ஒரு காலை,ஒரு நிகழ்வு

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

பாலாஜி


உலகிலேயே மிகவும் நாராசமான சப்தம் எதுவென்றால்,ஞாயிறு இரவு ஒரு மணிவரை பீர் குடித்து விட்டு படுக்கும்போது காலையில் ஒலிக்கும் அலாரத்தின் சப்தம்தான்.அலாரம் அடித்து பத்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தேன்.குளித்துவிட்டு உடையணிந்து வெளியே வரும்போது மழைத்தூறல் மல்லிகைப்பூவாய்த் தோளில் விழுந்தன.வீட்டுக்கு அருகிலுள்ள சாப்பட்டுக்கடையில் கடாமீசைக்காரரிடம் தோசை வாங்கிக் கொண்டு விரைகையில் தூறல் வலுத்தது.இன்று அந்த மலாய் மூதாட்டி கறுப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தார்.தூரத்தில் என்னைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு,முகத்தின் சுருக்கங்களை அதிகப்படுத்திக் காட்டின. ஹைரிலுக்கு அவரிடம் வாங்கும் நாசிலீமா மிகவும் பிடிக்கும்.தினமும் காலையில் அவரிடம் வாங்கி வரச்சொல்லி என்னிடம் முதல் தேதியிலேயே பணம் தந்து விடுவதுண்டு.காலை உணவும் மதிய உணவும் அவனுடன் தான்.சாப்பிடும்போது பேசும் பழக்கம் அவனிடம் இல்லை. உணவுக்கு முன் கண் மூடி சாமி கும்பிடும் பழக்கம், அவனிடம் நான் கற்றுக்கொண்ட புதுப் பழக்கம்.வந்த முதல் நாள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும்போது,புன்னகையுடன் “நான் ஹைரில்.உனது லீடர்.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.ஒரு முறை நான் செய்த வேலை தவறாகப் போய்விட்டபோது என்னைக் காட்டிக் கொடுக்காமல் லாவகமாகச் சமாளித்தான்.அப்பாவிற்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்ற சூழலில் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு உடனே அதைத் தந்தபோது, இதை அடுத்த மாதமே திருப்பித் தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மலாய் மூதாட்டி சமீபித்து விட்டார்.என்னைக் கண்டதும் தயாராய் வைத்திருந்த சிவப்பு நிற பிளாஸ்டிக் பையைத் தரும்போது,குடை வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.ஆம் என்று தலையாட்டலுடன் குடையை விரித்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.மழைச் சத்தம் என்னுடனே நடந்து வந்தது.மழையினால் பறவைகளின் ஒலியேதும் இல்லை.பேருந்து நிறுத்தத்தில் ஒரு குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணும்,ஒரு சீன ஆடவனும் இருந்தனர்.அந்தப்பெண் புகைத்துக் கொண்டிருந்தாள்.அந்த மனிதன் தோளில் தொங்கும் பையை மடியில் வைத்துக் கொண்டு,அதில் கைகளால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். காதுகளில் கறுப்பு நிற இயர்போன் இருந்தது.தொலைவில் ஒரு மோட்டார் சைக்கிளின் சப்தம் கேட்டது.அதன் சப்தம் மெல்ல அதிகரித்துக்கொண்டே வந்தது.இப்போது ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று மறைவிலிருந்து வெளிப்பட்டது.அது பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்றது.அதன் ஒலி மெல்ல வலுவிழந்து கடைசியில் இல்லாமல் போனது.நான் கடிகாரத்தையும் பேருந்து வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.மெல்ல அசைந்து வரும் ஒரு சிவப்பு நிறப்பெட்டி போல பேருந்து வளைவில் தெரிந்தது.அமர்ந்திருந்த இளைஞன் ஆசிரியர் வரும்போது எழுந்து நிற்கும் மாணவனைப்போல எழுந்து நின்றான்.

பேருந்தில் தரையெங்கும்,மனிதர்கள் ஈரத்தைத் தன் சுவடுகளாக விட்டுச் சென்றிருந்தனர்.சன்னலோர சீட்டில் அமர்ந்து வெளியெ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.இரண்டாவது பேருந்து நிறுத்தத்திற்குப் பின்வரும் சிக்னலில் பேருந்து,காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அது நிகழ்ந்தது.சாலையை சைக்கிளில் கடக்கும் ஒரு மனிதனின் மீது எங்கிருந்தோ வேகமாய் வந்த டாக்சி ஒன்று வேகமாய் மோதியது. சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்ட அம்மனிதன் ஐந்தடி தள்ளி விழுந்தான். கால்களைப் பரப்பிக்கொண்டு முகம் தரையில் அழுந்த குப்புறக் கிடந்தான். சுவற்றில் எறியப்பட்ட சாணியாய் உடல் அசைவற்று இருந்தது,கல்லவரத்தை ஏற்படுத்தியது.வெள்ளைச் சட்டையில் திட்டுத் திட்டாய் இரத்தக் கறைகள்.பேருந்து அவனைக் கடந்து சென்றது.பேருந்தில் அசாதாரணமான மவுனம் நிலவியது.அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்கிக் கொண்டேன்.மழை இல்லாததால் நான் குடையை விரிக்கவில்லை. ரேடியோவை ஆன் செய்தேன்.ரேடியோவில் எட்டு மணி செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.ரேடியோவில் மும்பை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கயைக் கூறுகையில்,ரேடியோவை அணைத்து விட்டு பைக்குள் போட்டுக் கொண்டு கம்பெனி எல்லைக்குள் நுழைந்தேன். கேண்டீனில் ஹைரில் அமர்ந்திருந்தான்.என்னைத் தொலைவில் கண்டதும் வழக்கம்போல காப்பி வாங்கி வந்தான்.நடையில் உற்சாகம் தெரிந்தது.சாப்பிடும்வரை இருவரும் பேசவில்லை.சாப்பிட்ட பின் அவனே ஆரம்பித்தான்.

“எனக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம்.”

“வாழ்த்துக்கள்.”

நான் சம்பிரதாயமாய் புன்னகை செய்தேன்.அவன் ஏதோ சொல்ல முயலும் வேளையில் மணியடிக்கவும் நாங்கள் கலைந்தோம்.அடுத்த மிஷினில் வேலை செய்பவன் மென்மையான குரலில் பாடிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான். அவன் பாடல் எனக்கு கேட்காத வண்ணம் எனது மெஷின் சப்தித்துக் கொண்டிருந்தது.தோளில் ஒரு கை விழுந்தது.பின்னால் ஹைரில் ஆரஞ்சு நிற பாய்லர் சூட்டுடன் நின்றுகொண்டிருந்தான்.

“ஏன் சோர்வாய் இருக்கிறாய்?”

“இன்று காலை ஒரு விபத்தைப் பார்த்தேன்.அவன் உயிரோடிருக்கிறானா? எனத் தெரியவில்லை.”

“எங்கு நடந்தது?”

“நமது கம்பெனிக்கு வரும் வழியில்,பேருந்து நிறுத்தத்துக்கு முந்தைய சிக்னலில்.”

“உனக்குத் தெரிந்தவனா?”

“அவன் முகத்தைப் பார்க்கவில்லை.”

ஆதரவாய்த் தோளில் கைவைத்து,”கண்டதையெல்லாம் யோசிக்காதே. வேலையைப் பார்.” என்று முதுகில் தட்டிவிட்டுச் சென்றான்.அவன் சென்று நெடுநேரம் ஆன பின்னும் அவனுடைய காலடி ஓசை என் காதுகளில் நெடுநேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது.அவன் கைகள் விட்டுச் சென்ற கிரீஸ் கறை என் தோள்களில் படிந்திருந்தது.


radbalaji2003@hotmail.com

Series Navigation

பாலாஜி

பாலாஜி