அ.முத்துலிங்கம்
சுல்தான் முபாரக் ஷாவின்
தாயார்
கூந்தலை மடித்து செய்த மெத்தையில்
ஜாடி சுமந்து
ராஜவீதியில் பல மைல்கள்
வெறும் பாதத்தில்
நடந்ததுபோல
ஒரு கண்ணாடி போத்தலை
இரண்டு கைகளிலும் காவிக்கொண்டு
பல மைல் தூரம்
பயணம் செய்தேன்.
பாதாள ரயிலிலும்,
பிறகு பஸ்ஸிலும்.
ஒரு இடத்திலும் நான் அதை
கீழே இறக்கவில்லை.
வெள்ளை உடை மடிப்புகள்
முரட்டுத்தனமாக பொங்கி நிற்க
முக்கோண தொப்பியணிந்து
கறுப்பு கால்மேஸ் போட்ட
சிவப்பு பெண்ணிடம்
இரு கைகளாலும் கொடுத்தேன்.
நன்றி கூறாமல் அதை ஒற்றைக்கையில்
வாங்கினாள்.
என் நாமத்தை எழுத்துக்கூட்டப்
பணித்தாள்.
மூன்று எழுத்துப் பேரை
இரண்டு தடவை சொன்னேன்.
எழுதின லேபிளை என் வசதிக்காக
உரக்க வாசித்து
உறுதி செய்தாள்.
சர்க் என்று பிாித்து
கன்னத்தை தொடுவதுபோல
பட்டென்று ஒட்டினாள்.
போத்தலை,
ஒரு விலை மதிப்பற்ற
ரத்தினக்கல்லை
தரம் நிர்ணயிப்பதுபோல
உற்றுப்பார்த்த பிறகு
உதாசீனத்தோடு தள்ளினாள்.
அது அந்த மஞ்சள் திரவத்தை
ஏந்திக்கொண்டு
அதேபோல 14 போத்தல் கும்பலில்
போய் கலந்து கொண்டது.
எனினும்,
என் போத்தல் மட்டும்
ஒளியை வீசி ஜ்வலித்து
பிரத்தியேகமாகவே இருந்தது.
நிமிர்ந்து பார்த்து
நாளைக்கு என்றாள்.
சோதனை முடிவில்
பொத்திவைத்த என் ரகஸ்யத்தையும்,
பாரதூரமான விளைவுகளையும்
அவள்
கண்டுபிடித்துவிடுவாள்.
என் வாழ்க்கையில் பெரும்
திருப்பம் ஏற்படலாம்.
இன்னும் 24 மணி நேரம்
இருந்தது.
மஞ்சள் காதல் பட்சிகளாக,
போத்தல்கள் உரசியும், நெட்டியும்
புஷ்பராகம்போல ஒளி மின்னி,
கண்களைப் பறித்தன.
குறிப்பு:
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு டில்லியை ஆண்ட துருக்கி ராஜா சிறுநீர் அடைத்து அவதிப்பட்டார். ராஜமாதாவின் பிரார்த்தனையில் அது குணமாக அவள் சிறுநீர் கலயத்தை தலையில் சுமந்து பலமைல் தூரம் நடந்து மசூதிக்கு சென்றாள் என்பது வரலாறு.