ே ப ய்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

பேய்வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த அடையாளங்களிலேயே நம்முன் வந்து ஏமாற்றி விடுகின்றன. இதில் அத்தனை பேய்களுமே சாமர்த்தியசாலிகள்.

‘பேய் உனக்கு யார் உருவத்தில் வந்தது இவனே ? ‘ என நான் ரமணியைக் கேட்டேன்.

‘உன் உருவத்தில் ‘ என்றான் ரமணி.

நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். மழுமழுவென்று லேசாய் மீசை துளிர்க்கிற முகம்… ஓரங்களில் வெளித் தெரியும் கடவாய்ப் பற்கள். நினைக்கவே சிலிர்த்தது.

பேய்களுக்குக் கடவாய்ப் பற்கள் எதற்கு தெரியவில்லை. பேய்கள் ரத்தம் குடிப்பதாக மட்டுமே நாம் அறிகிறோம். ரத்தம் குடிக்க முன்பற்கள் விகாரப்பட்டு மேல்வந்தால் உதவியாக அமையக்கூடும்.

ஆமாம்- பேய்கள் நமக்கு விருப்பமான நபர்கள் உருவத்திலேயே வருகின்றன. எங்கள் படியளந்தான் தாத்தா வாழ்வில் ஓர் உண்மை நிகழ்ச்சி. அப்போது பெரும் தண்ணீர்ப் பஞ்சம். கிணறில் ஊற ஊற இறைக்க வேண்டும். வெள்ளாமை படுத்துவிடும் நிலைமை.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு. ராத்திரி அதுகூடப் பேசாதே என்பார்கள். அது எத்தனை உண்மை… அந்திக் கருக்கலில் களத்துமேட்டில் அதும் புளியமரத்தின் கீழ் நின்று தாத்தா வேல்ச்சாமியைக் கூப்பிட்டுப் பேசியது வம்பாயிட்டது.

‘எடேய் ராத்திரி வா. ஒண்ணாப் போயி வெள்ளாமைக்குத் தண்ணி பாய்ச்சலாம். தனியாப் போக பயந்து கெடக்குல்லா… ‘

அதிகாலை ஒண்ணு ஒண்ணரை மணி. பேய் வந்து வீட்டுக்கதவைத் தட்டி எழுப்பியிருக்கு. இவர் அப்புராணி. சரி, வேல்ச்சாமிதானாக்கும்னு கூடக் கிளம்பியாச்சி. அரைத் துாக்கம். தாத்தா என்னென்னமோ பேசிக்கிட்டே வர்றாரு. முன்னால் வேல்ச்சாமி – இல்ல அந்தப்பேய். பதிலையே காணம். ‘ஊங் ‘கொட்டக் கூட இல்லை. முண்டாசை இறக்கி விட்டுக்கிட்டு நல்லா அடையாளம் மறைச்சிக்கிட்டுப் போகுது. வேற எங்கியோ கூட்டிட்டுப் போவுது. அவங்க போறாங்க போறாங்க வயக்காடு வந்தபாடக் காணம். என்னாடா இதுன்னு அப்பதான் தாத்தா சுதாரிப்பானாரு.

பாத்தா ? முன்னாடி போறாளுக்குக் காலையே காணம். அப்டியே மொதந்தாப்ல போகுது. ராப்பனிக்கு வேட்டிய அவுத்துப் போத்தினாப்ல ஒரு வேசம். துாக்க கீக்கம்லாம் ஙொம்மாள பர்றந்திட்டு. திர்ரும்பிக்கிட்டு ஒற்ற ஓட்டம். விழுந்த மம்பெட்டிய எடுக்கவில்லை. வீட்ல வந்துதான் நின்னாப்டி. பொழச்சது மறுசென்மம்னு வெச்சிக்க.

தற்கொலை செய்துகொண்டவர்கள் பேயாக அலைகிறார்கள். இந்த பூமியில் அவர்கள் கழிக்க வேண்டிய காலம் முடியுமுன்பே தாங்களே முடித்துக்கொண்ட அற்பாயுசுகள். வாழ்வில் அவர்களுக்கு இன்னும் ஆசை ஒருபக்கம். வேறு உடம்பில் சேர்ந்து புது உயிராக நடமாட முடியாத துர்பாக்கியம். ஆனாலும் அதைப் பரீட்சித்துப் பார்க்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். பயந்த மனுசர்களை அவர்கள் பிடித்து உட்புகுந்து ஆட்டுகிறார்கள். அதிகம் பேய்கள் பெண்களையே பிடித்துக் கொள்கின்றன. பேய்பிடித்த பெண்களுக்குக் குரலே மாறி என்ன ஒரு கரகரப்பு.

பரமசிவம் பெண்டாட்டிக்குப் பேய்பிடித்தது. பருவத்தில் பரமசிவம்-ஆண்டாள் காதல் எங்க வட்டாரத்தில் பிரசித்தம். தலைப்புச் செய்திகளில் அடிக்கடி வந்துபோனார்கள். ரெண்டுபேரும் வேறுவேறு ஜாதி. துட்டு விசயத்திலும் ‘உசரம் ‘ சற்று ஏத்த இறக்கம்தான்… ஊனக்கால்-நல்லகால் மாதிரி. இது சக்ஸஸ் ஆகுதான்னு பாத்துக்கிட்டு மேலும் காதல்கள் றெக்கை முளைக்கக் காத்திருந்தன. காகித அம்புகள் தயார்நிலையில்!

அழுதழுது அந்த ஆண்டாள் தற்கொலை செய்து கொண்டாள். அந்த ஜோடியில் ‘சூம்பினகால் ‘ அவள்தான். துட்டுப் பார்ட்டி தற்கொலை கிற்கொலைன்னில்லாம் முடிவெடுப்பதில்லை. உஷாரா இருக்கும்.

விசயம் என்னன்னா பரமசிவம் கல்யாணம் முடித்தபோது அவன் பெண்டாட்டி திடார்னு பயந்துக்கிட்டது. வீட்டுவிலக்கான சமயம்… அந்திக் கருக்கலில் மாடியில் உலாத்திக்கிட்டே செம்பகக்கா தலையை வாரிட்டிருந்திருக்கா. அப்ப அவ பேயைப் பார்த்திருக்கா. தலையை விரிச்சிக்கிட்டுத் துாரத்தில் வெள்ளுடை மிதக்கிறாப்போல… என்ன அது ?

பேய்கள் ஏன் வெள்ளாடை உடுத்து தலைவாராமல் அலைகின்றன ?

ஆண்டாளுக்கு பரமசிவத்தின் கூட வாழ ஆசை. அவள் பரமசிவத்தின் பெண்டாட்டி உடம்பில் ஆவியாகப் புகுந்துகொண்டாள். மயக்கடிச்சி விழுந்த செம்பகக்கா எழுந்துக்கிட்டபோது உலகமே புதுசா இருந்தது. அசையா பொம்மைமாதிரி இறங்கிக் கீழ வந்திருக்கா. எது நடந்தாலும் காதே கேட்காத ஒரு விரைப்பு. பரமசிவம் வந்து கூப்பிடறான் கூப்பிடறான். மலங்க மலங்க முழிக்கா… நேரங்கெட்ட நேரத்தில் முழிச்சி எழுந்துக்கறதும் வீட்டைவிட்டு இறங்கி தனியே வெளிய நடக்கிறதும்…

வீட்ல திருச்செந்துார் துன்னீர் (விபூதி) இருந்தது. முருகா-ன்னு உருக்கமாப் பூசிக்கிட்டே ஒருகைத் துன்னீரள்ளி பரமசிவம் அவ மூஞ்சில அடிச்சானா… அவன் கைய ஒற்றத் தட்டு- நெத்தில பூச வந்தவனை பாஞ்சி வெரலைக் கடிக்க வந்தா. டாய்-னு ஒரு பெரிய குரல் எடுப்பு. அவ குரலே முகமே எத்தனை கடுப்பாய் இருந்தது… கண்ணில் வெறி. பழி வாங்க வந்திச்சோ, கூட வாழ வந்திச்சோ அந்தப் பேய்…

நேரா அவங்கய்யாவைக் கூப்பிட்டு செம்பகக்காவை அனுப்பி வைத்தார்கள். போகும்போது ‘ஆண்டாளுக்கும் ‘ சேர்த்து டிக்கெட் வாங்கினார்களா… ஊரில் அவள் பேயோட்டப் பட்டிருக்கலாம்… பத்துநாள் இருபதுநாளில் திரும்ப செம்பகக்கா ஊர் திரும்பினாள்- தனியாக.

ஆண்டாளின் ஆவி பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

அவங்க பள்ளிக்கூட லேடிஸ்டாய்லெட் பக்கம் ஒரு புளியமரம். அந்தப் பகுதியே சற்று இருட்டி ஜில்லோன்னிருக்கும். உள்ளே தனித்தனி ரூம் கட்டியும் இந்தக் குட்டிகள் சற்று ஓரமாய் தட்டாரப்பூச்சி போலப் பாவாடைவிரித்து உட்கார்ந்து எழுந்தோடி வந்து விடுகின்றன. ஒரே நாற்றம். இந்த நாத்தத்தில் எப்படித்தான் அந்தப்பேய் குடியிருக்கிறதோ…

பேய நினைச்சிக்கிட்டே உக்கார்ந்தா ஒன்பாத்ரூம் அதிகமாத்தான் வரும். நாறாம என்ன செய்யும்.

செவன்த் சி விமலாவுக்குப் பேய் அடிச்சி மூணுநாள் ஜுரம் கங்காப் பொரிஞ்சது. அத்தோடு அந்தப் புளியமரத்தை வெட்டி விட்டார்கள். பசங்களுக்கு உற்சாகம் வற்றிவிட்டது. அந்தப் புளியமரத்துப் பேய் ஒரு பெண்பேய். அதும் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டு விட்டதாகச் செய்தியறிக்கை. அத்தனை தண்டி மரத்தின் அத்தனை உச்சாணிக் கொம்பில் கயிறை உயரவீசித் துாளி கட்டலாம். தற்கொலைக்கு ஏன் அத்தனை சிரமப்பட வேண்டும் ?

அந்த வருடம் எங்களுக்கு அமைந்த உலகநாதன் மாஸ்டர் ரொம்பக் கண்டிப்பு. அவர் வகுப்பில் யாரும் கணக்கில் தோற்று விடக் கூடாது அவருக்கு. அது ‘அவருக்கு ‘ அவமானம் என்றார் வகுப்பில். எங்களுக்கு அவரது வாதம் புரியவில்லை. அவர் கணக்கும் புரியவில்லை. கணக்கு புரியாதவர்களை குழாய்-அண்டாவில் இருந்து வெந்நீர் எடுக்கிறாப்போல ஒரு திருகு திருகுவார். வெந்நீரும் கணக்கும் ஒண்ணா ? தொடையே கன்றிச் சிவந்து விடும். பெண்களைக் கைச்சதையைக் குதறினாப்ல கவ்வுவார்.

எங்கள் தெரு தாண்டி சட்டென்று இடப்புறம் பெரிய எடுப்புவீடு. கிணறெடுத்து பாதிக் கட்டட அளவில் அழிந்து பாழடைந்து கிடந்தது. அந்தக் கிணறில்தான் கோவிந்தன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது. நிசந்தான்- இப்போதும் நள்ளிரவுப் போதில் அவனது அழுகுரல் தீனமாகக் கேட்கிறது. நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். நீர் சொட்டச் சொட்ட தலையைக் குனிந்தபடி உட்கார்ந்து விக்கி விக்கி அழும் கோவிந்தன். தீராத வயித்துவலி. நோவு தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்துகொண்டான். திரும்பத் திரும்ப ‘கழுவிக்கொள்ள ‘ சோம்பேறித்தனப் பட்டு தண்ணிலியே குதிச்சிட்டானா… எனக் கிண்டலடிச்சாலும் ஒவ்வொரு முறை அந்தக் கட்டடத்தை எந்தப் பகலில் எந்த வெளிச்சத்தில் தாண்டிப் போனாலும் எனக்கு உதறல்தான். கால்கள் ஓடத் தயார்நிலைக்கு வந்துவிடும். (எனக்கே வயித்தைக் கலக்கும்.) உள்ளே போய்ப் பார்க்க துக்கிளியூண்டு ஆசை வரும். ஐயையோ… டாய் வேணாம்… என மனசு உட்சுருளும். விறுவிறுவென்று தானாய்க் காலெட்டிப் போட்டுக் கடப்பேன். சற்று இருட்டாகி விட்டால் இந்த வேகம் இன்னும் அதிகரிக்கும்… சைக்கிள் ரிம்மில் கம்பைக் கொடுத்த ஜோரில் விர்ரென்று எத்தனையோ முறை பறந்து கடந்திருக்கிறேன். அது உத்தமம்.

ரமணிக்குக் கணக்கு பேயாய் மிரட்டியது. உலகநாதன் சார் ஏராளமாய் வீட்டுக்கணக்குகள் தருகிறார். எளிதுபோல் தோணும் கணக்குகளேகூட பாதிவழியில் திடுதிப்பென்று குழம்பி முடிவில் முழுஎண் விடைகள் வராமல் தத்தளித்தான். கடைசியில் ஒவ்வொரு முறையும் சுயமுயற்சிகளைக் கைவிட்டு என் நோட்டுப் புத்தகத்தில் இருந்து நகலெடுத்து வாத்தியாரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

நிறையக் கணக்குகள். இத்தனையும் முடிக்கவே மணிக்கணக்கில் ஆகும். நான் எப்ப முடிச்சி எப்ப அவன் ‘பார்த்து ‘ எழுத முடியும் ? ரமணி கெஞ்சினான். ‘ ‘இல்லடா. நீ அடுத்த பீரிடு வாத்தியார் மார்றதுக்குள்ள அப்டியப்டி முடிச்சிக் குடுத்திரு. நான் வீட்டுக்கு எடுத்திட்டுப் போயி எழுதிட்டு, காலைல உன்னிதையும் கொண்டாந்திருவேன் ‘ என்றான். பாவம் ரமணி.

சிறு அவகாசத்திலும் அந்த அவசரத்திலும் எனக்கும் சில கணக்குகள் திகைப்பூட்டின. வாத்தியார் லொள் அதிகம் உள்ளவர். வழி சரியா இருந்தா விடை பத்தி ஏண்டா கவலைப்படறே ?- என்பார். முழுஎண் வராத விடைகள் கொண்ட கணக்குகளையும் அவர் தருவதுண்டு. நலங்கிள்ளி போல இவர்… தொடைகிள்ளி..

பாதிதான் முடிக்க முடிந்தது. முடிச்சவரை நான் எழுதிர்றேன். மீதியக் காலைல சீக்கிரம் பள்ளிக்கூடம் வந்து போட்டுக்குடு… என்கிறான் ரமணி. ‘ஐயோ நான் நைட்டு முடிக்கணும் ‘ என்றேன் பதறி. அப்ப சரி, நான் காபி பண்ணிட்டு நைட்டே வந்து நோட்டைத் தர்றேன், என்று ரமணி ஒப்பந்தம் கையெழுத்திட்டான்.

மத்த பாடமெல்லாம் முடித்தும் இந்த ரமணிநாயைக் காணவில்லை. துாக்கம் வந்துரும் போலிருந்தது. இனி காத்திருந்து பயனில்லை. வேற வழியில்லை… நாமதான் அவங்க வீட்டுக்குப் போய் நோட்டை வாங்கிவரணும்… என நினைக்கவே சட்டென்று ஒரு சிலிர்ப்பு.

நன்றாக இருட்டி விட்டது. எங்க தெருத் திருப்பத்தில் அந்தப் பேய்வீடு. கோவிந்தன் குடியிருக்கும் வீடு. தாண்டிப் போகணுமே ?

வெளியில் இறங்கி நடக்கிறபோதே கால்கள் சண்டிமாடாய்க் கிறங்கின. மாப்ள இன்னிக்கு உங்கதி அவ்ளதான்… என்கிறாப்போல ஒரு உள்மிரட்டல். வழியில் எந்த தேவையற்ற சத்தம் பத்தியும் சட்டை செய்யக் கூடாது. எந்த அசம்பாவிதக் காட்சியையும் கவனிக்கக் கூடாது.

தெருவில் ஒரு பூச்சி கிடையாது. அத்தனை சனங்களும் செத்துட்டாங்களா ? அதுக்கேத்தா மாதிரி எங்கோ நாய் ஒன்று தலையை வானத்தைப் பாத்து விரைச்சி ஒரு அவல-ஊளை இடுகிறது. டவுசர் நனைஞ்சிரும் போலுக்கய்யா. கிரிக்கெட்டில் பவுலிங் வரக் காத்திருக்கிற மட்டைக்காரனாட்டம் நான். பந்தை ஒற்ற அடி. எதிர் ஸ்டம்பைப் பார்த்து ஒரே ஓட்டம்…

பொட்டிமவனே ஆறிலும் சாவு, நுாறிலும் சாவுடா. தைரியமாப் போ… என ஒரு குரல் ஓங்காரமாய் அலையெழும்பியது உள்ளே. செந்திலாண்டவன் துணை!… துன்னீர் பூசிக்கொண்டு வந்திருக்கலாம். நடைதுாரம் தனியே தெரிகிறது. மனசுக்கும் துாரத்துக்கும் ஒரு உறவு இருக்கிறது!… ‘அந்த ‘ வீட்டை நெருங்க நெருங்க பதட்டம் அதிகமாயிட்டது. டப்பு டப்புன்னு இதயச் சத்தம். பூட்டிய அறைக்குள் மாட்டினாப்போல இரத்தம் இதயக் கதவைத் தட்டுகிறது. மேடும் பள்ளமுமான ரஸ்தாவில் வண்டிப் பயணம்போல தடக்தடக்னு ஒரு நடை. வேகமா நடந்திட்டா நல்லதுன்னு பாத்தா அப்பதான் கால்ல அத்தனை கனம். என்னாச்சின்னு ஒருவிநாடி நின்னு காலைப் பாத்துக்கிட்டேன். யாரும் கட்டிப்போடல்லாம் இல்லை. ஏன் இப்டி மக்கர் செய்யுது.

கோவிந்தா… நான் உன் ஃப்ரெண்டு. என்னை எதுஞ் செஞ்சிறாதே… ப்ளீஸ்.

கோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு… அட அப்ப பாத்து தெரு விளக்கு அத்தனையும் குப்புனு அணைஞ்சிட்டது. கோவிந்தனே அணைச்சிட்டானா தெரியவில்லை. கரெண்டில் தைரியமா கைவெச்சி அணைக்கலாம் அவன். அவன் ஆளே எப்பவோ செத்திட்டானே ?

அட சூராதி சூரா. சுப்புப்பாட்டி பேரா. அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை ஆரிய உடமையடா. ஆறிலும் வாழ்க்கை நுாறிலும் வாழ்க்கை…

விக்கெட் எகிறிரும் போலுக்கேய்யா.

நான் திடுமென்று அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முடிவெடுத்தேன். முருகா!-ன்னு காலடி மண்ணெடுத்து அதையே திருநாறாப் பூசிக்கிட்டேன். வாழ்க்கை பெரும் சுவாரஸ்யமாய் இருந்தது.

அந்த வீட்டுக்குக் கதவேயில்லை. எவனாவது திருடித் தன்வீட்டுக்குக் கொண்டு போயிருக்கலாம். கோவிந்தன் அழுகைக்குரல் கேட்கிறதா என்று காதுகள் உற்று கவனித்தன. கோவிந்தன் தற்கொலை செய்து கொண்டாலும் சர்வ வல்லமை கொண்டவன். செத்தப்பறம் அதெல்லாம் அமைஞ்சிருது எப்படியோ. கோவிந்தா எங்க கணக்கு வாத்தியாரைக் கொஞ்சம் கவனி. முழுஎண் வராத கணக்கெல்லாம் தர்றாரு.

பெரிய உயரமான கட்டடம். அதன் இத்தாம்பெரிய தன்மையே என்னவோ போலிருந்தது. உள்ளே சுவரிலேயே ஒரு தாவர அடைசல். இலைகள் ஆடியாடி அதுவே பயமாய் இருந்தது. திக் திக் திக் திக். ரயில்- ‘கார்டு ‘ விசிலுக்குக் காத்திருந்து ஓடத் தயாராய் ரயிலடியில் நிற்கிறது வண்டி. உள்ளே என்னமோ சத்தம். பூச்சி பொட்டு நகர்கிறதா ? பாம்பா ?

கதவு பிடுங்கப்பட்ட ஜன்னல்வழியே பூனை கீனை குதித்ததா…

இருட்டு மனுசாளுக்கு எத்தனை பயப்பிராந்தியை யூகங்களைக் கிளப்பி விடுகிறது… கற்பனையை சிக்ஸராக அடிக்கிறது இருள். மவனே இன்னிக்கு நீ ‘கோவிந்தா, கோவிந்தா! ‘ என திருப்பதி ரேன்ஜில் உள்ளே ஒரு குரல். உள்ளே காலெடுத்து வைக்க முடியவில்லை. வழிமறைத்து முகத்தில் தட்டிய ஒரு செடிக்கிளை உரசல் வேறு பதறடிக்கிறது. கும்மிருட்டு. காலால் தடவித் துழாவி நடக்கிறேன். பகலில் யார்யாரோ அந்த மறைப்பில் உள்நுழைந்து அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். கெட்ட நாத்தம் குடலைப் புரட்டியது. வயித்து வலி கோவிந்தன். (அசிங்கம் பண்ணியது அவனேதானோ என்னவோ ?)

யானைச் சோற்றுக் கட்டிபோல வயித்தில் கனம். தெருவிளக்கு வந்துவிட்டால் தைரியம் வந்துவிடும் என்றிருந்தது. ஆனால்… ஆனால்… இருந்த கொஞ்சநஞ்ச வீர்யத்தையும் பூண்டோடு கிள்ளியெறிஞ்சாப்ல பேரதிர்ச்சி.

ஆமாம். நான் பேயைப் பார்த்தேன்.

முதுகுக்குபின் சரசரப்பு என்று அவ்வப்போது துள்ளச்செய்கிற சத்தங்கள். மீண்டும் குளத்துப்பாசி கூடினாப்போல அமைதி. பயம். சுவாரஸ்யம் வேறு. உப்புத்தாளை உரசுகிறாப்போல உள்க்குறுகுறுப்பு. தாகமாய் இருந்தது. இருட்டைப் பகுதி பகுதியாகப் பிரித்து நிதானமாய் ஒண்ணொண்ணாய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அறிவு அக்டோபஸ்போல ஐம்புலன்களின் காலெடுத்திருந்தது.

நானே இருக்கிறேனான்னு தெரியாத இருள். அந்தக் கிணறு… கிணறு எங்கே ?… கண்கள் கிணறைக் குறித்துத் தேடின. சில சமயங்களில் கிணறில் இருந்து வெளியே வந்து ஈரம் சொட்டச் சொட்ட உட்கார்ந்து தரைபார்த்துக் குனிந்து விக்கி விக்கி அழும் கோவிந்தன். கிணறு எங்கே ?

கிணறு கண்ணில் சிக்கியகணம் அந்த மனுச ரூபத்தையும் பார்த்தேன்… நல்லா இடுப்புயரக் கிணற்று மறைப்பில் அந்தப் பக்கமிருந்து பாயத் தயாராய்… உற்றுப் பார்த்துக் கொண்டு… ஆ கோவிந்தனா அது ? என்மேல் பாஞ்சிருவானா ? ரத்தங் குடிச்சிருவானா ?

குப்பென வியர்வை அப்ப ஒரு திகில் வந்து கிரிக்கெட் பந்தாய் மூக்கில் மோதியது. அங்க பிடிச்ச ஓட்டம் நரகல் கிரகலெல்லாம் மிதிச்சி நவட்டிக்கிட்டு யப்பா சாமின்னு வீடுவரை ஓட்டம்.

கதவு உள்ளே தாளிட்டிருந்தது. வயித்துவலி பார்ட்டி கழிவறையைத் தட்டுவதைப்போல -அம்மா ?-ன்னு அலறிக் கதவைத் தட்டவும், தெரு விளக்குகள் ஜிஜுக்கென்று உயிர்பெற்றன.

மூச்சிறைத்தது. அதையும் மீறி ஒர் ஆசுவாசம். சிரிப்பு. நல்லவேளை தப்பித்து விட்டேன்!… காலையில் நண்பர்களிடம் என் வீரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்!…

ஆனால் நான் பள்ளிக்கூடம் போவதற்குள் ரமணியின் புகழ் பரவியிருந்தது.

‘என்ன ரமணி நான் கேள்விப்பட்டது உண்மையா ? ‘

ஆமாண்டா. எங்கம்மா மேல ஆணையாடா. நான் பேயைப் பார்த்தேன்… ‘ என்றான் ரமணி.

======================================================================

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்