நாகரத்தினம் கிருஷ்ணா
பியர் ரிஷாரைத் தெரியுமா ‘ ? பார்த்திருக்கீங்களான்னு ? கேட்டா, உங்கக்கிட்ட இல்லங்கற பதில்தான் வரும். பிரான்சுல இருந்துகிட்டு உங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது அபத்தமாகப் படலாம். சரியாச் சொல்ல்லணும்னா, ஒரு விண்டர்ல, கம்பளி ஓவர்க் கோட்டில், சைட் பாக்கெட்டுகளில் கிளவுஸ் கைகளைப் புதைத்துக் கொண்டு, குளிரினால், தலையை ஒரு 45டிகிரி முன்னோக்கிச் சாய்த்துக் கொண்டு இந்தியக் கடையொன்றில் நான் நுழைந்தபோது போயிட்டு வருக்கிறேன் ‘ என்று கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டு எதிர்ப்பட்டார். அந்த வித்தியாசமான தமிழ் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. பார்த்தேன்.
வயது ஐம்பது இருக்கலாமா ? இருக்கலாம். ஐரோப்பியர்களின் சராசரி உயரம், சுருட்டுப் புகையின் நிறத்தில் தாடி. அம்புலி மாமா புத்தகத்தில வருகின்ற அத்தலெட் சாமியார் மாதரி உடலை வைத்துக் கொண்டு, சிக்கலாகத் தென்பட்ட சிகையை வாரி, ஒரு ரப்பர் வளையத்தில் இட்டு அதன் கழுத்தை இறுக்கியிருந்தார். எதிர்பட்டவரை, அங்கீகரிக்கின்ற வகையில் பார்த்தேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார்.
இரண்டொரு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு எங்களது இரண்டாவதுச் சந்திப்பு அந்தக் இந்தியக் கடையிலேயே நடந்தது. புதுவையிலிருந்து வந்திருந்த அரவிந்த ஆஸ்ரம அகர்பத்திகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
‘ழே நெ த்ரூவ் பா சந்த்தால் ‘ ? என்ற கேள்வியை கடைக்காரரிடம் எழுப்பியபோது, நான் குறுக்கிட்டு அவர் தேடிக் கொண்டிருந்த அந்த சந்தனவத்தியை எடுத்துக் கொடுக்க
‘மெர்ஸி என்றார்.
‘தெரியன் ‘ என்றேன் பதிலுக்கு.
‘வூஸ் எத்தியே தேழா அ பொந்திஷேரி ? ‘ (பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கிறீர்கள ‘ ?). அந்த குறிப்பிட்ட அகர்பத்திகளை எடுக்கவே, எனக்குச் சந்தேகம் கேட்டு விட்டேன்.
‘உய்.. உய்.. ப்ளுசியர் ஃபுவா. சேத் உய்ன் பேல் வீல் (ஆமாம். அனேக தடவைகள்,.. அழகான நகரம்).
அதற்குப் பிறகு, அவர் தொட்ட விஷயங்கள் என் சுவாரசியத்தைக் கூட்டியது.
பாண்டிச்சேரி என்றவுடன் ஆஸ்ரமம், ஆரோவில், அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் என்கின்ற பிரெஞ்சு சுற்றுலா வாசிகளிடமிருந்து வேறுபட்டு எடுத்த எடுப்பில் ‘பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ‘ தெரியுமா ? என்று கேட்க, எனக்கு தெரியாது என்று சொல்வதற்கு தயக்கம்.
‘மன்னிக்கவும். தெரியாது. ‘ என்று உண்மையை ஒத்துக் கொண்டேன்.
‘அங்கே ஆகமங்களை ஆய்வு செஞ்சிருக்கேன். தேவாரம், திருவாசகத்தில் கூட எனக்கு ஈடுபாடு உண்டு. சமஸ்கிருதத்திலும், க்ரந்தத்திலும் எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் அங்கே இருக்கின்றன ‘
‘……………….. ‘
‘ஆகமங்களோட இந்தியக் கணிப்பு தப்பு என்பது என்னோட அபிப்ராயம். அவை மதம் சார்ந்த இலக்கியங்கள் மட்டும் அல்ல. ஆரோக்கியமான சமூகத்தைப் பற்றியவை. அவை கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற நுண் கலைகளைப் பற்றியும் தெளிவாகப் பேசுகின்ற ஆவணங்கள் ‘.
என் கண்முன்னே பியர் ரிஷார் என்னைத் துரும்பாக்கிவிட்டு, கிடு கிடுவென்று உயர்ந்து நின்றார்
‘நேரமிருக்குமானால், இந்த முகவரிக்கு வாயேன். நான் ஒரு அமைப்பினை வைத்திருக்கிறேன். ‘ என்று சொல்லி தனது அடையாள அட்டையைக் கொடுத்தார்.
‘சந்தோஷம் ‘ என்று வாங்கிக் கொண்டேன்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை எனக்குத் திடாரென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கிளம்பி விட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இருந்தது. எக்ஸ்பிரஸ் வே- A4 என்றாலும் அதிக வேகத்தில் செல்ல முடியாதபடி பனி இறுகி சாலை வழுக்கலாக இருந்ததால் அவரது அந்த ஆஸ்ரமத்தை அடைவதற்கு முக்கால் மணி நேரம் பிடித்தது. முக்கிய சாலையை விட்டு ஒதுங்கி மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் அந்த பச்சைகளை விலக்கிக் கொண்டு பிரம்மாண்டமான சிலை ஒன்று அசப்பில் புத்தர் போன்று நின்று வழிகாட்ட அத்திசையை நோக்கி காரை டிரைவ் செய்ய ஒரு பெரிய கேட்டின் முன்னால் போய் நிற்க, அடுத்து சில நொடிகளில் எனது உருவம் நிழலாக மாற்றப்பட்டு, வாயிலைக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்களின் டெலிவிஷனில் என் பிம்பம் ஏற்கப்பட்டு நான் உள்ளே அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் பியர் ரிஷார் எதிர் பட்டார்.
‘போன்ழூர் மிசியே ரமேஷ் ‘
‘போன்ழூர் ‘
கைகுலுக்கிக் கொண்டோம்.
‘வழி கண்டுபிடிக்கச் சிரமமாக இருந்ததா ? ‘ பிரெஞ்சில் கேட்டார்.
‘இல்லை ‘ என்று சொன்னேன்.
நடந்து கொண்டே பேசினோம்.
‘இது எங்கள் ராச்சியம். ‘
‘அப்போ நீங்கள் மன்னரா ? ‘
அவரது முகம் சுருங்கிவிட்டது.
‘உண்மைதான் மிஸியே ரமேஷ். அப்படித்தான் என் நண்பர்கள் கூட நினைக்கின்றார்கள். ஒரு நாளைக்கு, அவர்களது அந்த நினைப்பைக்கூட பொய்யாக்கவேண்டும் என்று ஆசை. ‘
‘……………… ‘
‘அதோ அந்தச் சிலை நராயண ‘ என்றார்.
ஆச்சரியத்தோடுப் பார்த்தேன்.
‘நராயண ‘ என்றால், என்ன பொருள் தெரியுமா ?
தெரியாது என்பதன் அடையாளமாகத் தலையாட்டினேன்.
‘நர ‘ ‘ மனிதன், மானுடம். ‘அயண ‘ லியெ தெ தெஸ்த்தினாசியோன், மனிதனின் முடிவு. ஆர். ஜி பண்டிர்கரின் வைஷ்ணவிஸம் படி. நிைறைய புரியும். அதோ அந்த முத்திரைகள் பற்றியாவது தெரியுமா ? அது பதாகம் மற்றது சுகதுண்டம் ‘ சொல்லிக் கொண்டேப் போனார்.
நான் மெளனமாகத் தொடர்ந்தேன்.
மெல்லிய நூலாக ஆரம்பித்த அவரது வசீகரக் கயிறு மெள்ள மெள்ள இறுகி அவரை நோக்கி இழுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு இருக்கையைத்தேடி உட்கார்ந்தோம்.
‘இந்தியர்களுக்கு டா என்றாலே விருப்பமாயிற்றே, என்ன டா குடிக்கின்றீர்கள் ? தே அ லா மாந்த்
(புதினா கலந்த டா) ?
சற்று நேரத்தில் தருவிக்கபட்டது. மண் குவளையில் வந்த அந்த டாயை குடித்துக் கொண்டே உரையாடலைத் தொடர்ந்தோம். அவர் பேசியதுதான் அதிகம். எங்கே வாழ்ந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா, கமல், ரஜனி என அக்கறைக் காட்டும் சராசரி தமிழனான எனக்கு அவரது பேச்சு அசுவாரசியமாகப் பட்டது. கொட்டாவி வர, அவர் அதனை ஊகித்துக்கொண்டு வழி அனுப்பி வைத்தார். மறுபடியும் அவசியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன்.
அதற்குப் பிறகு ஐரோப்பிய சந்தை வாழ்க்கை முறை அவரை முற்றிலுமாக அன்னியப் படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவரும் அந்தச் சந்திப்பும் எந்த முக்கியத்துவமும் பெறாமல் என் வாழ்வின் சராசரி நிகழ்வுகளில் ஒன்றாகி, வருடங்கள் கடந்திருந்தன.
அந்த வருடம் இந்தியாவுக்கு வந்திருந்தேன். ஒரு நாள் புதுவையிலிருக்கும் என் ஆன்மீக நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, கிரி வலத்திற்காக பெளர்ணமியன்று திருவண்ணாமலைக்குச் செல்வதாகச் சொன்னவன், என்னையும் வற்புறுத்தவே உடன் புறப்பட்டிருந்தேன். மனதுக்கு ஆரோக்கியமோ என்னவோ ? நடப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் கிளம்பியிருந்தேன்.
தெளிவான நிலவு, இதமாக வீசிக் கெ ‘ண்டிருந்த காற்று எங்களை உற்சாப்படுத்த வரிசையாக சென்று கொண்டிருந்த மக்களை நாங்கள் பின்தொடர்ந்தோம். இந்திர தீர்த்தம், சேஷாத்திரி சுவாமிகள் சமாதி, ரமண ஆஸ்ரமம் என வரிசையாகக் கடந்து தரிசித்துவிட்டு மாணிக்க வாசகர் கோவில் அடைந்தோம். சற்று ஓய்வெடுக்கலாம் என்று யோசித்து தள்ளியிருந்த ஒரு பெட்டிக் கடையை நெருங்கி அதனை ஒட்டியிருந்த பலகையில் அமர்ந்தோம்.
‘சாரைப் பார்த்தா வெளிநாட்டில இருந்து வந்த மாதரி தெரியுது ? கரெக்டா சார் ?
பெட்டிக் கடைகாரரின் கேள்வி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எப்படியோ மோப்பம் பிடித்து கேட்கப்படும் கேள்வி. நான் ஆமாம் என்பதன் அடையாளமாகத் தலையாட்டி வைத்தேன்.
‘எந்த நாடுன்னு தெரிஞ்சுக்கலாமா ? நீங்க பாண்டிச்சேரியாயிருந்தா, பிரான்சுக்காரராத்தான்
இருப்பீீங்க. சரிதானே ? ‘
‘உண்மைதான் பிரான்சுல இருந்துதான் வந்திருக்கான். கிரிவலத்துக்கு நான்தான் அழைச்சுகிட்டு வந்தேன். இவனுக்கு இஷ்டமில்லை. என் நண்பன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான். ‘
‘கிரிவலத்தைப் பத்தி சாருக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். இங்க வராத வி.ஐ.பிங்களே கிடையாது சார் ‘.
‘இருக்கலாம். ஆனா கிரிவலம்ங்கற பேர்ல மலையைப் பாழ்படுத்தாம இருந்தா சரிதான். ‘
‘ஆரம்பிச்சுட்டியா ? ‘ என் நண்பன் குறுக்கிட்டான்.
‘ சார் முதல்ல கொஞ்சம் முன்ன ‘லே கீழே போட்டாங்களே சிகரேட் துண்டு அதை அங்கால இருக்கிற கூடையிலே போடுங்க. அப்புறம் இந்த மலையப் நாங்க பாழ்படுத்தறதப்பத்திப் நீங்க பேசலாம். ‘
நான் ஆச்சரியத்தோட கடைக்காரரைப் பார்த்தேன்.
‘ உங்க பிரான்சுல இருந்து சாமியார் ஒருத்தர் வந்திருக்கார். அவர் தன்னை இந்தியன்னு சொல்லிக்குவார். இந்தியாவை உண்மையா நேசிக்கிற எவனுமே இந்தியன்னு சொல்லுவார். வெளி நா ‘ட்டுக்குப் போயிட்டுவர நம்மவங்களுக்கு இங்கே உள்ள குறைதான் தெரியுது. ஆனா இங்கே வர வெளிநாட்டுக்காரன் நம்ம பெருமைகளைத்தான் பார்க்கிறான். ‘
‘தப்பா ஒண்ணும் சொல்லலேயே, இங்கே நாம ஒழுங்கா இருந்தா மத்தவங்க ஏன் குறை சொல்றாங்க. நீயே சொல்லு கிரிவலம் போற நாம்ப, கொஞ்சம் பொறுப்போட நடந்துகிட்டா நமக்குத்தானே நல்லது ‘ என் நண்பன் கடைகாரரை சமாதானப்படுத்த முனைந்தான்.
‘சார் நான் மறுக்கல. ஆனா வெளி நாட்டிலிருந்து வர நம்மவங்க, இப்படி இருக்கிற இந்தியாவுக்கு நாம என்ன செய்யலாம்னு கொஞ்சம் யோசிக்கணும். அதுக்கு விருப்பமில்லைன்னா இந்தியாவை குறை சொல்றதை விட்டுடனும் ‘
‘என்னப்பா கடையை வச்சுகிணு இப்படிப் பேசினா வியாபாரம் என்னத்துக்கு ஆகும் ‘
‘நேத்தும் இப்படித்தான் அமெரிக்காவுல இருந்து வந்த ஒருத்தர். இஷ்டத்துக்கும் பேசறார்.
மனசை நோக அடிச்சுடுச்சு. ‘
பெட்டிக்கடைக்காரர் வைத்தத் தீ என்னுள் எரிந்து கொண்டிருந்தது. நண்பனைப் பார்த்தேன். என்னைப் புரிந்துகொண்டு மெளனமாகப் பின் தொடர்ந்தான்.
எவ்வளவு தூரம் நடந்திருப்போம் என்று தெரியாது. ‘இதுதான் ஈசானிய மடம் ‘ என்ற நண்பனின் குரல் கேட்டு அவன் காட்டிய திசையில் அந்தவித்தியாசமான காட்சி.
சில இளைஞர்களைச் சேர்த்துகொண்டு குளத்தருகே கிரிவலம் வந்தவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்களையும் இதர பொருட்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார் ஒருவர். நெற்றியில் திருநீறும், நீண்ட தாடியும் அவர் ஒரு சராசரி சாமியார் என்றாலும், அந்த பழுத்து சிவந்த முகம்: எதையோ யாரையோ ஞாபகப் படுத்தியது. பரபரப்புடன் அவரை நோக்கி ஓடினேன். உங்கள் ஊகம் சரிதான். பிரான்சில் கண்ட பியர் ரிஷார்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை நெருங்கிச் சென்று வணங்கினேன்.
‘என்னைத் தெரியுதா ? ‘ பிரஞ்சில் கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே ‘ ஆம் ‘ என்பதுபோல தலையாட்டினார்.
‘இங்கே எப்படி ? ‘
‘சாமி இன்றைக்கு மெளன விரதம். பேசமாட்டார். ‘ பக்கத்திலிருந்தவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்தது போல பியர் ரிஷார் வலது கையின் ஐந்துவிரல்களை ஒரு சேரக் குவித்துக் காட்டினார். பஞ்ச பூதங்களைக் குறிக்குமோ ? மற்றொரு கையின் கட்டைவிரலை மடக்கி இதர விரல்களை உயர்த்திக் காட்டினார்.
எனக்கு சரியா விளங்கலை. என் நண்பனுக்கும் அப்படியே. என்னைக்காட்டிலும் பியர் ரிஷார் ஒரு சிறந்த இந்தியனோ ? துரத்துகின்ற இந்த கேள்விக்குப் பதில் தெரியலை.
***
இச்சிறுகதை குங்குமம் இதழில் ஏற்கனவே பிரசுரமானது. தவிர சிறுகதைத் தொகுப்பான கனவு மெய்ப்பட வேண்டும் தொகுப்பிலும் அடங்கியது
***
Na.Krishna@wanadoo.fr
- ‘எல்லாமே கூற்று! ‘
- மீண்டும் பசுமை..
- லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா
- நீ
- நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- அறிவியல் துளிகள்-19
- முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்
- வஞ்சம்
- நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…
- கனவாய்…
- சுடும்வரையில் நெருப்பு…
- ‘நாளை ‘ வரும்…
- எழுது ஒரு கடுதாசி
- ஆலமரம்.
- நம்பு
- பன்முகத் தன்மை (pluralism) பற்றி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்
- நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி
- போர் நாட்குறிப்பு
- கடிதங்கள்
- The Fifth Annual Cultural Event -WORLD TAMIL ARTS AND CULTURAL ORGANIZATION -JAMAICA, NEW YORK 11432.
- அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
- யுத்தம்
- வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)
- உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘
- பியர் ரிஷார்