மாத்தா ஹரி – அத்தியாயம் 41

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பவானி உறங்காமல் விழித்திருந்தாள். கடந்த சில தினங்களாக இப்படித்தான், உறக்கத்தை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன, எல்லோரும் சொல்றதுபோல விதிதான் காரணமா? ஹ்ஹா..ஹே- வாய்விட்டு சிரித்தாள். மனிதர்களுக்கு வர நெருக்கடிகளுக்கெல்லாம் அவங்கதான் பொறுப்பு, அவர்களுடைய தவறுகள்தான் காரணமென்று சொன்னதெல்லாம் அடுத்தவர்களுக்கா? இவள் மனிதஜாதி இல்லையா? இவள் தெரிவுசெஞ்ச தேவசகாயம், க்ரோ, பத்மா, ஒருவேளை பிலிப் எல்லோருமே தப்பான பேர்வழிகளா? எதை நம்புவது, எதை நம்பாலிருப்பது? பொய் எது? நிஜம் எது? ‘தேவர் அனையர் கயவர்’ என்ற வள்ளுவனுக்குத்தான் எத்தனை ஞானம்? தேவர்களைப்போல கயவரும் விரும்பியதைச் சாதிப்பார்களாமே, காய்களைத் தவிர்த்து கனிகளைப் பிசைந்து கொடுப்பார்களாமே.

– பைத்தியக்காரி! ஏதோ தேவர்களை நேரில் சந்தித்ததுபோல, பேசற.

– இல்லையா பின்னே? இதுவரைச் சந்தித்திராத, பார்த்திராதவர்களைத்தானே உயர்ந்தவர்களென்று சொல்லணும், சத்தித்ததெல்லாம் உண்மையும், பொய்யுமாய் இருக்க எங்கே எது என்பதில் தேடி அலுத்து, நீ சொல்வதுபோல நான் பைத்தியமானதுதான் மிச்சம், “நட்பென வந்திடுவர் நலங்கெட பொய்யுரைப்பர், விலங்கினும் கீழினங்கள் விலைபோகாதிரு மனமே”, அப்படீண்ணு கிருஷ்ணா ஒரு கவிதையிலே சொல்லியிருப்பான். விலைபோனதுதான் அதிகம். பத்மா, தேவசகாயம், க்ரோ மூவருமே அசுர கணமோ?

ஆரம்பத்துலே பத்மா பள்ளித் தோழி, அடுத்து கல்லூரி சிநேகிதி, பிரெஞ்சு வகுப்பு; இவள் அவளைத் தேடிசென்ற நாட்களும், அவள் இவளைத்தேடி சென்ற நாட்களும் வருடமுழுக்க உண்டு; அன்றாட வாழ்க்கையின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்கிற நட்பு; ஓட்டலுக்குப் போனால் இவளால் முடிந்தது இரண்டுகாப்பிக்கான பில்லுக்கு பணம்கொடுப்பது, கொடுத்திருக்கிறாள்; அவளுக்கு காப்பியோடு மெதுவடை, தோசையென்று பணம் செலுத்த முடியும், செய்திருக்கிறாள்; இவள் வீட்டில் தைப்பொங்கலும் அவளும், அவள் வீட்டில் கிறிஸ்துமஸ¤ம் சிநேகிதிகளை இணைத்து வைத்திருக்கிந்றன. பிரான்சில் ஆரம்பித்து ஐஸ்கிரீம் வரை பேசாத விஷயமே இல்லை. தேவசகாயத்தோடு இவளுக்குத் திருமணம் முடிந்தபிறகு, அவளுக்கும் இவளுக்குமான இடைவெளி மில்லிமீட்டரில் ஆரம்பித்து, இன்றைக்கு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கிறது. பிரான்சுக்கு வந்தபிறகு வருடத்திற்கு மூன்று முறையாவது இவளையும் தேவசகாயத்தையும் பார்ப்பதெற்கென்று பாரீசிலிருந்து ஸ்ட்ராஸ்பூர் வந்துபோனவள், என்ன நடந்ததோ, இரண்டுவருடம் ஆகப்போகுது, எட்டிப்பார்த்து…

– என்ன மறந்துபோச்சா.. ஷர்மிளா கிட்டே, நீ எழுப்பிய சந்தேகம் மறந்துபோச்சா?

– என்ன சொல்ற நீ?

– ஒரு தடவை ஷர்மிளா இங்கே வந்திருந்தப்போ, அவகிட்டே கேட்டது ஞாபகமில்லே. தேவசகாயத்துக்கும் பத்மாவுக்குமான நட்புக்கு என்ன அர்த்தம்ணு அவளை நீ கேட்கலை?

– ஆமாம்.

– அவகூட, எதற்காக கேட்கிறண்ணு உன்னைக் கேட்டபோ, ‘ஹரிணி யார்குழந்தைண்ணு தெரிஞ்சுக்கணுமென்று’ நீ சொல்லலை.

– ம்…

– போதாதா, ஷர்மிளா, பத்மாகிட்டே அதைச் சொல்லாமலா இருந்திருப்பா?

– அப்படியா? என்னுடைய மரமண்டைக்கு புரியலை.

– மெத்த படிச்சவங்களுக்கு அற்ப விஷயங்களைப் புரிஞ்சுக்கப்போதாது. கழுத்தில் மாலைவிழும்போது சந்தோஷமா குனிஞ்சுட்டு, கத்தியைக் கண்டு மிரளுவது உங்களுக்கு வழக்கமாப் போச்சு.

– ஐயோ மனமே! இப்படியொரு குறுக்கு விசாரணையை கொஞ்சம் முன்னாலே நடத்தியிருந்தா எத்தனை சௌகரியம்?

– அவ்வப்போது எதையாவது நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கேன். நீதான் காதில் வாங்கறதில்லே.

உண்மை, மனதின் பேச்சில் நியாயம் தெரிந்தது. அவ்வப்போது இப்படித்தான், இவளிடமிருந்து விடுபட்டு முகத்தெதிரே நின்று விரலசைத்து பேசுகிறது. அப்படி கேட்டதிற்கு பிறகே பத்மா ஸ்ட்ராஸ்பூர் வருவதை நிறுத்தியிருந்தாள். மதாம் க்ரோவை, முதன் முதலில் அவளுடைய அலுவலகத்தில் சந்தித்தது நினவுக்கு வந்தது. கதவைத்திறந்து உள்ளே போனபோது ராட்ஷசி ஒரு தேவதையைப்போல அமர்ந்திருந்தாள், வெண்தாமரை இதழ்கள் நசிந்திடாமல் அமர்ந்திருக்கத் தெரிந்த ரவிவர்மா தேவதை, முகம்மட்டும் உடலுக்குப் பொருத்தமின்றி இருமடங்காக தலையைவிட்டு தனியே தெரிந்தது. பராமரித்த புல் பத்தைபோல இமை, சிலந்திபோல ஊர்ந்த அவளுடைய பார்வை என்னவோசெய்ய உடலில் கூச்சம், நெளிந்தாள்.

– நீ ரொம்ப அழகாயிருக்க, மாத்தா ஹரிபோலா, இந்தியாவா?

– ஆமாங்க மேடம், சொந்த ஊரு புதுச்சேரி, பிரெஞ்சிலே கோர்வையா எதையும் என்னாலே சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் பேசலாமா. உங்களுக்கு ஆங்கிலம் வருமா?

– புதுச்சேரிண்ணு சொல்ற, பிரான்சுக்கு வந்திருக்கிற பிரெஞ்சு படிக்காமலா வந்த.

– இங்கே வரணுமென்று நினைச்சு பிரெஞ்சு படிக்கலை, ஓர் ஆர்வத்துலே படிச்சேன், சரளமா பேசவராது. திடீர்னு கல்யாணம் அமைஞ்சிட்டுது, அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை இருந்தது, அவர் பிரான்சுக்கு வரணுமென்று தீர்மானித்தார், நானும் புறப்பட்டு வந்துட்டேன்.

– ராமன்கூட புறப்பட்ட சீதைமாதிரிண்ணு சொல்லு

– ஆனா நாங்க வனவாசம்வரலை, நாட்டிலே இருக்கோம், யதார்த்தம்னு ஒன்றிருக்கு, இரண்டு வயதிலே குழந்தையொண்ணு கையிலே இருக்கு. வந்த புதிதில் இரண்டுமாதங்கள் பாரீஸில் அவருடைய சகோதரர் வீட்டிலேதான் தங்கினோம். ஆரம்பத்திலே சின்னைசின்ன பிரச்சினைகள்னு ஆரம்பிச்சு, பிறகு எங்களை வெளியே போகச்சொல்லி அவர்கள் கதவைச் சாத்தும் அளவிற்கு வந்திட்டுது, என்னோட கணவர் மேலேயும் தப்பிருக்கு, அவர்கள் மேலேயும் தப்பிருக்கு. ஒரு நண்பர் இருக்கிறாரென்று சொல்லி ஸ்ட்ராஸ்பூர் அழைத்து வந்தார். திரும்பவும் பாரீஸ்மாதிரி பிரச்சினை வந்திடக்கூடாதென்று பார்க்கிறேன். எங்களுக்குத் தங்குவதற்கு இடமும், ஏதாவதொருவேலையும் ஏற்பாடு பண்ணணும்.

– உங்களுக்கென்று ஒரு ·பைல் போடணும், கொஞ்சம் பொறு, பேரு என்ன சொன்ன?

– பவானி

– உங்க கணவர் பேரு?

– தேவசகாயம்.

– குழந்தை?

– இரண்டு வயது ஆகுது, ஹரிணிண்ணு பேரு.

– நீ சொன்ன மற்ற தவல்களையெல்லாம் எழுதிக்கிறேன். உங்கக் கணவர் என்ன படிச்சிருக்கார், A.N.P.E(1).யில பதிஞ்சிருக்காரா?

– பதிஞ்சிருக்கார் இந்தியாவிலே தொழிற்கல்லூரியிலே படிச்சிருக்கார். கம்ப்யூட்டர் எஞ்சினீயர், ஆனா அதை இங்கே அங்கீகரிக்கலை, அவரும் தினந்தோறும் வேலைதேடி அலையறதும் ஏமாற்றத்தோடு திரும்பிவருவதுமாக இருக்கிறார்.

– இங்கே உங்க ஊர் படிப்பெல்லாம் சரிவராது, ஏதாவது உதவித்தொகையோடு கூடிய ஆறுமாதத்திலிருந்து ஒருவருடப் படிப்பென்று தொழிற்கல்வியெல்லாம் இங்க உண்டு, அதில் அவர் சேரலாம். அவர் அதை சமாளிப்பாரென்றே நினைக்கிறேன். நீங்களும் A.N.P.E. பதிவு செய்தாகணும், உங்களுக்கு ஏத்தமாதிரியும் ஏதாவது ஏற்பாடு செய்வாங்க. தங்குவதற்கு இரண்டொரு வாரங்களில் ஏதாவது ஆரம்பத்திலே தற்காலிகமாக அரசாங்கம் இது போன்ற அவசரத்திற்கென்று வாடகைக்கு எடுத்துவைத்திருக்கும் ஓட்டல் அறைகளில் இடம் இருக்கிறதா என்று பார்க்கிறேன், அதன்பிறகு H.L.M(2) கொஞ்சம் வசதியாகப் பார்த்துக்கொண்டு நீங்கள் போகலாம். அதுவரை உதவித்தொகைக்கும் ஏற்பாடும் பண்றேன்

– ரொம்ப நன்றிமேடம், அப்போ நான் புறப்படறேன் அதற்கு முன்னே ஒரு சந்தேகம், என்னை மாத்தா ஹரிண்ணு சொன்னீங்க.

– அவகூட நல்ல அழகு, உன்னைப்போல.. ஏன்?

– என் கணவர்கூட அப்படித்தான் நினைக்கிறார், அப்படித்தான் சில நேரங்களில் என்னைக் கூப்பிடவும் செய்கிறார்.

– எம்பேரு க்ரோ, என்னை க்ரோண்ணே கூப்பிடலாம்.

பவானி புறப்படும்போது க்ரோ கை நீட்டினாள். இவளும் புரிந்துகொண்டு அவள் கையைப் பிடித்து குலுக்கினாள். உள்ளங்கையில் மின்சாரும் பாய்ச்சும் வித்தையை க்ரோ அறிந்தவளாக இருந்தாள். வீடு திரும்பிய பின்னரும், அவள் ஏற்படுத்திய அதிர்வுகளில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

அதற்கு மறுவாரம் ஞாயிற்றுக் கிழமை, காலை எட்டுமணியிருக்கும் போன்வந்தது. பவானி போனை எடுக்க யோசித்தாள். வெளியிலிருந்து போன்வந்தால் தேவசகாயம் மட்டுமே ரிசீவரைத் தொடலாம் என்ற விதி அந்த வீட்டில் அமலிலிருந்தது. மூன்றாவது முறையாக தொலைபேசி அலறியதில் வந்தது வரட்டுமென்று பவானி போனை எடுத்தாள். மறுமுனையில் மதாம் க்ரோ.

– மதாம் பவானி?

– உய்..

– இங்கே மதாம் க்ரோ பேசறேன்.

– உங்க குரலைக் கேட்டவுடனே கண்டு பிடிச்சுட்டேன். என்ன விஷயம் சொல்லுங்க?

– உங்க வீட்டுக்கு வரணுமென்று நினைக்கிறேன்.

– அதற்கென்ன வாங்களேன், என்றைக்கு? எப்போ?

– இன்றைக்கு மாலை மூன்று மணிக்கு, உங்க கணவரோட வெளியிலே போகணுங்கிற திட்டம் ஏதாச்சுமிருக்கா?

– அதெல்லாம் ஒண்ணுமில்லை மேடம், நீங்க வாங்க..

ஞாயிற்று கிழமைகளில் பதினோரு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்திக்கிற வழக்கங்கொண்ட தேவசகாயத்திடம், மதாம் க்ரோ வீட்டுக்கு வருகின்ற செய்தியைச் சொன்னாள்.

– தேவா மாலை மூன்றுமணிக்கு மேடம் க்ரோ நம்ம வீட்டுக்கு வருவதாக சொல்லியிருக்காங்க.

– அதை ஏன் எங்கிட்டே சொல்ற

– முதன்முதல்ல நம்ம வீட்டுக்கு அவங்க வருகிறார்கள்னு சொன்னா, ரெண்டுபேரும் வீட்டிலிருக்கிறதுதான் மரியாதை. தவிர அவங்க நமக்கு உதவிபண்றேன்ணு வேற சொல்லியிருக்காங்க.

– அவ எதற்காக நம்ம வீட்டுக்கு வரணும், அவ வீட்டுப் பனத்தையா நமக்குத் தருமம் பண்றா. உனக்கு அக்கறை இருந்தா நீ வீட்டிலே இருந்து மேளதாளத்தோட வரவேற்பு கொடு, மூன்றுமணிக்கு குளோதோட ஒரு இடம் போகவேண்டியிருக்கு.

மூன்றுமணிக்கு க்ரோ வீட்டிற்கு வந்தபோது, பவானியும் குழந்தை ஹரிணியும் மாத்திரம் வீட்டில் இருந்தனர். கதவைத் திறந்த பவானிக்கு மூர்ச்சையாகாத குறை, வாயிலில் நின்றிருந்த க்ரோவின் இருகைகளிலும் சுமக்கமுடியாத அளவிற்குப் பரிசுபொருட்கள்: ·பிஷெர் பிரைஸ் டோரா இரட்டையர்பொம்மை, மட்டெல் சரக்கு வாகனம், வீ-டெக் டெலிபோன், லெகோ குட்டி விலங்குகள்.

– பவானி என்ன அப்படியே அசந்து நிண்ணுட்டீங்க, நான் உள்ளே வரவா வேண்டாமா?

– சாரி மேடம். சந்தோஷத்துலே எனக்கு என்ன செய்யறதுண்ணே புரியலை.

– ஒன்றும் செய்யவேண்டாம், எனக்கு முதலில் வழிவிடு, உள்ளே வறேன்.

(தொடரும்)
—————————————————————————————————
1. Agence Nationale Pour l’Emploi -வேலைவாய்ப்பு அலுவலகம்
2. Habitation a loyer modere – அரசாங்கத்தின் வாடகை குடியிருப்புகள்

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா