[அ]லட்சியம்

This entry is part [part not set] of 8 in the series 20000625_Issue

நீல. பத்மநாபன்


மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான்.

கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப் பார்த்துச் சிரித்தான் நெல்லையப்பன். பதிலுக்குச் சிரித்துவிட்டு அவன் முன்னால் நின்றான் இவன்.

நடையுடை பாவனைகளில் எல்லாம் எப்போதும் இருக்கும் ஒருவித அசிரத்தையுடன்தான் இப்போதும் நெல்லையப்பன் காட்சி தந்தான். எண்ணெயில்லாத தலை மயிர், ஷவரம் செய்யாத முகம், அங்கங்கே கறைபடிந்த கசங்கிய அழுக்கு சட்டை வேட்டி, செருப்பில்லாத பாதங்கள், வியர்வைநெடி-இவையெல்லாம், இன்று நேற்றல்ல, பள்ளியில் படிக்கையிலிருந்து, இந்த இருபத்தி ஐந்து வருஷங்களாக நெல்லையப்பனிடம் இவன் கவனித்து வரும் ட்ரேட் மார்க் சின்னங்கள்… இதன் காரணம் இல்லாமையல்ல என்பதும் இவனுக்குத் தெரிந்ததே… ‘

அவனைப்போலவே அவன் சைக்கிளும் படாடோபமின்றி காட்சியளித்தது.

நெல்லையப்பன் கேட்டான்: ‘என்ன, ரொம்ப இளைச்சுப்போயிருக்கையே… ‘

‘அப்படி உனக்கும் தோணுதா ? ‘

‘ஆமாம்… ‘ சாதாரணமா இதையெல்லாம் நான் கவனிப்பதில்லை… ஆனாலும் இப்போ நான் கவனிக்கும் அளவுக்கு நீ இளைச்சுபோயிருக்கே… ‘

‘அப்படி உனக்குத் தோணகாரணம் இதுவாக இருக்கலாம்… ‘ என்று தன் நீண்ட தாடி மீசையைத் தொட்டுக் காட்டினான் இவன்.

‘இல்லை… இல்லை… அதை நான் சொல்லவில்லை… மொத்தத்தில் நீ ரொம்ப இளைச்சுப்போனாய்… ‘ ‘

‘இருக்கலாம்… காரணம் உனக்குத் தெரிஞ்சதுதானே ‘ ‘

‘ஆமா… உங்க அப்பா இறந்து ஆறுமாசம் இருக்காதா ‘ இதுக்கெல்லாம் இவ்வளவு தூரம் அலட்டிக்கலாமா… ? ‘

‘கூடாதுதான்… ‘ ஆனால் என்ன செய்ய ‘ மனசுண்ணு ஒண்ணு இருந்து தொலைக்குதே… ‘

மாலை மணி ஏழிருக்கும் ஆதலால் அந்த மெயின் ரோடில் வாகன சந்தடி மிக அதிகமாக இருந்தது. பலவித ஹாரன்களின் இடைவிடாத ஒலிகள் முழங்கும் பரபரப்பான சூழ்நிலை… சைக்கிளின் ஹான்டில்பாரை பிடித்தவாறு வலப்பக்கத்தில் இவன், இடபக்க பெடலில் காலை வைத்தவாறு நெல்லையப்பன் முன்னும் பின்னும் அவசர அவசரமாகச் செல்லும் மனிதர்கள் அவர்களை மோதியவாறு சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அந்த வழி வந்து கொண்டிருந்த ராமசாமி தம்பதிகள் இவனைக் கண்டு இவன் முன்னால் நின்றார்கள். ‘ஹ்உம் ஆனாலும் ரொம்ப கஷ்டமா போச்சு அண்ணாச்சியின் காரியம் ‘ ‘ என்று விட்டு, சிறிது நேரம் மெளனமாய் நின்று துக்கம் தெரிவித்தார்கள். சில நாட்களுக்கு முன் திடாரென்று ஸ்ட்ரோக்கினால் காலமாகிவிட்ட இவன் ஷட்டகருக்காக அந்த அனுதாபத் தெரிவிப்பு ‘ ‘ கோபு கார் வாங்கியிருக்கான் தெரியுமா ? ‘ என்று அவர் கேட்கும்போது, அவர் மனைவியின் முகம் மலர்வதைக் கவனித்தவாறு ‘ தெரியும் ‘ என்று தலையாட்டினான் இவன். கோபு அவர் மைத்துனன், எக்ஸைஸ் இலாகாவில் வேலை பார்கிறவன். அவர்கள் விடை பெற்றுக்கொண்டு சென்றதும், ‘இந்த மாதிரி பிரகிருதிகள் வேறு ‘ ‘ என்று சொல்லிவிட்டு நெல்லையப்பன் சிரித்தான். தாறுமாறான அடுக்குகளாகத் தெரிந்த அவன் பற்களில் இவன் கவனம் சென்றது. அவனிடம் வாதிடத் தோன்றவில்லை, இவன் கேட்டான்:

‘அதிருக்கட்டும், உன் சித்தப்பாவுக்கு என்ன வந்தது ? ‘

‘உம்… அதுவா ‘ செக்ஸ் மட்டும்தான் வாழ்வுண்ணு நடப்பவங்களுக்கு இதுதான் முடிவு ‘ அவருக்கு இந்த லோகத்தில் விரும்ப வேறெ ஒண்ணும் இல்லை… ? ‘

‘அவருக்குக் கல்யாணம் ஆகல்லையா ? ‘

‘கல்யாணமாகி அஞ்சு குழந்தைகள் இருக்கு ‘ ‘

‘பிறகென்ன ‘ ‘

‘ படிக்கும் நாளிலிருந்தே அவர் ஈடுபாடெல்லாம் அதில்தான் ‘ இப்போ ரொம்ப பெர்வர்ட்டட் ஆகிவிட்டார்…… குடிச்சு குடிச்சு லிவர் முழுதும் ஓட்டையாகி ரொம்ப நாளாகிவிட்டது. ஆனாலும் அவர் இப்படி செத்துப்போகமாட்டார், ஹார்ட் ரொம்ப ஸ்ட்ராங் என்றுதான் சொல்லியிருந்தார் டாக்டர். ‘

‘பிறகு எப்படி செத்தாராம் ? ‘

‘விஷம் எதையோ கலக்கி குடிச்சுட்டார்….. ‘

‘அவருக்கு என்ன வயசிருக்கும் ? ‘

‘நாப்பது ஆகல்லே ‘ ‘

‘அவர் சாவினால் நீ கொஞ்சமும் பாதிக்கவில்லையா ? ‘

‘நான் எதுக்குப் பாதிக்கனும் ‘ பிறத்தியாரின் சாவுகளுக்குப் போலி வருத்தம் காட்டுறவங்களின் சாயம், நேருக்கு நேர் அனுபவிக்க வேண்டி வருகையில் வெளுத்துவிடுகிறது. மனுஷனாப் பிறந்தவங்க யாரானாலும் சரி, எண்ணைக்காவது ஒரு நாள் சாவ வேண்டியதுதானே… ‘ ‘

‘அப்போ உனக்கு மரணபயமே இல்லையா ? ‘

‘எனக்கா ? நல்லா கேட்டே ‘ ஓரிரு முறை சாவை நேரடியாகவே சந்திச்சவன் நான் ‘ அப்போதும் அதை ஏற்றுக்கொள்ளச் சித்தமாகத்தான் நின்றேன் ‘ ‘

‘எப்போ ? ‘

‘ஒரு தடவை தேவிகுளம் பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கையில் ‘ திடாரென்று டிரைவருக்கு பஸ்ஸின் கன்ட்ரோல் தப்பிவிட்டது, ரோட்டைவிட்டு இறங்கி மலைச்சரிவில் ஓடிக் கொண்டிருந்தது பஸ். பஸ்ஸிலிருந்த எல்லோரும் குய்யோ முறையோண்ணு சத்தம் போட்டுக் கொண்டு பஸ்ஸ்உக்குள் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். ஜன்னல் வழி, வாசல் வழி வெளியில் குதிச்சு செத்தவங்க பலர் நான் மட்டும் ஸீட்டை விட்டு அசையவில்லை, சாவை நேருக்கு சந்திக்க வரிந்து கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அந்த விபத்தில் அதிக காயங்கள் இல்லாமல் தப்பியது நான் ஒருவன் மட்டும்தான் ‘ ‘

‘பிறகு ? ‘

‘பிறகு ஒரு தடவை பாண்டிச்சேரிக்குப் போயிருந்தேன் ‘ உனக்குத்தான் என்னைத் தெரியுமே; நல்லதோ கெட்டதோ ஒன்றில் மூழ்கினால், அதன் கடைசி முனைவரைப்போய் பார்த்துவிட வேண்டுமென்று நம்புகிறவன் நான் ‘ ஒரு தடவை வஞ்சியூரில் ஒரு ராவும் பகலும் முழுக்க முழுக்க அந்த அப்பளக்காரியின் வீட்டில் நான் இருந்ததை உங்கிட்டெ முன்பொருமுறை சொல்லியிருக்கிறேன் ‘ ‘

‘ஆமா… சொல்லியிருக்கிறே… ‘

‘உனக்கு நல்ல ஞாபக சக்தியிருக்கு ‘ உம்… என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் … உம் … பாண்டிச்சேரிக்குப் போயிருந்தேனா ‘ கையில் இருநூறு ரூபா எடுத்துக் கொண்டு பாரில் புகுந்தேன். என்னவெல்லாமோ திண்ணு, குடிச்சு, குடிச்சு, பில் ரூபா போக மீதி கையிலிருந்த சில்லறை நோட்டுக்களை வெயிட்டருக்கு வீசியெறிந்துவிட்டு கடற்கரை மணலில் வந்து விழுந்தேன். பிறகு எனக்கு ஒண்ணும் தெரியாது. என்னை அறைக்கு கொண்டுவிட்ட போலீஸ்காரனிடமிருந்து அடுத்த நாள் தெரிஞ்சுகொண்டேன். என்னைக் கடலுக்குள் இழுத்துச் செல்லுவதும், வெளியே புரட்டித் தள்ளுவதுமாக கடல் அலைகள் விளையாடிக் கொண்டிருந்தனவாம். அவன் யதேச்சையாகக் கண்டதால் நான் பிழைத்தேனாம்… ‘

இவன் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றான்.

‘இன்னொறு விஷயம் உனக்குத் தெரியுமா ? என் இளைய தங்கை-அவள் இப்போது எஸ்.எஸ்.எல்.ஸி படித்துக்கொண்டிருக்கிறாள், அவள் பிறவிலேயே ப்ளு பேபி…. ‘

‘என்ன ? ‘

‘ஆமாம்….. ஃபேற்றல்தான் ‘ அவள் காரியம் என்றைக்குண்ணுச் சொல்ல முடியாது ‘ ‘

‘இது அவளுக்குத் தெரியுமா ? ‘

‘தெரியும் ‘ இப்படிப்பட்ட கேஸ்உகள் உள்ள சினிமா எல்லாம் பார்த்து தன்னைத் தானே தேற்றிக்கொண்டு ஸ்கூலுக்கு போய் வருகிறாள் அவள்.

‘எவ்வளவு லேசாக சொல்லிவிட்டாயடா நீ ‘ ‘

‘அல்லாமல் ‘ வாழ்ந்துகொண்டிருக்கும் நாமெல்லாம் சாகத்தான் போகிறோம்… கொஞ்சம் முந்தி பிந்தி அவ்வளவுதானே விஷயம் ‘ அதுக்காக நமக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருக்க முடியுமா ? கர்ம பூமியில் செத்து விழுவது வரையிலும் நமது கடமைகளை செவ்வனே செய்துகொண்டிருக்கத்தான் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன் நான். எப்போதுமே எக்ஸ்கேப்பிஸத்தின் எதிரி நான் ‘ ‘

இவனுக்குத் தொண்டை வரண்டது. பக்கத்திலிருந்த ஹோட்டலைப் பார்த்து விட்டு, ‘இப்போ நீ காப்பி, டா, சிகரெட் முதலியவைகள்: உபயோகிப்பதுண்டா ? ‘ என்று கேட்டான் இவன்.

‘இல்லை…..ஒன்றிலும் மாற்றம் இல்லை. ‘

‘அப்படி ஒன்றிலும் மாற்றம் இல்லாமல் இருக்க முடிவது ஆச்சரியம்தான் ‘ ‘

‘முன்பொரு தடவை படிப்புக்கு நான் முழுக்குபோட்டதை அறிஞ்சு, ‘இதுக்காக நீ எண்ணைக்காவது பச்சாதாபப்பட வேண்டிவருமுண் ‘ணு அப்போ நீ சொன்னது உனக்கு ஞாபகம் இருக்குதா ? ‘

‘இருக்குது ‘ ‘

‘ஆனா…. இண்ணைக்குவரை அப்படி படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு சொந்தமா பிஸினஸ் ஆரம்பச்சதில் எனக்கு பச்சாதாபம் அடையவேண்டி வரல்லை… ‘

‘அப்போ சொன்னதை இப்போது நான் வாபஸ் வாங்கிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனா… வியாபாரமென்றால் சதா மூளையையும் அலட்டிக்கொள்ளாமல் முடியாது. வேலைநேரம் கழிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகும் மீண்டும் வேலையைப்பற்றி நினைச்சுப் பார்ப்பது என்பதே என்னைப் பொறுத்த வரையில் ஒரு சித்ரவதை எனவேதான் அண்ணைக்கு அப்படிச்சொன்னேன். இப்போ பெரிய எதிர்பார்ப்புக்கள், சுக செளகரியங்கள் ஒண்ணுக்கும் இடமில்லாத குறைந்த சம்பளம் கிடைக்கும் அரசாங்க உத்தியோகத்தை நான் தேர்ந்தெடுத்ததின் காரணமும் இதுவே ‘

‘இந்த விஷயத்தில் நமக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. கடை திறக்கும் நேரத்திலும் அடைக்கும் நேரத்திலும் நானும் மிகவும் கண்டிப்பாகத்தான் இருந்தேன்.

‘இதனால் வியாபாரம் பாதிக்கவில்லையா ? ‘

‘பாதிக்காமலில்லை. ஆனாலும் பணம் சம்பாதிப்பது மட்டும் லட்சியமா நான் ஒருபோதும் இருந்ததில்லை என்பது உனக்குத் தெரியாதா ? ‘

‘தெரியும் ‘ வரதட்சிணை, சீர்வரிசை ஒண்ணும் வேண்டாமுண்ணு கல்யாணம் செஞ்சு கிட்டவனாச்சே நீ ‘ ‘

‘ஆமா….. அதில் ஒரு வேடிக்கைக் கேட்கணுமா என்னைத் தெரிஞ்சுக்காத சில பேருங்க அதைக் காதல் கல்யாணமுண்ணு வியாக்கியானம் பண்ணினாங்க ‘ காதலாவது, ஒண்ணாவது ‘ அவ பரம ஏழை, அவகிட்டே நான் சொன்னேன். ‘ உன்னைக் கட்டிக்கிறேன். ஆனா… என் வழியில் நீ குறிக்கிடப்படாது, உன் வழியில் நானும் குறிக்கிடமாட்டேன். அவ சரீண்ணு சொன்னா ‘ அப்போ, இதோ என்னை பார்க்கிறேயல்லவா, இதே உடையில்தான் கல்யாணத்துக்கும் நான் வருவேன் அப்படாண்ணு சொன்னேன் நான். சரீண்ணாள் அவள். கல்யாணநாள் சாயந்திரம் என் கடையின் எதிரில் இருக்கும் சாயபுவின் கடையிலிருந்து ஒரு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுன் ஹாலில் போய் இறங்கினேன். கல்யாணம் நடந்தது. ராத்திரி அவ கேட்டா, ஆனாலும் இப்படி உடுத்தியிருந்த அழுக்கு சட்டை வேட்டியுடன் வந்துட்டேளே ‘ ண்ணு ‘ நான் சொன்னேன், ‘நான் நேரமேயே உங்கிட்டே சொல்லியிருந்தேனே…… ‘ ‘சொன்னேள்… சும்மா சொல்லுறீங்க… ஆனா சமயத்துக்கு இப்படியா வருவீங்க அப்படிண்ணுதான் நான் நினைச்சேன் ‘ என்றாள். அவள், ‘சரி….. பாத்துட்டேயில்லே… இதுதான் என் சுபாவம்… எதையும் நீயாக நினைச்சு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாதே… ‘ அப்படிண்ணு அவளை எச்சரித்தேன். ‘

‘நீ சரியான ஆளுதாண்டா ‘ அது போகட்டும், உனக்கிப்போ எத்தனை குழந்தைகள்…. ? ‘

‘ஒண்ணுமில்லை ‘ ‘

‘அப்படியா ‘ கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் இருக்காதா ? ‘

‘ஆமா… குழந்தை இல்லையேண்ணு அவ விரதம் எடுக்கத் தொடங்கினா. கோவிலுக்குப் போகத் தொடங்கினா…… நான் தடை சொல்லல்லே… ஆனாலும், ‘பக்தியெல்லாம் சரி, குழந்தை விஷயத்தில் கடவுளை மட்டும் நம்பாதே… நானும் மனசு வச்சாதான் சங்கதி நடக்கும். அதை மட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோ ‘ அப்படின்னு சொன்னேன். கடைசியில், கோவிலுக்கு மாப்பிள்ளை-பெண்டாட்டி இரண்டு பேருமா ஒண்ணாப் போய் வழிபடணுமுண்ணு யாரோ சொன்னான்ணு என்னையும் கூப்பிட்டா ‘ அப்போ சொன்னேன். அது முடியாது ‘ எனக்குண்ணு சில கொள்கைகள் உண்டு….. உன் மன சமாதானத்துக்கு வேணுமானால் என் போட்டோவைக் கொண்டு போ….. நான் வரமாட்டேன்… ‘ ‘

‘அப்போ நீ போகவே இல்லையா ? ‘

‘இல்லை…. ஆனா… இப்போ அவளுக்கு நாலு மாசம்… ‘

‘உன் பார்ட்டி வொர்க்கெல்லாம் இப்போ எப்படியிருக்கு ? ‘

‘நடக்குது ‘ எனக்கு எழுத்திலும் பிரசங்கத்திலும் ஒண்றும் நம்பிக்கை இல்லையிண்ணு உனக்கு தெரியுமே…. ஸ்கோடு வொர்க்கத்தைத்தான் நம்புகிறேன்…… இல்லாட்டி பணம், ஜாதி, மொழி இதெல்லாம் எந்த வார்டையும்விட கொடிகட்டிப் பறக்கும் நம்ம வார்டில், இவையொன்றுகூட அனுகூலமாய் அமையாத ஒரு சிறுபான்மை மனுஷன்-அவன் ஜாதியில் நம்ம வார்டில் அவன் வீடு மட்டும்தான் இருக்குது, ஜயிச்சுவர முடியுமா ? ‘

நெல்லையப்பன் விடை பெற்றுக்கொண்டு சைக்கிளில் ஏறிச் சென்று விட்டான். இவன் முன்னால் நடந்தான்.

 

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்