முள்பாதை 35

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்



email id tkgowri@gmail.com

கிருஷ்ணன் கிளம்பிப் போன நான்காவது நாள் ராஜேஸ்வரியின் திருமண அழைப்பிதழ் வந்தது. அதைப் பார்த்ததும் அப்பாவின் இதழ்களில் முறுவல் தவழ்ந்தது. அந்த முறுவலில் ‘நீ தோற்றுவிட்டாய் பார்த்தாயா’ என்ற உணர்வு வெளிப்பட்டது. என்னுடைய வெற்றியைத் தன்னுடைய வெற்றியாக, என்னுடைய தோல்வியை தன்னுடைய தோல்வியாக நினைக்கும் அப்பாவிடம் நான் தோற்றுப் போனாலும் பரவாயில்லை. ராஜியிடமிருந்து என் பெயருக்குத் தனியாக பத்திரிகையும், கடிதமும் வந்தன. மன்னிப்பு கேட்டுக் கொள்வதுபோல் எழுதியிருந்தாள்.
அண்ணீ!
அண்ணாவுக்கு வேதனையைத் தருவதைவிட உன்னிடம் தோற்றுப் போவது உத்தமம் என்று தோன்றியது. நான் வெறும் கோழை. எதற்கும் லாயக்கு இல்லாதவள். திருமணத்திற்கு நீ வரமாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உன்னை மற்றொரு தடவை சந்திக்க வேண்டும் என்றும், என் நிலைமையை விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீ நினைத்தால் கட்டாயம் வர முடியும். உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரியமுடன்
ராஜி
அந்த கடிதத்தைப் பார்த்த பிறகு எனக்கு இரக்கமும், சலிப்பும் இரண்டும் ஏற்பட்டன. இப்படிப் பட்டவர்கள் துணிந்து செயல்படவும் மாட்டார்கள். ராஜியின் திருமண விஷயத்தில் தோல்வி அடைந்த எனக்கு கிருஷ்ணன் நிலத்தின் விஷயத்திலாவது வெற்றி அடைய வேண்டும் என்ற பிடிவாதம் அதிகரித்தது.
என்னுடைய பணத்தைத் தொடக்கூட மாட்டானாமே. அவனுடைய கஷ்ட சுகங்களில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றுதானே நினைக்கிறான்? அவன் நினைப்பது சரியில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
என்னுடைய பிடிவாதத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது எண்ணம் என் மனதில் இருக்கிறதா என்று நிதானமாக யோசித்துப் பார்த்தேன். கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான அந்தத் தோட்டம் அவனைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமாகக் கூடாது. அது அவன் வருங்கால மனைவி சுந்தரியாக இருந்தாலும் சரி.
ஆனால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை என்னால் எப்படி ஏற்பாடு செய்ய முடியும்? என் மனம் சதா சர்வகாலமும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. அப்பாவிடம் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அப்பா இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்பதும் முடிவாகிவிட்டது. கெஞ்சியோ, மிரட்டியோ அப்பாவிடம் காரியத்தை சாதிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
சரியாக என் எண்ணத்திற்கு வழிகாட்டுவது போல் ஒரு சம்பவம் நடந்தது. அப்பா வாதாடிய ஹோட்டல் கேஸ் ஒன்று ஜெயித்ததில் அந்த ஹோட்டல் யஜமானிக்கு லட்சக் கணக்கில் லாபம் கிடைத்தது. அதற்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவர் தன்னுடைய ஹோட்டலில் அப்பாவுக்காக பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து, இரண்டு லட்சம் ரூபாய்க்கு செக்கையும் கொடுத்தார்.
பார்ட்டிக்கு அம்மா, நான், சாரதி மற்றும் ராமன் தம்பதியர் எல்லோரும் போயிருந்தோம். பார்ட்டியிலிருந்து திரும்பி வரும்போது அம்மா பேச்சு வாக்கில் சொன்னாள், சமீப காலத்தில் இவ்வளவு பெரிய தொகை அப்பாவுக்கு வந்ததே இல்லையாம். சாரதி மாப்பிள்ளையாக வரப் போவதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம்தான் இந்த வெற்றிக்குக் காரணமாம்.
அப்பாவும் அம்மா சொல்வதை ஒப்புக்கொள்வது போல் தலையை அசைத்தார். நான் கடைக்கண் வழியாக சாரதியைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போல் அவன் பெருமையுடன் காலரைத் தூக்கி ·போஸ் கொடுக்கவில்லை. தனக்கு சம்பந்தமே இல்லாமல் சுமத்தப்படட அதிர்ஷ்டத்தின் பாரத்தைத் தாங்க முடியாதவன்போல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான். சாரதியிடம் எனக்கு பிடித்த முதல் லட்சணம் அது.
வீட்டுக்கு வந்ததும் அம்மா அந்தப் பணத்தை என் பெயரில் ·பிக்ஸ்ட் டிபாசிட் போடச் சொல்லி அப்பாவிடம் சொன்னாள்.
அப்பாவும் சம்மதித்தார். பிறகு என் பக்கம் திரும்பி “மீனா! இப்போ நீ என்னைவிட பணக்காரியாகி விட்டாய்” என்றார்.
நான் முறுவலித்தேன். “அந்தப் பணம் உண்மையிலேயே எனக்குத்தானா டாடீ?” என்றேன்.
“உனக்கு இல்லாமல் வேறு யாருக்கு? ஆனால் உங்க அம்மாவுக்குக் கோபம் வருவதுபோல் நடந்து கொண்டால் ஒரு ரூபாய்கூட உனக்கு சொந்தமில்லை” என்றார்.
அன்று இரவு முழுவதும் நான் உறங்கவில்லை. இப்போ என் பெயரில் இரண்டு லட்சம் இருக்கிறது. அதிலிருந்து ஒன்றரை லட்சம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிவிடும்? வேண்டும் என்றால் கிருஷ்ணன் வட்டியுடன் திருப்பித் தந்து விடுவான். ஆனால் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டால்? அம்மாவுக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் அப்பாவின் உதவி தேவை.
மறுநாள் மாலை. அம்மாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அம்மாவும் திருநாகம் மாமியும் வீட்டுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் மெதுவாக அப்பாவின் அறையின் பக்கம் வந்தேன். அப்பா கிளப்புக்கு புறப்படுவதற்குத் தயாராக இருந்தார். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் “என்ன மீனா?” என்றார்.
எடுத்த உடனே எப்படி கேட்பது என்று தெரியாமல் “சும்மாதான் வந்தேன் டாடீ” என்றேன். அப்பாவின் அ¨யை ஒழுங்கு படுத்தத் தொடங்கினேன். கட்டில்மீது கிடந்த பேப்பரை மடித்து, மேஜைமீது வைத்தேன். மேஜை விளக்கை துடைத்து நகர்த்தினேன். படுக்கை விரிப்பை சரி செய்தேன்.
“என்ன வேண்டும் மீனா?” நயமான குரலில் கேட்டார்,
“எனக்கு… எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும் டாடீ.”
“பணம் வேண்டுமா? அதைக் கேட்க தயங்குவானேன்? எவ்வளவு வேண்டும்? இந்தா… எடுத்துக்கொள்.” அப்பா பர்ஸை என் கையில் கொடுத்தார்.
பர்ஸை திறந்து பார்த்தேன்.
நூறும், ஐநூறுமாக நோட்டுகளும் சில்லரையும் இருந்தன. பர்ஸை மூடிவிட்டு திருப்பிக் கொடுத்தேன்.
“பணம் எடுத்தக் கொள்ளவில்லையே? ஏன்?”
“இந்தப் பணம் போறாது டாடீ.”
“போறாதா? எவ்வளவு வேண்டும்?”
“ஒன்றரை லட்சம்.”
“ஒன்றரை லட்சமா!” அதிர்ச்சி அடைந்தவர் போல் பார்த்தார்.
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தேன்.
“அவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகிறாய்?”
“ஒரு பிரண்டுக்கு தேவையாக இருக்கு. நான் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கடனாக தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.”
“யார் அந்த பிரண்ட்?” அப்பாவின் கண்கள் என்னை தீட்சண்யமாக பார்த்தன.
“உங்களுக்கும் தெரிந்தவன்தான்.”
“எனக்குத் தெரிந்தவனா?”
“ஆமாம். உங்களுக்குத் தெரியாத நண்பர்களோ, நெருங்கியவர்களோ எனக்கு யாரும் இல்லை. கொஞ்சம் யோசித்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்.”
“உன்னிடமிருந்த ஒன்றரை லட்சம் உதவி பெறக்கூடிய நபர் யார்? அதிலும் நண்பன் என்று சொல்கிறாயே?”
“எங்களுக்கு இடையே உறவு முறை இருந்தாலும் நான் முக்கியத்துவம் தருவது நட்புக்குத்தான். ஒரு சிநேகிதியாகத்தான் உதவி செய்ய நினைக்கிறேன்.”
அப்பாவுக்குப் புரிந்து விட்டது. அருடைய முகம் கம்பீரமாக மாறியது. “யாரு? கிருஷ்ணனைப் பற்றித்தானே சொல்கிறாய்?” என்று கேட்டார்.
“ஆமாம். அந்தப் பணம் எதற்காக என்றும் உங்களுக்கே தெரியும்.”
“அந்த நிலத்தை வாங்குவதற்காகத்தானே?”
ஆமாம் என்பதுபோல் பார்த்தேன்.
ஒரு நிமிடம் கண் இமைக்காமல் என்னைப் பார்த்தார். பிறகு கண்ணாடியில் பார்த்துக் கொண்டே டையை அணிந்து கொள்ளத் தொடங்கினார்.
“டாடி! கிருஷணன் உங்களுடைய மருமகன் என்பதை மறந்து போய் விடுங்கள். என் நண்பனாக நினைத்துக் கொண்டு இந்த உதவியைச் செய்யுங்கள். வேண்டுமென்றால் அவன் சார்பில் நான் நோட்டு எழுதித் தருகிறேன்.”
“நீ எழுதித் தருவானேன்? அவன் தரமாட்டானாமா?”
“உஹ¤ம். இந்த விஷயமே அவனுக்குத் தெரியாது. நான் உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மதுசூதனின் சித்தப்பாவிடம் போய் அந்த நிலத்தை கிருஷ்ணனின் பெயரில் ரிஜிஸ்டர் செய்யச் சொல்லி பணத்தைத் தந்து விடுவேன். கிருஷ்ணனுக்கு நெருக்கடி இருக்காது. நிதானமாக நம் கடனை அடைத்து விடுவான். இந்த விஷயம் முன்னால் தெரிந்தால் சம்மதிக்க மாட்டான். அதான் அவனுக்குத் தெரியாமலேயே இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும் என்று நினைக்கிறேன்.”
அப்பா டையை அவிழ்த்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டார். திடீரென்று களைத்து விட்டவர்போல் தென்பட்டார். நான் கவலையுடனும், பதற்றத்துடனும் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா சட்டென்று எழுந்து அறையை விட்டு வெளியேறி விட்டார். எதிர்பார்ப்புக்கும், ஏமாற்றத்திற்கும் இடையே நலிந்து போனவளாக நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நான் அப்பாவிடம் இதைப் பற்றி கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். சில சமயம் நானும் அப்பாவும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் போது அம்மாவோ, சாரதியோ வந்து விட்டால் உரையாடலை அப்படியே நிறுத்தி விட வேண்டியிருந்தது. முள்மீது நிற்பதுபோல் உணரத் தொடங்கினேன்.
அப்பா இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகவோ, என் வார்த்தையை லட்சியம் செய்வது போலவோ தெரியவில்லை. மேலும் நான் அந்தப் பேச்சை எடுத்த போதெல்லாம் அலட்சியமாக சலிப்படைந்து விட்டது போல் பேச ஆரம்பித்தார்.
“போகட்டும் விடு மீனா! நம் பணத்தைத் தொடக்கூடாது என்று அவன் பிடிவாதமாக இருக்கும்போது, நாமாக போய் வற்புறுத்தி தருவானேன்? அவனுக்கு நான் தாய் மாமன்தானே? தன்னுடைய கஷ்டத்தை என்னிடம் வந்து சொன்னால் என்னவாம்? அவ்வளவு அலட்சியமாக இருப்பவனுக்கு நாம் எதற்காக உதவி செய்யணும்? அவன் தலையெழுத்தது எப்படியோ அதன்படி நடக்கட்டும்.”
“சமீபகாலமாக உங்க அம்மாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வீட்டில் நிம்மதியாக இருக்கிறேன். இதன் காரணமாக மறுபடியும் ரகளை கிளம்புவதில் எனக்கு விருப்பம் இல்லை.”
அப்பாவின் தோரணை எனக்கு வியப்பாக இருந்தது. கிருஷ்ணனிடம் அளவு கடந்த அபிமானமும், மதிப்பும் வைத்திருக்கும் அப்பாதானா இப்படிப் பேசுவது? அசல் விஷயம் எனக்குத் தெரியும். அம்மாவின் வாய்க்குப் பயந்து இப்படி சாக்கு போக்கு சொல்கிறார்.
அவருடைய கோழைத்தனத்தைப் பார்க்கும்போது எனக்கு அருவெறுப்பாக இருந்தது. அந்த வெறுப்பைக் கூர்மையான வார்த்தைகளாக மாற்றி அவர் மேல் பிரயோகிக்க நான் தயங்கவில்லை. கடைசியில் “உங்களைப் போன்ற கோழையை தந்தை என்று சொல்லிக் கொள்வது எனக்குத் தலைகுனிவு. உங்களுக்கு மகளாகப் பிறந்தது என்னுடைய துரதிர்ஷ்டம். இன்று கிருஷ்ணனின் நிலம் விஷயத்தில் இவ்வளவு விட்டேற்றியாக இருக்கீங்களே? நாளைக்கு எனக்கே உயிர் போகும் பிர்சனை வந்தாலும் இதே நிலைதானே?” என்றேன்.
அப்பா என் பேச்சைக் கேட்டு ஆத்திரமடையவில்லை. வாயை மூடு என்று அதட்டவும் இல்லை. முறுவலித்துவிட்டுப் பேசாமல் இருந்தார்.
ஆத்திரத்தில் எனக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது.

******

மறுநாள் மாலையில் அப்பா கோர்ட்டிலிருந்து வந்ததும் என்னை அழைத்து, “பிரயோஜனம் இல்லை மீனா! அந்த நிலத்தை யாரோ வாங்கி விட்டார்களாம்” என்றார்.
நான் தளர்ந்து போய்விட்டேன். இது என்னுடைய இரண்டாவது தோல்வி. நான் தோற்றுவிட்டேன் என்ற வேதனையை விட கிருஷ்ணனுக்கு அந்த நிலம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் என் மனதை ஆட்டிப் படைத்தது. ஏமாற்றத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
வேண்டுமென்றே கடினமான குரலில் சொன்னேன். “இனி நிம்மதியாக இருங்கள். உங்கள் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே சொல்கிறேன். எனக்குத் திருமணம் ஆன அடுத்த நிமிடம் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டேன். உங்கள் பணத்தைக் கையால் தொடவும் மாட்டேன்.” என் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது. காயப்பட்ட மனதுடன் தலை குனிந்த கொண்டே சொன்னேன். “இத்தனை நாளும் உங்களுக்கு என் மீது பிரியம் இருக்கு என்றும், என் பேச்சைத் தட்ட மாட்டீங்க என்றும், எத்தனை கஷ்டமாக இருந்தாலும் என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீங்க என்றும் கனவு கண்டேன். உங்களைப் போன்ற தந்தை யாருக்கும் இருக்க மாட்டார்கள் என்று பெருமைப்பட்டேன். இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். என் கண்கள் திறந்து கொண்டு விட்டன.”
கையில் இருந்த பேப்பர்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அப்பா எழுந்து என் அருகில் வந்தார். “ஒரு விஷயம் கேட்கிறேன். நேராக பதில் சொல்கிறாயா?” என்றார்.
நிமிர்ந்து பார்த்தேன்.
கோர்ட்டில் குற்றவாளியை குறுக்குக் கேள்வி கேட்பது போல் என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டே அப்பா கேட்டார். “கிருஷ்ணனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இவ்வளவு தூரம் நீ தவிப்பானேன்? இதற்குப் பின்னால் தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா?”
என் முகம் செக்கச் சிவந்துவிட்டது. உடனே அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும் என்று தோன்றியது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தைரியமாக பதில் சொன்னேன்.
“டாடீ! இந்த உதவி கிருஷ்ணன் ஒருத்தனுக்கு மட்டுமே இல்லை. அந்தக் குடும்பத்திற்கும் சேர்த்துதான். அந்த நிலத்தின் மீதுதான் அவர்களுடைய எதிர்காலம் ஆதாரப்பட்டு இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் அத்தை முதல் கடைக்குட்டி மது வரையில் எல்லோருமே எனக்கு ஒன்றுதான். வேண்டியவர்கள்தான்.”
அப்பா என் மனதில் இருக்கும் எண்ணத்தைப் படிக்க முயற்சி செய்வது போல் பார்த்தார். பார்க்கட்டுமே. எனக்கு என்ன பயம்? நானும் கண் இமைக்காம்ல் பார்த்தேன்.
“அவ்வளவுதானா? கிருஷ்ணனினடம் உனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அபிமானமும் இல்லை என்கிறாயா?”
“இல்லவே இல்லை. போதுமா?” பொறுமையற்ற குரலில் சொன்னேன்.
அப்பா என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. “இவற்றை ஒரு தடவை பார்” என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த பேப்பர்களை என்னிடம் கொடுத்தார்.
ஏதோ தஸ்தாவேஜு காகிதங்கள் அவை. சொத்துக்களை விற்கும் போதோ, வாங்கும் போதோ எழுதப்பட்ட ஒப்பந்த பத்திரங்கள். படித்துப் பார்த்தேன். ஒரு நிமிடம் என் இதயத் துடிப்பு நின்றுவிட்டாற்போல் இருந்தது. அடுத்த நிமிடம் இரு மடங்கு வேகத்துடன் துடிக்கத் தொடங்கியது. அந்த நிலம் கிருஷ்ணனின் பெயரில் பதிவு செய்யப்பட்டதற்கு சான்றாக எழுதப்பட்ட தஸ்தாவேஜுகள் அவை.
வியப்பும், பிரமிப்பும் ஆட்கொள்ள நிமிர்ந்து பார்த்தேன். அப்பா சற்று தொலைவில் மேஜை அருகில் நின்றபடி என் முகத்தில் தென்பட்டுக் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“டாடீ!” அதற்குமேல் என் வாயிலிருந்து வார்த்தை வெளி வரவில்லை. சட்டென்று அப்பாவின் கால்களில் விழுந்து வணங்கப் போனேன். முழுவதுமாக குனிவதற்கு முன்பே அப்பா என் தோள்களைப் பற்றி எழுப்பினார்.
“டாடீ!” மன்னிப்பு கேட்டுக் கொள்வது போல் பார்த்தேன்.
அப்பாவின் கண்களில் இனம் புரியாத வேதனை எட்டிப் பார்த்தது. என் தலையின் மீது கையை வைத்து வருடிக் கொண்டே சொன்னார். “மீனா! இத்தனை நாளும் வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த பிரச்னைக்கு எதிர்பாராத விதமாக நீ சுலபமான தீர்வு கண்டுபிடித்து விட்டாய். இந்த யோசனை எனக்கு வரவில்லை. நான்தான் உனக்கு நன்றி சொல்லணும். இத்தனை நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு உபயோகப்படும் ஒரு காரியம் செய்தேன் என்ற திருப்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.” குரல் தழுதழுக்கச் சொன்னார். பிறகு அந்த பேப்பர்களை பத்திரமாக உள்ளே வைத்தார்.
நான் என்னுடைய அறைக்கு வந்து விட்டேன். அன்று நான் அடைந்த சந்தோஷம் கொஞ்ச நஞ்சமில்லை. நினைத்ததை சாதித்து விட்டேன். அந்த மகிழ்ச்சி என் உடல் முழுவதும் பாய்ந்து உடனே நாட்டியமாட வேண்டும் போல் உற்சாகம் தந்தது. இரண்டு கைகளையும் நீட்டி வேகமாக சூழன்று கொண்டிருந்தேன்.
“மீனாம்மா! நீங்க இன்னும் காபி குடிக்கவில்லை.” திருநாகம் மாமி அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டே சொன்னாள். நான் மாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்தேன். வேகமாக மாமியையும் சேர்த்து சுற்றத் தொடங்கினேன்.
“அம்மாடி! என்ன ஆச்சு உங்களுக்கு? ஏற்கனவே எனக்கு மூட்டுவலி. என்னை விட்டுவிடுங்கள்.” திருநாகம் மாமி கத்தி கூச்சல் போடத் தொடங்கினாள். கலகலவென்று சிரித்துக் கொண்டே வேகத்தைக் குறைத்தேன். ஆனால் மாமியின் பிடியை விடவில்லை.
அம்மா அப்பொழுதுதான் மாடிக்கு வந்து கொண்டிருந்தாள் போலும். கூச்சலைக் கேட்டு “என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் உள்ளே வந்தாள். பின்னாலேயே மிஸெஸ் ராமனும் வந்தாள்.
அம்மாவைப் பார்த்ததும் டக்கென்று நின்றுவிட்டேன்.
திருநாகம் மாமிக்கு மூச்சு வாங்கியது. “மீனாம்மா இன்னிக்கு ஏனோ ரொம்ப சந்தோஷமாக இருக்காங்க.” இடுப்பை நீவி விட்டுக் கொண்டே அம்மாவிடம் சொன்னாள்.
அம்மா என் பக்கம் பார்த்தாள். “என்ன இது? நீ இன்னும் சின்னக் குழந்தையா என்ன?” என்றாள் பார்வையால் அதட்டிக் கொண்டே.
நான் தலையைக் குனிந்து கொண்டேன். அம்மா¨வின் வருகையால் என் உற்சாகம் அப்படியே அடங்கிவிடது. பழைய மீனாவாக மாறிவிட்டேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்