தபால்கார அப்துல் காதர்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

எம் எஸ் கல்யாண்சுந்தரம்


சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.

‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.

போஸ்ட்மன் அப்துல்காதர் என்ற சொற்கள் கேட்டதும் அவரது முகம் மலர்ந்து கண்களிலிருந்து அவருடைய உலகப் பிரசித்தியான ஹாஸ்ய ஒளி வீசிற்று.

‘கடைசியாகச் சொன்னீரே, அதென்ன வேடிக்கை ? ‘ என்று வினவினார் அவர்.

‘பார்த்தால்தான் தெரியும் ‘ என்றேன்.

‘சரி, உடனே காட்டும். நான் எந்த ஊருக்குப் போனாலும் ஒரே ஒரு முக்கியமான வஸ்துவைத்தான் பார்ப்பது வழக்கம். ஆக்ராவில் தாஜ்மஹால்; கல்கத்தாவில் ஆலமரம்; டில்லியில் துருப்பிடியாத எஃகால் செய்த பிருத்விராஜ் கீர்த்திஸ்தம்பம்; சென்னை கடற்கரை; அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம்; பம்பாயில் மலபார் குன்று; மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலிலுள்ள ‘டோம் ‘; இவ்வூரில் தபால்கார அப்துல்காதர் போலும், ‘ என்றார் ஷா.

‘அப்படி ஆகட்டும் ‘ என்றேன்.

ஆனால் அவனுடைய வீட்டில் போய் விசாரித்ததில் அப்துல்காதர் அன்றுதான் மெடிகல் சர்டிபிகேட் கொடுத்துவிட்டு இரண்டு மாத ரஜாவில் தன் கிராமத்திற்குப் போய்விட்டான் என்று தெரிந்தது. அது எனக்கு மிக வருத்தத்தைக் கொடுத்தது. ஷாவின் வருத்தத்திற்கோ அளவேயில்லை. அவர் மறு ரயிலிலேயே வேறு ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

இந்த அப்துல்காதரைப் பற்றி எழுதுவதில் ஒரு விசேஷ சிரமம் இருக்கிறது; நேரில் பழகித்தான் அறிய வேண்டுமே தவிர, சொல்லக்கேட்டோ அல்லது புஸ்தகத்தில் படித்தோ அறிய முடியாது. வர்ணனையிலிருந்து மட்டுமே ரோஜாவின் அழகையும் வாசனையையும் நாம் அறிய முடியுமோ ? பால் என்னும் பொருள் கொக்கைப் போல நீண்டு கோணலானது என்று பிறவிக் குருடனான கிழவன் அனுமானித்தது போலாகும்.

அப்துல் காதர் வெகுநாளாகத் தன் சொந்த ஊராகிய இவ்வூரில் தபால்காரனாக இருந்து வருகிறான். அவன் பெயரைச் சொன்னதுமே அனேகருக்குத் தபால்பைதான் கண்முன் வரும். தபால்காரன் என்றால் அப்துல்காதரின் நீண்ட மாம்பிஞ்சுகள் போன்ற மீசையும், படிப்படியான நீர்வீழ்ச்சி போன்ற தாடியும், சிரித்த பற்களும், அன்பு ததும்பும் கண்களும், நீல நிறச் சட்டையும், காக்கித் தலைப்பாகையும் மனத்தின் முன் நிற்கும். மற்ற தபால்காரர்களெல்லாம் ‘பெயருக்கு தபால்காரர் ‘ போலத் தோன்றுவார்கள். சொல்லப்போனால், தபால்காரன் என்பதைத் தவிர வேறு ஹோதாவிலோ அல்லது ‘பூர்வாச்ரம ‘ நிலைகளிலோ அவனைக் கற்பனை செய்து பார்ப்பது கூடக் கஷ்டமாக இருக்கிறது. அவன் தபால்கார அப்துல்காதராகவே பிறந்து, எப்போதும் 35 வயதானவனாகவே இருப்பான் போலும்!

மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்கு அவன் தபால் எடுத்து வருவான். அவன் தெருக்கோடி திரும்பியதுமே மற்றொரு சூரியன் உதித்துவிட்டது போல ஜனங்களுக்குத் தோன்றும். அவர்களுள் சிலபேரை சந்தித்து அவர்களுடன் அப்துல் பேசுவதைக் கேட்போம்.

‘என்ன அப்துல்காதர் ? ‘ என்பார் தாலுகா ஆபீஸ் சுப்பய்யர், பல்லிளித்தவாறு.

தபாலாபீசிலிருந்து புறப்படும்போதே யாராருக்குக் கடிதம் இருக்கிறது என்று அவன் மனப்பாடம் செய்திருப்பான். சுப்பய்யருக்கு ஒன்றுமில்லை என்பதை அவன் நன்கறிவான். ‘இன்னிக்கு ஒன்றுமில்லை போலிருக்கே! நாளைக்கு அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறது, பார்ப்போமா ? ‘ என்பான்.

ராமா ஜோசியர்:- என்ன சாயுபு! தபால் ஏதாவது . . . ?

அப்துல்:- (புரட்டிப் பார்த்துக்கொண்டே) நீங்கதான் ஜோசியம் பார்த்துச் சொல்லுங்களேன்!

ராமா:- நான் பணமில்லாமே யாருக்குமே ஜோசியம் பார்க்கிறதில்லையே!

இது தினசரிப் பாடம்; ஆனால் நாளது வரை இப்படிப் பேசிக் கொள்வதில் இருவருக்கும் சலிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் பேசிக்கொண்டே போவார்கள்.

அப்துல்:- ஒண்ணையுங் காணமே.

ராமா:- நல்லவேளை, புறப்பட்டபோது அபசகுணமாச்சு. என்னடா இழவு, தபால்லே கெட்ட செய்தி ஏதாவது வந்துதிடுமோன்னு பயந்தேன்.

அப்துல்:- அப்பொ, நல்ல வேளையாப் போச்சுன்னு சொல்லுங்க!

உபாத்தியாயர்:- என்ன அப்துல்! என்னாலே உனக்கு சிரமம் இருக்காதே!

அப்துல்:- அதென்ன அப்படிச் சொல்றீங்க ? மூணு லெட்டர் இருக்குதே . . . இது யாரு எழுத்துங்க ? உங்க துரைசாமி பிள்ளை எழுத்துன்னு நினைச்சேன்; ஆனா அவர் இப்படி வளச்சிப் போடமாட்டாருங்க.

உபா:- ஆமாம். புது எழுத்தாகத்தான் இருக்கு. உடைச்சிப் பார்த்தால்தான் தெரியும்.

கோபால்ராவ்:- என்ன அப்துல், தயவில்லையே!

அப்துல்:- என்ன ஒரே வார்த்தையிலேயே அப்படிச் சொல்லிட்டாங்க!

கோபால்:- ஒரு லெட்டரா, கிட்டரா ஒண்ணையுங் காணமே.

அப்துல்:- பாத்தீங்களா, பாத்தீங்களா, என்னமோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சா . . .! என்னவிருந்தாலும் பாருங்க, தபால்காரப் பயன்னா வேறொண்ணும் கேக்கத் தோன்றுதில்லை. அவனும் மனுஷந்தானே, அவன் பிள்ளை குட்டியைப் பற்றி விசாரிப்போம் . . .

கோபால்:- அடேடே, அதெப்போ ? ரொம்ப நாளா ஒண்ணும் பிறக்காதிருந்ததே. ஆணா, பெண்ணா . . . ?

அப்துல்:- இப்போ ஒண்ணும் இல்லீங்க. உங்க ஆசீர்வாதத்திலே பிறக்காமலா போகுது! ஒரு வார்த்தைக்கி சொன்னேன்.

டாக்டர் மேனன்:- ஹல்லோ போஸ்ட்மன், நமக்கு ரெஜிஸ்டர் தபால் ஒன்று வரணும்; இன்னும் வரவில்லையே!

அப்துல்:- இப்ப வேண்டாமுங்க. ஒரு பத்து நாள் போகட்டுங்க.

மேனன்:- (கோபத்தோடு) என்ன மேன் அப்படி சொல்கிறாய் ?

அப்துல்:- இப்ப வர்ற ரெஜிஸ்டர் லெட்டரெல்லாம் இன்கம் டாக்ஸ் டிமாண்ட் நோட்டாஸ்தானுங்க.

விசுவநாத குருக்கள்: ஏண்டாப்பா சாயுபு வடக்கத்தித் தபால் வந்துடுத்தோ ?

அப்துல்:- வடகத்தி தெற்கத்தி, பேனாக்கத்தி, தொண்டை கிழியக் கத்தி – எல்லா தபாலும் வந்துடுத்து, உங்களுக்கொண்ணும் இல்லை.

விசுவ:- ஏண்டாப்பா, வைக்கத்திலேலிருந்து எழுத்து இவ்விடத்துக்கு வர எத்தனை திவசம் பிடிக்கும் ?

அப்துல்:- (தாழ்த்திய குரலில்) என்ன சாமி விளக்கு வக்கிற நேரத்திலே, ‘எழுத்து ‘ ‘திவசம் ‘ எங்கறீங்க ?

விசுவ:- என் காது சூக்ஷ்மக் குறைவு. கொஞ்சம் உரக்கச் சொல்லு.

அப்துல்:- நீங்க ரிப்ளை கார்டு போடுங்கொ. அவங்க சுறுசுறுப்பா இருந்தா மூணே நாளிலே டான்னு பதில் வந்திடும்.

ஷாப்கடை பாச்சாரியா:- க்யா, அப்துல் ? கத் ஹோனா ?

அப்துல்:- நை மகராஜ்

பாச்சா:- க்யா, ரோஜ் நை போல்தா ?

அப்துல்:- க்யா கர்த்தா மகராஜ். அவங்க நை போல்தா நம்ப எங்கேருந்து தோதா, சொல்லுங்க

ஒருநாள் நாங்கள் சிலபேர் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு புறத்தில் தலைகுனிந்தவாறு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். அப்துல் காதர் ஆடி அசைந்துகொண்டு வந்து புன்சிரிப்புடன் இரண்டாவது படியில் உட்கார்ந்து வெற்றிலைபாக்குப் பெட்டியின் பக்கமாகக் கையை நீட்டினான். மேலே வந்து உட்காரும்படி நாங்கள் சொன்னோம். ‘அதுக்கில்லை சார்; இங்கே குந்தியிருந்தா யாராவது வந்ததும் எட்டிக் கடிதத்தைக் கொடுத்திடுவேன். பேச்சும் நடக்கும்; வேலையும் நிக்காது ‘ என்றான்.

அவன் சாதாரணமாக எங்களைப் போன்ற கூட்டங்களோடு பேசிக்கொண்டே தன் பாதி பாரத்தைக் குறைத்துக்கொள்வான். அன்றைய தினமும் அவன் அதையும் இதையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு ரத்தின முதலியாரைப் பாத்து ‘என்னாங்க சார், கலியாணம் இன்னும் ரெண்டு நாள்தானிருக்கு; உங்க ரங்கவேலு முதலியார் வரவில்லையே ‘ என்று விசாரித்தான். ரங்கவேலு முதலியார் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் வந்திருந்தார். இந்த ஒரு மணி நேர சம்பாஷணை நடக்கும்போது அவர் தூண் மறைவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நாங்கள் வாய் திறக்குமுன் அவர் ஜாடை செய்து தான் வந்திருப்பதை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டார். அதற்குள் அப்துல் ‘அவர் இருந்தா நல்லா இருக்கும். எப்பவும் சிரிச்ச முகம்; தமாஷா பேசுவாரு; என்ன ஒத்தாசை கேட்டாலும் செய்வாரு ‘ என்று அவரை சிலாகித்துப் பேசினான். அதற்குள் எங்கள் நடத்தையில் சந்தேகம் தோன்றவே அவன் தூண் பக்கமாக எட்டிப் பார்த்தான். நாங்கள் கொல்லென்று சிரித்தோம். ‘பார்த்தீங்களா, இங்கே உக்காந்துக்கிட்டே, கோட்டானைப் போல! என்ன சார், இந்தப் பய நம்மை ஏதாவது திட்டிப் பேசறான்னு சோதிச்சீங்களா ? நான் ஏன் சார் திட்டறேன், அதுவும் உங்களை . . . (பிறகு என் பக்கம் திரும்பி) அவரைப் பாருங்க, தலை குனிஞ்சிக்கிட்டே மனசுக்குள்ளே சிரிச்சிட்டு இருக்காரு, இந்த தபால்காரப் பயலுக்கு இந்த வம்பெல்லாம் எதுக்குன்னு. இதையெல்லாம் சேத்துவச்சிக் கதை எழுதினாலும் எழுதிடுவாரு . . .! சரி, போய்ட்டு வறேன், சார்! ‘ என்று சொல்லிக்கொண்டே எழுந்தான். எனக்குச் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. அந்த சமயத்தில் அவன் ஊகித்தவாறே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். அநுபவ ஞானத்தால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டான்.

‘இதெல்லாம் சரிதான். ஆனால் கதையெங்கே ? ‘ என்று நீங்கள் கேட்கிறீர்கள். வாஸ்வந்தான். இன்னும் ஆலாபனையிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உமக்குத் தெரியாதா ? சிறுகதைக் கலையில் இதுதான் நவநாகரிக முறை. இனி கதை கேளுங்கள்.

ஒரு சமயம் அப்துல்காதல் ஒரு மாதம் லீவ் வாங்கிக் கொண்டான். அவனுக்குப் பதிலாக வேலுச்சாமி பிள்ளை என்றொருவனை நியமித்தார்கள். அவன் வேலை ஒப்புக்கொண்ட முதல்நாள் 5.15க்குக் கடிதங்களைக் கொண்டு வந்தான். ‘இதென்ன இவ்வளவு சீக்கிரம் ‘ என்றேன். தாமதமாய் வந்ததை நான் கிண்டலாகக் குறிப்பிடுகிறேன் என்று நினைத்த அவன் ‘இல்லை சார், ‘பீட் ‘ எனக்கு புதிது; இரண்டு நாளில் சரியாகப் போய்விடும் ‘ என்று சமாதானம் கூறினான்.

ஐந்து மணிக்குக் கொடுக்கக் கூடிய கடிதத்தை ஆறரை மணிக்குக் கொடுத்து வந்ததற்காக அப்துல்காதர் மேல் எனக்கு உண்மையாகவே கோபம் பொங்கிற்று. இத்தனை வருஷங்களாக இதைக் கவனியாமல் விட்டதற்காக என் பேரிலும் எனக்கு கோபம் உண்டாகி கடைசியில் அதுவும் அவன் பேரில் திரும்பிற்று. இரண்டோரிடங்களில் விசாரித்ததில் அவன் செய்து வந்தது வீண் தாமதம் என்றும், ஜனங்கள் அசிரத்தையாலும் அவன் மேலிருந்த அபிமானத்தாலும் சும்மாயிருந்து வந்தார்களென்றும் தெரிய வந்தது. எனக்கு எப்போதுமே சமுதாயக் கடமை என்ற உணர்ச்சி அதிகம். என் தெருவில் ஒரு எலி செத்துக்கிடந்தால் நான் முனிசிபல் ஆபீசுக்கு எழுதும் தோரணையில் – சுகாதார அதிகாரியும் நகரத் தலைவரும் பயந்து வெட்கித் தாமே நேரில் ஆவன செய்வித்து கையோடு மற்ற தெருக்களையும் பார்வையிட்டுச் செல்வார்கள். அப்பேர்ப்பட்டவனா அப்துல் காதரைத் திருத்தாமல் விடுவேன் ? என் எச்சரிக்கையால் அவன் திருந்தாவிட்டால் பின்னர் அதிகாரிகளுக்கு எழுதத் தீர்மானித்தேன். சூடு தணியுமுன்னே ஒரு புகார் மனுவும் எழுதி வைத்துவிட்டேன்.

லீவ் முடிவடைந்ததும் அவன் வேலைக்குத் திரும்பினான். வாசற்படியில் வந்து நின்றேன். மணி ஐந்தடித்தது. தபால்காரனைக் காணோம். 5.30, 6.10. அப்போதுதான் அவன் பத்து வீடுகளுக்கப்பால் தென்பட்டான். அவன் தாடியைக் கண்டதுமே என் மனம் இளக ஆரம்பித்தது. ஆனால் இங்கிலீஷில் இரண்டு வார்த்தைகளை ஸ்மரித்துக் கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். நின்ற நின்று என்னண்டை வரும்போது மணி 6.30. கட்டில் தேடிப் பார்ப்பதாக பாவனை செய்துவிட்டு உடன்பிறந்த புன்சிரிப்புடன் ‘இல்லை போலிருக்கு ‘ என்றான் அவன்.

‘ஏன் இவ்வளவு தாமதம் ? ‘ என்றேன் சுளித்த புருவத்தோடு.

‘எப்போதும் போலத்தானே வந்திருக்கிறேன் ‘ என்றான் அவன்.

மத்தியில் சற்று இளகிய என் நெஞ்சு இந்த விடையை கேட்டு மறுபடியும் உறைய ஆரம்பித்தது. ‘உமக்கு இது வழக்கமான நேரந்தான். ஆனால் மற்றவர்கள் இதற்குள் தம் வேலையை முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்திருப்பார்கள் . . . ஒரு மாதமாக எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் கடிதம் கிடைத்து வந்தது ‘ என்றேன் நான்.

‘ஆம். அவர்கள் அப்படித்தான், ‘விரு, விரு ‘ என்று கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். லாயத்திற்குத் திரும்பும் ஜட்காக் குதிரை போல ‘ என்று அவன் அலட்சியமாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுபவன்போல் சொன்னான்.

‘நீரும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது ? ‘ என்று நான் தோரணையுடன் கேட்டேன்.

‘செய்யலாம்; எனக்கு அதெல்லாம் ஒத்து வராது. எப்படிங்க . . . ‘ என்று சிரத்தையற்ற புன்சிரிப்புடன் அவன் இழுத்தான்.

எனக்கு கோபம் ஒருபுறம், அன்பு ஒருபுறம். இருந்தாலும், ‘எப்படி என்றால் ? கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டியதுதான். இல்லாவிடில் இவ்விஷயத்தைப் பற்றி ரிபோர்ட்டு செய்ய வேண்டியவரும், ‘ என்று பாடம் ஒப்புவிப்பவன் போல நான் சொன்னேன். சொல்லும்போதே என் மனம் கனத்தது. இரண்டு வினாடி கழித்து மனதைத் திடப்படுத்திக் கொண்டு ‘நாலுபேர் எழுதிப் போட்டால் வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள், ‘ என்று பயமுறுத்தியும் வியாக்கியானம் செய்தேன்.

அதற்கவன் தலையைச் சொறிந்தவாறே ‘அதுவும் ஒரு நன்மைதான். பிறந்து வளர்ந்து பழகிப்போன ஊர். ஜனங்கள் என்னை ‘அதென்ன அப்துல் ? இதென்ன அப்துல் ‘ என்று கேட்டுக் கொண்டுதானிருப்பார்கள். அவர்கள் வார்த்தையைத் தட்டிக் கொண்டு போகமுடியுமா ? (இந்தாங்கோ பாட்டியம்மா; சீயாழியிருந்து உங்க மூத்தபிள்ளை எழுதியிருக்காரு.) வேடிக்கையாகத்தான் இருக்கு. மத்த மூணு பேரை யாரும் நிறுத்தி வச்சுப் பேசறதில்லை. (செட்டியாரே, லெட்டர். இந்த எழுத்தை எப்படித்தான் வாசிக்கப் போறீங்களோ!) இப்படி ஜனங்கள் இழுத்து வைத்துப் பேசினால் நான்தான் என்ன செய்வது . . . ? நீங்கள் இவ்வளவு நேரம் இத்தனை தகவல்கள் விசாரித்தீர்கள். நின்ற பதில் சொல்லிவிட்டுப் போவதுதானே மரியாதை. கடுதாசிக்கு என்ன அவசரம் ? ஐஸ்கிரீமா, மல்லிகைப்பூவா, இளகிப்போகும் வாடிப்போகும்னு பயப்பட . . . ? முந்தாநாள் உங்க அண்ணாச்சியை மதுரையிலே பார்த்தேன். ரொம்ப நேரம் எல்லாம் விசாரிச்சாரு. ரெண்டு மூணு மாசமா உங்ககிட்டேயிருந்து லெட்டரே வரலையாம். முன்னைக்கிப்போ ஒரு சுத்து பருத்திருக்காரு. காதுகிட்ட நரையும் தட்டியிருக்குது . . . வரட்டுமா சார் . . . ? ‘ என்று சொல்லிக்கொண்டே கவலையும் கல்மிஷமும் இல்லாத புன்சிரிப்புடன் எதிர் சரகில் வக்கீல் கோபாலய்யர் வீட்டை நோக்கிச் சென்றான் – கடிதம் இல்லை என்று கையை ஆட்டிச் சொல்வதற்காக.

அவன்மீது நான் கொண்டிருந்த கோபமெல்லாம் பறந்து போய்விட்டது. நான் எழுதி வைத்திருந்த மனுவைக் துண்டு துண்டாகக் கிழித்துச் சாக்கடையில் போட்டேன். ‘என் கடிதங்கள் மறுநாள் காலை வந்து சேர்ந்தாலும் பாதகமில்லை; அப்துல் காதர்தான் கொண்டு வரவேண்டும் ‘ என்று தீர்மானித்தேன். ‘உமது கட்டுரைகள் எமக்குத் தேவையில்லை ‘ என்று பத்திராதிபர்கள் அனுப்பும் அறிவிப்புகள் இன்று சாயங்காலம் வந்தாலென்ன, நாளைக் காலைதான் வந்தாலென்ன ?

[பொன்மணல் தொகுதி . எம் எஸ் கல்யாணசுந்தரம். தமிழினி பதிப்பகம், 342, டி டி கெ சாலை ,ராயப்பேட்டை ,சென்னை. 14 அணுக dilipbooks@eth.net ]

***

தட்டச்சு : ஜெயமோகன்

jeyamohanb@rediffmail.com

Series Navigation

எம் எஸ் கல்யாண்சுந்தரம்

எம் எஸ் கல்யாண்சுந்தரம்