குரல்செல்வன்
அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு சமையலறையில் இருந்த சாமி வாசல் வரை வந்து முன் கதவைத் திறந்தான். நிக்கலஸ் ரொமானோவின் கையில் இருந்த ஐ-பாட்தான் முதலில் அவன் கண்ணி;ல் பட்டது. அன்று காலையில்தான் அது பற்றிய பேச்சு நிகழ்ந்தது.
சரவணப்ரியாவும் அவனும் நடந்து செல்லும் போது ஐ-பாடில் பாட்டை ரசித்த படி வெளி உலகை மறந்து ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண் எதிர்ப் பட்டாள்.
“எல்லாரையும் போல நீயும் ஐ-பாடிலே பாட்டு கேட்டா எக்சர்சைஸ் செய்யரப்போ அலுப்பா இராது” என்று சரவணப்ரியா சொன்னாள். அவனை உடற் பயிற்சி செய்ய வைக்கும் வேலை அவளுக்குச் சுலபமாகிவிடும் என்கிற நம்பிக்கை போலிருக்கிறது.
“ஐ-பாட் அப்படின்னா சும்மாவா? அதிலே ஒரு எட்டு மாடல் இருக்கும். எது வாங்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். அப்படியே வாங்கி நான் அதை எப்படி உபயோகிக்கறதுன்னு கத்துக்கறதுக்குள்ள புதுசா வேற ஏதாவது வந்துடும்.”
“சூரன்தான் ஊரிலே இருந்து வந்திருக்கானே, அவன் கத்துக் கொடுப்பான். நான் பாத்து உனக்கு ஏத்ததா ஒண்ணு வாங்கித் தரேன்.”
“அதுவும் சரி. உனக்குத்தான் நல்லா பார்கெய்ன் செய்யத் தெரியும்.”
“ஹாய் நிக்! உள்ளே வா!” பரந்த முகத்தில்; சிரிப்புடன் நிக்கலஸ் உள்ளே நுழைந்தான். சுருண்டு விரிந்த அவன் தலைமயிரைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ் சினிமா நடிகன்தான் நினைவுக்கு வரும்.
“கன்கிராஜூலே~ன்ஸ் நிக்! மூன்றரை ஆண்டுகளிலேயே உன் கல்;;லூரிப் படிப்பை முடித்து விட்டாயே.”
“தாங்க்ஸ்! மிஸ்டர் சாம்! என் அப்பா கடைசி செமிஸ்டருக்கான செலவை மிச்சம் பிடிக்கட்டும் என்றுதான்.” நின்றபடியே காலணிகளைக் கழற்றினான்.
ஆறு மாதங்களுக்கு முன் நிக்கலஸின் தந்தை ஜோசப்பை ஒரு கடையில் பார்த்துப் பேசிய போது அவன், “நிக் படிப்பை முடித்தவுடன் என் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக இருக்கிறேன். முன் போல் என்னால் அடிக்கடி பிரயாணம் மேற் கொள்ள முடிவதில்லை. நிக் வெளி வேலைகளைக் கவனித்துக் கொண்டால் எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது. “வேலை எப்படி இருக்கிறது?”
“எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த மூன்று மாதங்களில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். வகுப்பில் படித்ததற்கும் நிஜ வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்.”
மாடியிலிருந்து சூரன் இறங்கி வந்தான். “ஹாய்! நிக்!”
“ஹாய்! சூரன்!”
“நீங்கள் மாடியில் பத்து நிமிடம் பிங் பாங் ஆடுங்கள். அதற்குள் பூரி தயாராகி விடும்.” பூரி மசாலா என்று சொன்னால் போதும். நிக்கலஸ் வாசலில் வந்து நிற்பான். இன்றும் அப்படித்தான். காலையில் சர்ச்சுக்குச் செல்லும் கடமையை முடித்து விட்டு மதிய உணவிற்கு வந்து விட்டான். நேற்று சனிக்கிழமை ஸ்ப்ரிங் ப்ரேக்கிற்காக வீட்டிற்கு வந்த சூரனும், நிக்கும் பழைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு வந்து பள்ளியில் சேர்ந்தவுடன் சூரன் முதலில் சந்தித்த பையன் நிக்கலஸ் ரொமானோ. அடுத்த நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து படித்தார்கள். பிறகு நிக்கலஸ் ஒரு கத்தோலிக்க உயர் பள்ளிக்குச் சென்ற பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது.
“எண்ணெய் காஞ்சிடிச்சி” என்று சாரவணப்ரியா அழைக்கவே சாமி அடுப்பின் பக்கம் சென்று அவள் இட்டு வைத்திருந்த வட்டுக்களைப் பொரிக்கத் தொடங்;கினான்.
மாடிப் படியின் பக்கத்தில் நின்று, “பூரி ஈஸ் ரெடி” என்று அவள் அழைத்தாள். தப தப என்று சத்தம். “ஹாய் மிசஸ் நேதன்!”
“ஹாய் நிக்! நீ உன் வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போகிறாய் என்று கேள்விப் பட்டேனே.”
“சூரன் சொன்னது சரிதான். அதற்காக இன்று என் வீட்டின் அடித் தளத்தைச் சுத்தம் செய்தேன்.”
“வாடகை இல்லாத குடி இருப்பு. வேளா வேளைக்கு அம்மாவின் சாப்பாடு. வாங்குகிற சம்பளத்தை அப்படியே பேங்க்கில் போடு” என்று அவனைக் கேலி செய்தாள்.
சூரன் ஒரு தட்டில் ஒரு கரண்டி மசாலாவும், இரண்டு பூரிகளும் வைத்து கடவுள் படங்களுக்கு முன் வைத்து வணங்கி விட்டு சாப்பாட்டு மேஜையில் நிக்கலஸின் முன் வைத்தான். அவன் உட்கார்ந்த பிறகு அவனுக்குச் சரவணப்ரியா பரிமாறினாள்.
“நிக்! சென்ற திங்கள் சூரனின் பிறந்த நாள். அதற்காக செய்த கேக்கில் ஒரு துண்டு வைத்திருக்கிறேன். படிப்பை முடித்த உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்றுதான் தெரியவில்லை.”
“பத்து முறை இந்த மாதிரி எனக்குப் பூரி மசாலா செய்து கொடுத்தால் போதும்.”
நிக்கலஸ் காலணிகளை அணிந்து வெளியே செல்லத் தயாரானான்.
“இதில் சில பூரிகளும், கொஞ்சம் மசாலாவும் இருக்கின்றன” என்று சரவணப்ரியா ஒரு காகிதப் பையை அவனிடம் கொடுத்தாள்.
“பூரிக்கு நன்றி! நான் வீட்டிற்குச் சென்று என் அப்பாவை அழைத்து வருகிறேன்”
அவன் அகன்றவுடன் வெளியில் சென்று பிரகாசமான சூரிய ஒளியையும், உடலில் வெம்மை பூசிய மென்காற்றையும், மேகங்களற்ற நீல வானத்தையும் அனுவித்த சரவணப்ரியா, “கால்ஃப் விளையாட மிகப் பொருத்தமான நேரம்தான்” என்றாள். சட்டை மாற்றிக் கொள்ள சாமி மாடிக்கு வந்தான். சூரனின் அறையைத் தாண்டும் போது படுக்கை மேல் கிடந்த ஐ-பாட் அவன் கண்ணில் பட்டது. கையகலத் திரை, அதற்குக் கீழே ஒரு சக்கரம். கண்ணைக் கவரும் சிவப்பு நிறம். பக்கத்தில் அதற்குத் துணையாகப் பல உபரிகள். நிக்கலஸ் கொண்டு வந்தது மாதிரி இருக்கிறதே. கால்ஃப் க்ளப் வைத்த பையைத் தோளில் சுமந்தபடி வந்த சூரனிடம், “சூரன்! நிக் அவனுடைய ஐ-பாடை மறந்து வைத்து விட்டான் போலிருக்கிறதே. அவன் திரும்பி வரும்போது அவனிடம் கொடுத்து விடலாம்” என்றான்.
“நோ டாட்! அதை நிக் எனக்காக வைத்து விட்டுப் போயிருக்கிறான்.”
“அப்படியா? அதை எப்படி இயக்குவது என்று உனக்குத் தெரிந்த பிறகு எனக்கும் கற்றுக் கொடு. ஐ-பாட் தெரியாத கற்கால மனிதன் நான்.”
ஜோசஃப் ரொமானோ அவனுடைய பெரிய காரை ஓட்டி வந்தான். “ஹாய் நேதன்ஸ்!”
“ஹாய் ஜோ!” அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த நிக்கலஸ் இறங்கி பின் இருக்கைக்குச்; சென்றான். கால்ஃப் பையை வண்டியின் பின்னால் வைத்து விட்டு சூரன் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டான். சாமி முன்னால் அமர வண்டி நகர்ந்தது.
“சாம்! உன் வேலை எப்படி போகிறது?”
“நீ தேர்ந்தெடுத்த தற்குறித் தலைவன் இருக்கும் வரை அறிவு நிரம்பிய விஞ்ஞானியான எனக்கு என்ன குறை?”
“நீ என்ன புலம்பினாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவனை அசைக்க முடியாது.”
“உன் வியாபாரம் எப்படி?” என்று சாமி ஜோசஃப்பைத் திருப்பிக் கேட்டான். அவனுடைய நகைச்சுவை கலந்த பேச்சும், உற்சாகமான நடத்தையும் தாம் அவன் தொழிலின் மூலதனங்கள் என்பது அவன் எண்ணம்.
“நன்றாகத்தான் போகிறது. புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் அஸ்ஸோ~pயட் தான் உருப்படி இல்லை.”
“அவனைப் பற்றி நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் எப்படி?”
“அதை ஏன் கேட்கிறாய். சுத்த உதவாக்கரை. ஒரு வேலையும்; முழுக்க செய்வதில்லை. கம்பெனியின் காசைத் தண்;டம் பண்ணுவதில்தான் சாமர்த்தியம். இந்த லட்சணத்திலே சம்பளம் போதவில்லை என்று அடிக்கடி முனகுகிறான்.”
“செய்ன்ட் ஆந்தொனி நல்ல யூனிவெர்சிடி ஆயிற்றே. அதில் படித்தவனா இப்படி இருக்;கிறான்?”
“இவன் சேருவதற்கு முன்னால் ஒரு வேளை அதற்கு நல்ல பெயர் இருந்திருக்கலாம்.”
“ஒரு செமிஸ்டர் முன்னாடியே படிப்பை முடித்திருக்கிறான், புத்திசாலியாக இருப்பான் என்று நினைத்தேனே.”
“நீ ஒண்ணு. மூன்றரை வரு~ம் அவன் மண்டையிலே எதையும் புகுத்த முடியாமல்; அவன் தொலைந்தால் போதும் என்று டிகிரியைக் கையில் கொடுத்து வெளியே தள்ளிவிட்டார்கள்.”
“இப்போதுதானே வேலையை ஆரம்பித்திருக்கிறான். போகப் போக முன்னேறி விடுவான்.”
“இந்த கதியில் அவன் முன்னேறினால் அவன் உருப்படுவதற்குள் மிச்சம் இருக்கும் தலை மயிரும் உதிர்ந்து விடும்” என்று ஜோசஃப் பின் தலையைத் தடவிக் கொண்டான்.
“அவனிடம் ஒரு நல்ல குணம் கூடவா இல்லை?”
“இருக்கிறதே. வேலை நேரத்தில் கால்ஃப் விளையாடச் சொல். ஆள் எப்போதும் தயார்.”
நிக்கலஸ_ம் சூரனும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு ஓய்ந்த பிறகு சாமி பின் பக்கம் திரும்பினான்.
“நிக்! உன் புது பாஸ் எப்படி?”
“மிஸ்டர் சாம்! நீங்கள் கேட்டதற்கு மிகவும் நன்றி. இப்படிப் பட்டி கொடுமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. என் வேலையில் எனக்கு முன்னால் யாரும் அதிக நாள் இருந்ததில்லை. அது ஏன் என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.”
“ஒரு வேளை அந்த ஆள் முன் ஜென்மத்தில் அடிமைகளை மேய்ப்பவனாக இருந்திருப்பானோ?”
“அதில் சந்தேகமே இல்லை. இந்த மூன்று மாதத்தில் இன்னும் ஒரு நாள் கூட நான் ஓய்வு எடுக்க வில்லை. சனி ஞாயிறுகளில் கூட க்ளப் பிடிக்கத் தெரியாத வாடிக்கைக் காரர்களுடன் கால்ஃப் விளையாட வேண்டி இருக்கிறது.”
“எப்படி சம்பளம் கொடுக்கிறான்?”
“மணி கணக்குப்படி பார்த்தால் இரண்டு டாலர் கூடத் தேராது. வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி கிடையாது. அந்த ஆள் முகத்தில்தான் விழிக்க வேண்டும். அங்கேயும் அவனைக் கூப்பிட்டாயா? வெப் சைட் போட்டாயா? என்று வேலை வாங்குகிறான்.”
“இப்போதுதான் படித்து முடித்திருக்கிறாய். இந்த பாஸிடம் வியாபாரத்தின் எல்லா நெளிவு சுளிவுகளும் கற்றுக் கொண்ட பிறகு வேறு நல்ல வேலை கிடைத்தால் போய் விடு.”
“மிஸ்டர் சாம்! நானும் அந்த நம்பிக்கையில்தான் அந்த ஆளுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.”
பிறகு பேச்சு கல்லூரி கூடைப் பந்து போட்டிகளுக்குத் தாவியது. “பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்ன்ட் ஆந்தொனி பளே-ஆஃப்ஸ் போயிருக்கிறதே.”
“நிக் இல்லாததால் அவர்களுக்கு அதிரு~;டம் அடித்திருக்கிறது” என்றான் ஜோசஃப்.
டாம் வாட்சன் கால்ஃப் கோர்ஸ_க்குள் நுழைந்து கார் நின்றது. சென்ற வாரம் வரை இறுக்கிய குளிரும் மழையும் அகன்று வெய்யிலின் வெம்மை வந்ததால் எங்கு பார்த்தாலும் கால்ஃப் பைகளை;. தோள்களில் சவாரி செய்தன, வண்டிகளில் இழுக்கப் பட்டன, புல்; வெளியின் ஓரங்களில் சாய்ந்து நின்றன. காரிலிருந்து இறங்கிய ஜோசஃப்பைப் பார்த்து ஒருவர், “மின்சார வண்டி கிடைக்க இன்னும் அரை மணி ஆகலாம்” என்றார்.
“அது வரையில் பயிற்சிக்காகப் பந்துகளை அடித்தால் போயிற்று. நான் கால்ஃப் கிளப்பைத் தொட்டு பல காலமாகிறது” என்றான் சூரன்.
“சாம்! நீயும் எங்களுடன் விளையாடுகிறாயா?”
“வேண்டாம். அப்புறம் நீங்கள் ஆடும் போது சண்டை போட்டுக் கொண்டால் யார் சமரசம் செய்து வைப்பது?”
சாமி வெளியே காத்திருக்க மற்ற மூவரும் கடைக்குள் சென்று ஆளுக்கொரு கூடை பந்துகளை வாங்கி வந்தார்கள். நீண்ட களத்திற்குச் சென்று எல்லா பந்துகளையும் தொலை தூரத்திற்கு அடித்தார்கள். அவற்றை ஒரு வண்டி வாரிக் கொண்டு போயிற்று. பிறகு பயிற்சிக்காக அமைக்கப் பட்ட புல் தரையின் அருகில் கால்ஃப் பைகளைச் சாய்த்துவிட்டு மூவரும் பட்டர்களை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். பந்துகளைத் தரையில் வைத்து அவற்றை அங்கிருந்த பல குழிகளுக்குள் தள்ள முயற்சி செய்தார்கள்.
“கால்ஃப் கோர்ஸ_க்குப் போகலாமா?”
அப்போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு இளம் பெண்ணின் ஹால்டர்-டாப் அவளுடைய பரிமாணத்திற்கு இரண்டு அளவு குறைவாக இருந்ததைப் பல கண்கள் கவனித்து ரசித்தன.
“சூர்! அவளைக் கவனித்தாயா?” என்று ஜோசஃப் கேட்டான்.
“அவளைப் பார்த்தேனே. அவள் கையில் கட்டிய ஐ-பாடில் பாட்டு கேட்டுக் கொண்டு போகிறாள்.”
“நான் அதைக் கேட்கவில்லை. நீ பதில் சொல்வதற்கு முன் உனக்கு இருபத்தி இரண்டு வயது முடிந்து விட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள். உன் அப்பாவிற்கு இனிமேல் நீ பயப்படத் தேவையில்லை.”
“சூரனுக்கு என்னிடம் என்ன பயம்?” என்று சாமி குறுக்கிட்டான். “நீதான் அந்தப் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நீ ஏதாவது தாறுமாறாகச் சொல்லப் போக அதை, உன் கம்பெனியில் புதிதாக சேர்ந்திருக்கிறானே, அவன் கேட்டுக் கொண்டு போய் உன் பெரிய பாஸிடம் சொல்லிவிடுவான். ஜாக்கிரதை!”
“நிக்! நான் அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது சொன்னால் அதை நீ உன் அம்மாவிடம் போய் சொல்வாயா?”
“நிச்சயமாகச் சொல்ல மாட்டேன்.”
“சாம்! என் பையன் எப்படி?” என்றான் ஜோசஃப் பெருமிதத்துடன்.
“ஆனால் பாஸ்! அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தில் ஒரு நூறு டாலர் சேர்த்துவிடு.”
“அடப் பாவி!”
“பாஸின் ரகசியங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது தக்க சமயத்தில் உதவும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.”
“அப்படியா சேதி? அடுத்த முறை செயின்ட் ஆந்தொனி பணம் கேட்கட்டும், அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“ஜோ! அவன் போகட்டும். அந்தப் பெண்ணின் ஐ-பாட் சூரனின் கண்ணில் பட்டதற்குக் காரணம் அவனுக்கே இன்று ஒரு ஐ-பாட் பரிசாக கிடைத்திருக்கிறது.”
ஜோசஃப் தலையை இரு பக்கமும் அசைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினான். “நீ செய்தது சரியில்லை சாம்! நிக்கைப் போல மூன்று தறுதலைகளை வளர்த்த அனுபவத்தில் சொல்கிறேன். நீ அவன் மே மாதம் படித்து முடிக்கிற வரையில் காத்திருந்து அப்புறமாக அந்தப் பரிசை அவனுக்குக் கொடுத்திருக்கலாம்.”
“நான் கொடுக்கவில்லை. நிக்தான் கொடுத்திருக்கிறான்.”
“நிக்! நீதான் ஐ-பாடை சூரனுக்குக் கொடுத்தாயா?”
“யெஸ் பாப். ஆனால் அது பரிசாக அல்ல. பள்ளியில் நான் ஜூனியராக இருக்கும் போது சூரன் சிலுவை போட்ட இந்த மாலையைக் கொடுத்தான்.” அவன் சட்டைக்குள்ளிருந்து எடுத்த மாலை கடந்து விட்ட காலத்தைக் காட்டியது. கறுப்புக் கயிறு சில இடங்களில் நைந்து போயிருந்தது. மிகத் தொன்மையான வெண்கலத்தின் பொலிவோடு விளங்கிய சிலுவை இளவேனிலின் புத்தம் புதிய வெயிலில் ஒளி வீசியது. “இதற்குப் பதிலாக அவனுக்கு ஏதாவது திருப்பித் தர வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இப்போதுதான் அது முடிந்தது.”
சிலுவை மாலையைப் பார்த்த போது சாமிக்கு எப்போதும் சிரித்த முகத்திலேயே தோன்றும் நிக்கலஸ் ஒரு முறை கவலைச் சுருக்கங்களோடு இருந்தது நினைவுக்கு வந்தது. வரவேற்பு அறையில் நடந்த உரையாடல் பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்;த அவன் காதில் தெளிவாக விழுந்தது.
“சூரன்! நீ இந்தியாவிலிருந்து எடுத்து வந்த சிலுவை மாலைக்கு மிகவும் நன்றி.”
“நிக்! அது ஒன்றும் பெரிதில்லை.”
“நேற்று நான் பயிற்சிக்காக எஸ்ஏடி எழுதிப் பார்த்தேன். மொழியில் அவ்வளவு மோசமில்லை. ஆனால் கணக்கில் இருபதுதான் சரியாக இருந்தது. அல்ஜூப்ரா முழுக்க ஒன்று கூட எனக்குப் புரியவில்லை.”
“உனக்குப் படித்ததெல்லாம் மறந்து போயிருக்கலாம்.”
“படித்தால்தானே மறப்பதற்கு. எனக்கு அல்ஜூப்ரா மட்டும் கற்றுத் தருவாயா?”
“நிச்சயமாக. நீ நினைக்கிற படி அல்ஜூப்ரா அவ்வளவு க~;டமில்லை. அது முழுக்க நீ சரியாகச் செய்தால் கணக்கில் எழுனூறு வாங்கி விடலாம்.”
“அப்போது எனக்கு நாட்ர் டேமில் இடம் கிடைக்குமா?”
“சாரி நிக். அதற்கு உன் சராசரி க்ரேடு போதாது.”
“உயர்நிலைப் பள்ளியில் இந்த இரண்டரை ஆண்டுகளும் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை.”
“நான் சொல்கிறேன். உன் சிரிப்புப் பேச்சில் மயங்கிய அழகிய பெண்கள், ரொமானோவை ரோமியோ என்று நினைத்துக் கொண்ட அசட்டுப் பெண்கள்…”
“சரி! சரி! இனி பெண்கள் பக்கமே நான் பார்க்க மாட்டேன்.”
“நாட்ர் டேம் இல்லாவிட்டால் என்ன? சேவியர், செய்ன்ட் ஆந்தொனி என்று பல நல்ல கத்தோலிக்க பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் உனக்கு இடம் கிடைக்கும். என்ன மேஜர் படிக்கப் போகிறாய்?”
“பிசினெஸ். அது படித்தால் என் அப்பாவுக்கு உதவி செய்யலாம்.”
“அதற்கு செய்ன்ட் ஆந்தொனி நல்ல இடம்.”
“அதில் அட்மி~ன் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?”
“உன் ஜிபிஏ மூன்றைத் தாண்ட வேண்டும். இன்று பூரி சாப்பிட்ட பிறகு அல்ஜூப்ரா தொடங்கலாம்.”
“நாளையிலிருந்து ஆரம்பிக்கலாமா? இன்று ஜெசிகாவிடம் மாலில் சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்.”
“நோ! நிக்ட்! நாடா! இன்றிலிருந்து.”
“நான் உன்னை மிக நெருங்கிய நண்பன் என்று நினைத்திருந்தேனே.”
“அதனால்தான் அப்படி சொல்கிறேன்.”
ஜோசப்பின் உரத்த குரல் சாமியை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது. “சாம்! அந்த மாலைக்கு எவ்வளவு காசு கொடுத்தாய்?”
“விலை கொடுத்து நான் வாங்கவில்லை. சாராவுக்கு இந்தியாவில் ஒரு கத்தோலிக்க சினேகிதி இருக்கிறாள். அவள் தந்தது. அதை நிக் விரும்பி அணிந்து கொள்வான் என்று சூரன் முடிவு செய்து அவனிடம் கொடுத்தான்.”
“அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்?”
“டாலரில் சொல்வதென்றால் மூன்றுக்கும் குறைவு” என்று மெதுவாகச் சொன்னான்.
ஜோசஃப் நிக்கலஸின் எதிரில் நின்று கடுமையான குரலில், “மூன்று டாலர் கூடப் பெருமானம் இல்லாத இந்த மாலைக்குப் பதிலாக முன்னூறு டாலர்; விலையுள்ள ஐ-பாட் கொடுத்தாயா?” என்று கேட்டான்.
“யெஸ்! பாப்!”
“மொத்தம் எண்பதாயிரம் டாலர் செலவழித்து உன்னை செய்ன்ட்; ஆந்தொனியில் பிசினஸ் படிக்க வைத்தது இதற்குத்தானா?”
நிக்கலஸ் மௌனம் சாதித்தான்.
திடீரென ஜோசப்பின் குரலில் ஒரு குழைவு. நிக்கலஸின் அருகில் சென்று அவன் கையைப் பற்றிக் கொண்டான். “இவ்வளவு நல்ல பார்கெய்ன் உனக்குச் செய்யத் தெரியும் என்று நான் நினைக்கவே இல்லை, நிக்! ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையில் மட்டும் அடங்கிவிடாது என்று உனக்குக் கற்றுக் கொடுத்த செயின்ட் ஆந்;தொனி அடுத்த முறை பணம் கேட்டால் ஒரு பெரிய செக் எழுத வேண்டும். வியாபாரத்தில் அபார திறமை உள்ள உனக்கு அஸ்ஸோ~pயேட் வேலை பொருத்தம் இல்லை. மற்றவர்கள் உன்னை என்னிடமிருந்த பறிப்பதற்கு முன்னால் நானே உனக்குப் பதவி உயர்வு தரப் போகிறேன்.”
“அப்படி யென்றால் நான் கம்பெனியின் வைஸ் பிரசிடென்ட் ஆகப் போகிறேனா?” என்று நிக்கலஸ் சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஆமாம்! அது உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று ஜோசஃப்பும் அட்டகாசச் சிரிப்புடன் பதில் சொன்னான்.
இது வரை அவர்கள் இருவரையும் வியப்புடன் பார்த்து வந்த சாமி, சூரன் முகங்களிலும் புன்னகை படர்ந்தது.
(venkataraman.amarnath@vanderbilt.edu)
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23