை ஆரம்பிக்கலாம்”
இப்போதைய பீடரின் மௌனம் சம்மதத்தைத் தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்பு, எய்ட்ஸ் டுடே ஆகியவற்றின் தளங்களிலிருந்து அவன் தேடியெடுத்த எண்கள், அந்த ஆஃப்ரிக நாட்டின் உடலுறவு வழக்கங்கள், பெண்களின் சமூக அந்தஸ்து ஆகியவற்றை சோதித்து சீராக்க பரிமளா பீடருக்கு கற்றுத்தந்தாள். ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞான வழிமுறையிலிருந்து விலகாமல் அவனும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தான். சென்ற அக்டோபரில், ‘ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பரஸ்பர விசுவாசமான உறவுதான் அந்த மக்களைக் காப்பாற்றும், ஆணுறைகள் அல்ல’ என்ற முடிவை எட்டியபோது பீடருக்கு பரம திருப்தி. ஒருசனிக்கிழமை தன் சர்ச்சில் ‘போப்பின் வார்த்தை, கடவுளின் கட்டளை’ என்று அந்தக் கண்டுபிடிப்பை பிரசங்கம் செய்தான். பரிமளாவையும் அதற்கு அழைத்திருந்தான். அவன் தன்னம்பிக்கையை வியந்தாள். நவம்பரில் போட்டிக்கு அனுப்பிய இருபதுபக்க ஆராய்ச்சி அறிக்கையை மதச்சார்பு இல்லாமல் மிகமிக கவனமாக நேர்கோட்டில் நடப்பதுபோல் அவனை எழுதச்சொன்னாள். குயiவாகரட டழஎந எள. உழனெழஅள in வாந ளிசநயன ழக ர்ஐஏ in யுகசiஉய என்ற அவனுடைய கட்டுரை மிகவும் பிடித்திருந்தாலும், அதன் பொருள் போட்டியின் நீதிபதிகளிடையே எடுபடுமா என்பதில் அவளுக்கு சந்தேகம்தான்.
“கன்கிராஜுலேஷன், பீடர்!”
“தாங்க்ஸ், மிஸ் கோலப்பன்!”
“உன்னுடைய கணிப்பும், எழுத்துத்திறனும் படிப்பவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். நல்ல முயற்சி.”
“நான் எதிர்பார்க்கவே இல்லை.”
“குட். உனக்கு இன்னுமிரண்டு வேலைகள் பாக்கி. இறுதிப்போட்டிக்கு ஒரு போஸ்டர் தேவை. உன் கண்டுபிடிப்புகளை ஒருபெரிய போஸ்டரில் அடக்கவேண்டும். தெளிவான படங்களும், அட்டவணைகளும் நிறைய இருந்தால் பார்ப்பவர்களுக்கு உன் ஆராய்ச்சி உடனே புரியும்.”
“பவர்பாய்ன்ட்டில் செய்கிறேன்.”
“அத்துடன், நம் முடிவுகளை ‘Nஃபமிலி ஹெல்த் ரிசர்ச்’ என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்க முடியும் என நினைக்கிறேன். போட்டிக்கு நீ அனுப்பிய அறிக்கையை, இந்தத்துறையில் இருப்பவர்களுக்காக, வெளிப்படையான விவரங்களை நீக்கிவிட்டு சுருக்கமாக எழுது! போஸ்டர், பேப்பர் இரண்டையும் எனக்கு மின்-தபாலில் அனுப்பிவை. சரிபார்க்கிறேன்.”

பரிமளா வீட்டிற்கு வந்தபோது கராஜின் முன்னால் மூன்றாவது நல்லசெய்தி காத்திருந்தது. ‘யுபிஎஸ்’ ஆள் வைத்துவிட்டுச் சென்ற ஒரு அட்டைப்பெட்டி. அவளுடைய பத்தாண்டுகால உழைப்பின் பலன் அதில். உழைப்பு என்று சொல்வது சரியில்லை. அத்தனை காலமும் மனதை முழுமையாக ஈடுபடுத்தி, கடைசியில் பலன் கிடைக்குமா என்று கவலைப்படாமல், தடங்கல்கள் எதிர்ப்பட்டாலும் கைவிடாமல் தொடர்ந்திருக்கிறாள். யோசித்தபோது, பத்தாண்டுகளா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒருமனதாக ஒருகாரியத்தில் ஆழ்ந்துபோனால் காலம் கடந்துசெல்வது தெரியாது போலிருக்கிறது.
உயிரியல் ஆசிரியை மிஸ் பார்க்கரின் வகுப்பில் நடந்த ஒருசிறு சம்பவம்தான் பரிமளாவின் முயற்சியை ஆரம்பித்துவைத்தது. அந்த சம்பவம்கூட நேற்றுநிகழ்ந்ததுபோல் இருக்கிறது. அதொன்றும் அபூர்வமானதல்ல, அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் தவறாமல் நடப்பதுதான். மிஸ் பார்க்கர் பரிணாமத்தை நடத்தத்தொடங்கி அதன் நுணுக்கங்களை விளக்குவதற்குள், ஒருமாணவியின் கேள்வி அவளைத் திணறடித்தது. அதற்காகவே கேட்கப்பட்ட கேள்வி. நல்லவேளை, அன்று வெள்ளிக்கிழமை. ‘யோசித்து அடுத்த வகுப்பில் பதில்சொல்கிறேன்’ என்று சமாளித்தாள். சமீபத்தில் பட்டம்பெற்று வேலையில் சேர்ந்திருந்த மிஸ் பார்க்கர் அந்தக்கேள்வியை அலட்சியம் செய்யாமல் அதற்கு விஞ்ஞானபூர்வமான பதிலைத்தர விரும்பினாள். அவள் கணிதம் அதிகம் படிக்கவில்லை, படித்ததும் மறந்துவிட்டது. முதல்சந்திப்பிலிருந்தே அவளுடன் நட்போடு பழகிய சக-ஆசிரியை பரிமளாவின் உதவியை நாடினாள். பரிமளா உயிரியலை முறையாகப் பயின்றதில்லை. ஆனாலும், இரண்டுநாள் கேள்விக்கான பதிலை யோசித்து, உயிரியல் புத்தகத்தை அலசி, திங்கள் மிஸ் பார்க்கரின் வகுப்பிற்குச் சென்றாள். மிஸ் பார்க்கர் அந்த மாணவியைப் பரிமளாவுக்கு அறிமுகம் செய்தாள்.
“உன் சந்தேகம் என்ன?”
“ஒருகணினி திரும்பத்திரும்ப சாவிப்பலகையை எவ்வளவுதடவை அடித்தாலும் ‘ஹாம்லட்’டை இயற்றாது. கடற்கரையோரப் பாறையில் அலைகள் எத்தனைமுறை வந்துமோதினாலும் ஒரு அழகிய சிலை வடிவாகாது. அப்படியிருக்க, மனிதனின் கண் போன்ற ஒரு நுண்ணிய உறுப்பு மரபணுக்களில் எந்த ஒழுங்குமுறையுமின்றி நிகழும் திரிபுகளால் எப்படி உருவாக முடியும்?” என்று சொல்லிவிட்டு அவள் கர்வத்தோடு வகுப்பைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்.
பரிமளா அதிர்ந்துவிடவில்லை.
“கந்தரகோளமான இயக்கங்கள் (சயனெழஅ அழஎநஅநவெள) வேறு, தற்செயலான நிகழ்வுகள் (உhயnஉந நஎநவெள) வேறு. நீ குறிப்பிட்ட கணினியின் இயக்கமும், கடலலைகளும் முன்னதில் அடங்கும். உயிரினங்களின் பரிணாம மாறுதல்களைப் பின்வகையில் சேர்க்கலாம். அவை தற்செயலாக ஏற்பட்டாலும், ஏற்கனவே நடந்த மாற்றங்களை அடிப்படையாக வைத்துத்தான் நிகழ்கின்றன. உன்னையே எடுத்துக்கொள்! இரண்டு வயதில் பலவிதமான சப்தங்களை உன்னால் எழுப்பமுடியும். அந்த ஒலிகளை ஒருகணினியில் பதிவுசெய்து அவற்றை மாற்றிமாற்றிப் போடச்செய்தால், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்தக்கணினி உன்னைப்போல் இப்படியொரு புத்திசாலித்தனமான கேள்வியை இவ்வளவு தெளிவாகக் கேட்டிருக்காது.”
“நான் கேட்கவில்லை. என் பாஸ்டர்தான் கேட்கச்சொன்னார்” என்று மழுப்பினாள் அந்தப்பெண்.
அதைக் கண்டுகொள்ளாமல் பரிமளா தொடர்ந்தாள். “நீ பேசத்தொடங்கியபோது மற்றவர்களுக்கு புரியக்கூடிய, அவர்கள் பாராட்டிப் பரிசளித்த ஒலிச்சேர்க்கைகள் மட்டுமே உன் மூளையில் பதிந்தன. பள்ளியில் உன் எழுத்துப்பிழைகளையும், இலக்கணத் தவறுகளையும் ஆசிரியை திருத்தியதால் கோவையாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டாய். தக்க சூழ்நிலை இருந்ததால்தான் பதினைந்து ஆண்டுகளிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுபோலத்தான், மரபணுக்களில் (னுNயு) தற்செயலாக நிகழும் மாறுதல்களை சூழலின் தேவைக்கேற்ப இயற்கை படிப்படியாகச் செதுக்குகிறது. முன்பு செய்த மாற்றங்களை அலைகள் மறந்துவிடுவதால் கடலோரப்பாறைகள் சிலைகளாவதில்லை.”
பள்ளிப்படிப்பிற்குப் பிறகு அந்த மாணவி கல்லூரியில் உயிரியல் படிக்கச் சென்றதால் அவளுக்கு பரிமளாவின் விளக்கம் புரிந்திருக்க வேண்டும். பரிமளாவுக்கும் கந்தரகோளமான இயக்கங்களையும், தற்செயலான மாறுதல்களையும் பிரித்தது சுவாரசியமான கருத்தாகத் தோன்றியது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள அமஸானில் புத்தகங்கள் வாங்கிப் படித்தாள். அவற்றிலிருந்து அறிந்ததோடு சொந்த சரக்கையும் கலப்பதற்கு இரண்டாண்டுகள். ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ என்கிற தலைப்புடன் ஒருசிறு கட்டுரையை ஸ்ரீஹரிராவுக்கு அனுப்பினாள். ‘இரண்டு பதங்களுக்குமிடையே நுண்ணிய வேறுபாடுகளை ஏற்படுத்தி நீ அவற்றை விளக்கியிருப்பது புதுமை. உன்னுடன் பலகாலம் பழகியதால் நீ சொல்லவந்ததை என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனால் மற்ற துறைகளில் இருப்பவர்களுக்கும், பிஎச்.டி. வாங்காதவர்களுக்கும் புரியுமா என்பது சந்தேகம்தான். முதலில், ‘க்ரியேடிவ் ரைடிங்’கிற்கு ஒரு வகுப்பு எடுத்துக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்’ என்ற பதில் வந்தது.
ஸ்ரீஹரிராவ் அவளைவிட நான்காண்டுகள் சிறியவர், பிஎச்.டி.க்கான ஆராய்ச்சியின் வழிகாட்டி. ஆப்பில் கம்ப்யூட்டர் போன்ற புத்திதீட்சண்யம். அவர் அறிவுரையை ஏற்று, சான்ஹொசே பல்கலைக்கழகத்தின் மாலைவகுப்புகளில் எழுத்துத்திறனை வளர்த்துக்கொண்டு தன் கட்டுரையைத் திரும்பப் படித்தபோது அவளுக்கே அதன் குறைபாடுகள் நிதர்சனமாகத் தெரிந்தன. அதன் திருத்திய வடிவம் ஸ்ரீஹரிராவுக்குப் பிடித்திருந்தது. இன்னும் சில மாறுதல்களைச் செய்து ‘சயின்டிஃபிக் அமெரிகன்’ சஞ்சிகையில் அதை வெளியிட உதவினார். அந்தக் கட்டுரை வாசகர்களிடையே பலத்த விவாதத்தைக் கிளப்பியதால் அதன் கருத்தை விஸ்தரித்து ஒரு புத்தகமாக வெளியிடலாமென்று அவரே யோசனை சொன்னார். இரண்டு பதங்களுக்கும் கணித விளக்கங்களோடு மனித வாழ்க்கையையும் அவை எப்படி நிர்ணயிக்கின்றன என்று விவரிக்க இன்னும் ஐந்தாண்டுகள்.
பத்து பிரதிகள் கொண்ட அந்த பார்சல் இரண்டுநாட்களுக்கு முன் அச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டதென்று பரிமளாவுக்குத் தெரியும். இருந்தாலும், பெட்டியை வீட்டிற்குள் எடுத்துவந்து பரபரப்புடன் அதைப்பிரித்து ஒரு பிரதியைக் கையிலெடுத்தபோது உடலெங்கும் தனி பரவசம். வாழ்க்கை வீணாகிவிடவில்லை, என ஒரு திருப்தி. மேலட்டையின் வண்ணப்படத்தில் சுண்டப்பட்ட ஒருகாசும், ஆறுமுகங்கள் கொண்ட இருபகடைகளும், ஒருதாயக்கட்டமும். அதன் வௌ;வேறு கட்டங்களில் சிறுபடங்கள். ஜாதகம், திருமணக்கோலம், லாஸ்வேகஸின் காசுபோடும் இயந்திரம், பேஸ்பால் பந்தும் உருளைக்கட்டையும், ‘போகர்’ ஆட்டத்திற்கான ஐந்து சீட்டுகள், தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு அரசியல்வாதி… என அவை புத்தகத்தில் விவரித்த கருத்துக்களைக் குறிப்பால் உணர்த்தின.
இரண்டாண்டுகளுக்கு முன் புத்தகத்தைப் பிரசுரிக்க பரிமளா முயன்றபோது பெரிய பதிப்பகங்கள் அக்கறை காட்டவில்லை. மர்மக்கதைகள், பாடநூல்கள், அரசியல்வாதிகள் தங்கள் தவறுகளுக்குத் தரும் சப்பைகட்டுகள், சமூகத்தில் ஒருபகுதியினரை ஏசும் புத்தகங்கள் பணத்தைக் கொழிக்கும்போது, வினோதமான பெயருடைய ஒரு பள்ளிஆசிரியையின் தத்துவ விசாரம் யாருக்கு வேண்டும்? ‘தலைப்பு நன்றாக இருக்கிறது, ஆனால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமென்று நிச்சயமில்லை’ என்று தயாராக வைத்திருந்து அனுப்பப்பட்ட மறுப்புக் கடிதங்கள் குமியத் தொடங்கின. சென்ற ஆண்டு, சான்ஃபிரான்சிஸ்கோவின் ‘ப்ளு ஸ்பாட்’ என்கிற பரிட்சாத்த பதிப்பகம் புத்தகத்தை வெளியிட சம்மதித்தது. அவர்களின் விருப்பத்திற்கிணங்க எளிய உரைநடைக்கு மாற்றினாள். சுவாரசியமான சரித்திரத் துணுக்குகளைச் சேர்த்தாள். அவர்கள் வரைந்த சித்திரங்களுக்கு விளக்கம் எழுதினாள். விற்பனையின் வருமானத்தில், மாதச்சம்பளம் வாங்கும் கலைஞர்களைக் கவனித்த பிறகுதான் அவளுக்கு சன்மானமென்று ஒப்பந்தம். அவள் அதையொரு பொருட்டாக நினைக்கவில்லை.
புத்தகத்தை அழகுபார்த்தது போதுமென்று தோன்றியபோது, வீட்டுஉடைக்கு மாறிக்கொண்டு பரிமளா சமையலறைக்கு வந்தாள். பத்துநாட்களுக்கு முன் வந்துசென்ற பொங்கலின்போதும், அதற்கு முந்தைய கிறிஸ்மஸின்போதும் வராத பண்டிகைசந்தோஷம் அவளுக்கு. புதிதாகத் தளிகைசெய்ய ஆசை. ஆனால், ‘ஃப்ரிஜ்’ஜில் வெண்டைக்காய் மோர்க்குழம்பும், சர்க்கரைவள்ளிக்கிழங்கு கறியும் முறைத்தன. மறுநாள் அவள் ஒருவிருந்துக்குச் செல்ல வேண்டும். புதிதாக ஒன்றைச் செய்து அதையும் பழையதாக ஆக்குவதில் அர்த்தமில்லை. சமைப்பதற்கு பதில் மைசூர் பாக் பண்ணலாம். இந்திய இனிப்புகளில் கையில் ஒட்டாமல் எடுத்துத்தின்ன அதுதான் சௌகரியம். ‘டயட்’டிலிருக்கும் ஆசிரியைகள்கூட குற்ற உணர்வில்லாமல் மைசூர் பாக்கின் இரண்டாவது துண்டிற்குக் கைநீட்டுவார்கள்.
வெண்ணெயை உருக்க ஆரம்பித்தாள். அவள் வழிகாட்ட ஆராய்ச்சியில் அடியெடுத்துவைத்த பதின்மூன்றாவது மாணவன் பீடர். பலர் அரைச்சுற்றுப் பரிசை பெற்றிருக்கிறார்கள். இறுதிப்போட்டிக்கு இதுவரை யாரும் அழைக்கப்பட்டதில்லை. அவன் சாதனை அவளுக்குப் பெருமிதத்தைத் தந்தது. இன்னொரு அடுப்பில் சர்க்கரைப் பாகு. எதையும் விட்டுவைக்கக் கூடாதென்று புத்தகத்தில் எக்கச்சக்கமான கருத்துகளைப் புகுத்தியது தவறோ, படிப்பவர்களுக்குத் திகட்டுமோ என்று புதிய சந்தேகங்கள் தோன்றின. வேகமாக அடிபிடிக்காமல் கிளறிய மஞ்சள் விழுதை ஒட்டிக்கொள்ளாத தட்டில் ஊற்றினாள். விழுது கிட்டத்தட்ட உறைந்ததும் மழுங்கிய கத்தியால் வெட்டினாள். முதலில் போட்ட இணைகோடுகளை இரண்டாவது வரிசைக்கோடுகள் அறுபது டிகிரி கோணத்தில் வெட்டின. அது அவள் தந்தை காட்டிக்கொடுத்த வழி. துண்டுகள் சதுரங்களாக இல்லாமல் இணைகரங்களாகப் பிரிந்தன. அவற்றை டப்பாவில் வைப்பதற்குமுன் ஆறட்டுமென காத்திருந்தாள். டாக்டரின் கணிப்பு சரியானால் இன்னும் நாற்பதாண்டுகள் வாழ நேரிடலாம். நாற்பதாண்டுகளா? அத்தனை வருஷங்கள் பூலோகத்தில் என்ன செய்வது? இதற்கு முந்தைய நாற்பதாண்டுகள் எப்படி இருந்தன? பத்தொன்பது வயதில் கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்குச் செல்லநேரிட்டதிலிருந்து நிறைய கஷ்டங்கள், பல ஏமாற்றங்கள். முதல் பத்தாண்டுகள் மிகமெதுவாகச் சென்றன. அடுத்த பத்தாண்டுகள் அவள் கவனிப்பதற்குள் ஓடிவிட்டன. கடந்த பன்னிரண்டு வருஷங்களில் ஒருவித சமனநிலை. வருங்காலம் எப்படி போகுமென்று யோசித்தபோது திகைப்பாக இருந்தது.

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

அமர்நாத்

அமர்நாத்