நிழல் நிஜமாகிறது…

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

ஜோசப்


“உங்களுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதேப்பா, என்னை என்ன பண்ண சொல்றீங்க ?”, எரிச்சலுடன் கத்திய மகனை சோகத்துடன் பார்த்தார் பரந்தாமன்.

“நான் என்னடா பண்ணேன் ?”

“உங்களுக்கு பல தடவைச் சொல்லியிருக்கேன் வசந்தி விஷயத்தில தலையிடாதீங்கன்னு.”

“நான் தான் நீ அன்றைக்கு சொன்னதிலேயிருந்து அவ இருக்கற திசைக்கே போறதில்லையே.”

“சும்மா சொல்லாதீங்கப்பா.” தன் தந்தையை விரோதத்துடன் பார்த்தான் சம்பத். “நேத்தைக்கு பட்டாபி மாமா வீட்டுக்கு போயிருந்தீங்களா ?”

“ஆமா. சாயந்திரம் சுரேஷ்தான் அம்மா வர லேட்டாகும் தாத்தா. நாம வெளியே போயிட்டு சீக்கிரம் வந்திரலாம், அம்மாவுக்கு தெரியாது தாத்தான்னு கெஞ்சினான். ஐயோ பாவம் குழந்தை கெஞ்சிரானேன்னு கூட்டிக்கிட்டுப் போனேன். அப்படியே பட்டாபி வீட்டுக்கும் போனேன். அதான் வசந்தி ஆஃபீஸ்லேருந்து வர்றதுக்குள்ளே திரும்பி வந்துட்டோமே. அப்புறம் எதுக்கு அவ குதிக்கிறா.” அப்பாவின் குரலில் தெரிந்த சலிப்பைக் கேட்டவனுக்கு கோபம் தலைக்கேறியது.

“அப்பா.” என்று குரலெழுப்பி கத்தினான். “ஒன்னும் செய்யாதமாதிரி நடிக்காதீங்க. நீங்க செய்யறத சைலன்டா செய்துடுங்க. அவ கேக்கப்போனா குதிக்கிறா கிதிக்கிறான்னு சலிச்சிக்குங்க.”

“ஐயோ கடவுளே. நான் என்னடா தப்பா பண்ணிட்டேன், நீ இவ்வளவு ஆத்திரப்படறாமாதிரி ?”

“பட்டாபி வீட்டுல என்ன பேசினீங்க ? சம்பத்தோட பெண்டாட்டி போற போக்கே சரியில்லே. இப்படியே போனா குடும்பம் சீரழிஞ்சிதான் போகப் போகுதுங்கன்னு சொன்னீங்களா ?”

பரந்தாமனுக்கு இப்போதுதான் புரிந்தது. பட்டாபி தான் நேற்று கூறிய விஷயத்தைப் பற்றி இவனிடம் பேசியிருக்க வேண்டும். அது சரி, இவன் ஏன் கோபப்படுறான் ? பெண்டாட்டியை அடக்க துப்பில்லை. என்கிட்ட வந்து குதிக்கிறான்.

“என்ன பேசாம இருக்கீங்க ? சொன்னீங்களா இல்லையா.”

“ஆமா சொன்னேன். அதானடா இந்தவீட்டுல நடக்குது! உண்மைய சொன்னா ஏன் உனக்கு கோவம் வருது ? அக்கம்பக்கத்துல பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னால ஏதாவது பண்ணு.”

“அப்பா, ஆஃபீஸுக்கு போற நேரத்துல என் மூடை கெடுக்காதீங்க. நீங்க அவளைப் பத்தி பேசினது உண்மைன்னா வசந்தி சாயந்திரம் ஆஃபீஸ்ல வந்ததும் அவகிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க.”

“நீ என்னடா பேசறே. உனக்கென்ன பைத்தியமா ?”

“அது மட்டுமில்ல. இனிமே இந்தமாதிரி எங்கேயும் போய் வம்பு பேசமாட்டேன்னும் ப்ராமிஸ் பண்ணனும்.”

“கால்ல விழணுமா ?”

“அது உங்க இஷ்டம்.”

அவன் குரலில் ஒலித்த எகத்தாளம் அவரை வெகுவாய் பாதித்தது. பதில் பேசாமல் மெளனம் சாதித்தார். இவன் கிட்டே பேசி பிரயோசனம் இருக்கும் என்று அவருக்கு தோந்றவில்லை.

“என்ன சத்தத்தையே காணோம்.”

“என்னால முடியாதுப்பா. உனக்கோ உன் பெண்டாட்டிக்கோ இங்க இருக்க இஷ்டமில்லேன்னா நீங்க வேற வீட்ட பாத்து போயிடுங்க, எனக்கு ஆட்சேபணையில்லே.”

“என்னது, நாங்க போறதா ?”

அவன் பார்வையிலும் குரலிலும் இருந்த உஷ்ணத்தை அவரால் உணர முடிந்தது. அவர் உடனே பதில் பேசாமல், அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல், ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். தெருவில் போன ஓரிரண்டு பேர் வீட்டு பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு போவது தெரிந்தது.

“நாங்க ஏன் போகணும் ? இந்த வீட்டுல நான் எவ்வளவு பணத்தை முடக்கி டெவலப் பண்ணியிருக்கேன் ? என் பேரில கம்பெனியிலருந்து இந்த வீட்டுக்காக எடுத்த லோனை நீங்களா அடைப்பீங்க ? சரி, அது போகட்டும். கிருஷ்வேணி கல்யாணத்துக்கு சீர் செனத்தின்னு நான்தானே செஞ்சேன் ? அப்பான்னு பேருக்கு வந்து மனையில உக்காந்ததைத் தவிர நீங்க என்ன செஞ்சீங்க ? நாங்க வெளியே போகணும்னா இந்த வீட்டை வித்துட்டு எனக்கு பதினைஞ்சு லட்சம் குடுத்துடுங்க. அப்பாவுமில்லே பிள்ளையுமில்லன்னு போயிடறேன். என்ன சொல்றீங்க ?”

அவன் குரல் எழுப்பி போட்ட சப்தத்தில் தெருவில் ஒரு சிறிய கூட்டமே தன் வீட்டின் முன் சேர ஆரம்பித்ததைப் பார்த்த பரந்தாமன் திரும்பி அவனை முறைத்தார். “டேய் இவ்வளவு காலமா காப்பாத்தி வந்த குடுப்ப மானத்தை தெருவிலே கூவி வித்துடுவே போலருக்கே. இப்ப நீ இருக்கற நிலையிலே நான் என்ன சொன்னாலும் உறைக்காது. போ. ஆஃபீஸுக்கு போயிட்டு சாயங்காலமா வா. பேசலாம்.” அவனுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தெருவில் இறங்கி நடந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் கூடியிருந்த கூட்டமும் கலைந்து சென்றது.

தெருவில் இறங்கிய பிறகுதான் கையில் காலணா காசுகூட இல்லையென்று அவருக்கு உறைத்தது. திரும்பி வீட்டுக்கு போக மனமில்லாமல் சட்டை பாக்கட்டை தடவிப் பார்த்தார். நல்ல வேளை, நேற்று வெளியே போகும்போது எடுத்துச் சென்ற டூப்ளிகேட் சாவி பாக்கெட்டில் கிடந்தது. பத்து பதினைந்து நிமிடத்தில் அவன் கிளம்பிப் போய்விடுவான் பிறகு திரும்பி வரலாம் என்று நினைத்துக் கொண்டு அருகிலிருந்த பார்க்கை நோக்கி நடந்தார்.

காலை நேரத்தில் கூட்டம் அதிகமில்லாததால் மர நிழலில் கிடந்த சிமென்ட் பென்ச் காலியாயிருந்தது. கால்களை நீட்டி அமர்ந்து கண்களை மூடினார். அவரையுமறியாமல் கண்கள் குளமாயின. சிந்தனை பின்னோக்கி ஓடியது.

****

பரந்தாமனுடைய மகள் கிருஷ்ணவேனிக்கு அப்போது மூன்று வயதிருக்கும். நன்றாய் ஓடி, ஆடி வேலை செய்துக்கொண்டிருந்த மரகதம் – அவர் மனைவி – திடாரென்று கால் வலிக்கிறதென்று உட்கார்ந்தவள் இரண்டே நாளில் ஒரு பக்கம் கையும் காலும் சுரணையில்லாமல் போகவே படுத்தப் படுக்கையாகிப்போனாள்.

‘மூளையில் சிறிதாய் ஒரு கட்டி முளைத்திருக்கிறது. ஆபரேட் பண்ணி எடுத்துவிட்டால் சரியாய் போய்விடும் ‘ என்று கம்பெனி ஊழியர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த டாக்டர்கள் கூறியபோது பரந்தாமனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஊரிலிருந்த மரகதத்தின் தமக்கையயும் அவருடைய கணவரையும் வரவழைத்து ஆலோசனைக் கேட்டார்.

அவர்களுடைய ஆலோசனையின்பேரில் கம்பெனி நியமித்திருந்த மருத்துவமனையில் சேர்க்காமல் அதே ஊரிலிருந்த பேர்பெற்ற தனியார் மருத்துவமனையில் மனைவியை அனுமதித்து பெரும் பொருட்செலவில் மருத்துவம் பார்த்தார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் சிகிச்சை பலனளிக்காமல் ஆபரேஷன் முடிந்து நினைவு திரும்பாமலேயே மனைவி இறந்துபோனபோது ஐந்து வயதும், மூன்று வயதுமாய் நின்ற இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாய்போனதைப்போல் உணர்ந்தார் பரந்தாமன்.

உற்றாரும் உறவினரும் எத்தனையோ வற்புறுத்தியும் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இரண்டு குழந்தைகளையும் தனியாய் நின்று வளர்த்தார். சிறுக சிறுக சேமித்து மனைவியின் மருத்துவ செலவுக்காக ஏற்பட்ட கடனை அடைத்து முடித்த கையோடு கம்பெனி ஊழியர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த ஹவுஸிங் திட்டத்தில் சேர்ந்து லோன் எடுத்து சிறியதொரு வீட்டையும் கட்டினார்.

ஆரம்ப முதலே அவருடைய மூத்த மகன் சம்பத் ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்தான். தாயில்லா பிள்ளையாயிற்றே என்று செல்லம் கொடுத்து வளர்த்து குட்டிச்சுவராக்கிவிட்டாய் என்று பார்ப்பவர்களெல்லாம் சொல்லும் அளவுக்கு அவன் மோசமாகிப்போனான். படித்து முடித்து எந்த வேலைக்கும் போகாமல் நன்பர்களுடன் சுற்றித்திரிந்து நாளொரு பிரச்சினை என்று வந்து நின்றபோதுதான் கம்பெனியில் அறிமுகமாயிருந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தில் மகனுக்காக தன் வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்.

வேலைக் கிடைத்த முகுர்த்தமோ என்னவோ சம்பத்தின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. டே ஷிப்டும் நைட் ஷிப்டும் மாறி மாறி வந்ததில் அவனுக்கிருந்த நண்பர் கூட்டம் நாளைடைவில் கலைந்துப் போயிற்று. கம்பெனியில் தன் தந்தைக்கு இருந்த மதிப்பையும் தனக்காக இன்னும் மீதமிருந்த ஐந்து வருட சர்வீஸைத் தியாகம் செய்தவர் தன் தந்தை என்பதையும் உணர்ந்தவனாய் அவரை மதித்து நடக்க ஆரம்பித்தான். மாத சம்பளத்தை அப்படியே தன் தந்தையிடம் கொடுப்பது மட்டுமல்லாமல் அவருடைய அறிவுரைப்படி கம்பெனியில் லோன் எடுத்து வீட்டை விசாலப்படுத்தியதோடு தன் தங்கை கிருஷ்ணவேனி படித்து முடித்ததும் அவளுக்கு தன் செலவிலேயே திருமணமும் செய்து வைத்தான்.

அதுவரை அமைதியாய் சென்றுக் கொண்டிருந்த தந்தை-மகன் வாழ்க்கையில் புயலாய் வந்து சேர்ந்தாள் வசந்தி. அவர்களிருந்த வீட்டுக்கு நேர் எதிர் வீட்டுக்கு தாயும் மகளுமாய் (தகப்பன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக அக்கம்பக்கத்தில் பேச்சு) வாடகைக்கு வந்து சேர்ந்த ஒரு மாதத்திலேயே சம்பத்தை வளைத்து கையில் போட்டுக் கொண்டாள் அவள். அது ஒரு தரம் கெட்ட குடும்பம் என்று பலரும் சொல்லியும் கேளாமல் அவளைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான் சம்பத். மகனை விட்டால் தனக்கு வேறு யார் இருக்கிறார்கள், அவன் சந்தோஷம்தான் முக்கியம் என்று நினைத்த பரந்தாமன் அவன் இஷ்டப்படியே அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். பெண் வீட்டாரின் குடும்பத்தைப் பற்றி யாரோ அவருடைய மகளுக்கு எழுதிப் போடவே மருமகனுடைய நிர்பந்தத்தின்பேரில் கிருஷ்ணவேனியும் திருமணத்திற்கு வரவில்லை. அவள் என் தங்கையுமில்லை நான் அவளுக்கு அண்ணனுமில்லை என்று திருமணத்தன்றே உறவை முறித்துக் கொண்டான் சம்பத். புதிதாய் வந்த மனைவியின் கட்டளைப்படி தன்னை மதிக்காத அவள் வீட்டுக்குப் போகக்கூடாது என்று அவருக்கும் தடை போட்டுவிட்டான். ரகசியமாய் மகளுடன் தொலைப்பேசியில் பேசுவதோடு நின்றுப் போனது தந்தை-மகள் உறவு.

மகனையும் மகளையும் ஒருசேர இழந்ததுபோல் உணர்ந்த பரந்தாமன் மருமகள் மற்றும் அவள் தாயின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி தன் சொந்த வீட்டிலேயே ஒரு வேலைக்காரனையும் விட கேவலமாய் நடத்தப்பட்டபோதும் சம்பத் கண்டுக்கொள்ளவில்லை. மகளும் மருமகனும் காலையில் புறப்பட்டு அலுவலகத்திற்கு போனவுடன் சிங்காரித்துக்கொண்டு அவளுடைய தாயும் வெளியே போவது வழக்கமாகிவிடவே இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துக்கொள்ள பழகிப்போனார் அவர். அத்துடன் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள் வாங்கி வருவது, குடிநீர், எலெக்ட்ரிக் பில் கட்டுவது, இத்யாதி, இத்யாதி என்று தன் பேரன் பிறக்கும்வரை நடைபிணமாய் உலவி வந்தார்.

பேரன் சுரேஷ் வந்தபிறகு அவர் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வந்ததுபோல் உணர்ந்த பரந்தாமன் அவனைக் காலையில் குளிப்பாட்டுவதிலிருந்து வேளாவேளைக்கு உணவு கொடுத்து இரவு உறங்க வைப்பது வரை தானாகவே முன்வந்து செய்வதில் தனிச்சுகம் கண்டார். சம்பளம் இல்லாமல் இத்தனை வேலையும் நடக்கிறதே என்றும் தன் குழந்தையின் இடைஞ்சல் இல்லாமல் ஊர் சுற்ற முடிகிறதே என்ற நினைப்பிலும் தாயும் மகளும் அவரைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டனர். சம்பத்துக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட சம்பத்துக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதில் சம்மந்தியம்மாளும் மருமகளும் எவ்வளவு சமர்த்தானவர்கள் என்று வியந்துப்போனார் அவர்.

பேரனோடு பேரனாக ஒன்றிப் போயிருந்தவர் மருமகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனிக்கத் தவறிப்போனார்.

அடுத்தத் தெருவில் வசித்து வந்த அவருடைய நண்பர் பட்டாபியைத் தற்செயலாகப் பார்த்தபோதுதான் அவருக்கு விஷயம் தெரிந்தது. “என்ன பரந்தாமன் உன் மருமகளைப்பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உன்கிட்ட சொல்லி வேதனைப்படவைக்க வேண்டாம்னு பாத்தேன்.” என்ற பீடிகையுடன் பட்டாபி ஒருநாள் வழியில் பார்த்துவிட்டு ஆரம்பித்தபோது அவர் திகைப்புடன் தன் நண்பரைப் பார்த்தார்.

“என்ன சொல்றே பட்டாபி ? நீ என்ன கேள்விபட்டே ?”

“உன் மருமகளுக்கு புத்தி பிசகி போச்சின்னு நினைக்கிறேன்.”

பட்டாபிக்கு எந்த விஷயமானாலும் அதிகப்படியா ஜோடிச்சி சொல்றதுதான் வழக்கம்னு அவருக்கு தெரியும். ஒன்னுமில்லாத விஷயத்தைக்கூட காது மூக்குன்னு வச்சி பெரிசாக்கிடுவான். அதனால் “நீ என்னடா சொல்றே ? தெளிவாத்தான் சொல்லேன்.” என்றார் பரந்தாமன் எரிச்சலுடன். பேரன் பள்ளியிலிருந்து வருவதற்குள் வீட்டிற்கு போய்விடவேண்டும் என்ற அவசரம் அவருக்கு.

“இல்லடா, உன் மருமகளையும் யாரோ ஒரு ஆட்டோ டிரைவரையும் சேர்த்து மோசமா நம்ம தெருமுனைலயிருக்கற ஆட்டோ ஸ்டான்டில பேசிக்கிட்டிருக்கிறதை நான் காதால கேட்டேன்டா. அதான் உன் காதுல போட்டு வைக்கலாம்னு பாத்தேன்.”

“என்னது, ஆட்டோ டிரைவரா ? கர்மம், கர்மம். சம்பத்துக்கிட்டே பேசி பார்க்கிறேன். என்னால வேறென்ன செய்யமுடியும் ?” மேலும் பேச விருப்பமில்லாமல் வீட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

மருமகளைப் பற்றி அவருக்கு ஆரம்ப முதலே நல்ல எண்ணம் இல்லைதான். ஆனால் இந்த ஆட்டோஸ்டான்ட் சமாச்சாரம்.. கேட்கவே நாராசமாயிருந்தது. சே! என்னத்த பார்த்து இவளைக் கட்டிக்கிட்டானோ என்று தன் மகனை நினைத்து நொந்துக்கொண்டார். மருமகளும் சரி அவளுடைய தாயாரும் சரி – அவளை சம்பந்தியம்மாள் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை அவரால் – தன் குடும்பத்து கெளரவத்துக்கே இழுக்கு என்று நினைத்துத்தான் இந்த சம்பந்தமே வேண்டான்டா தன் மகனிடம் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சியிருக்கிறார். கேட்டால்தானே. இப்போது தன்னால் இந்த ஊரில் தலை நிமிர்ந்து நடக்கவே முடியாதபடி செய்திடுவாங்க போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு அன்று மாலை தன் மகன் வீட்டுக்கு வந்ததும் தான் கேட்ட விஷயத்தை அவனிடம் சொன்னார்.

அவன் அவர் சொன்ன விஷயத்தை காதில் போட்டுக்கொள்ளாமல் “உங்களுக்கு வேற வேலையில்லேப்பா. அந்த பட்டாபி மாமா எப்பவுமே இப்படித்தான். ஏதாவது ஊர் வம்பு கிடைக்காதான்னு அலைவார்.” சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடுத்த நாள் காலையில் சம்பத் வேலைக்கு போன பிறகு தன்னை சாடை மாடையாக மருமகளும் சம்மந்தியம்மாளும் அவர் காதில் விழ வேண்டுமென்று உரத்த குரலில் திட்டுவதை உணர்ந்தவர் இனி இந்த வீட்டில் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்தார். ஆனால் அவரால் எங்கு போகமுடியும் ? மகனின் கல்யாணத்தின்போது மகள், மருமகன் குடும்பத்தாரோடு ஏற்பட்ட மனவிரிசல் முழுவதுமாக சரியாகாத சூழலில் அவர்கள் வீட்டில் போய் தன்னால் தங்கமுடியும் என்று தோணவில்லை.

தாயும் மகளும் பேசுவது தன் காதில் விழாததுபோல் இருந்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

அதன்பிறகு ஒரு நாள், தாயும் மகளும் பேரனையும் தூக்கிக்கொண்டு எங்கோ போய் ஒரு வாரம் கழித்து வந்த போது அக்கம் பக்கத்தில் எல்லோரும் சாடை மாடையாய் பேசிக்கொள்வதை கண்டும் காணாமல் இருக்க முடியாமல்தான் பட்டாபியின் வீட்டுக்கு போய் அவன் வழியாக சம்பத்திடம் சொல்லி பார்க்கலாமா என்ற எண்ணத்துடன் நேற்று மாலை அவன் வீட்டுக்கு போனார் பரந்தாமன்.

ஆனால் அவன் சம்பத்திடம் இந்த விஷயத்தை எப்படி சொன்னானோ இன்று காலையிலிருந்தே மகன், மருமகள், சம்மந்தியம்மாள் கூட்டணி பெட்ரூமில் குசுகுசுவென்று பேசிக்கொள்வது அவருக்கு லேசாக கேட்டது. இந்த விஷயத்தில் இனிமேலும் மெளனமாயிருப்பது சரியில்லை என்று தீர்மானித்துக் கொண்டு தாயும் மகளும் வெளியே போனதும்தன் மகனிடம் பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.

ஆனால் அதற்கு வழியில்லாமல் அவனாகவே ஒருதலைப் பட்சமாய் தன்னையே குறை சொல்வான் என்று அவர் நினைக்கவேயில்லை. இவனை வளர்க்க அவர் என்ன பாடுபட்டிருப்பார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு இன்று காலையில் அவன் பேசிய பேச்சுகள் அவரை வெகுவாகப் பாதித்தது.

***

வெயிலின் தாக்கம் கூடுதலானதை உணர்ந்து திடுக்கென்று கண் விழித்த பரந்தாமன் சுற்றும் முற்றும் பார்த்தார். தான் பார்க்கில் தனியாக இருப்பதை உணர்ந்தார். எழுந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தபோதுதான் கையில் கடிகாரம் இல்லாதது தெரிந்தது. பார்க் மணிகூண்டு பகல் 12.10 மணி என்றது. பசி வயித்தைக் கிள்ள எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்.

பார்க், வீட்டுக்கு அருகிலேயே இருந்தாலும் வாக்கிங் ஸ்டிக்கின் துணையோடு நடந்து பழகிவிட்டு அது இல்லாமல் அவரால் விரைவாய் நடக்கமுடியவில்லை. மெதுவாய் நடந்து அவர் வீடு வந்து சேர்ந்தபோது வீட்டின் முன் வழக்கமாய் தொங்கும் பூட்டுக்கு பதில் வேறு பூட்டு தொங்குவதைப் பார்த்தார். திகைத்துபோய் சுற்றும் முற்றும் பார்த்தார். அதுவரை தங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு சிலர் அவர் கண்ணில் படுவதை தவிர்த்து அவரவர் வீட்டினுள் போய் கதவைச் சாத்திக்கொள்வதைப் பார்த்தவர் குழம்பிப் போனார்.

சிறிது நேரம் வாசற்படியில் உக்கார்ந்து ஓய்வு எடுத்தார். அடப்பாவி! தான் வரும் வரை வெளியேயே கிடக்கட்டும்னு வேணும்னே பூட்டை மாத்தி பூட்டிட்டு போயிட்டானா ? சம்பத் இப்படி செய்வான்னு அவர் நினைக்கவேயில்லை. அப்பான்னு கூட பாக்காம. இப்படியா செய்வான் ? சம்மந்தியம்மா இந்நேரம் வந்திருக்கணுமே ? அவ வேலையாயிருக்குமோ ? இருக்கும். காலையில் தாயும் மகளும் பேரக்குழந்தை பள்ளிக்கு போகும் ஆட்டோவிலேயே ஏறிக்கொண்டு போகும்போதே ‘என்ன இது புதுசா ? ‘ என்று தோன்றியது அவருக்கு. அந்த ஆட்டோ டிரைவரோடு தான் இவளை சேர்த்து பேசுகிறார்களோ என்றும் தோன்றியது. ‘வரட்டும் ராஸ்கல். இன்னையோட அவன் கணக்கைத் தீர்த்துவிட வேண்டியதுதான் ‘ என்று தீர்மானித்துக் கொண்டார். தகராறு செய்தால் போலீசுக்கு போகவும் தயாராயிருந்தார்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் எழுந்தவர் தன் மகனை போனில் கூப்பிட்டு கேட்கலாம் என்று அடுத்தவீட்டை நோக்கி போனார். வாசலை நெருங்கவும் வீட்டினுள் இருந்து அவருடன் சேர்ந்து ரிடையர்டான மணி அய்யர் வெளியே வரவும் சரியாயிருந்தது.

“ஒரு போன் பண்ணிக்கறேன் மணி.” என்றார் பரந்தாமன்.

“உள்ளே வா. உன் கிட்ட முக்கியமா ஒன்னு கேக்கணும்.”

“அதுக்கு முன்னால சம்பத்துக்கு போன் பண்ணிக்கறேன்.” என்றவர் போனை நோக்கி சென்றார்.

மணி உள்ளே எட்டிபார்த்து, “விசாலம் பரந்துக்கு குடிக்க மோர் கொண்டு வா. பாவம் வெயில்லே களைச்சுபோய் வந்திருக்கான்.” என்று தன் மனைவியை அழைத்தார்.

“தாங்க்யூ. நீ சொன்னது சரிதான். களைப்பாயிருக்கு, உடலைவிட மனசு.” என்றவர் தன் மகனுடைய அலுவலக எண்களை சுழற்றி, “ஹலோ நான் பரந்தாமன் பேசறேன். சம்பத்தை கூப்பிடுங்களேன். கொஞ்சம் அவசரமா பேசணும்.” என்றார்.

அவர் குரலில் இருந்த வேதனையும் படபடப்பும் அவருடைய மனநிலையை உணர்த்த மணி அய்யரும் அவர் மனைவியும் ஒருவர் ஒருவரை துயரத்துடன் பார்த்துக் கொண்டனர். நடந்த விஷயத்தை அவரிடம் எப்படி சொல்வதென்று என்று யோசித்தனர். ‘குழந்தை பெத்துக்க லாயக்கில்லாத மலடி ‘ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பழித்தபோதெல்லாம் தங்களுக்குள் அழுதவர்கள் இப்போது ‘பிள்ளை பெறாததே மேல் போலிருக்கிறது ‘ என்று நினைத்தனர்.

“டேய் சம்பத், என்ன காரியம்டா பண்ணியிருக்கே ? காலைல ஒரு வார்த்தை சொல்லிட்டேன்கிறதுக்காக வீட்டை பூட்டி அப்பனை ரோட்டில நிக்க வச்சுட்டயே.”

பரந்தாமன் தன் மகனிடம் தொலைப்பேசியில் பேசுவதைக் கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம் போய் தோளைத் தொட்டார். “டேய் டென்ஷனாகாத. அதுக்கு அவன் காரணமில்லை.”

அவர் பேசுவதைக் கேட்ட பரந்தாமன் தொலைப்பேசியின் வாயைப் பொத்தியவாறு அவரைப் பார்த்து திரும்பினார். “நீ என்னடா சொல்றே ?”

“ஆமா. போனைக் கொண்டா.” தொலைப்பேசியை வாங்கியவர், “சம்பத் பெர்மிஷன் போட்டுட்டு உடனே கிளம்பி வா. அர்ஜென்ட்.” என்று கூறிவிட்டு பரந்தாமன் தோளைச் சுற்றி கையை வளைத்து ஆதரவாய் அணைத்தார். “வந்து உக்கார். மெதுவா பேசலாம். விசாலம் அந்த மோரைக் கொண்டா. நீ போய் சாப்பாடு எடுத்துவை.”

“சஸ்பென்ஸ் வைக்காம எதுவாயிருந்தாலும் பரவாயில்லே சொல்லுடா. அதான் ரோட்டிலேயே நிக்க வச்சுட்டானே. இதவிட வேற என்ன நடக்கபோவுது.” என்று உட்காரமல் ஜன்னல் வழியே தன் வீட்டையே பார்த்துக்கொண்டு நின்றவரைப் பிடித்து உட்கார வைத்து கையில் மோர் டம்ளைரைத் திணித்தார் மணி அய்யர்.

“மணி. இத குடி முதல்லே. சம்பத் வந்துடட்டும் பேசலாம்.”

“சம்பத் வரும்போது வரட்டும். நீ விஷயத்தை சொல்லு. ஏதாவது ஏடாகூடமா நடந்திடுச்சா நான் போனதுக்கப்புறம். ?”

“ஆமாடா. சம்பத் கம்பெனிக்கு இறங்கி போறதுக்குன்னே காத்திருந்தாப்பலே உன் மருமகளும் அவ அம்மாவும் ஆட்டோவுல வந்து இறங்கினாங்க. பின்னாலயே ஒரு மினி வேன் வந்திச்சு. வீட்டுல இருந்த தட்டு முட்டு சாமான்க, பீரோ, கட்டிலுன்னு கொஞ்சம் சாமான்களை எடுத்துக்கிட்டு புதுசா ஒரு பூட்டைப் போட்டுட்டு போயிட்டாங்கடா. விசாலம் போய் மெதுவா பேசிப்பார்த்தா. ‘உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க ‘ன்னுட்டாளாம். கூடவே, சுரேஷைக் கூட்டிக்கிட்டு போவானே அந்த ஆட்டோ டிரைவர், அவனும் வந்திருந்தான். அவன்தான் சாமானையெல்லாம் எடுத்து வச்சான். அக்கம்பக்கத்தில பேசிக்கிட்டப்பவே நெனச்சேன். ஆனா உங்கிட்டே எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சிட்டிருந்தேன். இப்போ விஷயம் ரொம்ப சீரியசாயிடுச்சி.” அவர் சொல்லி கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட விசாலம்

“அவா ரெண்டு பேர் கழுத்திலேயும் கிடந்த நகைகளைப் பார்த்தா வீட்டுல இருந்த எல்லா நகைகளையும் கொண்டு போயிருப்பான்னு தான் தோணுது.” என்றாள்.

“ஆமா அதுதான் இப்போ முக்கியம். நீ உள்ளாற போ. டேய் சம்பத் நீ என்னடா இடிஞ்சி போய் உக்காந்துட்டே.”

பரந்தாமன் மெதுவாய் தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அவர் முகத்தில் கவலைக்கு பதில் ஒரு நிம்மதி தெரிந்தது.

“என்னடா. இப்பிடி பேசாமயிருந்தா என்ன அர்த்தம் ? இப்ப என்ன செய்ய போற ? சம்பத்துக்கிட்ட இதை எப்படி சொல்லப் போறே ?”

“என்னத்த சொல்ல சொல்றே ? சனியன் விட்டுதுன்னு தலைய முழுகிடுறான்னு சொல்லவேண்டியதுதான்.”

“என்னடா உளர்றே ?”

திடாரென்று எதையோ நினைத்துக் கொண்டவராய் எழுந்த பரந்தாமன் தொலைபேசியை நோக்கி போனார். “மணி, இப்போ எனக்கிருக்கிற கவலையெல்லாம் சுரேஷைப் பத்தி தான். இரு ஸ்கூலுக்கு போன் பண்ணிட்டு வரேன்.”

மணி அய்யர் தன் மனைவியை கேள்விக்குறியுடன் பார்க்க இருவரும் தொலைப்பேசியில் பேசும் பரந்தாமனை குழப்பத்துடன் பார்த்தனர்.

“ஹலோ நான் உங்க ஸ்கூல்லே யு.கே.ஜி. பி செக்ஷன்லே படிக்கிற சுரேஷோட தாத்தா பேசறேன். சுரேஷ் க்ளாஸ்லே இருக்கானான்னு பாத்து சொல்ல முடியுமா ? என்ன ? கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணவா ? நான் லைன்லேயே இருக்கேன். ப்ளீஸ், கொஞ்சம் சீக்கிரம் பார்த்து சொல்லுங்களேன்.” என்றவர் தன் நண்பனைப் பார்த்தார். “தப்பா நினைச்சுக்காதே மணி. சுரேஷையும் அந்த பாவிங்க கொண்டுபோயிருந்தா என் வாழ்க்கையே போச்சி. அவன்தான்டா எனக்கு எல்லாம்.”

“பரவாயில்லை. நீ பேசி முடி. உன் தாபம் எனக்கு புரியுது.”

“தாங்க்ஸ் மணி.” என்று அவரைப் பார்த்து சொன்ன பரந்தாமன் போனில் குரல் கேட்கவே, “சொல்லுங்க சுரேஷ் க்ளாஸ்ல இருக்கானா ? குட். அவனை ஸ்கூல் முடிஞ்சதும் யார் கூடேயும் அனுப்பிடாதீங்க நானும் அவனோட அப்பாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்து கூப்பிட்டுக்குறோம். வீட்டில ஒரு பிரச்சினை. அதுதான்… சாரி ஃபார் டிரப்ளிங் யூ.” போனை வைத்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து நண்பரைப் பார்த்து லேசாக புன்னகைத்தார்.

“நல்ல வேளை, சுரேஷ் ஸ்கூல்லதான் இருக்கிறான். ஸ்கூல் டைம் முடியறதுக்குள்ள நானும் சம்பத்தும் அங்க இருந்தாகணும். இல்லன்னா அந்த ஆட்டோ பய வந்து தகராறு செஞ்சாலும் செய்வான்.”

“மணி இப்போ 2.00 தானே ஆகுது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நீ டென்ஷனாகாம வந்து சாப்பிடு. வா. கை கழுவு. விசாலம் சாப்பாடு எடு.”

நண்பரின் சொல்லைத் தட்ட இயலாமல் பரந்தாமன் அவர்களோடு சேர்ந்து உணவருந்தி முடிக்கவும் சம்பத் வரவும் சரியாயிருந்தது.

வரும்போதே கோபத்தின் உச்சியில் அவன் இருப்பதை உணர்ந்த மணி அய்யர் பரந்தாமனை பேச வேண்டாம் என்று சைகைக் காண்பித்தார்.

“சம்பத் டென்ஷனாகம இப்படி உக்கார். நான் என்ன நடந்ததுன்னு சுருக்கமா சொல்றேன். அதுக்கப்புறம் நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ அதை சொல்லு. பரந்துக்கு இதுல எந்த வித சம்பந்தமுமில்லே.” பரந்தாமனிடம் சொன்ன அதே விஷயத்தை மணி அய்யர் சுருக்கமாய் சொல்லி முடிக்கும் வரை மரியாதை நிமித்தம் பேசாமலிருந்தவன் தன் தந்தையைப் பார்த்து கோபத்துடன் கத்தினான்.

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். நீங்க உங்க வேலையைப் பாத்துக்கிட்டு சும்மா இருந்திருந்தா இது நடந்திருக்குமா ? இப்ப என்னை என்ன பண்ண சொல்றீங்க ? சுரேஷையும் அவ கூட்டிக்கிட்டு போயிருந்தா என்ன ஆகுறது ?”

மணி அய்யர் அவனைத் தொட்டு சமாதானப்படுத்தினார். “சம்பத், கவலைப்படாதே. சுரேஷ் ஸ்கூல்லதான் இருக்கான். பரந்து அதை ஆல்ரெடி ஃபோன்ல கன்ஃபர்ம் பண்ணியாச்சு. நீங்க ரெண்டு பேரும் போய் முதல்ல அவனைக் கூட்டிக்கிட்டு வாங்க. அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். வர வழியிலே பூட்டைத் திறக்க ஆளையும் கூட்டிக்கிட்டு வாங்க. நீங்க ரெண்டு பேரும் பூட்டை உடைக்க ஆரம்பிச்சீங்கனா இந்த ரோட்டில இருக்கற எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிடும்.”

தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இறங்கிப் போவதை பார்த்த மணி அய்யர் தன் மனைவியைப் பார்த்து பெருமூச்செறிந்தார்.

தெரு முனையிலுள்ள ஆட்டோவைப் பிடிக்கும்வரை பேசாமலிருந்த சம்பத் தன் தந்தையை தணியாத கோபத்துடன் பார்த்தான். “எல்லாத்துக்கும் காரணமாயிருந்துட்டு இப்போ பேசாம இருந்தா எப்படிப்பா. ஏதாவது பேசுங்களேன். இப்போ என்ன செய்யறதா உத்தேசம் ?”

சிறிது நேரம் மெளனமாய் சாலையை பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமன் தன் மகனை திரும்பி சோகத்துடன் பார்த்தார். “உன் மனசைத் தொட்டு சொல்லு சம்பத். இந்த ரெண்டு வருஷ தாம்பத்திய வாழ்க்கையில நீ சந்தோஷமா இருந்திருக்கிறியா ? ஒரு அடிமைமாதிரி அம்மாவும் பொண்ணும் சொல்றத கேட்டுக்கிட்டு, அவ என்ன செஞ்சாலும் வாய் பேச முடியாம, இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா ? நீ இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிஜமான வாழ்க்கையில்லை. வெறும் நிழல்தான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி வாழ்ந்த அந்த நிஜமான வாழ்க்குக்கு மறுபடியும் போகனும்னா, தொலைஞ்சது சனியன்னு உன் பெஞ்சாதிய தலைமுழுகு. தாயும் மகளும் நம்ம சுரேஷை சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரமாட்டாங்க. வந்தாலும் அவங்க செஞ்ச காரியத்தை காரணம் காட்டி குழந்தைய அவங்களுக்கு குடுக்க முடியாதுன்னு எந்த கோர்ட்டில வேணும்னாலும் வாதாடி நம்மளால செயிக்கமுடியும். நீ மாத்திரம் ஸ்டிராங்கா இருந்தா போதும். என்ன சொல்றே ?”

அவர் பேசியதை ஆமோதிப்பவன் போல் இடைமறித்து ஒன்றும் பேசாமல் அவன் கேட்டபோதே பாதி கிணறு தாண்டியதுபோல் உணர்ந்தார் பரந்தாமன்.

தன் தந்தை பேசியதில் ஒரு வித நியாயம் இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. தன் மனைவியையும் சுரேஷை கொண்டு செல்லும் ஆட்டோ டிரைவரையும் சேர்த்து அக்கம்பக்கத்தில் பேசிக்கொள்வது அவன் காதிலும் விழத்தான் செய்தது. ஆனால் அப்படி ஒன்றுமில்லை அவன் தன்னைவிட வயதில் இளையவன். அவனுக்கும் தனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்று அவள் அடித்து சொன்னபோது அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அப்பா சொன்னது போல் இந்த இரண்டு வருட திருமண வாழ்க்கையில் என்றாவது சந்தொஷமாக இருந்திருக்கிறானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாயும் மகளும் அவனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவளுடைய சம்பளம் எவ்வளவு, அதை என்ன செய்கிறாள் என்று கூட தனக்கு தெரியாது என்று இப்போது அவன் நினைத்து பார்த்தான். தாயும் மகளும் – முக்கியமாய் தன்னுடைய மாமியார் – அளவுக்கதிகமாக அலங்காரம் செய்துக்கொண்டு வேளை, நேரம் பார்க்காமல் ஆட்டோவில் போவதும் வருவதும் கேட்டால் ‘நாங்க எங்க போறோம் என்ன செய்யறோம்னு உங்க கிட்டயோ உங்க அப்பாகிட்டயோ சொல்லிக்கிட்டிருக்க முடியாது ‘ என்று எடுத்தெறிந்து பேசும் இவளை எத்தனை நாள் தன்னால் பொறுத்துக் கொள்ளமுடியும் என்று கூட அவன் பல நாள் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் சுரேஷ் வளர்ந்து ஆளாகும் வரை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.

அதற்குள் அப்பா அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துவிட்டாரே என்ற ஆதங்கம்தான் அவர் மேல் கோபமாய் மாறியது.

சுரேஷ் பயிலும் பள்ளியின் வாசலை ஆட்டோ நெருங்குவதை உணர்ந்த சம்பத் தன் தந்தையை பார்த்தான். “அப்பா ஸ்கூல் இன்னும் விடலை. நீங்க போய் எச்.எம் மை பார்த்து சொல்லிட்டு சுரேஷை கூட்டிக்கிட்டு வந்திடுங்க. நான் வெளியே நிக்கறேன்.”

“வேண்டாம்டா. ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். ஒரு வேளை வசந்தியும் அவ அம்மாவும் அங்க வந்திருந்தா நீ இல்லாம பிரச்சினையாயிடும்.”

“அதுவும் சரிதான். ஆனா அவங்க ரெண்டு பேரும் அங்க இருந்தா நீங்க பேசாம இருக்கணும். நான் பேசிக்கறேன். என்ன சரியா ?”

“சரிடா.”

இருவரும் இறங்கி தலைமை ஆசிரியையின் அறைக்கு செல்லவும் பள்ளி இறுதி மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது.

சம்பத் தன்னையும் தன் தந்தையையும் அறிமுகப்படுத்திக்கொண்டு தான் வந்த விஷயத்தை சுருக்கமாய் கூறினான்.

“கொஞ்ச நேரம் முன்னாடி எங்களுக்கு போன் பண்ணது யாரு, நீங்களா ?”

பரந்தாமன் “நான்தான் போன் பண்ணினேன்.” என்றார்.

“சரி, உக்காருங்க. சுரேஷைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்றேன்.”

சிறிது நேரத்தில் தன் வகுப்பு ஆசிரியையுடன் வந்த சுரேஷ் தன் தந்தையையும் தாத்தாவையும் கண்டவுடன் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு அவர்களிடம் ஒடி வந்தான்.

“பிஹேவ் யுவர்செல்ஃப் சுரேஷ். டாச்சர் ஒரு நிமிஷம் சுரேஷை வெளியில கூட்டிக்கிட்டு போங்க.” கண்டிப்புடன் சொன்ன தலைமை ஆசிரியை சம்பத்தைப் பார்த்தார். “எனி ப்ராப்ளம் அட் ஹோம் ?”

“யெஸ் மேடம். என் மனைவி இப்போ என்னோட இல்லை. இனி சேர்ந்து குடும்பம் நடத்தறதாயில்லை. அதனால இனிமே என்னோட அப்பாதான் சுரேஷை இங்கே கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு திரும்பி கூட்டிக்கிட்டு போவாரு. வேற யார் கூடவும் அவனை அனுப்பிடகூடாது மேடம். நீங்க வாட்ச்மேன் வரைக்கும் சொல்லி வச்சா தேவலை.”

“மிஸ்டர் சம்பத் உங்க வீட்டுல கணவன் மனைவிக்கிடையில ப்ராப்ளம் இருந்தா பேசி தீர்த்துக்க பாருங்க. இன்னைக்கு நீங்க வந்தாமாதிரி நாளைக்கு உங்க மனைவி வந்து என்னோட மட்டும் தான் அனுப்பணும்னு சொன்னா நாங்க என்ன செய்யறது ? அதுவுமில்லாம யார் வந்து யாரை கூட்டிக்கிட்டு போறாங்கன்னு வாட்ச்மேனால எப்படி பார்த்துக்கிட்டிருக்க முடியும் ?”

கோபத்துடன் குறுக்கிட முயன்ற தன் தந்தையை கண்ணால் சைகை காண்பித்து அடக்கினான். “ஒகே மேடம். நான் ஒரு முடிவு எடுத்துட்டு ரெண்டு நாளைல உங்களை வந்து பார்க்கிறேன். சுரேஷுக்கு அதுவரை லீவ் கொடுத்தா உபகாரமாயிருக்கும்.”

“தட்ஸ் குட். டூ டேஸ் ஈஸ் ஒகே. அதுக்கு மேல நீட்டிடாதீங்க. ஆல் தி பெஸ்ட். நீங்க சுரேஷை கூட்டிக்கிட்டு போங்க. டாச்சர் சுரேஷை உள்ளே கொண்டு வாங்க.”

சம்பத் தன் தந்தையுடன் சுரேஷை கூட்டிக்கொண்டு பள்ளியின் வாசலை அடைந்தபோது வெளியே சுரேஷின் ஆட்டோ டிரைவர் தன் மனைவியுடன் நிற்பதைப் பார்த்து கொதித்துப் போனான்.

சுரேஷைக் கண்டதும் அவள் ஓடி வருவதைக் கண்ட சம்பத் தன் தந்தையிடம், “அப்பா நீங்க ஒண்ணும் பேசாம ஒதுங்கியிருங்க. இவளை நான் டால் பண்ணிக்கிறேன்.” என்றவாறு சுரேஷை தன் பின்னால் ஒளித்துக் கொண்டான்.

பரந்தாமன் ஒதுங்கி ஓரமாய் நின்று பேரனை நோக்கி ஓடிச் சென்ற மருமகளைப் பார்த்தார். தன் மகன் எச்.எம் ரூமில் ‘இனி தன் மனைவியோடு சேர்ந்து வாழ்வதாய் இல்லை ‘ என்று சொன்னதே போதும் ‘அவன் திருந்திவிட்டான். பேரனை விட்டுக் கொடுக்கமாட்டான் ‘ என்பதை புரிந்துக் கொண்டு மெளனமாய் நடப்பதைப் பார்த்து, வேண்டுமென்றால் தலையிடலாம் என்று நினைத்தார்.

“என்னங்க நீங்க வந்திருக்கீங்க ?” ஒன்றும் நடக்காதது போல் சுரேஷை நோக்கி நீட்டிய கரங்களை தட்டிவிட்டான் சம்பத். “நீ எதுக்கு ஆட்டோ டிரைவரோட வந்தே, அத சொல்லு முதல்ல ?”

“என்னங்க நீங்க ? இன்னைக்கு ஆபீஸ் சீக்கிரம் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதான் வீட்டுக்கு போற வழியில சுரேஷைக் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்தேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க ? இந்த கிழம் மறுபடியும் ஏதாவது போட்டுக் குடுத்திருச்சா ?”

தன் தந்தையை நோக்கி ஏளனத்துடன் காட்டிய அவளுடைய கரங்களை மடக்கி பிடித்த சம்பத், “இங்க பார். அவர் மேல பாயாத. எந்த வீட்டுக்கு சுரேஷைக் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்திருக்கே ? நம்ம வீட்டுக்கா இல்ல அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கா ?” என்று ஆட்டோவை பார்த்து கையை காண்பித்தான்.

“ஆமாய்யா. அவன் வீட்டுக்குத்தான். உன்னோட வாழ்ந்து என்ன சுகத்தை கண்டேன் ? நீ ஒரு ஆம்பளையே இல்லை. பின்ன உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது ?” ஆவேசத்துடன் குரலை எழுப்பி கத்தும் அவளையும் தன்னையும் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் சிலர் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த சம்பத் திரும்பி தன் மகனைப் பார்த்தான்.

கலங்கிய கண்களுடன் தன்னை ஏறெடுத்துப் பார்த்த அந்த பிஞ்சு முகத்தில் தெரிந்த அவமானமும் வேதனையும் அவனை அவன் எடுக்கவிருந்த முடிவில் உறுதிப்படுத்தின. தான் ஒரு கண்ணியமுள்ள ஆண்மகன், பொறுப்புள்ள தந்தை என்பதை தன் மகனுக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தவனாய் கண்களில் ஆத்திரத்துடன் நிற்கும் தன் முன்னாள் மனைவியை பார்த்து அமைதியாய் சொன்னான். “இங்க பார் வசந்தி. நமக்குள்ள இனி ஒண்ணுமில்லை. இனி சுரேஷ் என்னோடதான் இருப்பான். டைவேர்ஸ் நோட்டாஸ் உன்னைத் தேடி வரும். சுரேஷை எந்த ஒரு காரணத்துக்கும் விட்டுக் குடுக்கமாட்டேன். உன்னால என்ன பண்ண முடியுமோ செஞ்சுக்கோ. அப்பா நீங்க வாங்க போலாம். சுரேஷ் வா. இந்த அம்மா நமக்கு வேண்டாம்.”

‘இவனுக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது ? ‘ என்று திகைத்துப் போய் நிற்கும் அவளை பொருட்படுத்தாமல் தன் மகனை ஒரு கையிலும் தந்தையை ஒரு கையிலும் பிடித்தவாறு வெளியேறி தன்னை முறைத்து பார்ட்த்த ஆட்டோ டிரைவரை திருப்பி முறைத்து விட்டு விரைந்து நடந்தான் சம்பத் நிஜமானதொரு வாழ்வை நோக்கி.

****

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்