மூனாவது

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

அதிரை தங்க செல்வராஜன்


” நெசமாத்தான் சொல்றேன் உங்கம்மாவுக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு.”

ஒரு நொடியில் சாவி கொடுத்த பொம்மை போல் மூளைக்கு சூடு ஏறியது.
செருப்பாலடி நாயே, இன்னொரு தடவ ஏதாவது சொன்னே, கொலை
விழும். அவசரமாய் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்த போது
சட்டை பொத்தான்கள் இடம் மாறி பொருந்தியிருந்தன. கோபம் கண்ணை
மறைப்பதை, சுவாசம் நிலையின்மையை உணர முடிந்தது. கால்கள்
வேகமாய் தொடங்கி, தளர்வாய் வழக்கம் போல் கடல் நோக்கி ஊர்ந்தது.
கோபம் வேர்வையாய் கரைந்து வெளியே வந்தது. தப்போ, அவசரப்பட்டு
கத்திட்டோமொ. வேலையில்லாமல் வீட்டில் இருப்பது நரகம். வீட்டின்
எந்த அசைவும் தவறாகவே தெரிகிறது. கோபம் நரகலை மிதித்தது போல்,
காலை வெட்டவா முடியும்.

உப்பளத்தின் வாடை உள்ளுக்குள் போக, ஒரு கசகசப்பு உள்ளங்கையில்
தெரிந்தது. என்ன அவசரமான மூடு விழா, தினக்கூலிய சேர்த்து நூத்து சொச்சம்பேர்,
பொசுக்குன்னு போச்சு. உப்பும், கணக்குந்தவிர வேறொன்னும் தெரியாது. நாப்பது
வயசுல என்ன வேலை, யார்கிட்ட கேக்கறதுன்னு புரியல.

வேலை வேலைன்னு ஏன்டா புலம்பற, அப்பாவோட வயலுக்கு போடா, நீ பத்து
பேருக்கு வேலை குடுக்கலாம். அம்மா சொல்றது சரின்னாலும் உப்பள ஆபீஸ்ல
வேலைக்கு போன கெத்து வருமா. எல்லாம் மனசுதான், நமக்கு என்ன வேணுங்கிறதவிட
அடுத்தவன் என்ன நெனைப்பானோன்னுதான் அதிகமா யோசிக்குது.

இந்த நேரத்துல இவளுக்கு நாள் தள்ளி போகும்னு யாருக்குத் தெரியும்.
இருக்குற ரெண்ட சமாளிக்கவே முழி பிதுங்குது.

இதுக்கெல்லாமா அம்மாகிட்டே கேப்பாங்க, எனக்கு மட்டுமென்ன கலைக்கனும்னு
ஆசையா? சமாளிக்க முடியாதேன்னுதான் சொல்றேன்.

நல்லா யோசிச்சு பாரு, பெரியவன் பொறக்கறத்துக்குள்ளே எத்தனை பேர், என்னாச்சு
இன்னும் சும்மாதான் இருக்கிறியான்னு கேட்டப்ப, அம்மாதானே எல்லார் வாயையும்
அடைச்சது. அவங்கள்ட சொல்லாம எப்படி?

அம்மாவிற்கு எல்லாம் அத்துப்படி, பால் கணக்குலேந்து எல் ஐ சிக்கு பணம் கட்றது
வரைக்கும் எல்லாம் விரல் நுனியில். என்னாச்சும்மா இந்த மாசம் நாள் தள்ளுது,
குளிக்கலையா?

என்னை ஏன் பாக்குறே, கேக்கறாங்கள்ள சொல்லு.

ஆமாம் மாமி, என்ன செய்யறதுன்னு புரியல. ரெண்டு பசங்களையும் சமாளிச்சாலே
போதும்னு இருக்கு. கலைச்சுடலாம்னா, உங்க கிட்டே கேக்கனுங்கிறாங்க.

இதென்ன கூத்து, இதெல்லாம் ஆவறத்துக்கு முன்னே யோசிக்கனும், முளைச்ச உசிர
கலைக்கிறது மகாபாவம். நாங்க நாலு பெத்துக்கலையா, நீங்கள்லாம் என்னா கெட்டா
போய்டீங்க. ஊர் உலகத்துல இல்லையே இல்லையேன்னு ஏங்குதுக, கிடைச்சத
தொலைப்பேன்னு அலையறீங்களே.

அம்மா புரிஞ்சுக்குங்க, உங்க காலம் வேற, இப்ப நிலைமை வேற.

என்னப்பா சொல்ற நீ, எங்க காலத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி கொடுக்கலை,
புள்ளைங்க பொழுது போக்க ஓசில டிவி கொடுக்கலை , இலவசமா படிக்கவைக்க
முடியாது, இருந்தும் நீங்க நாலு பேரும் நல்லா இல்லையா இப்போ.

சாதரணமாவே உங்கம்மாவுக்கு முன்னே பின்னே ரெண்ட்ரெண்டு கண்ணு, இப்ப
உடம்பெல்லாம் கண்ணாயிடும். சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தாச்சு.

அம்மாவுக்கு பரிஞ்சு அவகிட்டயும், அவளுக்கு பரிஞ்சு அம்மாகிட்டயும்
பேசுனா நம்ம பாடு கிழிஞ்ச துணிதான்.

அம்மாவிற்கு தெரியாமல் ஆஸ்பத்திரிக்கு முன் வண்டியை நிறுத்திய போது,
சிறிய கோவிலில் கணேசர் குளித்து ஊதுபத்தி புகையில் உட்கார்ந்திருந்தார்.
தீட்டு தொடக்கோட சமியறை பக்கம் போகாதேன்னு திட்டுற உலகத்துல
எல்லா தீட்டுகளோட மொத்த இடமான ஆஸ்பத்திரி வாசல்ல கோயில் சரியான்னு
தெரியல.

நீங்க நீங்களா இருக்கிறதவிட உங்கம்மாவா இருக்குற நேரம்தான் அதிகமா இருக்கு.

உம்புள்ளையும் இப்படித்தான் இருப்பான் போ, அப்ப மட்டும் இனிக்கும்.

நாமெல்லாம் பள்ளிகூடத்துக்கே சீருடை போட்டதில்ல, இதோ பாரு மருந்து கடையிலே
புடவை, சுடிதார் மேல சட்டையை போட்டுகிட்டு, எல்லாம் …

நாறக்கண்ணு, வந்து சேருங்க. எங்க பாத்தாலும் உங்க புத்தி அதுலதான் நிக்குது.

டெட்டால் நாத்தம் போவதற்கு ஈக்கள் வாசலில் தவமிருந்தன. பதிவு இல்லாமல்
காலை நேரத்தில் பார்க்க முடியும். நுழையும் போதே, என்ன விசேஷமா என்ற
டாக்டரம்மாவையும், என்னையும் மாறி மாறி பார்த்தாள். பார்வை அகராதி,
உங்கம்மா படுத்தற பாடு தாங்கலை என்று பொருள் சொன்னது.

சில நிமிடங்கள் அவளும் மருத்துவரும் மறைந்து போனார்கள். அறை சுவர்களில்
எல்லா பாவங்களிலும் குழந்தைகள். திடீரென பயம் வந்தது கொண்டு வந்துள்ள
பணம் போதுமாவென, ச்ச்சு அவகிட்ட இருக்கும் என்று நினைத்த போது, சமாதானமாய்
இருந்தது.

நாளாயிடுச்சு, இனி கலைச்சா உங்களுக்குத்தான் கஷ்டம். போன தடவையே ·பேமிலி
பிளேனிங் பன்னிட்டிருந்தா இப்ப கவலை பட வேண்டியதில்லே.

ஒரு பக்கம் முழுதும் சத்து மாத்திரையின் பெயர்களை கிறுக்கி, அடுத்த மாசம் செக்
அப்புக்கு வா என்றார்.

ஏற்கனவே அறுபது கிலோவுக்கு மேல, இதுல குடும்ப கட்டுபாடு பன்னா எங்க போய்
நிக்கும்னு தெரியாது, எனக்கு இதெல்லாம் வேண்டாம்னு ஒதுக்கினியே, இப்ப எங்க
போயி முட்டிக்கிறது.

ஏன் நீங்க மட்டும், ஓடியாடி வேலை செய்யமுடியாம போவும்னு சொல்லி தப்பிச்சது
ஞாபகம் இல்லையாக்கும்.

என்ன சொல்லி என்ன பிரயோசனம், பட்டாதான் புத்தி வரேங்குது.

இதுக்கு போய் ஏந்தான் ரெண்டு பேரும் இப்பிடி குழம்புறீங்கன்னு தெரியல.

அவ நல்லபடியா பெத்து போடட்டும், யார்கிட்டயாவது பிள்ளையில்லாத சனங்கள்ட்ட
தத்து கொடுத்துபுடலாம்.

” நெசமாத்தான் சொல்றேன் உங்கம்மாவுக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு.”

பெத்து, கொடுக்க முடியுமா?

ஏம்மா முடியாது, புராணத்துல தேவகி கிருஷ்ணனை பெத்து யசோதைக்கிட்ட
கொடுக்கலையா?

அம்மா, எதோட எதை …

புராணமெல்லாம் நமக்கு புத்தி வரனுங்கிறத்துக்கு சொன்னதுதான்.

ஏன்டியம்மா பெக்காம கொன்னாலும் கொல்லுவே, அதை பெத்து, கண்ணு காணத
இடத்துலயாவது உயிரோட இருந்துட்டு போகட்டும்னு விடமாட்டியா.

தூக்கத்துல பொரண்டு படுக்குற மாதிரி, நமக்கு தெரிஞ்சும் தெரியாமயே நாளு
நகர்ந்து போச்சு.

பொம்பளை புள்ளைதான், போய் பாருங்க, நர்ஸ் கடமையாய் புன்னகைத்தார்.

மகாலெச்சுமி வந்திருக்காடா, அம்மா கண்களால் சிரித்தாள்.

முகம் மார்புக்குள் புதைந்திருந்தது, ஆடும் பிஞ்சுக் கால்கள்.

யார்கிட்டேயும் கொடுக்க வேண்டாங்க, கண்ணில் நீர்.

அடி போடி போக்கத்தவளே, தூக்கி கொடுக்கவாடி புள்ளையை பெத்தது.
அம்மா பேத்தியை கையிலெடுத்து உச்சி மோர்ந்தாள்.

ts23071965@yahoo.co.in

Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்