முரண்பாடு

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

வானரன்


வேடிக்கைய பாரு…டேய் தவுடு…இங்க வா…

என்னா பாலண்ணே…

நீ யார் கட்சிலடா சேருவ….பெரியவனானப்பறம்…

அது வந்து…நம்ம புரட்சி த…பதி வி…ய் கடிசிலதாண்ணே…

யாரு…அந்த ‘தேமே ‘ன்னு மூஞ்சி இருக்குமே அவனோடதா ? அறிவுக்களை சொட்டுமேடா அவன் மூஞ்சியில…போடாங்க…பேமானி..

இத பாருண்ணே…என்ன பத்தி எது வாணா சொல்லு….எங்க தலவரப் பத்தி எதுனா சொன்ன…அப்பறம் மரியாத கெட்டுடும்….

என்னடா மரியாத கெட்டுடும்…ஓட்றா இங்கருந்து…மொளச்சி மூணு எல விடல்ல…தலவராம்…தலவர்…உருப்பட மாட்ட நீயி…

சொம்மா வாய மூடுண்ணே…ரொம்பத்தான் உதார் உடாத…

யேய் பாலு…சும்மாரு…சின்னப்பய கூட என்ன பேச்சு…நீ போடா தவுடு…

‘திண்ண தூங்கி பாலன் ஒயிக….புரட்சி த..பதி வி…ய் வாய்க… ‘

பாத்தியா..என்ன ஆச்சின்னு…சின்னக் கல்லெடுத்து தொடச்சா நம்ம கைதான் நாறும்…

ஏன் இப்பிடி இருக்கானுங்க….படிக்கிற வயசில சினிமா பயித்தியம் பிடிச்சு அலயுறானுங்களே…

ஆமா…நாம மட்டும் ஒழுங்கா…காலேஜ்ல கட்டடிச்சிட்டு….கமல் ரஜினின்னு அலஞ்சோமே….ஞாபகம் இருக்கா ?

ஏன் இல்லாம…அதோட பலனத்தான இப்போ அனுபவிச்சிகிட்டிருக்கேன்…

அப்பறம் ஏன் அடுத்தவன கொற சொல்ற…

ப்ச்…நம்ம தலமுறைதான் நாசமாப் போச்சி…சினிமா நடிகனுங்க பின்னாடி போயி….நமக்கடுத்த தலமுறையாவது நல்லா இருக்குமுன்னு பாத்தா…சான்சே இல்ல போலிருக்கே…

இது நம்ம அப்பனுங்க காலத்திலியே ஆரம்பிச்சாச்சி….நம்ம தலமுறை மட்டுமில்ல இதுக்குக் காரணம்…

படிக்கிறப்ப எப்பவாவது இது பத்தி யோசிச்சிருக்கமா ? நாட்டப் பத்தி எந்த கவலயும் இல்லாம…கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம…கட்டடிக்கிறதும் ..சைட் அடிக்கிறதுந்தான் வாழ்க்கைனு இருந்துட்டமேனு இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு….

நம்ம அரசியல் வாதிங்களுக்கு அதுதான தேவை…மத்த நாட்ல பாரு…மாணவர்கள் அரசாங்கத்தயே மாத்துற அளவுக்கு வலிமையா இருக்காங்க…அந்த அளவுக்கு எதிர்காலத்தப் பத்தின கவல அவங்களுக்கு இருக்கு…நம்ம ஸ்டூடண்ட்ஸ்க்கு அடுத்த ரஜினி படம் எப்போ ரிலீஸாகும்கிறதுதான் பெரிய கவலயா இருக்கு…

என்னாத்த சொல்ல…

அத விடு…உன் வேல விவகாரம் எப்பிடி இருக்கு ?…எதுவும் தெரிஞ்சுதா ?

ப்ச்…நாப்பத்தோரு வயசாகப் போகுது…இன்னமேல வேல வந்து என்னா ? வராட்டி என்னா ? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…பேசாம தற்கொல பண்ணிக்கலாமான்னு இருக்கு…பொண்டாட்டி கூட மதிக்க மாட்டேங்கறா….

ரொம்ப மனசு ஒடஞ்சுடாதே…உங்கப்பா எதோ மந்திரிக்கு பணம் கொடுக்கப் போறதா சொன்னாரு…என்னாச்சு ?

அதயேன் கேக்குற…பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சு…அத வித்து…இத வித்து…லட்ச ரூபா கொண்டு போய் குடுத்தேன்…மந்திரிக்கு…திடார்னு அந்தாள பதவிய விட்டு தூக்கிட்டாங்க…பணத்த கேட்டா எதோ சாக்கு போக்கு சொல்லுறாரு அந்தாளு….திரும்பி வரும்னு நம்பிக்கையில்ல…

அடப்பாவி…இதுக்கு முன்னாடியும் யாருக்கோ பணம் குடுத்து ஏமாந்திருக்கே…கவனமா இருக்கக்கூடாதா ?

…..

இப்பிடி தொலச்ச காசில ஒரு பெட்டிக்கட வச்சிருந்தா கூட நல்லாருந்திருக்குமே….சரி…எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் ஒயின் ஷாப் வச்சிருக்கார்…ஆள் வேணுமின்னு கேட்டாரு…பீர் கேஸ் அடுக்குறது…700 ரூபா சம்பளம்…பேட்டா டெய்லி பத்து ரூபா குடுப்பாரு…போறியா ?

நீ பேசுறது உனக்கே நல்லாருக்கா ?….பீர் கேஸ் அடுக்குறதுக்கா M.Sc., M.Ed., படிச்சேன் ? நீ ஏதோ நல்ல வேலயில இருக்கங்கிறதுக்காக இப்படியல்லாம் பேசாத…

நான் உனக்கு நல்லதுதான சொன்னேன்…சும்மா வீட்ல உக்காந்து கிட்டு இருக்கிறத விட….

வாய மூடு…உன் கிட்ட வந்து வேல கேக்குறப்ப சொல்லு…எம் பொண்டாட்டி என்ன தண்டச்சோறுன்னு சொல்றா…எங்கப்பனும் அப்பிடித்தான் சொல்றாரு… ஏதோ உங்கிட்டியாவது ஆறுதல் கிடைக்குமுனு வந்தா…நீ என்னடான்னா என்ன கூலி வேலக்கி போகச்சொல்ற…ச்சே நாய் பொழப்பாயிடிச்சே என் பொழப்பு…

ரொம்ப அதிகமா பேசாத பாலு…ஆரம்பத்துல நானும் மவுண்ட் ரோடுல இருந்து பாரிஸ் கார்னர் வரைக்கும், வேகாத வெயில்ல லொங்கு லொங்குன்னு சைக்கிள மிதிச்சிருக்கேன்…வெறும் 500 ரூபாய்க்காக…படிப்படியா முன்னேறியிருக்கேன்…

ஐயா…போதும் உன் அட்வைஸ்…நான் வர்றேன்…

நீ ஏன்டா தம்பி அவங்கூட சண்டை போட்டுட்டு இருக்கே ? பாவம்..

பின்ன என்னம்மா ?…வெட்டியா வீட்ல உட்காந்துகிட்டு வியாக்யானம் பேசுறான்…இதுல ரெண்டு குழந்தைங்க வேற இவனுக்கு…போன வாரம் அவங்கப்பாவ பார்த்தேன்…இந்த தள்ளாத வயசிலயும் ரோட்டோரத்துல நியூஸ் பேப்பர் விக்கறாரு…என்னப்பாத்துட்டு கண்ணீர் விட்டு அழுதாரு…மனசு ரொம்ப கஷ்டமாப் போச்சு…இவன் என்னடான்னா அந்த வேல சொட்ட இந்த வேல சொள்ளன்னுகிட்டு திரியிறான்…படிச்சிருந்தா கஷ்டப்பட்டு வேல செய்யக்கூடாதுன்னு எதுனா சட்டம் இருக்கா என்ன ?

சரி…சரி…நீ உள்ள வா…குழந்தை அழறான் பாரு…

psnarendran@hotmail.com

Series Navigation

வானரன்

வானரன்