சீரான இயக்கம்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

அமர்நாத்



குஞ்சுமணி மாவட்ட உடற்பயிற்சி மையத்திற்குள் காலடிவைத்தார். அனு அவரிடம் கொடுத்த அடையாள அட்டையைக் காட்டியவுடன் நுழைவிடத்தைக் கண்காணிக்கும் நடுவயதுப் பெண்கள் புன்னகையுடன் தலையசைத்தார்கள். அந்தக் கட்டிடம் திறந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும். இதுவரை அங்கே எட்டிப்பார்த்தது கூட இல்லை, எங்கே நேரம் இருந்தது? அவர் கண்டதெல்லாம் ஓட்டல்களில் கடனே என்று தரைமாடியில், ஒரு குறுகிய இடத்தில் இரண்டு நடை இயந்திரங்களும், சகல உடற்பாகங்களையும் வலுவாக்கும் என்று சொல்கிற, ஆனால் யாரும் அதைப் பரிட்சித்துப் பார்த்திராத பலகரங்களை நீட்டிய ஒரு இரும்பு நாற்காலியும், காலாவதியான ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் வைத்த உடற்பயிற்சி அறைதான்.
இடதுபக்கத்தில் ஒலிம்பிக் அளவில் நீச்சல்குளம். மஞ்சளும் வெள்ளையுமாக முக்கோணக் கொடிகள் குறுக்கும் நெடுக்குமாகத் தோரணம்போல் தொங்கின. தண்ணீரில் ஐந்திலிருந்து பதினைந்து வரையிலான குழந்தைகளின் விதவிதமான தொப்பியணிந்த தலைகள் மிதந்தன. எதிரில் இருந்த கோர்ட்டுகளுக்குக் கையில் குட்டையான டென்னிஸ் ராக்கெட்டுகளைச் சுமந்து செல்லும் சிறுவர்கள். அவர்களை அழைத்துவந்த பெற்றோர்களின் சோர்ந்த முகங்கள். இதுபோல் நீச்சலுக்கோ, டென்னிஸ_க்கோ தன் இருபையன்களையும் அவர் எப்போதும் அழைத்து வந்ததில்லை. அதெல்லாம் அனுவின் வேலை. வேலைகூட இல்லை, அனுபவித்துச் செய்த பொழுதுபோக்கு. அவர் ஏன் தலையிட வேண்டும்?
வலதுபக்கத்தின் கூடத்திற்குள் எட்டிப்பார்த்தார். தலைக்கு மேல் வௌ;வேறு படங்களைக் காட்டிய பத்து தொலைக்காட்சிப் பெட்டிகள். நடப்பதற்கும், பெடல் செய்வதற்கும் அமைத்த இயந்திரங்கள் இரண்டு வரிசைகளில் முப்பதாவது இருக்கும். ஆனால் எதுவும் காலி இல்லை. மாலை ஐந்துமணிக்கு வந்தது சரியில்லை. அதிலும் திங்கட்கிழமை வேறு. ஞாயிறு சோம்பலாக இருந்த குற்ற ஊணர்ச்சியைப் போக்கிக்கொள்ள வரும் கும்பல். இனி பகல்நேரத்தில்தான் வரவேண்டும். அப்படி அவர் வருவதற்கு இனி என்ன தடை? கூடத்தைச் சுற்றிவந்தார்.
அவரைப் பார்த்த பயிற்சிக்கூடத்தின் மேற்பார்வையாளன், “அடுத்துக் காலியாகும் இயந்திரம் உங்களுக்கு” என்று உறுதியளித்தான்.
“அவசரம் ஒன்றுமில்லை.”
அடுத்த பத்து நிமிடங்களில் எதுவும் காலியாகும் வழியாக இல்லை. அதனால் அவன், “காத்திருக்கும் நேரத்தில் இதைச் செய்யுங்களேன்! புதிதாக வந்திருக்கிறது” என்று ஜன்னல் பக்கத்திலிருந்த ரோயிங் மெஷினைக் காட்டினான். தலைகீழாகக் கவிழ்த்த சைக்கிள் மாதிரியான இயந்திரங்களைத்தான் அவர் பார்த்திருக்கிறார். இது வித்தியாசமாக இருந்தது. அவன் அதன் வாரை இழுத்துக் காட்டியபோது தண்ணீரில் தடுப்புகள் வைத்த சக்கரம் சுழன்று அலையெழப்பியது. தண்ணீரைத்தாண்டி அதன் கொள்கலத்தில் நீலநிறம் பூசியிருந்தது. கடல் அல்லது வானம் போன்ற நீலம். நிஜமாகவே அது துடுப்பு வலிக்கும் இயந்திரம்தான்.
அவரை யோசிக்கவிடாமல் அவரை அதிலமர்த்திக் கால்களில் பெல்ட்டைக் கட்டி, இழுக்கும் கட்டையைக் கையில் கொடுத்தான். ஆரம்பத்தடையில் இழுக்க ஆரம்பித்தார். “பழகிய பிறகு நீங்கள் தடையை அதிகரிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அகன்றான்.
இழுப்பது முதலில் சுலபமாகத்தான் இருந்தது. வேகத்தை அதிகப்படுத்தினார், சக்கரத்தின் சுழற்சியால் தண்ணீரில் கொந்தளிப்பு. அதையே பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென உடலின் பற்பல தசைகளிடம் வேலை வாங்கிய மனிதர்கள் மறைந்தனர். பிரகாசமான கூடமும் மறைந்தது. சாமான்கள் ஏற்றும் ஒரு கப்பலின் இருண்ட அடித்தளத்தில் குஞ்சுமணி துடுப்பை வாருகிறார். ஏதோ ஒருசந்து வழியாகக் காலை சூரியனின் கதிர்கள் எட்டிப்பார்க்கின்றன. கையகல நீலநிறம் எங்கோ தெரிகிறது. ஐந்து நிமிடத்திலேயே மூச்சு வாங்குகிறது, தோள்களும் இடுப்பும் வலிக்கின்றன. முதுகின் கூனல் நிரந்தரமாகிவிட்டது போலவும், கையில் கொப்புளம் வந்தமாதிரியும் உணர்வு. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி இழுக்கவேண்டும்? ‘இருட்டுகிற வரையில்’ என்று சாட்டையைச் சொடுக்கியபடி ஒருவனின் மிரட்டல், ஹான்ஸ்கியின் குரல்போல் அடித்தொண்டையிலிருந்து வருகிறது. “எப்படி இருக்கிறது?” என்று திரும்பிவந்து கேட்டான் மேற்பார்வையாளன். கப்பலின் அடித்தளம் மறைந்தது. அடடா! நிஜம் போலவே இருந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் குஞ்சுமணி. நெற்றியின் வேர்வைத்துளிகளைச் சட்டையில் துடைத்துக்கொண்டார். நல்லவேளை, அனு அருகிலில்லை, பார்த்திருந்தால், “என்ன அநாகரிக வழக்கம்” என்று கடிந்திருப்பாள். “அடுத்த முறை அதிக நேரம் செய்கிறேன்” என்று எழுந்தார்.
ஹான்ஸ்கியிடம் அடிபணிந்து இருபத்தைந்து ஆண்டுகளை ஓட்டியாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்குமுன் அவன் கனடாவிற்கு ஸ்கி செய்யச் சென்றிருந்தபோது ஓய்வுக்கான எல்லா பயன்களையும் பெற்றுக்கொண்டு வேலையிலிருந்து விலகிவிட்டார். அவன் திரும்பிவந்து திண்டாடட்டும். அவர் இஷ்டப்பட்ட காரியத்தை இஷ்டப்பட்ட நேரத்தில் இனிமேல் செய்யலாம், எந்த நியதியையும் பின்பற்ற வேண்டாம். கடந்த பத்து நாட்களில், அவர் படிக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தயாரித்துவைத்திருந்த நீளப் புத்தகப்பட்டியலில் இரண்டை நகர நூலகத்திலிருந்து எடுத்து படித்து முடித்துவிட்டார். அமெரிக்க கால்பந்தாட்டத்தின் நெளிவுசுளிவுகளை நன்கறிந்தவராதலால், அதைப் பின்னணியாகக்கொண்ட ஜான் க்ரிஷமின் ‘ப்ளீச்சர்ஸ்’ நாவல் பற்றி அங்கே நடந்த ஒரு விவாதக் கூட்டத்தில் கேட்பவர்கள் ஏற்கும்படி பேசியது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. வேலையுடன் தொடர்பில்லாத எதையும் பலர்முன்னால் நின்று அவர் அதுவரை உரையாற்றியதில்லை.

அன்று மதிய உணவை முடித்தவுடன் சாமி வீட்டிற்கு வந்தான். கோடைக்கு முன் ஏர்கண்டிஷர் சரியாக வேலைசெய்கிறதா என்று சரிபார்க்க, சீர்செய்பவன் ஒருவன் ஒருமணிக்கு வரவேண்டும். பத்து நிமிடம் முன்னால் கூப்பிட்டு ஒன்றிலிருந்து ஒன்றரைமணி வரை தாமதமாகும் என்று அவன் தெரியப்படுத்தினான். வீட்டிற்குள் அடைந்துகிடக்காமல் சாமி அக்கம்பக்கத்தைச் சுற்றி நடக்கலாமென்று வெளியில் வந்தான். சமீபத்தில் பெய்த இளவேனில் மழையால் வீட்டைச்சுற்றி நிறைய புல் வளர்ந்திருந்தது. புல்வெட்டுபவர்களைக் கூப்பிடவேண்டும். அடுத்த தெருவில் குஞ்சுமணி புல்வெட்டும் டிராக்டரை ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் எதிர்ப்புறமாகச் சென்றதால் அவனைக் கவனிக்கவில்லை. அந்த குடியிருப்பில் வீடு வாங்கியபோது அதை விற்றவள் ஏற்கனவே இந்தியர் ஒருவர் இருக்கிறார் என்று அவர் பெயரைச் சொன்னாள். முதலில் அவரைப் பார்த்தபோது கோவிலில் வேலை செய்கிறாரோ என்று நினைத்தான். பருமனான உடல், நடுவில் இன்னும் கூடுதலான அகலம். அடர்ந்த தலைமயிரை வகிடில்லாமல் பின்னுக்குத்தள்ளி வாரியிருந்தார். இந்தியர்கள் கூடும்போது, சத்தமாக அரசியல் பற்றியோ, பொருளாதாரம் பற்றியோ சூடான விவாதங்கள் நடக்குமே, அவற்றில் அவர் குரல் ஓங்கிப் பார்த்ததில்லை. அதனால்தானோ என்னவோ இத்தனை ஆண்டுகளில் அவர் தோற்றத்தில் அவ்வளவாக மாறுதல் இல்லை.
ஒரு மாதம் முன்வரை குஞ்சுமணி பின்பற்றிய நியதி சாமிக்கு அத்துப்படி. அதைத் தொடர்ச்சியாகப் பார்த்ததில்லை, ஆனால் பல ஆண்டுகள் கவனித்ததை ஒன்று சேர்த்தால் இப்படித்தான் இருக்கும் என்கிற தீர்மானம். வியாழன் முன்னிரவில் வெளியூரிலிருந்து திரும்புவார். விமானநிலையத்தில் நான்கு நாட்களுக்குமுன் நிறுத்திய காரை எடுத்து வீட்டிற்கு வருவார். குளிர் காலத்தின் நடுவில் பனி பெய்யலாம் என்றால் மட்டும் டாக்சியில் பயணம். வெள்ளி காலையில் அவர் வீட்டின் வழியாக வேலைக்குப் போகும்போது அவர் அறையில் விளக்கெரிந்து பார்த்ததில்லை. மதியம்வரை தூங்குவாராக இருக்கும். வெள்ளிமாலை வீட்டிலிருக்கும் எல்லோரையும் விலையுயர்ந்த உணவகத்திற்கு அழைத்துச் செல்வார்.
சனிக்கிழமை வீட்டுக்கு வெளியில் வாசம். குளிர்காலம் முடியும்போது பூச்செடிகள் வைப்பார். வெப்பம் மிகுந்த காலங்களில் புல் வெட்டுவதோடு புதர்களைச் சீர்செய்வார், களை எடுப்பார், நடைபாதைக்கும் புல்தரைக்கும் நடுவில் விரலளவுக்குப் பள்ளம் தோண்டுவார். இலையுதிர் காலத்தில் உலர்ந்த இலைகளை வாரிக்குமிப்பார். அதற்குப் பிறகு விதை தெளிப்பார். எல்லாவற்றிற்கும் இராட்சசத் தேனியின் ரீங்காரத்தைப்போல் ஓசையை உண்டுபண்ணும் கருவிகள் வைத்திருப்பார். “அவற்றின் பெயர்கூட உனக்குத் தெரியாது. அவர் தோட்டம் எவ்வளவு நல்லா இருக்கு? நம்ம வீட்டுக்கு வெளிலே நீ ஒருவேலையும் செய்யறதில்லை. அப்பறம் அவர் பூர்வஜென்மத்திலே விவசாயியா இருந்திருக்கணும்னு கேலி வேற” என்று அவன் மனைவி சரவணப்ரியா அவனைக் குடைவாள்.
ஞாயிறுகாலை வீட்டில் எல்லோரும் தூங்கும்போது கோவிலில் இரண்டுமணி. எல்லா சன்னதி முன்னும் பாட்டுப்பாடி, கோவிலை முப்பத்தாறு தடவை சுற்றி, உண்டியலில் பணம் போட்டுத்தான் திரும்புவார். பிறகு பெரிய திரையில் விளையாட்டு பார்த்தாக வேண்டும். கால்பந்து, கூடைப்பந்து என்று காலத்திற்கேற்ற மாதிரி ஏதோ ஒன்று. சாமிக்கு ஒரு தடவை அவரோடு உட்கார்ந்து பார்க்கவேண்டி வந்தது. பிரியப்பட்ட அணிக்காக அவர் காட்டிய உற்சாகமும், கத்தலும். அந்த அணி ஜெயிக்க வேண்டும் என்று காலையில் அவர் கடவுளிடம் வேண்டியிருந்தால் வியப்பதற்கில்லை. ஞாயிறுமாலையே வீட்டிலிருந்து கிளம்பியாக வேண்டும். அதற்கு முன்பே பள்ளிக்குழந்தைகள் திங்கட்கிழமை வருகிறதே என்று முனகுவதுபோல் அவர் முகம் சுருங்கிவிடும்.
அவருக்கு நோப்ல்ஸ் புத்தகக் கம்பெனியில் வேலை. புதிய கடையை நிர்மாணிக்கும்போது கட்டுமானம் சரியாகச் செல்கிறதா என்றும், கட்டியகடையில் விற்பனை ஒழுங்காக நடக்கிறதா என்றும் ஆராய்ந்து சியாட்டில் அலுவலகத்தின் மிஸ்டர் ஹான்ஸ்கிக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதில் சந்தேகம் வந்தால் ஹான்ஸ்கி இரவு எந்நேரமானாலும் அவரைக் கூப்பிட்டுவிடுவான். ஒவ்வொரு வாரமும் மிஸிசிப்பிக்குக் கிழக்கில் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் அவர் அனுப்பப்படலாம். இராணுவதளம் இருக்கும் சில ஊர்கள் மட்டும் அவருக்கு அறவே பிடிக்காது. அங்கே செல்லவேண்டி வந்தால் சனிக்கிழமையிலிருந்தே முகத்தைத் தொங்கப்போட்டுவிடுவார்.
“வெஜிடேரியன் சாப்பாடு கொண்டா என்றால் குழம்பில் மாமிசத்துண்டுகளை எடுத்துப்போட்டு சாப்பிடேன் என்று சொல்லுவன்.”
“பிரயாணம் இல்லாத வேலையா பாருங்களேன்!” என்றான் சாமி ஒருமுறை பரிதாபப்பட்டு.
“நல்ல சம்பளம். இப்ப சமாளித்தால் ஐம்பத்தைந்து வயதில் ரிடைர் ஆயிடுவன்.”
வாராவாரம் விமானத்தில் வெளியூர் செல்வதால் அவரிடம் ஏகப்பட்ட பிரயாண மைல்கள் சேர்ந்துவிடும். அவற்றைச் செலவழிக்க அனுவும், அவரும் இந்தியா, லாஸ்வேகாஸ் என்று போவார்கள். பிரயாணம் செய்யும் நேரம்கூட போகுமிடத்தில் தங்கமாட்டார்கள், உடல் தரிக்காது திரும்பிவிடுவார்கள்.
அடுத்த சுற்றில் அவனைப் பார்த்ததும் குஞ்சுமணியே இயந்திரத்தை நிறுத்திவிட்டுத் தெருவரையில் வந்தார். வெய்யிலுக்காகக் கறுப்புக்கண்ணாடி, தலையில் தொப்பி.
“ஹாய் குஞ்சு!”
“ஹாய் சாமி! என்ன அழகான தினம்! வேலை இல்லையோ?” காரணத்தைச் சொன்னான். திட்டமிட்டபடி ஐம்பத்தைந்தில் அவருக்கு வேலையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஒருமாதமாக அந்த சுதந்திரத்தை எப்படி அனுபவிக்கிறார் என்று அறிய ஆவல். “நேரம் எப்படிப் போறது?”
அவர் உடனே பதில்சொல்லவில்லை. ஒருசிறு தயக்கம். “கேட்பது தப்பில்லை என்று பட்டது. வாரத்துக்கு எத்தனை தடவை சேருகிறீர்கள்?”
சாமிக்கு ஒரு குட்டி அதிர்ச்சி. திருமணமான புதிதில் வேண்டுமானால் மதிப்பாக ஒரு எண் சொல்லலாம். அறுபதுக்கு இன்னும் அதிகநாள் இல்லாதபோது பொய்யாக முழு எண்ணைச் சொல்லலாமா என்று யோசிக்கையில், பதிலை எதிர்பார்த்து கேட்கவில்லை என்று தெரிந்தது. அவர் மனக்குறையை வெளிப்படுத்த ஒரு முன்னுரை, அவ்வளவுதான்.
“வேலையில் இருக்கும்போதுதான் நேரம் ஒத்துவரலை, ரிடைர் ஆனா முடியுமாக்கும்னு நினைச்சன். ஒரு மாதமாயிட்டது. வீட்டிலே மனஸ்தாபம், சரிப்படமாட்டேன் என்கிறாள்.”
“கொஞ்ச நாளானால் சரியாப் போய்விடும்” என்பதைத்தவிர வேறு எதுவும் அப்போது சாமிக்குத் தோன்றவில்லை.
“பின்பக்கம் இன்னம் வெட்டலை. இன்னொரு சுற்றுக்கப்புறம் வந்தால் விரிவாகப் பேசலாம்” என்று அவரே விடைகொடுத்தார்.
“அப்படியே செய்யறேன்.”

சரவணப்ரியா அனுவின் இருப்பிடம் தேடிச்சென்றாள். சில வாரங்களுக்கு முன்தான் அனு சார்ந்திருந்த ஆராய்ச்சிக்குழு புதிய கட்டிடத்தின் பதினோராவது மாடிக்கு இடம்பெயர்ந்தார்கள். அவளைப் பார்க்கப்போவது இரண்டாம் தடவை. பல ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வந்தபுதிதில் போனது. அப்போது அவள் பக்கத்திலேயே இருந்தாள். காப்ரியெல்லாவுக்கு ட்ரிஸ் பஃபர் கொஞ்சம் போதவில்லை, உடனடியாகத் தேவைப்பட்டது. ஆர்டர் செய்தது மறுநாள்தான் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் கடன் வாங்குவதற்குப் பதிலாக ஏற்கனவே அறிமுகமான அனுவிடம் கேட்கலாமே என்று தோன்றியது. அனுராதா, அனுசுயா, அல்லது அனுபமாவின் சுருக்கமோ என்று அவளை முதலில் சந்தித்தபோது நினைத்தாள், அப்படியில்லை, அனுதான் அவள் முழுப்பெயராம். பெயர் மாதிரிதான் அவள் உருவமும். எட்டு அளவு உடைகள்கூட பெரிதாகத் தெரியும். அவளுக்குப் பள்ளிப்படிப்பு முழுவதும் கான்வென்ட்டில். அதனால் மலையாளம் தெளித்த தமிழ்கூடத் தெரியாது. எப்போதாவது சில தமிழ் வார்த்தைகள் சிந்தும். குரலில் எப்போதும் ஒரு கரகரப்பு, அது அதிகாரம் செய்வது போலிருக்கும். அனுவின் ஆராய்ச்சிக்கூடத்திற்குச் சென்றபோது இந்தியப்பையன்களின் புகைப்படம் அலங்கரித்த மேஜை கண்ணில் பட்டது, ஆனால் அவளைக்காணோம். மேஜையை ஒட்டி வேலை செய்யும் இடத்திற்குமேல் அலமாரியில் ஒரு புட்டி ட்ரிஸ் கண்ணில்பட்டது. அதை எடுக்கப்போனாள்.
“சார்ரா! தொடாதே!” கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்பில் மரியா சொன்னது மிரட்டலாக இல்லை. இருந்தாலும் சாரா, “நாற்பது கிராம்தான் வேண்டும். ஆர்டர் செய்திருக்கிறேன். நாளை வந்தவுடன் திருப்பித் தந்துவிடுவேன்” என்று மன்னிப்புக்கோரும் குரலில் சொன்னாள்.
“நான் அதற்காகச் சொல்லவில்லை. அனுவுக்கு அவள் பொருட்களை மற்றவர்கள் எடுத்தால் பிடிக்காது. அதனால் எங்களுக்காக வைத்திருக்கும் ட்ரிஸ் பாட்டிலைத் தருகிறேன்.”
அவள் தந்த பாட்டிலை வாங்கிக்கொண்டு நன்றிசொல்லி நகரப்பார்த்தாள் சாரா. மரியா விடவில்லை.
“டான் ஒருதடவை அவள் பைபெட்டரை உபயோகித்தாள் என்று ஊரையே கூட்டிவிட்டாள். அவள் வழியில் போனால்தான் உண்டு. நீ அவளுடன் எப்போதாவது காரில் சென்றிருந்தால் உனக்குத் தெரிந்திருக்குமே.”
“நான் போனதில்லை. அடுத்த தெருவிலேயே இருப்பதால் எப்போதாவது பார்ப்பதுண்டு, அவ்வளவுதான்.”
“ஒருமுறை என் காரில் கோளாறு. வேலைக்கு வரும்போது பஸ்ஸில் வந்தேன். திரும்பிப்போகும்போது அவளுடன் சென்றேன். முதலில் பையனைப் பள்ளியில் ஏற்றிக்கொண்டாள். அவனைப் பியானோ வகுப்பில் விட்டாள். அங்கிருந்து என்வீடு ஒரு மைலில்தான் இருக்கிறது. அந்த அரைமணியில் என்னைக் கொண்டுபோய் விட்டிருக்கலாம். அப்படிச் செய்யாமல் பாஸ்டன் டெலிக்குள் சென்று ஒரு பெரிய பையோடு வந்தாள். பையனையும் சாப்பாட்டையும் வீட்டில் விட்டபிறகுதான் எட்டு மைலில் இருக்கும் என் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். ஒன்றரை மணிக்குமேல் ஆகிவிட்டது.”
“தினம் காலையில் அவள் எங்கள் காரை வேகமாகக் கடந்துசெல்வதைப் பார்த்திருக்கிறேன்.”
“அது அதிசயமே இல்லை. அவள் பி.எம்.டபில்யூவை ஓட்டும் அழகைப் பார்க்கவேண்டுமே. திடீரென்று ப்ரேக் போட்டபோது ‘சாரி பீமர்’ என்றாள். வேகமாக ஒரு ட்ரக்கைக் கடந்தபோது ‘குட்ஜாப் பீமர்’ என்று பாராட்டினாள். எனக்கு முதலில் யாருடன் பேசுகிறாள் என்று புரியவில்லை. அப்புறம்தான் பீமர் அவளுடைய கார் என்று தெரிந்தது. சாலை நேராக இருந்தாலும், வளைந்து வளைந்து சென்றாலும் அதில் இம்மி பிசகாமல் காரை செலுத்துகிறாள்.”
சாராவுக்கும் சரியென்று தோன்றியது. ஒருநாளைக்கு சராசரியாக அறுபது மைலாவது அனுவுக்கு காரை ஓட்டியாகவேண்டும். சென்ற ஆண்டு இரண்டாவது பையனும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்கு மிஷிகன் சென்றுவிட்டான். இனி நேரத்தை என்ன செய்வாள் என்று அதிசயப்பட்டுக் கொண்டிருக்கும்போதே உறவுக்காரப் பையனும் பெண்ணும் இந்தியாவிலிருந்து வந்துவிட்டார்கள். அவன் வேலை மாற்றிக்கொண்டே இருந்தான், அவள் கல்லூரி ஒன்றில் படித்தாள். இருவரும் அனு காரோட்டுவதற்கு நிறைய வாய்ப்பளித்தார்கள்.
இந்தமுறை அனு வளர்க்கும் செல்படலத்தில் ஒருபங்கு வேண்டும். புதிய கட்டிடத்தில் பாதிக்குமேல் முடிக்கப்படவில்லை. அனுவின் இடத்தைத் தேடிக்கண்டுபிடிக்க நேரம் எடுத்தது. இப்போதும் மரியாதான் வரவேற்றாள். “ஹாய் சார்ரா! அனு இல்லையே. மருந்துக்கடைக்குச் சென்றிருக்கிறாள், திரும்பும் நேரம்தான்.”
“தொலைபேசியில் அனு இருக்கிறாளா என்று கேட்டபிறகு வரலாம் என்றால் என்னிடம் உங்கள் புதிய இடத்தின் எண் இல்லை.”
“என்ன வேண்டும்?”
சாரா விளக்கினாள். மரியா உதட்டைப் பிதுக்கினாள். “அவள் உதவுவாளா என்பது சந்தேகம். ஒரு மாதமாக எரிச்சலில் இருக்கிறாள். நாங்கள் அவள் பக்கமே போவதில்லை. எதாவது தேவைப்பட்டால் பாஸ் மூலமாகத்தான் கேட்கிறோம்.”
“ஏன்?”
“நாங்கள் இடம் மாறும்போது அவள் இன்குபேடரின் கண்ணாடிக்கதவை உடைத்துவிட்டார்கள் என்பது பொதுவான அபிப்பிராயம்.” குரலைத்தாழ்த்தி, “உண்மையான காரணம் வேறு” என்றாள்.
சாரா ஆர்வம் காட்டாவிட்டாலும் அவள் தொடர்ந்தாள். “ஒரு மாதமாக மனச்சோர்வுக்காக ஆன்டை-டிப்ரெசன்ட் சாப்பிடுகிறாள். மருந்தின் பக்கவிளைவால் அவளுக்குக் காரோட்ட முடிவதில்லை. காலையில் கும்பலாக ஒரு வண்டியில் வந்து இறங்குகிறாள். மாலையில் அழைத்துப்போக அவள் கணவன் வருகிறான்.”
ஏமாற்றத்துடன் திரும்பியபோது சாமியை அழைத்தாள்.
“ஆள் வந்தானா?
“ரெண்டுமணிக்கு மேலதான் வருவானாம். அதுவரைக்கும் பூக்களா இருக்கிற டாக்வுட் மரங்களையும் ஜப்பானிய ரோஜாப்புதர்களையும் பாத்துண்டே நடக்கறேன்” என்று எரிச்சலை மூட்டினான்.
“நான் இங்கே அலையவேண்டியிருக்கு.”
“குஞ்சுமணியோட பேசினேன்.”
“ரிடைர் ஆனப்புறம் எப்படி இருக்காராம்?”
“அனுவும் அவரும் ஒத்துப்போகாத மாதிரி தெரியறது” என்று ஆரம்பித்து அவர்களின் மனவேற்றுமை படுக்கைவரை தொடர்வதைச் சொன்னான். “நீ என்ன நினைக்கிறே?”
சாமி சொன்னதுடன் தனக்குத்தெரிந்த அனுவையும் சேர்த்துப்பார்த்தாள் சரவணப்ரியா. “இப்பல்லாம் விசா அட்டைக்கு ஒரு விளம்பரம் வருது, நீ கூட நன்னா இருக்குன்னு சொன்னே. பூக்கடை, இல்லாட்டா சாப்பாட்டுக்கடையிலே கடிகார இயக்கம் மாதிரி ஒரேசீரா எல்லாரும் சாமான் வாங்கிட்டு வரிசையா அட்டையை தேச்சுட்டுப் போவாங்க. திடீர்னு நடுவிலே ஒருத்தன் டாலர் நோட்டுகளை எண்ணிக் கொடுப்பான், இல்லாட்டி ஒருத்தி செக் எழுதுவா. உடனே ஓட்டம் நின்னுபோய் குழப்பம் வந்துடும். அந்த மாதிரி அனுவோட வாழ்க்கை அவளோட பி.எம்.டபில்யு கார்மாதிரி மக்கர் இல்லாம ஓடிட்டிருந்தது. இப்ப திடீர்னு குஞ்சுமணி ரிடையராயிட்டு வீட்டிலேயே எப்பவும் இருக்கார். அதனால ஒரே குழப்பம்.”
“அப்படிப் பாத்தா அவரும் ஒரு ரொடீன்ல இருந்தவர்தான்.”
“அனுவுக்கு சீரான வாழ்க்கையை விடமுடியலையோ என்னவோ.”
“அதுக்காக அவரைப் பக்கத்திலே அண்டவிடாம துரத்தணுமா?”
“அவருக்கு வேணுமின்னா ‘வயாகரா’ சாப்பிட்ட உடனே ஆசை வரலாம். அவளுக்கு மனசு எப்படியோ?”
“அனு குஞ்சுவைவிட எட்டு வயசு சின்னவ” என்று நினைவூட்டினான்.
“அதுக்கும் இளமைக்கும் என்ன சம்பந்தம்? அது போறாதுன்னு ஆன்டை-டிப்ரெசன்ட் வேற.” சரவணப்ரியா இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஆனால், அனுவால் பழைய நியதிக்குப் போகமுடிந்தால் நல்லது என்ற அறிவுரை சாமிக்கு நியாயமாகப் பட்டது.
“அவரிடம் சொல்லிப் பாக்கறேன். பை!”
அடுத்தமுறை பார்த்தபாது புல்லை வெட்டி முடித்துவிட்டு இயந்திரத்திலேயே உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார் குஞ்சுமணி. அருகில் சென்று, அவரிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்று சாமி யோசிக்கும்போது அவருடைய செல்பேசி கூவியது. அதைப் பையிலிருந்து எடுத்தார். சாமி தள்ளிச்செல்ல எத்தனித்தான்.
“இங்கேயே இருங்கோ! என்ன ரஹஸ்யம் வேண்டியிருக்கிறது?” என்று சாமி நகருவதைத் தடுத்தார்.
“மிஸ்டர் குஞ்ச் மெனி?”
“குஞ்ச் நான்தான். நீங்கள் யார்?”
“பார்ன்ஸ் புத்தகக் கம்பெனியின் மனிதவளத்திற்கான வைஸ்-ப்ரெசிடென்ட். ஈ-தபாலில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே.”
“ஆமாம். ஆமாம், விளம்பரத்தில் கேட்ட எல்லா தகுதியும் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்” என்றார் குஞ்சுமணி உற்சாகமாக.
“நான் மறுக்கவில்லை. ஆனால் நம்பேச்சு மேலும் தொடர்வதற்குமுன் ஒரு விஷயத்தை நேர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.”
“என்னவென்று சொல்லுங்கள்!”
“இதற்கு முன்னால் நீங்கள் நோப்ல்ஸில் இதேமாதிரி வேலை செய்திருக்கிறீர்கள். ஓய்வு பெற்றபின் போட்டி கம்பெனி எதிலுல் சேரமாட்டேன் என்று உறுதிமொழி கேட்டார்களா?”
“அப்படி எந்த ஒப்பொந்தத்திலும் நான் கையெழுத்திடவில்லையே.” ‘ஹான்ஸ்கி இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பான், திருட்டு ராஸ்கல்!’
“மிக்க நல்லது. நீங்கள் இருப்பது நாஷ்வில் பக்கத்தில். எங்கள் தலைமைக் காரியாலயம் லூயிவிலுக்கு வடக்கே. போய்வருவது கடினமாக இராதா?”
செல்பேசியை வாயிலிருந்து ஒதுக்கிவிட்டு சாமியிடம், “ரொம்ப உத்தமம்.” என்றார். “ஒரு கஷ்டமும் இல்லை.”
“நீங்கள் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியும் என்றுதான் நினைக்கிறேன்.”
“சம்பளத்திற்கென்ன? நேரில் வந்து எப்போது பார்க்கலாம்?” என்று அவசரப்படுத்தினார்.
“இது பகுதிநேர வேலை இல்லை, நினைவிருக்கட்டும்,”
“பகுதிநேர வேலை யாருக்கு வேண்டும்? முழுநேரம்தான் வேண்டும். இந்தக் காலத்தில் மெடிகல் பெனிஃபிட்ஸ் ரொம்ப முக்கியம்.”
“பலவிதங்களில் உங்களைப் பிடித்திருக்கிறது, ஆனால்…”
“எதற்கு ஆனால்?”
“நாங்கள் சிலரைப்போல் குறுகிய காலத்திற்கு ஆள் தேடுவதில்லை.”
“தெரியும், அதற்குத்தான் நான் உங்களிடம் விண்ணப்பித்தேன்.”
“இந்த உத்தியோகத்திற்கும் நீண்டகாலம் தங்கும்படியாக ஒருவரைத் தேடுகிறோம்.”
“கவலைப்பட வேண்டாம். நான் நெடுங்காலம் உயிரோடு இருப்பேன் என்று ஜோசியன் சொல்லியிருக்கான்.”
“உங்கள் வயதைப் பார்த்து நான்காண்டுகள்தான் வேலை செய்வீர்களென எதிர்பார்க்கிறேன்.”
“உங்களிடம் எத்தனை ஆண்டுகளுக்கு நான் உறுதி தர வேண்டும்?”
“ஆறு ஆண்டுகள்.”
“ஆறென்ன, பத்து பதினைந்து ஆண்டுகள்கூட வேலை செய்யத்தயார்!”


venkataraman.amarnath@Vanderbilt.Edu

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்