அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

கே ஆர் மணி


வீடு அமைதியாகயிருந்தது. பக்கத்து வீடு காலியானதிலிருந்து அது அதீதமாய் உறைக்கிறது. பக்கத்து வீட்டு குழந்தைகள் வீடு மாறிப்போன வெற்றிடம்.

கடந்த இரண்டு நாட்களாக வீடு அப்படித்தானிருக்கிறது.
தாமன் சோர்ந்துபோய் போகோவோ, ஸ்பைடர்மோனோ பார்த்துக்கொண்டிருந்தான். தாமனுக்கு இரவு சாப்பாட்டுதட்டு கொண்டுவரும்போதுதான் கவிதாவிற்கு உறைக்கிறது இரண்டு தட்டு அதிகமாய் கொண்டுவந்துவிட்டதாய். அம்மாவும் ஏதோதோ புத்தகங்கள் படிக்கிறாள்.

ஆனாலும் எல்லோருக்கும் நிறைவற்றதனமாய் எல்லாம். எனக்கும் கூட.

ஞானியைப்போல தாமன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“சீக்கிரம் சாப்பிட்டு தொலையேண்டா” என்று கத்தலும் மிஸ்ஸிங்.
“ அதுக்கள்ளாம் என்னமா சாப்பிடற்துபாரு “ என்று அம்மா சொல்வதற்கான வாய்ப்பில்லை.

பக்கத்து வீட்டு குழந்தைகள் சச்சித்தும், ஸ்நேகாவும் எங்கள் வீட்டோடையே கிடக்கும். வீட்டுக்கு வருகிறவர்கள் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் இதற்கு மேல் நான் அவசரப்படக்கூடாதென்றும் நினைத்துக்கொள்வார்கள்.

மூன்று குழந்தை பெத்தபிறகும் இளமையாய் இருப்பாதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள் என்று என் மனைவியே நினைத்துக்கொள்வாள். மூன்று குழந்தைகளை வளர்ப்பதாக அவளுக்கும் ஒரு நினைப்பு.

*
மொட்ரோ அபார்ட்மெண்ட் வீடுகளில் ஏன் பொதுவாகவே
எந்த பக்கத்துவீட்டு உறவுகளை பெண்களும், குழந்தைகளும்தான் தொடக்கி வைக்கிறார்கள். குழந்தைகள் கொண்ட இடங்கள் தானகவே கைகோர்க்கின்றன. பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகளால் இணைகிறார்கள். ஆண்களுக்குத்தான் தயக்கம், ஈகோ, பந்தா, கொஞ்சம் கடுப்பு எல்லாம்.

இந்த விதிப்படியே என் பக்கத்துவீட்டு குழந்தைகள் உள்ளே வந்தபோது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

“குரங்கு மூஞ்சிகள்.. இந்த ஸெட்டிகள்ளாம்.. பாரேன்.. ஒரு களை கூடயில்லை.. “ ஆனால் அவள்- மிஸஸ் ஸெட்டி – அழகாகத்தானிருந்தாள். அப்படி சொல்வதற்கு முன்பே அவளை பார்த்து லிப்டில் நான்கு முறை ஈளித்திருக்கிறேன். அவள் சிரிக்கும் போதையைவிட, சிரிக்காமல் ஸ்லீவ்லெஸ் நைட்டிபோட்டிருந்தபோது நன்றாகத்தானிருந்தாள்.
அவளிடம் ஏழு வேறுவிதமான நைட்டிகள் இருந்தன என்பதை எனது சிற்றறிவு குறித்துக்கொண்டது.

“எல்லாம்.. நான் வெஜ் தின்னுட்டு என்னமா பெருத்து அலையறது பாரு.. “ தேவையில்லாமல் சொன்னாள் திருமதி. எங்கோ கருகிய வாசனை. அயலார் பருமன் கண்ணை உறுத்துவதில்லை.

“ஆமாம்.. ஆமாம்..” புருச லட்சணம்.

மனைவியின் சிற்றறிவு குறிப்பேட்டிலிருந்து :

”ஹோண்டா சிட்டி. புது ரிஸிஸ்ட்ரேசன்.. பாத்தேளா..”
“ஹோம் தியேட்டர் அட்டாச் பண்றதுக்கு ஆள் வந்திருக்கான் போல..”
“ திரி ரூம் பிரிட்ஜ் அதை உள்ளே கொண்டுபோக முடியாம ரொம்ப கஸ்டப்பட்டுடா.. ”

“அவர் எம்பிஎல் கம்பெனியோட ஒரு டைரக்டராம். கம்பெனி ப்ளாட் கொடுத்திருக்குபோல.. ஏற்கனவே பெங்களூர்லயும் கோவாவுலயும் ஒன்னு இருக்குபோல.. “

” நிறைய டூர்ல போவார் போல.. பாவம் இரண்டு குழந்தைகளை இவதான் தனியா பாத்துக்கணும் . “

அவன் ஸெட்டிகளுக்கான சிவப்பு நிறத்தோடும், சுருள் முடியோடு உயரமாய் ஹோண்டா கார் வைத்திருந்தது தெரிந்தபோது எனக்கு என்னவோ செய்தது.

பக்கத்து வீட்டின் மாமிச வாடை அம்மாவை ரொம்பவே படுத்தியது. இத்தகைய வாசனைகள் வரும் நாட்கள் பெரும்பாலும் அவள் கணவன் திரு.ஸெட்டி வந்த நாட்களாகத்தானிருக்கும். அம்மா அவனை மானசீகமாய் திட்டிக்கொண்டிருந்தாள்.

“வந்து தொலைச்சுட்டான்போல “
” என்ன சனியண்டா.. இது என்னத்த. சமைக்கிறாளோ “
“ மீன், சிக்கன்னா இப்படி நாறாதே.. இப்பல்லாம் எதுக்கு அதை சமைச்சிண்டிருக்கா.. கடையிலிருந்து வாங்கி வேகவெச்சு கொடுத்திர வேண்டியதுதானே.. “
“இப்படி நாறினதேயில்லையேடா.. மனிசனை சாப்பிடறாளோ என்னவோ “
“ போன பிளாட்ல மலையாளக்கார வீட்டு மாமிசம் கூட இப்படி நாறலையோடா. “

அம்மா ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அதில் உண்மையிருந்தாலும் நாங்கள் அதிகமாய் அதை பொருட்படுத்தவில்லை. மெட்ரோ நகரில் அதையெல்லாம் பொருட்படுத்தவும் முடியாது. ஐம்புலன்களை அதற்கு பழக்கப்படுத்துவதை தவிர வழியில்லை.

எல்லாவற்றையும் விட அவளின் சின்ன சப்பரத்தில் வசித்த கடவுளர்களை தீண்டியது அம்மாவை கொஞ்சம் அதிகமாகவே துன்புறுத்தியது. எத்தனையோ வாசனைத்திரவியங்கள் போட்டும் பருப்பும், பாலும், பாயசமும் ஆவி நுகரும் அம்மாவின் சைவ சாமிகள் மற்றும் அவர்களின் ஐம்புலன்கள் இந்த வாசனையில் மிகத்துன்புறும் என்று துணுக்குற்றாள். மனிதர்களை போல சாமிகளும் மெட்ரோ சாமிகளாகி அட்ஜஸ்ட் ஆகிவிடும் என்று நாங்கள் எதிர்ப்பார்த்தோம்.

அந்த அசைவ ஞாயிறில் ஒரு திருப்பம் நடந்தது.

*
பதிவு போல ஒரு அசைவ வாடை. எங்களுக்கு பழகிப்போனது. அம்மாவின் புலம்பலுக்கு தயாராகியிருந்தோம்.

தீடீரென அவள் இரண்டு முறை வாந்தி எடுத்தபோதுதான் அம்மாவின் அவஸ்தை எங்களுக்கு புரியலாயிற்று.

இத்தனைக்கும் பெரிய ப்ளாட். மேலும் அவர்களின் சமையலறை நவீனமான பேன்களை கொண்டதுதான். ஆனாலும் கதவை சாத்தி, ஜன்னலை மூடி, ஏசி போட்டு, ரூம் பிரஸ்னர் போட்டும் காற்றில் மிதந்து வந்தது அந்த அசைவ வாசனை.

எப்படியாவது சொல்லிவிடுவேண்டும், சொசைட்டியில் கம்ப்ளென் செய்யலாம் அல்லது அவர்களிடம் போயே சொல்லலாம். ’போடா உன் வேலையை பாத்துக்கொண்டு ’ என்று சொல்லலாம். போன ப்ளாட்டின் சிந்திக்காரன் அப்படித்தான் சொன்னான். சொசைட்டி அலுவலகத்தில் குற்றம் சொல்லியதற்காக தினமும் அசைவம் செய்து சாப்பிட்டான். எலும்புத்துண்டை வாசலில்போட்டு “சாரி” சொல்லி போனான்.

இப்படி யோசித்தபடியே அந்த ஞாயிறு கழிந்துபோனது. அடுத்த சில ஞாயிறுகளில் வாசனை காணமல் போயிற்று. இல்லை.. அம்மாவே தனது வழியில் சரிசெய்துகொண்டாள். இந்தி தெரியாமல் சண்டையிடாமல் எப்படி தீர்ந்தது அந்த பிரச்சனை?

அதிலிருந்து அந்த குழந்தைகள் எங்கள் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தன.. அம்மாவின் மேஜிக்கல் ரியலிசம்.. உண்மையானது.

*

பூ எப்போது மலரும் என்ற கணம் தெரியாதென்பார்கள், அதுபோலத்தான் ஏதோ ஒரு புள்ளியில் வளர்ந்து அவை வானம் நோக்கி வளர்கிறது. எந்த புள்ளியில், எந்த விநாடியில் அவை செழித்தன என சொல்வது கடினம்.

அம்மையிடம் எல்லா குழந்தைகளும் ஓட்டிக்கொண்டன. எங்கள் வீட்டிலே பழியாய் கிடந்தன. ஸெட்டி டூருக்கு போனதால் என் மனைவியும் அவளும் சேர்ந்தே சமைத்தார்கள்.

அம்மை குழந்தைகளை மெல்லியதாய் கரித்துக் கொட்டிக் கொண்டேயிருப்பாள். என் மனைவியிடம் சொன்னால் எடுபடாது என்று என்னிடம் மெல்லியதாய் புலம்புவாள்.

“ அந்த சின்னதுதான் என்னமா திங்கறதுடா.. மூணு வயசில நாலரை தோசைடா.. நம்மாத்து பிரதிவந்தம்.. ஓன்னுக்கு மேல
கொட்டிக்க மாட்டேங்கறது.. “

“என்னடா.பால்பாக்கெட்டா கொண்டுபோற.. இதோடு ஆறு பாக்கெட்டு.. ஒரு கணக்கு அவளுக்கா தெரிய வேணாமோ..”

“பெரிசுக்கு ஏதாவது நொறுக்குத்தீனி.. நேத்துதான் அப்பளாம் பொரிச்சேன். சூடா.. ஆறு சாப்படறது..”

“அது இரண்டும் சேந்து இவனோடு சாமென்ல்லாம் கொண்டுபோய் விளையாடறது.. இது அசமந்தம்.. அழுதுண்டு வந்து நிக்கறது..”

“அவளோட சாமனெ ஓன்னு விடமாட்டா.. விட்டுட்டா வந்து நாக்கால நக்கி எடுத்துண்டு போயிறுவள் ஸெட்டி பொம்மனாட்டி..
உங்காத்துக்காரிக்கு எத்தனை சொல்லியும் ஒரு கேள்வி கிடையாது..”

*
ஆனாலும் இப்படிப்பட்ட குற்றப்பத்திரிக்கைகளோடு உறவு நீண்டுகொண்டுதானிருந்தது. அம்மை யாரும் சொல்லாமலே நாலு தோசைக்கு அதிகமாய் வார்த்தாள். கொஞ்சம் அதிகமாகவே பட்சணம் செய்தாள்.

எனக்கான தாளிக்கப்பட்ட கரம் மசாலா ஆம்லெட் அவர்கள் வீட்டிலிருந்து ஸ்பெசலாய் வந்தது. இங்கிருந்து இடியாப்பமும், ஆப்பமும் ஏற்றுமதியாயின.

சொல்லாமலே நிறைய இணைப்புகள் நடந்தது. உணவுகள் இணைப்புகளின் முதல் கன்னிபோல.

எங்கள் வீட்டு மின் மற்றும் சொசைட்டி பில்களை அவளே கட்டினாள். சின்னவன் ஸ்கூல் வீட்டு நேரே அங்கே போய் ஸ்கூலின் வீட்டுப்பாடங்கள் செய்தான். ஸெட்டி இருக்கிற கொஞ்ச நாளில் சனி இரவுகளில் எங்களின் குடிப்பார்ட்டி வெளிப்படையாகவும், இல்ல மாந்தர்கள் அடக்க ஓடுக்கமாய் சமையலறையிலும் குடித்துக்கொண்டார்கள். எங்களுக்கு பரிமாறியபிறகுதான் குடிக்கும் சனாதன தர்மத்தை விடுவதாயில்லை.

ஒரு முறை அவர்களின் அறையில் பிரவேசித்தபோது திருமதி.ஸெட்டி சொன்னாள்.

“ஐயா, வாய் என்று நினைத்து உங்கள் திருமதியின் கண்ணை பாழ்படுத்திவிடாதீர்கள் “ என்று. சொல்லிவிட்டு எல்லோரும் இடிச்சிரிப்பு செய்ய, நான் வெட்கித்துபோனான். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறார்கள் போல. ஆண்கள் அவ்வளவாய் இலகுவதில்லை. நாசமாப்போன ஸ்டாக் மார்க்கெட், கிரிக்கெட் ஸ்கோர்..ச்சை..

*

பீரோ தவிர மற்ற எல்லாயிடத்தையும் குழந்தைகள் புழங்கினார்கள். அம்மை சொன்னது சரிதான். சரியான வானரங்கள். துவம்சம் செய்திருந்தன. முதலில் ஹாலில் மட்டும் அமைதியாய் விளையாட ஆரம்பித்த அவைகள் எல்லாயிடத்திலும் தனது ஆக்ரமிப்பை நடத்தின.

என் தலையாணையில் சின்னவள் ஓன்னுக்கு போயிருந்தாள். அதை மறைத்து அழகாய் கவர் போட்டுவிட்டு போய்விட்டார்கள். படுக்கையின் சின்ன மர அலமாரியில் வைத்திருந்த ஆணுறைகள் நோண்டி அந்த ஸெட்டி பிள்ளை எடுத்துவிட்டது. எனது கழிப்பறையை கண்ட மேனிக்கு உபயோகப்படுத்தினர் குழந்தைகள். நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்து எங்கேங்கோ வைக்க ஆரம்பித்தன.

கணிப்பொறியில் புதுபுது விளையாட்டுகள் பதிவேற்றி பாழ்படுத்தினார்கள். கொஞ்சநாளில் எந்த உடமையும் எனக்கென்று இல்லாமல் போயிற்று. ரிமோட் அவர்கள் சம்மதித்தால் மட்டுமே எங்கள் கைக்கு வர ஆரம்பித்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் போலவும், கடவுளர்கள் போலவும் நீக்கமற தனது இணைப்பு சங்கலியை அவர்கள் பெருக்கிக்கொண்டே போனார்கள்.

நானும் திருமதி ஸெட்டியும் நிறைய புள்ளிகளில் இணைந்து போனதாய்தான் பட்டது. என் தொப்பையை குறைக்க சொன்னதிலும், எனக்கான புது பேண்ட் கலர்கள் மற்றும் டியோடரண்ட் தேர்வு செய்வதிலும் அவளின் பங்கு குழையச்செய்தது.

இந்த குழைவில் எனது திருமதி துப்பட்டாவின்றியே அவர்கள் இல்லத்தில் உலவுவதையும், அவளின் சுருள் முடி அதிகமாய் திரு ஸெட்டியால் பாராட்டுப்பெற்றதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

குழந்தைகள்தாண்டியும் குழைவுகள் அதனது தளத்தில் வளர்ந்திருந்ததை குறிப்பெடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அதை அம்மா, “ பக்காத்து ரசத்திற்கு டேஸ்டு அதிகம்தான் சொல்லிச்சொல்லி இவ அப்பா குடிப்பர்..” என்று அமுக்கமாய் சொல்லிவிட்டாள்.

ரசவாதம் மெட்ரோ வாழ்க்கையின் சில இரவுகளை அர்த்தப்படுத்தத்தான் செய்தன.

*
அவர்கள் எல்லா முயற்சி செய்தும் அந்த வீட்டை வாங்கமுடியாதென்றாகிய பின், அதை விட அதிக வசதிகள் கொண்ட இன்னொரு பிளாட்டுக்கு குடிபெயர்ந்தார்கள். தனக்கென விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், ஆயிரத்திற்கு மேலான மிக உயர்குடி மக்கள் கொண்ட அந்த புதுமனை புகுவிழாவிற்கு போனபோது எங்கள் இல்லத்தில் எல்லாருக்குமே அங்கு போய்விடவேண்டுமென நப்பாசை எழுந்தது.

“அப்பா அங்கெப்ப போறோம்.. “ என்று தாமன் அனத்திக்கொண்டேயிருந்தான். அவ்வப்போது அழுத்தி எழுதப்பட்ட அலங்காரங்களோடு எனது திருமதியும் அவனை கூட்டிபோய் வந்தாள்.

ஒரு நாள் அந்த குழந்தை இரவில் என் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அழுதபோது அதை எடுத்துக்கொண்டு திருமதி ஸெட்டியே வந்திருந்தாள். ஒரு அரை மணிநேரம் இருந்துவிட்டு குழந்தை போனது. இத்தனைக்கும் அம்மாவிற்கு அதனோடு பேசவே தெரியாது. அம்மை தமிழும், மலையாளமும் கலந்து பேசுவாள். அது ஏதோ இந்தியில் கனைக்கும். ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த சின்ன வானரம் அம்மா மடியிலேயே தூங்கிப்போயிற்று.

பெரிய வானரம் கணக்கு மாதாந்தர டெஸ்டுகளில் தொடர்ந்து மூணுமுறை முட்டை வாங்கியபின் அம்மாவிடம் செமத்தியாய் அடிவாங்கியபின் கேட்டான் “ எனக்கு தாத்திய பாக்கணும் “ அன்றும் திருமதி ஸெட்டி அந்த வானரத்தை கூட்டிவந்திருந்தாள்.
வந்தவன் கேட்டான், “ தாத்தி.. பணியாரம் பண்ணிக்கொடுங்களேன். “

“ முட்டை வாங்கிட்டு.. சனியனுக்கு பணியாரம் கேக்கறது.. “ அம்மை திட்டிக்கொண்டே பண்ணிப்போட்டாள். நாங்கள் சிரித்துக்கொண்டோம். எனது திருமதியிடம், திரு.ஸெட்டி சொன்ன, ‘ஐ மிஸ் யூ ‘வை ஏனோ திருமதி ஸெட்டியிடம் சொல்ல மறந்துவிட்டேன்.

*

இரண்டு மாதங்கள் ஆகியும் யாரும் வராத பூட்டிய அந்த வீட்டை அதீத சிரிப்போடு நானும் எனது திருமதியும் பார்த்துக்கொள்வோம். இருவருக்குமான மனத்தனியறைகளின் அந்த இல்ல ஆளுமைகள் வரைந்த கோலங்களை இருவருமே ரசித்தோம். ஆனாலும் அந்த குழந்தைகள் ஏற்படுத்திய வெற்றிடம் பெரிதாகிக்கொண்டே வந்தது. அம்மை அவர்கள் இல்லாதபோதுதான் நிறைய பேசினாள்.

” நாலு கல்கண்டையும் அந்த சின்ன கழுதை அப்படியே தின்னிடுமேடி..”

“இரண்டுமே விட்டுக்கொடுக்காது தெரியுமா.. ஒன்னுக்கொன்னு அவ்வளவு சமத்து.. “

இல்லாதபோதுதான் அந்த பெரிய வானரம் மூஞ்சி அடிக்கடி ஞாபகம் வந்தது. இன்னும் கொஞ்சம் பிரியமாய் விளையாடியிருக்கலாம்தான்.

*

இரண்டு மாத வெளியூர் போய்விட்டு வந்தபின் வீட்டில் சில புதுமுகங்கள். தாமனின் சில புது நண்பர்கள்.

“ அப்பா.. ஸ்டீவ்.. மேரா ந்யா த்தோஸ்த்..”

ஸ்டீவ் துருதுருவென்றிருந்தான். புஸ்டியாயிருந்தான்.

“ஹோலோ..அங்கிள் “ என்று இடது கையால் கைகொடுத்தபடி, வலது கையால் ஸ்பைடர் மேன் காரை நோண்டிக் கொண்டிருந்தான்.

அம்மை வந்து உட்கார்ந்தாள். அதுகளுக்கு சாப்பட்டு தட்டை கொடுத்தாள்.

“ இப்பத்தான் இரண்டு முறுக்கு தின்னது.. அதுக்குள்ள.. நாலு இட்டலி.. சாம்பர இப்படியா குடிக்கும்.. குழந்தைகள்னா.. சாப்பிட வேண்டாமா.. ஆனாலும் இப்படியா.. நம்மாத்து பிரதிவந்தம்.. இருக்கே.. “

அம்மை பூரணமானாள் போல..

எனக்கும் அப்படித்தானிருந்தது. ஸ்டீவின் ஸ்பைடர் மேன் கார் ஓட ஆரம்பித்தது.. பேட்மேனை நோக்கி.

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி