மாத்தா ஹரி -அத்தியாயம் – 34

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– என் பேர் பிலிப் பர்தோ, இப்போது ஞாபகம் வருதா. போன வாரத்தில் உனக்குக் கடிதங்கூட எழுதி இருந்தேனே.

– அடடே நீங்கதானா அது. முடிந்தால் இன்று மாலை இல்லைண்ணா, நா¨ளைக்கு இந்தியச் சினேகிதன் ஒருவனோடு உங்களைச் சந்திப்பதாக இருந்தேன். அதற்கு முன்னால உங்களுக்கு டெலிபோன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் எண்ணமும் இருந்தது. எங்க அலுவலகத்திலேயே உங்களைப் பார்ப்பேன் என்று நினைக்கலை.

– கமிலியை நேரில் பார்த்தும் பல வருடங்கள் ஆகுது. உண்மையில் ஒரு ஞானஸ்னான ·பங்ஷனுக்கு ஸ்ட்ராஸ்பூர் வரவேண்டியிருந்தது. அப்படியே இங்கே வந்துட்டுப் போகலாமேண்ணு நினைச்சேன். இன்றைக்கு எத்தனை மணிக்கு கொல்மார் திரும்புவேனென்று தெரியாது. முடிந்தா நாளைக்கு வரப்பாறேன். கமிலி! என்னை வழி அனுப்பவெல்லாம் வரவேண்டாம். நான் கிளம்பறேன்.

பிலிப் பர்தோ தள்ளுகதவைத் திறந்துகொண்டு வெளியேறும்வரை ஹரிணியும், கமிலியும் அமைதியாய் இருந்தார்கள்.

– பிலிப் பர்தோ உன்னுடைய அப்பாவா இருப்பாரென்று நான் எதிர்பார்க்கலை.

– அவர் உனக்கு ஏற்லனவே அறிமுகமானவராக இருப்பாரென்று நானும் நினைக்கலை.

– அது சரி நீ தப்பா நினைக்கலைண்ணா ஒன்று கேட்கலாமா?

– என்ன கேட்கபோறே? உண்மையில் எனக்கு எத்தனை அப்பாக்கள் என்று தெரிஞ்சுக்கணும் அதுதானே உன் கேள்வி.

– ஆமாம். என்னுடைய கணக்குப்படி இவர் மூன்றாவதுண்ணு நினைக்கிறேன். இதற்கு முன்னாலே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு ஒருத்தரை அப்படி அறிமுகப்படுத்தினதா ஞாபகம்..

– எங்க வீட்டுக்கு வந்தால் இன்னொருவரை அறிமுகப்படுத்துவேன்.

– தலையைச் சுத்துது. உன்னுடைய அப்பார்ட்மெண்ட்லே தனியாத்தானே உன்னைப் பார்த்திருக்கேன்?

– ஆமாம். அவர் உயிரோடு இல்லை. நீபார்த்திருக்க சந்தர்ப்பமில்லை. எங்கக் குடும்பப் போட்டோவிலே இருக்கிற அப்பா. முதல் மனைவி இருக்க, எங்க அம்மாவைத் திருமணம் செய்துகொண்ட வயதான அந்த நபர்தான் அரசாங்க ஆவணங்களில் அப்பாவா இருக்கிறார். அவர் இறந்தபிறகு அம்மா எங்களுக்குப் பிரச்சினைகள்ணு வந்தபோதெல்லாம்., என்னை அழைத்துக்கொண்டுபோய், இவள் உங்களுக்குப் பிறந்த பெண், நீங்கதான் ஏதாவது அவளுக்குச் செய்யணுமென்று, ஒன்றிரண்டு நபர்கள் முன்னால் கண்ணைக் கசக்கியிருக்கிறாள். அவர்களும் கேள்விகேட்பதில்லை. நம்பினார்கள். நல்லவேளை சம்பந்தப்பட்டவர்கள் எவருக்கும் உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரியாது. பலமுறை அம்மாவைக் கேட்டுப் பார்த்துட்டேன். என்னாலே எதையும் உறுதியா சொல்ல முடியலைண்ணு சொல்கிறபோது, அவமேலே கோபம் கொள்வதா, பரிதாபப் படுவதாண்ணு தெரியலை.

– இப்போதுதான் வேறு வழிகளெல்லாம் இருக்கிறதே. உண்மையை தெரிஞ்சுக்க விருப்பமில்லையா.

– தெரிஞ்சு என்ன செய்யப்போறேன்.

– ஒரு நாளைக்கு உயிரோடு இருக்கிற அப்பாக்கள் இரண்டுபேரையும் ஒன்றா சந்திக்கப்போறே.

– இரண்டுபேரும் இந்த ஊரில் இருக்கிறபோதே அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை. இப்போது ஒருத்தர் கொல்மார்ல இருக்கார். இன்னொருத்தர் பாரீஸ¤ல இருக்கார். என்னுடைய வளர்த்திக்கு இரண்டுபேரோட பணமும் உதவி இருக்கு, என்பதால அவங்களை நான் இன்னும் மறக்கலை. சந்திக்கிறநேரும்போது, அவர்களோட சில நேரங்களில் ரெஸ்ட்டாரெண்டுக்குப் போறேன், அவ்வளவுதான். ஸ்ஸ். அல்பர்ட்டோ வந்திருக்கான்.

– மத்மசல் ஹரினி.. கமிலி இரண்டு பேரும், மீட்டிங் ஹாலுக்கு வாங்க.

– அவசரமா?

– ஆமாம் ஆவசரம். உடனே வரணும், சொன்னவன் விடுவிடுவென வெளியேறி மறைந்தான்.

– கமிலி, என்ன மூடுல இருக்கான். முகத்தை என்னவோ உர்ண்ணு வச்சிருக்கான்.

– அவனுக்குச் சந்தோஷம் துக்கம் இரண்டுமே ஒண்ணுதான். இரண்டுக்கும் ஒரே முகம். காலையிலே உன்னை இரண்டு முறை தேடிட்டான். இப்போ என்னையும் கூப்பிட்டு இருக்கான். சரி கிளம்பு என்னண்ணு பார்த்துட்டு வந்திடுவோம்.

இருவரும் தங்கள் அலுவலக அறையினிந்று வெளிப்பட்டு, ஹாலை இணைக்கிற பொதுவழிக்கு வந்திருந்தார்கள். மீட்டிங் ஹாலுக்குச்செல்ல பிரதான வாயிலைக் கடந்து செல்லவேண்டும்., பிராதானவாயிலை ஒட்டியிருந்த ரிஷப்னிஸ்டு டெஸ்க் ஆளில்லாமல் இருந்தது. ஜெனி·பர் இல்லாதது ஆச்சரியம். வெளியிலிருந்து வருகிற வாடிக்கையாளர்கள், பார்வையாளர்களுக்கென்று போட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன. எதிரிலிருந்த குட்டை மேசையில் நைந்துபோன வார இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஹரிணியும், கமிலியும் பொது வழியில் தொடந்து நடந்தபோது, வலத்திலும், இடத்திலுமிருந்த பிற அறைகளிலிருந்தும் மற்றவர்களும் வெளிப்பட்டு ஹாலைநோக்கி நடக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்துசென்ற தோழியர் இருவரும் ஹாலுக்குள் நுழைந்திருந்தார்கள். கீரிம் வண்ணத்திலிருந்த சுவர், அதற்குப் பொருத்தமாக சன்னல்கள், உட் கூரையில் பொருத்தபட்டிருந்த மின் விளக்குகள் உமிழும் பிரகாசமான ஒளி, சுவர் வண்ணத்தில் கலந்து வித்தியாசமானதொரு ஒளிக்கலவையில் ஹாலை வைத்திருந்தது. சிரில், டேனியல், தாவீத், அல்பர்ட்டோ, என்று பெரியதலைகள் நடுவில் நின்றிருக்க அவர்களைச் சுற்றிலும் மற்றவர்கள். ஊழியர்களில் பலரும் இயல்பாகவோ, செயற்கையாகவோ மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஹால் முழுக்க இனிமை, நறுமணம், கணினி ஞானம்.

ஜெனி·பர் ஷாம்பெய்ன் பாட்டில்களை எடுத்துக்கொடுக்க உடைக்கப்படுகின்றன, கோப்பைகள் நிரப்பப்படுகின்றன. தொடர்ந்து டிங்.. டிங்..டிங்கென்ற ஓசைகள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குரல்கள். மாதத்திற்கு ஒரு முறை நடப்பதுதான். ‘டிராக்குலா.கம்’ நிறுவனத்தில் தவறாமல் ஏற்பாடு செய்யப்படுகிற கொண்டாட்டம். பிரான்சு டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட 150000 யூரோவுக்கான ஒப்பந்தத்திற்காக இருக்கலாம். பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்ணைக் கேட்டாள். உண்மைதான் சித்தமுன்னே சிரில் பேசினான். இந்த வருடம் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு நம்ம எல்லோருக்கும் பரிசுகள் காத்திருக்கிறதாம். நிறைய கொடுக்கலாம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கம்பெனியின் நிகரலாபம் மேல் நோக்கி ஊர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் டர்னோவர் 70மில்லியனிலிருந்து 525 மில்லியன் யூரோ என்று அக்கவுண்டெண்ட் கிறிஸ்டினா சொல்லியிருந்தாள். மேற் தளத்தில், டெல் நிறுவனம் அமைத்துக்கொடுத்திருந்த செர்வர்கள் எண்ணிக்கைப் போதவில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள், இருநூறு செர்வர்களையாவது கூடுதலாகச் சேர்க்க வேண்டுமாம். தரவுகள் 20 டிகிரி வெப்ப அளவீட்டில், கடுமையானப் பாதுகாப்பின்கீழ் இருக்கின்றன. தளத்தின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும். அல்லது அத்தனை செர்வர்களையும் இடம்மாற்றவேண்டும்.

– கொஞ்சம் அமைதியாய் இருக்கமுடியுமா? ஹரிணி கொஞ்சம் எல்லாருக்கும் முன்னால இங்கே வந்து நில்லுங்க. -சிரில்.

தன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை அறிவிக்க இருக்கிறான். அது நல்லதற்கா கெட்டதற்கா என்று யோசிக்கிறாள். தயங்கி நின்றவளை, கமிலி முன்னால் தள்ளினாள், ‘என்ன யோசனை. போயேன்’ – ஹரிணி அருகில் வந்ததும், சிரிநுடைய கை முன்னால் நீண்டது. இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள், தொடர்ந்து தோளைப்பிடித்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். மேசைமீதிருந்த பூங்கொத்தொன்றை கையிற் திணித்தான்.

– ஞாபகமிருக்கா, பிரான்சு டிஜிட்டல் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை நீதான் தாயரித்தாய். தவிர கூடிய சீக்கிரம் நம்ம கம்பெனிக்கு நிறைய புரொகிராமர்கள் இந்தியாவிலிருந்து வர இருக்காங்க. எனவே உன்னை அனாலிஸ்டாக ஆக்குவதென்று தீர்மானிச்சிருக்கோம். மகிழ்ச்சியா?

சுற்றி இருந்தவர்கள் கைத்தட்டினார்கள்.

– ஆக ஹரிணிக்காக ஒரு முறை சந்தோஷமாக ஷம்ப்பெய்ன் எடுப்போம்.

மீண்டும் கோப்பையை உயர்த்தினான். மறுபடியும் அங்கு கோப்பைகள் சிணுங்கின. சிரில், ஆல்பர்ட்டோ என தனது நன்றியைத் தனித்தனியாக பிரெஞ்சில் தெரிவித்துவிட்டு, தனது கோப்பையுடன் ஹரிணி கமிலியை நோக்கிச் செல்ல. சிரில் ஓடிவந்தான்.

– ஹரிணி இன்றைக்கு மாலை என்னுடைய அப்பார்ட்மெண்ட்டுக்கு வறே.

– மன்னிக்கணும் சிரில். எனக்கென்று திட்டங்கள் இருக்காதா. நாளைக்கு கொல்மார்வரைக்கும் போகணுமென்று லீவ் கேட்டிருந்தேனே ஞாபகமில்லையா?

– நீ முன்னப்போல இல்லை. அடிக்கடி ஆபீஸ¤க்கும் மட்டம்போடற. அல்பெர்ட்டோவை எப்படி சமாதானப் படுத்தறதுண்ணு தெரியலை. இந்த லட்சணத்தில உன்னை அனாலிஸ்ட்டா வேற புரோமோட் செஞ்சிருக்கிறேன்.

– ப்ளீஸ் சிரில்! கம்பெனி வெற்றியிலே சந்தோஷமா இருக்கிறப்போ தேவையில்லாம, மனசைக் குழப்பிக்காதே. என்னை அனாலிஸ்டா மாத்தினது நிர்வாக கமிட்டியின் முடிவுப்படிதானே? நீயும் அதிலே ஒருத்தன். அப் பதவிக்கு ஏற்றவளா நான் இருப்பேன். போதுமா?. இனி முன்னமாதிரி நீ கூப்பிட்டால்போதுமென்று வந்துபடுக்க நானும் தயாரில்லை. இரண்டுபேரும் ஒரு நாளைக்கு உட்கார்ந்து நிதானமாகப் பேசுவோம். இப்ப எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க. நான் புறப்படறேன்.

– ஓகே.. ஓகே. எதற்காக சத்தம்போட்டு பேசற. என்னுடைய அப்பார்ட்மெண்டுக்கு நான் கூப்பிட்ட வேறு காரணமிருக்கு. நம்ம கம்பெனியோடு சேர்ந்து வேலை செய்யணுமென்று ஒரு இந்தியக் கம்பெனி துடிக்குது. உலக அளவிலே வேகமா வளர்ந்து வர கம்பெனி. அவங்களோட சேர்ந்தா நம்ம கம்பெனியின் எதிர்காலமும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

– அதை ஏன் எங்கிட்டே சொல்ற. நம்ம கம்பெனி போர்டு முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

– அதற்கு இடைத் தரகரா இருக்கிற ஆளின் எதிர்பார்ப்பு வேற மாதிரியா இருக்கு. பைத்தியக்காரன்.

– பெண்கள் கேட்கிறானா? அதாவது இந்தியா வம்சாவளிப்பெண்கள்,சரியா?

– எதுவுமில்லை, கேட்டிருந்தால் ஏற்பாடு பண்ணிடலாம், .ஒன்றிரண்டு இலட்சம் யூரோ பணமாகக் கேட்டால்கூட கொடுத்திடலாம். இப்படிப்பட்ட செலவுகளுக்கென்றே, நம்ம கம்பெனியில் தனி அக்கவுண்ட் இருக்கிறது.

– வேறென்னதான் கேட்கிறான். புதிர்போடாமச் சொல்லு.

– மாத்தா ஹரியோட மண்டையோட்டைப் பத்தின தகவல் வேணுமாம். உனக்குத் தெரியும் என்கிறான்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா