கவிதா:

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

கே ஆர் விஜய்


மீண்டும் கவிதாவை சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே உடல் முழுவதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு பரவியது.சின்ன பய அலை ஒன்று

நெஞ்சிலிருந்து ஆரம்பித்து வயிற்றின் அடிப்பகுதி வரை சென்று மீண்டும் நெஞ்சை நோக்கி விரைந்தது.தேவையில்லாமல் உதடுகள் புன்னகை புரியத் தொடங்கியது.உள்ளங்கைகள் சந்தோஷத்தால் நனைந்திருந்தன.கால்கள் தரையில் படாமல் ஆகாயத்திலேயே மிதந்து கொண்டிருந்தன.

மொத்ததில் நாளமில்லா சுரப்பிகள் என் உடல் அசைவுகளை சற்று நேரத்திற்கு தாறுமாறாக இயக்கிக் கொண்டிருந்தது.

இவை அத்தனையும் நிகழ்ந்தது கவிதாவிடம் இருந்த கிடைத்த கடிதத்தின் முதல் வாசிப்பில் தான். ஆம்! கவிதாவிடமிருந்து கடிதம் ! என் குட்டி தேவதையிடமிருந்து கடிதம்! அதுவும் நான்கு வருடங்களுக்குப் பிறகு ! இருந்தாலும் அதே புத்துணர்ச்சி! அதே சிலிர்ப்பு! அதே ஆவல்! அவள் எப்படி

இருப்பாள் என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ?

கவிதா ! கவிதா ! கவிதா ! மூன்று முறை மட்டுமல்ல ஆயிரம் முறை சொல்லி இருப்பேன் இந்தப் பெயரை கல்லூரி படிக்கும் போது.தினமும் அவள் பெயர் சொல்லித் தான் என் உதடுகள் பேசவே ஆரம்பிக்கும் ! அவள் புகைப்படம் நோக்கியே என் கண்கள் மலரும்.அவள் கூந்தல்,கன்னங்கள்,கண்கள்,உதடுகள் ,இன்னும் எல்லாம் என் கண்களில் இன்னும் ஊஞ்சலாடிக் கொண்டு தானிருக்கின்றன.

இந்த நான்கு வருட இடைவெளியில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன. ஆரம்பத்தில் – கல்லூரி முடிந்து வெளியே வந்த புதிதில் அடிக்கடி கவிதாவின் உருவம் கண் முன்னே வந்து மறையும்.அவள் சிரிப்பு நடை உடை பேச்சு எல்லாம் என்னைத் தொந்தரவு செய்யும். காலம் தான் எனக்கு அந்த பழைய நினைவுகளை மறக்கக் கற்றுத் தந்தது. கனவுகளின் நினைவுகளில் உழன்று சுழன்றவனுக்கு நனவுகளைப் புரிய வைத்தது.

கவிதாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? முதல் சந்திப்பிலே என்னை ஏன் நான் இழந்துவிட்டேன் ?அவளோடு முதன் முதலாக நான் பேசிய வார்த்தைகள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.ஆம்! ‘கவிதா ஒன் செகண்ட் ப்ளீஸ் ‘ என்ற அந்த வார்த்தைகள்.எப்படி மறக்க முடியும் இந்த வார்த்தைகளை ?

கல்லூரி முதல் வருடத்தில் சீனியர் மாணவர்கள் ஜீனியர் மாணவர்களை ராக்கிங் செய்வது வழக்கம்.பொதுவாக சீனியர் மாணவர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டால் கல்லூரியைச் சுற்றி வரவேண்டும்.இல்லை எந்தப் பெண்ணாவது வந்தால் ‘ஐ லவ் யூ ‘ சொல்ல வேண்டும்.இ அதுவும் இல்லை என்றால் தன் வகுப்பில் படிக்கும் அழகான பெண்ணின் குறிப்புகளை வாங்கி வரவேண்டும்.இவை எல்லாம் தான் எங்கள் கல்லூரியில் வழக்கமாக சீனியர்கள் செய்யும் ராக்கிங்.

அன்று நான் செய்தது சரியா ? என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை.அந்த உண்மையை நான் பிறகாவது அவளிடம் சொல்லி இருந்திருக்கலாம் ?ஆனால் கடைசி வரை அவளிடம் சொல்லமுடியாது போனது வருத்தமே. எப்படி எனக்குள் முதல் வருடத்திலேயே அவ்வளாவு தைரியம் ? எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது எதுவுமே இப்போது எனக்குப் புரியவில்லை ? முதல் வருட வகுப்புகள் ஆரம்பித்த முதல் மாதத்திலே

அவளால் கவர்ந்த நான் அவளிடம் பேச ஆசைப்பட்டே தான் அப்படிபட்ட தவறு செய்திருக்க வேண்டும் ? அது தவறா என்று கூட இதுவரை தெரியவில்லை.தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன்.அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட நான் நேராக ஒரு நாள் அவளிடம் சென்று

‘ கவிதா…ஒன் செகண்ட் ப்ளீஸ் ‘

என்ன ?

நான் கிரண்.உன்னோட க்ளாஸ்மேட்.

ஒ.கே

நேத்து சீனியர்ஸ் கிட்ட ராக்கிங்ல மாட்டிக்கிட்டேன்.அவங்க உன்னோட பயோ-டேட்டா கேட்டாங்க ?

என்னைப் பத்தியா ? எதுக்கு ?

உங்க க்ளாஸ்ல அழகான பொண்ணு யாருன்னு கேட்டாங்க ? நான் உன் பேரச் சொன்னேன்.உடனே உன் கிட்ட எல்லாம் கேட்டு வரச் சொன்னாங்க ?

நீ ஏன் என் பெயரச் சொல்லணும் ?

ஐ அம் சாரி கவிதா ! உன் பேர் தான் எனக்குத் தெரியும்! ரிஜிஸ்டர்ல உன் பேரும் என் பேரும் அடுத்தடுத்து.அதனால தான்.

சோ சும்மா தான் நீ சொல்லி இருக்க ? நிஜமா நான் அழகா இல்லயா ?

ச்ச..ச்ச அப்படி இல்ல…நீ ரொம்ப அழகா….

ஸ்டாப் திஸ் நான் சென்ஸ் கிரண்! ஐ அம் அப்ரைட் ஆப் கிவிங் மை டிடல்ய்ஸ்.

இட் இஸ் ஓ.கே.

அன்று நான் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன்.

அடுத்த நாள்….நான் செய்த காரியத்தை நினைத்தால் இன்னும் சிரிப்பு தான் வருகிறது.பின்னே சிரிப்பு வராமலா இருக்கும்.நான் செய்த காரியம் அப்படிப்பட்டது.

வகுப்பு முடிந்ததும் வழியில் சென்று கொண்டிருந்த என்னிடம் கவிதா தானாகவே வந்து பேசினாள்

வாட் ஹேப்பண்ட் கிரண் ?

ஒன்னுமில்லை …சும்மா…

உண்மையைச் சொல்லு. கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்க ?

உண்மையைச் சொல்லட்டுமா…உன்னால தான் கவிதா…நீ உன்னோட டிடல்ய்ஸ் கொடுக்காததால தான்…நேத்து சீனியர்ஸ் என் ரூமுக்கு வந்து இருந்தாங்க ? எங்கடா அவளப்பத்திய டிடல்ய்ஸ் ந்னு கேட்டாங்க ?

நான் இல்லை சார்ன்னு சொன்னேன்.

உடனே என்ன ஒருத்தன் ஓங்கி அறைஞ்சான் நான் பக்கத்துல இருக்க சுவர்ல விழுந்தப்ப அப்படியே கை பிசகிடுச்சு.அதான் இந்தக் கட்டு! இன்னைக்குள்ள உங்கிட்ட எல்லாம் கேட்டு வரச் சொன்னாங்க ?

ஐ அம் ரியலி சாரி கிரண் ! ச்ச! அறிவு கெட்ட ஜன்மங்க!

என்ன வேணுமாம் அவங்களுக்கு ?

உன்னோட ஊர் அட்ரஸ் வீட்டு நம்பர் படிச்ச ஸ்கூல் பிடிச்ச கலர் பிறந்த நாள் தேதி இன்னும் ஏதேதோ கேட்டாங்க…எனக்கு இதுதான் ஞாபகத்துல இருக்கு.

கவிதா அனைத்தையும் உட்கார்ந்து ஒரு வெள்ளைத்தாளில் எழுத ஆரம்பித்தாள்.

அன்று அந்த குறிப்புகளை அறை நண்பர்கள் அனைவரிடம் காட்டி குதூகலமாகக் கொண்டாடினேன்!

டே ! கிரண் ! கலக்கிட்ட மச்சி! ஆக்டிங்ல ஆஸ்கார் வாங்கிட்ட!

கையில் நானே கட்டியிருந்த வெள்ளைத் துணியை கழட்டி எறிந்தேன்.

அது சரி !எந்த சீனியர் பேரச் சொல்லி அவகிட்ட எல்லாம் கேட்ட ?

அவ யாருன்னு எல்லாம் கேக்கலை டா!

அவளுக்குப் பிடித்த கலர் நீலம்….பிடித்த பூ செம்பருத்தி…பிடித்த நடிகர் கமல்…பிடித்தவை எல்லாம் தெரிந்து கொண்டு அவள் பிறந்ததேதிக்குக் காத்திருந்தேன்.

சந்தோஷமாக இருந்த அந்த நாட்களை எல்லாம் இன்று அசை போடுவதே ஒரு ஆனந்தமாக இருக்கிறது.எத்தனை பொய்கள்…எத்தனை குறும்புகள்.

எல்லாம் என் கவிதா எப்படியாவது என்னிடம் பேச வேண்டும் என்பதற்கு ? எப்படியாவது என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்கு ?

எவ்வளவோ விதங்களில் நான் அவளை ஏமாற்றிப் பேசினேன் ? கடைசியில் ஏமாந்து நின்றதும் நான் தான்….ஆம்! கடைசி வரை என் காதலை அவளிடம் சொல்லமுடியவில்லை!

மீண்டும் கடிதத்தை ஒரு முறை படித்தேன்.மனதில் அதே சிலிர்ப்பு.நான்கே வரிகள் தான் கடிதத்தில்.ஆனால் அத்துணையும் அவள் எனக்காக – எனக்கே எனக்காக எழுதிய மாதிரி இருந்தது.

‘கிரண்! உன்னிடம் நிறைய பேச வேண்டும்.வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தவிக்கிறேன்! உன் உதவிக்காக வரும் ஞாயிறு ராஜாஜி பார்க்கில் காத்திருப்பேன். கல்லுரித் தோழி, கவிதா ‘. கடிதத்தின் சாராம்சம் இவ்வளவே.நான்கே வரிகள் எழுதியதற்காக நான் வருத்தப்படவில்லை.

ஏனென்றால் என் கவிதாவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! நாலு வரிகள் பேச வேண்டிய இஇடத்தில் நாலு வார்த்தை மட்டுமே பேசுவாள்.நான்கு வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் கண்களாலே பேசிவிடுவாள்.இப்போதும் அப்படித்தான்.இந்தக் கடிதத்தில் அவள் சொன்ன வார்த்தைகளை விட சொல்லாத வார்த்தைகளை எல்லாம் நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.ஆம்! என் எண்ணம் அனைத்தும் இப்போது பிரபு என்ன ஆனான் ?

கவிதாவை விட்டுப் பிரிந்து விட்டானா ? உலகத்தில் இப்படி எல்லாம் கூட மடையன்கள் இருப்பார்களோ என்று பிரபுவுக்கான இரக்கமாக மாறியது.

பிரபு கவிதாவை காதலித்தது – அவள் பெயரை ரத்தத்தில் எழுதியது – கவிதாவும் அவனைக் காதலித்தது எல்லாம் என் நண்பன் குமார் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.கல்லூரி முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு இவை எல்லாம் நடந்ததாக குமார் ஒருமுறை எனக்குக் கடிதம் எழுதி இருந்தான்.

அதன் பின் கவிதாவின் நினைவுகளை பல சமயங்களில் மறக்கத் தவித்திருக்கிறேன்.ஆனால் அந்த முயற்சியில் ஒருமுறை கூட வெற்றி கிடைத்ததா என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை ?

எப்படியும் சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேரும் என்ற நம்பிக்கையிலே வாழ்வைக் கழித்து வந்தேன். கவிதாவை மறக்க நினைக்கும் போதெல்லாம் வீட்டில் திருமணப் பேச்சு எடுத்து மீண்டும் என்னை அந்த நினைவுகளில் மூழ்கடித்துவிடுவார்கள்.எப்படியோ மீண்டும் கவிதாவிடம் பேசப் போகிறேன்.நான்கு வருடம் கழித்து! அவள் இப்போது எப்படி இருப்பாள் ? எங்கு வேலை செய்கிறாள் ? வேலை செய்கிறாளா அல்லது வீட்டில் இருக்கிறாளா ? பிரபுவுடன் திருமணம் நடந்திருக்குமா ? நடந்திருந்தால் என்னை ஏன் சந்திக்க வேண்டும் ? ஒருவேளை என்னை அவள் காதலித்தாளா ? நான் அவளிடம் காதலைத் தெரியப்படுத்தாததால் அப்படியே விட்டுவிட்டாளா ?இ

இந்த அரைமணி நேரத்தில் என்னுள் எத்தனை மாற்றங்கள் ? மனம் என்னை தெளிவுபடுத்தி மீண்டும் ஏன் இப்படி குழப்புகிறது ?யாரிடமாவது கவிதாவைப் பற்றி கேட்கலாமா ? யாரிடம் கேட்பது ?குமாரிடம் கேட்கலாமா ? ஏதாவது நினைத்துக் கொள்வானா ?ஆம்! பின்னே ஏற்கனவே ஒருமுறை கவிதாவைப் பற்றி ஏதோ அவன் பேசியபோது தயவுசெய்து எந்தப் பெண்ணைப் பற்றியும் என்னிடம் பேசாதே என்றல்லவா சொல்லிவிட்டேன் ? இப்போது எப்படி அவனிடம் கவிதாவைப் பற்றிக் கேட்பது ? என்ன நினைத்தாலும் பரவாயில்லை.அவனிடம் இன்று அவளைப் பற்றி கேட்டுவிட வேண்டும்.

அப்போது தான் வரும் ஞாயிறு அவளை சந்திக்கும் போது அவளிடம் சரளமாக பேச முடியும்.

‘வழக்கமாக எட்டு மணிக்கு குமார் வீட்டுக்கு வந்துவிடுவான் கிரண் ! இன்னைக்கு வர்ற ஒன்பது மணி ஆகும்னு சொல்லி இருந்தான்! உட்காரு கிரண்! காபி சாப்பிடு ‘ என்றாள் குமாரின் தாய்.

சரிங்கம்மா!

உனக்கு எப்ப கிரண் கல்யாணம் ? வீட்ல என்ன சொல்றாங்க ?

வீட்ல இப்பவே செஞ்சுக்க சொல்றாங்க ? நான் தான் இன்னும் இஇரண்டு வருஷம் போகட்டும்ன்னு சொல்லிட்டேன்.

அப்புறம் நம்ம குமார் சார் என்ன சொல்றாரு ? அவரு ஏதாவது பொண்ணைப் பார்த்து வச்சிருக்காரா ?

ச்ச! அப்படி எல்லாம் ஏதும் இல்லம்மா.

அப்புறம் அந்தப் பொண்ணு என்ன ஆனா கிரண் ?

எந்தப் பொண்ணு ?

கவிதா!அதான்ப்பா! உங்களோட காலேஜ்ல படிச்சாளாம்மே! குமார் அவளைப் பத்தி நிறைய சொல்லுவான்.

என்ன ?

என்ன கிரண் உனக்குத் தெரியாதா ? உங்க க்ளாஸ்ன்னு தான் குமார் சொன்னான்.

அவளுக்கென்ன ? எனக்கு தெரியாதே ?

அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியாதா ?ஏதோ பாபுன்னு ஒரு பையனை காதலிச்சு கல்யாணம் செஞ்சுட்டாளாம்.பாவம்ப்பா பொண்ணு இப்ப தனியா இருக்க ?

அதற்கு மேல் கிரணால் பொறுக்க முடியவில்லை.இவர்கள் ஏன் இப்படி புதிர் போடுகிறார்கள்.நேரடியாகவே சொல்லி விட வேண்டியதுதானே.என்ன ஆச்சு என் குட்டி தேவதைக்கு ? கவிதா கல்யாணம் ஆனவளா ? பாபு என்ன ஆனான் ?

என்ன பண்றது கிரண் ! காலம் ரொம்ப மோசமா இருக்கு! இருபத்தஞ்சு இருபத்தாறு வயசுல ஹார்ட் அட்டாக்குன்னு கேக்கும் போது அப்புறம் எப்படி இருக்கும் ?

பாபுவுக்கு ஹார்ட்-அட்டாக்கா ?

ஆமாம் கிரண்! கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் இஇப்படி அல்ப ஆயிசுல போயிட்டா யாருக்குத்தான் வருத்தம் இருக்காது சொல்லு ?

எனக்கு அந்தப் பொண்ண நினைச்சா தான் வருத்தமாயிருக்கு.வேலைக்குப் போயிட்டு இருந்த பொண்ணு கல்யாணத்துக்கப்புறம் வேலைல இருந்து நின்னுருக்கு ? இப்ப புருஷனை விட்டு பாவம்! இந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாதுடா சாமி!

நம்ம குமாருக்கு கூட போன வாரம் ஏதோ லெட்டர் போட்டு வரச் சொல்லியிருக்கா.நான் தான் போயி என்னன்னு கேட்டு வாடான்னு சொன்னேன்.ஒரே அழுகையாம் ? எப்படியாவது ஏதாவது வேலை கிடைச்சா நல்லா யிருக்கும்னு சொல்லி புலம்பியிருக்கா ? இவன் கூட ஆபிஸ்ல மேனேஜர் கிட்ட பேசினானாம். தலை எழுத்து சரியா அமையிலனா…..

எனக்கு அதற்கு மேல் பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை.தொண்டை அடைத்திருந்தது.டேபிளில் இருந்த தண்ணீர் டம்பளரை எடுத்து இரண்டு மடக்குத் தண்ணீர் குடித்துவிட்டு ‘எனக்கு லேட் ஆயிடுச்சு! நான் அப்புறம் வர்ரேன் ‘ என்று சொல்லிவிட்டு குமார் வீட்டை விட்டு வெளியே

நடக்க ஆரம்பித்தேன்.

மனசு ஏனோ கனமாக இருந்தது.மீண்டும் தெளிவான குழப்பங்கள் மனதை ஆக்கிரமித்தன.என் இதயத்துடிப்பு அதிகமாவதை உணர்ந்தேன்.இதயத்தில் கை வைத்து பார்த்தபோது கையில் ஏதோ உரசியது !ஆம்! உரசியது சட்டைப்பையில் வைத்திருந்த கவிதாஇவின் கடிதம் தான்!

கடிதத்தை சட்டைப் பையில் இஇருந்து எடுத்து சுக்குநூறாகக் கிழித்து காற்றில் வீசி எறிந்தேன்.

நினைவுகளில் மீண்டும் கவிதா ! கவிதா ! கவிதா !

மூன்று தடவை மட்டுமல்ல மூவாயிரம் தடவை சொல்லத் தான் போகிறேன் என் கவிதாவின் பெயரை!

***

கே ஆர் விஜய்

07 – 08-02

***

vijay_r@infosys.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்