நாவல்: அமெரிக்கா II அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

வ.ந.கிரிதரன்



பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள், பியர் போன்ற குடிபான வகைகளென அனைத்தையும் அங்கு வாங்கும் வகையிலிருந்த வசதிகள் அவர்களைப் பிரமிக்க வைத்தன. நண்பர்களிருவருக்குமிடையில் சிறிது நேரம் எவற்றை வாங்குவது எனப்து பற்றிய சிறியதொரு உரையாடல் பின்வருமாறு நிகழ்ந்தது:

இளங்கோ: “முதன் முறையாகப் புதிய இடத்தில் சமைக்கப் போகின்றோம். இதனைச் சிறிது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்? நீ என்ன சொல்லுகின்றாய் அருள்?”

அருள்ராசா: “எனக்கும் நீ கூறுவது போலையொரு எண்ணம்தான் வருகுது. அதுதான் சரியென்று படுகுது. வேண்டுமானால் இப்படிச் செய்தாலென்ன?”

இளங்கோ: “எப்படிச் செய்யலாமென்று நினைக்கிறாயோ?”

அருள்ராசா: “முதல் முறையாகச் சமைக்கப் போகிறம். அதுவும் புது இடத்திலை.. சின்னதொரு விருந்து அங்குள்ளவர்களுக்கும் சேர்த்து வைத்தாலென்ன? புது வாழ்வை விருந்துடன் ஆரம்பிப்போம். அவர்களுக்கும் சந்தோசமாகவிருக்கும். அவ்வளவு செலவும் வராது..”

இளங்கோ: “நீ தான் நல்லாச் சமைப்பாயே.. என்ன சமைக்கலாமென்று நினைக்கிறாய்?”

அருள்ராசா: “சுடச் சுடச் சோறும், நல்லதொரு கோழிக் கறியும், கோழிப் பொரியலும், உருளக்கிழங்குப் பிரட்டல் கறியொன்றும், முட்டைப் பொரியலும், பருப்புக் கறியும், இன்னுமொரு மரக்கறியும், இறாள் குழம்பொன்றும் வைக்கலாமென்று நினைக்கிறன். அங்கைதான் எல்லா வசதிகளுமிருக்கே. கெதியாகச் செய்து விடலாம்”

இளங்கோ:”என்ன எல்லாத்தையும் சொன்ன நீ, ஒன்றை மட்டும் மறந்திட்டியே?”

அருள்ராசா: “தண்ணியில்லாமல் விருந்தா? தண்ணியை நானாவது மறப்பதாவது.. அவசரப்படாதை. ஒரு ‘டசின்’ ‘பட்வைசர்’ பியர் காணுமென்று நினைக்கிறன். விஸ்கி வேண்டுமென்றால் ‘ஓல்ட் ஸ்மக்கிளரி’ல் ஒன்றை வாங்கலாம். அவ்வளவு விலையுமில்லை. அருகில்தான் விஸ்கி கடையுமிருக்கு. வரும் போது பார்த்தனான்.”

இவ்விதமாக நண்பர்களிருவரும் மிகவும் விரைவாகவே திட்டமிட்டு, அதிலொரு மகிழ்வெய்தி, தேவையான பொருட்களுடன், குடிவகைகளையும் வாங்கிக் கொண்டு தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அவர்கள் கைகளில் ‘பட்வைசருடன்’ திரும்புவதைக் கண்ட திருமதி பத்மா அஜித் பின்வருமாறு தன் கருத்தினை அவர்களுக்கு ஆத்திரப்படாமல், மிகவும் நாகரிகமாக, விநயத்துடன் கூறினாள்:
“அமைதியாக மற்றவ்ர்களுக்கு இடையூறெதுவுமில்லாமல் நீங்கள் விருந்து கொடுப்பதையிட்டு ,குடிப்பதையிட்டு எனக்குக் கவலையேதுமில்லை. புதுவாழ்வினை ஆரம்பிக்கப் போகின்றீர்கள். நல்லதாக அமைய எனது வாழ்த்துக்கள்.”

கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். இவ்விதம் நண்பர்களுடன் கூடிக் குலாவி , உண்டு, மகிழ்ந்துதான் எவ்வளவு நாட்களாகி விட்டன. அந்த மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க அவன் கூறினான்: ” இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கிறேன். இவ்விதம் நண்பர்களுடன் ஆடிப்பாடி விருந்துண்டுதான் எத்தனை நாட்களாகி விட்டன!”. இதற்கிடையில் அருளராசா ‘ஓல்ட் ஸ்மக்கிளரை’த் திறந்து கொண்டு சமையலறையிலிருந்த மேசையில் கொண்டு வைத்தான். தொட்டுக் கொள்வதற்காக வாங்கி வந்திருந்த உருளக்கிழங்கு பொரியலைத் தட்டொன்றில் போட்டு வைத்தான். அத்துடன் கூறினான்: ” நண்பர்களே! வெட்கப் படாமல் தேவையானதை எடுத்துச் சாப்பிடலாம். குடிக்கலாம்”. அதனைத் தொடர்ந்து மூவருக்கும் அளவாக ‘கிளாஸ்க’ளில் விஸ்கியினை ஊற்றினான். இச்சமயம் பார்த்து தூக்கத்தினின்றும் நீங்கியவனாக மான்சிங் எழுந்து வந்தான். வந்தவனின் பார்வை பரிமாறுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த விஸ்கியின் மேல் திரும்பியது. அவனது முரட்டு முகமும் முறுவலொன்றைப் பூத்தது.

மான்சிங்கைக் கண்டதும் கோஷ் இவ்விதம் அவனுக்கு அழைப்பு விடுத்தான்: “மான். நீயும் எங்களுடன் விருந்தில் இணைவதுதானே. ஆட்சேபணையேதுமுண்டா? நீயும் இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.”. மான்சிங்கும் மகிழ்ச்சியுடன் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். அவனது நிலையும் கோஷின் நிலையை ஒத்ததுதான். எத்தனை நாட்களாகி விட்டன இயந்திர மயமான மாநகரத்து வாழ்வில் இவ்விதம் கவலை நீங்கிக் களித்துக் கும்மாளமிட்டு; விட்டு விடுதலையாகிப் பறந்து. ஆனந்தமாக அவர்களது உரையாடல் குடியும் கும்மாளமுமாகக் கழிந்து கொண்டிருந்தது. அருள்ராசா மட்டும் சமையலை மறந்து விடாமல் கவனித்துக் கொண்டான். அவ்வப்போது நன்கு பொரிக்கப்பட்ட கோழிப் பொரியல்களைத் தொட்டுக் கொள்ள இன்னுமொரு தட்டொன்றில் போட்டு வைத்தான். இறாளையும் பொரித்துக் கொண்டு வந்தான். அவர்களனைவருக்கும் அவையெல்லாம் அளவற்ற மகிழ்வினைத் தந்தன. ஆர்வத்துடன் கோழி, இறாள் பொரியல்களைச் சுவைத்தபடி ‘ஓல்ட் ஸ்மக்கிள’ரை அருந்தினர். அது முடிந்ததும் ‘பட்வைசரி’ல் நாக்கை நனைத்தனர். சோமபானம் உள்ளிறங்கியதும் மெல்லியதொரு கிறுகிறுப்பு பரவ இருப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் விரிந்தது.

கோஷ் கூறினான்: “எனது சிறிலங்கா நண்பர்களே! உங்களது விருந்தோம்பலுக்கு எமது நன்றி. அருள்ராசாவின் கை வண்ணமே தனி. உணவகமொன்றை ஆரம்பித்து விடலாம். இதெல்லாம் எங்கு பழகினாய் அருள்ராசா?”

அதற்கு அருள்ராசா கூறினான்: “வங்க நண்பனே. உனது பாராட்டுதல்களுக்கு எனது நன்றியும் கூட. எல்லாம் அனுபவம்தான். ஒரு சிறிது காலம் கிரேக்கத்துக் கப்பலொன்றிலும் சமையற்காரனாக வேலை பார்த்திருக்கின்றேன். அது தவிர என் மாமா ஒருவருடன் அவரது பெரியதொரு பண்ணையொன்றில் சிறிது காலம் என் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழித்திருக்கின்றேன். கானகச் சூழலில் அமைந்திருந்த அந்தப் பண்ணை வாழ்வில் நான் பலவற்றை அறிந்திருக்கின்றேன். அதிலிதுவுமொன்று. மாமா மான் வற்றலும், ஆட்டுக்கறியும் வைப்பதில் வல்லவர். அவரது கை வண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இது”

மான்சிங் பின்வருமாறு அவர்களது உரையாடலில் கலந்து கொண்டான்: “ஏய் நண்பனே! கோஷ் சொல்வது சரிதான். நீ நல்லாச் சமைக்கின்றாய். உனக்கு இங்கு உணவகங்களில் வேலை எடுப்பதில் அப்படியொன்றும் சிரமமிருக்காது.”

இடையில் இடைமறித்த கோஷ் பின்வருமாறு உரையாடலினைத் தொடர்ந்தான்: “நான் வேலை பார்ப்பதும் மான்சிங் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனத்தில்தான். ஆடைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து இங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளுக்கெல்லாம் அனுப்புவது. அவன் ஆள் நல்ல கெட்டிக்காரன். நகரின் மத்தியிலுள்ள காட்சி அறைகளில் வெள்ளையினத்தவர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். அவர்களைக் கொண்டே ஆடை வகைககளை வடிவமைத்து அவற்றை இந்தியாவிலிருந்து எடுப்பித்து இங்கு விற்பனை செய்கிறான். நல்ல வியாபாரம். அங்கிருந்து பெறப்படும் ஆடை வகைகளை இங்குள்ள பண்டகசாலையொன்றில் வைத்துப் பல்வேறு மாநிலங்களிலுள்ள கடைகளுக்கும் அனுப்புவான். பண்டகசாலையில் வேலை செய்வதெல்லாம் நம்மவர்கள்தான். தற்சமயம் அங்கு வேலை எதுவுமில்லை. விரைவில் நத்தார் பண்டிகையையிட்டு அங்கு மேலும் சிலருக்கு வேலை வாய்ப்புகள் வரலாம். அப்பொழுது உங்களிருவரையும் அங்கு சேர்த்துக் கொள்ள என்னாலான முயற்சிகளை நிச்சயமாகச் செய்வேன். என்னை நீங்கள் நம்பலாம்.”

இதுவரை மெளனமாகவிருந்த இளங்கோ பின்வருமாறு தனது வினாவினைத் தொடுத்தான்: “கோஷ். உடனடியாக ஏதாவது வேலை செய்வதற்குரிய வழியேதுமுண்டா? என்னிடம் உரிய வேலை செய்வதற்குரிய ஆவணங்களெதுவும் இதுவரையிலில்லை. இனித்தான் சமூகக் காப்புறுதி இலக்த்தினை எடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.”

மான்சிங் இது பற்றிய தனது கருத்தினை இவ்விதம் விளக்கினான்: “நீங்களிருவரும் ஒரு மிகப்பெரிய தவ்றினைச் செய்து விட்டீர்கள்?”

இளங்கோ , அருள்ராசா இருவரும் ஒரே நேரத்தில் “என்ன மிகப்பெரிய தவறினை நாங்கள் செய்து விட்டோமா? என்ன சிங் சொல்லுகிறாய்?” என்றார்கள்.

அதற்கு மான்சிங் இவ்விதம் கூறினான்: “ஆம். நீங்கள் தான். நீங்கள் நியுயார்க் வந்திருக்கவே கூடாது. நியு ஜேர்சி அல்லது பாஸ்டன் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு சென்றவர்களுக்கெல்லாம் சமூகக் காப்புறுதி இலக்கம் போன்றவற்றை எடுப்பதில் சிரமமிருக்காது. ஆனால் நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் சட்டவிரோதக் குடிகாரர்கள் வசிக்கிறார்கள் அதனால் இங்குள்ள குடிவரவு திணக்களத்தினர் இத்தகைய விடயங்களில் மிகவும் கடுமையாக இருப்பார்கள். எனக்குத் தெரிந்து இவ்விதம் ஒருவன் இரண்டு வருடங்களாகக் களவாகவே, சட்டவிரோதமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறான்.”

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் மான்சிங் கூறுவதிலொருவித உண்மையிருப்பதாகவே பட்டது. இளங்கோ கூறினான்: “மான்சிங் கூறுவதிலும் உண்மை இருப்பதாகத்தான் படுகிறது. எங்களுடன் வந்தவர்களில் ஏனையோர் பாஸ்டனுக்கும், நியூ ஜேர்சிக்கும் சென்று உரிய ஆவணங்களையெல்லாம் பெற்றுக் கொண்டு வேலை பார்க்கின்றார்கள்.”

கோஷ் இடை மறித்துப் பின்வருமாறு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்: “நண்பர்களே அவற்றைப் பற்றி இப்பொழுதே எதற்குக் கவலை. அவ்விதம் பிரச்சினையேதும் வந்தால் நியூஜேர்சியோ பாஸ்டனோ சென்று அங்கு உங்களது குடிவரவுக் கோப்புகளை அனுப்பும்படி சட்டரீதியாக விண்ணப்பித்து விட்டு, அங்கு உரிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு பின்னர் நல்ல வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். அதுவரையில் உணவகங்களிலோ, அல்லது தொழிற்சாலைகளிலோ வேலை ஏதாவதை பார்த்துக் கொண்டு கொஞ்சம் காசு சேர்க்கப் பாருங்கள். இங்கு அவ்விதமான வேலைகளை எடுப்பதில் அப்படியொன்றும் பெரிய சிரமமெதுவும் இருக்காதென்று நினைக்கிறேன். இங்கு எட்டாவது அவென்யுவில் நியூயார்க் பஸ் நிலையத்திற்கு அண்மையில் எனக்குத் தெரிந்து பீற்றர் என்றொரு கிரேக்கன் வேலை முகவர் நிலையம் நடத்துகின்றான். அவனது வேலையே இவ்விதம் சட்டவிரோதக் குடிகளுக்கு உணவகங்களிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ வேலைகள் பெற்றுக் கொடுப்பதுதான். நாளைக்கு அவனது முகவரியினைத் தருகிறேன். சென்று பாருங்கள். அவனுக்கு எண்பது டாலர்கள் கொடுக்க வேண்டும். அதனை அவன் வேலை எடுத்துத் தந்ததும் பெற்றுக் கொள்வான்ன். நான் இங்கு வந்தபோது அவனூடாகத்தான் எனது முதலாவது வேலையினைப் பெற்றுக் கொண்டேன்.”

கோஷ் இவ்விதம் கூறவும் மான்சிங் இவ்விதம் கூறினான்: “என்ன அவன் இன்னும் முகவர் நிலையத்தை நடத்துகின்றானா? நானும் அவனிடம்தான் என் முதல் வேலையினைப் பெற்றுக் கொண்டேன்.”

இவ்விதமாக அனைவரும் உரையாடலினைத் தொடர்ந்தபடி, பல்வேறு விடயங்களைப் பற்றி அளவளாவியபடிப் பொழுதினை இன்பமாகக் கழித்னர். அவர்களது உரையாடலினைக் கீழிருந்து செவிமடுத்த வீட்டு உரிமையாளரான அஜீத்தும் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். அஜித் இயல்பிலேயே மிகவும் கலகலப்பானதொரு பேர்வழி. பிறகு கேட்கவும் வேண்டுமா அட்டகாசத்திற்கு. இவ்விதமாக அன்றைய இரவு விருந்தும் கேளிக்கையுமாகக் கழிந்தது.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

வ.ந.கிரிதரன்



அன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் குடிவரவு அதிகாரிகள் உரிய பத்திரங்களுடன் வந்து அவற்றை நிரப்பியதும் இளங்கோவையும், அருள்ராசாவையும் வெளியில் செல்ல அனுமதித்து விட்டார்கள். தடுப்பு முகாமிலிருந்த அனைவருடனும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த போது ஏனோ அவர்களிருவரினதும் நெஞ்சங்களும் கனத்துக் கிடந்தன. தடுப்பு முகாமினுள் தொடர்ந்தும் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், சலிப்புடனும், இயலாமையுடனும் வாழப்போகும் அவர்களை நினைக்கையில் ஒருவித சோகம் கவிந்தது. அவர்களும் வெளியில் சென்றதும் தங்களை மறந்து விடாமல் அடிக்கடி வந்து பார்த்துசெ செல்லுமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு இவர்கள் கட்டாயம் வந்து பார்ப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வபோது அறியத் தந்தால் வாங்கிக் கொண்டு வந்து தருவதாகவும், வெளியில் அவர்களுக்கு ஆக வேண்டியவற்றை தம்மால் முடிந்த அளவுக்குச் செய்து தருவதாகவும் கூறி ஆறுதலளித்தார்கள். இவ்விதமாக அவர்களிருவரும் வெளியில் வந்தபோது சரியாக மணி பன்னிரண்டு. கைகளில் குடிவரவு அதிகாரிகள் தந்த பிணையில் அவர்களை விடுவிக்கும் அறிவிப்புடன் கூடிய பத்திரங்கள் மட்டுமே அவர்களது சட்டரீதியான அறிமுக ஆவணங்களாகவிருந்தன. அத்துடன் தடுப்பு முகாமில் அனுமதிக்கும்போது சிறை அதிகாரிகளிடம் கொடுத்து வைந்த்திருந்த இருநூறு டாலர்களுமிருந்தன. இவற்றுடன் புதிய மண்ணில், புதிய சுழலைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்த்து நின்று எதிர்நீச்சலிடுவதற்குரிய மனப்பக்குவமும் நிறையவேயிருந்தன. பொழிந்து கொண்டிருந்த வானம் நிற்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஊரில் மழைக்காலங்களில் இலைகள் கூம்பிக் கிடக்கும் உயர்ந்த தென்னைகளாக இங்கு பார்க்குந் திசையெல்லாம் உயர்ந்து கிடந்தன காங்ரீட் விருட்சங்கள்.. மழைகளில் நனைந்தபடி அமைதியாகச் சென்றுகொண்டிருந்தனர் நகரத்துவாசிகள். நூற்றுக் கணக்கில் நகரத்து நதிகளாக விரைந்து கொண்டிருந்தன வாகன அணிகள். அவ்வப்போது ஒருசில நகரத்துப் புறாக்கள் தமது மழைநீரில் நனைந்து கூம்பி கிடந்த சிறகுகளை அடிக்கடி சிலிர்த்து விட்டுத் தமது உணவு வேட்டையினைச் சோடிகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. ‘புதிய வானம்! புதிய பூமி’! எஙகும் பொழிந்து கொண்டிருக்கும் மழை! அதுவரை நான்கு சுவர்களுக்குள் வளைய வந்துவிட்டுப் பரந்த உலகினுள் சுதந்திரக் காற்றினைத் தரிசித்தபடி அடியெடுத்து வைத்தபொழுது மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது.

‘லாங் ஐலண்ட்’இல் வசிக்கும் அந்த இந்தியத் தம்பதிகளைத் தொலைபேசியில் அழைத்து தங்களது வருகையினை உறுதி செய்து விட்டு நண்பர்களிருவரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பாதாள ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் அருகிலிருந்த உணவகமொன்று சென்று தேநீரோ காப்பியோ அருந்தினால் நல்லது போல் படவே நுழைந்து கொண்டனர். சிறியதொரு உணவகம். கூட்டமில்லை. ஒரு சிலரே மழைக்கு ஒதுங்கியிருந்தனர் போல் பட்டது. வீதியை அண்மித்திருந்த யன்னலோரம் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வீதியில் விரைந்து கொண்டிருந்த மானுடர்கள் மேல் தம் கவனத்தைத் திருப்பினர். எத்தனை விதமான நிறங்களில் மனிதர்கள்! பெரும்பாலும் வந்தேறு குடிகள். எதற்காக இந்த விரைவு! எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, இங்கு வந்து எதற்காக இவ்விதம் ஆலாய்ப் பறக்கின்றார்கள்?

இளங்கோவின் சிந்தையில் தடுப்பு முகாம் வாசிகள் பற்றிய சிந்தனைகள் மெல்லப் படர்ந்தன. இதற்காகத் தானே அங்கே , அந்தச் சுவர்களுக்குள் அவர்கள் கனவுகளுடன் காத்துக் கிடக்கின்றார்கள். ஊரிழந்து, உற்றார் உறவிழந்து, மண்ணிழந்து, நாடு தாண்டி, கடல் தாண்டி வந்து இவ்விதம் அகப்பட்டு அந்தச் சுவர்களுக்குள் வளைய வரவேண்டுமென்று அவர்களுக்குக் காலமிருக்கிறது.

மழை இன்னும் விட்டபாடில்லை. பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. உணவகத்தின் யன்னற் கண்ணாடியினூடு பார்க்கையில் ஊமைப் படமொன்றாக நகரத்துப் புறக்காட்சி விரிந்து கிடந்தது. மழை பொழிவதும், மனிதர்கள் நனைந்தபடியதில் விரைவதும், பின்னணியில் விரிந்து கிடந்த நகரத்துக் கட்டட வனப் பரப்பும்.. எல்லாமே ஒருவித அமைதியில் விரைந்து கொண்டிருக்கும் சலனப் படக்காட்சியாக காலநதியில் மிதந்தோடிக் கொண்டிருந்தன. சாலையோரம் இரு ஆபிரிக்க இளைஞர்கள் மழைக்குள் விரையும் மனிதர்களுக்குக் குடைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அவனது கவனம் மழைக்காட்சியில் படிந்தது. மழைக்காலமும், காட்சியும் அவனுக்குப் பிடித்தமான இயற்கை நிகழ்வுகள். அவனது பால்ய காலத்தில் வன்னி மண்ணில், வவுனியாவில், கழிந்த அவனது காலத்தில் ஆரம்பமான அந்த இரசிப்பு அவனது வாழ்வு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது வன்னியினொரு பகுதியான வவுனியாவின் பெரும்பகுதி விருட்சங்களால் நிறைந்திருந்தது. கருங்காலி, முதிரை, பாலை, வீரை, தேக்கு எனப் பல்வேறு விருட்சங்கள். மூலைக்கு மூலை குளங்களும், ஆங்காங்கே வயல்களும் நிறைந்து இயற்கையின் தாலாட்டில் தூங்கிக் கிடந்த அம்மண்ணின் வனப்பே வனப்பு. அத்தகைய மண்ணில் குருவிகளுக்கும், பல்வேறு காட்டு உயிரினங்களுக்குமா பஞ்சம்? பாம்புகளின் வகைகளை எண்ண முடியா? கண்ணாடி விரியன் வெங்கணாந்தி,மலைப்பாம்பு தொடக்கம், நல்லப்பாம்பு வரையில் பல்வேறு அளவில் அரவங்கள் அக்கானகங்களில் வலம் வந்தன. மர அணில்கள் கொப்புகளில் ஒளிந்து திரிந்தன. செங்குரங்குகள் தொடக்கம் கரு மூஞ்சிக் குரங்குகளென அவ்வனங்களில் வானரங்கள் ஆட்சி செய்தன. பச்சைக் கிளிகள், கொண்டை விரிச்சான் குருவிகள், மாம்பழத்திகள், குக்குறுபான்கள், அடைக்கலான் குருவிகள், தேன் சிட்டுகள், காட்டுப் புறாக்கள், நீர்க்காகங்கள், ஆலாக்கள், ஆட்காட்டிகள், ஊர் உலாத்திகள், மைனாக்கள், காடைகள், கெளதாரிகள், ஆந்தைகள், நத்துகள், காட்டுக் கோழிகள், தோகை விரித்தாடும் மயில்கள்.. நூற்றுக் கணக்கில் புள்ளினங்கள் நிறைந்திருந்தன. இரவென்றால் வன்னி மண்ணின் அழகே தனிதான். நட்சத்திரப் படுதாவாக விரிந்து கிடக்கும் இரவு வானும், ஆங்காங்கே படர்திருக்கும் கானகங்களும், அவற்றில் ஓங்கி ஒன்றுபட்டு நிற்கும் விருட்சங்களும், படையெடுக்கும் மின்மினிப் பூச்சிகளும் நெஞ்சினைக் கொள்ளை கொள்ளுவன. மழைக்காலமென்றாலே வன்னி மண்ணின் அழகே தனிதான். பூரித்துக் கிடப்பாள் நிலமடந்தை. இலைகள் தாங்கி அவ்வப்போது சொட்டும் மழைத்துளிகளின் எழிலில் நெஞ்சிழகும். குளங்கள் பொங்கிக் கரைமீறிப் பாயுமொலி காற்றில் வந்து பரவுகையில் உள்ளத்தே களி பெருகும். குளங்கள் முட்டி வழிகையில் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய மதகுகளைத் திறந்து விடுவார்கள். அச்சமயங்களில் மதகுகளின் மேலாக வழியும் நீரினூடு விரையும் விரால்களைப் பிடிப்பதற்காக மனிதர்களுடன், வெங்கணாந்திப் பாம்புகளும் இரவிரவாகக் காத்துக் கிடக்கும் வன்னி மண்ணின் மாண்பே மாண்பு. முல்லையும் மருதமும் பின்னிப் பிணைந்து கிடந்த வன்னி மண்ணின் மழையழகு ஒருவிதமென்றால், நெய்தலும், மருதமும் பின்னிக் கலந்திருந்த யாழ் மண்ணின் கரையோரக் கிராமங்களின் மழையழகு இன்னுமொரு விதம். ‘சட்டசடவென்று’ ஓட்டுக் கூரைகள் தடதடக்க இடியும், மின்னலுமாய்ப் பெய்யும் பேய் மழையினை, இரவுகளின் தனிமைகளில் படுத்திருந்தபடி ,வயற்புறத் தவளைகளின் ஆலாபனையினைச் செவிமடுத்தபடி, பாரதியின் மழைக்கவிதையினைப் படித்தபடியிருப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்கிறது.

திக்குக ளெட்டுஞ் சிதறி தக்கத்
தீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட..
பக்க மலைக ளுடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று – தக்கத்
தாம்தரிகிட. தாம்தரிகிட.. தாம்தரிகிட.. தாம்தரிகிட..

வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய – மழை
எங்ங னம்வந்தத டா, தம்பி வீரா!

அண்டங் குலுங்குது , தம்பி! – தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;- திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்; – என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம்! கண்டோம்! கண்டோம்! – இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

சொற்களுக்குள்ள வலிமையினை, சிறப்பினைப் பாரதியின் கவிதைகளில் காணலாம். ‘இன்று புதிதாய்ப்ப் பிறந்தோம்’ என்றதும் நம்பிக்கையும், உற்சாகமும் கொப்பளிக்கத் துடித்தெழுந்து விடும் மனது திக்குகளெட்டுஞ் சிதறி, பக்க மலைகளுடைத்து, வெட்டியடிக்கும் மின்னலுடன், கொட்டியிடிக்கும் மேகத்துடன், கூவிட்டு விண்ணைக் குடையும் காற்றுடன் பாயும் மழையில் மூழ்கி விடுகிறது.
மழைக்காட்சியினை மிகவும் அற்புதமாக வரித்துவிடுமொரு இன்னுமொரு கவிதை ஈழத்துக் கவிஞன் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) கவிதை. பாரதியின் கவிதை மழைக்காட்சியினைத் தத்ரூபமாக விளக்கி நின்றால் கவீந்திரனின் ‘சிந்தனையும், மின்னொளியு’மோ அக்காட்சியினூடு இருப்பிற்கோர் அர்த்தத்தையும் விளக்கி நிற்கும்.

‘சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
‘சட்’ டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. ‘ஹேர்’ ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?’

ஊரெல்லாம் உறங்கும் அர்த்த ராத்திரியில் பொத்துக் கொண்டு பெய்யும் மாரி வானம்! ஊளையிடும் நரியாகப் பெருங்காற்று! பேய்க்காற்று! கொட்டுமிடித்தாள இசையில் வான் வனிதையென மின்னல்! அவளின் கணநேரத்து நடனம் கவிஞனிடமோர் சிந்தனைப் பொறியினைத் தட்டியெழுப்பி விடுகிறது. மண்ணின் மக்களுக்கு அம் மின்னல் ஒரு சேதி சொல்வாள். அதுவென்ன? அவளின் வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ? வாழுமச்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதந்து சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறாள் அவ்வான் வனிதை. வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்துவிட்டு ஆவிபிரிந்து விடும் அவளின் இருப்பில்தான் எத்துணை சிறப்பு! மழையை எத்தனை முறை இரசித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அத்தகைய சமயங்களிலெல்லாம் அவனது சிந்தையில் மேற்படி கவிதைகள் வந்து நர்த்தனமாடுகின்றன. மழையினை இரசித்தலுக்கு அவையும் கூட நின்று துணை புரிகின்றன. மழைக்காட்சியும், அதன் விளைவாகப் படம் விரித்த பால்யகாலத்து நினைவுகளும், பிடித்த கவிகள், கவிதைகளும் ஓரளவுக்குச் சோர்ந்திருந்த மனதுக்கு மீண்டும் உற்சாகத்தினைத் தந்தன. ஒரு கண வாழ்விலும் ஒளி தருமொரு மின்னல்! மின்னலாயிருப்போம், எதிர்ப்படும் இன்னலெலாந் தகர்த்தெறிவோமென்று மனது குதியாட்டம் போடுகிறது.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்