முள்பாதை 24

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

அன்று முழுவதும் நான் சாப்பிடவில்லை. மதியம் இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை சாப்பிட்டுவிட்டு பாலை குடித்தேன். கிருஷ்ணன் பகல் முழுவதும் வீட்டுக்கு வரவே இல்லை. இரவும் ஆகிவிட்டது.
எல்லோரும் சீக்கிரமாக சாப்பிடுவிட்டு நாடகத்திற்குப் போக வேண்டும் என்ற பரபரப்பில் இருந்தார்கள். நாடகம் தொடங்கும்போதே ஒன்பது மணியாகிவிடும். எப்போ முடியுமோ தெரியாது. ஒவ்வொரு காட்சியும் மாறும்போது மேடையில் ஏற்பாடு செய்வதற்குக் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது தேவைப்படும். சாப்பாடு சாப்பிடாததால் எனக்கு சோர்வாக இருந்தது. வேறு வழியில்லாமல் எல்லோருடனும் புற்படுவதற்குத் தயாரானேன்.
நான் புடவையை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த கிருஷ்ணன் நெற்றியைச் சுளித்துவிட்டு “நீ எங்கே புறப்படுகிறாய்?” என்¡ன்.
“வேறு எங்கே? நாடகத்திற்குத்தான்” என்றேன் சலிப்புடன். உண்மையிலேயே அந்த நிமிடம் எனக்கு நாடகத்திற்குப் போகணும் என்றாலே எரிச்சலாக இருந்தது. வீட்டில் எல்லோரும் கிளம்புவதால் வேறு வழியில்லாமல் நானும் கிளம்ப வேண்டியிருந்தது.
“நல்ல ஆள்தான். இந்த ஊரைவிட்டுப் போகணும் என்ற எண்ணம் உனக்கு இல்லையா? நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. பகல் முழுவதம் ஜுரத்துடன் படுத்துக் கிடந்தாய். இந்தக் குளிர் காற்றில் வெட்ட வெளியில் எப்படி உட்கார்ந்திருப்பாய்?”
“எப்படியோ உட்கார்ந்து கொள்கிறேன்.” உனக்கு என்ன வந்தது என்ற தோரணையில் கேட்டேன்.
“ஜுரம்தான் குறைந்து விட்டதே கிருஷ்ணா” என்றாள் அத்தை. அசல் விஷயம் எனக்குத் தெரியும். என்னைத் தனியாக வீட்டில் விட முடியாது. எனக்காக நாடகத்தைத் துறக்கவும் யாரும் தயாராக இல்லை.
“என்னம்மா சொல்றீங்க? குளிர்காற்றில் மறுபடியும் உடம்புக்கு வந்தால்?” என்றான் கிருஷ்ணன்.
“அந்த சாக்கில் நான் இந்த வீட்டிலேயே தங்கி விடுவேனோ என்று உங்க மகன் பயப்படுகிறான் அத்தை” என்றேன்.
“நீயாக விருப்பப்பட்டு எத்தனை நாட்கள் இருந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் உடம்புக்கு ஏதாவது வந்து ஏண்டாப்பா வந்தோம் என்று நொந்துகொண்டு வேறு வழியில்லாமல் தங்குவதில் உண்மையிலேயே எனக்கு விருப்பம் இல்லை. அம்மா! நீங்க எல்லோரும் கிளம்புங்கள். அவள் வரமாட்டாள்” என்றான் சீரியஸாக.
“அண்ணா! நான் சால்வையை எடுத்து வருகிறேன். போர்த்திக் கொண்டு உட்கார்ந்து கொள்ளட்டும். வேண்டுமென்றால் தலையணையும் கொண்டு போகிறேன். சாய்ந்து கொண்டு உட்கார்ந்து கொள்ள வசதியாக இருக்கும்” என்றாள் ராஜேஸ்வரி.
“ஏன்? கட்டிலையும், மெத்தையும் விட்டு வைப்பானேன்? அதையும் கொண்டு போனால் நிம்மதியாக படுத்துக் கொண்டே நாடகத்தைப் பார்க்கலாம் இல்லையா?”
கிருஷ்ணன் சொன்ன தோரணைக்கு குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கும் சிரிப்பு வந்தாலும் வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டேன்.
“அவளுக்குத் துணையாக நான் இருந்து விடுகிறேன். நீங்க எல்லோரும் போய்விட்டு வாங்க” என்றாள் அத்தை.
“அம்மா! நீங்க போகாமல் இருப்பானேன்? அதிலும் ஹரிச்சந்திரன் நாடகம். நான் தங்கிக் கொள்கிறேன்” என்றாள் ராஜேஸ்வரி.
“யாரும் தங்க வேண்டியதில்லை. எல்லோரும் கிளம்புங்கள்.” கிருஷ்ணன் சொன்னான்.
“அவள் மட்டும் தனியாக எப்படி இருப்பாள்?” அத்தை சங்கடத்துடன் என் பக்கம் பார்த்தாள்.
“அவள் என்ன நம்மைப் போல் பட்டிகாடா தனியாக இருக்க முடியாது என்பதற்கு? அங்கே அத்தையும், மாமாவும் அவர்கள் போகிற இடங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியைப் போல் இவளையும் அழைத்துக்கொண்டு போவார்கள் என்று நினைக்கிறீர்களா?” பாதி கிண்டலும், பாதி சீரியஸாகவும் சொன்னான்.
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். “எனக்கொன்றும் பயம் இல்லை அத்தை. நீங்க போயிட்டு வாங்க” என்றேன், கோபத்தினால் ஏற்பட்ட துணிச்சலுடன்.
“அங்கே பழக்கப்பட்ட வீடு. இங்கே புதிய இடம். இரவு நேரத்தில் தனியாக இருப்பது சிலாக்கியம் இல்லை. எதையாவது பார்த்து மிரண்டு போனால்?”
“அம்மா! வீணாக கவலைப் படாதீங்க. துணைக்கு நான் இருந்து விடுகிறேன் போதுமா. கிளம்புங்கள். உங்களை இறக்கிவிட்டு வருகிறேன்.” கிருஷணனின் குரலில் லேசான எரிச்சல் வெளிப்பட்டது.
பிரச்னை தீர்ந்து விட்டதுபோல் எல்லோரும் கிளம்ப முற்பட்டார்கள். ராஜேஸ்வரி மட்டும் என்னை விட்டுவிட்டுப் போக சங்கடப்பட்டுக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அதைக் கவனித்துவிட்டு “பரவாயில்லை ராஜி! கிளம்பு. எனக்குத் தூக்கம் வருகிறது” என்றேன்.
ராஜேஸ்வரி நிம்மதியடைந்தவளாக கிளம்பிப் போய்விட்டாள். எல்லோரும் கிளம்பிப் போனபிறகு வீட்டில் தனியாக விடப்பட்டிருந்த எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. பொழுதுபோக்கு என்று எதுவுமே இல்லாத இவர்களுக்கு நாடகம் என்றால் ஆர்வம் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.
தொலைவில் நாடகம் நடக்கப்போகும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த லௌட் ஸ்பீக்கர் வழியாக சினிமா பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. நடுவில் கோளாறு ஏற்பட்டதோ என்னவோ பாட்டு கர்ணகடூரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தாங்க முடியாமல் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டேன்.
கிருஷ்ணன் அவர்களை கொண்டு விட்டு வந்து விடுவான். நாலைந்து மணி நேரம் நாங்கள் இருவரும் தனியாக இருப்போம். அந்த எண்ணமே என் மனதில் கிளுகிளுப்பையும் லேசான பயததையும் ஏற்படுத்தியது.
திடீரென்று எனக்கச் சந்தேகம் வந்தது. கிருஷ்ணன் வேண்டுமென்றே இந்தத் தனிமையை ஏற்படுத்திக் கொண்டிருப்பானோ. வயதில் இருக்கும் ஆணையும் பெண்¡ணயும் தனியாக விடக்கூடாது என்ற நினைப்பு அத்தைக்குக் கூட வரவில்லையா?
இதுவே அம்மாவாக இருந்தால் இப்படி விட்டிருப்பாளா? எத்தனை யோசிப்பாள்? ஒரு வேளை தவிர்க்க முடியாது சூழ்நிலையில் என்னைத் தனியாக விட வேண்டியிருந்தால் எத்தனை அறிவுரைகளை வழங்கியிருப்பாள்? நாடகம் பார்க்கப் போகும் பரபரப்பில் அத்தைக்கு எதைப் பற்றியும் நினைப்பு இல்லை போலும். அதுவரையிலும் சாதாரணமாக இருந்த நான் இதுபோன்ற எண்ணங்கள் வந்ததும் தடுமாறும் மனதுடன் கிருஷ்ணனின் வருகைக்காகக் காத்திருந்தேன்.
அரைமணி தாண்டியது. ஒரு மணி நேரமும் ஆகிவிட்டது. கிருஷ்ணன் வரவே இல்லை. வரும் ஜாடையும் தென்படவில்லை. உண்மையிலேயே என்னுடன் தனிமையை விரும்புகிறவனாக இருந்தால் இப்படி நேரத்தை வியர்த்தமாக்குவானா? நேரம் போகப் போக என் மனதில் ஏற்பட்ட தேவையற்ற எண்ணங்கள் மறைந்து விட்டன. நிம்மதி பரவியது. அவனுக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்திருக்காது. நான்தான் பயந்துபோய் இல்லாததும் பொல்லாததும் ஊகித்துக் கொண்டு விட்டேன்.
கிருஷ்ணனும் நாடகம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பான். அத்தையைத் திருப்திப் படுத்துவதற்காகவும், ராஜி போகாமல் இருந்து விடப் போகிறாளே என்றும் அப்படி சொல்லியிருப்பானாய் இருக்கும். இந்நேரம் அவன் நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்துகொண்டு நாடகம் பார்ப்பதில் மூழ்கிப் போயிருப்பானோ என்னவோ. வீட்டில் நான் ஒருத்தி தனியாக இருக்கிறேன் என்ற நினைப்புகூட அவனுக்கு இல்லையோ என்னவோ. யாருமே வீட்டிற்கு இப்போதைக்கு வரப் போவதில்லை. அந்த எண்ணமே என் மனதில் கிலியை ஏற்படுத்தியது.
தலையணையை சரி செய்துவிட்டு படுத்துக்கொண்டேன். உறக்கம் வருவதாகத் தெரியவில்லை. எங்கேயோ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன்.
வாசற்கதவு வெறுமே சாத்தியிருந்தது. உள்ளே யாராவது நுழைந்து விட்டார்களா? விட்டில் என்னைத் தவிர யாரும் இல்லை என்று எவனாவது மோப்பம் பிடித்து உள்ளே வந்தால்? என் கழுத்தைப் பிடித்து நெரித்தால்? நகைகளை கொடுக்கச் சொல்லி மிரட்டினால்? தனியாக இருந்தாலே என் மனம் வேண்டாத விஷயங்களைப் பற்றி யோசிக்கும். அதிலும் உடல்நிலை வேறு சரியில்லை. இருட்டு என்றால் எனக்கு ரொம்ப பயம். எந்தப் பொருளைப் பார்த்தாலும் கண்ணு, மூக்கு, காது இருப்பது போல் தென்படும். எழுந்து போய் வாசற் கதவைச் சாத்திவிட்டு வரணும் என்று நினைத்தேன். ஆனால் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. எங்கேயோ ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்டது. தூக்கிவாரிப் போட்டது எனக்கு. மறுபடியும் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காதுகளை தீட்டிக் கொண்டு உட்கார்ந்தேன். ஆனால் எதுவும் கேட்கவில்லை. நிம்மதியாக மூச்சு விட்டுக்கொள்ளும் முன் மறுபடியும் எதையோ அறுக்கும் சத்தம். நான் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு என்ன செய்வது என்று திருடன் யோசிக்கிறானோ?
அறைக்குள் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் இருந்த எனக்கு வெளியே இருட்டாக இருந்ததால் எதுவும் தென்படவில்லை. எப்படியோ தைரியத்தை திரட்டிக் கொண்டு விளக்கை உயர்த்தி பிடித்தபடி ஹாலுக்கு வந்தேன். விளக்கைப் பிடித்திருந்த என் கை ஜுரம் வந்ததுபோல் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
என் சந்தேகம் வீண் போகவில்லை. முன் அறையில் ஜன்னலுக்குப் பக்கத்து மூலையில், காலையில் ஆவி பிடிப்பதற்காக ராஜேஸ்வரி எனக்கு போர்த்திவிட்ட போர்வையை போர்த்திக் கொண்டு யாரோ நின்று கொண்டிருந்தார்கள். உடல் முழுவதும் போர்வையால் மறைக்கபட்டிருந்தது. மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த இரண்டு கண்கள் மட்டும் கொடூரமாக என்னையே பார்த்து கொண்டிருந்தன.
“யாரது?” சத்தம் போட முயன்றேன். ஆனால் என் வாயிலிருந்து வார்த்து வெளியே வரவில்லை. நான் நகர்ந்தால் என்மீது பாய்ந்து விடுவதுபோல் அந்தக் கண்கள் நிர்தாட்சிண்யமாக பார்த்துக் கொண்டிருந்தன. எனக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. நான் கத்தி கூச்சல் போட்டாலும், என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் என்னைக் காப்பாற்ற யாருமே வரப் போவதில்லை. ஊர் முழுவதும் நாடகம் நடக்கும் இடத்தில் குவிந்திருக்கிறது என்ற உண்மை, புயலில் சிக்கிய இலையைப் போல் என்னை நடுங்க வைத்தது. நினைவு தப்பிக் கீழே விழப் போனேன். அதற்குள் வாசற்கதவு திறந்து கொண்டது. என்னையும் அறியாமல் அந்தப் பக்கம் பார்த்தேன்.
உள்ளே நுழைந்து கொண்டிருந்த கிருஷ்ணன் அப்படியே நின்று விட்டான். நான் அங்கே அந்த விதமாக நின்று கொண்டிருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்.
“மீனா!” என்றான் புரியாதவன் போல் பார்த்துக் கொண்டே.
கையிலிருந்து ஹரிக்கேன் விளக்கு எப்போ நழுவி கீழே விழுந்தது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. வீலென்று கத்திக் கொண்டே இரண்டே எட்டில் அவனை நெருங்கி இறுக்கமாக கட்டிப் பிடித்துக்கொண்டேன்.
“என்ன? என்ன நடந்தது?” பதற்றத்துடன் கேட்டான்.
“தி… திருடன்… அதோ… அந்த மூலையில்” என்றேன் நடுங்கும் குரலில். சுற்றிலும் இருட்டாக இருந்தாலும் அவனுக்கு வெகு சமீபத்தில் நின்றிருந்த எனக்கு அவனுடைய ஸ்பரிசம் தைரியத்தை அளித்தது.
“திருடனா? எங்கே? கொஞ்சம் இரு. நான் பார்க்கிறேன்.” கிருஷ்ணன் என் கைகளை விலக்க முயன்றான்.
“வேண்டாம் போகாதே. ஒண்டியாளு நீ. அவன் கையில் கத்தி கித்தி ஏதாவது இருந்தால்?” அவனை நகரவிடாமல் தடுத்தேன்.
தன்னையறியாமலேயோ இல்லை வேண்டுமென்றேவோ ஒரு வினாடி அவன் கைகள் என்னை பலமாக மார்போடு அழுத்திக் கொண்டன. அது பிரமையா இல்லை யதார்த்தமா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வேகமாக நிகழ்ந்து முடிந்து விட்டது.
கிருஷணன் என்னை விலக்கியபடி “இந்த வீட்டில் அவ்வளவு தைரியமாக எவனாவது நுழைந்து விடுவானா? அதையும் பார்த்து விடலாம். விளக்கு அணைந்துவிட்டது. முதலில் அதை ஏற்றுகிறேன்” என்றான்.
“எனக்கு பயமாக இருக்கு.” கிருஷ்ணன் கையை பலமாக பிடித்துக் கொண்டேன்.
“நான் இருக்கும்போது கூடவா?” என்றான். அவன் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
நான் அவன் கையை விடவில்லை. அவனும் இந்த முறை என் கையை விலக்க முயற்சி செய்யவில்லை.
சட்டைப் பையிலிருந்த தீப்பெட்டியை எடுத்து திரியை சரிசெய்து விளக்கை ஏற்றினான்.
“எங்கே? இப்போ காட்டு” என்றான்.
“அதோ… அந்த மூலையில்” தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டே சுட்டிக் காட்டினேன்.
விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் கை லேசாக நடுங்குவது என் கவனத்திலிருந்து தப்பவில்லை. கிருஷ்ணன் நான் காட்டிய மூலைக்குச் சென்று போர்வையைக் காட்டி “இங்கேயா?” என்றான்.
ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன். இப்போ அந்த கண்கள் தென்படவில்லை. ஆள் மட்டும் பதுங்கியிருப்பது தெரிந்தது. கிருஷ்ணன் அருகில் சென்று திடீரென்று உரத்தக் குரலில் சிரித்தான். “இதையா திருடன் என்று நினைத்தாய்? நல்ல ஆள்தான்.” கையால் போர்வையை இழுத்துவிட்டு உள்ளே இருந்ததை கீழே தள்ளினான்.
ஆங்காங்கே கிழிந்து பஞ்சு வெளியே நீட்டிக் கொண்டிருந்த பழைய மெத்தை, சுருட்டிய நிலையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது பழைய துணி மூட்டை ஒன்று கிடந்தது.
“இத்தனை நாளும் இது கொட்டகையில் இருந்தது. மழையில் நனைகிறதே என்று அம்மா சத்தம் போட்டதால் சாமிகண்ணு கொண்டு வந்து இந்த மூலையில் சாய்த்து வைத்தான். பார்க்க நன்றாக இல்லை என்று ராஜி கருப்புப் போர்வையை அதன்மீது போர்த்திவிட்டாள். நீ பயந்ததோடு அல்லாமல் என்னையும் பயமுறுத்திவிட்டாய்.”
நான் கண்களை அகல விரித்து அந்த மெத்தையைப் பார்த்தேன். அப்போ சற்று முன் நான் பார்த்த அந்த கண்கள்? அது பிரமை இல்லையே?
அதற்குள் மியாவ் மியாவ் என்ற சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். நாற்காலியின் அடியில் கருப்புப் பூனை இந்தப் பக்கம் பார்த்துக்கொண்டே கத்தியது. நான் பார்த்தது அதனுடைய கண்களைத்தான்.
“இதையும் பார்த்து பயந்து விட்டாயா?” கிருஷ்ணன் மறுபடியும் சிரித்தான்.”
வெட்கமும் ரோஷமும் என்னை ஆட்ககொண்டன. “ரொம்பத்தான் கேலி செய்யாதே. சற்று முன் ஹரிக்கேன் விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்த உன் கை நடுங்கியதை நானும் பார்த்தேன்” என்றேன்.
“அது பயத்தினால் இல்லை.”
“பின்னே?”
சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகம் திடீரென்று சீரியஸாக மாறியது. “நான்தான் வந்து விட்டேனே. இனி பயப்பட வேண்டியதில்லை. உள்ளே போய் படுத்துக் கொள். விளக்கை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றான்.
இருவரும் அறைக்குள் வந்தோம். கிருஷ்ணன் விளக்கை ஸ்டூல்மீது வைத்தான். மறுபடியும் காலடிச் சத்தம் கேட்டது. கட்டில்மீது உட்கார்ந்திருந்தவள் சட்டென்று எழுந்து கொண்டேன். “அதோ… காலடிச் சத்தம்” என்றேன்.
கிருஷ்ணன் ஒரு நிமிடம் கூர்ந்து கேட்டான். “மாடு கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருக்கும்” என்று சொல்லிக்கொண்டே விளக்கையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
இருட்டில் தனியாக நின்றிருந்த எனக்கு இந்த முறை பயமாக இருக்கவில்லை. நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது எப்படியோ இருந்தது. கிருஷ்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? இனிமேல் உயிருக்கே ஆபத்து வந்தால்கூட பயப்படக்கூடாது.
பத்து நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் திரும்பி வந்தான். அவன் முகம் ரொம்ப கம்பீரமாக இருந்தது. சற்றுமுன் நான் பயந்ததைப் பற்றி கேலி செய்து சிரித்த கிருஷ்ணன் இவன்தானா என்று தோன்றியது.
அறைக்கு வந்த பிறகு அவன் என் பக்கம் பார்க்கவில்லை. விளக்கை மேஜை மீது வைத்துவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் இந்த உலகில் எதற்கும் ஈடு இல்லாத அளவுக்கு ரொம்ப அழகாக காட்சியளித்தது. கொஞ்ச நேரம் கழித்து அவன் பேப்பரை மடித்து வைத்துக் கொண்டே என் பக்கம் திரும்பிப் பார்த்தான். பார்வையைத் திருப்பிக் கொள்ளவும் எனக்கு அவகாசம் இருக்கவில்லை.
“தூக்கம் வரவில்லையா?” என்றான்.
இல்லை என்பது போல் தலையை அசைத்தேன். பேப்பரில் இனி படிப்பதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் மேஜை மீது வீசிவிட்டு எழுந்து ஜன்னல் அருகில் சென்றான். சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
“நீ சிகரெட் பிடிப்பாயா?” நம்ப முடிதாதவள் போல் வியப்புடன் கேட்டேன்.
“எப்பொழுதாவது பிடிப்பேன். எதற்காக கேட்கிறாய்?”
“ஒன்றுமில்லை. இதுவரையில் நீ சிகரெட் பிடிப்பதை நான் பார்த்ததில்லை.”
“எந்த பழக்கமாக இருந்தாலும் நாம் அதற்கு அடிமையாகாமல், அதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது.”
நான் பதில் சொல்லவில்லை. ரொம்ப நாள் கழித்து நகத்தைக் கடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனக்கு. சமீபத்தில் அந்த பழக்கத்தையே மறந்து விட்டிருந்தேன்.
“கல்யாண விஷயமாக ராஜி ஏதாவது சொன்னாளா?” திடீரென்று கிருஷ்ணன் கேட்டான்.
“அப்படி என்றால்?”
“அதுதான். அந்த மாப்பிள்ளையைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்?
“என்னிடம் கேட்பானேன்? உன் தங்கையிடமே கேட்டிருக்கலாமே?”
“கேட்டேன். இருந்தாலும்…”
கிருஷ்ணன் சகஜமாக பேசியதும் என்னுடைய கூச்சமும், தயக்கமும் விலகிவிட்டன. “அவளுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“ஏன் இல்லாமல்?”
“அப்போ இந்த வரனை விட்டுவிடு.”
கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தவன்போல் என்னைப் பார்த்தான்.
“ராஜியிடம் நீயே சுயமாக கேட்டிருக்கிறாய். அவளும் பதில் சொல்லியிருக்கிறாள். அப்படியும் உனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் என்னிடம் கேட்கிறாய். அப்படித்தானே.”
ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்.
“ராஜி சொன்ன பதிலில் உனக்கே நம்பிக்கை இல்லாதபோது என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?”
கிருஷ்ணன் பதில் சொல்ல முடியாதவன் போல் பார்த்துவிட்டு இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.
“முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லு. சுந்தரியை நீ மனப்பூர்வமாக சம்மதித்துத்தான் திருமணம் செய்து கொள்கிறாயா?”
தீக்குச்சியை வெளியே எரியப் போனவன் அப்படியே விரைப்பாக நின்றுவிட்டான்.
“உண்மையைச் சொல்லு.” குரலை உயர்த்தி அழுத்தமாகக் கேட்டேன்.
“இது என்ன கேள்வி?”
“கேட்க வேண்டிய கேள்விதான். நீ விரும்பியது அந்தப் பெண்ணையா இல்லை அந்தப் பெண்ணின் சொத்தையா?”
“எதுவாக இருந்தால் என்ன? கணவனாக என் கடமைகளை நான் ஒழுங்காகச் செய்ய முடிந்தால், அந்தக் கேள்விக்கே இடமில்லை.”
“கணவனின் கடமைகள் என்றால்?”
“மனைவிக்கு வேண்டியதெல்லாம் தருவது.”
“வேண்டியதெல்லாம் என்றால்?”
கிருஷ்ணன் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“வேண்டியதெல்லாம் கொடுப்பது என்றால் அதில் மனம் என்பது ரொம்ப முக்கியமானது என்றும், அதுதான் முதலிடம் வகிக்கும் என்றும் உனக்குத் தெரியுமா?”
கிருஷ்ணன் விருட்டென்று திரும்பினான். “தெரியும், அது மட்டுமே இல்லை. நூற்றில் தொண்ணூற்றி ஒன்பது பெண்கள் கணவன் என்றால் குழந்தைகளை, நகைகளை, சொத்து சுகத்தைத் தருபவன் என்று எண்ணும் முட்டாள்கள் என்றும் தெரியும். கோடியில் ஒருத்திக்கோ ஒருத்தனுக்கோ தவிர இந்தக் காலத்தில் யாருக்கும் மனதைப் பற்றிய அக்கறையோ கவலையோ இருக்காது. நான் கேட்டது ராஜேஸ்வரியைப் பற்றி, என்னைப் பற்றி இல்லை.”
எதிர்பாராத விதமாக அவன் காட்டிய இந்த ஆவேசத்திற்கு ஒரு வினாடி திகைத்துப் போனாலும், அவன் கோபத்திற்கு பயப்படாதவள் போல் நானும் குரலை உயர்த்தினேன். “உன் விஷயத்திற்கும், ராஜியின் திருமணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே. உனக்காகத்தான் அவள் இந்த வரனுக்கு ஒப்புக்கொண்டாள். இந்த ஊருக்கு வந்த புதிதில் அண்ணன் தங்கையாக உங்க இருவருடைய பாசத்தைப் பார்த்து பெருமையாக உணர்ந்தேன். உன்னைப் போன்ற அண்ணனை அடைந்த ராஜேஸ்வரியின் அதிர்ஷ்டத்ததைக் கண்டு பொறாமையும் பட்டேன். ஆனால் இப்போ தோன்றுகிறது. நீ அவர்களிடம் காட்டும் இந்த பிரியம் எல்லாம் வெறும் நடிப்பு. ஊர் மக்களை ஏமாற்றுவதற்குப் போடும் வேஷம். உன்னைப் போன்ற சுயநலக்காரன் அண்ணனாக இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே உத்தமம். பணத்திற்காக உன்னை நீயே விற்கத் துணிந்தவன் வேறு எதைத்தான் செய்ய மாட்டாய்?”
நான் எதிர்பார்த்து நடந்தது. கிருஷ்ணன் முகம் உணர்ச்சிப் பிழம்பாக மாறியது. “மீனா!” என்றான் தடுப்பதுபோல்.
“பின்னே என்னவாம்? எவ்வளவுதான் பொருளாதார பிரச்னை என்றாலும் மனதிற்குப் பிடிக்காத பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா? அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்றுதானே இந்தத் துணிச்சல்? துரதிரஷ்டவசமாக எதிர்காலத்தில் அந்தப் பெண்ணுக்கு அதைப் புரிந்து கொள்ளும் ஞானம் வந்தால்? நீ திருமணம் செய்து கொண்டது தன்னை இல்லை என்றும், தன்னுடைய சொத்தைத்தான் என்றும் அவளுக்குத் தெரிந்தால்? எவ்வளவு முட்டாளாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே? உண்மை தெரிந்த மறுநிமிஷமே பகை கொண்ட பாம்பாக மாறுவாள். அப்போ உங்கள் இருவரின் வாழ்க்கையும் எப்படி இருக்குமோ யோசித்துப் பார்.”
கிருஷ்ணன் திடீரென்று சிரித்தான். ரொம்ப அழகான சிரிப்பு அது.
“இந்த விஷயங்களை எல்லாம் உன்னிடம் யார் சொன்னது? ராஜிதானே? வரவர அவளுடைய வாய் ரொம்ப நீண்டுவிட்டது.”
“அவள் ஒன்றும் சொல்லவில்லை. நானாகப் புரிந்துகொண்டேன். தயவுசெய்து அவளை ஒன்றும் சொல்லாதே.”
“அவளை ஒன்றும் சொல்ல மாட்டேன். உன்னைத்தான் நாளைக்கு ரயிலில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்போகிறேன்.”
“உன்னால் முடியாத காரியம்.” கோபமாக பார்த்தேன்.
ஆனால் என் பார்வை கிருஷ்ணனிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சட்டைப் பையிலிருந்து ஏதோ காகிதத்தை எடுத்து என்னிடம் நீட்டினான்.
“என்ன காகிதம்?”
“டெலிகிராம். மாமாவிடமிருந்து.”
அதைப் படிக்கும் முன்பே அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் இயந்திரகதியில் பிரித்துப் படித்தேன். “வெள்ளிக்கிழமை கிளம்பி வா. சனிக்கிழமை அம்மா வருகிறாள்” என்று இருந்தது. என் உடலில் இருந்த சக்தி முழுவதும் வற்றி விட்டாற்போல் இருந்தது.
“எப்போ வந்தது?” சோர்வுடன் கேட்டேன்.
“இன்று மதியம்.”
“என்னிடம் சொல்லவே இல்லையே?”
“இன்று வியாழன்தானே. வெள்ளிக்கிழமை கிளம்பி வருக்கிறாய் என்று மாமாவுக்குத் தந்தி கொடுத்துவிட்டேன்.”
நான் நிமிர்ந்து பார்த்தேன். கிருஷ்ணனும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வினாடி எங்க இருவரின் பார்வையும் சந்தித்துக்கொண்டன. நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். அவன் மௌனமாகப் போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை. திடீரென்று என் கனவு ஏதோ கலைந்து விட்டதுபோல் தோன்றியது.
(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்