களம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

ம.காமுத்துரை


<<1>>
“போடா… வெரசுனு ங்ஙொப்பாவக் கூட்டியா…” – சொர்ணம் அத்தைதான் அவனை கூட்டத்துக்குள்ளிருந்து பிரித்து இழுத்து வந்து சொன்னது.
அதுவரை அக்காவின் பிடியில் இருந்தான். அக்காவின் உடம்பு நடுங்கிக் கொண்டு கனகனவென சூடாயிருந்தது. இறுக்கமாய்த் தன்னைப் பிடித்துக் கொண்டிருந்தது. அந்த கதகதப்பும் அதிர்வும் அவனை அக்காவோடு மேலும் பிணைத்தது. இந்திரா அத்தையின் இழுவைக்கு முதலில் வர மறுத்தான். அவரது பிடியில் இருந்து கைகளை உருவிக் கொண்டான்.
வீட்டுக்குள் பெண்கள் கூட்டம் கேகே எனச் சேரச் சேர அவனுக்கும் நடுக்கம் பரவியது. எல்லாரும் அக்காவை கேள்வி மேல் கேட்டனர். அம்மா அவனைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிய அழுது கொண்டும், சமயத்தில் அக்காவை அடித்துக் கொண்டும் புரியாத வார்த்தைகளால் புலம்பியது.
சின்ன அக்கா செலுவியைக் காணம். கூட்டத்துக்குள் எதாச்சும் ஒரு மூலையில் இருக்கலாம்… இல்லாவிட்டால் பயந்து வெளியே வெளாடப் போயிருக்கும். அப்பாவும் இல்லை. அவர் காலம்பறவே வேலைக்குப் போயிடுவார்.
உள்ரூமுக்குள் இருந்த அக்கா அவனிடம் தான் முதலில் தண்ணீர் கேட்டது… “பாண்டீ…”
“பொறு… நானே பொம்பரத்த தேடிகிட்டிருக்கே…” சின்னக்குளத்தில் போய் விளயாட எல்லோரும் கிளம்பி விட்டான்கள். “நானும் வரேண்டா” – என்று சொன்னாலும் ஒருத்தனும் நிற்கவில்லை. “நாங்க போறம் சீக்கிரம் வந்துரு” – என்றபடி நடந்து கொண்டே இருந்தார்கள். அவன்கள் போய் கோடு கிழிச்சு ஆட்டத்தை ஆரம்பிக்கும் முன் போக வேண்டும்.
அலமாரியில் காணாம்… சன்னல் விளிம்பிலும் கிடைக்கவில்லை. சாட்டை மட்டும் இருந்தது. ஒருவேளை வெளியே விழுந்திருக்குமோ… சின்ன ஸ்டுலை எடுத்துப் போட்டு ஏறி சன்னல்கம்பியைப் பற்றி, கம்பியில் முகத்தை பதித்து பார்வையை வெளிப்பக்கமாய் தேட… அடுத்த வீட்டுச் சுவர்தான் தெரிந்தது.
அந்தச் சமயம் தான் போர்வை போர்த்திப் படுத்திருந்த அக்கா மறுபடியும் கேட்டது.
“யே… தவிக்கிதுடா…”
“எந்திர்ச்சு மோக்க வேண்டிதான…” – ஸ்டூலிலிருந்து இறங்கி சுவரோராமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குலுக்கைக்கடியில் கைவிட்டான். ‘மளுக்’கென சுண்டெலி ஒன்று உள்ளிருந்து இன்னொரு பக்கம் தாவி ஓடியது. பயந்து போய் கைகளை உருவிக் கொண்டான். ஆனாலும் உள்ளே இருப்பதாய் விரல் அறிவித்தது.
அவனது பதட்டத்தை கண்ட அக்கா.. “என்னாதுடா…” எனக் கேட்டது. “எலிக்குட்டி ஓடுது…” என்றான்.
“இன்னமும் கைய விடுற…”
“உள்ளதே பம்பரம் இருக்கு…” – சொல்லிக் கொண்டிருக்கும் போதே பம்பரம் சிக்கி விட்டது.
கைக்கு வந்ததும் அவனது அவசரம் ரெட்டிப்பாகியது. மனசும் காலும் அப்பவே ஓடத் தயாராகின.
“ப்ளீஸ்டா…” – மூன்றாவது முறையாக அக்கா கேட்டதும் எரிச்சல் வந்தது.
“ஒனக்கு பூராம் நாங்கதே செய்யணும், நீ ஒரு பொட்டும் அசையாத…” – அம்மாவின் குரலாய்ப் பேசினான். பம்பரத்தில் சாட்டையை சுற்றிப் பார்த்தான். அளவு சரியாய் இருந்தது. புறப்பட வேண்டியது தான்.
“இந்தாடா…” – அக்கா காசை நீட்டியது.
“எதுக்கு…? ஒண்ணும் வாங்க முடியாது… நா வெளாடப் போகணும்…” – அவசரமாய் வாங்க மறுத்தான். பேசாம தண்ணிய மட்டும் மோந்து குடுத்து தன் வேலையை முடித்துக் கொள்ள தயாரானான். நிக்க நிக்க வேல கூடிக்கிட்டே வரும் போல.
“ஒனக்குத்தாண்டா… வாங்கி சாப்டு…”
ஆச்சரியமாய் இருந்தது. வாங்கினான் ரெண்டு ரூபாய்க் காசு “திருப்பிக் கேக்க மாட்டியே…” – சந்தேகம் தீரவில்லை.
“வச்சுக்க…”
சேப்பில் போட்டவன் “நல்ல தண்ணியா, உப்புத் தண்ணியா…” – எனக் கேட்டான்.
“குடிக்கடா…”
“நல்லதண்ணியா…”
அடுப்பங்கரைக்குப் போனவன் முதலில் டம்ளரை எடுத்து தண்ணீர் மொண்டான். பிறகு சந்தேகம் வந்தது. குடித்து விட்டு இன்னொரு டம்ளர் கேக்கும்… மேலே சிலாப்பில் கவுத்தி இருந்த உருண்டைச் செம்பை எடுக்க, உயரம் எட்டவில்லை. மளிச்சென தவ்வி எடுத்த உடன் அடுக்கி இருந்த சிலுவர் கிண்ணம் கீழே விழுந்து சத்தம் எழுப்பியது.
அந்தச் சத்தம் வெளியிலிருந்து அம்மாவை அழைத்து வந்தது. உருண்டைச் செம்பு நிறைய தண்ணீர் மொண்டு நிற்கையில், “என்னா சத்தம் காலங்காத்தால…” என்றபடி அம்மா உள்ளே வந்தது.
“எதுக்குடா இம்புட்டுத் தண்ணி… கொல்லைல போயி தொட்டித் தண்ணி மோந்து மொகங்கழுவ வேண்டிதான… நல்ல தண்ணிய எதுக்கு வீணாக்குற…” – என்றது.
“எனக்கா?… அக்காக்கு…” – என்று உள் ரூமுக்கு நகர்ந்தான்.
“அக்காக்கா… இன்னம் எந்திரிக்கலியா… மணி பத்தாகப் போகுதூ… கண்ணுமுழிக்க எதுக்கு செம்புத் தண்ணி…” என்று அவன் கூடவே வந்த அம்மா… அவனை முந்திக் கொண்டு ரூமுக்குள் நுழைந்தது.
“என்னாடீ நாத்தம்… என்னத்தடி பண்ணுன… என்னாடி எளவு கூட்டுன… சொல்லுடி… என்னா நாறுது… அடிப்பாதகத்தி மகளே… என்னத்தடி செஞ்ச… மூட்டப்பூச்சி மருந்து வாட வருது…. சொல்லுடி…” என்று அக்கா போர்த்தி இருந்த போர்வையை பிடித்து உலுப்பி அரற்றியது.
பாண்டி கொண்டு வந்த தண்ணீர் இன்னமும் உள்வீட்டில் ஓரமாய் இருந்தது.
அம்மாவின் கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்கள் அக்காவை வெளி ரூமுக்கு இழுத்து வந்தார்கள். வரும் போது அக்கா அவனையும் கைபிடித்துக் கொண்டது. அப்போது தொடங்கிய அக்காவின் கைநடுக்கம் சொர்ணம் அத்தை வந்து விடுவித்து “போப்பா ங்ஙொப்பாவக் கூப்புட்டு வா கண்ணு… அக்காள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணுமாம்னு சொல்லி நிமிசத்துல வரணும்… ஓடு ஓடு…” – என்று முடுக்கி விடும் வரை குறையவில்லை.
“விடுடி அவன… ரெம்ப கரிசனக்காரி… அம்புட்டு பாசமும் பத்துதலும் இருக்கவ இந்தக் காரியத்தப் பண்ணலாமாக்கும்”என்று அக்காவைத் திட்டினார். தொடர்ந்து “உப்பு இருக்கா.. உப்பு… தண்ணீல கரச்சு எடுத்துவாங்க…” – என்று யாரையோ சத்தம் போட்டுச் சொன்னார்.

<<2>>
வடக்குத்தெரு கோயில் முக்குக்கு வந்தான். கீரைக்கல் வழியாகச் சுத்தி வராமல் குறுக்கு குறுக்காய் சந்து பக்கமாக ஓடிவந்தான்.
இந்தப்பக்கம் வந்ததுக்காக ஒருதரம் அக்கா கூட அவனைப் பாராட்டி சொன்னது, “சூப்பர்ரா தம்பி… இம்புட்டு சுளுவான பாதையைக் கண்டுபிடிச்சிருக்க.. எப்பிர்றா..?” என்றதோடு அம்மாவிடம் அதனை பெருமையாகச் சொன்னது.
“வடக்குத் தெருவுக்குப் போக பாண்டி குறுக்குப் பாத கண்டு பிடிச்சிருக்காம்மா… ஓர் நிமிசத்துல போயிர்லாம்…”
“கண்டபடி சுத்துற கழுதைக்கு காடுமேடெல்லாம் காலுக்கு கீழங்கறது சும்மாவா…! எம்புட்டு சுளுவான பாத காமிச்சாலும் ஒனக்கு மட்டும் போய்வர ஒருநாப் பொழுதாயிரும்…” என்று அவனைப் பாராட்டிய நிமிசத்தில் அம்மா, அக்காவைத் திட்டியது.
அம்மா வேலை செய்யும் கங்காணியக்கா வீடு வடக்குத்தெரு மச்சால் நாயுடு சந்தில்தான் இருக்கிறது. வேலை இருக்காவென விசாரிக்கவும், சம்பளம் வாங்கவும் அடிக்கடி அக்கா போய் வரும். அதைச் சொல்லிக் காட்டியது.
“ம்… போனவுடனே பதிலு சொல்றாகளாக்கும்… நான்னா அவகளுக்கு தொக்கு… ரசத்துக்கு அரச்சுக்குடு… இந்தக் கீரயப் பல்லுப் பாருன்னு எதுனாச்சும் வேல வச்சிருக்கு… வெரசுனு வான்னா எங்குட்டு வாரதூ…?”
“சண்டிக் கழுதக்கி சரக்குன்னா சாக்குதே…” அம்மாவின் வசவிலிருந்து தப்பிக்க மறுபடி அக்கா அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது, “எப்பிட்றா கண்டுபிடிச்ச..?”
அவனுக்கு பெருமையாயிருந்தது, “யேம் பிரண்டு இருக்கான்ல… ராகுல் அவெந்தே காம்ச்சான்…”
“அவெ வீடு அங்கதே இருக்கா…”
“ம்.. கோயில் பக்கத்துல… டீக்கடையயல்லா இருக்கல்ல அந்தலக்கு…”
இப்பவும் அந்த டீக்கடை பக்கம் தான் நின்றிருந்தான். கோயில் கேட் அடைத்திருக்க வாசலெங்கும் படிபடியாய் ஆள்கள் நிறைய உக்கார்ந்திருந்தார்கள். வெய்யில் அவர்கள் முகத்தில் வெள்ளையாய் இறங்கி இருந்தது. அதைப் பற்றியயல்லாம் கவலை கொள்ளாமல் பீடி குடித்துக் கொண்டும் பேப்பரை விரித்துக் கொண்டும், எதாச்சும் பேசிக் கொண்டும் இருந்தனர்.
பக்கத்தில் ஒரு அக்கா நீளமான பெஞ்ச் போட்டு நாலைந்து கேன்கள் வைத்து பால் ஏவாரம் பார்த்துக் கொண்டிருந்தது. காசு கொடுத்தும், சிலபேர் மஞ்சள் அட்டையைக் கொடுத்தும் பால் வாங்கிப் போனார்கள்.
எதித்தாற்போல் கொடிமர திண்டு. சிமிண்ட் பூசி திண்ணையாய் இருந்தது. அதில் சிலர் துண்டு விரித்துப் படுத்திருக்க, சிலபேர் விளிம்பில் காலைத் தொங்கவிட்டு எதிரே வேட்டி மடித்து புறங்கை கட்டி நின்றவர்களிடம் சண்டை போடுவது போல சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு சமயம் அப்பாவும் இந்தத் திண்ணையில் தான் உக்காரக் கண்டிருக்கிறான். இப்போது ஆளைக் காணம். அந்தத் திண்ணையையே ரெண்டு தரம் சுற்றி வந்தான். மூணாவதாய்ச் சுற்றும் போது ‘வீரப்பய்யனார் கோயில்’ மலைக்குப் போகும் மினிபஸ், அலறுகிற ஆரன் சத்தத்தோடு வந்து நின்றது. அங்கங்கே நின்று கொண்டிருந்த ஆம்பளை பொம்பளைகளெல்லாரும், சோத்து தூக்குவாளியும், மம்பட்டி கடப்பாறை, உரச்சாக்கு, வெதப்பொட்டி என்று ஆளுக்கொரு சாமான்களோடு பஸ்சுக்குள் நுழைந்தனர்.
பஸ், புகையை கருப்பாய் ஊதியபடிக் கிளம்பியது. கோயில் படியிலும், திண்ணையிலும் ரெம்பப் பேர் குறைந்திருந்தார்கள். கோயில் வாசல் பக்கமிருந்து டீக்கடைக்குப் போய் நின்றான். அந்தக் கடை கூடாரம் போல சுற்றிலும் கிடுகு மறைத்து, உள்ளுக்குள் பெஞ்சி போட்டிருந்தார்கள். வெளியில் நின்று பார்த்தால் உள்ளே இருப்பவரைக் காண முடியாது. வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். கசகசவென நிறையப் பேர் இருந்தார்கள். ரெண்டு பக்கத்துப் பெஞ்சியிலுமே அப்பாவைக் காணோம்.
“ஆர்..ரா… மயில் மகனா…” – நீளமாய் மீசை வைத்திருந்த ஒருத்தர் டீக்கிளாசை உறிஞ்சியபடி அவனைக் கேட்டார்.
“ம்…?” – என திகைத்தவன் கேட்டவர் யாரென விளங்காமல் ஒருகணம் நின்றான்.
“என்னா… ங்ஙொய்யாவத் தேடுறியா…” – டீக்கிளாசைக் சுழட்டி ஆத்தியபடி கேட்டார். கன்னமெல்லாம் வரிவரியாய் தாடி அப்பியிருந்தது. கண்ணெல்லாம் பெருசாய் மூடி மூடித் திறந்தது அவருக்கு.
ஆமா மென தலையை மட்டும் அசைத்தான்.
“பார்ரா… ஊமையா… வாயத் திறந்து வார்த்த பேச மாட்ற…”
“ஆரு…” – அவருக்கு பக்கத்தில் வெள்ளைத் துண்டால் முதுகைப் போர்த்தியிருந்த இன்னொர்த்தர் கேட்டார்.
“அம்ம மயிலு மகெ…!”
“ஸ்… அந்த செவல..?”
“ஆமா மா…”
“என்னா வாம்..?”
“காலங்காத்தால தேடிவர்ரான்னா… எவெனாச்சும் கந்துக்காரெ, கடெங்காரே தேடி வந்திருப்பான்… இல்ல.. கஞ்சிப்பாட்டுக்கு காசு தராம வந்திருப்பான், பய தேடி வந்துருக்கான்… வேற… அரசாங்கத்துலருந்து அவாடு தரவா தேடுவாங்கெ…!”
“ஆமா… நிய்யும் நானும் வாங்கி மாட்டீர்க்கம்ல… மெடலு… அதத்தான அவனும் வாங்கீர்ப்பான்… தெரிஞ்சா தெரிஞ்சதெச் சொல்லு… இல்லேன்னா பொத்திகிட்டு இரப்பா… யாரப் பாத்தாலும் எடக்கு, எகடாசீ…” – வெள்ளைத் துண்டுக்காரர் படக்கென பேசினார்.
அவன் வாசலிலேயே அடுத்த பதிலுக்காகக் காத்திருக்க, சூழ்நிலை புரிந்த கடைக்காரர் “யே… இப்பெல்லா ங்ஙொப்பா இங்க வாரதில்லடா…” – என்று சொன்னதும், அடுத்து எங்கே போவதென திகைத்த நிமிசத்தில், “ஏன் ஒங்கிட்ட அதிகப்பற்று வச்சிட்டானாக்கும்” என்றபடி மறுபடி மீசைக்காரர் பேச ஆரம்பித்தார்.
“டே தம்பி… சின்னக் கொளம் தெரியுமா… சும்மா… சின்னக்கம்மா… அங்கன ஒரு டீக்கட இருக்கு, கணேசங்கடன்னு போர்டு வச்சிருக்கும்… அங்கனதே நிப்பாப்ல…” – என்றவர், திரும்பி வெள்ளை துண்டு அணிந்தவரிடம், “மினி பஸ்சு போயிருச்சுல்ல அடடா… அதுல ஏறி தோட்டந் தொரவுக்கு போய்ட்டானோ என்னாவோ… சரி… வேகமா போய்ப் பாரு… வேலக்கிப் போகாட்டி அங்கனதே திரிவாப்ல…”
தலையாட்டியபடி வெளியே திரும்பிய போது ராகுல் நின்றிருந்தான். முகம் கூட கழுவாமல் கண்ணெல்லாம் பூளை அப்பியிருந்தது.

<<3>>
“வெளாடா வர்றியா…” – சேப்புக்குள்ளிருந்து பந்தை எடுத்து அழைத்தான்.
“கண்ணு வலியா…” – அவனது முகத்தைப் பார்த்துக் கேட்டான் பாண்டி.
“இல்ல…”
“சீ… பூழயா மூடியிருக்கு…”
உள்ளங்கை கொண்டு கண்ணைத் தேய்த்தான். கண் எரிச்சல் கண்டது. திறக்க முடியவில்லை. “வரமாட்டேங்குது”
“தண்ணிய வச்சுக் கழுவணும்டீ…” என்றவன் சாத்தியமில்லை எனத் தெரிய, “எச்சியத் தொட்டாச்சும் வைடா…” என வழி காட்டினான்.
அடுத்த வினாடியில் அவன் தன் உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி அடுத்த கைவிரலால் எச்சிலைத் தொட்டு தொட்டு பூழை மிகுந்த கண்களில் ஈரப்படுத்தினான். இமை திறந்து கொண்டது. விழி சிவந்திருந்தது.
“வெளாட வர்றியா எங்கூட…?” – மறுபடி கேட்டான் ராகுல். கையில் மஞ்சள் நிறப் பந்து இருந்தது.
ராகுலிடமிருந்த பந்தை வாங்கிப் பார்த்தான். கைக்கு அடக்கமாக இருந்தாலும் கனமாக இருந்தது. தரையில் அடிக்க பளீரென மேலே எழும்பியது. “புதுசா..?”
“ம்…! எறி பந்து… குட்பாலு… அடிபந்து…”
“ஆள் பத்தாதுல்ல…”
“நிய்யி நானூ… சந்துரனக் கூட்டுக்கலாம் மூணு… சுற்றும் முற்றும் பார்த்தான்… அப்பிடீ அங்குப் போனா ஆள் சேந்துருவாங்கெ… போவமா…?”
பந்தை அவனிடம் தந்த பாண்டி, “நா எங்கப்பாவப் பாக்கணும்…” – என்றான்.
“ஒரு ஆட்ட வெளாடுவம்…”
முடியாதென தலையை ஆட்டினான் “ம்ஹூம் எங்கக்காவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்…”
“எங்க இருக்காரு…”
“சின்னக் கொளத்துக் கடைல…”
“நா வரட்டா…”
“ம்… பந்து வச்சிருக்க… பாத்தா எங்கப்பா வைவாரு…”
கையிலிருந்த பந்தை உற்றுப்பார்த்த ராகுல் “பந்த வீட்ல வச்சிட்டு வந்திர்ரே…” – பதிலுக்குக் காத்திராமல் வீடு நோக்கி ஓடினான்.
பாண்டிக்கு அதற்கு மேலும் அங்கே நிற்க முடியவில்லை. சொர்ணம் அத்தையும், இந்திரா பெரியம்மாவும் மனக் கண்ணில் வந்து விரட்டினார்கள்.
கோயிலைச் சுற்றிவந்து தார்ரோட்டில் நடந்தான். கோயில் பின்புறச் சுவரில் எப்பவும் நாலைந்து பேர் குத்தவைத்து, பீடி சிகரட் குடித்துக் கொண்டிருப்பார்கள் அங்கேயும் இல்லை, மச்சால் நாயுடு சந்தில் கங்காணி வீட்டுப்பக்கம் பார்வையை ஓட்டினான். சந்தின் முனையில் ஒரு அக்கா இட்லிக்கடை போட்டிருந்தது. எரியும் அடுப்பு முன்னால் ஒரு பாட்டி குளிர்காய்ந்து கொண்டிருக்க கடையைச் சுற்றி நாலைந்து பேர் தூக்குவாளி, கிண்ணம் என்று சிலுவர் பாத்திரத்தை ஏந்தியபடி, சூடான இட்லிக்காகவும், ஆப்பத்திற்காகவும் நின்றிருந்தனர். கடைக்கார அக்கா காசை வாங்கி கைகழுவும் தண்ணிச் செம்புக்குள்ளும், ரூவா நோட்டை சுருக்குப் பைக்குள்ளும் போட்டபடி சிரித்துக் கொண்டே ஏவாரம் பார்த்தது.
சாயந்தரம், வெறும் பணியாரம் மட்டும் சுட்டு விக்கிம். அன்னிக்கு ஒரு நாள் கங்காணியக்கா வீட்டுக்கு காசு வாங்க வந்த போது அக்கா, பேப்பரில் பணியாரத்தை வாங்கி தின்று கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் ‘தம்பீ…’ – என்று கையிலிருந்த பணியாரத்தைப் பூராமும் தந்தது. பூராத்தியும் தந்தது ஆச்சரியமாய் இருந்தது. வீட்டில் ஒண்ணு குடுக்க அம்புட்டு சண்டை போடும்.
“டெய்லி வாங்கித் திம்பியா…” – கேட்டபடி பொட்டலத்தை வாங்கினான்.
“இல்லடா தம்பி… கங்காணி வீட்ல அம்மா சம்பளம் வாங்கியாரச் சொல்லுச்சு…”
“என்னிய வேற வாங்கிட்டு வரச் சொல்லுச்சு..?” பணியாரம் சுடாகவும் இனிப்பாகவும் இருந்தது.
“ஒன்னிய அனுப்பிச்சு விட்டுச்சா…” – பதட்டமாய்க் கேட்டது அக்கா…
“போச்சு… இன்னிக்கு வசவு ஒமட்டப் போகுது…” யாரிடமோ சொல்வது போல பேசியது.
அப்போது அக்காவுக்கும், இவனுக்கு இன்னொரு பொட்டலமுமாய் ரெண்டு காகிதப் பொட்டலத்தில் சூடான பணியாரத்தை நீட்டினார் அந்த அண்ணன். அன்னைக்கித்தான் அவரை முதன் முதலாகப் பார்த்தான் ஜீன்ஸ் பேண்ட் போட்டு, கழுத்தில் சிவப்புக்கலர் மப்ளர் சுத்தி இருந்தார்.
அக்கா வேணாமென்றது. “வீட்டுக்குப் போகணும்…” – என மெல்லிசாகச் சொன்னது. அதைக் கேட்டு பாண்டியும் வேண்டாமென்றான். பழக்கமில்லாத ஆளிடம் வாங்க கூடாது.
“வாங்கியாச்சில்ல… தின்னுட்டுப் போ… ஓர் நிம்சம் ஆகுமா.. என்ற அந்தண்ணன், “வாங்கிக் மாப்ள… சூடா இருக்கு… சாப்டு…”
அக்காவும் அவனை வாங்கிக் கொள்ளச் சொன்னது. அவன் ஏற்கனவே ஒரு பொட்டலத்தை தின்று கொண்டிருப்பதால் ரெண்டாவதாய் வந்ததை டவுசர் சேப்பில் சொருகினான். வீட்டில் போய் தின்று கொள்ள திட்டம்.
அக்கா அவனை சேப்பில் வைக்கக் கூடாதெனச் சொன்னது. இங்க வந்து பணியாரம் தின்னதா ஆர்ட்டயும் சொல்லக்குடாது எனக் கேட்டுக் கொண்டது.
“கங்காணியக்கா வீட்ல இல்ல தம்பி.. சம்பளம் வாங்கத்தேம் போயிருக்காம் அதேன் காத்திருக்கேன். இன்னேரம் வந்துருக்கும்… பணியாரத்தைத் தின்னிட்டு வா… காசு வாங்கிட்டுப் போகலாம்…” பணியாரம் தின்ற வாயை அக்கா தனது தாவணி முந்தானையால் அழுத்தித் துடைத்து விட்டது. போகும் போது அந்தண்ணன் ஓர் ரூவாய் காசு கொடுத்தார்.
அதற்குப் பிறகு ஒருநாள் கரட்டுப் பள்ளிக்கூடத்தின் பின்னால் கோடு கிழித்து குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். பாண்டி வெங்கலா கோயிலில் ‘குட் பால்’ விளையாடி விட்டுத் திரும்பும் போது, “மாப்ளேய்” – எனக் கூப்பிட்டார். அப்போது பேண்ட் போடவில்லை. வேட்டியை கால்களுக்கு ஊடே குடுத்து கோனார் போல வரிந்து கட்டி, தலையில் மப்ளரை உருமாக் கட்டி இருந்தார்.
“எங்க இந்தப் பக்கம்… வெங்கலா கோயில்ல கறிக்கஞ்சி குடிக்கவா” – எனக் கேட்டார்.
“புட்பால் வெளாட வந்தம்…” – பிரண்ஸ் பூராமும் அவனுக்கு பக்கமாய் நின்றார்கள்.
“இங்க வா… வந்து காசப்பிடி… ஒன் ராசியப் பாப்பம்…” – என்று விளையாட்டில் ஜெயிக்கிற காசை வாங்கி வைக்கச் சொன்னார்.
ரூவாய்த்தாளும் காசுமாய் நிறையச் சேர்ந்தது. கொஞ்ச நேரத்தில் ஆட்டையை முடித்து, வேட்டியை அவிழ்த்து மப்ளரைக் கழட்டி தோளில் போட்டுக் கொண்டு அவனிடம் காசுகளைப் பூராவும் வாங்கிக் கொண்டார்.
“க்காள்ளி நல்ல ராசியான கைதேம் மாப்ள… டெய்லி வந்துரு…” என்று சிரித்தவர். “டீ சாப்ட்றியா” எனக் கேட்டார்.
பிரண்சுகளைப் பார்த்த பாண்டி வேண்டாமென்றான். “ந்தா எல்லோரும் முட்டாய் வாங்கிக்கங்க…” என்று ஐந்து ரூவாய்த் தாளைத் தந்தார்.
கிளம்பும் போது, “நா சீரட்டுக் குடிச்சத ங்ஙொக்காகிட்ட சொல்லிடாதய்யா…” – என்றார். கூட இருந்த அவரது பிரண்ஸ்கள் பூராவும் சிரித்தனர்.
“மச்சினனை இப்பவே கரெக்ட் பண்றானப்பா…” அன்னிக்குத்தான் பஸ்ஸ்டாண்டு கடையில் எல்லாரும் மொத்தமாய் போய் டீக் குடித்தார்கள்.
“டீ குடிக்கவார பெரிய மனுசங்களப் பாரய்யா..” என்று டீக்கடைக்காரர் பரிகாசம் செய்தார்.
போயமார் சாவடியைத் தாண்டி கரையோரமாய் இருந்த வீடுகள் வழி நடந்தான். அங்கே ஒரு டீக்கடை இருந்தது. ‘கணேசன் டீகடை’ போர்டைக் காணம்… அப்பாவும் இல்லை நேரே நடந்து, வீரப்பய்யனார் கோயில் ரோட்டில் திரும்பிய போது, நிறைய கடைகள் வரிசையாய் இருந்தன. அடுத்தடுத்து இட்லிக்கடை, வடைக்கடை என மாறி மாறி இருந்தது. எல்லாக்கடையிலும் கூட்டம். அங்கேயிருந்த கோவிந்தன் சாவடியைத் தாண்டி ஒரு டீக்கடை குளத்தங்கரைமேல் தகரம் போட்டு, சுவரெழுப்பி முன்னால் ஒரு ரூபாய் போன் வைத்திருந்தார்கள். அங்கேதான் போர்டு இருந்தது. அந்தக் கடைதான்.

<<4>>
கடைக்குள் நல்ல கூட்டம் ஆள்கள் போகவும் வரவுமாய் இருந்தனர். உள்ளே பெஞ்சியில் உக்காந்து இருப்பவர்களை வெளியே இருந்து பார்க்க முடியவில்லை.
உள்ளே நுழைத்து பார்க்க தயக்கமாகவும் இருந்தது. இங்கயும் இல்லாவிட்டால்… கடைக்காரர் திட்டினால்…
“யே வெண்ண… நில்றான்னேல்ல… வெரசா ஓடி வந்துட்ட…” ராகுல் வந்து நின்றான். இப்போது முகம் சுத்தமாயிருந்தது.
“யே… உள்ள போயி எங்கப்பா இர்க்காரான்னு பாருடா…!” – வந்தவனை உள்ளே தள்ளி விட்டான்.
அவன் நகரவில்லை. “போடீ… உள்ள போனா அந்த கடக்காரரு வைவாரு… மொசுறு…”
“எங்கப்பாவ தேடுறேன்னு சொல்றா…”
“எங்கப்பாவா ஒங்கப்பாவா…?”
“எங்கப்பாதே…”
“அப்பண்ணா… நீ போ…”
கொஞ்சம் கூட்டம் குறைந்து தெரிந்தது. சட்டென ராகுலோடு பேச்சை முறித்து கொண்டு பாண்டி கடைக்குள் நுழைந்தான். பின்னாலேயே ராகுலும்.
கடைக்குள் ஒரே புகை மூட்டமாய் இருந்தது. சுவரை ஒட்டி டேபிளும், உட்கார பெஞ்சியும் சுத்தீலும் போட்டிருந்தார்கள். கொஞ்சங்கூட இடைவெளி விடாமல் ஆள்கள் நெருக்கி உட்கார்ந்து இட்லியும் தோசையும், டீயுமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேர் கையிலும் பீடி, சிகரட் புகைகள். கண்ணுக்கு சிக்கியவரை அப்பாவைக் காணம்.
பின்னாடி வந்த ராகுல், பாண்டியன் தோளோடு சேர்ந்து நின்றான்.
“அட்ஜேய் மாப்ள…” – பின்புறமிருந்து ராகுலை யாரோ அவனது முதுகில் சுரண்டினார்கள்.
திடுக்கெனத் திரும்பினான் ராகுல். அவனது அப்பாவின் கடையில் வேலை பார்ப்பவர்.
“கடைக்கெல்லாம் சாப்ட வருவியா…” – தொடர்ந்து அவரே பேசினார்.
“இல்ல… சும்மா வந்தே…”
“சும்மாவா… சும்மா யாராச்சும் கெளப்புக் கடைக்கு வருவாகளா… க்காள்ளி ங்ஙொய்யாகிட்ட சொல்ல மாட்டே…”
“நெசமா… சும்மாதே ந்தா… பாண்டியோட அப்பாவத் தேடி வந்தம்…” – பாண்டியைத் தொட்டுக் காமித்தான்.
“யார்ரா ஒங்கப்பா…”
“எங்கப்பா…” – பாண்டி திடுமெனக் கேட்டதில் திணறினான்.
“அதேன்… ங்ஙொப்பான்னா… பேரு இல்லியா… ஊரு இல்லியா…” – அவருக்கு பக்கத்திலிருந்தவரும் சிரித்துக் கொண்டே கேட்டார்.
“ராசு… தங்கராசு…”
“ராசுவா…” உதட்டைப் பிதுக்கினார் ராகுலின் மாமா…
“தெக்குத் தெருவுதான உங்க வீடு…” – பக்கத்திலிருந்தவர் மேலும் துழாவிக் கேட்டார்.
“ம்… கருமாரியம்மன் கோயில் தெரு…”
“அதே… இப்பத்தான பாத்தே…” – அவரும் கண்களை ஓட்டினார். ராகுலின் மாமாவுக்கு அவனது அப்பாவின் முகவிலாசம் விவரித்தார்… “செவல… தென்னமர பார்ட்டி…”
“ம்… நம்ம செவல ராசுவா…?” – என்றவர். “வெளீல பாருப்பா… இப்பத்தே நாக்யர் தோப்புல எளநீ எறக்கணும்னு பேசிட்ருந்தாப்ல… போய்டாப்லயா என்னாண்டு தெரில… அவசரமா..?”
“ம்…” – பரிதாபமாய்த் தலையாட்டினான்.
“வெளீல பாரு… இல்லாட்டி பக்கத்துலதே தோப்பு… இடுக்குகளம் தெரிமா… அதுக்கு வடக்க ஓட போகும் அதுல போனா கரமேல தோப்பு… பெரிய நாக்யர் தோப்புன்னு கேட்டா சொல்வாங்க. அங்கதேம் போனாப்ல…”
“ச்சரி…” – பாண்டி கிளம்பினான்.
“மாப்ள டீ சாப்டுயா…” – ராகுலை அழைத்தார்.
“வேணாம்…” – என்றபடி பாண்டியோடு அவனும் கடையை விட்டு வெளியில் வந்தான்.

<<5>>
வெளியிலும் அப்பாவைக் காணம். இல்லைனு சொல்லி வீட்டுக்குப் போய்விடலாமா…
இவ்வளவு நேரம் எங்குட்றா சுத்துனன்னு யாராச்சும் வைவாங்க… அம்புட்டு கூட்டத்துக்குள் வீட்டுக்குப் போகவே பயமாய் இருந்தது.
“வேல செய்ற எடம் தெரிஞ்சும்… கூட்டிட்டு வராம வேலமெனக்கிட்டு பதிலச் சொல்ல வாரானே…” – என சொர்ணம்அத்தை கூடத் திட்டலாம்.
அக்காவைப் பாக்க வேணும் போலவும் இருந்தது. வீட்டில் கூட்டத்துக்குள் நுழையவும் பயமாய் இருந்தது.
“யே… எனக்கு இடுக்குகளம் தெரியும்… போவமா…” ராகுல், பாண்டியைச் சுரண்டினான்.
அவனுக்கும் தெரியும் தான். சைக்கிள் இருந்தால் வேகமாய்ப் போய் வரலாம்.
6
கொஞ்சதூரம் தார்ரோட்டில் நடந்தனர். சங்கிலி கோயில் வந்ததும் சின்னக்குளத்துக் கரைமேல் ஏறினான் ராகுல்.
“வா… கர வழியே போவம்… ரோட்ல சைக்கிளு, வண்டின்னு தூசியா வர்து…”
பாண்டிக்கும் அது பிடித்திருந்தது. கரை ரெம்பவும் உயரமானது. அதன் மேலே நடக்க நல்லாயிருக்கும். சைக்கிள் கூட ஓட்டுவான். வீரப்பய்யனார் கோயில் திருவிழாப் போதிலெல்லாம் கரைமேல் நின்றால் தான் சாமி, தேர், காவடி எல்லாத்தியும் அச்சுத் துணுக்காகப் பார்க்க முடியும்.
போன வருசம் கூட கரைமேல் நின்றுதான் திருவிழா பார்த்தார்கள். அக்கா அவனை தோளில் கைபோட்டு இறுகப் பிடித்துக் கொண்டது. அக்காவோட பிரண்ட்ஸ் நிறையப் பேர் மொத்தமாக வந்திருந்தார்கள். அக்காதான் துணைக்கு வாடா என அழைத்து வந்தது. வழிநெடுக சர்பத், பானக்கரம், மோர், ஐஸ் என்று விதவிதமாக வாங்கித் தந்தது. ஊர் சுத்தி வரும் சாமியும், காவடியும் சங்கிலி கோயிலில்தான் ஊர்கடக்கும். அப்போது சாமியாடிகள் ரெம்ப வேகமாய் ஆடுவார்கள். கொட்டு மேளத்தின் சத்தம் காதை பிய்க்கும். சாமியாடிகளை விட அவர்களைச் சுமந்து வருபவர்களின் ஆட்டம் தான் பிரமாதமாக இருக்கும். தலையில் ரிப்பன் கட்டி இடுப்பில் துண்டு கட்டி, அரோகரா கோசமும், வேலுமயில் என சுத்தியும்… ஊரைப் புழுதி கிளப்புவார்கள். ரோட்டில் யாரும் நடந்து வரமுடியாது. அத்தனை கூட்டம் அவ்வளவு தள்ளுமுள்ளு. யாரும் சேர்ந்து போக முடியாது.
இதற்காகவே சாமி கோயிலை விட்டுப் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் எல்லோரும் கரைமேல் கூடிவிடுவார்கள். கொளுத்தும் சித்திரை மாத வெயில், காலெல்லாம் குளத்துக் கரம்பையின் சூடு… எதுவும் உரைக்காது. இந்த வட்டம் அவனுக்கு ஒரு விசில் கிடைத்து விட்டது. அக்காவின் பிரண்ட்ஸ் அந்த மப்ளர்காரர்தான் கொடுத்தார். ஊர்வலத்தில் வந்த காவடி ஒன்றின் முன்புறம் பாட்டுப்பாடி அரோகரா கோ¬ம் போட்டு ஆடிக் கொண்டுவந்த கும்பலில் அவரும் சேர்ந்திருந்தார்.
பெருமாள் கோவிலில் துவங்கிய அந்த ஊர்வலத்தில் அக்காவும், அவனும் கொஞ்ச தூரம் வந்தார்கள் அப்போது தான் விசிலைக் கொடுத்தார். “ஊது மாப்ள… சாமி ஊர்வலத்துல ஊமையா வரக்கூடாது…” – சொல்லிவிட்டு அவர் விரலை மடித்து வாய்க்குள் வைத்து விசிலடித்து ஆட்டம் போட்டார்.
கீரைக்கல் மார்க்கட் வரைக்கும் ஊர்வலத்தோடு வந்தவர்கள். அக்காவின் பிரண்ட்ஸ்கள் கூடியதும்… குளத்தங்கரையில் வந்து இடம் பிடித்தார்கள்.
அம்மா, பக்கத்து வீட்டுக்காரர்களோடு வந்து கரைக்கு எதிர்த்தாற்போல் – ரோட்டைத் தாண்டி இருந்த நந்தவனத்தோப்பு மரநிழலில் நின்று கொண்டு அவனை அங்கே வரச் சொல்லி கையசைத்தது. அவனுக்கு உயரத்தை விட்டு வர மனசில்லை. மேலும் இங்கே. அக்கா பிரண்ஸ்களோடு நிற்பதில் ஏதாச்சும் ஒரு அக்கா, எதையாவது திங்கக் குடுத்துக் கொண்டே இருந்தார்கள். “வரலேய்…” என கத்தினான். அது அம்மாவுக்கு கேட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் ஏதோ அதுவும் பேசிச் சத்தம் போட்டது. என்னா சொல்லும், “வெயில்ல நிக்காதடா மாடே” என வையிம்.
சாமி, சங்கிலி கோயிலைக் கடக்க, காவடிகள் ஒவ்வொன்றாய் குதியாட்டம் போட்டு வந்து கொண்டிருந்தன. அக்காவின் மப்ளர்காரர் வந்த காவடியின் ஆட்டமும் உச்சத்தில் இருந்தது. சாமியாடிக்கு நிகராக உடன் வந்த அத்தனை பேரும் குதித்தனர். மப்ளர்காரரின் விசில்சத்தம் தனியாகக் கேட்டது. அக்காவைப் பார்த்து ஒரு கையில் டாட்டா காட்டியபடி மறுகையை வாயிலிருந்து எடுக்காமல் விசிலடித்தபடி ஆடினார். அக்காவுக்கானால் அம்புட்டு சிரிப்பு.
அப்போதுதான் அது நடந்தது. கரைமேல் நின்றிருந்த அவனையும் அக்காவையும் இடித்து தள்ளிக் கொண்டு நாலைந்து பேர் கோஷ்டியாய் ஓடி வந்தனர். அதும் அக்காவையும், அக்கா பிரண்ஸ்களையும் பின்புறமாய் இடித்து தள்ளி ஹே… என சிரித்தனர். கரைமேலிருந்து தடுமாறியவர்களை கையைப் பிடித்து இழுத்து, “சாரி பாப்பா…” என்று கீழே விழவிடாமல் நிறுத்தினர். அப்பவும் சிரிப்பு, அக்கா அவனது பின்புறமாய் நின்று சேர்த்து அணைத்து நின்றிருந்தபடியால், அக்கா அவனோடு சேர்ந்து தடுமாறி அலறியது. பாண்டி காலை ஊன்றி நின்றபடியால் முன்புறம் சறுக்கி விழாமல் அக்காவையும் காத்தான். ‘சாரி பாப்பா, சாரி தம்பி’ என்று குருவிக்கூடு தலையன் ஒருத்தன் இருவரையும் கைகுலுக்கி நகன்றான்.
அதை எப்படி, எந்த நேரம் பார்த்தாரெனத் தெரியவில்லை. ஒரு நிமுசத்தில் காவடி ஊர்வலத்தை விட்டு விலகி ஓடி மடமடவென கரையேறிய மப்ளர்காரர். அக்காவைத் தொட்ட குருவிக்கூடு தலையனை முகத்தைச் சேர்த்து அப்பினார். தடுமாறியவனின் சட்டையைப் பிடித்து இழுத்துப் போட்டு காலால் மிதித்தார். அவரைத் தொடர்ந்து மேலேறிவந்த அவரது பிரண்சுகளும் ஆளுக்கொருத்தனைப் பிடித்து அடிக்க, கரைமேலிருந்த கூட்டம் சிதறியது. கீழே பந்தோபஸ்திலிருந்த போலீஸ் லத்திக்கம்பை ஆட்டிக் கொண்டு மேலேறி வந்தபோது, அடிபட்டவன், அடித்தவன் யாரையும் காணவில்லை. குளத்துக்குள்ளும் கூட்டத்தினுள்ளுமாய் கலந்து விட்டனர்.
ஆனாலும் கீழேயிருந்து கரைக்கு மப்ளர்காரர் செய்த ‘ஜம்ப்’ – மறக்க முடியாததாகி விட்டது. பாண்டிக்கு முதல் ஜம்ப்பில் காலை ஆவென விரித்து கரையின் பாதியைத் தொட்டார். அடுத்தடுத்து அஜித் போல ஸ்டெப் போட்டு ரெண்டே ஸ்டெப்பில் கரைக்கு மேலே வந்து விட்டார்.
இந்தப் பக்கம் வரும் போதெல்லாம் பாண்டிக்கு அந்த ஸ்டெப் கண்களில் படமாய் விரியும். அவனும் போட்டுப் பார்த்தான். ஓடுவதற்குள் மூச்சு வாங்கி விடுகிறது…
“அட்ஜேய் ராவுலு… பாண்டீ…” – குளத்துக்குள் இருந்து இருவரையும் கூப்பிடும் குரல் கேட்டது.

<<7>>
குளத்துநீரில் கால் கழுவிவிட்டு டவுசரை மாட்டிக் கொண்டிந்தான் செந்தில். ஒரு நிமிசத்தில் குடுகுடுவென கரையேறி இருவரையும் தொட்டான்.
“எங்கடா குளிக்கவா..?” – அவர்கள் அடிக்கொரு தரம் செட்டுச் சேர்ந்து கிணற்றில் குளிக்கப் போவார்கள். அந்தப் பழக்கத்தில் கேட்டான்.
“துடைக்க துண்டு வேணும்ல..?” – ராகுல் திருப்பிக் கேட்டான்.
“சட்டையிருக்குல்ல…”
ஆமா… பெரும்பாலும் துண்டு எடுத்துப் போவது கிடையாது. எடுத்தால் வீட்டில் விடமாட்டார்கள். வீட்டுக்குத் தெரியாமல் எடுத்து வந்தால்தான். இல்லாவிட்டால் சட்டைதான் தலைதுவட்ட.
“இல்லடா எங்கப்பாவ காணம். தேடிப் போறம்…” பாண்டி கவலையாய்ச் சொன்னான்.
“எங்கருக்காரு…”
“இடுக்கு களத்துகிட்ட…”
“என்னாவாம்… வீட்ல சண்ட போட்டாராக்கும்…”
“எதுக்குடா…?” – ராகுலும் பாண்டியை சேர்ந்து கேட்டான். இதுவரை அவனும் காரணம் சொல்லவில்லையே…
“ம்… எங்கக்கா மருந்து குடிச்சிருச்சு…”
“என்னா மருந்து..?”
“இருமல் மருந்தா…”
“இல்லடா… பூச்சி மருந்து…” – சொல்லும்போதே பாண்டிக்கு குரல் கம்மியது.
“பூச்சி மருந்துன்னா… கீரிப்பூச்சிக்கு மருந்தா…” ராகுலுக்கு சரியாக விளங்கவில்லை.
“மூட்டப் பூச்சி மருந்துடா…” அம்மா நெஞ்சில் அடித்து கதறிய வார்த்தைகள் ஞாபகம்வர பாண்டி பட்டென சொன்னான்.
“அய்யய்யோ…” – செந்தில் பதறினான். “செத்துப் போச்சா…?” – என்றான்.
“இல்லடா ஒக்காந்துதே இருக்கு…”
“ஏய்… மூட்டப்பூச்சி மருந்து குடிச்சா செத்துப் போவாங்கடீ… நாம் பாத்துருக்கேன்…”
“இல்லடா… எங்க சொர்ணா அத்த, அப்பாவக் கூட்டியாரச் சொல்லுச்சே… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும்.” – விலாவரியாக விளக்கம் தரவேண்டி இருந்தது.
மூவரும் குளக்கரை முடிவில் வந்த சரிவில் ஓடி வந்து இறங்கினர். ஒருவர் பின் ஒருவராய் தரைமேல் நடந்தவர்கள். தரையில் செட்டாய்க் கூடினர்.
“ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாலும் செத்துதாண்டி போவங்க…” – செந்தில் உறுதிபடச் சொன்னான்.
“யே… எனக்கு காசெல்லாங் குடுத்துச்சுடா… சாகப் போறவங்க யாராச்சும் காசு குடுப்பாங்களா…”
“எங்க…” – ராகுல் கேட்டான்.
டவுசர் சேப்பிலிருந்து அக்கா குடுத்த காசை எடுத்துக் காட்டினான்.
வழிக்கடையில் சுக்குமல்லியும், தட்டாம்பயறும் ஆவிபறக்க காத்துக் கொண்டிருந்தது. செந்திலுக்கு எச்சில் ஊறியது. வரும்போது வாங்கித் தருவான். பாண்டியும், ராகுலும் வேகுவேகென நடந்தனர். அவர்களைக் காட்டிலும் சின்னவனான செந்திலுக்கு அவர்களின் நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. பாதி ஓட்டமும் பாதி நடையுமாக அவர்களைத் தொடர வேண்டி இருந்தது.
“ஓட்டம் விடுவமாடா…” – செந்தில்தான் கேட்டான். ஓட்டத்தில் சூரன். யாரும் அவனைத் தொடமுடியாது. ஸ்கூலில் எப்பவுமே பஸ்ட்டாய் ஓடிவருவான்.
“சீக்கிரம் போய்ரலாம்ல…”
பாண்டியும், ராகுலும் சரிக் கொடுக்க. மூன்று பேரும் ‘ர்ர்ர்’ என சத்தமிட்டபடி ஓடலானார்கள். தோட்டங்காடு தோப்பு துரவுகளுக்கு சென்று கொண்டிருக்கும் மாட்டுவண்டி சைக்கிள்கள், மொபட்டுகளோடு போட்டி போட்டுக் கொண்டு ஓட்டம் ஓடினர்.
இடுக்குகளம் வந்ததும் வலதுபக்கம் வண்டியைத் திருப்பி ஓடைக்குள் புகுந்தனர். ஓடையயங்கும் இலைச்சருகுகள் காலில் மிதிபட்டு ஓசை எழுப்பின. ஓடையின் இருபுறமும் புதர்கள் மண்டி, அடர்ந்து வேர்களும் மண் பொருக்குமாய் ஓட்டை ஓட்டயாய் பயமுறுத்தின.
“இதாடா…” – என ஓடையின் இறுதிப்பகுதியிலிருந்த தென்னந்தோப்பைத் தொட்டபடி கேட்டான் செந்தில்.
பாண்டி அண்ணாந்து பார்க்க, தோப்புக்குள் ஆள்கள் நிறையத் தென்பட்டனர்.
“உள்ள போய்க் கேப்பமா…” – தோப்பின் வாசலைக் கண்டுபிடிக்க கொஞ்ச நேரமானது.
ஓடையின் மேல்பகுதியில் வண்டித்தடம் இருந்தது. அதனை முள் போட்டு அடைத்து வைத்திருந்தனர். முள்ளை விலக்கிய போது,
“ஆர்ராதூV..” – என்ற கடுமையான குரல் தோப்புக்குள்ளிருந்து வந்தது.
பாண்டியும், ராகுலும் அந்தச் சத்தத்தில் பின்வாங்கினார்கள். “ந்நா… பாண்டி அவுக அப்பாவ பாக்க வந்தம். அவக அக்கா மருந்து குடிச்சுப் போட்ச்சு…” – செந்தில் தடித்த குரலுக்கு இணையாக சத்தமாய்ச் சொன்னான்.
உள்ளே மெளனம் நிலவி, “முள்ள வெலக்கி உள்ள வாங்கடா… பாத்து… கருவேலம் முள்ளு சாக்ரத…” – என்ற அழைப்பு வர, மெதுவாய் தோப்புக்குள் புகுந்தனர்.
அவர்கள் மூவரையும் எதிர்கொண்டு சட்டை கழற்றிய இரண்டு பேரும், சட்டை போட்ட ஒருத்தருமாய் வந்தனர்.
“ஏய் கொஞ்ச நேரம் நிறுத்துங்கப்பா…” – என்று சட்டை போட்டவர் சொன்ன நிமிசம் மேலே இருந்து கரகரவென பறந்து வந்த இளநீர் குலை தோப்பின் மத்தியில் தொபீர் என விழுந்தது. மூன்று பேர்களும் திடுக்கிட்டனர்.
“யே… சொல்றேல்ல… கொஞ்சம் பொறுங்க” – என்ற அவர்.
தோப்பினுள் ஐந்தாறுபேர் இருந்தனர். கீழே விழுந்த இளநீர் குலையை தரதரவென இழுத்து போட்டார். அறைப்பக்கம் இழுத்துப் போட ரெண்டுபேர் வேட்டியை வரிந்து கட்டிச் செய்ய மற்றவர்கள், மேலே அன்னாந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். மோட்டார் அறைப்பக்கமாய் இளநீர் காய்கள் அம்பாரமாய்க் கிடக்க, அதற்கு பக்கமாய், காய்ந்த தென்னங் கைகளும், பன்னாடைகளும் குமிந்துக் கிடந்தன. மேலே ஒவ்வொரு மரத்திலும், ஆட்கள் இடுப்பில் சொருகிய அரிவாளோடு தொத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். ஆனால் அப்பாவை மட்டும் காணவில்லை.
“ஆர்ரா… நீ…”
“தங்கராசு மகெம் மொதலாளி – ஏண்டா… அப்பிடித்தான…” – சட்டை அணியாத ஓராள் சட்டையணிந்த முதலாளியிடம் அடையாளம் சொன்னார்.
பாண்டி ஆமெனத் தலையாட்டினான்.
“என்னா ங்ஙொக்கா மருந்து குடிச்சிருச்சாக்கும்” முதலாளி கேட்டார்.
“மூட்டப் பூச்சி மருந்து…” – செந்தில் பதில் சொன்னான்.
“ங்ஙொய்யாவக் கூப்பிட வந்தீகளாக்கும்…” சட்டை போடாத இன்னொரு ஆள் கேட்டான்.
“ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகணும்…” – ராகுல் சொல்ல.
“எதுக்கு ஆஸ்பத்திரிக்கு…?” – முதலாளி கேட்டார்.
“கந்து வாங்கி செலவழிச்சு கடம்படத்தே…” சட்டையில்லாதவர் சொல்லிச் சிரித்தார்.
“சாகணும்தான மருந்து குடிச்சிச்சு… எதுக்கு ஆஸ்பத்திரிக்கு போறீக… வீட்லயே செத்தா ங்ஙொய்யாவுக்கு செலவு மிச்சம் தான…” – செந்திலைப் பார்த்து கேட்டார். “என்னா…?” என்று தலையை ஒரு வெட்டு வெட்டிக் கேட்டார்.
செந்தில் அமைதியாய் தலையாட்டினான்.
“இல்லய்யா… அதெல்லா சும்மா எறும்புப் பொடியக் கலக்கிக் குடிச்சிருக்கும்யா… சாகணும்ணு நெனைக்கிற கழுத வீட்ல வெளக்கு வச்சுகிட்டா செய்யும்”,
“அரளிக் கொட்டய திங்கறது. ஆத்துல விழுகறது இல்ல… கயத்தக்கட்டி நாண்டுக்கறது… ச்சும்மா… வீட்ல இருக்கவகளப் பயமுறுத்தறது மொதலாளி…”
தலையை ஆட்டிய முதலாளி, “சும்மாவா பொட்டப் பிள்ளைகளுக்கு கள்ளிப்பால ஊத்தி கதய முடிக்கிறாங்ஙெ… இவனுக்கு அக்கான்னா… பன்னண்டு பதிமூணு வயசாகுமா…”
“இல்ல பெரிய புள்ள”
“அட பதினாறே கூட வையி… இப்பவே ஆண் தொண தேடுது… அப்பே ஆத்தா செரைக்கவா இருக்காங்கெ…”
“இதென்னாங்யா… ஏதோ ஒரு ஊர்ல ஒம்பது வயசுப் பிள்ளைக்கு கெர்ப்பமாம்… பேப்பர்ல போட்டுக்காங்கெ…”
“ம்.. காலம் போற போக்குல இனி ஒன்ரவயசுப் பிள்ளகூட வகுத்த தள்ளிட்டு வந்து நிக்கிமப்பா…”
முதலாளியோடு சேர்ந்து மூன்று பேரும் எதேதோ பேசியது இவர்களுக்குப் புரியவில்லை. பாண்டி இன்னமும் விடாமல் ஒவ்வொரு மரத்தின் உச்சியிலும் அப்பாவைத் தேடினான். மோட்டார் ரூம் பக்கம் பார்வையை ஓட்டினான். அப்பா இருப்பதற்கான அடையாளமே இல்லை.
“ங்ஙொப்பா போய்ட்டாப்ல…” – என்ற முதலாளி “அப்பாதையே தாக்கல் வந்துருச்சு… இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பாரு… நீங்க அவசரப்படாம போங்க… ங்ஙொக்காவுக்கு ஒண்ணும் ஆகாது…” – என்ற வழியனுப்பி வைத்தார்.
மூவரும் மறுபடி முள் அடைப்பை விலக்கி வெளியேறிய போது தோப்புக்குள் தொபீர் தொபீரென இளநீர் குலைகளும், தென்னங்கைகளும் விழுகின்ற சத்தம் கேட்டது.
“எந்தப் பாதைலடா.. ங்ஙொப்பா போயிருப்பாரு…” ராகுல் கேட்டான். பாண்டிக்கும் தெரியவில்லை. “இன்னொர்க்க ஓட்டம் பிடிக்கலாமா…” – கைகளை ஸ்டேரிங் போட்டு ஓடத் தயாராய் நின்றான் செந்தில்.

makamuthurai@gmail.com

Series Navigation

ம.காமுத்துரை

ம.காமுத்துரை