அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள். பிரதான வாயிலில் நுழைந்த போது, கண்காணிப்பாளர் சுத்தியால் தட்டி மேசையொன்றை பழுதுபார்த்தபடியிருந்தார், நதீன் தம்மைக் கடந்து சென்றதை அவர் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. மூக்குக்கண்ணாடியின் வலதுபக்க பிரேமை கை விரல்களால் தாங்கியபடி நடந்து வந்துகொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு. விழிகளை அகலத் திறந்து, உதட்டோரம் மெல்லிய புன்னகையைக் கசியவிட்டாள். கொரிடாரில் கால் வைத்ததும் ஓட்டமும் நடையுமாகக் கடந்து வகுப்பறைக்குள் நுழைந்தாள். வலப்பக்க சுவரில் அவரவர் கைப்பட எழுதிய பெயர்களின் கீழே நதீன், சந்திரின், பராக்குடா, வேன்சான், பியர், அனிதா என்று அவள் நெருங்கிய தோழர் தோழியர் தீட்டிய சித்திரங்கள். நதீன் சிறிது நேரம் நின்று ஓவியங்களைப் பார்த்தாள். பொதுவாக அச்சித்திரங்கள் ஒருவாரகாலம் சுவற்றை அலங்கரிக்கும், பின்னர் தானாகவே மறைந்து போகும், மறுவாரத்திற்கான ஓவியங்களை வார இறுதியில் பிள்ளைகள் கற்பனை செய்து வரவேண்டும்.

நதீனைத் தொடர்ந்து வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியை பேயாத்ரிஸ¤க்கு, அவள்மேல் அக்கறைகாட்ட ஒரே ஒரு காரணம்தான் இருந்தது, தன்னைப்போலவே சிறுமியும் கலப்படமற்ற ஒரு பிரெஞ்சு பெண். பேயாத்ரிஸ் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. நதீனுக்கு வகுப்பு ஆசிரியையுங்கூட. பிள்ளைகளுக்கு அவள் ‘மூக்குறிஞ்சும் டீச்சர்’. வலது காலை கொஞ்சம் அதிகமாக ஊன்றி, ஒருபக்கமாக சாய்ந்து நடப்பாள். ஏதாவதொரு அறிவியல் இதழ் கையில் எப்போதும் இருக்கும். பச்சை வண்ண ஸ்வெட்டரை வாரம் தவறாமல் அணிந்து வருவாள். அதிலிருந்து பொத்தானொன்று கீழே விழுந்ததென ஒரு நாள் முச்சூடும் பிள்ளைகள் தேடியிருக்கிறார்கள். இருபது பிள்ளைகள் இருக்கிற வகுப்பிலே அதென்ன டீச்சருக்கு தன்மேலே மட்டும் அப்படியொரு கரிசனமென்று நதீனுக்குத் தெரியுமோ தெரியாதோ, அவளுடைய ஆசிரியைக்குத் தெரியும். அக்காரணங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கிற சிறுமியிடம் சொல்லக்கூடியவையல்ல. நதீன் வயதொத்த சிறுமிகளிடத்தில் அவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பதில் வரும் பிரச்சினைகளும் தெரியும், அவள் நேராகச் சென்று சம்பந்தப்பட்ட ஆசியப் பெண்ணிடம் உளறிவைப்பாள். அனிதாவின் பெற்றோருக்குச் செய்திகள் போகலாம், பத்திரிகைகாரர்கள் சுவாரஸ்யமாக தலைப்புக்கொடுத்து பிரசுரிப்பார்கள்.ர்கள். துறை ரீதியில் இவள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தண்டிக்கப்படலாம். டிஷ்யூ பேப்பரை எடுத்து மூக்கை ஒருமுறைக்கு இருமுறையாக சிந்தி அடைப்பை நீக்கினாள், சுவாசம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது.

பள்ளியில் உள்ள பத்து ஆசிரியர்களில் இரண்டு அல்லது மூன்றுபேராகிலும் ஆசிரியை பேயாத்ரிஸ் மன நிலையில் இருக்கக்கூடும், ஆனால் இவள் தீவிர தேசியவாதி. ‘பிரான்சை மீட்டெடுப்போம்’ என்ற சங்கத்தின் அங்கத்தினர்களில் ஒருத்தி. அவளும் அவளைச் சார்ந்தவர்களும் நாட்டைத் திரும்பவும் அந்நியரிடமிருந்து மீட்டாக வேண்டும், என்ற குறிக்கோளுடன் உழைப்பவர்கள். அவர்களுடைய அந்நியர்களுக்கு ஒரு நிறமில்லை, ஒரு இனமில்லை, ஒருமதமில்லை; காலமோ, வெளியோ அவர்களைப் அடையாளப் படுத்த உதவாது. அந்த அந்நியர்கள் அல்லது ‘பிறர்’ அவளுடைய பள்ளியிலேயே ஆசிரியர்களாக இருக்கிறார்கள், அண்டை அயலாராக இருக்கிறார்கள், அலுவலகத்தில் இருக்கிறார்கள், மெட்ரோவில் பயணிக்கிறார்கள், மருத்துவரைப் பார்க்கச் சென்றால் அங்கே அவளுக்கு முன்பாக இரண்டுபேர் காத்திருக்கிறார்களே அவர்களாக இருப்பார்கள், ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால், ‘இன்றையை மெனு- சீஸ் நானாகவும், பலக் பன்னீராகவும்’ வடிவெடுத்து மேசைக்கு வருவார்கள். திருட்டு வழக்கு கைதிகள், சாசர் டீம் வீரர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து, கடைசியில் அவர்கள் ரகசியமாக நடத்துகிற மரபணு ஆய்வுக் கூடத்திலும் அந்த ‘பிறர்’ நுழைந்தாயிற்று என்று செய்தி. டாக்டர் ரகுநாதன் என்கிற இந்திய நரம்பியல் நிபுணனை ஆலோசரகராக மரபணு ஆய்வுகூடத்தில் சிறப்பு ஆலோசகராக சேர்த்திருக்கிறார்களென்று அவளுடைய தலைமையகத்திலிருந்து செய்தி வந்திருக்கிறது. மொத்தத்தில் பிரெஞ்சுகாரர்களே எங்குமில்லை. இங்கிலாந்து, ஜெர்மன் போலவே பிரான்சு நாடும் ‘பிறர்’ உடையதாக மாறி ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது. கலப்படமற்ற தூய பிரெஞ்சுக்காரர்களைத் தேடவேண்டியிருக்கிறது. மரபணு உருவாக்கத்தில் இயற்கைத் தேர்வுக்கு மாறான வழிமுறைகள கண்டாலொழிய, விமோசனமில்லை. தூய ஐரோப்பிய இனமே எதிர்காலத்தில் மோனொ ஹைபிரிட்டில்தான் சாத்தியமாகலாம். நேற்று அவளுடன் ஊழியம் பார்க்கும் ஆப்ரிக்கப் பெண்மணி, உலகில் அப்படியொரு இனம் இருக்கிறதா? சத்தியமாவெனக் கேட்டு கிண்டல் செய்கிறாள். மனிதரினத்தின் ஆதாமும் ஏவாளுமே நாங்கள்தான் என்கிறாள். எரிச்சல் வந்தது. இந்த நூற்றாண்டுக்குள்ளாக பிரெஞ்சுக்காரர்கள் முற்றாக தொலைந்துபோய்விடுவார்களோ என்ற கவலை.

தனது இனத்தின்மீது பற்றும், பிற இனத்தின்மீதான பகையும் இருபத்தோறாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியை மனத்தில் விதைக்கப்பட ஒருவகையில் அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்க அதிபராக பதவியேற்ற பராக் ஒபாமாவாவும் காரணம். அம்மனிதரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறியிருந்த ஆசிய, ஆப்ரிக்க நாட்டவர்களும் அரசியல் ஆர்வம் காட்டினார்கள். போதாதற்கு இவள் இனத்தவரும் திருமணம், இனப்பெறுக்கமென்று ஆர்வம் காட்டமற்போக அடுத்தவந்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பியர் சிறுபான்மை இனத்தவராக ஆனதும், பின்னர் எண்ணிக்கையில் அரிதாகிப்போனதும் வரலாறு. பேயாத்ரிஸின் ‘பிரான்சை மீட்டெடுப்போம்’ என்கிற ரகசிய அமைப்பு நாடுமுழுக்க பரவியிருக்கிறது. ஆசிரியர்கள், அதிகாரிகள், காவல்துறை நீதித்துறையென எங்குமிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் கடமைகள் இருக்கின்றன. அசலான ஐரோப்பியர்களைத் தேடவேண்டும், அவர்களில் பிரெஞ்சுக் காரர்களைத் தேடவேண்டும், நகரசபைகளில், மாநகராட்சிகளில் சென்று பிறப்பு பதிவேடுகளின் ஊடாக அவர்கள் குடும்பவரலாற்றைத் தேடவேண்டும், மரபணு சார்ந்த அறிவியல் வளர்ச்சியின் உதவியுடன் கலப்பினமற்ற பிரெஞ்சுக் காரர்களை உருவாக்கவேண்டும்…

நதீன் பெற்றோர்களிடம் அனுமதிபெற்று தனது பிரத்தியேக பொறுப்பில், சோதனைக்கூடத்தில் வைத்துப் பார்த்தாள், அங்கு நரம்பியல் நிபுணர்களும் உள நோய் மருந்தியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, நினைவுச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுமி நதீனுடைய அறிவு விழுக்காட்டினை கூட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நதீனை ஒரு நூறு விழுக்காடு தூய பிரெஞ்சு சிறுமியாக வார்த்தெடுக்கவேண்டுமென்ற கனவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புவரை பிரச்சினைகளில்லை. சிறுமியிடம் வியக்கத் தக்க மாற்றம் தெரிந்தது. கடந்த ஆண்டுவரை முதல் மாணவியாக இருந்த அனிதா என்ற ஆசியப்பெண்ணை இரண்டாமிடத்திற்குத் தள்ளியிருந்தாள். இனத்திற்கு ஏதோ நம்மால் முடிந்தது என்று மகிழ்ந்திருந்த நேரத்தில் பள்ளிக்கெதிரே அந்த விபத்து நடந்தது. தனது சகோதரனுடன் சாலையை கடக்க முனைந்தபோது நதீன் மீது மோதிய வாகனம், பத்து மீட்டர் தூரம் உடலை இழுத்துபோனது. உயிர் பிழைக்க நேர்ந்தது அதிசயம் என்றார்கள். அறுவை சிகிச்சை, பௌதிக சிகிச்சை, உடற்பயிற்சி, ஓய்வு என்று நான்குமாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்திருக்கிறாள். நவீன மருத்துவம், அவள் உயிர், உடல் இரண்டையும் சேர்த்தே மீட்டிருந்தது.

நீண்டகாலத்துக்குக் பிறகு பள்ளிக்கு வந்த சிறுமி நதீன், அனிதா அருகில் உட்காரக்கூடாதென்ற உத்தரவுக்கு மாறாக, அவளருகே இருக்கையைத் தேடி அமர்ந்தது, ஆசிரியைக்கு வியப்பை அளித்தது. வகுப்பு பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் அமைதியாகிவிட்டார்கள் என்பதில் சந்தோஷம். எனினும் பிள்ளைகள் இப்போதெல்லாம் முன்னைப்போல கலகலப்பாக இல்லாதது ஓர் ஆசிரியை என்ற வகையில் கவலையை உருவாக்கியிருந்தது. கணினியைத் திறந்துவைத்து ஆசிரியையின் அனுபதிக்காக காத்திருந்தார்கள். கணிப்பொறிகளின் மையக் கட்டுப்பாடு ஆசிரியையின் மேசையில் இருந்தது. பிள்ளைகளை சுந்ததிரமாக வகுப்பறையில் கணிப்பொறியை கையாள அனுமதித்த ஆரம்பத்தில், அவர்கள் கவனம் பெரும்பாலும் கணினி விளையாட்டில் இருக்கிறதென்று பள்ளி நடவடிக்கைகளுக்கான மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கையின் சிபாரிசு எண் 12 தெரிவித்த யோசனையின்படி ஆசிரியையின் கட்டுப்பாட்டின் கீழ் பிள்ளைகள் கணினிகள் வந்திருந்தன. ஆசிரியை கணினி இயக்கத்தை அனுமதிக்க, சுவரையும் ஆசிரியையும் சிறிது நேரம் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்த நதீன், சுவரில் வைப்பதற்கான அந்த வார சித்திரத்தை வரையத் தீர்மானித்தாள். கணினியில் சித்திரம் வரைவதற்கான பக்கத்தைப் பிரித்தாள். தூரிகையின் அளவையும், வண்ணத்தையும் தேர்வு செய்து, ஆட்காட்டிவிரலை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஓடவிட்டாள். சுவரில் அவளுடைய பெயரின் கீழே ஓவியம் உருப்பெற தொடங்கியது. அவள் பணியில் தீவிரமாக இருப்பதை ஆசிரியையின் மேசையிலிருந்த நதீன் பெயருக்கு நேராக பளிச்சிடும் பச்சைப் புள்ளியினூடாகத் தெரிந்துகொண்டாள். அது அணைந்ததும் சிறுமி நதீன் அருகே ஆசிரியை வந்தாள்.

– சித்திரம் வரையவேண்டுமென்பதை மறக்கவில்லை இல்லையா? விபத்துக்குப் பிறகு எங்கே நீ மிகவும் மாறி இருப்பாயோ என பயந்தேன். முடித்து விட்டாய்போலிருக்கிறது. எங்கே காட்டு..

– கோலம் போட்டிருக்கேன். ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை வைத்து போடணும், பிறகு. அக்கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்தால் ஒரு பூ வரும் சித்திரத்தின் மீதிருந்த கையை எடுத்தாள். வெட்கப்பட்டவள்போல இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

– கோலமா? இப்படி நீ முகத்தை மூடியும் நான் பார்த்ததில்லையே. இந்தப் பூவுக்குப் பேரென்ன தெரியுமா?

– தெரியும். தாமரைப்பூ

– இதற்கு முன்ன தாமரை பூவை பார்த்திருக்கியா?

– இல்லை.

– பின்னே உன்னால எப்படி?

– என்னை உருவாக்கின டாக்டர் ரகுநாதன் கற்றுகொடுத்தது.

– டாக்டர் ரகுநாதன்?

– எங்க அப்பா டீச்சர்? அருகிலிருந்த அனிதா விடமிருந்து பதில் வந்தது, ‘பேரண்ட்ஸ் டேயிலே கூட அவரை நீங்க பார்த்து இருக்கீங்க. நான் தான் அவர்கிட்டே நதீன் முழுசா எங்களுக்கு வேணுமென்று சொன்னேன். விபத்துக்கு முன்ன எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கா இல்லையா? அவகாதுலேயும் அப்பா கொடுத்திருக்க எண் இருக்குப் பாருங்க. நதீன் அப்பாவுடைய நூறாவது அண்ட்ராய்டு, நான் ஐம்பது. கவலைப் படாதீங்க நல்லா படிக்கணும் மார்க் வாங்கணும் அப்படித்தான் எங்களை புரோகிராம் பண்ணியிருக்காங்க.

—————————————

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா