மனக்குப்பை

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

எஸ்.ஷங்கரநாராயணன்



ஆண்களின் கண்களை அவள் அறிவாள். சட்டென்ற முதல் எதிர்ப்பார்வையில் அவை சற்றே திகைக்கின்றன. ஒரு மாட்டிக்கொண்ட திகைப்பு அது. ரகசியம் வெளிப்பட்டு விட்டாப்போல… ஏன் அப்படி அவர்கள் தடுமாற வேண்டும்! அலுவலகத்தில், சற்றே வேலைமும்முரத்தில் அவள் கவனமாய் இருந்தால், திடீரென்று முதுகுப்புறமோ தோள்ப்பக்கமோ சிறு குறுகுறுப்பு. யாரோ நம்மைக் கூர்ந்து கவனிக்கிறாப்போல. சட்டென்று நிமிர்ந்துபார்க்க வேண்டியிருக்கிறது. வேலைகவனம் சிதறிப்போகிறது. பக்கத்து நாற்காலி சிவராமன்? இல்லை. ஒருவேளை சுதாரித்து அவன் பைலுக்குள் முகத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம். ஆ – நாலுமேஜை தூரத்தில், கண்ணபிரான். தூரம் வெட்கம் அறியாது போலும்! வேலை ரெண்டாம்பட்சம் அவருக்கு. வெற்றிலைபாக்கு எப்பவும் வாயில் அதக்கிக்கொள்ள வேண்டும். மூன்று பெண்குழந்தைகள். ஆண்குழந்தை இல்லை என்கிற வருத்தம் உள்ளவர். ஆண்குழந்தை பெற்றுத்தரவும் தேவை ஒரு பெண்! பெரியவர்கள் ஆனபின்னால் பெண்களைத் துரத்திப்போகும் ஆண்பிள்ளைகள்! வயசு எத்தனை ஆனாலும் இவரைப்போல நிறைய ஆண்கள் சற்று தத்தளிப்பான வாழ்க்கையே வாழ்கிறார்கள். அ, அதற்கு இளமையாய் இருக்கிறதாய் ஒரு சமாதானம், பிரமை வேறு.
மேலும் கவனம் சிதறவிடாமல் வேலையில் ஈடுபட முனைந்தாள். இன்னும் ஒரு பைல் இந்த விவரங்களை சரிபார்க்க அவளுக்குத் தேவைப்பட்டது. சற்று எழுந்து அவள் பீரோமேல் துழாவி தேடியெடுக்க வெண்டும். அவள் மெளனமாய் இருந்தாலே பார்வைகள் தூரதூரங்களில் இருந்து அவளைத் துழாவுகின்றன. பெரிய ஜவுளிக்கடைகளில் ரகசியகேமெரா பொருத்தியிருப்பார்களாம், அவைபோல… ஈக்களாய் அவள்மேல் வந்தமரும் பார்வைகள். ஒரு பெண் தன்-இயல்புடன் இருக்க இங்கே வாய்ப்பதேயில்லை. ஒரு பெண்ணின் தனிமையைக் கரைக்கவும், அவளது அந்தரங்கங்களை அறியவும், அதில் பங்கெடுத்துக் கொள்ளவும் எல்லா ஆண்களுக்கும் உந்துதல் இருக்கிறது. இதில் வயது வித்தியாசம் இல்லை!
சற்று நாற்காலியைப் பின்னகர்த்தி, எவ்வளவு குறைவான சத்தம் வந்தாலும், அது அந்த மொத்த அறையையே, அவளைத்தவிர அங்கே ஆறுபேர் – ஆறு ஆண்கள், ஆறு நாற்காலிகள்… சலனப்படுத்தி விடுகிறது. அவள் உள்ளேவர எதிர்கொண்டாடும் பார்வைகள், அவள் எழுந்துபோக பின்தொடர்கின்றன. பீரோவை மெலிதான தப்படிகள் வைத்து எட்டி, உயரத்தில் அடுக்கப்பட்டிருந்தன பைல்கள், அவளுக்குத் தேவையானதை உருவியெடுக்க… முடியுமா?… அவள் புடவையில் வந்திருந்தாள். புடவை அவளுக்குப் பிடித்த உடை. கையை உயரே தூ… சட்டெனத் திரும்பி அறையைப் பார்த்தாள். பன்னிரெண்டு கண்கள். சட்டென்று வெட்கத்தில் தலைகவிழும் முகங்கள்!
ஓரத்தில் தனிநாற்காலி போட்டுத் தனியே உட்கார்ந்திருக்கும் ராமநாதன், பியூன் சமாளித்து ”நான் வேணா எடுத்துத் தரட்டுமா மேடம்?” என்கிறான். அவன்வந்து கையைத் தூக்கியிருந்தால் யாரும் வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவன் சட்டை அக்குள்பக்கம் கிழிசல்! மிஸ்செலேனியஸ் பைலுடன் இருக்கைக்குக் திரும்பினாள்.
ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா என்ன…
தனிப்பெண்ணாய் இங்கே வளையவருவதில் சில அசாதாரணங்கள். சாதாரணங்களே அசாதாரணங்களாய் உருப்பெருகி கவனஈர்ப்பு தருகின்றன. யார் ஒருத்தருடனும் தனியே சிரித்துப் பேசவோ, எழுந்து ஒண்ணாய்க் காபி சாப்பிடப் போகவோ முடியாதிருந்தது. நிகழ்ச்சிகளுக்கு றெக்கை முளைத்து மழையீசல் போலும் கிளம்பித் திரிகின்றன அலுவலக வளாகத்தில். யாருமே ஏற்பாடு செய்யாவிட்டாலும், சுயம்வரங்கள் அலுவலகங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன!
பெண் என்பவள் ஆணின் டார்கெட் அல்லது கவனவியூகம் என்கிற பாவனை மாறுமா என்றிருந்தது. பேசாத பெண்மை, பேசாததாலேயே யூகங்களைக் கிளர்த்தி விடுகின்றது போலும்!
பதினோருமணி சுமாருக்கு ஆண்களாய் இருந்தால், காபி சாப்பிட என்று எழுந்து இருவராகவோ கூட்டமாகவோ வெளியே போய் வந்தார்கள். மேஜையடியில் சிறைப்பட்ட கால்களைத் தளர்த்தி சிறு விடுதலை அளித்தார்கள். காபி அல்லது டீ, அலுவலக எதிர்க்கடையில் அப்போது சிறு புகைமண்டலம் கிளம்புகிறது. ஆண்களின் உலகம். ஒரு பெண்ணால் இங்கே புகைபிடிக்க முடியுமா? அதுவும் பொது இடத்தில் இப்படி நின்று…
மேஜையருகே தொலைபேசி. அவளது அழைப்பின் பேரில் காபி வந்தது தனியாக.
எந்த ஆணையும் நேர்ப்பார்வையில் ஒரு புன்னகையோடு அவள் அணுகினாள். யாரையும் திரு சேர்த்துப் பேர்சொல்லி அழைப்பதில் ஒரு நேர்மையான வெளிப்பாடு இருக்கிறதாய் உணர்ந்தாள். சற்று ஆங்கிலக் கலப்பும் சிலாக்கியமானது. இந்த பாவனைகள் எல்லாம் வேண்டித்தானே இருக்கிறது. அல்லாமல் சாதாரண உரையாடல்களே பூதக்கண்ணாடி கொண்டு அலசப்படுகின்றன இங்கே, ஜோசியன் எதிர்காலம் தேடுவதுபோல! பஸ்சில் உட்காரச் சொன்னாலே உள்ச்சிறகு விரிய புல்லரிப்புடன் வானில் பறக்கத் துவங்கும் மனசு. ஆண்மனசு!
ஒருவேளை ஆணையும் பெண்ணையும் தனித்தனி அலகுகளால் அணுகி, நாம் வளர்ப்பதே இதற்கு தூபம் போட்டிருக்கலாம். பெண்ணை ஆண்களில் இருந்து பிரித்து ‍பொத்திப் பொத்தி, பாதுகாப்புபாவனை கொண்டாடும் குடும்பத்தார்… பெண்போலிசை ஒருபாட்டி போலிஸ்ஸ்டேஷனுக்குப் போய்த் திரும்ப வீட்டுக்குக் கூட்டிவந்ததாக ஒரு கதை உண்டு!
பெண்ணுக்கான தனி உலகம் இல்லவே இல்லையா? இருக்க முடியாதா? கூடாதா?
இந்த ‘வெயிட்டிங்லிஸ்ட்’ பாவனை இல்லாத ஆண் உண்டா!
அழகாக இல்லாததால்
அவள் தங்கையானாள் – கவிதை வாசித்திருக்கிறாள்.
தன்னை ஆணுக்குச் சமமாக வளர்த்த அப்பாவை நினைத்துக் கொள்கிறாள். குறிப்பாக பின்-பதின் வயதுகளில் பெற்றோர்கள் பெண்களை வெளியே அனுப்ப கவலை கொண்டாடினார்கள். ”இனி நான் எதுக்கும்மா உனக்கே விவரந் தெரிஞ்சாச்சி…” என்ற அப்பா. அறிவுரை வழங்குகிற அப்பா அல்லர் அவர். எச்சரிக்கையும் பயமுறுத்தலுமான அப்பா அல்லர். அவள் பேச, புன்னகையுடன் கேட்டுக்கொள்கிற அப்பா…
என் உலகைவிட உன்னது பெரியது, பரந்தது. பெண்ணே, எனக்கு அடுத்த தலைமுறைப் பெண்ணே… நல்வாழ்த்துக்கள்!
அவளுக்கு வேலை கிடைத்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டார். ”டூ வீலர் எதும் வாங்கிக்கயேம்மா?”
”வேணாம்ப்பா. வீட்டு வாசல்ல பஸ் – ஷேர்ஆட்டோ… ஆபிஸ் வாசல்ல இறங்கிக்கலாம்.”
என்றாலும் அப்பா வேட்டிசட்டை என்று உடைகளில் பிரியங் காட்டியதுதான் ஆச்சர்யம். ‍‍ஹோண்டா ஆக்டிவா வைத்திருக்கிறார். தூயவெள்ளை பாலியெஸ்டர் வேட்டி. கண்ணில் ரிம்லெஸ், காதோர சிறுநரை நாணல்கள். கைகளிலும் நெஞ்சிலும் கேசப்புல்வெளி. எப்போதும் எதாவது புத்தகம் வாசிக்கிற அப்பா. இதுதான் என்று கிடையாது – கதை முதல் சுயவரலாறு … புக்கர் வாஷிங்டனை அறிமுகப் படுத்தி வைத்தார், எத்தனை அருமையான வரலாறு… இராத்திரி அறையில் விளக்கெரிந்து கொண்டிருக்கும். எல்லாம் தூங்கியபின் தனிமையில் அந்த அமைதிமுங்கலில் மனசில் திளைத்து நீச்சலடிக்கிறார் அப்பா. சில சமயம் விளக்கணைந்திருந்தாலும் காதில் ஒலியன்களைப் பொருத்திக்கொண்டு, நல்ல சங்கீதத்தை உள்ளை இறைத்துக் கொண்டிருப்பார். எப்போது தூங்குவார் தெரியாது. காலையில் அவள் கண்விழிக்க அவர் அவருக்கு முன்னே பரபரப்பாகி யிருப்பார்!
சுத்தமும் ஒழுங்குகளும் அவர் ரத்தத்தில் இருந்தாப்போல…
அப்பா, உன்னால் எனக்குப் பிற ஆண்களைப் புரிந்தது.
என்னை விடு. அந்த மூன்று பெண்களின் அப்பா, கண்ணபிரான்… அந்தப் பெண்களை எத்தனை மரியாதையுடன் பேணுவாரோ தெரியவில்லை. இம்மாதிரி குடும்பங்களில் பிறக்கும் ஆண், சகல வழிகளிலும் கெட்டுப்போகும்படி அநியாயச் செல்லத்துடன் வளர்க்கப் படுவதைப் பார்த்திருக்கிறாள்.
இன்னிக்கென்னவோ மனசு உலகத்தைப் புரட்டிப் போடுகிற புரட்சிபிரமையுடன் இயங்குகிறதா தெரியவில்லை!
இங்கே கண்ணகியின் அறச்சீற்றம் கூட கணவனுக்காகத்தான். ஆ மாதவியுடன் மனைவியைப் பிரந்த கணவன்!
மேனேஜரின் தனி அறை ஜன்னல் கதவு சாத்திக் கிடந்தது.,, அவள் புன்னகை செய்து கொண்டாள்.
எப்போதும் திரு கா‍மேஸ்வர் தாஸ் பத்து மணிக்குத் தவறாமல் அலுவலகம் வந்து விடுகிறார். அடர்வண்ண முழுக்கைச் சட்டை, டிசைன் இல்லாத பிளெய்ன் சட்டை. கட்டாயம் டை கட்டியிருப்பார். அலட்சியமாய் வாயோரம் ஒதுங்கிப் புகையும் சிகரெட்… படகும் துடுப்பும்போல! பாந்தமாய் அது அவரது அதிகாரப் பிரகடனம் செய்தாப் போலிருந்தது. அப்படித்தான் அவர் நம்பினார். மேனேஜர் என்கிற அடையாளம் த்வனிக்கிற கைப்பெட்டி, லாப்டாப். அந்தக் காலத்தில் பெரியவர்கள் வெள்ளி வெற்றிலைச் செல்லத்துடன் அலைந்தார்கள்!
திடீரென்றுபோல காமேஸ்வர் தாசின் நடவடிக்கைகளில் சிறு சலனங்களை அவள் கண்டறிந்தாள்.
ஆண்களின் பார்வையெல்லைகளை அவள் அறிந்தவள்தான். அந்த எல்லையில் நின்று எதிர்ப்பார்வை பார்க்க முடிந்தவள்தான். நாட்டுக்கும் நாட்டுக்குமான எல்லைச் சண்டை போல! ஒரு வழிப்பாதை இது. நுழையற்க.
ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத தாஸ். அவரை மனைவி சங்கீதாவுடன் ஒரு கேளிக்கைக்கூடலில் பார்த்திருக்கிறாள். ஒல்லியான ஒல்லி. சிவப்பான சிவப்பு. மூக்கு குத்தி காதில் வளையம் அணிந்ததில் ஒரு வட இந்தியச் சாயல் தெரிந்தது. யாருடனும் அதிகம் பேசவில்லை அவள். தமிழ் பேசுவாளா என்றிருந்தது. அவரும் அவளைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி அவளது உற்சாகத்தை ஊக்குவிக்க முனையவில்லை. கணவனுக்கு அடங்கிய மனைவி. அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து தன் விஸ்தீரணங்களை வலிந்து வட்டம் சுருக்கிக் கொள்கிறவளாய், அவர்சார்ந்து உருமாறிக் கொள்கிறவளாய் இருந்தாள். மற்ற அலுவலர்களும் மனைவி, குழந்தைகள் என வந்திருந்ததில் கூடம் கலகலப்பாய் இருந்தது.
”உங்க குழந்தைகள் வர்லியா?” என்று நட்புடன் கேட்டாள் திருமதி தாசிடம்.
அவள் வெட்கத்துடன் தலையை அளைந்தபடியே ”நோ இஷ்யூஸ் யெட்” என்றாள்.
”அவசரம் ஒண்ணில்ல” என்றாள் இவள் ஆறுதலாய். அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. கணவன் இதுகுறித்து லேசான வருத்தம் உடையவனாய் இருப்பதில் இவள் முகவாட்டம் கண்டிருக்கலாம். குழந்தைப்பேறு இல்லை, அதல்ல கவலை, கணவனின் அலுப்பு, அதுவே பிரச்னை என்று நினைத்தாள்.
பஃபே தயாராய் இருந்தது. ஆளுக்கொரு தட்டு எடுத்துக் கொண்டார்கள். திருமதி சங்கீதா தாஸ் கேட்டஅளவில் குறைவாக, கேட்டதற்கு பதில் என்று பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் நல்ல படிப்பு, எம்.காம். தங்கப்பதக்கம் பெற்றவள்! ஒருவேளை வசதி குறைவான இடத்தில் பிறந்து, இந்த வரனே ஓகோ என்ற மிதப்புடன் பெற்றவர்கள் அனுப்பி வைத்திருக்கலாம். அலாரம் வைத்து எழுந்துகொண்டு, பின்தூங்கி முன் எழும் இந்திய ஸ்திரீ… சங்கீதாவை அவளுக்குப் பிடித்திருந்தது. அவளைச் சிரிக்க வைக்கவும், சந்தோஷப்படுத்தவும், அவளோடு பழகவும் விரும்பினாள்.
என்னதான் பேச்சும் பதிலுமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் திருமதி தாஸ் முதுகுபின்னால் கூட கணவனின் கட்டளைக்குச் செவிதீட்டிக் காத்திருந்தாப் போலிருந்தது. இந்தக் கூடலில் அவளுக்கு அவர் வீட்டுக்குப்போய்ப் பாராட்டு வழங்கவேண்டும், அதற்கு அவள் பாடுபட வேண்டும், என மெனக்கிட்டாப் போலிருந்தது. செயல்மும்முரத்தில் இவள் பேசியபடியே மற்ற மனைவிகளுடன் கலகலப்பாய்க் கலந்து கொண்டாள்.
அடுத்தநாள் அவளை அலுவலகத்தில் உள்ளே அழைத்தார் திரு காமேஸ்வர் தாஸ். ”என்ன என் ஒய்ஃப் உங்களை ரொம்ப போரடிச்சிட்டாங்களா?” என்றார் புன்னகையுடன்.
”இல்லியே, ஏன்?”
”இல்ல, அவளுக்கு அவ்வளவா பழக்க வழக்கம் தெரியாது.”
”ஷீஸ் ஜஸ்ட் ஆல்ரைட் சார்.”
”இல்ல, வில்லேஜ் பிராட்-அப் பாத்தீங்களா?”
”தட்ஸ் ஓ.கே. அவங்க இயற்கையா எப்பிடி இருக்காங்களோ அப்பிடி இருக்கட்டுமே. நம்ம இஷ்டப்படி அவங்க இருக்கணும்னு நாம எதிர்பார்க்கறதுதான் எனக்கு சரியாப் படல…”
அவர்முகம் மாறியது. அதுவரை எதிராளி பேச சந்தர்ப்பம் அளிக்காமல் மேலடி அடிக்கிற வழக்கம் உள்ளவர். மேலதிகாரி வேறு. இவளை இப்படி அழைத்துப் பேசி, அவளிடம் பேச்சுகேட்கிறோமே என அவர் உள்ளுக்குள் சுருங்கியிருக்கலாம்!
மனைவிசார்ந்த அவநம்பிக்கைகளை இவர் விலக்கிக்கொண்டால் நல்லது. ஐயா நீர் அலுவலகத்தில் அதிகாரி சரி, வீட்டில் நீர் அதிகாரியும் அல்ல, அவள் தொழிலாளியும் அல்ல. நல்ல நண்பர்கள் – அதுவே நியாயம்! அவரோடு எவ்வளவு பேசலாம் தெரியவில்லை. இப்படி அவளை உள்ளே அழைத்து அவர் பேசியதே முதல்முறை. திரும்பக் கூப்பிடுவாரா என்பதே சந்தேகம்!
”வரேன் சார்” என்று புன்னகையுடன் வெளியேறினாள்.
வசதிகுறைவான படித்த அடிமைகள் தேவை. அவளுக்கு வாழ்வு தந்த பெருமை அவருக்கு இருக்கலாம். தகுதிசரியான இடத்துப் பெண் அவர் கைக்குள் அடங்காது என உள்ளூற பயந்துமிருக்கலாம்… மனசின் வேடிக்கைகளுக்கு அளவேயில்லை! தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினாள்.
பின்னாளில் திரு தாஸ் இவளிடம் சற்று இறுக்கம் தளர்த்திக் கொண்டாப் போலத்தான் இருந்தது. ஆறேழு வருடங்களாய்க் குழந்தை இல்லை என கவலை கொண்டாடினாப்போலத்தான் இருந்தது. இதுரீதியாய் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் என்று தெரிந்தது. சிலநாட்கள் உறக்கம் மீளாத கண்சிவப்புடன் அலுவலகம் வருவார். தொலைபேசியில் உறுமலாய் எகிறலாய்ப் பேசுவார். அன்றைக்கு வேண்டு‍மென்றே மனைவி கட்டித் தந்திருந்த உணவைப் புறக்கணித்து வந்திருந்தார். அதை அவள் கொடுத்தனுப்பவோ என்னவோ அலுவலகத்துக்குப் பேசியபோது ஆத்திரப்பட்டார்.
உண்மை – ஒரு குழந்தை இருவரிடையே இன்னும் உறவுகளைச் சீர்ப்படுத்தி யிருக்கும் ஒருவேளை. ஆனால் புயல் மையம்பிசகிப் போகும் என்று தோன்றியது இப்போது.
திரு காமேஸ்வர் தாசின் அறை ஜன்னல் இப்போதெல்லாம் அவளைப் பார்க்கிறாப் போல ஒருக்களித்துத் திறந்திருந்தது! பிறர் அறியமுடியாவண்ணம் சற்றே காற்றுக்குப்போலத் திறந்திருந்தது. முதலில் அவள் அதை கவனிக்கவில்லை. பிறகு சட்டை பண்ணவில்லை. வேலைமும்முரத்தில் அவள் தலைநிமிர்ந்தால் ஜன்னலுக்கு அந்தப்புறம் அந்த விழிகள்… சற்று பசித்துக் கிடந்தன அவை. ஆண்களின் அந்தப் பார்வை அவள் அறிவாள்!
தூரம் வெட்கம் அறியாது போலும்!
”உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்…” முடிந்த இயல்புடன் காமேஸ்வர் பேசத் தலைப்பட்டார். ”சொல்லுங்க சார்” என்றாள் நேர்ப்பார்வையாய். இது அலுவலகம் அவர் தன்னிச்சையாய்ப் பேசவோ, செயல்படவோ வாய்ப்பில்லை, அவளுக்குத் தெரியும். அவருக்கும் அது தெரிந்திருந்தது.
”இசிட் ஸோ பெர்சனல் சார்?”
”அப்டின்னில்ல…” என்றவர் தயங்கி, சிறிது நிறுத்தி ”ஆமாம்” என்றார் தடுமாற்றத்தோடு. ”ரொம்ப அலுத்திருக்கிறிர்கள்,” என்று பொதுப்படையாய்ச் சொல்லிவிட்டு ”ஓய்வாய் ஒருநாள் பேசலாம் சார்” என்றபடி வெளியேறினாள்!
திருமதி தாஸ் வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது. அவள் யூகித்தது சரியே, வீட்டில் அடிக்கடி தாஸ் சண்டை வலிக்கிறவராய் இருந்தார். குழந்தைப்பேறு பூதாகரமாகி வீட்டின் சுவர்களில் முட்டிமோதித் திணறிக் கொண்டிருந்தது. விக்கித்த அழுகையோடு பயத்தோடு ஆங்கிலத்தில் அவள் பேசினாள்.
அவரது ஆஷ்ட்ரே நிரம்பி வழிந்தது. பாதி குடித்த சிகெரெட்டுகள் அழுத்தி நசுங்கிக் கிடந்தன. வீடுதிரும்ப முடியாத தத்தளிப்புடன் அவர் தனியே உள்ளே இருப்பதைப் பார்த்தாள். நேரே அவரது அறைக்குள் நுழைந்தாள். ”எஸ்?” என்றார். ”எதோ சொல்லணும்னீங்களே சார்?” – ”ம்…” அவர் பெருமூச்செறித்தார். ”வீட்ல எதும் சண்டையா சார்?” அவர் அவளைப் பார்த்தார்.
”நீங்க உங்க மனைவி சந்தேகப்படறீங்களா?” என்றாள் நேரடியாய். அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ”இல்ல, ஏன்?” என்றார். பிறகு ”உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
”அவங்ககூட நான் பேசினேன் சார், ஃபோன்ல…”
”நீங்க ஏன் பேசணும்?” என்றார் அவர் சிகெரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தியபடியே. ”அவளே பேசினாளா உங்ககூட?” என்று கண்சிவக்கக் கேட்டார், அவர் தலைக்குள் ஆத்திரம் குமுறிக் கொண்டிருந்தது.
”இல்ல நாந்தான் கூப்பிட்டுப் பேசினேன்…”
”ஏன்.”
ஆண்கள். அவர் விரும்பினால் அவளைக் கூப்பிட்டுப் பேசலாம். அதில் தவறாக எதும் கிடையாது. அவர் மனைவியை நான் ‍கூப்பிட்டுப் பேசியது அவருக்குத் தெரியாமல் போனதில் ஆத்திரம்!
”பாவம் சார். அவளை நீங்க சந்தேகப்படறது தப்பு சார்.”
”ரைட்” என்றார் அவர். ”அதெப்பிடி உனக்குத் தெரியும்?”
”ரொம்ப பயந்தவங்க அவங்க. துணிச்சலான எதிர்முடிவுகளை எடுக்கிறவங்க கிடையாது, அது உங்களுக்கே தெரியும்.”
”அவ மாமாபையன் ஒருத்தன்… இப்ப அடிக்கடி வந்துபோறாப்ல இருக்கு…” தன் சொந்த விஷயத்தைப் பட்டவர்த்தனமாய்ப் பேச வெட்கமும், அப்படி நேர்ந்ததில் ஆத்திரமும் அடைந்திருந்தார்.
”அவளை நீங்க நம்பணும். அவன் யாரா இருந்தா என்ன… உங்க மனைவியை உங்களுக்குத் தெரியாதா? அவனைப்த்தி பயந்துகிட்டு உங்களை நீங்க காயப்படுத்திக்கறீங்க… நான் அதிகம் பேசறதா நினைக்கறீங்களா?”
இல்லை, என்கிறாப்போல லேசாய்த் தலையசைத்துவிட்டு, ”ஆமா” என்றார் அழுத்தமாய். ”நான் அவளை சந்தேகப்படறதுக்குக் காரணம்…”
”உங்களுக்கு ஒரு மொட்டைக்கடுதாசி வந்தது…”
”இவ எல்லாத்தையும் உன்கிட்டப் பேசறாளா?” அவர் உடம்பு நடுங்கியது. அவள் வார்த்தைகள் குண்டூசிகளாய் அவர் தோலைக் குத்தினாற் போல.
”குழந்தையில்லைன்னு மனைவியை ஒதுக்கிவைக்கத் தயங்காத ஆண்கள், அதேபோல அவளும் நம்மை ஒதுக்கிருவாளோன்ற நினைப்பையே தாள முடியாதவங்களா இருக்காங்க…”
அவர் முகம் இருண்டது. எதோ சொல்ல வந்தவர், அவளோடு என்ன பேச்சு என்பதுபோல அடக்கிக் கொண்டார்.
”எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?” என்றவள் நிறுத்தி ”இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றாள். பின் ஒரு புன்னகையுடன் சொன்னாள் – ”அந்த மொட்டைக் கடுதாசி… அதை எழுதியது நான்தான்.” அவர்முன் அதன் ஜெராக்ஸ் பிரதியை வைத்தாள் அவள். அவரைப் பார்க்காமல் எழுந்துபோய் அந்த ஜன்னல்கதவைச் சாத்தினாள். அவளைப் பார்க்க சற்றே திறந்திருக்கும் ஜன்னல்.
திரும்பி அவரைப் பார்த்தாள் – ”கிளம்புங்க சார். மனைவி உங்களுக்காகக் காத்திருப்பாங்க…” என்றாள் அவள் புன்னகையுடன்.

>>>
(நன்றி – பெண்ணே நீ மாத இதழ்)


storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்