தமிழில் : ராமன் ராஜா
எதிரி விண்கலங்கள் பூமியை நெருங்கிவிட்டன. கரிய வானத்தில் நட்சத்திரப் பின்னணியில் அவை ஜொலித்தன. ஒவ்வொன்றும் நூறு மைல் நீளமுள்ள ராட்சச விண்கப்பல்கள். பூமியின் போர்க் கலங்கள் குட்டி பொம்மைகள் மாதிரி அவற்றின் இடையில் புகுந்து புறப்பட்டு வீரமாகச் சண்டை போட்டன. எதிரி வீசும் ப்ரோட்டான் கதிர்களில் சிக்காமல் அவை நாலாபுறமும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பித்தன. நடுநடுவே ஒன்றிரண்டு அடிபட்டு நெருப்புப் பந்தாக எரிந்து தூசிக் குவியலில் காணாமல் போயின.
வீடியோ விளையாட்டு கன்ஸோலைக் கீழே எறிந்துவிட்டு ஒரு சாக்லெட்டை உரித்து வாயில் போட்டுக் கொண்டான் நிக்கு. பத்து வயதுதான் ஆகிறது. பயல், படு சுட்டி. விண்வெளி பற்றியும் நட்சத்திரங்கள் பற்றியும் அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியர்கள் இல்லை. ‘இளம் விண்வெளி விஞ்ஞானி ‘ தேர்வில் முதலாவதாக வந்து நாஸாவிலிருந்து தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறான். விடுமுறை விட்டாயிற்றென்றால் தினம் பத்து மணி நேரம் வீடியோ கேம்!
அதனால்தான் இப்போது உலகத்தைக் காப்பாற்ற அவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
‘நிக்கு நிக்கு, ப்ளீஸ். விளையாட்டை நிறுத்தாதே. அதோ பார் எதிரிகள் லேசர் பீரங்கியை எடுத்து விட்டார்கள். நாமும் பதிலடி கொடுக்க வேண்டாமா ? ‘ என்று கெஞ்சினார் ஜெனரல். அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள்.
‘அவ்வளவுதானே ? இப்போ பாருங்க அங்கிள். ‘ நிக்குவின் சின்ன விரல்கள் திறமையாக ஜாய் ஸ்டிக்கை இயக்க, திரையில் போர் விமானம் செங்குத்தாக மேலே போய் ஒரு வட்டமடித்துத் திரும்பியது. வேகம், தூரம், நேரம் போன்ற ஏழு பரிமாணங்களை அவன் ஒரே சமயத்தில் கணக்கிட்டு சரியான கணத்தில் ப்ளாஸ்மா டார்பிடோவை விடுவித்தான்.
வீடியோ திரை கொள்ளாமல் ஒரு மகா வெடிப்பு. சிதறல். நெருப்புத்தீற்றல். எந்த சூப்பர் கம்ப்யூட்டராலும் முடியாத அதிவேகக் கணக்கை அவன் மூளை எப்படித்தான் போட்டதோ….எதிரி விமானங்களில் நாலில் ஒரு பங்கு காலி! ஜெனரல் கண்ணீருடன் சிரித்து வானத்தை நோக்கி முஷ்டியை உயர்த்தினார்.
‘அங்கிள், பாத்ரூம் போயிட்டு வந்து விளையாடறேன். ‘
‘சீக்கிரம் வா. சுவாரசியமான கட்டம். ‘
ஜெனரலுக்கு மட்டும்தான் தெரியும், இது விளையாட்டில்லை, நிஜம். திடாரென்று ஒரு நாள் ஆண்ட்ரோமீடாவிலிருந்து புற்றீசல் போல் புறப்பட்டு வந்துவிட்டார்கள் வேற்று கிரகவாசிகள். அவர்களின் மூளைக்கும் திறமைக்கும் போர்த் தந்திரங்களுக்கும் ஈடுகொடுக்க யாராலும் முடியாமல், தோல்வி மேல் தோல்வி. வழக்கமான போர் முறைகளில் பழகிப் போய்விட்ட ராணுவ அதிகாரிகளால் வித்தியாசமாகச் சிந்திக்கவோ, விரைவில் செயல்படவோ முடியாது என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி பூமியைக் காப்பாற்ற ஒரு கடைசி முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதான் என்று ஜெனரல் முடிவெடுத்தார். மொத்த விண்வெளிப் படையின் கட்டுப்பாட்டையும் ஒரு புத்திசாலியான சின்னப் பையனின் கைகளில் கொடுப்பதற்கு உலக அரசாங்கத்திடம் மன்றாடி அனுமதி வாங்கிவிட்டார். பொடியன் கைகளில் ஆணை போனதும் அவன் அடித்து தூள் பறத்துகிறான்! முதல் தடவையாக எதிரிப் படைகள் திணறுகிறார்கள். சிறுவனாகையால் அவன் பயந்துவிடக் கூடாது என்பதற்காக எல்லாம் விளையாட்டு என்று சொல்லி வைத்திருக்கிறார் ஜெனரல்.
அரை டிராயர் பொத்தானைப் போட்டபடியே வந்தான் நிக்கு. ‘இந்த விளையாட்டில் ஒரு தப்பு இருக்கிறது அங்கிள். ‘
‘என்னது ? ‘
‘விண்வெளியில்தான் காற்றே கிடையாதே…பின்னே எப்படி எதிரி விமானமெல்லாம் எரிந்து சாம்பலாகிறது ? ‘
‘அவர்களுடைய விமானத்தின் வெளிப்புறமெல்லாம் மக்னீஷியத்தினால் செய்தது. அவர்களோ கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுபவர்கள். லேசாக ஒரு ஓட்டை போட்டால் போதும்; ஆக்ஸிஜன் வெளியே கசிந்து மக்னீஷியத்தின் மீது பட்டாலே புஸ்வாணம்தான்! ‘
‘அப்படியா,.. சரி நாம் பம்பரம் விடலாம் ‘.
‘அய்யய்யோ! முதலில் இந்த விளையாட்டை முடிக்கவேண்டும். அப்புறம் பம்பரம். ‘
‘ஊகூம். போரடிக்கிறது. ‘
அவன் தாடையைப் பிடித்துக் கொண்டு ‘நிக்கு, என் கண்ணில்லை ? நீ மட்டும் எதிரிப் படையை அழித்து விட்டால் ராட்சச கோன் ஐஸ் க்ரீம் வாங்கித் தருகிறேன். ‘
நிக்கு யோசித்தான். ‘ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம். எனக்கு வனில்லா பிடிக்காது. என் வகுப்பிலேயே ராகுல் மட்டும்தான் வனில்லா சாப்பிடுவான். ‘
‘சரி, சரி. ஸ்ட்ராபெர்ரி. ‘ இந்த விளையாட்டில் மட்டும் ஜெயித்தால் ஐஸ் க்ரீம் பாக்டரியே உன்னுடையதுதானே பையா!
‘திரும்பி வருகிறார்கள் பார். படு கோபத்தில் இருக்கிறார்கள். ஜாக்கிரதை. ‘
‘பூ! அந்தப் பசங்களை இதோ கலக்குகிறேன் பாருங்க. ‘ நிக்குவின் விரல்கள் புயலால் செய்த வண்ணத்துப் பூச்சி போல் கம்ப்யூட்டரை இயக்க, மொத்த விண்வெளிப் படையும் ஒரு முகமாகச் சுழன்று திரும்பி ஒரு புள்ளியை நோக்கிப் புறப்பட்டது.
‘டேய் டேய், என்ன செய்கிறாய் ? ‘
‘இதே திசையில் நம் விமானங்கள் சென்றால் சூரியனின் கரோனா என்கிற வெளிப்புற நெருப்புப் பிழம்பின் வழியாகப் புகுந்து போகும். ‘
‘போனால் ?… ‘
‘எதிரிப்படை இப்போது பழிவாங்கும் கோபத்தில் இருப்பதால் துரத்திக் கொண்டு பின்னால் போவார்கள். ‘
‘அவர்களுடைய மக்னீஷியம் விமானங்கள் எரிந்து போய்விடும் ?.. ‘
‘கரெக்ட்! நம்முடைய விமானங்களெல்லாம் அந்த சூட்டைத் தாங்கக் கூடிய பாலிமரால் செய்யப் பட்டது. கவலையில்லை. ‘
‘சூரியன் வரை போய்த் திரும்பி வருகிற அளவுக்கு நம்மிடம் எரிபொருள் கிடையாது ‘ என்றார் ஜெனரல் இறுக்கமான முகத்துடன்.
‘எரிபொருளே தேவையில்லை. சூரியனின் ஈர்ப்பு விசையால் இழுக்கப் பட்டு பூமராங் மாதிரி போய்த் தானே திரும்பிவரும். கவண் கல் எஃபெக்ட்! ‘
ஜெனரலுக்கு மறுபடி அடக்க முடியாமல் கண்ணீர் வந்தது.
அடுத்த அரை மணி நேரம் நகத்தைக் கடிக்கும் மெளனத்தில் கழிந்தது. நிக்கு காதில் வாக்மேன் பொருத்திக் கொண்டு மெல்ல நடனமாடிக் கொண்டு கேக் தின்றுகொண்டு பூனைக் குட்டியைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு க்ரேயானால் சுவரில் படம் வரைந்து கொண்டு உற்சாக மூட்டையாக இருந்தான். ஜெனரல் போலவே மீசைக்காரப் படம்!
விமானங்கள் வேகமாக சூரியனின் நெருப்பு நாக்குகளின் நடுவே புகுந்தன.
‘பார் பார். அவர்கள் வந்த வேகத்தில் திசை திருப்புவதற்கு நேரமில்லை. டூ லேட்! ஜோதியாக எரிகிறார்கள் பார், ஒன்று, இரண்டு, மூன்று! ‘
எதிரி விமானங்கள் கொசு மாதிரி பொசுங்கிப் போவதைக் கண்டு ஜெனரல் கூத்தாடினார்.
‘நம்முடைய விமானங்கள் எங்கே ? ‘
‘சூரியனைச் சுற்றிக் கொண்டு திரும்பி வருகின்றன. நேராக பூமியை நோக்கி வரும்படி பாதையை அமைத்திருக்கிறேன். ‘
‘திருப்பு, திருப்பு! பூமியின் மேல் மோதிவிடப் போகிறது. ‘
‘மோதினால் என்ன ஆகும் ? ‘
‘பூமியே இருக்காது. அணு குண்டுகள் பொருத்திய டஜன் கணக்கான விமானங்கள் அந்த வேகத்தில் வந்து மோதினால்… ? உடனே திருப்பு எல்லாவற்றையும்! ‘
‘திருப்பும் அளவுக்கு எரிபொருள் இல்லை. சூரியன் இழுத்து விட்டதில் பத்து ஜி அளவுக்கு ஆக்ஸிலரேஷன் எகிறிவிட்டது. ‘
ஜெனரல் முகத்தில் கலவரத்தைப் பார்த்து சிரித்தான் நிக்கு. ‘கமான் அங்கிள். வெறும் விளையாட்டுத்தானே ? ‘ என்று ஒரு பாப் கார்ன் பாக்கெட்டைப் பிரித்துக் கொண்டே சொன்னான்.
(மைக்கேல் ஸ்வான்விக் எழுதிய Under ‘s Game என்ற சிறுகதையின் இளகிய தமிழ் வடிவம். இவர் எழுதியுள்ள தனிம வரிசை அட்டவணை அறிவியல் கதைகள்தொடரில் மக்னீஷியத்தை மையமாகக் கொண்டு எழுதிய கதை இது.)
r_for_raja@rediffmail.com
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- தொடரும் கவிதைக் கணம்
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- எள்ளிருக்கும் இடமின்றி
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- மழை ஆடை (Rain Coat)
- சென்னை இலக்கிய நிகழ்வு
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- பால் பத்து
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- மனவெளி நாடக விழா
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- திரை
- து ணை – 6
- நினைப்பும்.. பிழைப்பும்..
- ஓணான்கள்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- வெறுப்பு வர்ணம்
- மோகமுள்
- ‘இக்கணம் ‘
- நிஜங்களையும் தாண்டி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- பேசி பேசி…
- பிரிய மனமில்லை
- மெளனவெளி
- இடையினம்
- கூ ற ா த து கூ ற ல்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)