கை நழுவிய உலகம்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

தாஜ்



‘பைத்தியக்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அதிகத்திற்கு அதிகமாக சிரிப்பார்கள், கத்துவார்கள், புலம்பு வார்கள், தனக்குத்தானே பேசுவார்கள், அடிக்கவரும் பாவனை செய்வார்கள், சில நேரம் கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக் கவும் செய்வார்கள். நாமும் சில பல நேரங்களில் இத்தனையும் செய்பவர்களாகவே இருக்கிறோம்! இதில் என்ன பெரிய வித்தியா சம் என்றால், நாம் செய்யும் அத்தனை அதீதத்துக்கும் காரணம் காரியம் சொல்லிவிடுவோம். சிரிப்பதற்கு ஒரு காரணம், அழுவ தற்கு ஒரு காரணம், பொண்டாட்டியிடம் பணிந்து போவதற்கும் கூட ஒரு காரணம் என்று! தனித்தனியே நமக்கு ‘ஒடுக்கத்தியக்’ காரணங்கள் பல இருந்துக் கொண்டே இருக்கும். பைத்தியமானவர்களிடம் அது சாத்தியமில்லை. தங்களது எந்த ஒரு செய்கை க்கும் அவர்களால் விளக்கம் சொல்லத் தெரியாது!’ – இது என்னுடைய நோக்கின் கண்டெடுப்பல்ல; பிரபல எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையில் எப்பவோ படித்திருந்த ஞாபகத்தின் பதிவு. அதை அப்படியே பதிந்திருக்கிறேன். அட்சர சுத்தமாக பதிந்திருக்கி றேன் என்றும் சொல்லிவிட முடியாது. அவர் எழுதியிருந்ததின் சாரம் நிச்சயம் இந்த வரிகளில் உண்டு.

என் ஞாபகம் இப்பவெல்லாம் அத்தனை பலமானதாக இல்லை. எல்லாவற்றையும் மறந்து தொலைத்து விடுகிறேன். வலிய அதை
நினைவுக்கு இழுத்து வரும்போதெல்லாம் அதன் அடுக்குகள் கலைந்து போகின்றன. யோசிக்க யோசிக்க இதற்கு காரணங்கள் என்று எதுவும் பிடிபடவில்லை. சிலர் சொல்கிறமாதிரி தலைக்கு ‘டை’ அடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நான் பயணிக்கும் கரடு முரடான பாதைகளில் பல தடவைகள் தடுக்கி விழுகிறேன். அது தரும் சிராய்ப்புகளின் வலி அதிகம். அதைப் பொறுத்துக் கொள்கிறபோது எழும் மன அழுத்தம் இப்படிப் பாதிக்கும் என்கிறார்கள்! தவிர, அந்தப் பாதையில் ஓரிரு முறை குப்புற விழ நேர்ந்ததில் நெத்திப் பொட்டில் அடி! சித்தம் பேதலிக்கிற அளவுக்கு! இதெல்லாம்கூட காரணமாக இருந்திருக்க
லாமோ என்னவோ! ஞாபக மறதியைத் தொடர்ந்து, இப்பொழுது என் செயல்பாட்டில் சரளமாக அதீதங்கள் தெரிவதாகச் சொல்கி றார்கள்.”இரவில் படித்துக் கொண்டிருந்தபோது ஏன் அப்படி சிரித்தீர்கள்? தூங்கும்போது யாரிடம் பேசுகிறீர்கள்?” என்று மனை வியோ, மகளோ கேட்டால் பதில் சொல்லத் தெரிவதில்லை.

புத்தகங்களை படிக்கும்போது சில நேரம் வாய்விட்டு சிரிப்பது உண்டுதான். என்னடா இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்பதற்காக அல்ல! அதற்காகவெல்லாம் சிரிக்கனும் என்றால் முடிகிற காரியமில்லை! தேர்ந்த படைப்பாளிகளின் வித்தைக் கொண்ட வார்த்தைகள், வாசிப்பின் ஆழத்தில் எங்கெங்கோ குத்தி வெடிக்கும்போது கிளைக்கும் சிரிப்பு அது. இந்த விளக்கத்தை மனை வியிடமோ மகளிடமோ இப்படிச் சொல்ல முடியுமா? இப்பவே என் மீது ஒரு மாதிரி யோசனையில் இருக்கிறார்கள். தூக்கத்தில் யாருடன் என்ன பேசினேன் என்று தெரியவில்லை. நல்ல பகல் பொழுதில் சந்திப்பவர்களிடம் பேசும் எல்லாமும் மறந்து போகும் நிலையில் இதற்கெல்லாம் கவலைப்பட முடியாது.

யாசிக்க வருகிற முஸாஃபர்களிடம் யாசகம் இடும் வேளையில், மனித நேயத்தோடு இரண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு. இது எனக்கு ரொம்பகாலப் பழக்கம். இப்பொழுது அப்படி அவர்களிடம் பேசுவதும்கூட என் மனைவிக்கு தப்பாகப் போகிறது. நேற்று ஒரு பெண் முஸாஃபரிடம், “இரவுகளில் அங்கே இங்கே படுத்துக்கிடக்கிறீங்களே… இப்பொழுது குளிர் காலமாச்சே எப்படி சமாளிக்கிறீங்க?” என்று கேட்டேன். அவள் கிலுக்கென்று சிரித்து வெட்கம் சிந்திப் போய்விட்டாள். இத்தனைக்கும் அவளுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். இதை கவனித்து விட்ட மனைவி, “நீங்க என்ன கேட்கிறீங்க…, அவள் என்ன செய்துட்டுப் போறா பார்த்தீங்களா? கதவைத் திறந்தோமா.. காசு போட்டோமான்னு இல்லாமே என்ன வேண்டிக்கிடக்கு அவள்டலாம் பேச்சு!” என்றவள் கொஞ்சம் தள்ளிப் போய், “இந்த மனுஷனுக்கு பைத்தியம் புடுச்சிடுச்சுப் போலிருக்கு!”என்று முனங்கினாள்.

நான் எங்கே போய் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெளிவாகவே தெரிந்தது. என் மனைவி ஒன்றை உறுதி செய்து விட்டால்
நிச்சயம் அதை சாதிக்காமல் விடமாட்டாள். வாழ்வின் நகர்வுகள் நேர்த்தியாக இயங்குவதாகவே பட்டது. யாருக்கும் பதில் சொல் லத் தேவையில்லாத உச்சம் கிட்டப்போகிறது! சுதந்திரப் பறவை மாதிரி வலம் வர இன்னொரு உலகத்திற்கு விசா கிடைக்கப்போ கிறது!

என் ஊரில் எனக்குத் தெரிந்து நான்கு பைத்தியங்கள் வீதிகளில் எப்பவும் ஆஜர். அது இல்லாமல், அவ்வப்போது மணிக்கூண் டுப் பக்கம், பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் தென்படும் இப்படியான சிலர், ஓரிரு நாட்களுக்குப் பின் தென்பட மாட்டார்கள். பின் னர் எப்பவாவது அவர்களை அந்த அழகில் அந்த இடங்களிலேயே பார்ப்பதும் உண்டு.

நல்ல உடுப்பில் அவர்களைப் பார்க்க லெட்சணமாகவும், செய்கைகளில் மிடுக்கும் இருக்கும். பெரும்பாலும் உயர் தர வகைச் சேட்டைகளைத்தான் செய்வார்கள்.ரோட்டில் கூட்டத்தை சரி செய்வது, டிராஃபிக் நெரிசலில் பஸ்களுக்கு வழியேற்படுத்திக் கொடு ப்பது, சாலை சந்தில் நின்று, கைகளை நீட்டியும் மடக்கியும், வலது புறமாக அனுமதி தந்து, பின்னர் இடது புறத்திகு அனுமதியை மாற்றி…. தேர்ந்த ட்டிராஃபிக் கான்ஸ்டபிளை விட நேர்த்தியாக செயல் படுவது. பெரிய கடைகளின் பிளாட்ஃபாரத்தை பெருக் கித்தருவது என்பதாக இருக்கும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு மறைந்து போகிறார்கள் என்பதெல்லாம் பிடிபடாத புதிராகவே இருந்தது. நண்பன் ஒருவனைக் கேட்டேன், “இவர்கள் குறித்து உனக்குத் தெரியுமா?”

அவன் தெளிவாகவே சென்னான்… “அவர்கள் எல்லாம் நம்ம ஊரில் உள்ள பெரிய பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளைகள், அல் லது பிள்ளைகளின் அப்பா, சித்தப்பா, பெரியப்பா.. ஏன்…. அந்த வீட்டு தலைவனாக கூட இருக்கும்! வீட்டில் அடைக்கப் பட்ட திலிருந்து சில நேரம் காவலை மீறி இப்படி வீதிக்கு வந்து தங்களது சுதந்திர வேட்கையைத் தீர்த்துக் கொள்பவர்கள். திரும்பவும் வீட்டு நபர்களால் வீட்டுக் காவலுக்கே வலுக்கட்டாயமாக கொண்டு சொல்லப்பட்டு விடுவதால் அவர்களை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை!” என்றான். ஒருவனுக்கு முத்திரை குத்திவிட்டால், விட்டு விட வேண்டும். அப்புறம் என்ன குடும்ப கௌரவம்…? வீட்டுக்காவல்…? இப்படி மீறி வந்து விட்டப் பிறகு தன்னை யாரும் குடும்ப கௌரவம் சொல்லி திரும்ப வீட்டுச் சிறை வைக்க சம்மதிக்கக் கூடாது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

ஊரில் வழக்கமாகத் தென்படும் அந்த அங்கீகரிக்கப்பட்ட நால்வருக்கும் என்னை நன்கு தெரியும். அதில் இரண்டுபேர் எங்க வட் டத்தைச் சேர்ந்தவர்கள். என்னை பெயர் சொல்லி அழைப்பவர்கள். அதில் ஒருவன் முஸ்லீம். பெயர் அய்யூபு! தெக்னி. உருது அவனது தாய் பாஷை. தமிழ் அவனுக்கு சரளமாக வரும். தமிழ் மட்டுமல்லது இன்னும் இரண்டு பாஷைகள் அதே சரளம்! பள் ளிக்கூடத்தில் எனக்கு சீனியர். அங்கே அவனை தள்ளி நின்றுதான் பார்க்க முடியும். எப்பவும் அவனுடன் பல்வேறு தினுசான மாணவர்கள்! அவனது பருவக்காலத்து விசேச கூறுகளை தெரிந்தவர்கள் சொன்னால், கேட்பவர்கள் இன்றைக்கு நம்பமாட் டார்கள்.

மாவட்ட அளவில் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன். அப்பொழுது அவன் ஆடாத ஆட்டமில்லை. இன்னும் வேகத்தாண்டுதல், உய ரத்தாண்டுதல், அம்பு வீசுதல், ஓடுதல் என்ற விளையாட்டுகளிலும் கெட்டி அவன். அவனது வேறோரு விளையாட்டாக, ஜாதி வித்தியாசம் பாராது சமத்துவமாக எல்லாப் பிரிவிலிருந்தும் இரண்டுக்கு மேற்பட்ட காதலிகளை வட்டமிட வைத்திருந்தான்! அவர் களும் அவனை மொய்த்தார்கள். அவர்களின் பிடி தளர்ந்து போகாத வகையில் மந்திரமாய் சில காந்த வித்தைகளையும் வைத் திருந்தான். அதிலொன்று இசை! எல்லா தரப்புகளிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட குரல். அவன் அன்றைக்குப்பாடி, அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெற்ற இந்துஸ்தானியையும், கவாலி, கஸலையும் வித்தியாசப் படுத்திப் புரிந்துக் கொள்ளவே எனக்கு அதன் பிறகு இருபது வருடங்கள் பிடித்தது.

பள்ளிப்பருவத்திலேயே அவன் எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பான். பிரமாதமாக இசையும் அமைப்பான். வசீகரம் கொஞ்ச மிடுக்காய் பேசுவான், நடப்பான். லாவகமாக சிகரெட் பிடிப்பான், அவ்வப்போது பிரமாதமாகப் பொய் சொல்வான். அலங்கார மாக நெய்யப்பட்ட ஆடையாக அது இருக்கும். குடும்பத்தில் வறுமை அவனை சக்கையாய்பிழிந்து நாறாக காயப் போடுகிற போ தெல்லாம் அதைத்தான் அணிவான். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி அத்தனை கச்சிதமாக அவனுக்கு அதுப் பொருந் திப்போகும்.

இப்பக்கூட, இந்த விடியற் காலை குளிரில் அவனைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். பள்ளிவாசல் பக்கமுள்ள வேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் நின்றான். சாவகாசமான நேரத்தில் அவனை எங்கே பார்த்தாலும் “மிஸ்டர் அய்யூப்” என்று அழைத்து பேச தவற மாட்டேன். அவன் பேசும்போது பேச்சு கோர்வையாக இருக்காது. விட்டு விட்டு துண்டு துண்டாக வரும். நான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான். சிலநேரம் சரியான பதிலும் வருவதுண்டு. அவனை சந்திக்கும் நேரங்களில் கட்டாயம் அவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன். பலவற்றை மறந்தவனாக காணப்பட்டாலும், எந்த முத்திரை குத்தப்பட்டு அவன் சீர்குலைந்திரு ந்தாலும் சிகரெட் புகைப்பதில் மட்டும் இப்பவும் அவனிடம் அதே ஆதி முத்திரை. கொஞ்சமும் மாறாத லாவகம்! இன்றைக்கு அவன் ஆடை வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது. முகச்சுழிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு. இவன் உலகத்தில் பிரவே சிக்க அனுமதி கிடைக்கும் பட்சம் இத்தனை அழுக்காக உடுத்தக் கூடாது, உடுத்திக் கொள்ளவும் மாட்டேன். இவனை மாதிரி ஒரே இடத்தில் நிற்கவும் மாட்டேன். விட்டை விட்டால்.. எத்தனை ஊர் சுற்றினோம் என்கிற கணக்கு எகிற வேண்டும்.

அய்யூபும் நானும் பேசிக்கொண்டிருந்ததை யாரோ பார்த்துப் போய் வீட்டில் என் மனைவியிடம் அவசியமாக சொல்லி இருக்கிறா ர்கள். “பள்ளிவாசல் கிட்டே நின்னுகிட்டு பைத்தியத்திட்டெயெல்லாம் பேசிகிட்டு இருக்கிங்களாமுள்ள?” என்று அவள் கேட்கவும், சற்று நேரம் இவள் யாரை குறிப்பிட்டு கேட்கிறாள் என்று புரியாத குழப்பம்பினேன்! அங்கே நின்று நிறைய பேர்களிடம் நான் பேசுவது வழக்கம். தொழப் போகிறவர்கள் வருகிறவர்கள், ஊர் ஹஜ்ரத், பஞ்சாயத்துக்காரர்கள் என்று! இன்றைக்குப் பார்த்து எங்க பக்கத்து கட்சிக்காரப் புள்ளி ஒருவனிடமும் பேசிவிட்டு வந்திருந்தேன். போன பொதுதேர்தலுக்கு இந்தத் தொகுதிக்காக அவனது கட்சியில் சீட் கேட்டவர்களில் அவனும் ஒருவன். தனக்கு சீட் கிடைத்து, தனது கட்சியும் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கு மென்றால், இஸ்லாமியர்கள் என்கிற அடிப்படை கோட்டாவில் தனக்கு மந்திரி பதவி நிச்சயம் என்று பேசித் திரிந்தவன் அவன்.

அய்யூபுவைப் பற்றி அவள் அந்த நேரத்தில் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை அவள் முறைக்கவும், ஞாபகம் வந்த வனாக ‘யாரு.. அய்யூபிடம் பேசியதை கேட்கிறாயா’ என்றேன். “உங்களுக்கு என்ன செய்யுறோம், ஏது செய்யுறோம்… என்பது தோனுறதே இல்லை! நீங்க பைத்தியத்துக்கிட்டே இப்படி பேசிகிட்டு நிக்கிறத நாலுபேர் பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு உங் களுக்கு ‘ஒன்ன்ன்னும்’ நிஜமாகவே ஒன்னும் தோனல. வர வர ‘இது’ இப்படியா ஆகனும்!” என்று சலித்துக் கொண்டாள். அவள் ‘இது’ என்றது என்னைத்தான். சமயத்தில் ‘அது’ என்று தன்மையாகவும் குறிப்பிடுவாள். பழகிப்போச்சு.

இதற்குப்போய் இவள் ஏன் இப்படி அநியாயத்திற்கு சலித்துக் கொள்கிறாள் என்று தோன்றியது. எத்தனையோ பேர்களிடம் பேசு கிறவது மாதிரிதானே அவனிடமும் பேசுகிறேன்! சரியாகச் சொன்னாள் அவனிடம் பேசுவது எனக்கு உகந்ததாகத்தான் இருக்கி றது. அவன் திருடுவது கிடையாது. சூது, வாது, பித்தலாட்டம் கிடையாது. லஞ்சப் பேர்வழியுமில்லை. ரசிகர் மன்றத்துக்காரனு மல்ல. எந்த அரசியல் கட்சிகளிலும் அவன் உறுப்பினனோ அனுதாபியோ கூட இல்லை. குறிப்பாய் மதங்களிலிருந்தும் அவன் விலக்கு பெற்றவனாகவேறு இருக்கிறான். இந்த அளவில் அன்னியமாகிப் இருப்பவனிடம் பேசியதை இவள் இத்தனைக்கு பெரிது படுத்தக் கூடாது. நாளைக்கு என்னிடம் யாரும் பேச வேண்டாமா? முத்திரை குத்துவதென்று முடிவு செய்த பிறகு அதைச் செய்ய வேண்டியதுதானே. அதற்காக இவள் ஏன் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யவேண்டும்!

போன மாதம் இப்படிதான், குறுக்குத்தெரு மேட்டு வீட்டு ரஹமத்துல்லா என்னைப் பார்க்க வந்திருந்தான். சௌதியில் இருந்து அவன் எப்ப ஊர் வந்தாலும் என்னைப் பார்க்க வருவான். இப்பவும் அப்படித்தான் வந்து பார்த்துவிட்டுப் போனான். என்னை விட இளையவன். மத விசயங்களில் கெட்டி. நிறைய ஓதிக் கற்றவன். ஓர் இஸ்லாமியன் நெறி தவறாமல் எப்படி நடக்க வேண் டும் என்று குரான் ஹதீஸ் அடிப்படையில் அவன் பேசத் துவங்கினால் கேட்பவர்கள் சுயத்தின் குற்ற உணர்வால் பிரமைப் பிடித் தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள். அவன் காதலித்த அவனது பக்கத்து வீட்டு கமர்னிஸாவை பெரிய போராட்டத்திற்கு இடையில் அவனுக்கு திருமணம் செய்து வைத்ததில் என் மேல் மிகுந்த மரியாதை.

அவன் வீட்டுக்கு வந்து பேசி விட்டுப்போன பிறகு இவ சப்தம் போட்டாள். “அந்த மனுஷன் திண்ணையில் உட்கார்ந்து உங்க கிட்ட பேசுற பேச்சை, கூடத்தில் உட்கார்ந்து கேட்கிறப்போவே எனக்கு மண்டைவலி வருது. உங்களுக்கு ஒன்னுமே வரலையா? அந்த ஆளு பைத்தியமா இருந்தவருன்னு உங்களுக்கே நல்லா தெரியும்! ஏன் அவர்கிட்டே அத்தனை மணி நேரம் பேசிகிட்டு இருக்கிங்க?” அவனோடு பேசிக்கிட்டு இருந்ததை சுட்டி அவள் திட்டுவதில் கொஞ்சத்திற்கு கூடுதலாக நியாயம் இருப்பதாகவே பட்டது.

இப்பொழுதெல்லாம் என்னாலும் அவன் பேசுவதை பத்து நிமிடம் கூட கேட்க முடிவதில்லைதான். மங்காவில் பேச்சை ஆரம்பித் தான் என்றால்… தேங்கா, பனங்கா, புளியங்கா, கொய்யாக்கா என்று புலம்பிக் கொட்டி சரியாய் மாங்காயில் வந்தே முடிப்பான். அத்தனைக் காய்களையும் மாங்காயாகவே பாவித்துப் பேசியதை அவன் உணரமாட்டான். ஐந்து வருடங்களுக்கு முன் அவன் ஏதேதோ புலம்புவதாகவும், அதை வாயால் சொல்வதுகூட பாவம் என்றும் எங்களில் சிலர் பேசிக் கொண்டார்கள். நான் போய் அவனைப் பார்த்தபோது, தூய வெள்ளாடையில் இருந்தான். அவன் இருந்த ரூமின் சன்னல் கதவுகளையெல்லாம் அடைத்து இரு ளாக வைத்திருந்தான். மூலையில் அளவுக்கு அதிகமாக வத்தி புகைந்துக் கொண்டிருந்தது.

அவனை பெயர் கூறி அழைத்தேன். “என்னை பெயர்கூறி அழைக்காதே!” என்றான். சற்றைய நாழிக்கெல்லாம் “நான் யார் தெரிகி றதா?” என்றான். எப்பவும் என்னை எதிர்கொண்டு அழைப்பவனின் இந்த பதில் கொஞ்சத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறானென்று சமாதானம் ஆனேன். பிற்பாடு அவன் கூறிய பிரமாண்ட வார்த்தைகளின் வாக் கியம் என்னை நிலைகுலைய வைத்தது. நிஜமாகவே அதிர்ந்துதான் போனேன். “நான்தான் அல்லா” என்று அவன் கூறுகையில் சக ஜமாகவா இருக்க முடியும்? அவன் மனைவியை அழைத்து…

என்ன செய்றதா உத்தேசம்?

புரியலண்ணே. ஏர்வாடிக்கு கொண்டுப் போகலாமுன்னு எங்க அம்மா சொல்றாங்க.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதலிலே இதற்குண்டான வைத்தியத்தியம் செய்ய தகுந்த டாக்டரைப் பாருங்க.

யாரு என்னான்னு தெரியாதெண்ணே.

பக்கத்து டவுனில் உள்ள நல்ல மனோதத்துவ டாக்டரின் முகவரியை எழுதிக் கொடுத்து, அவர் இருக்கும் இடத்திற்கு போகும் வழியையும் சொன்னேன். அந்தப் பெண்ணிடம் ஒரு தயக்கம் இருப்பது மாதிரிப்பட்டது.

ஏதாவது தயக்கமிருந்தா சொல்லும்மா.. பணம் காசு ஏற்பாடு செய்து தரனுமா?

இல்லண்ணே…. பணம் இருக்கு! இல்லெ… ஒரு சமயம் அவரு சொல்ற மாதிரி…..

என்ன சொல்ற மாதிரி….?

இல்லண்ண… அவரு…. நான் ‘அல்லா’ங்கிறாரே… நிஜமா இருக்குமோ?

அவன் ஏதோ உளறுறான்னா…. நீ வேறே…! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா.

ஒரு வாரத்திற்குள் குணமாகி வீடு திரும்பி விட்டிருந்தான். சந்தோசமாக இருந்தது. அவன் மனைவி வீட்டுக்கு வந்து அந்த டாக் டரின் ‘ட்டிரீட்மெண்”டைப் பற்றிப் புகழ்ந்து சொன்னது. தொடர்ந்து ஐந்து நாள், காலையும் மாலையும் ‘சேக்’ தந்ததில் அவன் சரி யாகி விட்டதாக விவரித்தது மகிழ்ந்தது. அவனை நான், போய் பார்த்து வந்தேன். அவன் குணமானதெல்லாம் சரி! ஆனால் முந் தைக்கு இப்பொழுது அதிகத்திற்கு அதிகம் உதறலாகப் பேசுவது மாதிரி தெரிந்தது. அநியாயத்திற்கு ‘சேக்’ தந்திருப்பார்க ளோ! போகப்போக சரியாகிவிடுமென்று சமாதானம் ஆனேன். அடுத்த ஆறு மாதத்திற்கெல்லாம் அவனை அவன் மனவி சௌதி க்கு ஏற்பாடுகள் செய்து பயணம் அனுப்பி வைத்து விட்டது. இப்பொழுது பிரமாதமாக சம்பாதிக்கவேறு செய்கிறன். இவனை மாதிரி ஆட்களை எந்த அரபு நாடும் வஞ்சிப்பதே இல்லை! இறையருள் அப்படி! வருடா வருடம் ஊர் வருகிற போதெல்லாம் என்னைப் பார்ப்பதை அவன் தவிர்ப்பது இல்லை. அவனது உளறலும் குறைந்தபாடில்லை. என் மனைவி அவன் குறித்து புலம்பி யது சரிதான். இவர்களின் இந்த உலகத்திற்கு இவன் ஒரு மோசமான உதாரணம். இவனை மாதிரி நான் இருக்கக் கூடாது. ஒன்னு அந்தப் பக்கம் இருக்கனும் அல்லது இந்தப் பக்கம் இருக்கனும்.

என்னைக் குறித்து மீண்டும் வீட்டில் புகார். ஒரு நல்ல புத்தகத்தையோ, நல்ல கதைகளையோ படிக்கமுடிவதில்லை. மனம் சரியில் லையே என்று நேற்று ஆபிதீனின் குறு நாவலான ‘கடை’யை எடுத்து மறு வாசிப்பு செய்தேன். மனம் விட்டும் சிரித்தேன். இப்படி சில நேரம் தி.ஜானகி ராமனின் ‘பத்து செட்டி’, ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’, எஸ்.ராம கிருஷ்ணனின் ‘உலகம் ஓர் பெரிய எழுத்து கதை! போன்றவற்றை தேர்வு செய்து மனம் விட்டுச் சிரித்து வைப்பதுண்டு. நேற்று, ‘கடை’ படித்து அப்படிச் சிரித்து தப் பாகிவிட்டது.

என்னைப் பார்க்க என் அம்மா, பழைய வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். இப்படி, எனது புதிய வீட்டிற்கு எப்பொழுதாவதுதான் ‘நல்லது கெட்டது’ என்கிற அளவில் பார்க்க வருவார்கள். அப்பப்ப வரவும் அவர்களால் முடிவதில்லை. வயதாகிவிட்டது. இறப்பு எந்நேரமும் வரும் என்கிற கணக்கில் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியே நகர்வது கிடையாது.’மௌத்’என்றால் அது அங்கேதான் நடக்கனும் என்பது அம்மாவின் திண்ணம். இப்பொழுது வந்திருக்கிறார்கள். நல்லதுக்கா..? கெட்டதிற்காக..? தெரி யாது.

என் அம்மாவை என் மனைவியும், மகளும் குசலம் விசாரித்தபடியே வரவேற்றார்கள். துப்பட்டியைக் கழட்டச் சொல்லி மகள்
வாங்கி உதறி மடித்து வைத்தாள்.

எம் புள்ளெ எங்கே?

அறையிலதான் இருக்கு.

பேத்தியை இழுத்து முத்தம் தந்தவர்களாக, காலையிலே புள்ளெ போன் செய்யவும் என்னமோ ஏதோன்னு பதறிட்டேன். கையும் ஓடல காலும் ஓடல… என்ன செய்து அவனுக்கு? நம்ம குடும்பத்துக்கு அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் வராது. நம்ம யாருக்கு என்ன செஞ்சோம்? எனக்குத் தெரிச்சி நம்ம குடும்பத்திலயும் சரி, நம்ம சொந்தப்பந்ததுலேயும் சரி இப்படி யாருக்கும் வந்ததில்ல ம்மா! அல்லா ரசூல் வச்சி காப்பாத்தனும்.

ஒன்னுமில்ல மாமி, அது என்னமோ ராத்திரி சிரிச்சின்னு இவ பயந்துட்டா. அது எப்பவும் இப்படிதான் சிரிக்கும். அதுக்கோசறம் காலங்காத்தாலெ உங்களுக்கு போன் செஞ்சி சொல்லிருக்கா.

இப்படிதாம்மா.. ஒரு மாசமா அத்தா ராத்திரி ராத்திரி சிரிக்குது.

எங்க அம்மாவை என் மகளும் அம்மா என்றுதான் அழைப்பாள்! எல்லா கூத்தையும் அறையில் இருந்து கேட்டபடியும், கதவின் கொஞ்சம்போல திறப்பால்…. குறுக்காலத் தெரியும் சில காட்சிகளைப் பார்த்தபடியும் இருந்தேன்.

அவன் சும்மா சிரிச்சிருப்பாண்டி.

சும்மா… போமா…. ராத்திரில அப்படி சிரிக்கறதே கேட்கிறப்போ… எனக்கு என்ன பயமா இருக்குத்தெரியுமா!

நீ தூங்க வேண்டியதுதானே? நீயேன் முழிச்சிட்டி கெடக்கே?

அத்தாவுக்கு உடம்பு சரியில்லங்கிறப்போ எப்படி தூக்கம் வரும்?

முதலுலே இவளுக்கு ஓதிவிடனும்! புள்ளெ ரொம்ப பயந்திருக்கா. ஏண்டி.. அத்தா மேலே இவ்வளவு அக்கறையா இருக்கேயே ‘குல் அவூதுல்ல மூனுதரமும், குல்ஹூவல்லாவுலே மூனுதரமும், ஓதித்துட்டுப் போயி அத்தா மேலே ஊதிவிட்டா என்ன? காத்துக்
கருப்புன்னு ஒன்னும் அண்டாதுல்ல.

நல்லா….. ஓத விடுமே! போடி…. பைத்தியக்காரி…ங்கும்.

அப்படிதான் சொல்லுவான். நான் ஓதிவிடுறேன்னாலும் காட்டத்தான் மாட்டான். அதெ இதெ படிக்கிறான்ல.. அதான்.. தாந்தான்னு நிக்கிறான். ரப்புல் ஆலமீன் எப்பத்தான் அவனுக்கு நல்ல புத்திய கொடுக்கப் போறானோ!

ஆமாம்மா.. எப்பப்பாத்தாலும் எதையாவது படிச்சிகிட்டுதான் இருக்கு. இல்லாட்டி எழுதுது. கைவலிக்காது?

எங்க அம்மா மௌத்தாவுறத்துக்கு முன்னாடி இவனெப் பத்திதான் கவலைப் படுவாங்க. இப்படி எழுதிட்டு படிச்சிட்டே இருக்கா னே…. ‘எங்கே கூத்தாடியா போயிடுவானோன்னு’ என்கிட்ட எத்தனைத் தரம் கவலைப்பட்டிருக்காங்க! ‘அறிவை அறிவு அறுதிடு ம்டா பாவான்னு’ அவன் கிட்டேயும் தன்மையா எடுத்துச் சொல்லியிருக்காங்க கேட்டாத்தானே. நானும் எத்தனையோ தரம் சொல் லிட்டேன், இப்படி படிச்சிகிட்டே இருக்காதேடா மூளை கெட்டுடும்ன்னு. புள்ளையா பொறந்ததுங்க பெரியங்க, தாய் தகப்பன் சொல்றதெக் கேட்கனும்!

ஆமாம்மா மூளைத்தான் கெட்டிடுச்சி. டாக்டர்கிட்டே கூப்பிட்டுப் போயி காமிமா… நீ கூப்பிட்டாதாம்மா அத்தா வரும்.

எங்க அம்மாவுக்கு காப்பி போட்டு எடுத்து வந்து தந்தவளாக என் மனைவி, இவ ஒருத்தி… அதுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லடி என்றாள்.

துபாயிக்கு போறதுக்கு விசா ஏற்பாடு செய்திருக்கார்ன்னு சொன்னியே… இன்னும் ஆவுலெயா?

அதான் கவலை அதுக்கு. சம்பாத்தியம் இல்லாம வூட்லயே இருக்குல.. நான் வேற அப்பப்ப சத்தம் போடுறேன்ல… அதான்… அது சேம்புனா மாதிரி அதை இதை செஞ்கிட்டு, ஒன்னு கெடக்க ஒன்னு பேசிகிட்டு, பத்தும் பத்தாதுக்கு சிரிச்சுகிட்டுவேற… கெடக்கு.

அப்படிதான், அவன் பயணம் போறவரை சத்தம் போட்டுகிட்டே இரு… இல்லன்னு வையி இப்படியே சுத்த ஆரம்பிச்சுடுவான்!
இல்லெ படிக்கிறேன்னு கிளம்பிடுவான். புள்ளையா பொறந்ததுங்க சம்பாதிச்சி சொத்தா வாங்குதுங்க, இவன் புஸ்தகமா வாங்குறே ங்குறான், இந்த அநியாயத்தே எந்த ரகமான்டெ சொல்றது?

அதான் சத்தம் போட்டுகிட்டேதான் இருக்கேன். பொறுப்பு வரட்டுமேன்னு. அது என்ன நினைக்கிதோன்னுவேற பயமா இருக்கு. அந்த விசா இன்னும் ரெண்டுநாள்ளெ தாபால்லெ வந்து கெடைச்சிடும்னு போன் வந்துச்சி. போன் வந்து நாலு நாளாச்சி இன்னும் வந்து கிடைக்கல.

அதானெ பார்த்தேன். எனக்கு அந்த ரோசனை உதிக்கல, நான் என்னமோ ஏதோன்னு அமீன்டெ வேற சொன்னே. இது ஏதோ சேட்டை.. மஞ்ச கொல்லை பாவாகிட்டெ போன் போட்டு பேசிட்டு வரேன்னான்.

அமீன் என் தம்பி. தாடியெல்லாம் வச்சிகிட்டு எனக்கு அண்ணன் மாதிரி இருப்பான். அவனுக்கு வீட்டை விட்டா பள்ளிவாசல்
தெரியும், பள்ளிவாசலை விட்டா கடை தெரியும். அங்கேயும் போயி உட்கார்ந்துக்கிட்டு வியாபாரம் செய்கிறானோ இல்லையோ
குரான் ஆயத்தை ஓதிக்கிட்டே இருப்பான். கேட்டா பரகத்துக்காக என்பான். மூனு லட்ச ரூபா முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிச்சான். இப்போ கடையும் அவனுந்தான் பாக்கி. என்னடான்னு கேட்டா யாரோ செய்வினை வச்சிட்டதா சொல்றான். அவன் கிட்டெ யாருபோயி உடம்பு சரியில்லைன்னு பேசிக்கிட்டு இருந்தாலும், ஒன்னு நாட்டு மருந்தைப் பற்றி அவர்களிடம் பேசத் தொடங்கி விடுவான், அல்லது மஞ்ச கொல்லை ஹஜரத்தைபோயி பாருன்னு சிபாரிசு செய்வான். இப்ப என்னைப் பார்க் காமலேயே மஞ்சகொல்லை ஹஜிரத்துட்டெ அனுப்புறதுன்னு முடிவு செய்திருக்கான். அண்ணேதானேன்னு அனுமதியையும் உரிமை யையோடு எடுத்துகிட்டுயிருக்கான்.

போஸ்ட்மேன் வாசலில் கூப்பிட்டான். மகள்தான் சொன்னாள். அறையை விட்டு வெளியே வந்தேன். “என்னடா செய்யுது”?ன்னு கேட்டாங்க அம்மா.

போஸ்ட்மேனை பார்த்துட்டு வறேன்.. அமீன் கிட்டே சொல்லி உங்க ரெண்டுபேரையும் மஞ்சக்கொல்லைக்கு அனுப்பி வைக்கிறே னா இல்லையா பாரு! – இன்னொரு உலகம் எனக்கு நழுவிப் போனதில் சொல்ல முடியாத ஆத்திரம்வேறு.

இப்படித்தான் மாமி….. ஒன்னும் இல்லாததுக்கொல்லாம்….. கோபப்படுது.

ஆமாம்மா என்றாள் மகள். அவன் கிடக்கறான், நீ போயி அவனுக்கு காப்பி எடுத்துகிட்டு வா… என்றார் அம்மா. வாசலில்
போஸ்ட்மேன் ரிஜிஸ்டரோடு நின்றார். கையொப்பம் இட்டு வாங்கிப் பிரித்தேன். உள்ளே, மீண்டும் குல வழக்கத்தை தொடர
புதியதோர் அனுமதி!

*********************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்