பூமி என்னும் வண்ணக்கலவை

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

க.ராஜம்ரஞ்சனி


‘ஒரஞ்ச் ஜுஸ் ரெடியா? எனக்கும் வேண்டும்’ என சொல்லிச் சென்ற என் சகத்தோழரைப் பார்த்துப் புன்னகைத்தவாரே
‘உனக்கில்லாமலா?’ என்றேன்.
அவர் ஒரஞ்ச் ஜுஸ் என கேலியாக குறிப்பிட்டது நான் ஆராய்ச்சிக்கு உட்படுத்திருக்கும் ரசாயன கலவைதான். ரசாயனத்தில் நிற மாற்றம் மிக பெரிய அர்த்தத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. பல வேளைகளில் அதனுள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் நிற மாற்றங்கள் வழி நமக்குத் தெளிவுபடுத்தும்.

1
‘ஏன் ராஜா, இன்னிக்கி ரொம்ப டல்லா இருக்க?’ அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டேன். அருகில் இருந்த மேசை ஒன்று மட்டும் காலியாக இருந்தது. மற்ற எல்லா மேசைகளிலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர். இந்த உணவகத்தில் எப்போதுமே ஆட்கள் நிரம்பி இருக்கும். அதற்குக் காரணம் இங்கு சுட சுட தயார் செய்து தரப்படும் பலகாரங்களாக இருக்கலாம், இட்லி தோசையாக இருக்கலாம், அல்லது மீ ‘கோரேங்க்’ ஆக இருக்கலாம். எதுவென்று குறிப்பாக சொல்ல இயலாவிட்டாலும் ஏதோவொன்று இருப்பததால்தான் அருகில் மற்ற உணவகங்கள் இருந்தபோதிலும் இங்குக் கூட்டத்தைக் காண முடிகின்றது. நானும் ராஜாவும் சில சமயங்களில் மட்டும்தான் இங்கு வருவோம்.
எனக்கும் சேர்த்து உணவு ஆர்டர் கொடுத்தான். எனக்குப் பிடித்த உணவு, பானம் என அனைத்துமே அவனுக்குத் தெரியும். உடன்பிறக்காவிட்டாலும் எங்களின் அக்கா தம்பி அன்பு ‘பாசமலர்’ அளவினைக் காட்டிலும் மிஞ்சிருந்தது. அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியா பொழுதுகளில் கைத்தொலைபேசி எங்களின் இணைப்பைப் பாதுகாக்கும்.
உணவு மேசைக்கு வரும் வரையில் அமைதியாகவே இருந்தான்.
‘சாப்பிடுங்கக்கா’ என்றவன் தேநீரை அருந்தினான்.
‘ஏன் ராஜா?’ கலகலப்பாகயிருப்பவன் இன்று அமைதியாய் இருப்பது என் மனதை வருடவே செய்தது.
‘அன்னிக்கி நான் பொண்ணு பாக்க போனேன, உங்ககிட்டகூட சொன்னேன்கா. ஞாபகமிருக்கா?’
‘ஆமாம், இருக்கு. உனக்குதான் அந்த பொண்ண புடிச்சிருக்குனு சொன்னியே. ஜாதகமெல்லாம் நல்லாருக்குனு உங்க வீட்ல சொன்னாங்கல. அப்புறம் ஏன் இந்த சோகம்?
‘ஆனா அந்த பொண்ணுக்கு என்னை புடிக்கலையாம். அத மறைக்க எங்க வீட்ல ஏதோதோ காரணம் சொன்னாங்கக்கா. நான் துருவி துருவி கேட்டப்பதான் இந்த விசயம் தெரிஞ்சுச்சு.’ அவனுடைய குரலிருந்தே அவனது மனம் எவ்வளவு ஆழமாய் பாதிக்கப்பட்டிருக்கிறதென்று என்னால் உணர முடிந்தது.
‘பரவால, வுடு ராஜா. நீ ஏன் கவலபடறே? உன்ன கல்யாணம் பண்ண அந்த பொண்ணுக்குதான் கொடுத்து வைக்கல’
‘அந்த பொண்ணுக்கு மாப்ளை சிவப்பா வேணுமாம்’
‘அந்த பொண்ணுக்கு அழகுனுனா என்னானு தெரில. நீ கறுப்பு நிலாப்பா’
‘என்னை சமாதானபடுத்தனும்னு இப்படி சொல்றீங்கக்கா. நிலா வெள்ளையா இருக்கறதுனாலதான் அழகு’ ரொம்பவே சலித்துக் கொண்டான்.
‘இல்ல ராஜா, கறுப்பான வானத்துல இருக்கறதாலதான் நிலா அழகா தெரிது’
‘ஏன்க்கா, கல்யாணத்துக்கு கலர் அவ்ளோ முக்கியமா?’
‘அப்படிலாம் ஒன்னும் முக்கியம் கிடையாது ராஜா. நம்ம மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். உண்மையை சொன்னா நம்ம மனசு கலர்தான் கல்யாணத்துக்கும் மத்த எல்லா விசயத்துக்கும் முக்கியம்’
‘ஒன்னுமே புரியலக்கா, கொஞ்சம் தெளிவா சொல்லுங்கக்கா’
‘ஒகே, சிம்பளா சொல்றேன். நம்ம மனசு சுத்தமா வெள்ளையா இருந்தா நாம பாக்கற மத்தவங்களும் அழகா தெரிவாங்க. நம்ம மனசு கறை படிஞ்சு கறுப்பா இருந்தா நாம பாக்கறவங்க எல்லாம் நம்ம கண்ணுக்கு அழகா தெரிய மாட்டாங்க. அதுக்கு காரணம் நம்ம கண்ணு இல்ல, மனசு. நீ கவலபடாத ராஜா. உன் மனசுக்கு ஏத்த மாதிரி உனக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்’

2
‘பச்ச பச்சனு பச்ச கலர் பைத்தியம் அவனுக்கு. உடுப்பு பெரும்பாலும் பச்ச கலர்ல தான் எடுப்பான். காடி, வீட்டுக்கு கூட பச்ச கலர்தான்’ தன் மகனின் பச்சை நிற விருப்பதை அலுத்துக் கொண்டார் பக்கத்து வீட்டுப் பாட்டி.
‘ஒரு வேள அதிர்ஷட கலரா இருக்கும் போல’ அம்மாதான் சமாதானம் சொல்வதுபோல் கூறினார்.
‘அது என்னவோ தெரில. சின்ன வயசிலிருந்தே அவனுக்கு பச்சனா உசிரு. அவங்க அப்பாகிட்ட என்ன சாமான் கேட்டாலும் பச்ச கலர்லதான் கேட்பான்’ ‘அவங்க அப்பா’ என அவரின் கணவரைச் சுட்டியபோது அவரது முகத்தில் களை தோன்றியதை ஜன்னலின் ஓரம் அமர்ந்திருந்த என்னால் பார்க்க முடிந்தது.
பாட்டி சொல்வது உண்மைதான். அவரின் மகன் பெரும்பாலும் பச்சை நிற மேல்சட்டைதான் அணிவார். கரும்பச்சை, வெளிர்பச்சை, பால் கலந்த பச்சை, நீலம் கலந்த பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு கலந்த பச்சை என எல்லாமும் பச்சை நிற குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கும். பச்சை சிறிதும் கலக்காத நிற உடை அணிந்து அவரை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர் பயன்படுத்தும் வீரா காரின் நிறமும் வெளிர் பச்சை.
முன்பொருநாள் நான் படித்த சின்ன கதை ஒன்று ஞாபகம் வந்தது. விநோத நோய் ஒன்று அரசரைப் பீடித்தது. அதனைக் குணப்படுத்த எந்த மருந்தினாலும் இயலவில்லை. துறவி ஒருவரைச் சந்தித்து தன் நோய்ப்பற்றி கூறிய அரசருக்கு எளிய தீர்வைத் துறவி கூறினார். அரசர் பார்க்கும் யாவும் பச்சை நிறத்திலிருந்தால் நோய் குணமாகும் என்றார். அதன்படி நடந்த அரசருக்கு நோய் குணமடைய துவங்கியது. அதனால் அரண்மனை, நாடு என அதிலிருக்கும் எல்லாவற்றையும் பச்சை நிறத்துக்கு மாற்றினார். ஒருமுறை துறவி அரண்மனை வந்த போது சேவகர்கள் அவரைப் பிடித்து அவரது காவி உடையைப் பச்சை நிறத்துக்கு மாற்ற எத்தனித்தபோது துறவிக்கு உண்மை புரிய வந்தது. அப்போது அவர் சொன்னது ‘உங்கள் அரசர் பச்சை நிற கண்கண்ணாடியை அணிந்திருந்தால் போதுமே, இவ்வளவு செலவு ஏற்பட்டிருக்காதே.’ எளிமையான கதை என்றாலும் ஆழ்ந்து யோசித்தபோது பல சிந்திக்க வேண்டிய கருத்துகள் எனக்குப் புரியவே செய்தன.
3
‘இதே பேட்டன் கருஞ்சிவப்பு கலர் இருக்கா?’
‘இல்லம்மா. இந்த பேட்டன் வெள்ள கலர்ல மட்டும்தான் இருக்கு. இது நயன்தாரா சேல. நீங்க கட்டனா நல்லாருக்கும்மா’
‘எனக்கு யாரும் கட்டாத புது சேலதான் வேணும். மத்தவங்க சேல எனக்கு வேணாம்’
‘இல்லம்மா. இது நயன்தாரா படத்துல கட்டன சேல மாதிரி பேட்டன். அவ்வளவுதான்’
‘சரி, அந்த அன்னப் பட்சி சரிகை போட்டிருக்கே மஞ்ச கலர் சேலை. அது லைட் ப்ளூ இருக்கா?’
‘அந்த சேலை மஞ்ச, சிவப்பு, பச்ச கலர் மட்டும்தான் இருக்கு. இல்லாத கலரா கேட்கறீங்களே..’
‘எனக்கு புடிச்ச கலராதான பாக்க முடியும். உங்ககிட்ட இருக்கற கலர மட்டும் வாங்கிட்டு போவ முடியுமா?’
சேலை வாங்குவது எவ்வளவு பெரிய வேலை என்று பலருக்குப் புரிவதில்லை. சேலை வேலைப்பாடுகளுக்கு நிறத்தின் பங்களிப்பு அளப்பரியது. அவையாவும் நன்றாய் அமைந்து நம் மனதைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும். வேலைப்பாடுகள் அழகாய் அமைந்து வண்ணங்கள் சரி வர அமையா பட்சத்தில் கவராமல் போவதும் உண்டு எளிமையான வேலைப்பாடுகள் கவர்ந்திழுக்கும் வண்ணங்களால் மனதைக் கொள்ளை கொள்வதுமுண்டு. சேலை வாங்குவதில் கூட இவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளதா என பலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மை.
‘சேலை எதுவுமே சரிப்பட்டு வரல. பஞ்சாபி சூட் பாக்கறேன். இந்த சூட் கலர் காம்பினேஷன் எனக்கு விருப்பமில்ல. கோல்ட்-கருஞ்சிவப்பு இருக்கா?’
‘நீங்க கேட்ட கலர் இதுவா பாருங்க’ துணி அடுக்குகளில் இருந்து புதையலைக் கண்டதுபோல் எடுத்துக் காட்டினார் கடை ஊழியர்.
‘ஓகே, இது எனக்கு புடிச்சிருக்கு.
‘அப்பாடா.. எப்படியோ உங்களுக்கு ஏத்த கலர் கிடைச்சாச்சி’ என்னைவிட ஜவுளிக்கடை ஊழியர் மிகவும் மகிழ்ந்து போனார். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது நான் கடைக்குள் நுழைந்து 2 மணி நேரமானதை உணர்த்தியது.

4
பூக்கடைக்குள் நுழைந்த எனக்கு ஒரு வண்ண பூங்காவினுள் இருப்பதைப் போன்ற உணர்வு சந்தோஷப்படுத்தியது. இதற்காகவே வாரத்திற்கு ஒரு முறையாவது பூக்கள் வாங்க இந்தப் பூக்கடைக்கு வந்துவிடுவேன். பூக்களைத் தேர்வு செய்து கொண்டே என் கண்கள் அங்குள்ள மற்ற பூக்களை முற்றுகையிடும். பல வித வண்ணங்களைக் கொண்ட சாமந்திப் பூக்கள், ரோஜாக்கள், ஆர்கிட் என என்னைச் சுற்றி இருப்பது எல்லையற்ற ஆனந்தத்தை எனக்கு உண்டாக்கும். வண்ணப் பூக்களினால் ஏற்படும் இந்த ஆனந்தத்தின் பிறப்பிடத்தைப் பல சமயங்கள் ஆராய்ந்து தோற்றுப்போனேன். பூக்களின் நறுமணத்தைப் பெரிது பண்ணாமல் பூக்களும் வண்ணங்களுமே எனக்குக் கேள்வியை உற்பத்தி செய்யும். வண்ணங்கள் இல்லாவிட்டால் இந்த பூக்கள் கவருமா என்ற என் வினா விடை காணாமால் தொலைந்து போயிருந்தாலும் அவ்வப்போது வந்து தலைக்காட்டிவிட்டு போகும்.
‘இனி ச்சான்திக்.. (இது அழகாயிருக்கிறது)’ என மலாய்மொழியில் பூக்கடை பணிப்பெண் என்னிடம் நீல நிற சாமந்தியைக் காட்டினாள். நான் இதற்கு முன் பல தடவை இந்தக் கடையில் பார்த்ததுண்டு. வெள்ளை நிற பூக்கள் தன் சுய நிறத்தை இழந்து செயற்கையிலான நீல, பச்சை நிறத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஏனோ சுயத்தை இழந்த இந்தப் பூக்கள் என் மனதைக் கவர்ந்ததேயில்லை.
பெண்கள் இருவர் பூங்கொத்தைத் தேர்ந்தெடுத்து விலைப்பேசிக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு அல்லது விருந்து வைபவத்திற்குச் செல்கிறார்கள் என அவர்களின் உடை அலங்காரத்தைக் கொண்டு ஊகித்துக் கொண்டேன். அவர்கள் கையில் இருந்த பூங்கொத்தைக் கவனித்தேன். சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்கள் இடையே பச்சை நிற சின்னஞ்சிறு இலைகளைக் கொண்ட கிளைகள் அழகாக நேர்த்தியுடன் அடுக்கப்பட்டிருந்தது.
நான் தேர்ந்தெடுத்த பூக்களுக்குப் பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது,
‘எனக்கு நாளைக்கு 20 கொத்து நீல கலர் சாமந்தி, 30 கொத்து பச்சை கலர் சாமந்தி வேணும். மத்த கலர் வேணாம். பாத்துப் பாத்து சலிச்சுப்போச்சு. நாளைக்கு ரெண்டு மணிக்கு வந்து எடுத்துக்குறேன்’ என பெண் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது.

‘இப்போ கரும்பு தண்ணியாச்சா?’ என என் தோழர் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். ரசாயன கலவை பச்சை நிறத்துக்கு மாறியிருந்தது.

க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா