வேறொரு சமூகம்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

ஆர்.கே. நாராயன் (தமிழாக்கம் : நாகூர் ரூமி)


( Another Community

by R.K.Narayan)

இந்த கதையில் ஜாதியையோ சமூகத்தையோ நான் குறிப்பிடப்போவதில்லை. சமீபத்தைய மாதங்களின்

செய்தித்தாள்கள் இந்த விஷயத்தில் எளிதில் பயன் படுத்தக்கூடிய ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளன. அதாவது “

ஒரு சமூகம் ” என்பதாகவும் “ இன்னொரு சமூகம் ” என்பதாகவும் பட்டங்களை. அந்த வழக்கத்தை அனுசரித்து

நானும் இந்த கதையின் நாயகனுக்கு பெயர் எதுவும் கொடுக்கவில்லை. அவன் எந்த ஜாதி, மதம் என்பதை

விரும்பினால் நீங்களே கண்டு பிடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அவன் சட்டைக்குக் கீழே என்ன

பனியன் போட்டுள்ளான் என்று எப்படி நீங்கள் கண்டுபிடிக்க முடியாதோ அதைப்போல இதையும் நீங்கள்

கண்டுபிடிக்க முடியாதென்று நிச்சயமாக நம்புகிறேன். அதைக் கண்டுபிடிப்பது நம்முடைய நோக்கத்திற்கு எந்த

வகையிலும் முக்கியமானதல்ல, அவனுடைய பனியனைப் போலவே.

இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு அலுவலகத்தில் அவன் வேலை பார்த்து வந்தான். ஒவ்வொரு நாளும் பகல் பதினோறு

மணியிலிருந்து மாலை ஐந்து வரை தனக்கான மேஜையில் அமர்ந்து கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருப்பான்.

மாதத்தின் முடிவில் நூறு ரூபாயைக் கொண்ட சம்பளக் ‘கவர்’ அவன் கையில் வந்து சேரும். அவன் தற்போது

மத்திய வயதினனாக இருந்தான். அவனுடைய இளமையிலிருந்து இந்த மத்திய வயதுவரை அனேகமாக அவனுடைய

காலம் அந்த மேஜை நாற்காலியில்தான் கழிந்திருந்தது.

அவன் ஒரு சந்தில் இருந்த தனது சிறிய வீட்டில் வசித்து வந்தான். அதில் இரண்டு அறைகளும் ஒரு ஹாலும்

இருந்தது. அது அவனுக்கும் அவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கும் போதுமானதாக இருந்தது. யாராவது

விருந்தினர் தங்க வந்தால்தான் கொஞ்சம் கஷ்டம். கடைகளெல்லாம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தன.

குழந்தைகளின் பள்ளிக் கூடமும் ரொம்ப அருகிலேயே இருந்தது. அவன் மனைவிக்கும் சுற்றுவட்டாரத்தில் நிறைய

தோழிகள் இருந்தனர். மொத்தத்தில் அது ஒரு அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையாக இருந்தது. 1947

அக்டோபர் வரை.

அப்போதிருந்துதான் சுற்றியிருந்த மக்களெல்லாம் காட்டு மிராண்டிகளைப் போல பேசவும் நடந்து கொள்ளவும்

ஆரம்பித்ததை அவன் கண்டு கொண்டான். சிலர் அல்லது ஒரு கும்பல் இன்னொரு கும்பலை ஒரு ஆயிரம் மைல் தள்ளி

கொலை செய்தது. அதன் பலனாக அதே கொடுமையை இங்கேயும் சுற்றியிருந்தவர்கள் மீது செய்து தங்கள்

வஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர். ரொம்ப முட்டாள்தனமாக இருந்தது. தூரத்தில் நடக்கும் ஒரு நல்ல காரியம்

அதே மாதிரியான இன்னொரு நல்ல காரியம் நடக்க தூண்டவில்லை. ஆனால் கெட்டதற்கு மட்டும் அத்தகைய சக்தி

இருந்தது.

தனது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுடைய கோபம் தினசரிகளைப் படித்தபோதெல்லாம் நாளுக்கு நாள்

அதிகமாகிக் கொண்டே போனதை நமது நண்பன் கண்டான். கன்னாபின்னாவென பேசிக்கொண்டனர். “இங்கெ

உள்ளவங்களெ நசுக்கணும் ” என்று பேசிக்கொண்டதை கேட்டான். “குழந்தைகள் பெண்களைக்கூட விடவில்லை

அயோக்கியன்கள் ” என்று அவர்கள் கத்தியதையும் கூக்குரலிட்டதையும் கேட்டான். “ சரி, அந்த பயல்களுக்கு

ஒரு பாடம் நாம் கற்பிக்கணும். அவங்க செஞ்சதையே நாம இங்கெ செய்வோம். அவன்களுக்கு புரியற மொழி

அதுதான் ”. ஆனால் அவன் அவர்களிடம் “ இங்கெ பாருங்க ” என்று ஏதோ சொல்ல முயன்றான்.

தன்னோடு பணி புரிபவர்களையும், அவனுக்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர்களையும், அவனுடைய தபால்காரனையும்,

வெற்றிலைக் கடையில்

உள்ளவனையும், வங்கியில் பணி புரியும் தனது நண்பனையும் – இப்படி அனைவரையும் வேறு ஜாதிக்காரர்கள்

என்பதாக கற்பனை செய்து பார்த்தான். இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி இது நாள் வரை அவன் நினைத்துப்

பார்த்ததே இல்லை. அவர்கள் அனைவரும் நண்பர்கள் – அவ்வளவுதான். தன்னைப் பார்த்து புன்னகை புரிந்தவர்கள்.

தான் சொன்னதை காதுகொடுத்துக் கேட்டவர்கள். தன்னோடு நல்லவிதமாக பேசிக்கொண்டிருந்தவர்கள். ஆனால்

இப்போது அவர்களை எல்லாம் ஒரு புதிய ஒளியில் பார்த்தான். அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்கள்.

இப்போது தனது மனிதர்கள் பயமுறுத்தும் விதமாக பேசியபோது அவன் கற்பனை செய்தான். தனது தபால் அலுவலக

நண்பன் தெருவில் கண்டதுண்டமாக வெட்டப் படுவதைப் போலவும் அல்லது தனக்கு எப்போதும் எலு மிச்சை ஜுஸ்

கொண்டுவந்து தரும், தனக்குத் தெரிந்த பாட்டுக்களை எல்லாம் பாடி நடனமாடி பள்ளிக் கூடத்துக்கு சோப்வைக்கும்

பெட்டி நிறைய பென்சிலும் ரப்பரும் கொண்டுபோகும் தன்னோடு பணி புரியும் நண்பனின் மகளை தனது

ஜாதியினர் துரத்துவதாகவும் ! இந்த கற்பனையை அவனாலேயே தாங்கமுடியவில்லை. “ ஆண்டவந்தான் காப்பற்ற

வேண்டும் ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தான்.

“ இந்த பாருங்க, இந்த மாதிரியெல்லாம் இங்கே நடக்காது ” என்று தன் ஜாதியினருக்கு சொல்லி அமைதிப்

படுத்தப் பார்த்தான். ஆனால் அது

நடைமுறைக்கு எதிரான கற்பனை என்று அவனுக்கே தெரியும். தனது ஜாதியினர் கம்புகளையும் கத்திகளையும்

சேகரித்துக் கொண்டிருந்தனர் என்றும் அவனுக்குத் தெரியும். என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு

அவர்களெல்லாம் ஒருங்கிணைந்து கொண்டி ருந்தார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அவனுடைய பயந்த சுபாவத்துக்கு

எல்லாம் பயங்கரமாக இருந்தது.

நெருப்பு, வாள், கொள்ளை. எல்லா ரவுடிப் பசங்களும் உத்தரவுகளுக்காகவும் காசுக்காகவும் அவனது மாமா வீட்டில்

கூடினார்கள். அவன் மாமா அடிக்கடி, “ நாமாக எதுவும் செய்ய வேண்டாம். ஆனா அவனுக வாலாட்டினானுக,

அவங்களெ முடிச்சுட வேண்டியதுதான். அவங்களுக்குத் தெரிஞ்ச ஒரே மொழியிலெ நாம அவங்களோட பேசுவோம் ”

என்று சொன்னார்.

நாளுக்கு நாள்வாழ்க்கை பொறுக்க முடியாததாக ஆகிக்கொண்டு வந்தது. வாழ்க்கையிலிருந்து நேர்மை திடாரென்று

மறைந்து போனதாகத் தோன்றியது. மக்கள் ரகசியமானவர்களாக தோன்றினார்கள். யாரைப் பார்த் தாலும்

கொலைகாரனைப் போலவே தோன்றியது. மனிதனை உண்ணும் காட்டுமிராண்டிகள் தங்கள் உணவைப் பார்ப்பதுபோல

மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தெருவில் நடக்கும்போது தோளுக்கு பின்னால் கவனித்து

நடக்கவேண்டியிருந் ததை எண்ணி அவனுக்கு அவமானமாக இருந்தது. அச்சமும் சந்தேகமும் நிரம்பியதாக காற்று

இருந்தது.

அவன் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்தான். இல்லையெனில் இல்லாத வதந்திகளையும் கதைகளையும் அவர்கள்

பரப்பிவிடலாம். “ தெரியுமா ? நேற்று சாயங்காலமா சைக்கிளில் போய்க்கிட்டிருந் தவனை கத்தியாலெ

குத்திட்டாங்க. ஆனா போலீஸ் எல்லாத்தெயும் மறைச்சிடுச்சு”. “ இன்னிக்கி ஒரு பொம்பளெயெ அடிச்சு

போட்டுட்டாங்க. ” “ பள்ளிக் கூடத்துக்குள்ள பூந்துருக்காங்க தெரியுமா ? நாலு மாணவிகளைக் காணோம்.

போலீஸை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லெ. நாமலே இதெ கவனிச்சுக்க வேண்டியதுதான் ”.

இப்படி ஏதாவது யாராவது சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இப்படி பேசப்படும் போதெல்லாம் அவன் இதயம்

பதைபதைத்தது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி மேலிட்டு அவன் தொண்டைக்குள் ஏதோ வந்து அடைத்தது.

நாக்கில் உணவு கசந்தது. இந்த உணர்ச்சி சித்திரவதை செய்யாதவாறு தன் மனைவி யையோ குழந்தைகளையோ

அவனால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை : “ ஓ, ஒன்றும் தெரியாதவர்களே, என்ன அபாயம்

காத்திருக்கிறதென்றோ, எந்த கொடுமைக் காரனின் கையில் என்றோ இறைவன் ஒருவனே அறிவான் ”.

இரவில் அவனால் தூங்கவே முடியாமல் போனது. ஏதாவது வழக்கத்திற்கு மாறான சப்தம் இரவில் வெடிக்கிறதா

என காதுகளை வருத்திக்கொண்டு படுத்திருந்தான். திடாரென அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே

புகுந்துவிட்டால் என்ன செய்வது ? அரண்டுபோன அவனுடைய மகள் மற்றும் மனைவியுடைய பயங்கர அலறல்களை

அப்போதே அவனால் கேட்கமுடிந்தது. இரவு முழுக்க யோசித்துக் கொண்டே இருந்தான். பாதி தூக்கமும் பாதி

விழிப்புமாக. கலகக்கும்பலின் சப்தப் கேட்கிறதா என காத்துக் கொண்டு. தூரத்து நாயின் ஊளைகூட அவர்கள்

எழுப்பும் சப்தம் மாதிரியே இருந்தது. இரண்டு மூன்று தரம் எழுந்து ஜன்னலைத் திறந்து எட்டியும் பார்த்தான்.

ஏதாவது ஜ்வாலைகள் தூரத்து வானத்தில் தெரிகிறதா என்று.

அவன் மனைவி விழித்து, “ என்ன ? ” என்று தூக்கக் கலக்கத்தில் கேட்டாள். “ ஒன்னுமில்லெ, நீ தூங்கு ”

என்று அவன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு படுக்கைக்குத் திரும்பினான். ஒன்றும் நடக்கவில்லை என்பதில்

அவனுக்கு திருப்தியாயிருந்தது. அப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் பாதுகாப்புக்கு

கோடரியை எடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். சில நேரங்களில்

தெருவில் சென்ற லாரி அல்லது வண்டியின் சப்தம் அவனைக் குறைத் தூக்கத்திலிருந்து எழுப்பி ஜன்னலுக்கு

வரவைத்தது. அது கலவர இடத்தை நோக்கி விரையும் போலீஸ் லாரியாக இருக்குமோ என இருட்டில் நின்று

பார்த்தான். ஒவ்வொரு நாள் இரவும் இப்படியே கவலையும் பயமுமாக கழிந்தது. விடிந்ததும்தான் அவனுக்கு

நிம்மதியாக

இருக்கும்.

வரப்போகிற 29ஆம் தேதி புதன் கிழமை ஒரு முடிவான நாளாக இருக்கும் என்று எல்லோரும் பேசிக்கொண்டனர்.

அன்றைக்கு எல்லா இடத்திலும் கலவரம் வெடிக்குமாம். அந்த தேதியை ஏன் தேர்ந் தெடுத்தார்கள் என்று

தெரியவில்லை. ஆனால் எல்லா ருமே அதைக் குறிப்பிட்டார்கள்.அவனுடைய அலுவல கத்திலும் 29 ந்தேதியைப்

பற்றியே பேசினார்கள். அவனுடைய மாமா வீட்டின் செயல்பாடுகள் ஒரு உக்கிர நிலையை அடைந்திருந்தன. “

இந்த தொல்லையிலிருந்து 29ம் தேதி நாம் விடுபட்டு விடுவோம் என்பதில் எனக்கு சந்தோஷம். நிரந்தரமாக

இந்த இறுக்கத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம். இந்த ஊரையே சுத்தப் படுத்தி விடுவோம். அவர்கள் என்ன

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒன்றைரை லட்சம் பேர்தான். ஆனால் நாமோ …” என்று அவன் மாமா

சொல்லிக்கொண்டிருந்தார். மயக்கம் வரவழைக்கக்கூடிய புள்ளி விபரங்களை அவர் கூறிக் கொண்டிருந்தார்.

கலவரம் தொடங்கும் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. இந்த வேதனையான யோசனைகளுக்கு நடுவில் அவனுக்கு

ஆச்சர்யமாகவும் இருந்தது. எப்படி ஆரம்பிப்பார்கள் ? எப்படி பொறியை பற்ற வைப்பார்கள் ? ஒரு குறிப்பிட்ட

நேரத்தில் ஒரு சமூகத்தார் இன்னொரு சமூகத்தாரின் கன்னத்தில் சம்பிரதாயமாக அறைந்தா ? “ ஒரு வேளை

எதுவுமே நடக்காமல் போனால் ? ”. “ எப்படி நடக்காமல் போகும் ? அவங்க என்ன செய்யுறாங்கன்னு நமக்குத்

தெரியாதா ? ராத்திரிலெ ரகசியமா கூடிப்பேசுறாங்க. ஏன் நடுராத்திரிலெ கூடிக்கூடிப் பேசணும் ? ” என்று

அவன் மாமா கேட்டார்.

“ அந்த நேரத்துலெதான் எல்லாரையும் சந்திக்க வைக்க முடியுமோ என்னவோ ” என்று அவன் சொன்னான்.

“ அந்த நேரத்துல மக்கள் கூடிப்பேசுறதெ நாம விரும்பலெ. வம்புச் சண்டைக்கு நாம போகலெ. ஆனா ஏதாவது

நடந்துதுன்னா, அவங்களெ முடிச்சுடுவோம். ஒருசில மணி நேரங்கள்தான். சும்மா ஒரு பித்தானை

அழுத்துறமாதிரியான ஏற்பாடுதான். ஆனா அதெ ஆரம்பிக்கிற வேலையெ நாம செய்ய மாட்டோம். ”

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29ம் தேதி அன்று கடைகள் யாவும் மூடப்பட்டு இருந்தன. குழந்தைகள்

பள்ளிக்கூடங்களுக்குப் போகவில்லை. “ இன்னிக்கி ஸ்கூல் இல்லெ அப்பா, ஏன்னு ஒனக்கு தெரியுமா ? இன்னிக்கி

ஏதோ சண்டெ நடக்கப் போகுதாம் ” என்று ஆர்வமாக சொன்னார்கள். அவர்கள் உணர்ச்சியற்ற ஒரு துறவு

நிலையில் அதைப்பற்றிச் சொன்னது அவனுக்கு ஒரு பொறாமையைக்கூட ஏற்படுத்தியது. அவன் அன்று அலுவலகத்துக்குப்

போவது அவனுடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை. “ யாரும் ஆபீஸ் இன்னிக்கி போகலெ போலருக்கே நீங்க

ஏன் போகணும் ? ” என்று சில பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்த்து அவள் சொன்னாள். அவன் சிரித்து மழுப்பப்

பார்த்தான். வெளியே கிளம்பியபோது வேடிக்கையாக சொல்வதைப்போல சொன்னான் : “வீட்லேயே இரு.

கதவைப் பூட்டிக்கோ. பயமா இருந்தா.”

“ எங்க யாருக்கும் பயமில்லெ. மாமா இருக்கிற வரைக்கும் கவலெ இல்லே ” என்று அவன் மனைவி பதில்

சொன்னாள்.

அலுவலகத்தில் பாஸ் இருக்கத்தான் செய்தார். ஆனால் நிறைய பேர் வரவில்லை. எல்லோரும் ‘காசுவல் லீவ்’

போட்டிருந்தார்கள். திடாரென அவனோடு பணி புரியும் எல்லோருக்கும் “ அவசர தனிப்பட்ட வேலை ”

ஏற்பட்டிருந்தது. வந்திருந்த சில பேரும் அன்றைய நாளின் பயங்கர சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்து

நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். நமது நண்பரின் தலை வதந்திகள் பயங்களினால் ஆன ஒரு பெரிய

கட்டியைப் போல கிறுகிறுவென சுற்றிக் கொண்டிருந்தது.

அவர்கள் பேசுவதைக் கேட்க அவனுக்கு வெறுப்பாக இருந்தது. தனது வேலையில் தீவிரமாக மூழ்கினான். எவ்வளவு

வேகமும் தீவிரமும் என்றால் சீக்கிரத்திலேயே வேலைகள் தீர்ந்துபோயின. அதனால் அவன் நாலு வருடங்களுக்கு

முந்திய கோப்புகளையும் கணக்குகளையும் நுட்பமாக சரிபார்க்க ஆரம்பித்தான். அதன் விளைவு என்னவென்றால்

அவன் தன் வேலைகளையெல்லாம் முடித்து தனது இருக்கையை விட்டு எழுந்தபோது மணி மாலை ஏழரைக்கு

மேலாகிவிட்டிருந்தது.

திடாரென வீடுபோய்ச் சேர்வதைப் பற்றிய ஒரு கவலைக் காய்ச்சல் அவனைப் பற்றிக்கொண்டது. “ மனைவி

ரொம்ப கவலைப் படுவாள். குழந்தைகள் என்ன நினைக்கிறதோ ? ”. அலுவலகத்தில் அவன் சரிபார்த்துக்

கொண்டிருந்த எண்களெல்லாம் அவன் மனதில் ஒருவிதமான மந்த உணர்வை ஏற்படுத்தி இருந்தன. வேலை பார்த்துக்

கொண்டிருந்தபோது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது முடிந்தவரை சீக்கிரமாக வீட்டுக்குப்

போய்விட வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது.

வழக்கமாகப் போகும் வழி இப்போது நீண்டதாகவும் முடியாததாகவும் தோன்றியது. காய்ச்சல் கண்ட அவன்

மனதிற்கு அது இப்போது பல மணி நேரங்களாகும் என்று தோன்றியது. தன் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த

சந்து வழியாக விரைவதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. சுருக்கு வழியில் வீட்டுக்குப் போய்விடலாம்.

அவசரமாக இருந்தபோதெல்லாம் இந்த வழியில்தான் அவன் போவான். சாதாரண நாட்களில் அந்த வழியின்

குறுகல், சாக்கடை மற்றும் நாய்கள் இவற்றையெல்லாம் கருதி அதை அவன் தவிர்த்து வந்தான்.

தன் கைக்கடிகாரத்தை ஒரு நோட்டம் விட்டுவிட்டு தன் வீடு நோக்கி அந்த இருண்ட சந்தில் விரைந்தான். ஒரு

சில கெஜங்கள்தான் போயிருப்பான். எதிரில் வந்த ஒரு சைக்கிள் அவனது முன்னேற்றத்தை தடுத்தது.

சைக்கிளில் வந்தவனும் பாதசாரியும் அவரவர் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை முடிவு செய்வதில்

கஷ்டமிருந்தது. அவர்கள் இருவருமே வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ ஒரே நேரத்தில் சென்றனர்.

இரண்டுபேருமே ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர். கடைசியில் சைக்கிளில் வந்தவன் நமது

நண்பனின் கவட்டியில் ஓட்டி கீழே விழுந்தான். இருவருமே மண்ணில் கிடந்தனர். நமது நண்பனின் நரம்புகள்

புடைத்தன. “ ஜாக்கிரதையாக ஓட்டக்கூடாதா ? ” என்று கத்தினான். மற்றவன் எழுந்து “ நீ என்ன

பொட்டையா ? சைக்கிள் வருவது தெரியலையா ? ” பதிலுக்கு கத்தினான்.

“ உன் விளக்கு எங்கே ? ”

“ என்னெ கேள்வி கேக்க நீ யாரு ? ” என்று மற்றவன் சொல்லிய வண்ணம் வேகமாக நமது நண்பனின் முகத்தில்

அறைந்தான். அவனுக்கும் கோபம் தலைக்கேறி, சைக்கிளில் வந்தவனை வயிற்றில் உதைத்தான். ஒரு கூட்டம்

கூடிவிட்டது.

யாரோ சொன்னார்கள் : “ நம்ம ஆளெ நம்ம எடத்துலேயே வந்து எவ்வளவு துணிச்சலா அடிச்சிருக்கான் பாரு.

இவங்களுக்கெல்லாம் ஒரு பாடம் கத்துக்கொடுக்கணும். நாங்க பயந்துடுவோன்னு நெனச்சியாடா ? ”. கத்தல்களும்

கூக்குரல்களும் அதிகரித்தன. காது செவிடாகிவிடும் போலிருந்தது.

யாரோ நமது நண்பனை ஒரு கம்பால் அடித்தார்கள். வேறு யாரோ கையால் அடித்தார்கள். பளபளத்த ஒரு

கத்தியை யாரோ எடுத்ததைஅவன் கண்டான். முடிவு வந்துவிட்டதென்று நமது நண்பன் எண்ணினான். திடாரென

கன்னாபின்னாவென தன்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை உணர்ந்தான்.

அந்த கணத்தை ஒரு பழுத்த விலகல் மனப்பான்மையுடன் அவனால் பார்க்க முடிந்தது. அந்த உறவுகளின் அதி

முட்டாள்தனத்தைப் பற்றி அவர்களுக்கு விரிவுரை நிகழ்த்த முயன்றான். அவர்கள் அனைவரும் அதை உடனே நிறுத்த

வேண்டும் என்று சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய குரலிலிருந்து சப்தமே எழவில்லை.

எல்லா திக்குகளிலிருந்தும் அவன் நசுக்கப்பட்டான். அந்த அடைசலான நெருக்கம் பொறுக்க முடியாததாக இருந்தது.

அந்த கும்பலில் இருந்த அனைவரும் தங்கள் எடையை அவன் மீதே போட்டு அவன் உடம்பில் எதாவது ஒரு பகுதியை

கீறிக்கொண்டிருந்தார்கள். அவனுக்குக் கண்கள் மங்கின. ரொம்ப லேசாக உணர்ந்தான். தனக்குப் பக்கத்தில்

இருந்த யாரிடமோ அவன் முணங்கிக் கொண்டான் : “ இங்கு நடந்ததைப் பற்றி நான் என் மாமாவிடம்

சொல்லவே மாட்டேன். கலவரம் தூண்டப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். இந்த நகரம்

காப்பாற்றப்பட வேண்டும். கலவரம் தூண்டுகின்ற எந்த ஒரு வார்த்தையையும் நான் சொல்லமாட்டேன். பிறகு அது

பித்தானை அழுத்திவிடும். பின் எல்லாரும் முடிந்துபோவர். நீயும் நானும். எதுக்கு இதெல்லாம் ? உன்

சமுதாயமென்றோ என் சமுதாயமென்றோ எதுவுமில்லை. நாம எல்லோருமே இந்த நாட்டைச்சேர்ந்தவர்கள். நான்

என் மனைவி என் குழந்தைகள். நீ உன் மனைவி உன் குழந்தைகள். ஒருவர் கழுத்தை ஒருவர் அறுக்க வேண்டாம்.

யார் யாருடைய கழுத்தை அறுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எல்லாம் எனக்கு ஒன்றுதான். ஆனா நாம

செய்யக்கூடாது, கூடாது, கூடாது. மாடிப்படிலேருந்து கீழே விழுந்து அடிபட்டுடுச்சுன்னு நான் என் மாமகிட்ட

சொல்லுவேன். அவருக்குத் தெரியக்கூடாது. அவர் பித்தானை அழுத்திடக்கூடாது ”.

ஆனால் பித்தான் அழுத்தத்தான் பட்டது. ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த சந்தில் நடந்தது அந்த நகர்

முழுவதும் பரவிவிட்டது. அவன் மாமாவும் மற்ற மாமாக்களும் தங்கள் தங்கள் பித்தான்களை அழுத்தினர்.

அவைகளின் விளைவுகள் என்ன என்பதை இங்கே விவரிக்க வேண்டியதில்லை.

ஆனால் பேசமுடிந்திருந்தால் நமது நண்பன் ஒரு பொய்யைச் சொல்லி அந்த நகரத்தையே காப்பாற்றி இருப்பான்.

ஆனால் இந்த காக்கும் பொய் துரதிருஷ்ட வசமாக சொல்லப் படாமலே போய்விட்டது. மறு நாள் பிற்பகல்

போலீஸ் அவன் உடம்பை அந்த இழிந்த சந்தின் ஒரு சாக்கடையிலிருந்து கண்டெடுத்தனர். அவன் நெஞ்சுப்

பாக்கெட்டிலிருந்த மண்ணெண்ணெய் ரேஷன் கூப்பனில் இருந்து அவன் யாரென்று அடையாளம் கண்டு பிடித்தனர்.

—–

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி