துப்பாக்கிகள் குறி பார்கையில் ..

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

சக்தி இராசையா


காற்றே தூது செல்வாயா ?
இன்னும் நான் உயிரோடு உள்ளதை
என் உறவுகளுக்கு சொல்லி வருவாயா …
சுற்றிய மறைப்பும் மாற்று உடுப்பும்
அற்று வேடிக்கைப் பொருளாய்
வாய்பொத்தி நிற்கின்றோம் ..

நாய்களுக்கு தூக்கி எறியும்
பொட்டலத்தில் கூட கருணை இருக்கும் !
முள்வேலி அடைப்புக்குள்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
வெறும் பிணங்களாய் வாழ்கின்றோம் !
உரத்துக் கதைக்கவோ ,எதிர்த்துக் கேட்டவோ
ஏன் சத்தமாய் அழவோ
முடிவதில்லை இங்கு …

நகர்ந்து செல்லும் மேகக் கூடமே
ஒரு நிமிடம் நில்லு ..
துப்பாக்கி முனைகள் குறிபார்க்கையில்
சிரிக்க சொல்லி புகைப்படம் எடுத்து
ஏமாற்றும் வித்தையினை உலகிற்கு சொல்லி விடு
ஒரு பிடி பால்மாவிற்காய் கால் கடுக்க நிற்கையில்
உரசிச் செல்கிறது இராணுவ மிருகமொன்று ..

ஆள்க்காட்டி கூடமொன்று அலைகிறது இங்கு …
பிடித்தவன் பிடிக்காதவன் -ஏன்
முறைத்தவன் கூட காணமல் போகிறான்
விசாரணைக்கு போனவர் திரும்பி வருவதில்லை
கட்டைத் தலைமயிர் பிள்ளைகள்
ஏரிக்கரைகளில் மிதகின்றன …
நலன்புரி முகாமென்று
நரகவதை நித்தம் இங்கு ..

சீழ் பிடித்த காயங்களை
கிளறிப் பார்த்து வழியும் குருதியில்
தேடுகிறான் புலியை ..
சின்னக் குழந்தை கூட
தப்பவில்லை இன்னும் …

போர் தின்று தீர்த்தால் கூட
ஒரு நொடியில் முடிந்திருக்கும்
அனைத்தும் -சுயம் நொருங்கி
இங்கு நித்தமல்லவா செத்துப் போகிறோம் ..
காற்றே போய் சொல்லு
நான் இன்னும் உயிரோடு உள்ளதை …


பிரியமுடன் ஈழத்து ஸ்நேதிதி
சக்தி இராசையா

Series Navigation

சக்தி இராசையா

சக்தி இராசையா