இளமை

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


நேற்று இரவு புறக்டர் ருத்ரமூர்த்தி பற்றிய எண்ணமே கூடுதலாயிருந்தது. மொய்த்து முற்றுகையிட்ட அவர் சார்ந்த அண்மை நிகழ்வுகள். நடுச்சாமம் தாண்டியும் உறக்கம் வரவில்லை. இத்தனைக்கும் அவர் நெருங்கிய உறவில்லை. ஒட்டிப் பழகியதில்லை. அயலுக்குள் பக்கமிருந்தும் சிரித்துத் தலையாட்டியதில்லை. குட்மோர்னிங் சொன்னதில்லை. தெருவில் போகிறவரை யார் என்று உன்னிப்பாகப் பார்ப்பதற்கு நேரமில்லாதவர் என்பதே அவருக்குப் பொருந்துகிற காரணமாக இருக்கலாம்.

கையில் தாய் கொடுத்து விட்ட பூத்தட்டத்தோடு தத்தித் தத்தி வந்த மகள் ‘இன்னம் பல்லுத் தீட்டேல்லையாப்பா’ என்று மழலை ததும்பக் கேட்டுவிட்டு நித்தியகல்யாணிச் செடிப் பக்கம் போனாள். சின்ன மகளைச் சீண்டி மழலையில் மகிழ முடியவில்லை. விறாந்தையில் விழுந்த வெள்ளியொளியில் தென்னோலை நிழல் என் மனதைப் போலவே ஆடிக் கொண்டிருந்தது.

அவர் காரில் போகிறவர். புராதன ரலீ சைக்கிளே இன்னமும் கதியாக இருப்பவனோடு தலையாட்டிச் சிரிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் அமைந்திருக்காது. நகரில் பிரசித்த நொத்தாரிஸ். பரம்பரை சொத்துப்பத்து. ஒன்றுக்கு இரண்டு வாகனம். அடிபிடி, வெட்டுக்குத்து, சண்டைசச்சரவு, காணிபூமி வழக்குவிசாரணைஸஸஸஸ.இப்படித் தொழில் சார்ந்த பல சோலிகள், வீட்டில் காலையும் மாலையும் விலத்த முடியாத சனம்

என்னுடைய வீடு புறக்டரின் வீட்டிலிருந்து தகரவேலி போட்ட நாலாவது வீடு என ‘அவரைச் சொல்லி எனது விலாசம் உணர்த்துகிற’ அளவிற்கு அவர் பிரபலம். சமுதாய அந்தஸ்தை அவரவர் சார்ந்த தொழில் எவ்வளவு தூரம் பிரசித்தமாக்குகிறது என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். அவரைப் பார்த்துச் சிரிக்க, குட் மோர்னிங் சொல்ல தகுதியிருக்கிறதா என்ற சந்தேகமே நானாக வலியப் போகாமல் தடுத்திருக்க வேண்டும். அவர் பக்கம் தவறில்லை. சிரித்திருந்தால் அவர் சிரித்திருக்கக்கூடும்.

வழக்கறிஞுரின் தேவை பற்றிச் சொல்லத் தேவையில்லை. காரியம் ஆக வேண்டி இருப்பவரிடம் போகத்தான் வேண்டும். காரியமில்லாவிட்டாலும் எதிர்காலத் தேவை கருதி பயம் சேர்ந்த ஒரு மரியாதை மனதில் படிந்து விடுகிறது. முன்னெப்போதும் காணாத சிக்கலான பரிமாணத்தில் வாழ்க்கைப் பிரச்னைகள் பரவி நிற்கும் இந்தக் காலத்தில் வழக்கறிஞுர்கள் உணவிற்கு உப்புப் போலாகிவிட்டார்கள். அதிலும் வாழ்க்கையின் வெற்றிக்கு தொழிலையே சூத்திரமெனக் கருதும் ஒருவரின் கொடி இப்படிப் பறப்பதில் அதிசயமில்லை.

நாமும் சரியாகப் படித்திருந்தால் நாலு பேர் வந்து போகிற நிலைக்கு வந்திருக்கலாம். வருத்தப்பட்டு என்ன புண்ணியம். படித்த காலத்தில் பலனில்லா விசயங்களில் சுகித்திருந்ததன் விளைவுதான் வாய்த்திருக்கும் இந்த அநாமதேயம். பக்கத்திலிருப்பதால் அங்கு வரும் கூட்டத்தை விரும்பாவிடினும் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்தவைகள் மறக்கப்படின் தொல்லையில்லை.

உலகெங்கும் நம்மை விட நல்ல நிலையில் எத்தனை கோடி! அது நம்மைக் குழப்புவதில்லையே. பக்கமிருக்கும் ஒருவர் கொடி கட்டிப் பறந்தால் போதும் தாங்க மாட்டேன் என்கிறது. காரில் ஏற வரும் அவரது மனைவிக்கு கதவைத் திறந்து விட்டு மரியாதையாக ஒதுங்கி தெருப்பள்ளங்களில் குலுக்காமல் நிதானமாக ஓட்டிச் செல்லும் டிரைவரின் எஜமான விசுவாசம் கூட மனதை நெருடுகிறது.

அவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். நீயேன் குழம்பவேண்டும்! அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்! திடாரென எப்படி உன்னுள் இத்தனை விசுவரூபம் எடுத்தார் ? அவரது வாழ்க்கை வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாயா ? காஞ்சிபுரப்பட்டோடு பருத்திச் சேலையை பக்கம் பக்கம் வைத்துப் பரிசீலிக்க வேண்டுமா ? பட்டு பட்டுதான். பருத்தி பருத்திதான். அதனதன் தனித்தன்மைதான் அதனதன் பலம். முன்னரெல்லாம் கிணற்று வெள்ளமாய் அடங்கிக் கிடந்த மனம் அடிபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாக பாயத் தொடங்கியது ஏன் ?

கையும் கணக்குமான ஊதியத்திலும் ஊனப்படாமல் மனங் கொண்டதே மாளிகையாய் பொலிந்த நாட்கள் எங்கே ? என்ன வந்தாலும் நீயே துணை, நல்லது கெட்டது அவ்வளவும் நீ விட்டபடி என்று சகல பொறுப்பையும் இறையின் காலில் இறைத்துவிட்டு விச்ராந்தியாய் உடலைத் தரையில் தள்ளி சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ண முடிந்ததே. குட்டிப் பொறுப்பைக் கூட உனக்கென்று வைத்துக் கொள்ளாமல், கிருஷ்ணா இனி நீதானய்யா என்று சேலையை முழுதுமாய் கைவிட்ட திரெளபதைச் சரணாகதியில் விழுந்து கிடக்க முடிந்ததே.

இது நடுவழியில் ட்யூப் பஞ்சராகியதைப் போன்ற நெருக்கடி. ஒட்டுப்போட்டு மீண்டும் சீரான பயணம் தொடங்க நிதானமும் விழிப்பும் தேவை. வீட்டைவிட்டு வீதிகள் நடந்து முற்றவெளியில் பந்தடிக்கும் சிறார்களின் குதூகலம் கடந்து வெகு தூரம் ஒதுங்கி வானம் நோக்கிக் குந்தியிருந்து எனக்குள்ளே தேட, நியாயம் புரியத் தொடங்கிற்று. யாரைப் பற்றிப் பிடித்தால் அமைதியும் நிறைவும் உண்டாகுமோ அந்த ருத்திரமூர் த்தியின் நினைவினின்றும் வழுவி புறக்டர் ருத்திரமூர்த்தியைப் பற்றிக் கொண்டதால் வந்த வினை! அடித்துச் செல்ல ஆயத்தமாயிருக்கும் ஆசை அலைகளிடம் விழிப்பாக இருந்திருக்க வேண்டும். ஆமை போல சகலதையும் ஒடுக்கிக் கொண்டு அசையாது இருந்திருக்க வேண்டும்.

எண்ணப் பேய்களின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட, விழிப்பு நிலை மொட்டு விரித்து மலரத் தொடங்கிற்று. அப்போதுதான் புறக்டரை நேராகச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அலுவலக நண்பனுக்கு அவருடன் நல்ல தொடர்பு. இரானுவ சுற்றிவளைப்பால் நேர்ந்த அனர்த்தத்தில் தாய் தந்தை உறவுகளை ஒரே இரவில் இழந்து போன கிராமத்து பச்சிளம் பிள்ளைகளின் பசியாற்றும் பணியில் அவன் மும்முரமாயிருந்தான். புறக்டர் ஐயாவிடம் பெரிய தொகை பெறும் நம்பிக்கையோடு லிஸ்ற்றோடு வந்தவன் என்னையும் கூட வரச் சொன்னான். பக்கத்திலிருப்பதால் நெருங்கிய பழக்கமிருக்கும் என்று நம்பியிருப்பான்.

ஒட்டியிருந்தாலும் வீட்டோடு தொடர்பில்லாமல் அமைக்கப்பட்ட அலுவலகம். போர்ட்டிகோவில் கார். தூண் மறைவாக நின்று கைக்குள் மறைத்து சிகரட் ஊதும் டிரைவர். விறாந்தையில் உறுதிக்கட்டோடு ஒரு வயதான தம்பதி. பின்னல் விட்டுப் போன இருக்கைகளில் எண்ணைப் பிசுக்கேறிய மெத்தைகள். எழுத்துக்கள் தேய்ந்து போன பழைய ஒலிம்பியா டைப்ரைட்டரில் தட்டிக் கொண்டிருக்கும் கண்ணாடிக் கிளாக்கர். கால்நூற்றாண்டு கால தட்டச்சு சேவகத்தில் விரல்களும் தேய்ந்திருக்கக்கூடும். அவரது வறுமையைப் பறைசாற்றும் பட்டை ஊத்தை படர்ந்த சட்டைக் காலர்.

ஐந்தரைக்கு தரிசனம் கிடைத்தது. அம்மலாயிருக்கும் வானம் போல் மந்தமான வெளிச்சத்தில் ஒழுங்கு தப்பி இறைந்து கிடந்த வழக்குக் கட்டுகள் புடை சூழ இருந்தார் புறக்டர். மேசையில் ஆறிப் போன பால் திரைய்ந்த தேநீர்.

டெலிபோன் மணித்தது. அவர் கதைத்த மாதிரியில் மனைவியென்று புரிந்தது.

“நான் எங்க கோயிலுக்கு வாறது நீங்க போயிற்று வாங்க.”

அதற்குள் அந்தப் பக்கம் வைத்துவிட, நண்பனைப் பார்த்துக் கதைத்தார் புறக்டர்ஸஸஸ.“பொம்பிளையளுக்கு வேற வேலையில்லை. வந்த கேசுகளைப் பார்க்கவே நேரமில்லை. அதுக்குள்ள சாமி சக்கட்டை. வேலை மினக்கெட்டதுகள்.”

“ஆஸஸஸஸ…என்ன வந்த விசயம். ”

“நேற்று உங்களோட டெலிபோனில கதைச்சனான். நீங்கதான் லிஸ்ற்றைத் துவக்கி வைக்க வேனும்.“”

புறக்டரின் முகம் திடாரென மாறிற்று.

“லிஸ்ற்றைக் குழப்ப எனக்கு விருப்பமில்லை. பிச்சைக் காசுக்கு வழக்குப் பேசிற அப்பக்காத்துமார் என்னத்தைப் பெரிசாப் போடப் போறம். ஒன்டு செய்யுங்க. கடைத்தெருவில முதலாளிமாரிட்டப் போட்டுட்டு வாங்க பிறகு பாப்பம்” என்று அவர் சொல்லக் கேட்டதும் நம்பிக்கையோடு வந்த நண்பன் நலிந்த முகத்தோடு வெளியேறி தெருவில் இறங்கியதும் நடை முழுக்க திட்டிக் கொண்டே வந்தான்.

இதுநாள் வரை மலையேறியிருந்த எனது உணர்வுகளும் இந்த எதிர்பாராத மண்டகப்படியோடு குத்திக்கர்ணம் அடித்தன. ஆனால் முற்றாக மடுவிற்குள் விழுந்தது நேற்று மாலைதான்.

கேள்விப்பட்டதும் நம்ப முடியவில்லை. ஆஸ்பத்திரிக்குப் போகிற வழியில் நண்பன்தான் விபரம் சொன்னான். தன் லிஸ்டில் காசு போடாததால்தான் இவ்வளவு கெதியாகத் தண்டனை கிடைத்தது என்று பாப புண்ணியக் கணக்குச் சொல்லி நிறுவ முயன்றான்

“புறக்டருக்கு டயபிடிஸ் இருந்திருக்கு. காசு காசென்டு வழக்குப் பேசிச் சேர்த்து என்ன புண்ணியம். பெருவிரலில கல்லடிபட்டு உள்ளுக்கை மனைஞ்சதைக் கவனிக்காம விட்டுட்டார். ஆஸ் பத்திரிக்குக் கொண்டு போக வலதுமுழங்காலோட எடுத்திட்டாங்கள் ”

ஒன்பதாம் வார்ட்டில் அரைவாசியாய்க் கிடந்தார் புறக்டர். வருத்தம் பார்க்க வந்தவரை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாத அளவிற்கு சோர்வு.

நேற்று வரை நெஞ்சம் முழுக்க நிரம்பி நின்ற ஆதர்ச புருசன். இதுதான் நீ எட்ட வேண்டிய வெற்றிக்கம்பம் என்று மானசீகத்தில் திசை காட்டி உதாரணமாய் உயர்ந்து நின்ற உன்னத மனிதன். இன்று, ஒரே கணத்தில் பாதாளத்தில் விழுந்து கிடக்கும் பரிதாபம். வசதிகளைத் தேடித் தேடியே கரைந்து போன வாழ்க்கை. கடவுளா, பக்தியா அமைதியாஸஸ.எல்லாம் கடைசியாகப் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததால் தொலைந்து போன இளமை. எஞ்சியிருப்பது உடல் உபாதையும் மனக்குழப்பமுந்தான். இனி விரும்பினாலும் உடம்பு இடம் கொடுக்காது, மனமும் அசையாது.

இந்த நிலை எனக்கு வர எவ்வளவு நாளாகும்! அவரை இவரைப் பார்த்து பெருமூச்சு விட்டு காற்றிலடி பட்ட சருகாய் அலையச் செய்யும் ஒப்பீட்டு வாழ்க்கை தேவைதானா ? அப்படி இப்படி வரவேண்டும் என்று அளவிற்கு மீறிய வேட்கை அவசியந்தானா ?

மற்றவராக மாறப் பார்ப்பதில் அர்த்தமில்லை. நான் நானாக இருப்பதுதான் சுகம்.

இறைவா, கண்டதையும் நினைத்து அலைந்து திரியாத கட்டுப்பாடு கைகூட அருள் செய். எல்லாம் இருக்கும் போதே ஒவ்வொன்றாய்க் கழற்றிவிட்டு உன்னை நினைக்கும் வைராக்கியம் நிலைக்க வழி செய். கண்ணிருக்கும் போதே சூரிய நமஸ்காரம் செய்யும் ஞுானமும், நாளைக்கு என்று தள்ளிப் போட்டு நாட்களைக் கடத்தாத விழிப்புணர்வும் தந்து என்னைக் கடையேற்று.

சின்ன மகள் மலர்கள் ஆய்ந்து கொண்டு விறாந்தையில் ஏறினாள்.

“என்ன குஞ்சு தட்டத்தில ? ”

“சாமிக்கு வைக்க பூ”

“பூ கொஞ்சமாக் கிடக்கு”

“வெய்யிலுக்கு வாடிப் போச்சு. வாடின பூ சாமிக்கு வைக்கக் கூடா” என்றாள் மகள் எல்லாம் தெரிந்தவள் போல.

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்