…ப்பா

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

தி.ஜானகிராமன்


நான் தூங்குகிறேனா என்ன ‘ இல்லையே…..நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ?

நாய்க்கு மொழி ஏது ? இருக்கிறது ஒரு மொழிதானே ? குரைப்பு ஒன்றுதானே மொழி…இல்லாவிட்டால் மீமீ என்று சன்னக் குரலில் குழையும் வாலையும் குழைக்கும். பின்னே ஏன் எனக்கு மட்டும் ஒரு நாய் இங்கிலீஷில் குரைப்பதுபோல் கேட்கிறது ‘ கனவா ‘ இல்லையே. அரைத் தூக்கம் கூட இல்லையே. நல்ல முரட்டு விழிப்பாகத்தானே உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். இங்கிலீஷில்தான் குரைக்கிறது. என்ன வார்த்தைகள் இவை…

கூர்ந்து கேட்கிறார் அவர்.

‘வெளவ் வெளவ்…டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்…வெளவ் வெளவ்…டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்… வெளவ் வெளவ்…டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் ‘ இப்போது தெளிவாகக் கேட்கிறது…ஆமாம். ஒரு நாய்தான் ….டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்றுதான் குரைக்கிறது…இது என்ன டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்…அப்படி என்றால் ?

அவர் வாசல் விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தார்.

குரைக்கின்ற நாய் அவர் பக்கம் திரும்பிற்று.

‘கூப்பிட்டார்களா ? ‘ என்று கேட்கிறது.

‘இல்லையே. ‘

‘பின் ஏன் விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தீர்கள் ? ‘

‘நீதானே இங்கிலீஷில் குரைத்தாய் ? ‘

‘இங்கிலீஷிலா குரைத்தேன் ? ‘

‘பின்னே, டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்ன தமிழா; இல்லே உருது என்ற எண்ணமோ ? ‘

‘எனக்கு அதெல்லாம் தெரியாது. அந்த ஜகதுசாரும் உப்பிலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்டேன். சரி, நம்ம விஷயமாச்சே என்று அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டேன். அதையே சொல்லிக் குரைக்கிறேன். ‘

‘இதுக்கு என்ன அர்த்தம் ? ‘

‘அதெல்லாம் இங்கே நடுவாசலில் நின்று பேச முடியாது. ‘

‘உள்ளே வந்து சொல்லேன். ‘

‘நான் உள்ளே வரலாமா ? ‘

‘ஏன் வரக்கூடாது ? இங்கிலீஷில் குரைக்கிறாய் ? ‘

‘தெரு நாய் ஆச்சே நான். ‘

‘பரவாயில்லே. இங்கிலீஷில் குரைக்கிறபோது, உள்ளே வந்தால் என்ன ? வா. வா…உட்காரு… ‘

‘நான் உட்கார வேண்டாம். அதெல்லாம் அதோ சோபாவில் வெல்வெட் குஷனில் சுகமாகத் தூங்கி, என்னைக் கண்டதும் பயந்து, இறங்கிச் சமையல் உள்ளுக்குள் ஓடுகிறதே…அந்த மியாவ் மியாவுக்கே உங்கள் சொகுசு சோபாவெல்லாம் இருக்கட்டும். ‘

‘சரி நீ குரைத்ததற்கு அர்த்தம் சொல்லு. ‘

‘சொல்கிறேன். ஆனால், நான் ஒன்று கேட்கிறேன். முன்னால் அதுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் நான் சொல்லுகிறேன். ‘

‘என்ன ? ‘

‘நாயேன் உன்பாலன்றி எங்கே செல்வேன் ‘ என்று ஒரு பாட்டில் வருகிறதே, கேட்டிருக்கிறீர்களா ? ‘

‘கேட்ட ஞாபகம். ‘

‘நாயேன் ஏழைபால் தயை செய்வாயே ‘ என்ற பாட்டில் வருகிறது. ‘

‘ஆமாம் ஆமாம்…பாபநாசம் சிவன் பாட்டு என்று நினைக்கிறேன். ‘

‘இருக்கலாம். பாடினவர் புத்திசாலிதான். பைரவி ராகத்தில் பாடியிருக்கிறார். பைரவி என்றால் எங்கள் நாய் இனத்தையும் குறிக்கும். ‘

‘பொல்லாத நாயா இருக்கியே ‘ ‘

‘நல்ல நாய் என்று சொல்லுங்கள். நாயேன் உன் பாலன்றி எங்கே செல்வேன் என்று ஏதோ நாயாரைப் பற்றிக் கேட்கிறான் ஒரு மனுஷன். இதன் அர்த்தம் என்ன ? ‘

அவர் யோசித்துவிட்டு நாய்க்குப் பதில் சொல்கிறார்: ‘நாய் நன்றி உள்ள பிராணி. எசமானை விட்டு எங்கும் போகாது. வேறு யாரிடமும் வாலைக் குழைத்துக்கொண்டு பல்லை இளிக்காது. ‘

‘கரெட்…எங்கள் எசமானில்லாத ஒருவன் நூறு பிஸ்கட்டைக் காட்டினால்கூடப் பல்லை இளித்துக்கொண்டு ஓடமாட்டோம். கட்சி மாறமாட்டோம். அப்படி இருக்கும் போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றெல்லாம் கட்சி மாறும் மனிதர்களை ஏன் திட்டுகிறார்கள் ?எங்களைத் திட்டுகிறார்களா ? அந்த மனுஷங்களைத் திட்டுகிறார்களா ? ‘

‘…… ‘

‘பதில் சொல்லுங்கள் ‘

‘………………… ‘

‘என்ன யோசிக்கிறீர்கள் ? ‘

‘எசமான் இருக்கிற நாய்தானே, இன்னொரு ஆள் நூறு பிஸ்கட்டைக் காட்டினால் கூடப் பல்லை இளித்துக்கொண்டு போகாது என்று சொன்னாய். எசமான் இல்லாத நாய்கள் எத்தனை இருக்கு ?

‘என்னைப் போல இண்டிபெண்டெண்ட்டா, சுதந்திரமா, எசமானே இல்லாத நாய்களைச் சொல்கிறீர்களா ? ‘

‘ஆமா. ‘

‘நீங்கள் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். எனக்கு இந்தத் தெரு, எசமான். இந்தத் தெருவில் உள்ள நீங்கள், இன்னும் மற்றவர்கள், அவர்களுடைய குடும்பம், குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மொத்தமாக எசமான். அப்படிச் சொல்வதை இந்தத் தெரு என் சொத்து மாதிரி. நான் உங்களுக்குக் காவலாளி ‘ நான் இதை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன். இந்த ஊரிலேயே வேறு தெருவுக்கு அல்லது வார்டுக்கு தேர்தலுக்கு நிற்க மாட்டேன். நான் அந்த வேறு தெருவைச் சேர்ந்தவன் என்றெல்லாம் ‘டூப் ‘ அடிக்கமாட்டேன். நாய்களும் அதை ஒப்புக்கொள்ளாது. இந்த நாய் இந்தத் தெரு, அந்த நாய் அந்தத் தெரு. அந்தத் தெரு நாய் இங்கே வந்தாலும் குதறித் தீர்த்துவிடுவேன். வேற்று நாய் இங்கே வரவும் துணியாது. இண்டிபெண்டெண்ட் என்று யாரும் இந்த நாய் வர்க்கத்தில் கிடையாது. ஒரே தெருவுக்குள் ஒரு நல்ல மனிதன் இருந்தால் பிரியமாக இருப்பேன். பொல்லாத மனிதன் இருந்தால் ஒதுங்கி நிற்பேன். இந்த அளவில் இண்டிபெண்டெண்ட் என்று சுமாராகச் சொல்லலாம். நல்ல ஆள்களிடம் பிரியம் காட்டுகிறவர்கள்தான் இண்டிபெண்டெண்ட், அதுதான் நிஜமான சுதந்திரம். ‘

‘ரைட். ஆனா நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே ? ‘

‘எது ? ‘

‘டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ். ‘

‘நாசமாய்ப் போச்சு. அதைத்தான் இத்தனை நேரமும் சொல்லிக்கொண்டிருந்தேன். ஜகது எதையோ உப்பிலியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த உலகத்தில் தான் படைத்த ஜீவஜந்துக்கள் எல்லாவற்றுக்கும் ஆண்டவன் ஒரு நிலம்– ஒருடெரிடெரி கொடுத்திருக்கிறாராம். அந்த நிலத்தில் வேறு யாரும் உரிமை பாராட்டக்கூடாது. அது அதுக்குத் தன் பிராந்தியத்துக்கு மேல் ஒரு ஆட்சி, ஒரு உரிமை உண்டு. அதுதான் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்று, ஜகது உப்பிலியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கட்சி மாறிகளைப் பார்த்து நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று கிண்டல் பண்ணுகிறான்களே, நெசம்மா நாய்களுக்கு எது தெரிஞ்சதுன்னா நம்மை எல்லாம் என்ன பண்ணுமோ, என்று ஜகது சொல்லிக்கொண்டிருந்தார். ‘கரெக்ட் ‘ தெருவுக்கு ஒரு நாய் இருந்தால் போருமே, ஆயிரம் பூட்டுக்குச் சமானம் ‘ என்று உப்பிலி மாமாகூட சொல்லிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தேன். இந்த ‘டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் ‘ என்கிற வார்த்தை கடகடவென்றும் படபடவென்றும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிற மிடுக்கு வார்த்தையா இருந்தது. அதைச் சொல்லிக் குரைக்கிறேன். குரைக்கக் குரைக்க எனக்கே ஒரு தன்னம்பிக்கை, மிடுக்கு, பெருமிதம் எல்லாம் உடம்பில் மதமதக்கிறது. இனிமேல் உப்பிலி மாமா மாமாங்கத்துக்கு ஒரு தடவை வீட்டைப் பூட்டிக்கொண்டு போனால்கூட வாசல்பூட்டு, கொல்லைப்பூட்டு மட்டும் போட்டால் போது. நான் இருக்கிறேன். நீங்களும் கவலைப்படவேண்டாம். இந்தத் தெருவுக்கு நான் ராஜா. இது என் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ். ‘

நாய் கம்பீரமாகப் பார்த்து.

‘நல்ல ஆளப்பா நீ. ‘

‘ஆளப்பாவா ? நாயப்பா…. ‘ என்று நாய் வெளியே போயிற்று.

‘கதவைச் சாத்திக்கொள்ளுங்கள். வெளவ் வெளவ் வெளவ், டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ். ‘

ஏதோ தெருவுக்கே பட்டா வாங்கிவிட்டது போல், நாய் வீறாப்பாகக் குரைக்கத் தொடங்கிற்று.

Series Navigation

- தி. ஜானகிராமன்

- தி. ஜானகிராமன்