கனடாவில் நாகம்மா -2

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

மணி வேலுப்பிள்ளை


காலை இடைவேளை

11:30 – 11:45

(காலை இடைவேளை முடிந்து, மீண்டும் நீதிமன்றம் கூடுகிறது. பதிவாளர் முன்னே வர, நீதிபதி பின்னே வருகிறார்).

ப: அமைதி. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.

அவையோர்: (எழுந்து நிற்கிறார்கள்).

ப: (நீதிபதியைப் பணிந்து) கனம் நீதிபதி அவர்களே, வணக்கம். (அவையோரை நோக்கி) எல்லோரும் அமர்ந்து கொள்ளுங்கள்.

அவையோர்: (அமர்கிறார்கள்).

நீ: வணக்கம். (அ.வ.தொ.விடம்) திரு.கானலி, அரச தரப்புச் சாட்சி குறுக்கு விசாரணைக்குத் தயாராக இருக்கிறாரா ?

அ.வ.தொ: ஆம், கனம் நீதிபதி அவர்களே.

நீ: (நாகம்மாவை நோக்கி) அம்மா, நாகம்மா, இப்படி வந்து சாட்சிக் கூண்டில் ஏறி அமருங்கள், அம்மா.

நா: (சாட்சிக் கூண்டில் ஏறி அமர்கிறார்).

நீ: சரியா, அம்மா ?

நா: சரி, ஐயா.

நீ: குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டத்தரணி திரு.ஜொனேதன் இப்பொழுது உங்களைக் குறுக்கு விசாரணை செய்வார், அம்மா. அதாவது அவர் உங்களிடம் ஒருசில கேள்விகள் கேட்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மாத்திரம் நீங்கள் மறுமொழி சொன்னால் போதும். சரி தானே, அம்மா ?

நா: சரி, ஐயா.

நீ: திரு.ஜொனேதன், உங்கள் குறுக்கு விசாரணை ஆரம்பிக்கட்டும்.

நா: (நாகம்மா சற்று இடைஞ்சல் படுகிறார். தண்ணீர் குடித்துச் சமாளிக்கிறார்).

அவையோர்: (முணுமுணுக்கிறார்கள்).

ப: (அவையோரை நோக்கி) அமைதி! அமைதி!

அவையோர்: (முணுமுணுப்பதை நிறுத்துகிறார்கள்).

நீ: (சாட்சியிடம்) கொஞ்சம் சுணங்கித் துவங்குவோமா, அம்மா ?

நா: இல்லை, ஐயா. தாகம் வந்தது. தண்ணீர் குடித்தேன். வேறெதுவும் இல்லை.

நீ: திரு.ஜொனேதன்!

சட்டத்தரணி: நன்றி, கனம் நீதிபதி அவர்களே…(சாட்சியைப் பார்த்து) வணக்கம், அம்மா!

நா: வணக்கம், அண்ணே!

ச.த: உங்கள் முழுப் பெயர் என்னவென்று சொன்னீர்கள், அம்மா ?

நா: தம்பிராசா நாகம்மா என்றுதான் இங்கே பாவிக்கிறேன்.

ச.த: நீங்கள் இங்கே என்பது கனடாவைத் தானே ?

நா: ஆமாம்.

ச.த: நீங்கள் அங்கே என்றால்… ?

நா: ஈழநாடு.

ச.த: ஈழநாடு உங்கள் தாய்நாடு ?

நா: ஆமாம்.

ச.த: உங்களுக்கு எத்தனை வயது, அம்மா ?

நா: ஒரு பெண்ணாய்ப் பிறந்தவளிடம் அவளுடைய வயதைக் கேட்பது முறையில்லை, அண்ணே!

ச.த: அப்படியா ? நீங்கள் மட்டும் என்னை அண்ணே என்று சொல்வது முறையா ?

நா: உங்களைப் பார்த்தால் வயதுக்கு மூத்தவர் போல் தெரிகிறது. அதனால் தான் மரியாதையாக அண்ணே என்கிறேன். அது குற்றமோ, அண்ணே ?

ச.த: எனது பெயர் ஜொனேதன். என்னை ஜொனேதன் என்றே கூப்பிடலாம்.

நா: வயதுக்கு மூத்தவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது தப்பு, அண்ணே.

ச.த: இது நீதிமன்றம் என்பதை மறந்து விட்டார்களா ?

நா: நீதிமன்றத்தில் மூப்பு, இளமை பார்ப்பதில்லையா ?

நீ: (குறுக்கிட்டு) அம்மா, நக்மா…

நா: ஐயோ! நக்மா இல்லை ஐயா, நாகம்மா…

நீ: நன்றி, அம்மா, நாகம்மா. இது குறுக்கு விசாரணை. நீங்கள் அரச தரப்புச் சாட்சி. சாட்சி கேள்வி கேட்பது முறையல்ல. கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்வதே சாட்சியின் கடமை.

நா: ஐயா சொன்னல் சரி.

நீ: (சட்டத்தரணியைப் பார்க்கிறார்).

ச.த: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) அம்மா உங்களுக்குத் திருமணம் கிவிட்டதா ?

நா: நான் தாலி கட்டியிருப்பது உமக்குத் தெரியவில்லையா ?

நீ: (குறுக்கிட்டு) அம்மா, நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. மறுமொழிதான் சொல்ல வேண்டும்.

நா: மன்னிக்க வேண்டும், ஐயா.

நீ: சரி, சரி… (சட்டத்தரணியைப் பார்கிறார்).

ச.த: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) உங்கள் கணவர் யார், அம்மா ?

நா: அவர் தானே உங்களை ஏற்படுத்தியிருக்கிறார்!

ச.த: உங்கள் கணவர் பெயர் என்னவென்று கேட்டேன்!

நா: சொல்லிப் பழக்கம் இல்லை.

ச.த: எழுதிக் காட்ட முடியுமா ?

நா: எழுதியும் பழக்கம் இல்லை.

ச.த: அவரைச் சுட்டிக்கட்ட முடியுமா ?

நா: உங்களுக்குப் பின்னாலே பதுங்கிக் கொண்டிருக்கிறார்.

நீ: (குறுக்கிட்டு) கேட்ட கேள்விக்கு மறுமொழி. வேறு கதை தேவையில்லை.

நா: அது சரி, ஐயா. நீங்கள் வாயாலே சொல்லச் சொல்லுகிறீர்கள். அவர் கையாலே காட்டச் சொல்லுகிறார். ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள் கை காட்டுவது, சைகை காட்டுவது தப்பு, ஐயா.

நீ: (நெற்றியில் கை வைத்தபடி, சட்டத்தரணியிடம்) இந்த வழக்கில் ஆளடையாளம் ஒரு பிரச்சனையா ?

ச.த: இல்லை, கனம் நீதிபதி அவர்களே.

நீ: அப்படி என்றால், அடுத்த கேள்விக்குப் போக வேண்டியது தானே!

ச.த: மன்னிக்க வேண்டும், கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) உங்கள் கணவரின் பெயர் தெரியுமா ?

நா: (வெகுண்டெழுந்து) வெளியாலே வாரும், கையாலே மறுமொழி சொல்லுகிறேன். தெரியு-மா-வா ? உமக்கு ஏகப்பட்ட வீடுகள் இருக்கலாம். எனக்கு ஒரு வீடு தான்.

நீ: (குறுக்கிட்டு) அம்மா, அமருங்கள், அம்மா. இது நீதிமன்றம், அம்மா. கொஞ்சம் நாவடக்கம் வேண்டும், அம்மா…

நா: (குறுக்கிட்டு) அது சரி, ஐயா. முதலிலே அந்த ஆளை நாக்கிலே கட்டித் தொங்க விடும்படி உத்தரவு போடுங்கள், ஐயா. எனது கணவரின் பெயர் எனக்குத் தெரியுமா என்று கேட்கிறானே படுபாவி! குறுக்காலே போன மனுசன் எங்கே போய் இந்தச் சனியனைப் பிடித்ததோ தெரியாது…

நீ: (குறுக்கிட்டு) ஏனம்மா, அவர் அப்படி என்ன பிழையாகக் கேட்டுவிட்டார் ? உங்கள் கணவரின் பெயரைத் தானே கேட்டர். அதை நீங்கள் சொல்லாத படியால், ‘ ‘தெரியுமா ? ‘ ‘ என்று கேட்டார். உங்கள் கணவரின் பெயர் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ‘ ‘தெரியும் ‘ ‘ என்று சொல்லியிருந்தால், அவர் அடுத்த கேள்விக்குப் போயிருப்பார். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். வீணாக அவர்மீது வசை பாடிவிட்டார்கள், அம்மா.

நா: என்னை மன்னித்து விடுங்கள், ஐயா. (சட்டத்தரணியிடம்) மன்னித்துக் கொள்ளுங்கள், அண்ணே.

ச.த: (நீதிபதியை நோக்கி) நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியை நோக்கி) பரவாயில்லை, அம்மா. உங்கள் கணவருக்கு எவ்வளவு சம்பளம், அம்மா ?

நா: பொதுவாகவே ஆண்கள் தங்கள் உண்மையான சம்பளத்தைச் சொல்வதில்லை. அதைப் போய்ப் பெண்களிடம் கேட்டால் எப்படி ?

நீ: (குறுக்கிட்டு) அம்மா, நாகம்மா, திரும்பவும் சொல்லுகிறேன். நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது.

நா: மன்னிக்க வேண்டும், ஐயா. கணவர் தலைக்குச் சாயம் பூசிக்கொண்டு வேலைக்குப் போய் வந்தார். நான் ‘எவ்வளவு சம்பளம் ? ‘ என்று கேட்டேன். தனது சம்பளத்தைப் பிச்சைச் சம்பளம் என்று நான் மனத்துக்குள் ஏளனம் பண்ணுவதாக நினைத்து, சொல்ல மறுத்துவிட்டார். அப்புறம் உந்தச் சம்பளம் உந்தத் தலைக்குச் சாயம் பூசப் போதுமா ? என்று கேட்டேன்.

நீ: (குறுக்கிட்டு) வேண்டாம், அம்மா, வேண்டாம். உங்கள் கணவர் தனது சம்பளத்தைச் சொல்லவில்லை. அப்படித்தானே ?

நா: ஆமாம், ஐயா.

நீ: (சட்டத்தரணியைப் பார்க்கிறார்).

ச.த: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே ஒளிவு மறைவு உண்டா, இல்லையா ?

நா: உண்டு.

ச.த: நீங்கள் உங்கள் கணவருக்கு ஏதாவது ஒளித்து மறைத்தது உண்டா, இல்லையா ?

நா: இல்லை.

ச.த: அப்படி என்றால் அவர் ஏன் தனது சம்பளத்தை உங்களுக்கு மறைத்தார் ?

நா: அவருக்கு எங்கள் குடும்பத்திலே பொல்லாத கோபம். அந்தக் கோபத்தை என்னிலே சாதிக்கிறார்.

ச.த: அவருக்கு உங்கள் குடும்பத்திலே அப்படி என்ன கோபம் ?

நா: தங்களுடைய குடும்பத்துக்குப் பொய் சொல்லித்தானாம் எங்களுடைய கலியாணம் நடந்தது!

ச.த: அதென்ன பொய் ?

அ.வ.தொ: கனம் நீதிபதி அவர்களே, நண்பரின் கேள்வியை நான் ஆட்சேபிக்கிறேன். நண்பர் கேட்கும் கேள்வி, சாட்சி தன்னைத் தானே குற்றக் சாட்டும் விதமாக மறுமொழி சொல்ல நிர்ப்பந்திப்பதனால், நான் இந்தக் கேள்வியை ஆட்சேபிக்கிறேன்.

நீ: ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. (சட்டத்தரணியிடம்) திரு.ஜொனேதன், அடுத்த கேள்வி என்ன ?

ச.த: (சாட்சியிடம்) உங்கள் கணவர் உங்களுடைய குடும்பத்தவர் மீது கோபம் கொண்ட காரணம் என்ன ?

அ.வ.தொ: (குறுக்கிட்டு) கனம் நீதிபதி அவர்களே, நண்பரின் கேள்விக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ச.த: சம்பந்தம் உண்டு என்பது அப்புறம் நிரூபிக்கப்படும், கனம் நீதிபதி அவர்களே.

நீ: நான் இந்தக் கேள்வியை அனுமதிக்கிறேன். (சாட்சியிடம்) மறுமொழி சொல்லுங்கள், அம்மா.

நா: எனக்கு 29 வயதென்று பொய் சொல்லித்தானாம், எனது குடும்பம் என்னைத் தனக்குக் கலியாணம் கட்டி வைத்தது.

ச.த: அப்படி என்றால், நீங்கள் அவரைத் திருமணம் செய்தபொழுது, உங்களுக்கு உண்மையில் எத்தனை வயது ?

நா: பொம்பிளையின் வயது மாபிளைக்கே சொல்லவில்லை. உமக்கு ஏன் சொல்ல வேண்டும் ?

நீ: (குறுக்கிட்டு) அம்மா, கேள்வி கேட்க வேண்டாம் என்று எத்தனை தடவைகள் எச்சரித்தேன் ?

நா: மன்னிக்க வேண்டும், ஐயா.

நீ: சரி, அம்மா. உங்கள் வயது கூட்டிச் சொலப்பட்டதா, குறைத்துச் சொல்லப்பட்டதா ?

நா: இதென்ன கேள்வி, ஐயா ? குறைத்துத் தானே சொல்லியிருப்பார்கள்!

ச.த: அதாவது நீங்கள் திருமணம் செய்தபொழுது உண்மையில் உங்களுக்கு 29 வயதைவிட அதிகம் ?

நா: திருமணம் செய்தபொழுது மட்டுமல்ல, இப்பொழுதும் எனக்கு 29 வயதைவிட அதிகம்

(நீதிமன்றத்தில் சிரிப்பொலி).

ச.த: உங்களுக்கு எப்பொழுது திருமணம் நடந்தது ?

நா: எனது வயதையே என்னால் சொல்ல முடியவில்லை. கலியாணத் தேதியை மட்டும் சொல்ல முடியுமா ?

நீ: (குறுக்கிட்டு, சற்று உரத்த குரலில்) அம்மா, நாகம்மா…

நா: (சற்றுப் பயந்து) மன்னிக்க வேண்டும், ஐயா.

ச.த: உங்கள் கணவருக்கு எத்தனை வயது, அம்மா ?

நா: என்னைவிடக் குறைவு.

ச.த: பொதுவாக மாப்பிளைக்கும் பொம்பிளைக்கும் இடையே எத்தனை வயது இடைவெளி பார்ப்பார்கள் ?

நா: ஓர் ஐந்தாறு வயது பார்ப்பார்கள்.

ச.த: உங்கள் இருவருக்கும் இடையே எத்தனை வயது இடைவெளி இருக்கிறது ?

நா: ஒரு பதினைந்து, பதினாறு வயது.

ச.த: அதாவது உங்கள் கணவரைவிட உங்களுக்குப் பதினைந்து, பதினாறு வயது அதிகம்.

நா: நீர் வம்பு பண்ணுவதற்கென்றே வந்திருக்கிறீர்!

நீ: (குறுக்கிட்டு) மறுமொழி என்ன, நாகம்மா ?

நா: மன்னிக்கவும், ஐயா. எனக்கு வயது அதிகம்.

ச.த: உங்களுக்குத் திருமணம் நடந்தபொழுது, உஙகள் கணவருக்கு எத்தனை வயதென்று, அவருடைய குடும்பத்தவர்கள் சொல்லியிருந்தார்கள் ?

நா: 34 என்று. ஆம்பிளைகளின் வயதைக் குறைத்துச் சொல்லத் தேவையில்லை, அண்ணே!

ச.த: குறைத்துச் சொல்லப்பட்ட உங்கள் வயதே 29 என்கிறீர்கள்!

நா: (தலை குனிந்து பொருமுகிறார்).

ச.த: காலம் தாழ்த்திக் கலியாணம் செய்திருக்கிறீர்கள்! அப்படித்தானே ?

நா: பேரப் பிள்ளைகளைக் கண்ட பிறகும் கலியாணம் நடக்கிற நாட்டிலே இப்படி ஒரு கேள்வி! (அங்கலாய்க்கிறார்).

ச.த: உங்களுடையது பேச்சுக் கலியாணம் தானே, அம்மா ?

நா: ஆமாம். எல்லாம் தரகருடைய வேலை! தரகர்தான் வயதைக் குறைத்துச் சொன்னார்.

ச.த: உங்கள் குடும்பத்தவர் சம்மதத்துடன்!

நா: ஆமாம்.

ச.த: தப்புத்தானே ?

நா: ஆயிரம் பொய் சொல்லியாயினும் ஒரு கலியாணத்தை ஒப்பேற்றலாம் என்று சொல்லுவார்கள்!

நீ: (குறுக்கிட்டு) அம்மா, நீங்கள் பொய்ச் சாட்சியம் அளித்தால், தண்டனைக்கு உள்ளாக நேரும்.

நா: அதனால்தான், ஐயா, திருக்குறளிலே சத்தியம் செய்ய விரும்பினேன்.

நீ: திருக்குறளுக்கும் பொய்ச் சாட்சியத்துக்கும் என்ன சம்பந்தம் ?

நா: பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார், ஐயா!

நீ: அம்மா, நாகம்மா, திருவள்ளுவரே வந்து பொய்ச் சாட்சியம் அளித்தால், அவருக்கும் தண்டனை கிடைக்கும். ஆகவே உண்மையச் சொல்லித் தப்பித்துக் கொள்ளுங்கள்.

நா: ஐயா சொன்னால், சரி.

ச.த: அம்மா, நான் கேட்கிறேன் என்று குறைகாணக் கூடாது. உங்களுக்குச் சொந்தமாக ஏதாவது வருமானம் உண்டா ?

நா: சீட்டுத் தாச்சியாய் இருக்கிறேன், வட்டிக்குக் கொடுக்கிறேன் என்று உந்த ஆள் சொல்லித் தந்திருப்பாரே!

ச.த: யார் யாரெல்லாம் உங்களிடம் சீட்டுப் பிடிக்கிறார்கள் ?

நா: யார் யாரெல்லாம் என்னிடம் சீட்டுப் பிடிக்கவில்லையோ, அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் சீட்டுப் பிடிக்கிறார்கள்.

நீ: (குறுக்கிட்டு) அம்மா, நாகம்மா!

நா: ஐயா!

நீ: நீங்கள் சட்டத் தரணியாய் இருக்கவேண்டிய பெண், அம்மா.

நா: வேண்டாம், ஐயா. சட்டத் தரணிமாரை எல்லாரும் திட்டித் தீர்க்கிறார்கள்.

ச.த: குற்றம் புரியும் ஆட்களாய் இருக்கும்!

நா: இல்லை. அகப்படாமல் குற்றம் புரியத் தெரியாத ஆட்கள்!

ச.த: உங்களைப் போல! அப்படித்தானே ?

நீ: (குறுக்கிட்டு) திரு.ஜொனேதன், நாகம்மா ஒரு சாட்சி. அவர்மீது வழக்குக் கிடையாது. உங்களைச் சார்ந்தவர் மீதுதான் வழக்கு நடக்கிறது!

ச.த: மன்னிக்க வேண்டும், கனம் நீதிபதி அவர்களே! எனது வரம்பு மீறிய வார்த்தைக்கு வருந்துகிறேன். எனது கூற்றை மீட்டுக் கொள்ளுகிறேன்.

நீ: போகட்டும். குறுக்கு விசாரணை தொடரட்டும்.

ச.த: உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே ஏதும் கொடுக்கல் வாங்கல் உண்டா ?

நா: உண்டு.

ச.த: நீங்கள் உங்கள் கணவருக்குப் பணம் கொடுக்க வேண்டி இருகிறதா ?

நா: எடுக்கிறது பிச்சைச் சம்பளம். எனக்கு வேறு கடன் தந்தவரா ?

நீ: (குறுக்கிட்டு) மறுமொழி என்ன, நாகம்மா ?

நா: நான் கணவருக்குக் கொடுக்குமதி இல்லை, ஐயா.

ச.த: உங்கள் கணவர் உங்களுக்குத் தருமதி உண்டா ?

நா: ஆமாம்.

ச.த: எவ்வளவு ?

நா: இலட்சம் தேறும்.

ச.த: எப்படி ?

நா: அவர் என்னிடம் குறைந்த வட்டிக்கு எடுத்து, வெளியிலே கூடின வட்டிக்குக் கொடுத்து மாட்டுப்பட்டுப் போனார்.

ச.த: அதாவது அவரிடம் கடன் பட்டவர்கள் அவரை ஏமாற்றி விட்டார்கள்!

நா: என்றுதான் கேள்விப்பட்டேன்.

ச.த: உங்கள் கணவர் உங்களுக்குத் தரவேண்டிய முதலா, வட்டியா அதிகம் ?

நா: எனக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்ப வேண்டாம்.

நீ: நாகம்மா, நீங்கள் என்னம்மா சொல்லுகிறீர்கள் ?

நா: வட்டிதான், ஐயா, அதிகம்.

ச.த: முதலையும் வட்டியையும் வைக்கும்படி கணவரிடம் அடம் பிடித்திருப்பீர்களே ?

நா: நீரென்றால் இரண்டில் ஒன்றை விட்டுக் கொடுத்திருபீரோ ?

நீ: (குறுக்கிட்டு) நாகம்மா, வழக்கு முடிந்த பிறகு உங்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.

நா: இதென்னையா, பனையாலே விழுந்தவரை மாடேறி மிதித்த கதையாய் இருக்கிறது!

நீ: விளங்கவில்லை, அம்மா.

நா: அது நம்ம நாட்டு நடைமுறை. அதை விடுங்கள், ஐயா. உங்களுக்கு வட்டி இல்லாமல் எவ்வளவு கடன் தேவையோ, தருகிறேன். என்னைத் தண்டித்து விடாதீர்கள்.

ச.த: (குறுக்கிட்டு) அப்படி உங்கள் கணவருக்கும் செய்திருக்கலாமே ?

நா: துவக்கத்தில் அப்படித்தான் செய்து வந்தேன். இவர் என்னிடம் அதை இதைச் சொல்லி, சும்மா காசு வாங்கி, எனக்குத் தெரியாமல் வட்டிக்குக் கொடுத்திருக்கிறார். நான் அதை அறிந்த பிறகு வட்டி கேட்கத் துவங்கினேன். அப்புறம் இவர் என்னிடம் குறைந்த வட்டிக்கு எடுத்து, வெளியிலே அதிக வட்டிக்குக் கொடுத்து மாட்டுப்பட்டுப் போனார்.

ச.த: உங்கள் கணவரை எம்மாற்றியோர் யார் ?

நா: எனக்குத் தெரியாது. அவரையே கேட்டுப் பார்க்கிறது தானே ?

நீ: நாகம்மா!

நா: ஐயா!

ச.த: உங்கள் கணவரை நீங்கள் எமாற்றியதுண்டா ?

நா: சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லைக்குள் நிற்கிறீர்!

நீ: நீங்கள் சொல்வது விளங்கவில்லை, அம்மா.

நா: திரும்பத் திரும்ப ஒன்றையே கேட்டுக் கொண்டிருக்கிறார், ஐயா. கலியாண விஷயத்திலே எனது பெற்றோர் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் நான் ஒருபொழுதும் எனது கணவரை எமாற்றியது கிடையாது.

ச.த: காசு விஷயத்திலே ?

நா: கணவர்தான் எனக்குக் காசு தரவேண்டும். நான் அவருக்குக் கொடுக்குமதி இல்லை.

ச.த: கலியாணம் பேசும்பொழுது எவ்வளவு சீதனம் ஒப்புக்கொள்ளப்பட்டது ?

நா: இலட்சக் கணக்கிலே.

ச.த: உண்மையில் எவ்வளவு சீதனம் கொடுக்கப்பட்டது ?

நா: ஆயிரக் கணக்கிலே. நீர் எங்கே வருகிறீர் என்று விளங்குகிறது. காசு விஷயத்திலே எனது பெற்றோர் இன்னும் கொடுக்கவேண்டி இருக்கிறது என்று சொல்லாமல் சொலுகிறீர்!

ச.த: இன்னும் எவ்வளவு கொடுக்குமதி இருக்கிறது ?

நா: ஆயிரக் கணக்கிலே.

ச.த: அதாவது உங்கள் பெற்றோர் வாக்குத் தவறி விட்டார்கள் ?

நா: ஆமாம். எங்கள் சம்பந்திமார், அவர்களுடைய சட்டத்தரணிமார் எல்லோரும் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவர்கள்!

நீ: விளக்கமாகச் சொல்லுங்கள், அம்மா.

நா: அவர்களும் வாக்குத் தவறியவர்கள், ஐயா.

ச.த: அதாவது உங்கள் கணவரின் குடும்பத்தவர்கள் வாக்குத் தவறியவர்கள் ?

நா: ஆமாம்.

ச.த: எப்படி ?

நா: கணவர் சாப்பாட்டுக் கடையிலே வேலை. என்ன வேலை என்று கேட்க வேண்டாம். அதை மறைத்து, பெரிய சுற்றுலா விடுதியிலே நல்ல உத்தியோகம் என்று சொல்லித்தான் இலட்சக் கணக்கிலே சீதனம் கேட்டார்கள்.

ச.த: அவர்கள் சுற்றுலா விடுதி என்று சுற்றிவிட்டர்கள். நீங்கள் 29 வயதென்று சுற்றிவிட்டார்கள்!

நா: நீரும் சுப்பருடைய கொல்லைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்.

ச.த: ஏனம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள் ?

நா: எனது வயதை இழுக்காமல் கேள்வி கேட்கிறீர் இல்லையே!

ச.த: பெண்களால் வயதை ஒளியாமல் பேச முடியாது!

நா: ஆண்களால் வருமானத்தை ஒளியாமல் பேச முடியாது!

ச.த: உங்கள் கணவர் தனது வருமானத்தை உங்களுக்கு ஒளித்தவரா ?

நா: துருவுகிற தேங்காய்ப் பூவுக்குள் விழுகிற துரும்பளவு சம்பளத்தை ஒளித்தென்ன, விட்டென்ன ?

குற்றம்சாட்டப்பட்டவர்: (வெகுண்டெழுந்து) சமைக்காத பொம்பிளைகளுக்கு சமபள விபரம் எதற்காக ?

நீ: (குறுக்கிட்டு) திரு.ஜொனேதன், உங்களுடைய ஆளை, வாயை மூடிக்கொண்டிருக்கும்படி அறிக்கைப்படுத்தி வைப்பது நல்லது.

ச.த: (குற்றம்சாட்டபட்டவரிடம் தணிந்த குரலில்) பொன்னுத்துரை, பொல்லாத நீதவான். இனிமேல் வாயைத் திறந்தீரோ, உள்ளுக்குப் போக வேண்டியதுதான். (சாட்சியிடம்) தற்பொழுது உங்கள் கணவர் என்ன வேலை பார்க்கிறார், அம்மா ?

நா: (நீதிபதியிடம்) அதை என்னுடைய வாயாலே சொல்லுவதோ, ஐயா ?

நீ: அப்படி என்றால், யாருடைய வாயினாலே சொல்லப் போகிறீர்கள், அம்மா ?

(நீதிமன்றத்தில் சிரிப்பொலி)

நா: (முறுவலித்தபடி) கணவர் சமையல் வேலை செய்கிறார், ஐயா.

ச.த: எங்கே ?

நா: ஒரு விடுதியிலே.

ச.த: வீட்டிலும் சமைக்கிறவரா ?

நா: ஆமாம்.

ச.த: நீங்கள் சமைப்பதுண்டா ?

நா: அருமையாய்ச் சமைப்பேன்.

குற்றம்சாட்டப்பட்டவர்: (முறுகியபடி) நான் ஒரு பாவி!

நீ: (அதட்டும் தொனியில்) பொன்னுத்துரை!

ச.த: மன்னிக்கவும், கனம் நீதிபதி அவர்களே! (குற்றம்சாட்டப்பட்டவரிடம் தாழ்ந்த குரலில்) கம்பி எண்ணப் போகிறீர். வாயைப் பொத்திக்கொண்டிருக்க முடியாதா ?

நா: (குறுக்கிட்டு) நான் சமைப்பது அருமை என்றுதான் சொன்னேன்.

நீ: எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

நா: ஐயா, நான் எப்பொழுதாவது சமைப்பேன். கணவர்தான் எப்பொழுதும் சமைப்பார்.

ச.த: காரணம் ?

நா: பொம்ம்பிளைகள் சமைப்பதற்குக் காரணம் கேட்காதவர்கள், ஆம்பிளைகள் சமைப்பதற்குக் காரணம் கேட்கிறார்கள்!

நீ: மறுமொழி என்ன, நாகம்மா ?

நா: ஒரு வீட்டிலே இரண்டு பேர் சமைக்கத் தேவையில்லை. அதனால்தான் நான் சமைப்பதில்லை.

ச.த: நீங்கள் சமைக்காத காரணம் விளங்கவில்லை, அம்மா ?

நா: நான் சமைக்கத் தேவையில்லை.

ச.த: ஏன் ?

நா: கணவர் விடுதியிலே சமைக்கிறவர். வீட்டிலே சமைப்பவரால்தானே விடுதியிலும் சமைக்க முடியும்!

ச.த: எப்படி ?

நா: விடுதியிலே சமைக்கும் விதத்தை நான் வீட்டிலே வைத்துக் காட்டிக் கொடுக்கிறேன். நான் சொல்லுகிறபடி வீட்டிலே சமைத்தால்தானே, முதலாளி சொல்லுகிறபடி விடுதியிலே சமைக்கலாம் ?

ச.த: அப்படியா ?

நா: அப்படியேதான்! அப்புறம் முதலாளி சொல்லிவிடும் பலகாரங்கள், கறிவகைகளைக் கணவர் வீட்டிலே என்னைக் கேட்டுத் தேடிக்கொண்டு போவது வழக்கம். அதனாலே எங்களுக்கென்று புறம்பாகச் சமைக்கத் தேவையில்லை.

ச.த: கொடுக்கிற தெய்வம் விடுதியைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது!

நா: எங்கள் சாப்பாட்டுச் செலவை முதலாளி ஏற்கத்தானே வேண்டும் ?

ச.த: ஏன் ?

நா: கணவரும் முதலாளியும் ஒத்துப் பேசி, பதியாமல்தான் வேலை நடக்கிறது!

ச.த: அப்படியா ?

நா: முதலாளி ஒரு கொஞ்சக் காசைக் கணவருடைய கையிலே வைப்பார். ஒரு கொஞ்சக் காசுதான். அதை ஏதோ ஒரு வழியிலே ஈடுசெய்ய வேண்டும் அல்லவா ?

ச.த: அதாவது விடுதிக்காக உலை வக்கும் அதேவேளை விடுதிக்கும் சேர்த்து உலை வைக்கிறீர்கள்!

நா: அப்படியல்ல. கொதிக்கிற உலையிலே குளிர் காய்கிறோம்.

ச.த: அதாவது உங்களிடம் பட்ட கடனை உங்கள் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறார்.

நா: என்னாலே 200 வருஷம் உயிர்வாழ முடியுமா ? முடியாது. இன்னொரு சங்கதி சொல்லுகிறேன்.

ச.த: சொல்லுங்கள், அம்மா. சொல்லுங்கள்.

நா: இந்தத் தொழிலாளி அந்த முதலாளியிடமும் வட்டிக்குக் கொடுத்திருக்கிறார்.

ச.த: முதலாளியும் தொழிலாளியை ஏமாற்றிவிட்டார் ?

நா: இல்லை, இல்லை. முதலாளி ஒழுங்காக வட்டி கட்டுகிறார்.

ச.த: முதலைத் திருப்பித் தருவாரா ?

நா: ஒருவர் ஒழுங்காக வட்டி கட்டும்பொழுது முதலை தரும்படி கேட்கக்கூடாது.

ச.த: ஏன் ?

நா: முதலை வை என்று சொன்னால், கணவர் விடுதியிலிருந்து கொண்டுவரும் சாப்பாட்டுச் சாமான்களுக்கு முதலாளி கணக்குப்போட்டுக் காட்டிப்போடுவார்.

ச.த: கெட்டித்தனமாகச் சீவிக்கிறீர்கள், அம்மா.

நா: இதிலே ஒரு கெட்டித்தனமும் இல்லை. குறித்த தவணையிலே முதலோ வட்டியோ வரவில்லை என்றால், அதை வைக்கச் சொல்லி அடம் பிடிக்கக்கூடாது.

ச.த: ஏன் ?

நா: கடன் பட்டதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்டுவிட்டால் ?

ச.த: அப்படி என்றால், எப்படிக் கடனை மீட்பது ?

நா: இலந்தை முள்ளிலே போட்ட வேட்டியைப் போல மெள்ள மெள்ள எடுக்க வேண்டும்.

நீ: திரு.ஜொனேதன், நீங்கள் செய்வது குறுக்கு விசாரணையா, கடன் விசாரணையா ?

ச.த: கனம் நீதிபதி அவர்களே, மன்னிக்க வேண்டும். (சாட்சியிடம்) உங்கள் கணவர் உங்களிடம் பட்ட கடனுக்கு அத்தாட்சி உண்டா ?

நா: முதலிலே கணவரிடம் உமக்கு மனச்சாட்சி உண்டா என்று கேட்பதுதான் முறை.

ச.த: வட்டிக்குக் கொடுப்பவர்களுக்கு மனச்சாட்சி உண்டா ?

நா: வட்டிக்கு எடுத்துத்தான் சட்டத்தரணிகளுக்கும் கொடுக்கிறார்கள்!

நீ: திரு.ஜொனேதன், நீங்கள் தடி கொடுத்து அடி வாங்குகிறீர்கள்!

(நீதிமன்றத்தில் சிரிப்பொலி)

நா: (நீதிபதியிடம்) ஐயா, வங்கிகளும் வட்டிக்குக் கொடுக்கின்றனவே ?

நீ: ஆமாம், அம்மா.

நா: அப்படி என்றால், வங்கிகளுக்கும் மனச்சாட்சி இல்லையா, ஐயா ?

நீ: அம்மா, உங்கள் பெயர் நாகம்மா தானே ?

நா: ஆமாம், ஐயா.

நீ: நாக்கம்மா இல்லைத் தானே ?

நா: நாக்கம்மா இல்லை, ஐயா. நாகம்மா தான்.

நீ: அப்படி என்றால், உந்த நாக்கைக் கொஞ்சம் கட்டிப் போடுங்கள் அம்மா.

நா: நாக்கைக் கட்டிப்போட்டால், எனது வாக்கைக் கேட்க ஏலாதே, ஐயா.

நீ: வாய்க்கு வாய் கதைக்கிறீர்கள், அம்மா. எங்கே கற்றுக்கொண்டார்கள் ?

நா: வீட்டிலேதான், ஐயா.

நீ: கணவரிடமா ?

நா: இல்லை, ஐயா.

நீ: அப்புறம் ?

நா: இராப் பகலாகத் தமிழ் வானொலி கேட்டுத்தான், ஐயா, கொஞ்சம் கதைக்கத் தெரிந்துகொண்டேன்.

நீ: அப்படியா ?

நா: ஆமாம், ஐயா. அதிலே முதியோர் அரங்கம், வழக்காடு மன்றம்… இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவறாது கேட்பேன், ஐயா.

நீ: நீங்களும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவீர்களா ?

நா: ஆமாம், ஐயா. வீட்டிலே இருந்துகொண்டு தொலைபேசி மூலம் முதியோர் அரங்கம் நிகழ்ச்சியில் பங்கு பற்றலாம், ஐயா. அது கணவருக்குப் பிடிக்காது.

ச.த: ஏன் ?

நா: தன்னைப் பற்றி உளறிப்போட்டேன் என்றபடியால்.

ச.த: என்னத்தை உளறிவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா ?

நா: அவர் கள்ள வானொலிப் பெட்டி ஒன்று வாங்கித் தந்த சங்கதியை முதியோர் அரங்கம் நிகழ்ச்சியில் உளறிவிட்டேன்.

ச.த: கள்ள வானொலிப் பெட்டியா, அம்மா ?

நா: ஆமாம். கள்ளச் சாராயம் மாதிரித்தான் கள்ள வானொலிப் பெட்டியும். அதை இவர் 50 டாலருக்கு வாங்கிக் கொண்டுவந்து, என்னிடம் நல்ல வானொலிப் பெட்டி என்று சொல்லி, 100 டாலர் தட்டிச் சுற்றிய சங்கதியை முதியோர் அரங்கம் நிகழ்ச்சியில் கக்கிவிட்டேன்.

ச.த: அது கள்ள வானொலிப் பெட்டி என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ?

நா: இவருடைய முதலாளிதான் எனக்குச் சொன்னவர். தான் சொன்னதாக இவருக்குச் சொல்லக்கூடாது என்றும் சொன்னவர்.

ச.த: முதலாளியே தொழிலாளியைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்கிறீர்கள் ?

நா: அந்த மானக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள் ?

ச.த: அந்த மானக்கேட்டைக் கொஞ்சம் சொல்லுங்கள், அம்மா.

நா: ஊரிலே இவருடைய விடுதியிலே சமைத்துப் போட்டவருக்குத் தான், இவர் இங்கே சமைத்துப் போடுகிறார்.

நீ: (குறுக்கிட்டு) திரு.ஜொனேதன், இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கப்போகிறீர்கள் ?

ச.த: இன்னும் 15 நிமிடங்களில் முடித்துவிடுகிறேன், கனம் நீதிபதி அவர்களே.

நீ: சரி, நேரமும் 12:50 ஆகிறது. இப்பொழுதே இடைவேளை விடுவோம் (எழுகிறார்).

பதிவாளர்: அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுங்கள். (நீதிபதி உள்ளே சென்ற பிறகு) நீதிமன்றம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்குக் கூடும். எல்லோரும் வெளியேறுங்கள்.

(அடுத்த இதழில் முடிவுறும்)

manivel7@hotmail.com

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை