50 ரூபாய்க்கு சாமி

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

கே ஆர் விஜய்


டே! சிவா! 50 ரூபாய்க்கு சாமி கிடைக்குதாண்டா! பசங்க ரெண்டு பேரு வாங்கிட்டு வந்திருக்காங்க!

நிஜமாவா ?

ம்ம்.. சுந்தரும் ரவியும் ரெண்டு காப்பி வாங்கிட்டு வந்துருக்காங்க.

நான் கூட இன்னைக்கு ஊருக்குப் போறேன். எங்க கிடைக்குதுண்ணு சொன்னா ஒண்ணு வாங்கிட்டுப் போலாம்னு பார்க்குறேன். என் அக்கா

விக்ரம் பைத்தியம்.

பாண்டி பஜார்ல தான்…

சரி

பார்த்துடா ! உன் நேரம் கெட்ட நேரமா போய் மாட்டிக்கப் போற !

என்னடா கொலை குத்தமா செய்யப் போறேன். வி.சி.டி தான வாங்கப் போறேன் …. அதுக்குப் போயி…

பாண்டி பஜாரில் தான் கேட்ட முதல் இரண்டு கடைகளிலும் கிடைக்காத போதும் தன் முயற்சியைத் தளரவிடாமல் மூன்றாவது கடைக்கு

முன்னேறினான் சிவா!

என்ன அண்ணே! வர்ர வர்ர புதுப் படமெல்லாம் வரவே மாட்டேங்குது உங்ககிட்ட ! என்னை ஞாபகம் இல்லையா ? அந்த காலேஜ்ல தான்

படிக்கிறேன். வார வாரம் வந்து படம் வாங்கிட்டு போற ரெகுலர் கஸ்டமர், என்னையே மறந்துட்டாங்களே ?

அதுல்ல தம்பி ! இப்ப எல்லாம் அந்த அளவுக்கு சுலுவா விக்க முடியலை ! ஏகப்பட்ட கெடுபிடி! போலீஸ் எல்லாம் கண்ணுல எண்ணை

ஊத்திட்டு வந்து செக் பண்ணிட்டுப் போர்றாங்க!

சாமி இருக்குதுங்களா ?

ஒரே ஒரு காப்பி தான் இருக்கு ! 100 ரூபாய்

50 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன்னு பசங்க சொன்னாங்க !

சரி சரி இந்தா !

பாண்டி பஜாரிலிருந்து சைதாப் பேட்டையிலுள்ள தன் அண்ணன் சேகர் வீட்டிற்கு சென்று அவனிடம் இருந்து தன் பயண டிக்கெட்டை வாங்கிக்

கொண்டு சென்ட்ரலுக்கு விரைந்தான் சிவா.

தனது இருக்கை எண்ணைப் பார்த்த போது சிவாவுக்கு ஒரே ஆச்சர்யம். .. போன தடவை கிடைத்த அதே S3 கூபேயில் 5 வது இருக்கை இந்த

முறையும் … நீலகிரி எக்ஸ்பிரஸ் இன்னும் 10 நிமிடத்தில் கிளம்பிவிடும் என்ற அறிவிப்பாளரின் அறிவிப்பை பட்டும் படாமலும் காதில் போட்டுக்

கொண்டான்.

ஒருவழியாக தனது பெரிய ‘பேக் ‘ஐ தன் இருக்கைக்குக் கீழே கஷ்டப்பட்டு நகர்த்திவிட்டு வெளியில் சன்னல் வழியே பார்வையை வீசினான். ஒரு

நடுத்தர வயது வாலிபர் சிவாவின் கூபேயில் ஏறி அவன் இடத்திற்கு அருகிலே வந்தமர்ந்தார்.

s-3 தானங்க ?

ஆமா!

வண்டி எப்ப கிளம்புதுங்க ?

5 நிமிஷத்துல..

வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. வாலிபர் இட்லி பொட்டலத்தைப் பிரித்து ஒவ்வொரு இட்லியாக சாப்பிட ஆரம்பித்தார். தான் இட்லி

சாப்பிடுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்து.. தம்பி…படிக்கிறீங்களா ?

ஆமா ! பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ். மூணாவது வருஷம்.

அப்படிங்களா ? சொந்த ஊர் கோயம்புத்தூருங்களா…

ஆமாங்க!

நீங்களும் கோயம்புத்தூர்ங்களா ?

இல்லை.. கோயம்புத்தூர் பக்கத்துல பல்லடம்.

என்ன பண்றீங்க ?

இப்போதைக்கு ஒண்ணும் பண்ணல… இதுவரைக்கும் சினிமா கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன்.

சினிமா கம்பெனியிலயா ?

ஆமா !

என்னவா இருந்தீங்க ?

அசிஸ்டென்ட் டைரக்டரா .. டைரக்டர் சக்தி சிவம் சார்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தேன்.

அப்படியா.. என்னங்க.. முதல் படமே ஹிட் கொடுத்த டைரக்டருக்கிட்ட வேலை பார்த்துட்டு இப்போதைக்கு ஒண்ணும் பண்ணலைங்கிறீங்க…

தான் ஒரு சினிமா டைரக்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றதும் சிவாவுக்கு மனசெல்லாம் மகிழ்ச்சி. அவரிடம் நிறைய விஷயங்களைப் பற்றிப்

கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஹீரோக்கள்,ஹீரோயின்கள் , துணை நடிகைகள் , கிசுகிசு என்று பல கேள்விகளை தன்

மனதிற்குள் ஒருவாறாக அடுக்கி வைத்துக் கொண்டான்.

வந்தவரோ கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தார்.. பின்னர் கொஞ்சம் கஷ்டப்பட்டு மெல்ல பேச ஆரம்பித்தார்…

வாழ்க்கைல இப்ப எனக்கு கஷ்ட காலங்க.. அதான் இப்படிக் கிடந்து கஷ்டப்படுறேன். பி.ஏ வரைக்கும் கோயம்புத்தூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல

படிச்சுட்டு, சினிமா ஆசையோட மெட்ராஸீக்குப் போனேன். அலையா அலைஞ்சேன். எடிட்டிங்ல அசிஸ்டெண்டா சேர்ந்து ரெண்டு வருஷம்..

அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ரெண்டு வருஷம் அப்படி இப்படின்னு கதை எழுதி கண்ணு முழிச்சு.. இப்பத் தான் அசிஸ்டென்ட் டைரக்டரா சக்தி

சார்கிட்ட சேர்ந்தேன்.. எல்லாம் போச்சு.. கொஞ்ச நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு.. எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தார்.

என்ன ஆச்சுங்க ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?

ஏதாச்சும் பிரச்சனைங்களா ?

நீங்க நியூஸ்பேப்பர் எல்லாம படிக்கிறதுண்டா ?

நீங்கன்னு எல்லாம் சொல்லாதீங்க.. சிவான்னே கூப்பிடுங்க ?

சமீபத்துல தற்கொலை பண்ணிட்டு இறந்து போனாரே விஸ்வநாதன் … அவர் தான் சக்தி சார் எடுத்திட்டு இருக்க ‘காதல் கண்களிலே ‘

படத்துக்கு ப்ரொட்யூசர். நல்ல கதை சார்.. கால்வாசி படம் ரொம்ப அருமையா வந்திருக்கு.. அதுக்குள்ள ப்ரொட்யூசர் இப்படி.. இண்டஸ்ட்ரியே

எதிர்பார்க்கலே.. என்று சொல்லிவிட்டு கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டினார்.

சரி கவலைப் படாதிங்க சார் ! வேற எந்தக் கம்பெனியிலயாவது ..

இல்லை சிவா ! அலைஞ்சு பார்த்துட்டேன். ஒரு மாசத்துக்கு மேலே அலைஞ்சுட்டேன். இண்டஸ்ட்ரியே ஒரே டல்லா இருக்கு.. புதுப் படம்

எடுக்குறதுக்குத் தயாரிப்பாளர் எல்லாம் ரொம்ப யோசிக்கிறாங்க… வேலையில இருக்கவங்களே தொடர்ந்து வேலையில நீடிக்கிறது கஷ்டமா

இருக்கு.. அதான் வேற வழி தெரியாம சொந்த ஊருக்குப் போய்..

மீண்டும் கண்களின் ஓரங்களில் ஈரம்…

எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்பா.. நான் நினைச்சது எல்லாம் நடக்குமா ? இனிமே ஒரு நல்ல வேலை தேடுறவரைக்கும் அப்பாவோட

மளிகைக் கடையில ஒத்தாசையா இருக்க வேண்டியது தான்..

இந்நேரம் வேற வேலை ஏதாவது பார்க்க ஆரம்பிச்சிருந்தா.. கல்யாணம் குழந்தைங்கண்ணாவது…

எல்லாம் வெறி.. சினிமா வெறி.. எப்படியாவது முன்னேறனும்னு ஒரு துடிப்பு.. மக்கள் மனசுல நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கணும்னு ஒரு

ஆசை. அதான்… அந்த வெறி தான்.. என்னை மெட்ராஸிக்கு ஓட வைச்சது.. அதே தான் இப்ப என்னை திரும்ப பல்லடத்துக்கு ஓட

வைக்குது.. நினைச்சாவே கொஞ்சம் வெறுப்பா இருக்கு.. கூட படிச்சவங்க கிண்டல் பண்ணுவாங்க.. சுத்துவட்டம் கிண்டல் பண்ணும்..

எல்லாம் தாங்குற பக்குவம் வந்திடுச்சு..

அத விடு சிவா ! உன்னைப் போயி நான் கஷ்டப்படுத்திக்கிட்டு..

ச்ச ச்ச இதுல போயி என்ன கஷ்டம் .. உங்க மனசுல இருக்குறது சொன்னா உங்களுக்கும் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.

ஆமாப்பா ! இப்ப ஏதோ கொஞ்சம் மனசு பாரம் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு என்று அவர் தன் இடத்தில் தூங்க ஆரம்பித்தார்.

சிவாவுக்கு இப்போது தான் மனசில் பாரம் ஏறியது. ச்ச ! எத்தனை கஷ்டம் ! எத்தனை நஷ்டம் ! எவ்வளவு பேருடைய இரவு பகல் பாராத

உழைப்பு ! எவ்வளவு பேருடைய வாழ்க்கை ! லட்சியம் ! எல்லாம் இந்த 50 ரூபாயில திருட்டுத் தனமா பார்க்குறதுல தகர்க்கப் போறேனே !

ஏன் இந்தக் குறுக்கு வழி ! நாளைக்குப் படிச்சு வளர்ந்து நானும் ஒரு தொழில் பண்ணும் போது இதே போல குறுக்கு வழியில மார்க்கெட்ல

என்னோட பொருளை வித்தா ! என்ன ஒரு பெரிய துரோகம் ! இதுக்கு நானும் உடந்தையா ?

வழக்கமாக ஏறி கொஞ்ச நேரத்திலே தன் இடத்தில் தூங்கிவிடும் சிவா அன்று பயணம் முடியும் வரை முழித்திருந்தான். கொஞ்சமும் தூக்கம்

வரவில்லை. தன் தவறால் கண் முன்னே ஒருத்தர் அவதிப்படுபவரை பார்த்த பின்னும் தூங்குவதற்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

நீண்ட நேரம் யோசித்தபடியே தன்னையுமறியாமல் கண்ணயர்ந்துவிட்டான். காலையில் கோவை ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு முன் தனக்குக்

கீழே படுத்திருந்த அந்த வாலிபரைத் தேடினான். அவர் இறங்கிவிட்டார் போல என்று நினைத்துக் கொண்டே படிகளை விட்டு மெல்ல

இறங்கினான்.

இப்போது தான் சுமந்து வரும் ‘பேக் ‘ தனக்கு ஒரு பெரிய சுமையாக அவனுக்குத் தோன்றியது.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவனது அக்கா சுமதி ‘ சிவா ! ஏதாவது புது சி.டி வாங்கிட்டு வந்திருக்கியா ? ‘

இல்லை.. எதுவும் கிடைக்கலை… இனிமே .. என்று சொல்ல ஆரம்பிப்பதற்குள் சுமதி இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.

என்னடா வந்ததுலருந்து உம்ம்னுன்னு மூஞ்சியை வச்சிட்டு.. எக்ஸாம் எல்லாம் ஒழுங்கா பண்ணலையா ?

அதெல்லாம் இல்லம்மா..

உன் ப்ரெண்ட் கிரி வந்துட்டுப் போனான்.. நீ வந்ததும் வீட்டுக்கு வரச் சொன்னான்…

சரிம்மா ! அவனை பார்த்துட்டு வந்துடறேன்.

தன் மனச்சுமையை இறக்குவதற்குச் சரியான ஆள் கிரிதான் என்று நினைத்துக் கொண்டே கிரி வீட்டுக்குப் போன சிவா வாசலில் இருந்து ஐந்தாறு

ஜோடி செருப்புகளைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான்.

வாடா ! எப்ப வந்த ! வந்து உட்காருடா !

என்னடா ஒரே கூட்டமா ?

இங்க பார்த்தியா நம்ம மச்சானோட சாமர்த்தியம் , முந்தா நேத்து வந்த கீதைய 30 ரூபாய்ல வாங்கிட்டு வந்துட்டான். இப்ப தான் 10 நிமிஷம்

ஓடியிருக்கு ! வா ! வா ! ஜோதியில ஐக்கியமாயிடு !

இல்லைடா ! தலை வலிக்குது ! நான் வர்றேன்!

அந்த ரயில் வாலிபரை நினைத்தவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சிவா. கண்களில் ஓரிரு கண்ணீர்த்துளிகள்!

பாவம்! ஓடும் ரயிலில் இருந்து அந்த வாலிபர் இறங்கியிருக்க வேண்டாம் !

***

vijaygct@yahoo.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்